Thursday, 22 June 2017

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு - நாமக்கல்



மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
 
அம்மன்/தாயார் : பாகம்பிரியாள்

தல விருட்சம் : இலுப்பை

தீர்த்தம் : சங்குதீர்த்தம், தேவதீர்த்தம்.
 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர்

ஊர் : திருச்செங்கோடு
 
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன் தாள்தொழுவர் வினையாய பற்றறுமே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.

🅱  திருவிழாக்கள்: 🅱
 
🍁 சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
 
🅱  தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்து, புகழும் வளமும் பெற்ற இந்நகரமானது கொங்கேழ் தலங்களில் முதன்மை பெற்றது.

🎭 குறிஞ்சி வளம் நிறைந்தது, மிகப் பழமை வாய்ந்தது.

🎭 அரியும், அரணும் ஒன்றே என்ற உண்மையை சமயத்திற்கு உணர்த்திய இத்திருத்தலமானது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ், கும்பி போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.

🎭 அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம்.

🎭 சுமார் 1500 ஆண்டுகளுக்கு  முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் `திரு` என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது.

🎭 அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்த இத்திருத்தலம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.

🎭 செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரிமுதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது.

🎭 இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும்.

🎭  சதய நட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர்.

🎭 இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும்.

👉🏽 மணியுகும் சிகரமுத் துண்டமாயது சேதுமலி யிலங்கா புரிமுனி
ரணி திருக்கோண மலையென வமைந்தன நாகவசலந் தமிழ்க்கொங்கு நாடினை
தனிக்கிரி மங்கையங்கனும் வேலனும் இருந்துநல் வரமருள் வதாய்ப்
பணியுக மனந்தம் பரவியது கந்தப்பரப் புற்றுமழி - என்று தேவாரத் திருப்பதிகத்தில் போற்றப்படும் இத்திருமலையை ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக காட்சியளிக்கும்.

🎭 சிவாலயம் என்றாலும் இங்கு செங்கோட்டு வேலவருக்கு அதாவது முருகர்க்கு சிறப்பு அதிகம்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு :🅱
 
🗝 * காலை 6.00 முதல் 2.00 மாலை 3.00 முதல் 7.00 வரை திறந்திருக்கும்.*🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன.

🌺 இந்த ஆலயத்தின் சிறப்பே தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில் இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது தான்.

🌺 சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது.

🌺 சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது.

🌺 இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.

🌺 இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும்.

🌺 கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை: 🅱

🌸 தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இவ்விடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர்.

🌸 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும் அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம்.

🌸 தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது.

🌸 பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர்.

🌸 இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.

🌸 இதன் சிறப்பு என்னவன்றால் தன்னை ஆபரணமாக சுமந்து கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேடனின் நாகர் உருவினை காணலாம்.

🌸 நெடும் பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே நாகர் மலையின் முதலிடமாகும்.

🌸 இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்கு குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதணை செய்தும் சக்கரைப்பொங்கல், வெண்பொஙகல் வைத்தும் வழிபடுகிறார்கள்.

🌸 அன்றைய மக்கள் படி வழியாக மட்டும் சென்று நாகதெய்வத்தை வழிபட்டார்கள் இன்று வாகன சாலை அமைத்து நடக்க முடியாதவர்கள் வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும் பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடலாம்.

🌸 இதன் இடதுபுறமுள்ள நாகம் கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் ``சத்தியப்படியினை`` அடையலாம்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் பெருமாளே
என்று இப்படியின் இறுதியில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

🌸 ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இப்படிகள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும்.

🌸 அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள்.

🌸 இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள்.

🌸 இதனையடுத்து பல மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர் கோபுரத்தை காணலாம்.

🦋 செங்கோட்டு மலை: 🦋

திருச்செங்கோடு என்பதற்கு "அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், "செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.

இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு.

🌤 ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.

🌤 இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு.

🅱 அர்த்தநாரீஸ்வரர் உருவ அமைப்பு :🅱

🔥 அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார்.

🔥 இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும்.

🅱 அர்த்த பாகத்தின் தோற்றம்: 🅱

 🦆 இங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது.

🦋 இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது.

🦋 அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

🦋 மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

🦋 அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

🅱 நாகாசலத்தில் (திருச்செங்கோடு) எழுந்தருளல்: 🅱

 🔥 திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருகப் பெருமான் கோபமுற்று நாகாசலம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குமரன் கையிலையிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து பார்வதி தேவியார் மிகுந்த கவலை கொண்டிருந்தார். சோகமே உருவமாக காட்சியளித்தார். அதைக் கண்ட சிவன் அம்மைக்கு மகிழ்வூட்ட எண்ணி அவரைத் தாருக வனத்திற்கு அழைத்து வந்தார். அங்கு உல்லாசமாக எல்லா இயற்கை எழில்களையும் கண்டுவந்தனர். அங்கு ஒரு முல்லைக்கொடி மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை பார்வதிக்கு சிவன் காட்டினார். அதைக் கண்ட அம்மையார் வெட்கப்பட்டு சிவபெருமானின் இருகண்களையும் தன் கைகளால் மூடினார். பரமனின் கண்கள் மறைக்கப்படவே அண்டங்கள் இருண்டன.

🔥 சிறிது நேரத்தில் அம்மையார் தன் இரு கைகளையும் விலக்கவே இருள் நீங்கியது.

🔥 எதிர்பாராமல் ஏற்பட்ட இருளின் காரணமாக ரிசிகளும், முனிவர்களும் மேற்கொள்ளும் நித்திய வழிபாட்டுமுறைகள் மாறியது. இதை முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியார் சிவபெருமானை வணங்கி சுவாமி இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். அதற்கு நாம் இருவர் என்ற முறை மாறி நாம் ஒருவர் என்ற உண்மை நிலை ஓங்க வேண்டும். அதற்கு ஒரே வழி தங்கள் உடலில் எனக்கு இடமளித்து இரட்சிக்க வேண்டும் என்றார்.

🅱 தேவியார் இடப்பக்கம் பெற்ற வரலாறு : 🅱

 🌺 தேவியார் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் தேவியாருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்கு உமையே நீ இன்றே புறப்பட்டு இமயமலையில் உள்ள கேதார சிகரத்தை அடைந்து அங்கு தவம் செய்து பின் காசி நகரை அடைந்து விசுவநாத சொரூபத்தை வழிபட்டு காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றங் கரையில் தவம் செய்வாய் அங்கு யாம் காட்சியளிப்பேன் என்றார்.

🌺 அதன்படியே தேவியார் பலகாலம் கடுந்தவம் மேற்கொண்டாள். பின்பு காட்சியளித்த சிவ பெருமான் அம்மையே நீ விரும்பியபடி எமது உடலில் இடம் பெற திருவண்ணாமலையில் தவம் மேற்கொள்வாய் என்றார்.

🌺 பின் கார்த்திகை மாதம் இறுதியில் காட்சியளித்த பெருமான் தேவியே நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு இலக்கானாயோ அந்த கந்தப் பெருமான் கொங்கு மண்டலத்தில் உள்ள கொடிமாடச் செங்குன்றின் மேல் கோயில் கொண்டு உள்ளான். அந்தக் குன்றம் தான் நாம் தங் குவதற்கு ஏற்ற இடமாகும் ஆகவே நீ அங்கு சென்று தவத்தினை மேற்கொள்வாய் என்றார். அதனைக் கேட்ட அன்னை தன் பிள்ளையாகிய வேலனை காணும் ஆசையாலும், சிவபெருமானின் உடலில் ஒரு கூராய் அமரவேண்டும் என்ற விருப்பாலும் திருவண்ணாமலையிலிருந்து நாகாசலம் எனப்படும் திருக்கொடி மாடச் செங்குன்றூர் வந்து அடைந்தார்.

🌺  இவண் உனக்கு எமது பாகம் ஈய்ந்தது ஏகாந்தமான
தவம் மிகு நாக வெற்போர் தலத்திடை உளதாங் கெய்தி
பவள மெய்த் தகரூர் சேயும் பரித்தவன் உறைந்த தென்மேல்
அவநிலை வரையின் பாங்காய் நாக வெற்பு அடைதி யென்றார்
என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.

🌺 அன்னை பராசக்தி நாகசலத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்திற்கு மேற்காகவும் இலுப்பை மரத்திற்கு கிழக்காகவும், அமைந்துள்ள தேவ தீர்த்தமே ஏற்ற இடமென்று கருதி அந்த தீர்த்தின் மேலுள்ள தாமரை மலரின் மேல் நின்று தன் தவமந்திரமாகிய பஞ்சசலத்தை உச்சரித்துக்கொண்டு பல காலம் கடும் தவம் புரிந்தார். தவத்தின் இறுதியில்சிவபெருமான் தோன்றி சிவமில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவமில்லை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தனது உடலில் இடது பாகத்தை தேவிக்காக தியாகம் செய்து. அப்பகுதியில் அம்மையின் உடலில் ஒரு பாகத்தை இடம் பெறச்செய்தார்.

🦋 பிருங்கி மகரிஷி 🦋

🎭 ஒவ்வொரு புனித தலத்திலும் ஒரு மகரிஷியின் அருள்சக்தி நிரம்பியிருக்கும். உதாரணமாக திருப்பதியில் கொங்கண மகரிஷியும். பழனியில் போக மகரிஷியும், தஞ்சாவூரில் கருவூர் மகரிஷியும், கரூரில் சதாசிவபிரம்மேந்திரான் மகரிஷியும், திருவண்ணாமலையில் ரமண மகரிஷியும், மருதமலையில் பாம்பாட்டி சித்தரின் அருள்சக்தியும் நிரம்பியிருப்பதையும். அந்தந்த திருத்தலங்களில் அந்தந்த மகரிஷிகளின் ஜீவசமாதியும் உள்ளதை இன்றளவும் கண்டு கொண்டிருக்கிறாம். அந்த வகையில் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ள மகரிஷி தான் பிரிங்கி மகரிஷி. இவரே கடும் தவமியற்றி பாஷாணங்கள் என்று கூறப்படுகிற விஷங்களை ஒன்று படுத்தி வெண்பாஷன சிலையாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரனின் சிலையை உருவாக்கியவர் என்று மக்களால் நம்பப்படுகிறது.

🐲 உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவர் பிருங்கி மகரிஷி..

🅱 வழிபாடு (பூஜைகள்) 🅱

 👉🏽 இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு காலை பூஜை (காலை 6-7மணி வரை) உச்சி காலம் (12-1 மணி வரை) மாலை பூஜை (4-5 மணி வரை) நடைபெற்று வருகின்றது.

👉🏽 பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டு இன்றும் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆத்மார்த்த மரகதலிங்கத்திற்கு முதலில் அதிகாலையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரிசையாக எண்ணை காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளைநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

👉🏽 அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனை பட்டினாலும், பல வகை மலர்களாலும் அலங்காரம் செய்வர். அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனுக்கு முதலில் மூலமந்திரங்களில் வடமொழியில் அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதனை ஆவாகனம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இறைவனுக்கு வெறும் அன்னம், பாயச அன்னம், எள் அன்னம், பயறு அன்னம், சக்கரை அன்னம் போன்ற அன்னங்களை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது.

🐿 இறை வழிபாடு : 🐿

🍁  முதலில் ஸ்தூல லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட்டுபிறகு கோவிலின் உட்புகுந்து பலி பீடத்தின் அருகே நின்றுஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும்செய்ய வேண்டும். பின் கர்ப்பக கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஏற்றவாறு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று வழிபடவேண்டும்.

🍁 பிறகு நந்தி தேவரையும் துவாரபாலகரையும் வணங்கி கற்பூர ஒளியில் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு நடராஜர், சிவகாமி அம்மை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய தெய்வங்களை முறையாக வணங்கவேண்டும். இறுதியாக நந்தி தேவரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து நமது வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.

⚜ வழிபாட்டின் பலன்கள் : ⚜

🔥 அதிகாலை செய்யும் ஆலய வழிபாடு முதல் நாள் செய்த பாவத்தை போக்கும். மாலை நேரத்தில் பிரதோசகாலத்தில் செய்யப்படும் வழிபாடு நம் பிறவி தோறும் செயயும் பாவங்களை போக்கிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

🅱 தல வரலாறு:🅱

🌤   ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.  சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார்.

🌤 ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.

🌤 இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் "அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் "இணைந்த வடிவம்' எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது.

🤹🏼‍♂ அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.

🤹🏼‍♂  மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பேருந்து நிறுத்ததில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது. 

No comments:

Post a Comment