Tuesday, 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 08

Image result for கங்கை

சப்த ரிஷிகளையும் வணங்கி, பூஜித்து, அவர்கள் அனுமதியுடன் கங்கையை தன்னுடன் வரும்படி வேண்டினான். இப்போது கங்கை முன்னே செல்ல, அவள் செல்ல விரும்பிய வழியில் ரதத்தைச் செலுத்தினான் பகீரதன்.

Related image

இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும்போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கை.

இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும்போது, கங்கா தேவி தன் ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினாள். பீகாரிலுள்ள பாகல்பூர் என்ற ஊருக்கு அருகில், சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் தென்கிழக்காக ஓடிக் கொண்டிருந்த கங்கை திடீரென திசை திரும்பி, மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள்.

Image result for கங்கை

( பொதுவாக நதிகள், தோன்றிய திசையில் திரும்பி ஓடுவதும், புண்ணிய திசையாகிய வடக்கு நோக்கிப் போவதும் ஆறுகளின் புனிதத்தை உணர்த்தும் இடங்கள். இவ்விதமே, தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து ஓடிவரும் காவேரி தஞ்சை மாவட்டம் குத்தாலம் - ஆடுதுறைக்கு இடையே ஓர் இடத்தில் மீண்டும் மேற்கு நோக்கியே திரும்பும் அந்த இடம் புனிதத் தலமாகப் போற்றி வணங்கப்படுகிறது.)

அப்போதும் பகீரதன் தன் முயற்சியில் தளராமல், சிவபெருமானையும் கங்கையும் பிரார்த்தித்து, தான் பெற்ற வரத்தின்படி வங்கக்கடல் வரை வரும்படி கங்கையை அழைத்தான். அப்போது சிவ பெருமான் தோன்றி, எல்லா யுகங்களிலும் கங்கை உத்தரவாகினியாகத் திரும்பிய இடத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பரிசுத்தமான கங்கையை பூஜித்து, காவடிகளில் சுமந்து செல்வார்கள்.

அவர்கள் பல காத தூரம் நடந்து சென்று, தேவ்கர் எனும் இடத்திலுள்ள சுயம்பு லிங்கமான வைத்தியநாதருக்கு அந்த நீரை அபிஷேகம் செய்து, புண்ணியம் பெறுவார்கள் என்று கங்கைக்கு ஒரு வரமளித்தார்.

 Related image

ச்ராவண மாதத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச் சுமந்துகொண்டு, சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பக்தி பரவசமான காட்சி. தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு, பகீரதன் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி, வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை. பூமி குளிர்ந்தது. பகீரதன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்தான் !

பல பெயர்களை இடம் தோறும் பெற்றாலும் நூறு கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறாள் கங்கை. எல்லா ஆறுகளும் என் குழந்தைகளே என்று கூறுவது போல் நூறாகப் பிரிந்து காட்டினாள் போலும்.

வங்கத்திலும் பாயும் இந்த நூறு கிளைகளில் ஒரு கிளையில் கங்காசாகர் என்ற இடம் உள்ளது. சிறு தீவு போன்ற இடம். இந்த கங்கா சாகரில்தான் கபில முனிவர் ஆசிரமம் இருந்தது. இங்கே அவரது சிலை ஒன்று உள்ளது. அக்கோயிலில் இடதுபுறம் விசாலாட்சியும் வலதுபுறமும் அனுமனும் உள்ளனர். இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆரூரில் பிறக்க முக்தி, அண்ணாமலையை நினைக்க முக்தி, ஆனைக்காவில் வாழ முக்தி, ஐயன் நடமிடும் தில்லையைத் தரிசிக்க முக்தி என்னும் சொற்றொடரில் காசியில் இறக்க முக்தி என்னும் பெருமைக்கு, கங்கையும் ஒரு காரணமாக விளங்குகிறது.

வெள்ளப் பெருக்கைப் புனிதமாகக் கொண்டாடுவது மரபு என்பதால்தானே தமிழ் மக்களும் காவிரியில் ஆடிப் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள். அதற்கும் ஒருநாளைக் குறிப்பிட்டு ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பதினெட்டாம் பெருக்கு என ஒரு பண்டிகையையே வைத்துள்ளனர்.

காசியின் கரை கங்கைக் கரைக்கு மேலே ஐம்பது முதல் எழுபது அடி உயரம் வரை . இயல்பாகவே அமைந்துள்ளது. காசியின் உள்நகரம் கரையை விடப் பள்ளமாகச் சரிந்து செல்கிறது.

காசியின் தென்பகுதியான அசி சங்கமம் மண் துறையிலான, உயரம் குறைந்த இடமாகும்.

வருணா சங்கமமோ சிறிது உயர்ந்து சென்று முடிகிறது.

Related image

இதனால் கிழக்கு உயர்ந்து மேற்கில் சரிந்தும் வடக்கு உயர்ந்து தெற்கு சரிந்துமாக இந்தப் புனிதத் தலம் விளங்குகிறது.

கங்கையில் வெள்ளம் எதிர்பாராதவிதமாகப் பெருக்கெடுக்கும் போது, தண்ணீர் காசி நகருக்குள் புகுந்து விடுவதும் உண்டு. 1948-ஆம் ஆண்டிலும் 78-ஆம் ஆண்டிலும் இப்படி நிகழ்ந்து உள்ளது.

முற்காலத்தில், ஊருக்குள் இப்படி வெள்ளம் புகுந்துவிட்டால் அதற்கு வடிகாலாக ஓர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அசி சங்கமம் தொடங்கி கங்கைக்கு மேற்கே ஊரின் தாழ்வு மையப்பகுதியில் இருந்த பல குண்டங்களிலும் கங்கை வெள்ளம் புகுந்து மற்றொரு கங்கையாகவே மாறி அந்த வெள்ளம் திரும்பவும் வருணாவில் வடிந்து கங்கையோடு கலக்கும்.

சீன யாத்ரிகர்களான பாகியான், யுவான் சுவாங் ஆகியோர் இந்தியப் பயணம் வந்தபோது காசியில் பல ஏரிகளும் குளங்களும் இருந்ததைக் கண்டு தங்கள் பயண நூல்களில் அவை பற்றி விவரித்து எழுதியுள்ளனர்.

புராண காலம் முதலாக வருணையில் குளிப்பது சிறப்பாகக் கருதப்பட்டது. கங்கை, விஸ்வநாதர் வாழும் காசியை முழுவதுமாகத் தழுவி வருணையில் கலப்பது ஒரு திருமணக் காட்சியாகவே போற்றப்படுகிறது.

Related image

 கங்கையை அன்னையாக அழைப்பதே மரபு.

வட இந்திய நகரங்களில் குழந்தை பிறந்ததும் முதலில் கங்கை நீரால் குளிப்பாட்டுகிறார்கள்.


மணத்தால், நிறத்தால், குணத்தால் கங்கைக்கு இணையான நதி உலகில் வேறொன்றில்லை.

காசியில் ஓடும் கங்கையில் 64 படித்துறைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். அனைத்தும் மண் துறைகளே. சில துறைகளுக்கு பெயர் தான் உண்டு. அவை இருப்பதற்கான அடையாளமில்லை.

ஐந்து துறைகளே பக்தர்களால் போற்றி நீராடப்படுபவை.

இரண்டு துறைகள் மயானத் துறைகள்.

மிக உயரிய படிக்கட்டுகளும், துறை மீது கோயில்கள், மடங்கள், மயானங்கள், மரங் கள் ஆகியவை கொண்ட அமைப்புடன் விளங்கும் இதுபோன்ற படித்துறைகள் வேறு நதிகளில் எங்கும் இருக்க முடியாது. அதனாலேயே கங்கை பக்தர்களிடம் தனி ஈர்ப்பைப் பெற்றுத் திகழ்கிறது.

புண்ணிய நதிகளில் குறிப்பிட்ட நாளில் ஏராளமானோர் கூடுவது இந்தியாவில் வழக்கம்தான். எனினும் நாள்தோறும் இப்படி ஆயிரக்கணக்கில் மக்கள் ஓரிடத்தில் கூடி நீராடும் காட்சி வேறெங்கும் காண முடியாதது. அதனாலேயே காசி - யின் படித்துறைகள் தலைமைத் தன்மை பெறுகின்றன.

மலர் மாலைகள், ஈமச்சடங்குப் பொருள் கள், பிணங்கள் எல்லாம் பேதாபேதமின்றி கங்கையில் கலந்து செல்கின்றன. காண்போர் திகைப்பதில்லை. வெறுப்பதில்லை. மாறாக வணங்குகிறார்கள்; வழியனுப்புகிறார்கள்.

Image result for கங்கை

மண்துறைகளாக இருந்ததை மன்னர் காலத்தில் படித்துறைகளாக அமைத்தனர்.வீரசிவாஜி நிறைய துறைகளை அமைத்தார்.

அசி சங்கமத் துறை காசியின் தென்கோடி யில் அமைந்துள்ளது. இது மண்துறையாகவே இன்னும் வைக்கப்பட்டுள்ளது.

அசி, தசாசுவமேதா, மணிகர்ணிகா, பஞ்சகங்கா, வருணா சங்கமம் என்னும் ஐந்து துறைகளே சமய நம்பிக்கை சடங்குகளுக்கு உரியன.

இவற்றில் அசி சங்கமத் துறையில்தான் முதலில் முழுகுவார்கள். சங்கமேஸ்வரர் கோயில் இத்தலத்துக்கு சிறப்புத் தருவதாகும். தங்கள் முன்னோர்களுக்கு கடன் இடுவோர் (சேத்திரப் பிண்டம்) இந்த ஐந்து துறைகளுக்கே செல்வது வழக்கம்.

சிலர் ஒவ்வொரு துறைக்கும் நடந்தே சென்று முழுகுகிறார்கள்.

சற்று வசதி படைத்தவர்கள் அசி முதல் தொடங்கி படகில் புரோகிதரையும் அழைத்துக்கொண்டு ஐந்து துறைக்கும் சென்று முழுகி வருவார்கள்.

தமிழில் கட்டம் என்பதை இந்தியில் காட் என்கிறார்கள். அசி கட்டம் அசி காட். துளசி கட்டம் துளசி காட்.

Image result for varanasi tourism

 64 கட்டங்களில் அசி, துளசி, சேட்சிங், ரிவா, ஆனந்தமயி, அரிச்சந்திரா, விஜய நகரா, அனுமான், ஆதிமணிகர்ணிகா, கேதார், செளதி, க்ஷேமேச்வர், மானஸரோவர், நாரதா, பாண்டியா, துர்பங்கா, முன்ஷி, அகல்யாபாய், சீதளா, தசாசுவமேதா, மீர், மணிகர்ணிகா, பஞ்சகங்கா, துர்க்கா, பிருட்மா, திரிலோசன், நயா, பிரகலாதா, ராக்கட், வருணா சங்கமம் ஆகியன மேற் சொன்ன 64 கட்டங்களிலும் பார்க்கத்தக்கன.

அசியை அடுத்து பக்தர்களால் நீராடப்படுவதில் துளசி காட் முக்கியமானது. இதில் இராமாயணம் பாடிய துளசிதாசர் இல்லம் இருக்கிறது. கங்கையில் நீராடிக் கவிபாடி முக்தி பெற்ற இவர், தன் காலைக் கடன் கழிப்பதற்குக் கூட, காசியை விடுத்து படகில் ஏறி கங்கைக்கு அப்பால் செல்வது வழக்கமாம். காசியின் புனிதத் தன்மைக் கருதியே அவ்விதம் செய்தார்.

துளசித்துறையில் ஆனந்தமயி என்ற பெண்துறவி வாழ்ந்து வந்தார். அவர் பெருமை நாளடைவில் பரவவே, மக்கள் அவர் பெயரால் ஆனந்தமயி துறை என்று அழைக்கப்போக துளசித் துறைக்கு அதுவே மறுபெயராகியது. இங்கு இன்றும் இவரது ஆசிரமம் உள்ளது.

இன்று சிவாலா காட் என்று அழைக்கப்படும் துறை கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சேத்சிங் என்பவரின் பெயரால்தான் முன்பு வழங்கப்பட்டது. இத்துறையின் மேலே சேத்சிங் மகாராஜாவின் அரண்மனைக் கூடம் உள்ளது.

அரிச்சந்திரன் சுடுகாட்டுப் பணி மேற்கொண்டதைக் காசி வரலாறு கூறும். அதை நினைவுபடுத்துவதே அரிச்சந்திரா கட்டம். இங்கு ஒரு சுடுகாடு உண்டு. தான் இறந்தபிறகு இந்த அரிசந்திரா காட்டில் தான் எரிக்க வேண்டும் என்று விரும்புவோரும் உண்டு. இத்துறையை ஆதிமணிகர்ணிகா என்றும் குறிப்பிடுவர். இதுதவிர, கேதார் கட்டத்துக்கு முன்பும் ஓர் ஆதிமணிகர்ணிகா துறை உண்டு.

 இப்போதும் பரபரப்பாக இருக்கும்துறை அனுமன் கட்டம். இதுவே தமிழர்கள் நிறைந்த பகுதி. அனுமன் கோயிலை ஒட்டிய துறை என்பதால் அனுமன் காட் என்றாயிற்று. காமகோடீஸ்வரர் ஆலயம் அனுமன் காட் பகுதியில் கரைக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது.

சிறப்புக்குரிய கேதார் காட்’டில் தமிழரும் வங்காளிகளும் அதிகமாக வாழ்கின்றனர். இங்குள்ள கேதார் நாதர் கோயில் நம்மூர் திருப்பனந்தாள் மடத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அழகிய துறையாகும்.

Image result for varanasi tourism

சலவைத் தொழிலாளர் மிகுந்த பகுதி மானஸரோவர் துறை. இங்கு அமரேஸ்வரர் கோயில் உள்ளது.

நாரதர் காட் என்பது நாரதரின் பெயரைக் கொண்டு விளங்குவது.

செளம்சதிகாட் என்ற துறையில் 64 யோகியர் கோயில் உள்ளது. செங்குத்தான் படிகள் கொண்ட துறை.

தசாசுவமேதா கட்டம் என்பது பக்தர்கள் இரண்டாவதாக நீராடும் கட்டம். பத்து அசுவமேத (தச அசுவமேதம்) யாகங்களைப் பிரம்மா செய்தார். காசி மன்னர்களும் கூட அசுவமேத யாகம் செய்துள்ளனர். இதன் நினைவாக உள்ளதே தசாசுவமேத கட்டம்.

இந்தத் துறையே காசியைப் பலரும் அறியும்படிக் காணக்கிடைக்கும் படங்களிலும் ஓவியங்களிலும் காணப்படும் துறையாகும்.

இந்த அடையாளத் துறையே மிகுந்த கூட்டம் உள்ளது. காரணம், இதில் மூழ்கியவுடன் காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கு வசதியாக எளிதில் கோயிலை அடைவதற்கேற்ப ஒழுங்கான சாலையும், கோயில் அருகாமையிலும் அமைந்துள்ளது.

பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் தாழங்குடையின் கீழ் அமர்ந்து, பலருக்கும் சடங்கு இயற்றும் காட்சி இங்கேயே அதிகம்.

மற்ற துறைகளிலும் உண்டு எனினும் இங்கே ஜனநெருக்கடி மிகுதி. காசியின் தீர்த்தச் சிறப்பை இக்காலத்தில் விளக்கும் துறை இதுவே.

மையப்பகுதியில் இருக்கும் மணிகர்ணிகாவை விட இங்கே மக்கள் அதிகமாகக் கூடுகின்றனர். இங்கே சீதளாதேவிக் கோயில் உள்ளது.

அடுத்தது மான் மந்திர் கட்டம். தொன்மையான கட்டடங்கள் பல உள்ள, இந்தத் துறையின் உச்சியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் போது அமைக்கப்பட்ட வான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்குள்ள சோமேசர் ஆலயத்தைச் சந்திரனே அமைத்ததாக ஐதீகம்.

தர்ம கூபம் துறையில் எமதர்மனுக்குக் கோயில் உள்ளது. காசியில் இறந்தவர்களுக்கு எமவேதனை இல்லை என்பதால் எமன் இங்கே வணங்கப்படுகிறான்.

காசியிலேயே இன்னொரு மினி விஸ்வநாதர் கோயிலை யார் கட்டினார்கள் ? வேறு யார் ? நாம்தான். காந்தியடிகள் இயக்கம் காரணமாகத் தீண்டப்படாதோர், தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் செய்து விஸ்வநாதரைத் தீண்டியதால் சாந்நித்யம் குறைந்துவிட்டதாகக் கூறி, காசியில் சிலர் உண்டு பண்ணிய புதிய விஸ்வநாதர் கோயில்தான் இது. ஆனால் விஸ்வநாதரோ தனது பழைய கோயிலில் தான் மகிழ்வோடு இருக்கிறார் என்பதற்கு இந்தப் புதிய கோயிலை யாரும் கண்டு கொள்ளாததே சான்று.

                                                     - புனித பயணம் ()ரும்..


சிவன் வடிவமைத்த காசி - 07

Image result for varanasi tourism


மணிகர்ணிகை:


காசிக்கு பகீரதனால் கங்கை வருவதற்கு முன்பு திருமால் தனது சக்கரத்தால் ஒரு திருக்குளத்தை உண்டாக்கினார். அதன் கரையில் சிவபெருமானை வேண்டி கடுந்தவம் புரிந்தார். விஸ்வேசுவரர் அவர் முன் தோன்றி அவருடைய தவத்தை மெச்சி தலை அசைத்தார். அவரது தலை அசைவினால் அவருடைய திருச்செவியில் உள்ள குண்டலத்தின் நாகமணி நழுவி அந்தக் குளத்தில் விழுந்தது. அதனால் அக்குளத்துக்கு ‘மணிகர்ணிகை’ என்ற பெயர் ஏற்பட்டது.

சக்கரத்தினால் உண்டாக்கிய காரணத்தால் 'சக்கர தீர்த்தம்’ எனவும் பேர் பெறும். பின்னர் இம்மணிகர்ணிகையில் கங்கையும் கலந்து அதன் மகிமை உயர்ந்தது.

 தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இதில் நீராட வருவர். அதனால் உச்சிவேளையில் இதில் நீராடுவது உத்தமம். காசியிலுள்ள எல்லா தீர்த்தங்களிலும் இது சிறப்பு உடையது.

மிருகண்டேய முனிவர் இதில் மூழ்கி மகப் பேறு பெற்றார்.

மார்க்கண்டேயர் இந்த மணிகர்ணிகையில் நீராடி விசுவேச்வரருடைய திருவருளைப் பெற்று யமனை வெல்லும் திறனைப் பெற்றார்.

Related image

 கங்கா ரகசியம் ! 

உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகிவிடும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.

இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும்தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள்தான் என்கின்றன சாஸ்திரங்கள் !

தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள். அதனால் நரக சதுர்த்தசியன்று ஸ்நானம் செய்வதை, 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா ?'' என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.

உலகில் வற்றாத ஜீவநதிகளில் புனிதத் துவம் பெற்ற நதி – கங்கை. காவிரியோடு கங்கையை இணைத்தால் உலகின் செழிப்பான பிரதேசமாக நமது பாரதமே விளங்கும் என்பது பூகோள ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வரும் கருத்து. இந்தியாவில் பாயும் ஆறுகளுக்கெல்லாம் மூலம் கங்கையே என்பது - நம்பப்படும் ஒரு மரபு.

ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் பிரம்மன் தோன்றினான். அவன் அண்ட சராசரங்களையும், சகல எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான். அதன்பின்பு, தன்னைப் படைத்த நாராயணனுக்குப் பாத பூஜை செய்ய பவித்திரமான கலசம் ஒன்றைப் படைத்து, அதில் தன் தவ சக்தியால் உருவான பவித்ர நீரை நிரப்பினான். அதற்கு கங்கா எனப் பெயரிட்டு, அதனை பகவான் நாராயணனின் பாத கமலங்களில் சேர்த்தான். கங்காதேவி என்ற அந்தப் பவித்ர நீர்த்தாரை விஷ்ணு பாதத்தில் சேர்ந்து, அவரது பத்தினியானாள். அவள் பகவான் விஷ்ணுவின் சேவையிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தோன்றிய இடம்தான் 'கங்கோத்ரி’.

 பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். அந்த நீருக்குத் தலைமை வகிப்பது கங்கை. இது பகீரதனால் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட புண்ணிய நதி என்கிறது இந்துமதம்.

தமிழக மக்கள் காவிரியையும் வைகையையும் கொண்டாடுவது போலவே, கங்கையையும் புகழ்ந்து கொண்டாடியுள்ளனர். சங்க இலக்கியங்கள் எங்கிலும் கங்கை போற்றப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க வட இந்திய அரசர் கனகவி ஜயர் தலைமீது இமயக் கல்லை ஏற்றி, கங் கையில் முழுக்காட்டி, தமிழகம் கொணர்ந் தான் என்று சிலப்பதிகாரம் உரைக்கிறது.

தமிழ் பக்தி இலக்கியங்கள் கங்கையைப் புராண காரணமாகவும் சிவபெருமான் தலையில் இருக்கும் பக்தி காரணமாகவும் அதைச் சிறப்பித்துப் பேசுகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அங்கே, கங்கைக் கரைக் காட்சியொன்று தொடர் சிற்பமாகப் பெரிய அளவில் வடிக்கப்பட் டுள்ளது.

 ஏழாம் நூற்றாண்டில் திருச்சி மலைக் கோட்டையில் மகேந்திர பல்லவன் எடுத்த குகைக் கோயிலில் பகீரதனுக்குக் கங்கையை அளித்த சிவபெருமானின் இன்னொரு வகையான தோற்றம் பெரிய அளவில் உள்ளது.

ஒரு ஆற்று நீருக்கு அப்படி என்ன புனிதத் தன்மை ? 

எல்லா ஆற்றிலும் ஒரே நீர்தானே ? 

கங்கைக்கு மட்டும் புனிதம் கற்பிப்பானேன் ? 

அது முக்தி தரும்; பாவம் போக்கும் என்று சொல்வானேன் ? 

இப்படிக் கேட்போரும் இருக்கிறார்கள்.

ஆனால், செப்புக் கலசத்திற்குள் அடைக்கப்பட்ட கங்கை நீர் ஆண்டு பல ஆனாலும் சிறிதும் கெடாமல் இருப்பது எப்படி ? செப்புப் பாத்திரம் போகட்டும்; தகர டப்பாவிற்குள் அந்த நீரை அடைத்து வைத்திருந்தாலும் கெடுவதில்லை. இது எப்படி ? விடை சொல்லத் தெரியவில்லை - கேள்வி கேட்டோருக்கு ! இதுவே கூட கங்கையின் ஆன்மிகத் தன்மைக்கு மக்கள் ஏற்றுக் கொண்ட அடிநிலை ஆதாரமாகக் கொள்ளலாம்.

பஞ்ச பூதங்களுள் அக்னியாகிய தீக்கடவுள் பல தெய்வங்களுக்கும் பொதுவான ஊடகமாகவே விளங்குகிறார். ஆனால் நீரோ அதுவே தெய்வமாக விளங்குகிறது.

மழை - வான் கங்கை வழங்கும் அமுதமாகவே கொள்ளப்படுகிறது.

நீரில் அர்க்கியம் விடுதல், அஸ்தி கரைத்தல் போன்றவை செய்தால், இறந்தவர் சொர்க்கம் பெறுவர் என்றும், அவர்களுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது அவர்களுக்கே சென்று சேரும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை, மரபு.

Image result for கங்கை

வேள்வித் தீயின் மூலம் கடவுளர்க்கு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினாலும் நீரின் மூலம் பாவம் போக்குவதும், முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதலும், சொர்க்கம் புகச் செய்தலுமான சடங்கு முறைகளால் தீயை விட நீரே சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது. மற்ற கடவுளர்களுக்கு உரியதைக் கொண்டு செல்வதே அக்னியின் வேலை. ஆனால் நீரோ தானே தெய்வத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.

கங்கையின் புனிதத் தன்மையை எடுத்துக்காட்ட ஒரு கதை உண்டு. 

வாஹிகன் என்பவன் ஒரு பாவி. சூது, பசுக் கொலை, தாயை உதைத்தது போன்ற குற்றங்களுக்காக எமலோகத்தில் நரகத்தில் தள்ளப்பட்டு தண்டனை அளிக்கப்பட் டான். தண்டணையை நிறைவேற்ற அவன் மீது கழுகுகளை ஏவினர். அவனுடைய உடலைக் கழுகுகள் போட்டியிட்டுத்  தின்றபடி பறந்தன. பறவைகள் ஒன்றுக் கொன்று போட்டியிட்டுக் கொண்டதில் அவனுடைய கால் எலும்பு ஒன்று கங்கையில் விழுந்து விட்டது. அதே காரணத்தால் அப்போதே அவன் சொர்க்கத்துக்குப் போனான்.

பாவம் போக்கும் கங்கையின் பரம்பொருள் தன்மை அல்லவா ? இக்கதையால் விளங்குகிறது.

 சிவபிரானின் தலையில் உள்ளதால் , கங்கை பரம்பொருள் சார்பு பெற்றுள்ளதை அறியலாம்.

இமயமலை மீது 12,700 அடி உயரத்தில் பனிக்குன்றுகளின் ஊடே “கோமுகி' என்னும் சிகரத்தில் உள்ள ஒரு குகையில் தான் கங்கை உற்பத்தியாகிறாள் .

குகைக்கும் உள்ளே அவள் எவ்விதம் உருவாகிறாள் என்பது இன்றுவரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. முயன்றும் மனிதர்களால் காண முடியவில்லை.

கங்கை கோமுகியில் தொடங்கி, வங்காளத்தில் சென்று கடலோடு கலப்பது ஏன் ? 

நேரே தென்திசை நோக்கி ஓடி வந்து இருக்கலாமே. வடக்கை விட தெற்கு தாழ் வானதுதானே ? 

பின் ஏன் கிழக்கு நோக்கி ஓடினாள் ? 

அதற்கும் ஒரு கதை உண்டு.


கபில முனிவர் தனது சாபத்தினால் சகர மன்னனின் 60 ஆயிரம் குழந்தைகளையும் சாம்பலாக்கி விட்டார். அந்த இடம் வங்காளத்தில்தான் உள்ளது.

அப்போது பூவுலகில் ரகுவம்ஸத்தில் பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஸ்ரீராமனின் மூதாதையர்களில் ஒருவன் பகீரதன். இவன் காலத்தில், தேசத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஒரு சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தரவும், நாட்டின் வறட்சி நீங்கவும் பகீரதன் விரும்பினான்.

அதற்காக, பவித்திரமான கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயன்றான். எனவே, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற் கொண்டான். அதன் பலனாக நாராயணன் பிரத்யட்சமானார். அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணிபுரியும் கங்கா மாதாவை, கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு இமயத்தின் சிகரங்கள் வழியே ஓடி, பூமியைக் குளிரச் செய்து, தன் மூதாதையர் அஸ்தியைக் கடலில் கரைக்கும் இடத்தில் அவள் சங்கமம் ஆகும்படி அருள்பாலிக்க, பகீரதன் வரம் கேட்டான். நாராயணனும் தந்தருளினார்.

Related image

புனித கங்கை ஆகாச கங்கையாக, அதிவேகமாக புறப்பட்டாள். இமயத்தைத் தாண்டி அவள் பூமியில் இறங்கும்போது அவள் வேகத்தைத் தணிக்காவிட்டால், நாடு நகரமெல்லாம் மூழ்கிவிடும் என்று பகீரதன் பயந்தான். அவள் வேகத்தைத் தடுக்க வல்லவர், சிவபெருமான் ஒருவரே என்றுணர்ந்து, சிவனைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன்.

Related image

உலகைக் காக்க ஈஸ்வரன் தோன்றி, தன் சடையை விரித்து, கங்கையை அதில் தாங்கி, அவள் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பாயச் செய்தார். (சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. கங்கா அஷ்டோத்திரத்தில் கங்கையை விஷ்ணு பத்னி என்றும், சிவ சோதரி என்றும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது).

விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் நந்த பிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் ருத்ர ப்ராயக் என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் பாகீரதி என்று பெயர் பெற்றாள். பகீரதனிடம் கங்காதேவி, ''தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும், எந்த மார்க்கமாகத் தன் தாரைகள் ஓட வேண்டும் ?'' என்றும் கேட்டாள்.

பகீரதன் தன் தேரில் ஏறி, 'தாயே ! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட்டான். கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. ரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை.

எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான். சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

காரணம் , அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம்தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. கங்கை ஏழாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த நிலையை இன்றும் ஹரித்வாரின் பூமி அமைப்பைக் குறிக்கும் செயற்கைக்கோள் படங்களில் காணலாம்.

சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும்போது, அவர்களைத் தரிசித்து ஆசி பெறாமல் சென்றது தவறு என்று பகீரதனுக்குப் புரிந்தது. தன் தவத்துக்கு இரங்கி பூமிக்கு வந்த கங்கை தன்னைவிட உயர்ந்த தபஸ்விகளின் தரிசனத்துக்காகத் தங்கிவிட்டாள் என்பதையும் உணர்ந்தான் பகீரதன்.

                                       - புனித பயணம் வ(ள)ரும்..

சிவன் வடிவமைத்த காசி - 06


Image result for varanasi tourism

சாகசப் பயணம் ! 

காசி - இந்தியச் சமயங்கள் அனைத்துக்கும் பொதுவான புண்ணியத் தலமாக விளங்குகிறது. கங்கையால் மட்டும் காசிக்குப்புகழில்லை. காரணம் ஹரித்துவார், ரிஷிகேஷ், பிரயாகை ஆகியன கங்கைக் கரையில்தான் இருக்கின்றன. ஆனால் அவை காசியைப் போல் மகிமை அடையவில்லை.

வேதகாலம் முதலே காசி பெருமையுடன் திகழ்கிறது. வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

சிவனும் பார்வதியும் மணம் முடித்ததும் பூமியில் வாழ ஓரிடம் தேடி வந்தபோது பிரளய காலத்திலும் அழியாத காசியையே தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் பூமியில் கால் ஊன்றிய இடமே காசிதான் என்றும் காசி காண்டம் கூறுகிறது.

சிவன் ஏன் காசியில் கால் ஊன்றினார் ?

சிவனாகிய பைரவர் கையில் பிரம்மகபாலம் காசியை மிதித்ததும் கீழே விழுந்த காரணம் என்ன ?

 பூமியில் எங்காவது ஓரிடத்தில்தான் இறையருள் விளக்கம் ஆகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல மற்றவர்களுக்கும் மற்றொரு வகையில் அதே இடத்தில் அனுபவம் ஏற்படுகிறது. சோதித்துப் பார்க்க நினைத்தால், அப்போதும் அதே மாதிரி அனுபவம் கிடைக்கிறது. ஆகையால் அந்த இடம் பலருக்கும் - பல வகையில் வேறுபட்டவருக்கும் - ஒரு ஈர்ப்பு ஆற்றலுடன் விளங்குகிறது.

இப்படித்தான் வேதகாலத்திலும் உபநிடத காலத்திலும் இதிகாச காலத்திலும் வாழ்ந் தவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்து, உணர்வு வழியாகக் காசியைப் புனிதத் தலமாக முடிவுசெய்திருக்கிறார்கள்.

சமண, புத்த மதங்களும் காசியின் பெருமையை ஏற்று அதையே தங்களுக்கும் தலைமையாக்கிக் கொண்டன.

புத்தர் தனது முந்தைய பிறவியில் காசியில் செய்த அற்புதங்களைத் தாமே கூறியதாகப் புத்த ஜாதகக் கதைகளில் விளக்கப்பட்டுள்ளன.

புத்த, சமண சமயங்களுக்கு அக்காலப் பேரரசுகள் வலிமையான துணையாக இருந்தன. அவர்களும் காசியைப் போற்றவே செய்தனர். பின்னர் இந்த மதங்களின் செல்வாக்கு வீழ்ந்தது. புத்தமதம் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தனக்கு இடம் தேடிக் கொண்டது. ஆனால் புத்த சமண சமயத்தரால் வளர்க்கப்பட்ட காசிமட்டும் தனது புகழில் மங்காமல் மறையாமல் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

அடுத்து ஆதிசங்கரர் வந்தார்.

அவரது காலம் முதல் சுமார் 450 ஆண்டுகள் வரையிலும் காசி தனது தொன்மைப் புகழை மீண்டும் பெற்று இந்துக்களின் பெருமைமிக்க புனித பூமியாக சிறந்தோங்கி வளர்ந்தது.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்கு வரும் வரையில் ஆதிசங்கரர் உருவாக்கிய இந்துசமய ஒருமைப்பாட்டு உணர்வு காசியை மகத்துவம் மங்காமல் காத்து நின்றது. புத்தர் காலம் வரையில் இருந்த இந்துக் காசியைவிட, இப்போதிருக்கும் இந்துக் காசி சடங்குமுறையால் காசியைத் தலைமை ஸ்தானத்துக்கு உயர்த்தியது. அதாவது தத்துவார்த்த அடிப்படையில் பெருமை சேர்க்கப்பட்ட காசியின் முதற்கட்டம் முடிந்து சடங்கு முறைகளால் புகழ் வளர்க்கப்பட்ட காசி அடுத்த வேறொரு நிலைக்கு வளர்ந்தது. அதனாலேயே அது இந்துக்களின் அன்றாட வாழ்வியலோடு பிணைந்து கொண் டது.

ஆனால் முஸ்லிம் மன்னர்களில் அக்பர், ஜஹாங்கீர் ஆகிய இருவர் மட்டுமே மதசகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருந்தார்கள். ஏனைய முஸ்லிம் மன்னர்கள் காசியை மதக்காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அழிக்கவே செய்தனர்.

அக்பர் காலத்துக்கு முந்தைய அழிவு நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் புத்துயிர் பெற்ற காசியை அடுத்து வந்த ஷாஜஹான் தனது காலத்தில் அழித்து நிர்மூலம் செய்தார்.

பிறகு வீர சிவாஜியினால் இந்து மறுமலர்ச்சி தோன்றிய காலத்தில் மீண்டும் இன்றைய காசி உருவாக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோயில் ஐந்துமுறை இடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

புத்த, சமண சமயங்கள் காசியை ஒரு இந்துமதச் சின்னமாக இருக்கவிடவில்லை. அதை ஒரு பொதுவான புனித நகரமாக ஆக்கவே அவர்கள் முயன்றனர்.

அது மீண்டும் இந்துக்களுக்கே உரிய காசியாக மாற சுமார் 1000 ஆண்டுகள் தேவைப்பட்டன.

காசியை மீண்டும் இந்துக்காசியாக மாற்ற பல ஞானிகளும், துறவிகளும், சமயாசாரியார்களும், தத்துவ ஆசிரியர்களும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். முஸ்லிம்கள் ஆட்சிக் காலத்தில் சுமார் 500 ஆண்டுகள் அது இருண்ட காசியாகவே ஒளி மங்கி இருந்தது.

இந்துக்கள் காசிக்கு யாத்திரை மேற் கொண்டால் அவர்கள் காசி செல்வதற்குத் தனியே வரி கட்டவேண்டும் என்று முகம்தியர் காலத்தில் சட்டம் இருந்தது.

கர்நாடக அரசன் ஒருவன் ‘இந்த வரியை என் தேசத்திலிருந்து காசிக்கு யாத்திரை செல்லும் மக்களுக்கு எனது அரசே செலுத்தும்' என்று அறிவித்து, அதற்கென்று ஒரு வைப்பு நிதியை ஏற்படுத்தி வைத்தான். இது நடந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன ? 

யாத்திரை போகத் தடை இருந்தும், வசதி குறைவிருந்தும் காசிக்குப் போக விரும்பியோர் ஏராளம். காசிக்குச் சென்று திரும்புவதில் ஒரு சாகசத்தையும் மக்கள் உணர்ந்தனர். காசிக்குச் சென்று திரும்பியவர்களைக் காண்பதும் புனிதமாகக் கருதப்பட்டது. மற்றவர்களுக்கும், தாம் காசி செல்ல வேண்டும் என்ற உந்துதலை வளர்த்தது.

காசிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு உதவுவதன் மூலம் மன்னர்கள் பொது மக்களின் அபிமானத்தைப் பெற்றனர். செல்வந்தர்கள் காசியாத்திரை செல்லும் பொதுமக்களுக்கு வழி நடையில் சுமைதாங்கிகளும், ஆங்காங்கே அன்னச் சத்திரங்களும் கட்டிவைத்து, தெய்வீகத் தொண்டு செய்தனர்.

வழிப்போக்கர்களிடையே ஒவ்வொரு தேசத்து மக்களைக் காணவும் பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்ததால், காசி யாத்திரை என்பது தேச ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கும் துணை நின்றது.

Related image

போக இயலாதவர்களின் மனக்குறை தீர்க்கவே, உள்நாட்டில் ஆங்காங்கே காசி விஸ்வநாதர் ஆலயங்களை எழுப்பினர். விஸ்வலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாராயண பட்டர், லட்சுமிதரர், இராமானந்தர், துளசிதாஸர் முதலிய பெருமக்களும் காசியைத் தங்கள் இலக்கியங்களினாலும் ஆன்மிகத் தொண்டினாலும் வளர்த்தனர். காசியை அழிக்கும் முயற்சியில் எதிரிகள் பெற்ற வெற்றியின் காரணமாக இந்துக்களின் மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு இவர்களின் பக்தி இலக்கியமே நல் மருந் தாகத் திகழ்ந்தது.

அழிவு நடைபெறும் காலத்தில் ஆக்ரோஷமான எதிர்ப்பைக் காட்டும் வேலையில் கையில் கிடைப்பதையெல்லாம் ஆயுதமாகப் பயன்படுத்துவது தானே மனித இயல்பு. அப்போது கருவியின் தரம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க மனம் விழையுமா.

ஆங்கிலேயர் காலத்தில் காசியின் புகழில் அவர்கள் அனாவசியமாகத் தலையிட்டு அதன் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடாத அளவுக்கு இந்துக்கள் வலிமை பெற்றுவிட்டனர்.

இன்றைய காசி தனது பழம் பெருமையை மீண்டும் பெற்று, அதனைத் தனித்தன்மை யோடு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 கங்கையில் குளியல், கழுதையில் சவாரி 

காசியில் ஒருநாள் வணங்கிவிட்டு உடனே திரும்பி விடுவது சிறப்பல்ல. குறைந்தது மூன்று நாள்களாவது தங்கி, அல்லது எவ்வளவு அதிக நாள்கள் தங்க முடியுமோ தங்கி விஸ்வநாதரையும் அன்னபூரணி உள்ளிட்ட தெய்வங்களையும் வணங்கி வரவேண்டும்.

கங்கையில் நீராடி, வில்வ பத்திரம் கொண்டும் கங்கா தீர்த்தம் கொண்டும் விஸ்வநாதரை வழிபட வேண்டும். விஸ்வநாதர் கோயில், கேதாரீஸ்வரர் கோயில், விசாலாட்சி கோயில், அன்னபூ ரணி கோயில், பைரவர் கோயில், துண்டி (டுண்டி) விநாயகர் கோயில், தண்டபாணி கோயில், துர்க்கை கோயில், கெளடிபாய் கோயில், வியாச காசி ஈஸ்வரன் கோயில் ஆகியவற்றையாவது தரிசித்துப் பூஜை செய்து வர வேண்டும். 

பக்தர்கள் காலை ஐந்து மணிக்குத் தொடங்கி பகல் பன்னிரண்டு மணி வரை விஸ்வநாதருக்கு பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர். உச்சிகாலை பூஜையை வடகத்திய பண்டாக்கள் செய் கிறார்கள். ஆறு தட்டுகளில் அன்னம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

மாலையில் ஏழு மணிக்கு சப்தரிஷி பூஜை சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும். ஏழு அர்ச்சகர்கள் அமர்ந்து இந்த பூஜையைச் செய்வார்கள். இந்தப் பூஜை முடிவில் டமாரம் அடிப்பது விந்தையாக உள்ளது. இந்தப் பூஜை முடிந்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இரவு ஒன்பது மணிக்கு அர்த்தஜாம பூஜை ஆரம்பம். அபிஷேகம் அலங்காரம் செய்து நாகாபரணமும், குடையும் சாத்தப்படு கிறது. தீப நைவேத்தியம் செய்து விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள். பிறகு, கதவு திருக்காப்பு செய்யப்படுகிறது. அன்னபூரணி கோயிலிலும் இதுவே நடைமுறை. காலை முதல் எல்லா பூஜைகளையும் பள்ளியறை பூஜை வரை தரிசிப்பது மிகவும் புண்ணியமாகும்.

விழாக்கள்: 

எல்லாப் பண்டிகை நாள்களிலும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ஹோலிப் பண்டிகையும் சிவராத்திரியும் தீபாவளிப் பண்டிகையும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஹோலிப் பண்டிகையை மூன்று நாள்களுக்கு சாயப் பூச்சு, கங்கைக் குளியல், ஊரைச் சுற்றி கழுதைச் சவாரி, பஜனை, படகில் சவாரி என்று தடபுடலான முறையில் காசிமக்கள் கொண்டாடுகிறார்கள்.

காசியில் நவராத்திரி விழாவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியின் போது காசியில் நடைபெறும் அன்னகோடி உற்சவம் மிகவும் பிரசித்திப் பெற்றது. நாடெங்கிலுமிருந்து கங்கையில் நீராட வந்த மக்களுக்கு, பெரும் அளவில் அன்னதானம், ரொட்டித்தானம், பலகார தானம் நடைபெறுகிறது.

                                      - புனித பயணம் வ(ள)ரும்..

சிவன் வடிவமைத்த காசி - 05

Related image

 முக்தி அருளும் மகா மயானம் 

காசியில் இறப்போருக்கு மட்டும்தான் முக்தி என்பதில்லை. காசிக்கு வெளியே, தொலைவில் உள்ள ஊரில் இறந்திருந்தாலும் அன்னாரது எலும்பையோ அவரது நினைவான பிண்டங்களையோ காசியில் பிரவகித்து வரும் கங்கையில் இட்டு ஈமக் கிரியைகளைச் செய்தால் அவர்களுக்கு முக்தி கிடைக்கும். அதனாலேயே இத்தலம் மகா மசானம் (மகா மயானம்) என்று வழங்கப்படுகிறது.

உலகில் எந்த ஒரு மத வழக்கத்திலும் ஒரு புண்ணிய தலத்தைத் தரிசிப்பதாலும் வணங்குவதாலும் மட்டுமே புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு புண்ணியத் தலத்தில் இறப்பதனால் கூட முக்தி கிடைக்கும் என்னும் போற்றுதலுக்குரிய தலமாக உலகில் விளங்குவது காசி மட்டுமே.

தமிழ் மக்களிடம் ஆதிகாலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் மட்டுமே இருந்தது. அதன் குறியீடுகளே முதுமக்கள் தாழி போன்றவை. ஆனால் சங்க காலத்துக்கு முன்பே தமிழர்களிடம், இறந்தோரை எரிக்கும் பழக்கம் வழக்கத்துக்கு வந்துவிட்டது.

புறநானூற்றில் ஒரு காட்சி. "மக்கள் போற்ற வாழ்ந்த மன்னன் இறந்தபின் புதைப்பதா, எரிப்பதா என்ற ஆராய்ச்சி ஏன் ? அவன் வாழ்ந்தபோது பெறாத பெருமையையா இறந்தபின் அடக்கம் செய்யும் முறையினால் பெற்றுவிடப் போகிறான் ?' என்று அழுது புலம்புகிறான் ஒரு புலவன்.

ஒரு உடலை எரித்தபின், மறுமுறை சென்று அவ்வுடலின் எலும்புகளை எடுத்து நீரில் விடுவது ஈமக்கிரியையின் போது தமிழர்கள் செய்யும் சடங்குமுறைகளில் ஒன்று. அதாவது எலும்புகளை நீரில் விடுவது என்பது கங்கையில் விடுவதற்குச் சமம் என்றே கருதப்பட்டு இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

யாகங்களில் தீ வளர்த்து அக்னி பகவானுக்கு யாகத்தை அர்ப்பணிப்பது போல, உடலை எரிப்பதும் இறைவன் தந்த பஞ்ச பூதங்களால் ஆன உடலை மீண்டும் பஞ்ச பூதங்களுடன் ஒன்றச் செய்யும்படி அக்னி பகவானுக்கே அர்ப்பணிப்பது ஆகும்.

Related image

வேதாந்த வைதிகச் சடங்குகள் உரு வான நாளிலிருந்தே அவற்றோடு காசியும் தனது மயானப் புகழால் பெயர் பரவிவிட்டது.

வழக்கமாக நம்மூர்களில் சுடுகாடு என்பது ஊருக்கு வெளியே இருக்கும். கோயில்களில் மயானமே கோயிலாகக் கொள்ளப்படுவதும் உண்டு. உதாரணம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடவூர் (திருக்கடையூர்) மயானக் கோயில்.

ஆனால் காசி அப்படியல்ல. அந்த ஊரின் நடுவிலேதான் சுடுகாடு. நதியில், நீராடும் துறைதான் சுடுகாடு. ஊர் முழுவதுமே சுடுகாடு.

நம் நாட்டில் சகுனம் பார்க்கும் வழக்கம் மிகப் பிரசித்தம். பிணம் எதிரே வருவது நல்ல சகுனம் என்று இருப்பதும் காசியை மனதில் கொண்டே !

காசியிலிருந்து சுமார் 50 கி.மீ. சுற்றள வில் உள்ள ஊர்களில் யாரேனும் இறந்தால்கூட அவர்கள் உடலைக் காசிக்குக் கொண்டுவந்து ஈமச் சடங்குகளைச் செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.

வண்டிகளிலும் சைக்கிள் ரிஷ்சாக்களிலும் கூட இங்கே பிணம் ஏற்றி வரப்படும் காட்சி யைச் சாதாரணமாகக் காணலாம். அப்படிச் சவம் ஏற்றிவரும் ஊர்தியைக் காண்போர் அதை அருவருப்பாகக் கருதுவதில்லை. மாறாக, எதிர்படும் சவத்தைக் கண்டு கும்பிட்டுச் செல்வர். இது இவ்வூரில் காணப்ப டும் அன்றாடக் காட்சி.

கும்பிட்டுவிட்டு, ராம்நாத் சத்ஹை", "சம்போ மகாதேவா’, ‘போலே ஹரி’ என்று இறந்தவர் முக்தி அடைந்ததைக் குறிக்கும் மந்திரச் சொற்களை உரக்கச் சொல்லி விட்டுச் செல்வார்கள்.

தினம்தோறும் நூற்றுக்கணக்கான சவங்கள் இங்கே கொண்டு வரப்பட்டா லும் அதனுடன் வருவோர் அழுவதோ, புலம்புவதோ இல்லை. தாரை, தப்பட்டை போன்ற ஆர்ப்பாட்டங்களும் கிடையாது.

இறக்கும் நிலையில் முதுமை எய்திவிட்டவர்களுக்கு காது கேட்காது. அடைத்து விடும். ஆயினும் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வப் பாக்களையோ, மோட்ச மந்திரங்களையோ, கடவுள் நாமாக்களையோ இறப்போரின் காதில் ஒதும் வழக்கம் இன்றும் உண்டு.

தமிழின் தொன்மை இலக்கியமான 'சீவக சிந்தாமணி’ ஒரு சமண சமயநூல். அதில் ஒரு காட்சி: அடிபட்டுக் கிடக்கும் ஒரு நாயின் காதில் சீவகன் மோட்சமந்திரம் சொல்கிறான். அந்த நாயின் ஆன்மா சுதீக் கணன் என்ற தேவகுமாரனாகிவிடுகிறது. பிறகு வேறொரு சூழ்நிலையில் சீவகன் சிறைபட்டுத் துன்புறும்போது, அந்த தேவ குமாரன் சீவகனைச் சிறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வருகிறான். - இக்கதை மூலம் அக்காலத்தில் சமணர்களிடமும் இந்தச் சடங்கு நம்பிக்கை இருந்தது நமக்குத் தெரிய வருகிறது.

Image result for varanasi images

காசியில் இறப்போரின் காதில் சிவபெருமானே தாரக மந்திரத்தை ஓதுவதாக ஐதீகம். 

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது தெய்வீக அனுபவங்களைக் கூறும்போது, மோன நிலையில் தாம் இருந்த வேளையில், ஒரு காட்சி அவரது மன வெளியில் தெரிந்ததாம். அதாவது காசியில் சிவபெருமானே ராமகிருஷ்ணரின் காதில் மந்திரம் ஓதுவதுபோல் தெரிந்ததாம்.

இறந்தோர் காதில் சிவபிரான் மந்திரம் ஓதும் கருத்து பற்றி மேலும் சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. அதாவது, இறப்பவர் உடலை அன்னை பார்வதியாக அன்னபூரணியே தன் மடிமீது எடுத்துவைத்துக் கொள்கிறாளாம். 'ராம நாம’ மந்திரத்தை அப்போது சிவபெருமான் ஓதுகிறாராம்.

காசியில் உள்ள ’அனுமன் கட்டம்' என்னுமிடத்தில் உள்ள கோயிலில், உமையவளின் மடியில் சிவபெருமான் படுத்திருக்கும் காட்சியைச் சித்தரிக்கும் சிவசயன் அமைப்பைக் கண்டு வணங்குவோர் இந்த கருத்தை உணர்வர்.

இந்தக் காட்சியின் பின்னணிக் கதை என்ன ?


பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால் விஷம் எழுந்தது.

தேவர்கள் அதைத் தவறுதலாக உண்டு விடக்கூடாதே என்பதற்காக, தேவர்களைக் காப்பாற்ற வேண்டிய சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார் அதன் கடுமையால் மயக்கமுற்று அவர் அயர்ந்தபோது, அம்மையின் மடியில் தலைவைத்துப் படுத்தார். அந்தக் காட் சியே இது.

இதே காட்சியைச் சித்தரிக்கும் மூர்த்தி, சென்னையை அடுத்த ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற தலத்துக் கோயிலிலும் உள்ளது. இங்கே சிவபிரான் பள்ளி கொண்டேஸ்வரர் என்ற பெயரில் உமையவள் மடியில் தலைசாய்த் துப் படுத்த நிலையில் உள்ளார்.

காசியில் தினம்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இது உள்ளது என்பதற்கு விளக்கமாகவே முன்னோர்கள் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆதியும் அந்தமும் அற்ற சோதியாகிய இறைவனுக்குப் பிறப்பு, மூப்பு, இறப்பு எதுவுமே இல்லை. ஆனாலும், அவர் உண்ட நஞ்சோ கொடிய ஆலகால விஷம். அது அவருக்கு மயக்கத்தை உண்டாக்கியது. அதை நீக்க அம்பிகை அருள் செய்தாள். அதனாலேயே அம்பிகைக்கு அமிர்தேஸ்வரி என்ற பெயர் உண்டு.

அமிர்தேஸ்வரியாகிய அன்னையின் மடியில் ஆண்டவன் சயனித்ததால் ஆலகால் நஞ்சின் கடுமை உடனே நீங்கியது.

இறப்போர்க்கு சாவு என்னும் எமவதை நேரிடும்போது காசிநகரின் அமிர்தேஸ்வரியான அன்னை, மோட்சத்துக்குக் காரணமான அமிர்த தொடர்பைத் தர, அவர்களைத் தன் மடியில் கிடத்திக் கொள்கிறாள் என்பதை உணர்க.

சிவபெருமான் ஏன் 'ராம ராம' என்று இராம நாமத்தை ஓதினார் ? 

யோசிக்கத்தான் தோன்றும். உண்மையில் ராமன் என்பது ராமர் பூமியில் ராமாவதாரம் எடுப்பதற்கு முன்பே உள்ள ஒரு பெயர்தான்.

ராமன் பிறப்பதற்கு முன்பே ஏழு முனிவர் கள் ராம நாம ஜெபத்தை வால்மீகிக்குச் சொல்லித் தந்தார்கள்.

வால்மீகி வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவரும் வேடுவத் தொழில் புரிந்து வந்தவர். அதனால் அவருக்கு 'ராம ராம' என்று சொல்ல வரவில்லை. அதனால் முனிவர்கள் அவருக்கு "மரா மரா' என்று மந்திரத்தைத் தலைகீழாகச் சொல்லித் தந்தார்கள். 'மரா மரா' என்றே உச்சரிக்கும்படி சொன்னார்கள்.

இப்படித் தொடர்ந்து உச்சரிக்கும்போது ராம ராம என்று வந்துவிடும். வால்மீகியும் இப்படியே “மரா மரா' என்று ராம நாமத்தை மெய் மறந்து சொல்லிக் கொண்டே போக, அவரைச் சுற்றி புற்று வளர்ந்து விட்டது. புற்று வளர்வது தெரியாமல் யோக நிலையில் தபஸ்வியாக அவர் அமர்ந்துவிட்டார்.

வேடுவர் தலைகீழாக மந்திரத்தை உச்சரித்ததற்கே இப்படி ஒரு மகத்தான பலனா என்று எல்லாரும் வியந்தனர்.

முனிவர்களும் ராம என்ற மந்திரத்தை ஜெபம் செய்து தவமிருந்து ராமனையே அவதாரமாகப் பெற்றனர்.

அதனாலேயே சிவபெருமான் அமிர்தேஸ்வரியின் மடியில் கிடந்து, அமிர்த மந்திரம் மொழியும் போது ராமநாமத்தை ஓதுகிறார்.

சைவமும் வைணவமும் வேறுவேறல்ல என்பது இதன் உட்பொருள்.

இதுவும் காசித்தலம் உலகுக்கு நல்கிய நன்மைகளுள் ஒன்று.

இம்மைக்கும் மறுமைக்கும் நடுவில் இருப்பது எது ? 

மரணம்தான்.

அந்த மரணத்தை முக்தியாக ஆக்கும் சிறப்பு காசிக்குரியது.

மரணமே ஒரு வாழ்வின் இறுதியன்று. புதுவாழ்வின் தொடக்கமும் அதுவே - என்ற தெளிவைக் காசி உண்டாக்குகிறது.

Image result for varanasi images

 வைணவ வியாக்கியானத்தில் ஒன்றைச் சொல்வார்கள்.

அதாவது தாயின் ஒரு மார்பின் பக்கம் பால் அருந்தும் குழந்தையைத் தடுத்து பால் மிகுந்த மறுபக்கத்துக்குத் தாய் மாற்றுவாள். குழந்தையோ, பால் குடிப்பதற்குத் தடை ஏற்பட்டுவிட்டதாகக் கருதி அழும். மேலும் குடிக்க வைக்க வேண்டும் என்பதே தாயின் நோக்கம். குழந்தையின் நிலையில் அது தெரியவராது. அதுபோல, இறைவன் இவ்வுலக வாழ்வை நீக்கி மறுஉலக வாழ்வு தருவதை மரணம் என்று அச்சிறுகுழந்தையைப் போலவே, வளர்ந் துவிட்ட மனிதனும் எண்ணுகிறான் - என்பதே அந்த வியாக்கியானம்.

காசித்தலமும் மனித குலத்துக்கு இப்படி ஒரு தாயாக இருந்து மரணத்தை முக்தி வயப்படுத்துகிறது.

                                                  - புனித பயணம் வ(ள)ரும்..

சிவன் வடிவமைத்த காசி - 04

பாவம் போக்க, காசி வரை யாத்திரை போக வேண்டுமா ? 


Related image
வீட்டிலுள்ள குப்பையைக் கூட்டி தெரு வாசலிலேயே கொட்டிவிட்டால், வீடு சுத்தமாகி விட்டதுபோல் தெரிந்தாலும் வீட்டின் சுற்றுப்புறம் மாசடைந்து அது வீட்டின் தூய்மையைத் தானே கெடுக்கும் ? அதுபோல், மனத்தினுள் சேர்ந்துள்ள பாவச் சுமைகளை உள்ளூர் தீர்த்தத்திலேயே மூழ்கித் தொலைப்பதைவிட, தூர தேசம் சென்று புனித தீர்த்தத்தில் மூழ்கித் தொலைப்பதையே மனிதமனம் விரும்புகிறது.

தவறுக்கு வருந்தும் மனித மனத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு போய் ஓரிடத்தில் போட்டுவிட்டு அவன் மனம் ஓய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டுதான் யாத்திரை என்பதை இந்துமதம் வாழ்வியல் கடமையாக வற்புறுத்துகிறது.

இந்து மதத்தில் மட்டுமல்லாது பிற மதங்களும் புனித யாத்திரையை வாழ்க்கைக் கடமைகளில் ஒன்றாக வற்புறுத்தியுள்ளன. முகமதியர்களுக்கு மெக்காவும், கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேமும், புத்த மதத்தினருக்கு புத்த கயாவும் யாத்திரைத் தலங்களாகக் கூறப்பட்டுள்ளன. இறைஉணர்வு என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானதுதான்.

முதுமை அடைந்த மனிதன் இறப்புக்கு அஞ்சும் அதே வேளையில் இறப்புக்குப் பிறகும், தான் வாழ ஓர் உலகம் இருக்காதா என்று ஏங்குகிறான். இருக்கும் என்று நம்புகிறான். இல்லாவிடில், அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

உயிர்வாழும் ஆசையும், அது இனி இயலாது என்கிற உண்மையும் அவனைச் சஞ்சலப்படுத்துகிறது. மறுஉலகை அதுவரை நம்பாத அல்லது அதை ஒரு பொருட்டாக நினைக்காதவனுக்கும் கூட இறுதிக் காலத்தில் அல்லது இறுதி நாள்களில் அப்படி ஒரு மறுமை உலகின் மீது ஆசை துளிர்க்கிறது.

 போகிற கதிக்குப் புண்ணியம் தேட வேண்டும் என்ற நினைப்பு அவனை ஆன்மீக திசையில் திருப்பி, அமைதி தருகிறது. அவனுக்கு முக்தியும் மோட்சமும் தரும் சக்தி எதற்கு உண்டோ அதை அவன் மனம் நாடுகிறது.

 இவ்வாறு மனிதனின் அன்றாட வாழ்வோடு காசிக்கு ஏற்பட்டு விட்ட நெருக்கமே அதன் நிலைத்த பெருமைக்கும் நித்திய மகிமைக்கும் காரணமாயிற்று !

அந்த இடத்துக்கு என்ன சிறப்பு  ?

தமிழகத்தில் சில ஊர்களில் எழுப்பப் பட்டுள்ள சிவாலயங்களுக்குக்கூட 'காசி விஸ்வநாதர் கோயில்' என்றே பெயர் உண்டு. பல ஆலயங்களில் காசி விஸ்வநாதருக்கென்று தனிச் சன்னதிகள் அல்லது தனி சில லிங்கங்கள் உண்டு.

காசியில் இருக்கும் விஸ்வநாதருக்குத் தென் தமிழகத்தில் குற்றாலத்தை அடுத்த ஓர் தலத்தில் தனிப் பேராலயம் எழுப்பப் பட்டது. அதனால் இவ்வூருக்குத் ‘தென் காசி' என்றே பெயர் ஏற்பட்டது.

 வெள்ளையர் இங்கே வந்து காலூன்றிய பிறகே இந்தியா என்றொரு நாட்டை ஒருங்கிணைத்து உருவாக்கினார்கள் என்று இன்னமும் எழுதியும் பேசியும் வருகின்றனர், நம்மில் பலர், இது தவறு. ஆதிகாலத்திலிருந்தே பாரத மக்கள் ‘காசி-ராமேஸ்வரம்’ என்று வடக்கேயும் தெற்கையும் இணைத்து யாத்திரை மேற் கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை உரு வாக்கிவிட்டனர்.

தமிழகத்தில் குழந்தைகளுக்குக் காசி என்றும் விஸ்வநாதன் என்றும் பண்டைக் காலத்திலிருந்தே பெயர் வைக்கும் வழக் கம் இருந்து வருகிறது. தமிழ்க் காப்பியங்களிலும் வேறுபல இலக்கிய நூல்களிலும் காசியின் புகழ் பேசப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் காசியின் மகிமையைக் கூறுகிறது.

புராணங்கள் யாவும் காசியை ஏதேனும் ஒரு வகையில் போற்றி, கதை வடிவில் கூறியுள்ளன.

Image result for varanasi images

சிவபெருமான் இத்தலத்தை மறந்து செல்வதில்லை என்று அவரே கூறியிருப்பதாக மச்சபுராணம் கூறுகிறது. தனது திருவருளை அடையாளச் சின்னமாக்க, அவரே தனக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாராம். அதுதான் உலகின் முதல் லிங்க வடிவம். அந்த லிங்கமே காசியில் இருக்கும் விஸ்வநாதர்.

காசி எல்லாத் தலங்களுக்கும் தலைமைச் சிறப்பைப் பெற இதுவே காரணம்.

'அவிமுக்தா க்ஷேத்திரம்' என்பது காசியின் புராணப் பெயர். 'அவிமுக்தா' என்பதற்கு பாவங்களிலிருந்து விடுபடுதல் என்பது பொருள். இத்தலத்தில் ஓடும் கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் அனைத்தும் நீரோடு போகும் என்பது வழி வழி நம்பிக்கை.

மனிதர்கள் என்ன, இறைவனாகிய அந்த சிவபெருமானே இந்த காசிக்கு வந்துதான் தனது பாவம் போக்கிக் கொண்டார்.

எப்படி ? 

பிரும்மாவுக்கு ஐந்து தலை. சிவபெருமான் கோபத்தில் பிரும்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். ஏன் ? 

சிவனின் அடி முடியைக் காணுவதில் விஷ்ணுவுக்கும் பிரும்மாவுக்கும் ஏற்பட்ட போட்டியில், சிவனின் தலை உச்சியை (முடியை)க் கண்டுவிட்டுத் திரும்பியதாகப் பிரும்மா பொய் சொன்னார்.

சிவனின் தலைமுடியில் இருந்து உதிர்ந்த தாழம்பூ மடல் ஒன்றும் பிரும்மாவுக்கு ஆதரவாக சிவனிடம் பொய் சாட்சி கூறியது.

அந்தக் கோபத்தால் பிரும்மாவின் தலையைக் கொய்தார் சிவன்.

அந்தணரைக் கொன்றால் அது பிரம்மஹத்திதோஷமாகும். வேதம் ஒதும் அந்தணராகிய பிரும்மாவின் தலையைக் கொய்த பாவம் சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. பிரும்மாவின் தலையை (கபாலத்தை) கையில் வைத்துக் கொண்டு- அது பாவத்தால் கையை விட்டும் விழாமல் போகவே - பைரவக் கோலத்துடன் எல்லாவிடங்களிலும் சுற்றினார்.

காசிமண்ணை அவர் மிதித்தபோது கபாலம் கீழே விழுந்தது. சிவனைத் தொடர்ந்த பாவமும் விடுபட்டது. அந்தக் கபாலம் விழுந்த பாப விமோசன இடமே காசியில் கபால மோட்சம் என்னும் இடமாக விளங்குகிறது.

இக்கதை கூறும் உண்மை என்ன ?

காசித் தலத்தின் பாவம் நீக்கும் உயர்வைக் குறிப்பதோடு, புண்ணியத் தலங்கள் யாவிலும் காசியே உயர்வானது, தலைமைக்குரியது என்பதையும் காட்டுகிறது.

இறைவனேயானாலும் பாவ, புண்ணியம் என்னும் சட்ட விதிக்குக் கட்டுப்பட்டவனே என்கிற நியதியையும் மறைமுகமாகச் சொல்கிறதல்லவா ? 

'காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது' என்ற பழமொழி. மக்களின் வாழ்வோடு இணைந்துவிட்டது. கருமம் தீர்ப்பதில் காசிக்கு உள்ள சக்தியையும் இது எதிர்மறையாக எடுத்துச் சொல்கிறது.

காசிக்கு இன்று வாரணாசி என்று பெயர். இது புத்தர் காலத்தில் மக்களின் பேச்சு மொழியாக வழக்கில் இருந்த பாலிமொழிச் சொல். வாரணாசி என்று வெள்ளைக்காரர்களுக்குச் சொல்லவரவில்லை. அதனால் பனாரஸ் என்றார்கள். கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டே வெள்ளையர்கள் வட இந்தியாவை ஆட்சி செய்தனர்.

கல்கத்தா வங்காள தேசத்தைச் சேர்ந்தது. வங்காளிகள் 'வ' என்பதை 'ப' என்று வழங்கும் பழக்கமுள்ளவர்கள். ரவீந்திர நாத் என்பதை ரபீந்திரநாத் என்றே உச்சரிப்பார்கள். அதுபோல் தங்கள் மொழிவழக்கப்படி வாரணாசியைப் பாரணாசி என்றார்கள். அதைக்கேட்ட வெள்ளையர்கள் பாரணாசியைத் தங்கள் ஆங்கில உச்சரிப்புக்கு வசதியாக பனாரஸ் ஆக்கிவிட்டார்கள்.

வாரணாசி என்பதற்கு என்ன பொருள் ? 

இத்தலத்தின் வடக்கு எல்லையாக வருணா என்ற ஆறும் அசி என்ற தெற்கு எல்லை ஆறும் காசிக்கு இருபக்கமும் ஓடுவதால் இவ்விரண்டு ஆறுகளுக்கு உட்பட் டது என்ற பொருளில் வாரணாசி என்று பெயர் பெற்றது.

அசி என்பது வாளையும் வருணா என்பது கேடயத்தையும் உவமையாகக் குறித்து, இந்நகருக்குக் காவல் செய்வதாகக் கூறுவர்.

வாரயதி, நாசயதி என்னும் இருபெயர்கள் இணைந்து பாவம் நீக்குவது என்ற பொருள் தருவதால் வாரணாசி என்பது ஒரே சொல்தான் என்பாரும் உண்டு.

பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்னும் பிரிவினர் இங்கே கி.மு. 1400 வரையில் வாழ்ந்து வந்ததால் இத்தலம் ’காசி’ ஆயிற்றாம்.

பார்வதிதேவியார் தன் காதில் அணிந்திருந்த பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்ததால் அதன் பிரகாசத்தைக் குறிக்கும் ‘ஒளிமயமானது’ என்ற பொருளில் இத்தலம் காசி என்றாயிற்று என்றும் சொல்கிறார்கள்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமான சிவலிங்கம் இங்கே தன் பிரகாசத்தை வீசச் செய்வதால் "காசி” ஆயிற்று என்பதும் ஒரு வழக்கு.

’காசி என்ற சொல்லைப் பிரித்துப் பொருள் அறிய வேண்டும். கா - தோள் சுமை. சி - பெண். உமையவளாகிய சக்தியைத் தோளில் சுமந்து கொண்டு சிவபெருமான் ஹரித்துவாரிலிருந்து இங்கே வந்து சேர்ந் ததால் இத்தலம் "காசி” எனப் பெயர் பெற்றது’ என்கிறார்கள். காசிக்கு 'ஆனந்தவனம்’ என்பது மற்றொரு பெயர்.

சிவம் பாணத்தையும் உமாமகேஸ்வரி ஆவுடையாரையும் குறித்து லிங்கமே ஆனந்தமய வடிவாக இருக்கிறது. குண்டலினி சக்தியை யோகத்தின் மூலம் தலையில் ஏற்றும்போது அமுதம் சுரக்கும் என்றும், தேவியே குண்டலினி என்றும், தலையில் உள்ளது சிவலிங்க பாணமென்றும் இரண்டும் இணைவதே யோகம் என்றும் அது ஆனந்த மயமானது என்றும் கூறக் காண்பதைக் கொண்டு இத்தலத்துக்கு 'ஆனந்தவனம்’ என்று பெயர் ஏற்பட்டக் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்..

புராணங்களில் காசியை 'ருத்ரவாசம்’ என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ருத்ரனாகிய சிவபெருமான் இவ்விடத்தே தங்கி அருளுவதால் இந்தப் பெயரால் குறிக்கப்படுகிறது. கைலாயத்தை விட காசியே இறைவனுக்கு விருப்பமான இடம் என்கிறது புராணம்.

இப்படி எல்லா தலங்களையும் போல காசிக்கும் பல திருப்பெயர்கள் இருந்தாலும் காசி என்பதே எல்லாருக்கும் தெரிந்ததாலும் குறிப்பிட எளிதானதும் சொல்லும்போதே ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அமைந்த பெயராகும்.

Image result for varanasi images

காசியில் கங்கை வடக்கு நோக்கி ஓடுகிறது. மேற்குக் கரையில் தான் காசி இருக்கிறது. காலைச் சூரியனின் கிரணங் கள் கங்கையில் பட்டுத் தெறித்து இந்தத் தலம் முழுவதும் தனது பிரகாசத்தை வாரி இறைக்கிறது.

ஒரு கோயிலின் கிழக்கு வாயில் இவ்வுலக வாழ்வுக்கு அருளுவதென்றும், மேற்கு வாயில் மேல் உலக மறுமை வாழ்வுக்கு அருளுவதென்றும் குறிப்பர். முக்தித் தரும் சக்தி கொண்ட இத்தலமும் அந்த இலக் கணத்துக்கேற்ப கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்துக்கு உரிய திருப்பெயர்கள் ஐந்து. அவை:

1. காசி

2. ஆனந்தவனம்

3.ருத்ரவாசம் 

4. மகா மசானம் 

5. அவிமுக்தா. 

காசிக்கு ’மகா மசானம் (மகா மயானம்)’ என்ற பெயர் வந்தது ஏன் ? காசியின் தனிச்சிறப்பைக் குறிப்பதே இந்தப் பெயர்தான் என்று  சொன்னால் விந்தையாகத் தோன்றலாம். ஆனால் அதுவே உண்மை.

                                               - புனித பயணம் வ(ள)ரும்..