Friday 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.6



கன்மேந்திரியங்கள் செயற்படும் முறை

15. வாக்கு ஆகா யம்இடமா வந்துவச னிக்கும் கால்

போக்காரும் காற்றிடமாய் புல்கி அனல் ஏற்கும்

இடும் கை குதம் நீர் இடமா மலாதி

விடும் பார் இடம் உபத்தம் விந்து




பதவுரை

வாக்கு வாக்கு என்னும் இந்திரியம்

ஆகாயம் இடமா வந்து (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று




வசனிக்கும் பேசுதலைச் செய்யும்

கால் பாதம் என்னும் இந்திரியம்

காற்று இடமாய் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று

போக்கு ஆரும் போக்கு வரவினைச் செய்யும்

கை பாணி என்னும் இந்திரியம்

அனல் புல்கி (கை யாகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று

ஏற்கும் இடும் ஏற்றல் இடுதலைச் செய்யும்

குதம் பாயு என்னும் இந்திரியம்

நீர் இடமா (எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று

மல ஆதி விடும் மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும்

உபத்தம் உபத்தம் என்னும் இந்திரியம்

பார் இடம்(ஆக) (கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று

விந்து(விடும்) ஆடவர்க்குச் சுக்கிலமும் மகளிர்க்குச் சோணிதமும் வெளிப்படுத்தி இன்பஞ் செய்யும்

பொழிப்புரை

வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும். பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும். பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும். பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும். உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.




விளக்கம்

செய்யுளில் ஆகாயம், காற்று, அனல், நீர், பார் என்பன சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளைக் குறிக்கும். வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் வாய் கால் கை எருவாய் கருவாய் ஆகிய உறுப்புகளில் நிற்கும் சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது. கன்மேந்திரியங்கள் செயற்படும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்டலாம்.




இந்திரியம் சார்பு/பற்றுக்கோடு உறுப்பாகிய இடம் செய்யும் தொழில்

வாக்கு சத்த தன்மாத்திரை வாய் பேசுதல்

பாதம் பரிச தன்மாத்திரை கால் போக்கு வரவு செய்தல்

பாணி உருவ தன்மாத்திரை கை ஏற்றல் இடுதல்

பாயு இரத தன்மாத்திரை எருவாய் மலம் முதலியன வெளிப்படுத்தல்

உபத்தம் கந்த தன்மாத்திரை கருவாய் சுக்கில சோணிதங்களை வெளிப்படுத்தல்

இனி, அந்தக்கரணங்கள்

ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறிய இடத்தில் அவற்றால் முதலில் பொருள்களைப் பொதுவாக அறிவதாகிய நிருவிகற்பக் காட்சியே உண்டாகும். எனவும், அதன் பின்னர் அப்பொருள்களின் பெயர், குணம், தொழில், முதலியவற்றைச் சிறப்பாக அறிவதாகிய சவிகற்பக் காட்சி அந்தக் கரணங்களினால் உண்டாவதாகும் எனவும் குறிப்பிட்டோம். அவ்வந்தக்கரணங்கள் தொழிற்படும் முறையினை இச் செய்யுளில் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.




16. அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்

அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை இவை

பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு

உற்றது சிந்திக்கும் உணர்

பதவுரை

அந்தக் கரணம் அகக் கருவிகளை

அடைவே வரிசைப்பட

உரைக்க யாம் கூற

கேள் கேட்பாயாக

அந்த மனம் மனமும்

புத்தியுடன் புத்தியோடு

ஆங்காரம் அகங்காரமும்

சிந்தை சித்தமும் ஆகியவை

இவை இக்கருவிகளாம்

பற்றி பொறிவழியாக வந்ததை மனம் பற்ற

அது நிச்சயித்து மனம் பற்றியதனைப் புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்க

பல்கால் எழுந்திருந்து அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து நான் இதனைச் செய்வேன் எனப் பலகாலும் முந்தி எழ

அங்கு உற்றது சிந்திக்கும் அங்ஙனம் அறியப்பட்டதைச் சித்தம் மீள மீளச் சிந்திக்கும்

உணர் அந்தக் கரணங்களின் செயல்களை இவ்வாறு உணர்ந்து கொள்.




பொழிப்புரை

அகக்கருவிகள் நான்கினையும் முறையே கூறுகிறோம். கேள், அவைமனம், புத்தி, அகங்காரம், சித்தம் என அழைக்கப்பெறும். புறத்தே உள்ள ஒரு புலனை அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, மனம் அதனைப் பற்றும், மனம் பற்றியதனை புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்கும் அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீளச் சிந்திக்கும்.




விளக்கம்

ஆன்மா இந்நான்கு கருவிகளையும் பற்றி நின்று உலகப் பொருள்களைச் சிறப்பாக உணர்ந்து அவற்றில் அழுந்துகிறது.




மனம்

நிருவிகற்பக் காட்சியின் பின்னர் ஆன்மா மனத்தைப் பற்றி நின்று இஃது அதுவாகுமோ, இதுவாகுமோ என்று பல வகையில் ஐயுறும். இங்ஙனம் ஐயுறுவதற்குக் கருவியாவது மனமாகும்.




புத்தி

பின் ஆன்மா புத்தியைப் பற்றி நின்று அப்பொருளின் பெயர், இனம், குணம், தொழில் முதலியவற்றை உணருமாற்றால் இஃது இன்னதே என்று துணியும். இவ்வாறு துணிவதற்குக் கருவியாவது புத்தியாகும்.




அகங்காரம்

இனி எச்செயலிலும் ஆன்மா முன்னர் முனைத்து எழுவதற்குக் கருவியாவது அகங்காரமாகும். அகங்காரம் என்பதற்கு யான் என்று எழுவது என்பது பொருள். இஃது ஆங்காரம் என்றும் வழங்கப் பெறும். எனவே மனம் நிருவிகற்பக் காட்சியைப் பற்றும் பொழுதும். புத்தி அதனை இன்னது என்று நிச்சயிக்கும் பொழுதும் ஆன்மா இடையிடையே அகங்காரத்தைப் பற்றி எழுதல் உண்டாகும் இது பற்றியே பல்கால் எழுந்திருந்து என்றார் ஆசிரியர். புத்தி நிச்சயித்த பின்பும் அகங்காரத்தின் செயற்பாடு வேண்டி உள்ளது. எவ்வாறெனில், நிச்சயித்தலின் பயன் அப்பொருளில் ஆன்மா அழுந்தி நுகர்வதுதான். அதற்கும் ஆன்மா யான் இதனை நுகர்வேன் என்று அகங்காரத்தைப் பற்றி முன்னர் எழ வேண்டும். இவ்வாறு நிச்சயித்த பின்பும் அகங்காரம் எழுதலின் நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து என நிச்சயித்தலின் பின்னர் அகங்காரத்தின் செயற்பாட்டை வைத்தார் ஆசிரியர்.




சித்தம்

இனி அழுந்தி அறிதலே அனுபவம் அல்லது நுகர்ச்சி எனப்படுகிறது. ஆன்மா தான் நிச்சயித்த பொருளின் தன்மைகளை எல்லாம் மீள மீளப் பலவாறு சிந்திக்கும் போதே அப்பொருளில் அழுந்தும் நிலை உண்டாகும். அவ்வாறு உற்று உற்றுச் சிந்திப்பதற்குக் கருவியாய் இருப்பது சித்தம் ஆம் இது பற்றியே உற்றது சிந்திக்கும் உணர் என்றார் ஆசிரியர். அனுபவமாகிய முடி நிலைக்குச் சித்தமே உதவியாய் இருத்தலின் சித்தத்தின் செயலை இறுதியில் வைத்து முடித்தார்.




கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக

சித்தத்தின் செயலை சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து விளக்கியுள்ளார் சேக்கிழார். சுந்தரமூர்த்திகள் தில்லை சென்று பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் பெருமானை நேர் நின்று கண்டார். அத்திருக்கோலத்தில் ஈடுபட்டு மெய்ம்மறந்து நின்றார். அவரது மனம் வேறு எப்பொருளையும் பற்றவில்லை. புத்தி வேறு பொருளிடத்தில் செல்லவில்லை. அகங்காரம் வேறு பொருளை அறிய எழவில்லை. சித்தம் மட்டுமே செயற்பட்ட நிலை அது. அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக, அவர் இறைநினைவில் மீளமீள ஈடுபட்டு அழுந்தி நின்ற அனுபவ நிலையைச் சேக்கிழார் நுட்பமாக எடுத்துக்காட்டியுள்ளார்.




உற்றதை மீளமீளச் சிந்தித்தல்

இனி புதிதாக வரும் பொருள்களை மட்டுமே சித்தம் சிந்திக்கும் என்பதில்லை. முன்னரே புத்தி உணர்ந்து வைத்துள்ள பொருள்களையும் சித்தம் மீளப்பற்றி நின்று சிந்திக்கும்; நாம் முன்பு நிகழ்ந்தவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்து வருந்துகிறோம். அல்லது மகிழ்கிறோம். முன்பு நடந்த சில இனிய நிகழ்ச்சிகளை இப்பொழுது நிகழ்வது போல எண்ணிக் களிக்கிறோம். இப்படியெல்லாம் சிந்திப்பதற்குச் சித்தமே கருவியாக உள்ளது. முன்னரே உணர்ந்தவற்றை சித்தமானது மீளச் சிந்திக்கும் என்பதற்கு ஒரு சான்று தருவோம். பழங்காலத்தில் ஒரு புலவர் இருந்தார். முதுமையே அவரைக்கண்டு வெறுக்கும் அளவுக்கு நரையும் திரையுமாய் மூப்புற்று விளங்கினார். நடக்கும் வலிமையைக் கால்கள் இழந்து விட்டன கோல் ஊன்றியே நடக்க வேண்டும். உடலில் நடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியாது. இடையிடையே இருமல் வந்து தொல்லை கொடுத்தது.




அந்நிலையில் அவர் கடந்து போன வாழ்க்கையைத் திரும்ப நினைத்துப் பார்த்தார். இளமையில் நான் எப்படி இருந்தேன்! கவலை என்பதை அறியாத அப்பருவத்தில், ஒளிவு மறைவு என்பதை அறியாத இளம்பிள்ளைகளுடன் நான் எப்படியெல்லாம் ஆடித் திரிந்தேன்! ஒரு சமயம் நான் துணிச்சலான ஒரு செயலைச் செய்தேன். என் இளைய நண்பர்களுடன் ஒரு நீர் நிலைக்குச் சென்றேன். அது ஆழமான நீரை உடைய கேணி. அதன் கரையிலே ஒரு மரம். அதன் ஒரு கிளை வளைந்து தாழ்ந்து கேணியின் நீர்ப்பரப்பின் மேலாகச் சென்றது. அதைப் பார்த்ததும் நண்பர்களுக்கு என்னுடைய திறமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்று கருதினேன். நான் அந்த மரத்தின் மீது ஏறி நீர்ப்பரப்புக்கு மேலாக இருந்த கொம்பினை அடைந்தேன். அங்கிருந்து துடும் என அந்த ஆழமான மடுவில் குதித்தேன். கீழே மூழ்கிச் சென்றேன். தரையைத் தொட்டேன். அது மட்டுமா! தரையில் உள்ள மணலில் ஒரு கைப்பிடியை எடுத்துக்கொண்டு மேலே நீர்ப்பரப்பிற்கு வந்தேன். கரையில் நின்றவரெல்லாம் வியந்து கைதட்டும் படியாக அம்மணலை அவர்களுக்குக் காட்டினேன். அவர்களிடையே அப்பொழுது ஒரு வீரனாகக் காட்சியளித்தேன் அந்த இளமை எங்கே போயிற்று? இப்பொழுது பொல்லாத முதுமை வந்து வாட்டுகிறது. தண்டினை ஊன்றித் தளர்ந்து இருமலிடையே சில சொற்களே பேசும் நிலைக்கு ஆளானேன். அந்தப் பழைய காலம் மீண்டும் வருமா? இப்படிக் கழிந்து போனவற்றை மீள எண்ணிஎண்ணி இரங்குகிறார் அப்புலவர்! அவர் மட்டுமா? நாமும் கூட அதைத்தான் செய்கிறோம். உற்றது சிந்திக்கும் உணர் என்ற ஆசிரியரின் வாக்கு எவ்வளவு உண்மையாக உள்ளது.




இனி, அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் 7

பூதங்கள் தொடங்கி அந்தக்கரணங்கள் இறுதியாக உள்ள ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். இக்கருவிகள் மட்டுமே ஆன்மாவிற்குப் போதியன அல்ல. இவற்றுக்கு மேலும் வேறு கருவிகள் தேவைப்படுகின்றன. இஃது ஏன்? என்று வினவலாம். அவ்வினாவிற்கு விடை கூறுவோம். ஒன்றினை அறிதல், அதனை விரும்புதல், அதற்காக முயலுதல் என்னும் முத்திறனும் உயிருக்கு இயல்பாக உள்ளது. உயிருக்கு அமைந்த இம்மூன்றனுள் அறியும் திறன் ஞானசத்தி எனப்படும் விழையும் திறன் இச்சா சத்தி எனப்படும். செயல் திறன் கிரியா சத்தி எனப்படும். இந்த ஞானம், இச்சை, கிரியை என்னும் மூன்றும் செயற்படும் போதே உயிருக்கு உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்களிடத்தில் நாட்டம் உண்டாகும். அவற்றை அனுபவிக்கப்புகும் முயற்சி உண்டாகும். ஆயின், இவை செயற்பட முடியாதபடி ஆணவ மலமாகிய தளை உயிரைப் பிணித்திருக்கின்றது. அம்மலப்பிணிப்பிலிருந்து விடுபட்டால் அன்றி உயிரின் ஞானம், இச்சை, கிரியைகள் செயற்பட இயலாது. அவை செயற்படாத போது உலக போகத்தில் நாட்டமும் நோக்கமும் நோக்கமும் உண்டாகாவிடில் உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்கள் இருந்து என்ன பயன்? இந்திரியங்கள், அந்தக்கரணங்கள் முதலிய கருவிகள் எல்லாம் இருந்து என்ன பயன்? சுருங்கக் கூறினால் ஆன்ம தத்துவங்களால் என்ன பயன்? ஆணவ மலத்திலிருந்து நீங்கி உயிரின் அறிவு, விழைவு, செயல்கள் நன்கு செயற்படும் நிலை வரும்பொழுதுதான் உயிரானது மேற்கூறிய ஆன்மதத்துவங்களாகிய அகக் கருவிகள் புறக் கருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்க முடியும்.




ஆகவே உயிரினது அறிவு இச்சை செயல்களை ஆணவ மலப்பிணிப்பிலிருந்து விடுவித்து உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்துவதாகிய உதவியைச் செய்வதற்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. மேலும் உயிர் பெறும் இன்ப துன்ப நுகர்ச்சி காலத்திற்கு உட்பட்டது என்பதை அறிவோம். உரிய கால அளவிற்கு மேல் நாம் நுகரும் இன்பத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியாது. உரிய கால அளவு முடிவதற்குள்ளே நாம் வெறுக்கும் துன்பத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது என்பது அனுபவ உண்மை. ஆகவே காலம் என்ற கருவியும் வேண்டும் என்பது புலனாகும். இது காறும் கூறியவற்றால் ஆன்ம தத்துவங்கள் மட்டும் போதா அவற்றிற்கு அப்பாற்பட்டனவாய் வேறு கருவிகளும் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகும். முன்பு கூறிய இருபத்துநான்கு தத்துவங்களுக்கு மேல் உயிருக்கு உதவும் கருவிகளாக ஏழு தத்துவங்கள் கொள்ளப்படுகின்றன. அவை பிரகிருதியிலிருந்து தோன்றுவனவல்ல. பிரகிருதிக்கு மேலேயுள்ள அசுத்த மாயையிலிருந்து தோன்றுவனவாகும். அவை மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன் என்பன. இவை அசுத்த மாயை தத்துவங்கள் எனப்படும். இவை ஒவ்வொன்று பற்றியும் இனிக் காண்போம்.




மாயை

விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே மாயை என்னும் முதல் தத்துவமாகும். இந்த மாயை தத்துவத்திலிருந்தே காலம் முதலிய பிற தத்துவங்கள் தோன்றும். எனவே பிற அசுத்த தத்துவங்கள் தோன்றுவதற்கு ஏற்புடையதாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு பகுதியே மாயை எனக் கூறலாம். இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம். இம்மண்ணுலகம் மிகப் பெரியது. இதன் ஒரு சிறு பகுதியே மண் எடுத்துக் குடம் முதலியன செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே பிற தத்துவங்கள் தோன்றுவதற்குரிய தகுதி உடையதாய், மாயை அல்லது மாயா தத்துவம் எனப்படுகிறது.




காலம்

இம்மாயா தத்துவத்திலிருந்து முதலில் காலம் என்னும் தத்துவம் தோன்றும். இக் காலத்தத்துவத்தைச் சிறிது விளக்குவோம். காலம் என்பது இன்றி எச்செயலும் நடவாது என்பதை அனுபவத்தில் நாம் அறியலாம். எதற்கும் காலம் நேரம் வரவேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்வது அன்றாட நிகழ்ச்சி. ஒரு பெற்றோருக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறாள். அக்குடும்பத்தில் செல்வத்துக்குக் குறைவில்லை. அப்பெண்ணின் அழகுக்குக் குறைவில்லை. அப்பெற்றோரின் முயற்சிக்கும் குறைவில்லை. ஆயினும் அப்பெண்ணுக்குத் திருமணம் கூடாமலே நாட்கள் செல்லுகின்றன. எல்லாருக்கும் ஒரே கவலை. ஒருநாள் எதிர்பாராத நிலையில் எதிர்பாராத இடத்திலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே திருமணம் இனிதாக நடந்து முடிகிறது. இப்படி நடப்பதை வைத்துத்தான் காலம் வந்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று சொல்லுகிறார்கள். இதனால் எல்லாம் இருப்பினும் செயல் நிகழ்தற்குக் காலம் வேண்டும் என்பது தெளிவாகிறது. மூதுரை என்னும் நீதி நூல் இக்கருத்தைப் பின்வருமாறு சொல்லுகிறது. பழ மரங்கள் எல்லாக்காலத்திலும் பூத்துக் காய்த்துக் கனிகளைத் தருவதில்லை. அவ்வக்காலம் வந்தால் மட்டுமே காய்த்துப் பழுத்துப் பயன் தருவதைக் காண்கிறோம். அதுபோல ஒருவர் எவ்வளவு தான் முயன்றாலும் அவர் ஈடுபடுகிற செயல் அவர் நினைத்த வண்ணமே நிறைவேறிவிடுவதில்லை. அதற்குரிய காலம் வரும்போது தான் அக்காரியம் நிறைவேறும்.




அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

இதுவரை கூறியவற்றால் கால தத்துவத்தின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கும். காலம் இறந்தகாலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் மூன்று பகுதிப்பட்டு நிற்கும். இறந்த காலம் செயலை முடிக்கும். நிகழ்காலம் செயலை நிகழ்விக்கும் எதிர்காலம் செயலைத் தோற்றுவிக்கும். காலம் ஒவ்வொரு பொருளிலும் வேறுவேறாக உள்ளது. மேலும் அளவால் பெரிதும் சிறிதுமாய் உள்ளது. ஒருவர் உடம்பில் காலம் நெடியதாய் இருக்குமாயின் அவர் நீண்ட ஆயுளை உடையவராகிறார் அவ்வாறின்றி அவர் உடம்பில் உள்ள காலம் அளவால் சிறியதாய் இருக்குமாயின் அதற்கேற்ப அவர் குறுகிய ஆயுளை உடையவராகிறார். இவ்வாறு பொருள் தோறும் காலம் வெவ்வேறு அளவினதாய் அமைந்து செயலை நிகழ்விக்கின்றது. காலம் சடப்பொருளேயாதலின் அது தானே செயற்படாது என்பதையும், இறைவனது சத்தி செலுத்தவே அது தன் காரியத்தைச் செய்யும் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.




நியதி காலத்தின் பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி என்னும் தத்துவம் தோன்றும். நமது வாழ்வில் நாம் நினைத்தபடியெல்லாம் நடந்து விடுவதில்லை. ஒருவர் படிக்கின்ற காலத்தில் மருத்துவத்துறையில் எப்படியாவது சேர வேண்டும் என்று முயல்கிறார். ஆனால் அது முடியாமலே போய்விடுகிறது மற்றொருவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தும் வேறொரு பெண்ணைக் கைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இன்னொருவர் பதவி உயர்வு பெறுதற்குரிய தகுதி எல்லாம் பெற்றிருந்தும் அவருக்குக் கிட்டாமல் அவர்க்குக் கீழ்நிலையில் உள்ள மற்றொருவருக்கு அது கிடைத்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமாய் இதனையே நுகர்க ஏனையவற்றை நுகரற்க என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும். இறைவனது சத்தியே இவ்வாறு நியமித்து நடத்தும் என்று கொள்ளலாம் அல்லவா? நியதி என்ற ஒரு கருவி எதற்கு? என வினவலாம். கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும். ஆதலால் இறைவனது சத்தி வினைகளை வரையறுக்கும் செயலுக்கு இந்நியதி தத்துவம் கருவியாய் நிற்கிறது எனலாம். நியதி தானே சுதந்திரமாகச் செயற்படாது. என்பதையும், இறைவனது சத்தியின் வழி நின்றே செயற்படும் என்பதையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். நியதி வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகரும் படி செய்யும் எனவும், காலம் அந்நுகர்ச்சியின் அளவை வரையறுத்து நிற்கும் எனவும் அறிந்தோம். இனி உயிர்கள் நுகர்ச்சியில் ஈடுபட வேண்டுமாயின் அவற்றின் அறிவு இச்சை செயல்கள் ஆணவ மல மறைப்பிலிருந்து விடுபட்டுத் தொழிற்பட வேண்டும் எனச் சற்று முன்னே கூறினோம். அங்ஙனம் அவை தொழிற்படுவதற்கு உதவும் கருவிகள் கலை, வித்தை, அராகம் என்பனவாகும். அக்கருவிகள் தோன்றும் முறையை இனிப் பார்ப்போம்.




கலை

மாயாதத்துவத்தினின்றும் நியதி தத்துவம் தோன்றிய பின்னர், கலை என்ற தத்துவம் தோன்றும். இக்கருவி ஆணவ மலமறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை முதலில் எழுப்பித் தொழிற்படச்செய்யும். இங்கு ஓர் ஐயம் எழலாம். அறிவுப் பொருளாகிய ஆன்மா ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு, அறியுந்திறனை இழந்து அறிவற்ற சடப்பொருள் போலக் கிடக்கும் நிலையில் முதலில் அதன் அறிவாகிய ஞான சத்தியையல்லவா எழுப்புதல் வேண்டும். அதனை விடுத்துக் கிரியா சத்தியை முதலில் எழுப்புவது எதற்கு? என்பதே அவ்ஐயம். ஞானசத்தியை முதலில் எழுப்புவதாக வைத்துக் கொள்வோம். ஞானசக்தி ஆணவ மலப் பிணிப்பிலிருந்து சற்று விடுபட்டு எழுந்தாலும் அது தானே செயற்படாது. ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் ஞானசத்தி தொழிற்படும். ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டுமானால் அதற்குக் கிரியா சத்தி வேண்டும். கிரியா சத்தியின்றி எச்செயலும் நிகழாது. கிரியா சத்தி விளங்கப் பெற்ற போதே ஆன்மா எச்செயலையும் செய்வோன் என்ற நிலையை அடைகிறது. ஆதலால் ஞான சத்தி தொழிற்படுவதற்கும் கிரியா சத்தி வேண்டப்படுகிறது. அது பற்றியே கிரியா சத்தியை முதலில் எழுப்பும் கலை என்ற கருவி தோன்றுவதாயிற்று. கலித்தல் என்ற சொல்லிலிருந்து கலை என்பது வந்தது. கலித்தல் என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்ற பொருள்கள் உண்டு. எனவே ஆணவ மலத்தை நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்பிச் செலுத்துகிற கருவிக்குக் கலை என்று பெயரிட்டது பொருத்தமாகும்.




வித்தையும் அராகமும்

கலை தோன்றிய பின்னர் அக் கலையிலிருந்தே வித்தை என்னும் தத்துவம் தோன்றும். வித்தை என்ற அக்கருவி ஆணவ மல சத்தியைச் சிறிது அடக்கி ஆன்மாவின் ஞான சத்தியை எழுப்பும். வித்தை தோன்றி பின்னர் அதிலிருந்தே அராகம் என்னும் தத்துவம் தோன்றும். அராகம் என்ற அக்கருவி ஆன்மாவின் இச்சா சத்தியை எழுப்பும். முன்னே சொன்ன காலம், நியதி, கலை என்னும் மூன்றும் மாயையிலிருந்து நேரே தோன்ற, வித்தையும் அராகமும் ஆகிய இரண்டும் அங்ஙனம் மாயையிலிருந்து நேரே தோன்றாமல் கலையிலிருந்து வித்தையும் அவ்வித்தையிலிருந்து அராகமும் தோன்றுவது நோக்குதற்குரியது. இதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறலாம்.




ஆன்மாவினது அறிவு ஒன்றே அறிதல் விழைதல் செய்தல் என்னும் செயல் பற்றி ஞான சத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி என மூன்றாக வழங்கப்படுகிறது. எனவே இம் மூன்றும் தம்முள் வேறல்ல என்பதும். அறிவாகிய ஒன்றன் நிலை வேறபாடே என்பதும் விளங்கும். கிரியா சத்தியும் ஞான சத்தியும் தம்முள் மாறுபட்டனவல்ல ஆகையால் கிரியையை எழுப்புவதாகிய கலையிலிருந்தே ஞானத்தை எழுப்புவதாகிய வித்தை தோன்றுவதாயிற்று. இச்சா ஞானத்தின் நிலை வேறுபாடேயாகையால் ஞானத்தை எழுப்புவதாகிய வித்தையினின்றும் இச்சையை எழுப்புவதாகிய அராகம் தோன்றுவதாயிற்று.




கிரியையும் ஞானமும் இச்சையும் வேறுவேறல்லவாயின் கலையாகிய ஒரு கருவியே இம்மூன்றையும் எழுப்புதல் இயலாதோ? கலை, வித்தை, அராகம் என வேறு வேறு கருவிகள் எதற்கு? எனக் கேட்கலாம். இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருவி ஒரு நேரத்தில் ஒரு தொழிலைச் செய்யுமேயன்றிப் பல தொழில்களை ஒருங்கு செய்யமாட்டாது. ஆதலால் கிரியை, ஞானம், இச்சை ஆகிய மூன்றும் ஒருங்கே வேண்டப்படும்போது கலை என்ற கருவி கிரியையை எழுப்புதலாகிய ஒரு தொழிலை மட்டும் செய்யும் என்பதும், ஞானத்தையும் இச்சையையும் எழுப்புதலாகிய தொழிலைச் செய்வதற்கு வித்தையும் அராகமும் ஆகிய வேறு கருவிகள் வேண்டியுள்ளன என்பதும் தெளிவாகும்.




வித்தை என்னும் சொல் அறிவு எனப் பொருள்படும். ராகம் என்னும் வடசொல்லுக்கு விருப்பம் என்பது பொருள். அச்சொல்லே தமிழில் அராகம் என வந்துள்ளது.




இதுகாறும் வந்தவற்றுள் அராகம் ஆன்மாவின் இச்சா சத்தியையும் வித்தை ஞான சத்தியையும், கலை கிரியா சத்தியையும் விளக்கி ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனைக் காலம் நுகர்க என எல்லைப்படுத்தும். இவ்வைந்து கருவிகளும் ஆன்மாவுக்கு இன்றியமையாதனவாய். ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒன்றாய் ஒட்டியேயிருக்கும். அதனால் அவை பஞ்சகஞ்சுகம் என்னும் பெயர் பெறும். கஞ்சுகம்சட்டை.




புருடன்

இந்த ஐந்து சட்டைகளையும் அணிந்து நிற்கும் நிலையில் ஆன்மாபுருடன் எனப் பெயர் பெறும். போகத்தை நுகரும் தகுதியுடைமை பற்றி ஆன்மா புருடன் எனப்படுகிறது. இந்நிலையே புருடதத்துவம் எனச் சொல்லப்படுகின்றது. தத்துவம் என்று கூறப்படினும் இஃது ஏனையவை போல ஒரு தனித் தத்துவம் அன்று என்பது அறிதற்குரியது. பஞ்சகஞ்சுகத்துடன் கூடிப் புருடன் என நின்ற ஆன்மா பொதுவகையில் போகத்தை நுகரும் தகுதியைப் பெறும் பின்னர் பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போதே அத்தகுதியைச் சிறப்பு வகையாற்பெறும். பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது ஆதலால் அதனோடு பொருந்தும் போதே ஆன்மா புருடனாம் நிலையைச் சிறப்பாகப் பெறுகிறது. இதனால் காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்பதும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.




பிரகிருதியைப் பற்றி முன்னே குறிப்பிட்டபோது அஃது அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியம் எனச் சொன்னோம். அது பொதுவாகச் சொன்ன கூற்றேயாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அது அசுத்த மாயையின் காரியங்களில் ஒன்றாகிய கலையிலிருந்து தோன்றுவதாகும். தோசை என்ற உணவுப் பண்டத்திற்கு மூலப் பொருள் எது என்று கேட்டால் மாவு என்றும் சொல்லலாம்; அரிசி என்றும் சொல்லலாம். மாவு நேரான மூலப்பொருள். அரிசி முடிவான மூலப்பொருள். அதுபோல, பிரகிருதிக்குக் கலை நேரான முதற்காரணம்; அசுத்த மாயை முடிந்த முதற்காரணம் என அறிதல் வேண்டும்.




கலை என்னும் தத்துவத்தினின்றும் வித்தை என்னும் தத்துவமும் அவ்வித்தையினின்றும் அராகம் என்னும் தத்துவமும் தோன்றும் எனக் கூறினோம். அவற்றின் பின்னர்க் கலையினின்றும் நேரே பிரகிருதி தோன்றும். ஆன்மா பிரகிருதியைப் பொருந்திய நிலையில் நுகர்வோன் என்னும் சிறப்புத் தகுதியைப் பெற்றுப் புருடனாய் நிற்கும் எனக் கண்டோம். காலம் முதலிய ஐந்தோடு புருடன் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஆறாகும். அவற்றோடு முதலிற் சொன்ன மாயா தத்துவம் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஏழாகும். இவ்வாறு காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை (மாயா தத்துவம்) ஆகிய இவ் ஏழும் அசுத்த மாயா தத்துவங்கள் ஆயின.




அசுத்த மாயை

1. மாயா தத்துவம் (மாயை) (காலம், நியதி, கலை(பிரகிருதி, வித்தை(அராகம்), புருடன்))




இவற்றுள் மாயையும் புருடனும் நீங்கலாக மற்றையவை பரிணாம முறையில் தோன்றுவனவாகும். மாயையின் ஒரு கூறு காலமாகப் பரிணமிக்கும். மற்றொரு கூறு நியதியாகப் பரிணமிக்கும். மற்றுமொரு கூறு கலையாகப் பரிணமிக்கும். கலையின் ஒரு கூறு வித்தையாகவும். வித்தையின் ஒரு கூறு அராகமாகவும் பரிணமிக்கும். கலையின் மற்றொரு கூறே பிரகிருதியாகப் பரிணாமம் அடையும் என்பது அறிதற்குரியது.




வித்தியா தத்துவம் பெயர்க் காரணம்

அசுத்த மாயா தத்துவங்கள் ஏழும் வித்தியா தத்துவம் என்னும் பெயரைப் பெறும். பெயருக்கான காரணத்தை நோக்குவோம். இத்தத்துவங்கள் இறைவனது ஏவல் வழி நிற்கும் அனந்த தேவர் என்பவரால் தோற்றவும் ஒடுக்கவும்படுகின்றன. அவர் வித்தியேசுரருள் சிறந்தவர். எனவே அவர் பெயரால் இவை வித்தியா தத்துவங்கள் எனப்படுகின்றன. வித்தை இங்கு வித்தியேசுரரைக் குறிக்கும். இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இனி வித்தை என்பது அறிவாகும். எனவே ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றுவிக்கும் கருவிகளாதல் பற்றி வித்தியா தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும். இவ்வித்தியா தத்துவங்களுக்கு போசயித்திரு காண்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவை ஆன்மாவிடத்தில் நுகர்வோனாம் தன்மையை உண்டாக்குதலால் இப்பெயர் பெற்றன. போசயித்திரு நுகர்வோன்; காண்டம் தொகுதி. இனி ஆசிரியர் வழியில் நின்று வித்தியா தத்துவங்களைப் பற்றிய செய்யுட்களின் பொருளைக் காண்போம்.

No comments:

Post a Comment