Friday 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1. 4



அருளல்

இனி அருளலாவது, உயிர்கள் அறிவு முதிர்ந்த பக்குவ நிலையில் தம்மை உணர்ந்து அதனாலே தலைவனையும் உணர்ந்து, பிறப்பு இறப்புக்களினின்றும் நீங்கி வீடு அடையும்படி செய்தலாகும். இதுவரை ஐந்தொழில்களைப் பற்றி விளக்கமாக அறிந்தோம். ஐந்தொழில்களில் படைத்தல் முதலிய மூன்றினையும் செய்வோர் பிரமன், மால், உரத்திரன் என்பத பலரும் அறிந்தது. ஏனைய மறைத்தலையும் அருளலையும் மகேசுரரும் சதாசிவரும் செய்வர். இவ்வாறு பலர் கூறப்படினும் உண்மையில் எல்லாவற்றையும் செய்பவன் சிவபெருமான் ஒருவனே என்பது உளங் கொள்ளுதற்குரியது சிவபிரானது ஓர் அதிகார சத்தியே அவரவரிடத்தில் நின்று அவ்வச் செயலை ஆற்றுகிறது. இந்நாளில் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வருக்கே எல்லா அதிகாரமும் உண்டு. அவருக்குக் கீழ் பல அமைச்சர்கள் இருப்பினும் அவர்களுக்கென்று சுதந்திரமாக எந்த அதிகாரமும் இல்லை முதல்வரது கருத்திற்கு மாறாக ஒரு சொல் கூறினாலும் அவர் பதவியில் இருக்க முடியுமா? இஃது எதைக் காட்டுகிறது? அமைச்சர்க் கென்று தனி அதிகார சத்தியில்லை என்பதைத் தானே காட்டுகிறது. மேலும் எந்த அமைச்சர் எந்தத் திட்டத்தை நிறைவேற்றினாலும் அது முதல்வர் நிறைவேற்றிய திட்டம் என்று தானே சொல்லப்படுகிறது. எனவே அமைச்சர்களிடத்தில் உள்ள அதிகார சத்தி முதல்வருடைய அதிகார சத்தியே என்பது விளங்கும். அது போலத் தவ மிகுதி காரணமாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் அதிகாரிகள் ஆனோர் பிரமன் முதலியோர் அவர்களிடத்து நின்று அவர்களை வாயிலாகக் கொண்டு செய்விப்பது சிவசத்தியேயாகும். எனவே எல்லாச் செயல்களும் சிவனுடைய செயல்களேயாம்.

ஐந்தொழில் இரண்டாய்ச் சொல்லப்படுதல்

இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று, உயிர்களைப் பிறப்பு இறப்புக்களில் மீள மீளச் செலுத்தி, உலக நுகர்ச்சியில் அழுத்தியும் இளைப்பாற்றியும் வருவதே மறைத்தல், ஆதலின் இம் மறைத்தல் தொழிலில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் அடங்கும் என்பது ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும். எனவே ஐந்தொழிலும் மறைத்தல், அருளல் என்ற இரண்டாய் அடங்கும் என்பது விளங்கும். மறைத்தல் பந்தம் என்றும், அருளல் வீடு என்றும் கூறப்படும். பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு என வரும் திருவாசக அடியில் (திருப்பொற்சுண்ணம் 20) ஐந்தொழிலும் இவ்வாறு இரண்டாய்ச் சொல்லப்பட்டமை காணலாம்.


முத்தொழிலில் அடக்கிக் கூறுதல்


பல சமயத்தவரும் பொதுவாகக் கொள்வது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையே, அதற்கேற்ப ஐந்தொழிலை முத்தொழிலில் அடக்கிக் கூறலாம். அங்ஙனம் கூறும் போது, மறைத்தல், காத்தல் தொழிலில் அடங்கும்; அருளல் அழித்தல் தொழிலில் அடங்கும்.

திடப் பெறவே

இச் செய்யுளில் ஆசிரியர் பிற தொழில்களை வாளா கூறி, மறைத்தல் தொழிலை மட்டும் திடப் பெறவே, என அடைகொடுத்துக் குறித்துள்ளமை நோக்குதற்குரியது. ஏனைய தொழில்களை மாணாக்கர் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மறைத்தல் தொழிலை விளங்கிக் கொள்ளுதல். அத்துணை எளிதன்று. அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ளுதலும் எளிதன்று. அதனைக் கருதியே ஆசிரியர்அடைமொழி தந்து, மறைத்தலின் நோக்கத்தைக் கிளந்தெடுத்துக் கூறுகின்றார். திடப் பெறவே என்பதற்கு உறுதியடையும் படி என்பது பொருள். உயிர்கள் உறுதியடையும்படி மறைத்தலைச் செய்கின்றான் என்பது கருத்தாகிறது. உறுதியடைதல் என்றால் என்ன?


ஆணவ மலத்தின் தூண்டுதலால் உயிர் யான் யான் என்று எச்செயலுக்கும் தன்னையே தலைவனாகக் கொண்டு செருக்குற்று நிற்கும். இறைவனது மறைத்தல் தொழிலால் உயிர் பிறப்பு இறப்புக்களில் மாறி மாறிச் சுழன்று அளவிலாத் துயரங்களை மாறி மாறி அனுபவிக்கும் போதுதான் உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தி குறையும். அறியாமை தேய்ந்து நல்லுணர்வு தோன்றும். தனக்கென ஒரு செயலும் இல்லை என்பதையும், எல்லாம் அவன் செயல் என்பதையும் சிறிது சிறிதாக உணரும்.


இதுவரை தன்னையே பெரிதாக மதித்திருந்த உயிர் இப்பொழுது இறைவனே என் வாழ் முதலாகிய பொருள் என்ற உறுதியைப் பெறும். ஆடை நெய்யுமிடத்தில் நூல் இழைகளின் ஊடே இங்குமங்கும் மாறி மாறி ஓடும் குழல் போல எனது உள்ளம் உலக ஆசைகளிற் பட்டு அலைந்தது அதனால் உன்னை மறந்தேன். மயக்கத்தைச் செய்யும் உடம்பிலே கிடந்து இளைத்தேன். உடையாய், அடியேன் உன் அடைக்கலம். என்று இறைவனிடம் முறையிடும். உலகத்தை நோக்காது இறைவனையே நோக்குகின்ற இந்த உறுதிதான் உயிரின் பக்குவ நிலையாகும். இந்த உறுதி நிலையை உயிர்கள் பெறும் பொருட்டே இறைவன் மறைத்தல் தொழிலைச் செய்கின்றான்.

இவ்வாறெல்லாம் விரித்துப் பொருள் கொள்ளும் படியாக் திடப் பெறவே என்ற சிறிய அடைமொழியை அமைத்துள்ள ஆசிரியரின் சொல்லாட்சி எண்ணி மகிழ்தற்குரியது.


ஐம்பூதங்களின் செய்தித் தொகுப்பு

இதுவரையிலும் நாம் அறிந்த ஐம்பூதங்களின் வடிவம் முதலிய செய்திகளை இங்கே தொகுத்துக் கூறுவோம்.


பிருதிவி(மண்)

வடிவம் நாற்கோணம்

நிறம் பொன்மை

குறி(அடையாளம்) வச்சிராயுதம்

எழுத்து லகர மெய்

அதி தெய்வம் பிரமன்

அப்பு(நீர்)

வடிவம் அரைவட்டம்

நிறம் வெண்மை

குறி தாமரைப்பூ

எழுத்து வகர மெய்

அதி தெய்வம் திருமால்

தேயு(தீ)

வடிவம் முக்கோணம்

நிறம் செம்மை

குறி சுவத்திகம்

எழுத்து ரகர மெய்

அதி தெய்வம் உருத்திரன்

வாயு(காற்று)

வடிவம் அறுகோணம்

நிறம் கருமை

குறி ஆறு புள்ளி

எழுத்து யகர மெய்

அதி தெய்வம் மகேசுரன்

ஆகாயம்(வான்)

வடிவம் வட்டம்

நிறம் புகைமை

குறி(அடையாளம்) அமுத விந்து

எழுத்து ஹ

அதி தெய்வம் சதாசிவன்



பூதங்களின் குணமும் செயலும்



9. மண் கடின மாய்த் தரிக்கும்; வாரிகுளிர்ந் தே பதமாம்

ஒண் கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் வண்கால்

பரந்து சலித் துத்திரட்டும் பார்க்கில் ஆ காயம்

நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.


பதவுரை

பார்க்கில் ஆராய்ந்து பார்த்தால்

மண் கடினமாய் மண் திண்மைக்குணம் உடைய தாய்

தரிக்கும் பொருள்களைத் தாங்கும்

வாரி நீர்

குளிர்ந்தே குளிர்ச்சிக் குணம் உடையதாய்

பதமாம் பொருள்களை மென்மைப் படுத்தும்

ஒண்கால் ஒளி பொருந்திய தீ

சுட்டு வெம்மைக்குணம் உடையதாய்

ஒன்றுவிக்கும் பொருள்களை நீறாக்கி ஒன்றுபடுத்தும்

வண்கால் வளமையுடைய காற்று

ஓவாமல் ஒழியாமல்

பரந்து சலித்து எங்கும் பரவி இயங்கி

திரட்டும் பொருள்களைத் திரட்டும்

ஆகாயம் ஆகாயம்

நிரந்தரம் ஆய் வெளியாதல் ஆகிய குணம் உடையதாய்

நிறைந்து நிற்கும் எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும்

குறிப்பு: ரந்திரம்வெளி, அதனோடு நி என்பது சேர்ந்து நிரந்தரம் என்றாயிற்று. நி என்பதற்குத் தனிப்பொருள் ஏதும் இல்லை.


பொழிப்புரை

மண்ணின் குணம் திண்மை; செயல், எப்பொருளையும் தாங்குதல். நீரின் குணம் தண்மை, செயல், பொருள்களை மென்மைப்படுத்துதல், காற்றின் குணம் அசைவு(சலனம்) செயல், பரந்து கிடக்கும் பொருள்களை ஒருங்கு திரட்டுதல், ஆகாயத்தின் குணம் வெளியாதல்; செயல் எப்பொருளுக்கும் இடங்கொடுத்தல்.


விளக்கம்

இச்செய்யுளில் கூறப்பட்ட பூதங்களின் குணங்களையும் தொழில்களையும் பின்வரும் அட்டவணையில் நிரல்படக் காணலாம். பூதத்தின்கண் உள்ளதாய் உணரப்படும் இயல்பு குணம் என்றும், அதனால் பிற பொருளின்கண் நிகழும் விளைவு செயல் என்றும் கொள்ள வேண்டும். காரணமாகிய தத்துவங்களில் இவை இருத்தலால்தான் காரியப் பொருள்களிடத்தும் காணப்படுகின்றன.


பூதங்கள் குணம் தொழில்

மண் திண்மை பொருளைத் தாங்குதல்

நீர் குளிர்ச்சி பொருளை மென்மைப்படுத்துதல்

தீ வெம்மை பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்

காற்று அசைவு பொருளைத் திரட்டுதல்

வான் வெளியாதல் பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்


இனி, ஐம்புலன்


10. உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்

கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் மெள்ளவே

ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்

ஆசை தரும் ஐம்புலனே யாம்.


பதவுரை

உன்றனக்கு (நன்மாணாக்கனே) உனக்கு

மாபூதம் பெரும் பூதங்களின் இயல்பை

உள்ளபடி உள்ளவாறு


ஓதினோம் விளக்கிச் சொன்னோம்

கள்ளிகும் ஐம்புலனும் இனி, மனத்தைக் கவரும் ஐம்புலன்களை

கட்டுரைக்கில் எடுத்துச் சொல்வதாயின்

ஓசை பரிசம் உருவம்

சுவை நாற்றம் ஓசையும், ஊறும், உருவமும், சுவையும், மணமும் என்பவை

ஆசை தரும் ஆசையை மிகுவிக்கும்

ஐம்புலனேயாம் ஐம்புலன்களாகும்


பொழிப்புரை

இதுவரை தூல பூதங்களின் இயல்பை உள்ளவாறு எடுத்துரைத்தோம். இனி, மனத்தைக் கவர்ந்து வசஞ்செய்யும் ஐம்புலன்கள் இவை எனச் சொல்வோம். அவை ஓசை, பரிசம், உருவம், சுவை, மணம் என்பன. இவை ஆசையை மிகுவிப்பனவாகும்.


விளக்கம்

ஐம்புலன் என்பதற்குச் சிலர் கூறும் பொருள்

தூல பூதங்களைக் கூறிய பின்னர் அடுத்துக் கூற வேண்டுவது அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் உள்ள தன்மாத்திரைகளை ஆனால் ஆசிரியர் தன்மாத்திரைகளைப் பற்றிக் கூறாமல் ஐம்புலன்களைப் பற்றிக் கூறுலுறுகின்றார். அதனால் இச்செய்யுள் சிலருக்குத் தடுமாற்றத்தை உண்டாக்கியிருப்பதில் வியப்பில்லை. இவ்விடத்தில் ஐம்புலன்களைக் கூறுதற்கு ஏதும் இயைபில்லையே என்று கருதிய அவர்கள் ஐம்புலன் என்றதற்குத் தன்மாத்திரைகள் என்றே பொருள் எழுதிச் சென்றார்கள். அவ்வாறு பொருள் கூறுதல் பொருந்துமா என்பதை நோக்குதல் வேண்டும்.


ஆசிரியர் வாளா ஐம்புலன் என்று கூறியிருந்தால் அதற்குத் தன்மாத்திரைகள் என்று பொருள் கூறுதல் பொருந்துவதாகலாம். எவ்வாறெனில், ஓசை முதலிய ஐந்தும் பொறிகளால் கொள்ளப்படும் சிறப்பு நிலையை எய்திய பொழுது புலன் எனப்படும். அவை செவி முதலிய பொறிகட்குப் புலனாகாமல் நுண்மையாய் நிற்கும் நிலையும் உண்டு. அந்நிலையில் அவை தன்மாத்திரைகள் எனப்படும். புலனாகாமை பற்றி அவற்றை நுண்புலன்கள் என்றும் கூறலாம். அம்முறையில் செய்யுளில் ஐம்புலன் என்றும் மட்டும் கூறியிருந்தால் நுண்புலன்களை அவை குறிப்பதாகக் கொண்டு தன்மாத்திரைகள் எனக் கூறுதற்கு இடம் உண்டு.


அடை மொழிகளால் ஆசிரியர் உணர்த்துவது

ஆசிரியர் ஐம்புலனைக் குறிப்பிடும் இரண்டு இடங்களிலும் அடை மொழி புணர்ந்துக் கூறியுள்ளார். கள்ளமிகும் ஐம்புலன் என்றும் ஆசை தரும் ஐம்புலன் என்றும் கூறியுள்ள அடை மொழிகளை நோக்குதல் வேண்டும். ஓசை முதலிய ஐந்தும் பூதங்களின் குணங்களாய் வெளிப்பட்டு நின்று செவி முதலிய பொறிகளால் கொள்ளப்படும் போதே அவை நம் மனத்தைப் பற்றுகின்றன. ஆசையை மிகுவிக்கின்றன. இவ்வகையில் அவை பொறிகளுக்கு விடயங்கள் ஆகின்றன. தன்மாத்திரைகள் அங்ஙனம் பொறிகளுக்கு விடயம் ஆவதுமில்லை. ஆசையை மிகுவிப்பதும் இல்லை. எனவே ஆசிரியர் அமைத்துள்ள அடை மொழிகளை நோக்கினால் அவர் இங்கே தன்மாத்திரைகளைக் குறிக்கவில்லை என்பதும் புலப்படும். நிலையினவாகிய ஐம்புலன்களையே குறிப்பிட்டார் என்பதும் தெளிவாகும்.


தன்மாத்திரைகளைக் கூறாமல் புலன்களைக் கூறிய காரணம்


தன்மாத்திரைகளே தத்துவங்கள் என்றும், ஐம்புலன்கள் என்பவை புலப்படும் குணங்களாகிய தாத்துவிகங்கள் என்றும் முன்னே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இவ்விடத்தில் தன்மாத்திரைகளைக் கூறுதலே முறை. அதை விடுத்துத் தாத்துவிகங்கள் ஆகிய புலன்களைக் கூறியிருப்பது எக்காரணம் பற்றி? என வினவலாம். ஆசிரியரின் அணுகு முறையைப் பற்றி முன்னேயே கூறியுள்ளோ. தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் பெறவைத்தல் என்பது அவர் பின்பற்றும் முறையாகும். நமக்கு நன்கு தெரிந்தவை ஐம்புலன்களாகிய விடயங்கள். சிறப்பு நிலையில் விளங்கி நிற்கும் குணங்களாகிய அப்புலன்களை எடுத்துக் காட்டி, அவற்றிற்கு மூலமாய் பொதுமையில் விளங்காது நுட்பமாய் நிற்கும் நிலைகள் உண்டு எனவும், அவையே தன்மாத்திரைகள் எனவும் குறிப்பாய் உணர்த்தினார் ஆசிரியர். குணமாதல் ஒப்புமை பற்றியும், பருப்பொருளாக வைத்து முதற்கண் உணர்த்துதல் எளிமையாதல் பற்றியும் புலன்களே இங்குக் குறிக்கப் பெற்றன எனக் கொள்ளலாம்.

இனி, ஞானேந்திரியங்கள்

ஞானேந்திரியங்கள் ஆகிய அறிகருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. மெய் என்பது உற்று அறிவதாகிய தோலினைக் குறிக்கும். வாய் என்பது சுவைத்து அறிவதாகிய நாக்கினைக் குறிக்கும். இவை தோன்றும் முறையினை முன்னே அறிந்தோம். இவை புலன்களை அறியும் முறையினை இப்போது காண்போம்.


அறிதலின் இரண்டு வகை

ஆன்மா ஞானேந்திரியங்கள் ஆகிய இவ் வைம்பொறிகளைக் கொண்டு புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐம்புலன்களைப் பொதுவாக அறியும். பொதுவாக அறிதல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளக்கலாம். தொலைவில் ஒருவர் வருகிறார். முதலில் நம் கண்களுக்கு ஏதோ ஓர் உருவம் என்ற அளவில் மட்டுமே தெரிகிறது. பிறகு அவர் நெருங்கி வரவர அவரைப் பற்றிய விவரங்கள் தெரிகின்றன. அவரது பெயர் இன்னது என்று தெரிகிறது. கன்னங்கரிய அவரது நிறம் தெரிகிறது. தலையில் உள்ள வழுக்கை தெரிகிறது. அவர் அணிந்துள்ள சட்டைப் பையில் வைத்திருக்கும் பணம் கூடத்தெரிகிறது. அவரது நடையின் வேகமும் தெரிகிறது. இக்காட்சியில் முதலில் நம் கண்களுக்குத் தெரிந்தது இஃது ஓர் உருவம் என்ற அளவில் மட்டும்தான். இதுவே பொதுவாக அறிதல் என்பதாகும். பின்னர் பெயர், நிறம், தலையின் அமைப்பு, அணிந்துள்ள சட்டை, நடக்கும் பாங்கு முதலிய விவரங்கள் சிறப்பாகப் புலப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர் இன்னார் என்று வேறுபடுத்தி அறிகின்றோம். இது சிறப்பாக அறிதலாகும். இதனால் அறிவில் இரண்டு வகை உண்டு என்பது புலனாகும். ஒன்று பொருள்களைப் பொதுவாக அறிதல், மற்றொன்று பொருள்களைச் சிறப்பாக அறிதல்.


ஞானேந்திரியங்களால் நிருவிகற்பக் காட்சி நிகழ்தல்

செவி முதலிய ஞானேந்திரியங்கள் பொருள்களைப் பொதுவாக அறியுமேயன்றிச் சிறப்பாக அறியமாட்டா. செவி இஃது ஓர் ஓசை என்று மட்டுமே அறியும். தோல் இஃது ஓர் ஊறு என்று மட்டுமே என்று அறியும். கண் இஃது ஓர் உருவம் என்று மட்டுமே அறியும். நான்கு இஃது ஓர் சுவை என்று மட்டுமே அறியும். மூக்கு இஃது ஓர் மணம் என்று மட்டுமே அறியும்.


எனவே ஆன்மா ஞானேந்திரியங்களால் புலன்களைப் பொதுவாகவே உணரும் என்று சொல்லலாம். பொதுவாக அறிவதை நிருவிகற்பக் காட்சி என்பர். நிருவிகற்பம் வேறுபாடின்மை, ஒரு பொருளுக்குரிய பெயர், குணம், தொழில் முதலிய வேறுபாடுகள் ஏதும் தெரிய வாராமல் இஃது ஒன்று என்ற அளவில் மட்டும் அறிவதால் இது நிருவிகற்பக் காட்சி என்று குறிக்கப்பட்டது. இனி, அவ்வேறுபாடுகள் தெரிந்து இஃது இன்ன பொருள் என்று சிறப்பாக அறிதல் மனம் முதலிய அந்தக்கரணங்களில் செயற்பாட்டினால் விளைவதாகும். இவ்வாறு சிறப்பாக அறிவதை சவிகற்பகாட்சி என்பர். சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. அந்தக்கரணங்களினால் உண்டாகும் சிறப்புக் காட்சியைப் பற்றிப் பின்னால் (செய்யுள் 16) நாம் பார்க்க இருக்கின்றோம். இப்பொழுது ஞானேந்திரியங்களைப் பற்றி ஆசிரியர் வழியில் நின்று அறிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment