Friday 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.5



11. ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்

ஊன மிகு பூதம் உற்றிடமா ஈனமாம்

சத்தாதி யை அறியும் தானம் செவி தோல் கண்

அத்தாலு மூக்கென்று அறி.


பதவுரை

ஞானேந்திரியங்கள் ஞானேந்திரியங்களின் இயல்பை

நன்றா தெளிவாக

உரைக்கக் கேள் உரைக்கின்றோம் கேட்பாயாக.


(அவ்விந்திரியங்கள்)

ஊனம் மிகு தாமத குணம் மிகந்த

பூதம் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரைகளை

இடமா உற்று இடமாகக் கொண்டு

ஈனமாம் இழிந்தனவாகிய

சத்த ஆதியை ஓசை முதலிய விடயங்களை

அறியும் அறிந்து வரும்

தானம் அவ்விந்திரியங்கள் தங்கித் தொழிற்படும் இடமாகிய உறுப்புக்கள்

செவி தோல் கண் செவியும், தோலும், கண்ணும்

அத்தாலு மூக்கு என்று அந்த நாக்கும் மூக்கும் என்று

அறி அறிவாயாக.

பொழிப்புரை

ஞானேந்திரியங்கள் ஆகிய ஐம்பொறிகளின் இயல்பை யாம் விளக்கமாகச் சொல்வோம். நீ கேள். ஞானேந்திரியங்கள், சூக்கும பூதங்கள் எனப்படும் தன் மாத்திரைகளைத் தமக்கு இடமாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களை அறிந்துவரும். அவ் இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உறுப்பில் நின்று ஒவ்வொரு புலனைக் கவரும். அவற்றிற்கு இடமாகிய உறுப்புகள் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்று அறிவாயாக.


விளக்கம்

இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளவை

தமிழில் செவி முதலிய உறுப்புக்களின் பெயரே அவ்விடங்களில் நின்று அறியும் இந்திரியங்களுக்கும் பெயராக வழங்குகின்றன. அவ்வவ் உறுப்புக்களில் இருந்து அறியும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் கூறியுள்ளது நினைவிருக்கலாம். எனவே இந்திரியங்களுக்கு இடமாவன உறுப்புக்கள் என்பது விளங்குகிறது. இனி, சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளும் இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளன என்று கொள்ளப்படுகிறது. அவ்வாறாயின், இந்திரியங்களுக்கு உறுப்புக்களும் இடம்; தன்மாத்திரைகளும் இடம் என்று ஆகிறது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஓர் உவமையின் மூலம் இதனை விளக்குவோம்.


ஊர்தியும் நிலமும் உவமையாதல்

ஒருவன் ஊர்தியில் ஏறிச் செல்கிறான். அவனுக்கு அவ்ஊர்தி நேரே இடமாய் அமைகிறது. அந்த ஊர்திக்கு இடமாய் உள்ளது நிலம். அம்முறையில் நிலமும் அவனுக்கு இடமாகிறது. இந்திரியம் ஊர்தியில் செல்பவனைப் போன்றது. தன்மாத்திரை ஊர்தி போன்றது. உறுப்பு நிலம் போன்றது. இதனால், இந்திரியங்களுக்குத் தன்மாத்திரைகள் நேரே இடம் என்பதும், உறுப்புக்கள் தன்மாத்திரை வழியாக இடம் என்பதும் விளங்கும். இந்திரியம், தன்மாத்திரை, உறுப்பு என்ற இம்மூன்றையும் இணைத்து இனிவரும் செய்யுட்களில் காண்போம்.


ஞானேந்திரியங்கள் அறியும் முறை

12. வான்இடமா நின்று செவி மன்னும் ஒலியதனை

ஈனமிகும் தோல்கால் இடமாக ஊனப்

பரிசம் தனை யறியும் பார்வையின்கண் அங்கி

விரவி உரு வங்காணு மே.


பதவுரை

செவி செவி என்னும் இந்திரியம்

வான் இடமா நின்று (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

ஒலியதனை ஓசையாகிய புலனை

மன்னும் அறிந்து வரும்

ஈனமிகும் இழிவு மிகுந்த

தோல் தோல் என்னும் இந்திரியம்

கால் இடமாக (உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

ஊனப் பரிசம் தனை குற்றமுள்ள ஊறு என்னும் புலனை

அறியும் அறிந்து வரும்

பார்வை கண் என்னும் இந்திரியம்

அங்கியின் கண் விரவி (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்) உருவ தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

உருவம் உருவமாகிய புலனை

காணும் அறிந்து வரும்


பொழிப்புரை

செவி என்னும் இந்திரியம் (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று ஓசையாகிய புலனை அறியும். தோல் என்னும் இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று ஊறு என்ற புலனை அறியும். கண் என்னும் இந்திரியம் (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று உருவம் என்ற விடயத்தை அறியும்.


விளக்கம்

ஆசிரியர் வான் இடமாய் எனவும் கால் இடமாக எனவும், அங்கி விரவி எனவும், பூதங்களை இந்திரியங்களுக்கு இடம் என்று கூறியுள்ளார். நாம் முன்பு கூறியவாறு தன்மாத்திரைகளே இந்திரியங்களுக்கு இடமாக இருக்கவும், பூதங்களை இடம் என்று ஆசிரியர் கூறியது ஏன்? இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். தன்மாத்திரைகளும் பூதங்களும் முறையே முளையும் மரமும் போல சூக்குமமும் தூலமுமாய் நிற்பவை, பூதங்களின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளோடு பூதங்களுக்கு உள்ள இவ் ஒற்றுமையைக் கருதி ஆசிரியர் தன்மாத்திரைகளுக்குப் பதில் பூதங்களை இடம் என்று கூறினார் எனலாம். மேலும், தெரிந்த பருப் பொருளாகிய பூதங்களைக் கூறித் தன்மாத்திரைகளைப் பெற வைத்தார் என்பதும் ஆசிரியரது இயல்புக்குப் பொருந்துவதேயாகும்.


ஆகவே செய்யுளில் வான் என்பது சத்த தன் மாத்திரயையைக் குறிக்கும். அங்கி என்பது உருவ தன்மாத்திரையைக் குறிக்கும்.


செவி, தோல், கண் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும். காது, தோல், கண் ஆகிய உறுப்புக்களில் நிற்கும் சத்தம், பரிசம், உருவம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.


ஞானேந்திரியங்கள் அறியும் முறை(தொடர்ச்சி)


13. நன்றாக நீர்இடமா நாஇரதம் தான்அறியும்

பொன்றா மணம் மூக்கு பூஇடமா நின்று அறியும்

என்று ஓதும் அன்றே இறைஆ கமம் இதனை

வென்றார் சென்றார் இன்ப வீடு.


பதவுரை

நா நாக்கு என்னும் இந்திரியம்

நீர் இடமா (உறுப்பாகிய நாவில் நிற்கும்) இரத தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

இரதம் சுவையாகிய புலனை

நன்றாக நல்ல முறையில்

அறியும் அறிந்து வரும்

மூக்கு மூக்கு என்னும் இந்திரியம்

பூ இடமா நின்று (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

பொன்றா மணம் கெடாத மணம் ஆகிய புலனை

அறியும் அறிந்து வரும்

என்று இவ்வாறு

இறை ஆகமம் சிவாகமங்கள்

ஓதும் கூறும்

இதனை இவ்விந்திரியங்களை

வென்றார் உலக விடயங்களில் செல்லாதபடி அடக்கிய ஞானிகளே

இன்ப வீடு பேரின்ப வீட்டினை

சென்றார் அடைந்தவராவார்.


பொழிப்புரை

நாக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று சுவையாகிய புலனை நன்றாக அறியும் மூக்க என்னும் இந்திரியம் (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும். இவ்வாறு சிவாகமங்கள் கூறும். இவ் இந்திரியங்களைப் புலன்களில் செல்லாதபடி அடக்கிய ஞான வீரவே பேரின்ப முத்தியைப் பெறுவார்கள்.

விளக்கம்

முந்திய செய்யுளிற் போலவே இங்கும் பூதங்களாகிய நீர் பூ(நிலம்) என்பன தன்மாத்திரைகளைக் குறிப்பன எனக் கொள்ளல் வேண்டும். நாக்கு, மூக்கு ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் நாக்கு, மூக்கு ஆகிய உறுப்புக்களில் நிற்கும் இரதம். கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.


வென்றார் சென்றார் இன்ப வீடு

ஞானேந்திரியங்கள் ஐந்தும் தத்தம் புலன்களை அறியும் முறையினை மேற்போந்த இரண்டு செய்யுட்களில் வகுத்துக் காட்டிய ஆசிரியர் அவ்விந்திரியங்களை வென்றார் எய்தும் பயனையும் உடன் சேர்த்துக் கூறினார்.


இந்திரியங்களை வெல்லுதல் என்றால் அவற்றைக் கெடுத்தல் என்பது பொருளன்று. சமணரும் சாக்கியரும் புலன்களைக் கவர்கின்ற ஐம்பொறிகளையும் அழிப்பதே அவற்றை வெல்லுதல் என்பர். சைவ சமயத்திற்கு அஃது உடன்பாடன்று ஐம்பொறிகளைக் கெடுத்தொழித்தால் உயிர் யாதொன்றையும் அறிய மாட்டாது அறிவற்ற சடம் போல ஆகிவிடும். ஆதலால் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே அவற்றால் கவரப்படும் புலன்களில் பற்றின்றி இருத்தலே அவற்றை வெல்லுதலாகும். ஐம்பொறிகள் நம்மைக் கெடுக்கவில்லை. ஐம்பொறிகளின் வழி ஐம்புலன்களின் மேற் செல்லுகின்ற ஆசையே நம்மைக் கெடுக்கின்றது. அவ் ஆசையை ஆரா இயற்கை அவா என்றார் திருவள்ளுவர். ஆராமையாவது நிரம்பாமை. ஐம்புலன்களுக்குச் சார்பாயுள்ள பொருள்களை எவ்வளது தான் பெற்றாலும், எத்தனை காலம்அனுபவித்தாலும் அவற்றின் மீதுள்ள ஆசை நிரம்புவதேயில்லை. அது பற்றியே ஆரா இயற்கை எனப்பட்டது.


உலகம் நிலையற்றது என்பதைக் கூறும் நூல்களைப் பல கால் படித்திருக்கிறோம். அவற்றின் பொருளைப் பலர் விளக்கிப் பேசியதையும் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உலகம் கானல் நீர் போன்றது என்பதைக் கல்வியினாலும் கேள்வியினாலும் உணர்ந்தாலும் அவையெல்லாம் இந்திரியங்களை அடக்குவதற்குத் துணை செய்யா. நிலையாமையை எவ்வளவுதான் உணர்ந்திருந்தாலும். நம் மனம் நிலையில்லாத ஐம்புலப் பொருள்களின் மேல் அவாக் கொண்டு அவற்றை நோக்கியே முடிவின்றி ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற மனத்தை அடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர் வழியாகும். ஓடுகின்ற மனத்தை அடக்குமாறு எவ்வாறு? மதங் கொண்டு செல்கின்ற யானையை ஒரு தறியில் கட்டிவிடுதல் போல, ஐம்புலப் பொருள்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச் செலவினின்றும் மீட்டு, சிவபெருமானது உருவத் திருமேனியிலே படிந்து நிற்குமாறு சிவ வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். இறைவனை உள்ளன்போடு வழிபாடு செய்து வரின் ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். இந்திரியங்களும் பிற வழியிற் செல்லாது.


கண்காள் காண்மின்களோ கடல்

நஞ்சுண்ட கண்டன் தன்னை

செவிகாள் கேண்மின்களோ சிவன்

எம்இறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்

செவிகாள் கேண் மின்களோ


வாயே வாழ்த்து கண்டாய் மத

யானை யுரிபோர்த்துப்

பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை

வாயே வாழ்த்து கண்டாய்


என்று அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லும், எனவே, இந்திரிய அடக்கம் என்பது உண்மையில் மன அடக்கமேயாகும். மேற்கூறிய வகையில் இந்திரியங்களையும், மனத்தையும் அடக்கி அவற்றை ஞானநெறியில் செலுத்தியவர் பேரின்ப வீட்டைத் தலைப்படுவர் என்பது இச் செய்யுளில் கூறப்பட்டது.


ஞானேந்திரியங்கள் அறியும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்திக் காட்டலாம்.

இந்திரியம் சார்பு/பற்றுக்கோடு உறுப்பாகிய இடம் அறியப்படும் புலன்

செவி சத்த தன்மாத்திரை காது ஓசை

தோல் பரிச தன்மாத்திரை தோல் ஊறு

கண் உருவ தன்மாத்திரை கண் ஒளி

நாக்கு இரத தன்மாத்திரை நாக்கு சுவை

மூக்கு கந்த தன்மாத்திரை மூக்கு மணம்


இனி, கன்மேந்திரியங்கள்


14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்

எண்ணும் வச னாதிக்கு இடமாக நண்ணியிடும்

வாக்குப் பா தம் பாணி மன்னு குதம் உபத்தம்

ஆக் கருதும் நாளும் அது

பதவுரை

கண்ணுதல் நூல் சிவபெருமான் அருளிச் செய்த சிவாகம நூல்

ஓதியிடும் சொல்லுகின்ற

கன்மேந்திரியங்கள் தொழிற் பொறிகள்

எண்ணும் வேறு வேறாய்க் கருதப்படும்

வசன ஆதிக்கு பேச்சு முதலிய செயல்களை

இடமாக தோற்றுவிப்பனவாக

நண்ணியிடும் பொருந்தும்.


(அத் தொழிற்பொறிகள் யானை எனில்)

வாக்கு வாய்

பாதம் கால்

பாணி கை

மன்னு குதம் பொருந்திய எருவாய்

உபத்தம் ஆ(க) கருவாய் என

அது அச்சிவாகமம்

நாளும் எப்போதும்

கருதும் ஆராய்ந்துரைக்கும்


பொழிப்புரை


இறைவன் அருளிச்செய்த ஆகம நூலில் சொல்லப்பட்டுள்ள கன்மேந்திரியங்கள் பேசுதல், போக்கவரவு செய்தல், ஏற்றல் இடுதலைச் செய்தல், கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல், சிற்றின்பம் செய்தல் ஆகிய செயல்களைச் செய்யும், அக்கன்மேந்திரியங்களாவன வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பன. அவை வடமொழியில் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்று கூறப்படும்.

No comments:

Post a Comment