Sunday, 21 January 2018

தோஷம் தீர்க்கும் லிங்கங்கள்!


புத்திர தோஷம் நீங்கும்!

 புத்திரன்கோட்டை - அகத்தீஸ்வரர் 

`சான்றோர் உடைத்து’ என்ற பெருமைக்குரிய தொண்டை மண்டலத்தில், மதுராந்தகம் சூணாம் பேடு சாலையில், மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஊர் புத்திரன் கோட்டை. இவ்வூரின்  ஆரம்பத்திலேயே அமைந் திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்.

அகத்தியரின் பெயரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வர பெருமான், அகத் தீயினை, அதாவது நம் மனம் எனும் அகத்தைத் தீயெனச் சுட்டெரிக்கும் பேராசை, பொறாமை போன்ற அனைத்தையும் அணைக்கும் அருள்திறம் கொண்டவராகத் திகழ்கிறார்.
அம்பாளின் திருநாமம் முத்தாரம்பிகை. கல்வெட்டுகள், மரகத வடிவுடை நாச்சியார் என்று குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் என்ப தையும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. சிவனாரின் கட்டளைப்படி தென் திசை வந்த அகத்தியர்,  நிறைய தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்தத் தலங்களெல்லாம் அகத்தீஸ்வரம் எனச் சிறப்பிக்கப்படுகின்றன. அவற்றில் இந்தத் தலமும் ஒன்று என்கிறார்கள்.
அகத்தியர் இந்தச் சிவனாரை வழிபட்டதற்கு சாட்சியாக, கருவறை வாயிலின் மேல் அகத் தியர் சிவபெருமானை பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
இங்கு வந்து, சிவனாரை வழிபட்டுச் சென்றால் வயிறு தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

புத்திர தோஷத்தால் வருந்திய சோழ மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டுக் குழந்தை பாக்கியம் பெற்றானாம். ஆக,  புத்திர தோஷம் நீக்கும் தலமாகத் திகழ்கிறது இவ்வூர். 

தொடர்ந்து ஆறு பிரதோஷ தினங்களில் இங்கு வந்து சிவபெருமானையும் அம்பிகை யையும் தரிசித்து வழிபட்டால், புத்திரதோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்; பிள்ளை கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக் கியமாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
நிலப் பிரச்னைகள் தீரும்!

 திருச்சுழி திருமேனிநாதர் 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சுழி. பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த புனித பூமி. இங்குதான் மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு திருமேனிநாதர்.

ஊனாய் உயிர் புகலாய் அகலிட மாய்முகில் பொழியும்
வானாய் வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித்(து) இசைவண்டினம் மிழற்றுந் திருச்சுழியல் 
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே


என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற தலம் இது. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க இந்த ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாக அருளும் இந்தச் சிவனாருக்கு வேறு பெயர்களும் உண்டு.  ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாண சுந்தரர் என்று முந்தைய மூன்று யுகங்களிலும் ஒவ்வொரு பெயருடன் காட்சி தந்து அருள்புரிந்தாராம் இந்த ஈசன். தற்போது கலியுகத்தில், திருமேனி நாதராக அருள்கிறார். மேலும், இவர் கல்யாணக் கோலம் காட்டியதால் மணக் கோலநாதர், கல்யாணசுந்தரர் ஆகிய திருப்பெயர்களையும் ஏற்றருள்கிறார். 

இரணியாட்சன் எனும் அரக்கன் பூமித்தாயைச் சுருட்டி ஒளித்துவைத்தான். அன்னையை மீட்க வராக அவதாரம் எடுத்தார் திருமால். இரணியாட்சன் தன்னைத் தீண்டிய பாவம் தீர, இத்தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி, திருமேனி நாதரை வழிபட்டுத் துயரம் தீர்ந்தாளாம் பூமிப் பிராட்டி. ஆகவே, இங்கு வந்து ஈசனை வழிபடுவோருக்கு, சகல தோஷங் களும்  ஏழேழு ஜென்மப் பாவங் களும் விலகிவிடும் என்பது ஐதீகம்!  

அத்துடன், பூமிப் பிராட்டி வழிபட்ட இந்தத் தலத்துக்கு வந்து திருமேனிநாதரை வழிபட்டால், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்து, நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையும் உண்டு.

நிலம்-மனை ஆகியவற்றில் ஏதேனும் சிக்கல், விளைச்சல் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருந்தால், குறிப்பிட்ட இடத்தி லிருந்து மண்ணெடுத்து வந்து, சிவனாரின் சந்நிதியில் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர் அந்த மண்ணை எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட நிலத்தில் கலந்துவிட்டால், பிரச்னைகள் நீங்கும். அந்த நிலம் விவசாய பூமி எனில் வேளாண்மை செழிக்கும்; விளைச்சல் பெருகும். வீட்டுமனை எனில், அதிலுள்ள குறைகள் மற்றும் தோஷங்கள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இங்கு அருளும் அருள்மிகு துணைமாலையம்மன் சிறந்த வரப்பிரசாதி.  இவள், சகாய முத்திரை காட்டிக் காட்சி தருவதால் ‘சகாயவல்லி’ என்றும் அழைக்கப்படுகிறாள். இந்தக் கோயிலில் அம்மன் சந்நிதியிலுள்ள அர்த்த மண்டபத் தின் மேல்விதானத்தில், ஸ்ரீசக்கரம் உள்ளது. இதனை ‘ஆகாய ஸ்ரீசக்கரம்’ என்கிறார்கள்.

திருமண தோஷம் உள்ள பெண்கள், இங்கு வந்து இந்த அம்மனுக்கு மஞ்சள் சரடு வைத்து வேண்டிக்கொண்டால், தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கூடிவரும் என்பது பக்தர்களின் தீவிர நம்பிக்கை.

விருதுநகருக்குக் கிழக்கே சுமார் 40 கி.மீ., அருப்புக் கோட்டை யிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருது நகர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சுழிக்கு நிறைய பேருந்து வசதி உண்டு.
பிணிகள் நீங்கும்!

 குடவாசல் கோநேசர் 

திருவாரூரிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது குடவாயில். தற்போது, குடவாசல் என்றே அழைக்கின்றனர். 

பிரளய காலத்தில், உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக்குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து இறைவனார் காத்தார்; குடத்தின் வாயிலைக் காத்தவர், குடவாயில் உடையார் ஆனார். மீண்டும் படைப்புக் காலத்தில், உயிர்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, குடம் மூன்றாக உடைந்தது; குடத்தின் கும்ப பாகம் விழுந்த இடம், கும்பகோணம் (குடமூக்கு); நடுப்பாகம் விழுந்த இடம், கலையநல்லூர்; குடத்தின் வாயில் விழுந்த இடம், குடவாயில் என்றானதாம்!

செங்கணான் கட்டிய இந்தக் கோயில், மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால், குடவாயில் என்ற பெயர் (குடதிசை - மேற்கு) ஏற்பட்டதாகவும் சொல்வர். 

திருணபிந்து எனும் முனிவரின் நோயைத் தீர்ப்பதற்காக, இறைவனார் குடத்திலிருந்து வெளிப்பட்ட தலம் என்பதாலும், இது குடவாயில் ஆயிற்று.

சிவனார், உயிர்களைக் காத்ததனால் அவருக்குக் கோநேசர் (கோ - உயிர்; நேசர்- அன்பு உடையவர்) எனும் திருநாமம்! காலப்போக்கில், குடத்தின் கோணம் என்பதாகத் தொடர்புபடுத்தப்பட்டு, கோணேசர் ஆகிவிட்டார். 

குடத்தின் வாயிலில் இருந்த லிங்கத்தைப் புற்று மூடியது. மண்மேடு என நினைத்து, கருடன் தனது மூக்கால் கொத்தப் போக, லிங்கனார் வெளிப்பட்டார்; அதனால், வன்மீகேசர் (வன்மீகம்- புற்று) என்றும் கருடேசர் என்றும் ஒரு பெயர் உண்டு.

கறையான் புற்றை மூக்கால் பிளந்து, சிவலிங்கத்தை வெளிப் படுத்திய கருடன், தாமே கோயில் கட்டி வழிபட்டாராம். இந்தக் கோயிலின் மதில்மீது கருட உருவங்கள் உள்ளன. சிவலிங்கத் திருமேனியில், கருடன் தீண்டிய வடுக்கள் காணப்படுகின்றன!

சதுரபீட ஆவுடையாரும், உயரமான லிங்க பாணமும் கொண்டு விளங்குகிற மிகப் பெரிய சிவலிங்கத் திருமேனி யராகத் திகழ்கிறார் அருள்மிகு கோணேசர்.

பாடலார் வாய்மொழியீர் 
    பைங்கண் வெள்ளேறு ஊர்தியீர் 
ஆடலார் மாநடத்தீர் அரிவை 
    போற்றும் ஆற்றலீர் 
கோடலார் தும்பி முரன்றிசை 
    மிழற்றும் குடவாயில் 
நீடலார் கோயிலே கோயிலாக 
    நிகழ்ந்தீரே 


என்று பாடல் பெற்ற இந்த இறையனாருக்குப் பல திருநாமங்கள் உண்டு. சூரியன் வழிபட்டதால் சூரியேஸ்வரர்; தாலப்ய முனிவர் பூஜித்ததால் தாலப்யேஸ்வரர்; பிருகு முனிவர் வணங்கியதால், பிருகுநாதர் என அழைக்கப்படுகிறார். கதலிவனம், வன்மீகாசலம் என்கிற வேறு பெயர்கள் கொண்ட குடவாயில் கோயிலில், வெளிப் பிராகாரத்தில், தெற்கு நோக்கிய சந்நிதியில் அருளும் அம்பாள்  பெரியநாயகியார், மங்கல வாழ்வு  தருபவள். 

தமது குஷ்ட நோய் நீங்குவதற் காக, திருணபிந்து முனிவர் இங்கே வழிபட்டு இறையருளால் துன்பம் நீங்கப் பெற்றாராம். இவ்வாறான உடற்பிணிகள் மட்டுமல்ல, உள்ளத்தின் பிணிகளும் இந்தத்தலத்து சிவனாரை தரிசித்து வழிபட்டால் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு. நீங்களும் ஒருமுறை குடவாசல் சிவனாரை தரிசித்து வரம் பெற்று வாருங்களேன்.
கடன் பிரச்னைகள் தீரும்!

 திருச்சேறை ருணவிமோசனர் 

கும்பகோணம் - திருவாரூர் பாதையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் ஞான தீர்த்தம். இது மார்க்கண்டேயரால் அமைக்கப்பட்டதாலும், பிறவிப் பிணியைப் போக்கும் அமிர்தமாக விளங்குவதாலும் மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்தத் தீர்த்தத்தின் நீர், ஒரு துளி பட்டாலே சகல பாவங் களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தின் விருட்சமான மாவிலங்கை மரமும் ஓர் அதிசயம்தான். ஆண்டில் நான்கு மாதங்கள், வெறும் இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், மரம் முழுவதும் வெண்பூக்களாக இருக்கும்; அடுத்த நான்கு மாதங்கள், பூவோ இலையோ இன்றி வெற்றுமரம் மட்டுமே காணப்படும். ஒற்றைப் பரம்பொருள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தெரிவது போன்று, ஒரே மரம் ஒவ்வொரு விதமாகத் தெரிவதால், இந்த மரமே இறைவனுக்குச் சமமாக மதித்து வணங்கப்படுகிறது. 

இந்த மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும்.

இந்தக் கோயிலின் இறைவ னுக்கு ஸ்ரீசெந்நெறியப்பர். ஸ்ரீசார பரமேஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் வழங்குகின்றன. திருமாலின் சாரப் பெருமாள் கோயிலும் இந்தத் தலத்தில் இருப்பதால், சிவனையும் சாரப் பெருமான் என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள் போலும் பக்தர்கள்.
பிறவித் துன்பத்தைத் தீர்த்து, நன்னெறியான முக்தியை வழங்குவதால், செந்நெறியப்பர்! மூலவர், வட்ட வடிவ ஆவுடை யாருடன், உயரமான பாணத் துடன் திகழ்கிறார். ஆதிகாலத்தில், தௌமிய மகரிஷி இவரை வணங்கி முக்தி அடைந்தாராம்.

இந்தக் கோயிலில் தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீருண விமோசனரையே கடன் நிவர்த் தீஸ்வரர் என்கின்றனர். ருணம் என்றால் கடன். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி  நீங்குவ தற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம். 

இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர் கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர்.

மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந் துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட் கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட `தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம்', இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

விஸ்வேஸ்வராய 
   நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய 
   சசிசேகர தாரணாய 
கற்பூரகாந்தி தவளாய 
   ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய 
   நமசிவாய


எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கள்கிழமைகள் தொடர்ந்து பூஜித்துப் பிரார்த்தித்து, 

11-வது திங்களன்று அபிஷேக- ஆராதனைகள் செய்தால், கடன் தொல்லைகள் நீங்கும். வீட்டில் செல்வ ஐஸ்வர்யங்கள் செழித்தோங்கும்!
நாக தோஷங்கள் விலகும்

 காளஹஸ்தி காளத்திநாதர்! 

காளத்தியப்பர், காளத்தீஸ்வரர், வாயுலிங்கேஸ்வரர், குடுமித்தேவர், தென் கயிலைநாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், ஐந்து கொழுந்து, கல்லாலடியார், மலைமேல் மருந்து, காளத்திக் கற்பகம், பொன்முகலித் துறைவர் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட இறையனார், சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள திருத்தலமே திருக் காளத்தி. கண்ணப்பநாயனாரால் புகழ்பெற்ற ஊர்.

காளத்தி நாதனைக் காணக்  கண் கோடி வேண்டும்!  சிவ லிங்கம்தான் சுவாமி. ஆனால், எப்போதும் அவர் மீது தங்கக் கவசம் சார்த்தப்பட்டிருக்கும். நாம் பார்க்கும் போது பட்டை பட்டையாகத் தெரிகிறதே, அதுவே கவசம். 9 பட்டைகள் கொண்ட இந்தக் கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மாலைகளையும் இந்தச் சட்டத்தின்மீதே சார்த்துவார்கள். கவசத்தை வைக்கும்போதும் எடுக்கும்போதும் மூலவரின் மீது கை பட்டுவிடக் கூடாதாம். 

கிட்டத்தட்ட நான்கடி உயர முள்ள லிங்கம், அடிப் பாகத்தில் பருத்திருந்தாலும், முனை நோக்கிக் குறுகிக்கொண்டே போகிறது. இதையொட்டியே, இந்த இறைவனை `குடுமித் தேவர்' என்று பெரியோர்கள் சிறப்பித்தார்கள் போலும்.

`காளாஸ்திரி' என்று இன்று மக்கள் வழங்கினாலும், இந்தத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி என்பதாகும். ஸ்ரீ - சிலந்தி; காளம் - பாம்பு; ஹஸ்தி - யானை. 

திரேதா யுகத்தில் சிலந்தி ஒன்று, வாயு லிங்கேஸ்வரரை பூஜித்தது. தனது வலை இழையைக் கொண்டு சிவலிங்கத்துக்கு விதானம் அமைத்துக் கோயில் கட்டியது. சிவபெருமான், வேண்டுமென்றே விளக்குச் சுடரைப் பெரிதாக்கி, சிலந்தியின் விதானத்தை அழியச் செய்தார். வருத்தத்தில் அமிழ்ந்த சிலந்தி, அந்த விளக்கிலேயே வீழ்ந்து மாயத் துணிந்தது. 

துவாபர யுகத்தின் தொடக் கத்தில் பாம்பு ஒன்று ரத்தினங்கள் கொண்டும், யானை ஒன்று இலைகள் கொண்டும் இந்தப் பெருமானை வழிபட்டன. ஒன்றுக்கொன்று போட்டி. இரண்டும் ஒன்றையன்று தாக்கிக் கொண்டு உடல் பிறவி நீத்தன. 

எந்தப் பிறவியாயினும், எந்த நிலைமையாயினும், அன்பு செலுத்தினால் அதை ஏற்றருளும் பரமேஸ்வரன், மூன்று ஜீவன்களையும் ஏற்று, முக்தி அருளினார். மூன்று ஜீவன்களின் உடல் ஸ்வரூபங்களையும், சிவலிங்கத் திருமேனியில் தாங்கினார். அடியில் சிலந்தி, நடுவில் யானைத் தந்தங்கள், மேலே நாகத்தின் ஐந்து தலைகள் ஆகியன உள்ளன.

சந்நிதியில், மூலவருக்கு அருகில் மனோன்மணி சக்தியின் திருமேனி. கீழேயே, காளத்தீஸ் வரரின் போகத் திருமூர்த்தம். மானும் மழுவும் ஏந்தி, அபய- ஹஸ்த- சிம்மகர்ண முத்திரைகள் தாங்கி, சுகாசனத்தில் காட்சி தருகிறார் போகமூர்த்தி. 

காளத்தீஸ்வரர் சந்நிதியில் திரு நீற்றுப் பிரசாதம் தர மாட்டார்கள். பதிலாகத் தீர்த்தம் கிடைக்கும். கண்ணப்பர் அபிஷேகம் செய்த தலமல்லவா! அதனால், பச்சைக் கற்பூரத்தைப் பன்னீரில் அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து, சங்கினால் எடுத்துப் பிரசாதமாக வழங்குகிறார்கள். 

காளத்தி, பஞ்சபூதத் தலங்களில் ஒன்று. கருவறைக்குள் கோயில் கொண்டிருக்கும் பரமனார், காற்று வடிவமாக நிறைந்திருக்கிறார். அதை வெளிப்படுத்தும் விதமாக கருவறையில் சுடர்கள்  இரண்டு எப்போதும் அசைந்தாடிக் கொண்டே இருப்பது அதிசயம்.
காளத்திநாதரை ஒருமுறை தரிசித்தாலே போதும் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.
வழக்குகளில் வெற்றிபெற...

 திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் 


காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருமால்பூர். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரம் செல்லும் வளைவை அடுத்து வரும் மேம்பாலத்தின் கீழே சென்று, அரக்கோணம் செல்லும் சாலையில் பயணித்தால், சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருமால்பூர் ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். 

அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு சென்றால், ஊரையும் ஊருக்கு நடுவே உள்ள ஸ்ரீமணிகண்டீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம். சென்னை, கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, திருமால்பூருக்குப் புறநகர் ரயில்கள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

கருவறையில் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிற ஸ்ரீமணிகண்டீஸ்வரரை தரிசித்து வழிபட்டு, அவருக்கு வஸ்திரம் சார்த்தி, தாமரையும் வில்வமும் சமர்ப்பித்து வழிபட்டால், நினைத்த காரியம் எதுவாயினும், அது விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்!

மிகச் சிறிய மூர்த்தம்தான். ஆனால், வானளாவிய கீர்த்தியைக் கொண்டவர் ஸ்ரீமணிகண்டீஸ்வரர். 

மனக்கிலேசம் உள்ளவர்கள், குழப்பத்தில் தவிப்பவர்கள், இனம் புரியாத கவலையும் துக்கமும் கொண்டு கலங்குபவர்கள், எதிலும் தயக்கம் எப்போதும் சோகம் என இருப்பவர்கள் இங்கு திங்கட்கிழமையன்று வந்து, வழிபடுவது சிறப்பு!

காரணம், திங்கட்கிழமை என்பது சிவனாருக்குகந்த நாள். திங்கள் என்றால் சந்திரன். அவன் மனோகாரகன். சந்திரனும் இந்தத் தலத்தில் தங்கி, ஈசனை வழிபட்டுள்ளான். எனவே, இங்கு வந்து வழிபட்டால், சந்திர பலம் பெருகும்; மனோபலம் அதிகரிக்கும்; மனக்கிலேசங்கள் யாவும் விலகும்; குழப்பங்கள் தீர்ந்து, தெளிவான மனநிலை பெற்று, மன உறுதியுடன் செயல்பட முடியும்.

அதேபோல், இழந்த பொரு ளைப் பெறுவதற்கும், இழந்த அல்லது தடைப்பட்ட பதவியை அடைவதற்கும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரரை வணங் கினால், விரைவில் நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

இழந்த தன் சக்ராயுதத்தைத் திருமால் தவமிருந்து பெற்ற தலம் இது. சந்திர பகவான், இழந்த தன் பொலிவை மீண்டும் அடைவதற்கு தவம் இருந்து, பலன் பெற்றதும் இங்குதான். 

எனவே, இங்கு வந்து சிவ தரிசனம் செய்து, சிவனாருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், இழந்ததை விரைவில் பெறலாம்.

அதேபோல், வழக்குகளில் வெற்றிபெறவும், இழுபறி நிலையிலிருந்து மீளவும் இத்தல இறைவனை வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

வீண் பழி மற்றும் வழக்குகளால் மனம் வாடி வதங்கும் அன்பர்கள்,   இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீமணிகண்டீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, தாமரை மலர்களைச் சூட்டி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். 

இதன் பயனாக விரைவில் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

அதேபோல், சிவனாருக்கு அபிஷேகங்கள் செய்து, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டு, அந்தப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவார்கள்.
ராகு தோஷங்கள் விலகும்

 கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசநாதர் 

கயிலாசநாதர் என்கிற திருநாமத்துடன் ஈசன் அருள் பாலிக்கும் தலங்கள் தமிழகத்தில் அநேகம். அதிலும் ‘நவ கயிலாயம்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ஒன்பது சிவத் தலங்கள், தாமிரபரணி நதிக்கரையில் அருளாட்சி புரிந்துவருகின்றன. 

இந்தக் கயிலாசநாதர் ஆலயங்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் அமைந் துள்ளன. இந்த ஒன்பது திருத்தலங்களிலும் உள்ள ஈசனுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்தாலும், அந்த லிங்கத் திருமேனிகளுக்கு உள்ள பொதுவான பெயர் ‘கயிலாசநாதர்.’ இதில், நெல்லை ஜங்ஷனிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் கீழத் திருவேங்கடநாதபுரம் என்கிற குன்னத்தூரில் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயம், ராகுவின் சிறப்புடன் விளங்குகிறது. 

‘நவகயிலாய’ வரிசையில், 4-வது தலமாகத் திகழும் இந்தத் தலத்தை, ‘தென் காளஹஸ்தி’ என்று குறிப்பிடுகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். ராகுவின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் இருப்பதால், இங்குள்ள ஒவ்வொரு மூலவர் விக்கிரகத் திலும் நாகர் உருவம் இருப்பதைக் காணலாம். 
இங்கே அருளும் கயிலாசநாதர், லிங்கத் திருமேனியராக தரிசனம் தருகிறார். உமை தொழும் நாயனார், கோத பரமேஸ்வரர், தென் காளத்தி நாதர் என்றெல்லாம் போற்றப் படுகிறார் இந்த ஈசன்.

ஒரு முறை, அப்பாவிப் பெண் ஒருத்தியைத் தவறாக எண்ணித் தண்டித்துவிட்டாராம் இந்தப் பகுதியை ஆண்ட அரசன். அதனால் பல இன்னல்களுக்கு ஆளானான். பின்னர் இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை வழிபட்டு,  துயரங்கள் நீங்கி நிம்மதி அடைந்தானாம்.  ஆக, இத்தல இறைவனை வழிபட்டால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் விலகும்.

‘கோதாட்டுதல்’ என்றால் பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல் என்று பொருள். அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் ஈஸ்வரர் என்பதால், ‘கோத பரமேஸ்வரர்’ என இவர் அழைக்கப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறார்கள். 

ராகு காலத்தில் 18 வகையான திரவியங்களைக் கொண்டு கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும். கயிலாசநாதரின் லிங்கத் திருமேனிக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது கூர்ந்து கவனித்தால், இவரின் பாணப் பகுதியில் இருக்கும் மெல்லிய - வளைந்த கோடு போன்ற நாகர் உருவ அமைப்பு, கிடுகிடுவென்று ஊர்ந்து செல்வதுபோல் தோன்றுமாம்.

ராகு தோஷத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், குழந்தைச் செல்வம் வேண்டுவோர், திருமணத் தடை அகல வேண்டுவோர், கல்வி ஞானம் பெற விழைவோர் ஆகியோர் இங்கு வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நலம் பயக்கும். 

தவிர, நாக தோஷம் இருக்கும் அன்பர்கள், வயிற்றுக் கோளாறு மற்றும் மன நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், தகுந்தவர் களின் அறிவுரைப்படி வெள்ளி நாகர் விக்கிரகத்தை வாங்கி வந்து இங்கே பூஜை செய்து அதை ஆலயத்துக்கே கொடுத்து விடுகிறார்கள். திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக் காரர்கள் இந்தக் கயிலாசநாதரை வழிபட்டால், அவர்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறுவர்.

No comments:

Post a Comment