Thursday, 26 October 2017

பரமேஸ்வரமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர்!



v11

பரமேஸ்வரனின் பெயராலேயே இயற்கை எழில்சூழ்ந்த அழகிய சிற்றூராக விளங்குகிறது "பரமேஸ்வரமங்கலம்!' பாலாற்றின் கரையில் அமைந்துள்ள சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஸ்ரீ கனகாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. 
ஒருமுறை சிவபெருமான் பூலோகத்தைக் கண்டுகளிக்க கைலாசம் விட்டு பூலோகம் வந்தார். தொண்டை மண்டலத்தில் உள்ள நத்தம் ஊரில் குடிகொண்டார். ஒருநாள் பாலாற்றின் அருகே உலாவரும் பொழுது பாலாற்றின் நடுவில் உள்ள ஒரு சிறு குன்றில் அமர்ந்தார். நதியும் இயற்கையும் சூழ்ந்த அவ்வழகில் மனம் மயங்கி மெய்மறந்து அங்கேயே தவத்திலும் ஆழ்ந்தார். பெருமானின் தவத்தைக் காண விரைந்து வந்த வருண பகவானும் மழைபொழிந்து அவ்விடத்தை குளிர்வித்தான். மழையில் நனைந்தபடி தவம் மேற்கொண்டிருந்த ஈசனைக்கண்ட பசு ஒன்று அவர்மீது மழைத்துளி படாதவாறு பால் சொரிந்த வண்ணம் நின்றது. சிவனும் பசுவும் நனையாமல் இருக்க ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து குடைபோன்று காத்து நின்றது. 
தவத்திலிருந்து எழுந்த சிவபெருமான் இதனைக் கண்டு மனம் மகிழ்ந்தார். பால்சுரந்த பசுவிடமும் படமெடுத்துக் குடைபிடித்த ஐந்து தலை நாகத்திடமும் வேண்டும் வரம் யாது என்று வினவினார். அவை சிவபெருமான் இத்தலத்தில் தங்கி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் அருள வேண்டுமென வேண்டின.
அவற்றின் வேண்டுகோளை எற்ற ஈசனும் லிங்க வடிவம் தாங்கி, கைலாயத்திலிருந்து வந்தவராகையால் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கிப் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஈசனின் இடப்பக்கம் பார்வதிதேவி கனகாம்பிகையாய் தனிக்கோயில் கொண்டு அருள்புரிகிறார். 
கருவறையின் வெளிச்சுவரில் நாகம் படமெடுத்துக் குடையாய் பிடிக்க, பசுவும் பால் சொரிய அவற்றின் கீழ் சிவலிங்கம் இருக்கும் திருவுருவம் உள்ளது. கைலாசநாதர் உறையும் இடமாதலால் "ஸ்ரீ கைலேஸ்வரம்' என்ற பெயரும் இவ்விடத்திற்கு உண்டு. 
இத்திருத்தலத்தின் மகிமையை கேள்விப்பட்ட மன்னன் பரமேஸ்வர பல்லவன் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விடத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டியுள்ளான். அவன் பெயராலும் இவ்வூர் "பரமேஸ்வரமங்கலம்' என்றழைக்கப் பட்டதாகவும் செப்பேடுகள் கூறுகின்றன. செப்பேட்டுக் கூரைகள் என்னும் புத்தகத்தில் செட்டித் தெருவின் நடுவில் இந்த சிவாலயம் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நிருபதுங்க வர்ம பல்லவன் மனைவி தேவசானி என்பவள் இங்குள்ள விநாயகருக்கு தனி ஆலயம் அமைத்து விளக்கேற்ற பொற்காசுகள் கொடுத்துள்ளதாகவும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இங்குள்ள பாலாறு ஸ்ரீரநதி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. "ஸ்ரீர' என்றால் "பால்' என்று பொருளாகும். இங்குள்ள விநாயகர் வேறு எங்கும் காண்பதற்கரிதான திருவுருவில் அதிசய வடிவு கொண்டு திகழ்கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, நவக்கிரகங்கள், சண்டீசுவரர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.
கோயில் அமைந்துள்ள குன்றின் வெளிப்பிரகாரத்திற்கும் பாலாற்றின் கரைக்குமான சுமார் 120 அடி நீளம் கொண்ட பாலமும் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடத்த கோயிலோடு சேர்ந்து திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் எட்டடி உயரத்தில் மகாகுரு தட்சிணாமூர்த்திக்கு அழகு கற்சிலை திருமேனி ஒன்றினை நிறுவி தனி ஆலயம் அமைத்துள்ளது சிறப்பு.
விநாயக சதுர்த்தி, ஆனி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், ஆருத்ரா (ருத்ர அபிஷேகம்), அஸ்வினி பரணி சகோதர விழா, சிவராத்திரி (ஐந்து காலபூசை), ஆடிப்பூரம்-கனகாம்பிகை வளையல் காப்பு, குருபெயர்ச்சி அன்று 108 பால்குடம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற திருவிழாக்களும் தினசரி, மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
இத்தல இறைவன் நினைத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் கைகூட அருள்பவர். கனகாம்பிகை அம்மனை அர்ச்சித்து வழிபட, வாழ்வில் எல்லா செல்வங்களும் வந்தடையும்.திருமணம் வேண்டுபவர்கள் அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றுவர். பங்குனி உத்திர திருவிழாவில் இத்தலம் வந்து தரிசித்தால் திருமணத்தடைகள் விலகி சிறப்பான இல்வாழ்க்கை அமையும். குழந்தைக்காக தொட்டில் கட்டுவதும் உண்டு. பிரதோஷ நாளில் வில்வ இலைக்கொண்டு கைலாசநாதர் மற்றும் நந்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பாகும்.
காலை 8.30 முதல் 10.30 வரையும் மீண்டும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். 
சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 75 கி.மீ. தொலைவில் உள்ள வேப்பஞ்சேரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் பரமேஸ்வர மங்கலம் உள்ளது. 
தொடர்புக்கு: 97860 58325/ 98439 16069.
நன்றி :- - முனைவர். எஸ். ஸ்ரீகுமார்
தொகுப்பு : சீதா பாரதிராஜா

பல்வேறு சிறப்புகளை கொண்ட விருத்தாசலம் சிவன்கோயில்

  

VRIDHACHALAM_1
கடலூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ளது விருத்தாசலம் வட்டம் இந்த பகுதி மாவட்டத்தின் பிற பகுதிகளை காட்டிலும் அதிக பொட்டல் வெளிகளாக அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான சிவாலயம் பழமலைநாதர் கோயில் பிரம்மன் படைப்புக்கு முன் சிவபெருமான் தாமே மலைவடிவாகி நிற்கப் பிரம்மன் அதனையறியாது, பல மலைகளையும் படைத்து, அவற்றை நிலைநிறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலை என தெளிவித்தார். ஆதலின் முதுகுன்றம் எனவும், பழமலை எனவும் வழங்குவதாயிற்று.
இறைவன் - விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர்,
இறைவி - விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும்
பாலாம்பிகை (எ) இளைய நாயகி
சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும். இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குக் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது.
இத்தலத்தில் இறப்பவருக்கு, இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முந்தானையால் இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.
 
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்
 
வடக்குக்கோபுரத்திற்கு நேர்வடக்கேயுள்ள மணிமுத்தாற்றுப் பகுதிக்குப் புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம்
 
கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் விண்முட்டி காணப்படுகின்றன. கிழக்கே உள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர். ஆழத்து பிள்ளையார் முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து பிள்ளையார் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தனி மூன்று நிலை கோபுரம் மற்றும் கொடிமரம் உள்ளது.
 
முதல் பிராகாரத்திற்குக் கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரத்தில் வடமேற்குமூலையில் ஆகமக் கோயில் உள்ளது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான,
காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
 
இறைவன் இடது புறத்தில் அம்பிகை திருக்கோயில் உள்ளது கிழக்கு நோக்கியது. அம்மையின் பெயர் வட மொழியில் விருத்தாம்பிகை. தமிழில் பெரிய நாயகி என அழைக்கப்படுகிறார். இவர் தனி கொடிமரம் கொண்டுள்ளார். இவரது கருவறை சுற்றி ஒரு பிரகாரம் அமைந்துள்ளது இதில் கருவறை கோட்டத்தில் காலசம்ஹாரர், கஜசம்ஹாரர், பிரிதியங்கரா, மகிஷாசுரமர்த்தினி, ஆகியோரும் தனி சண்டேஸ்வரி சன்னதியும் உள்ளன. இந்த அம்பிகையின் திருக்கோயில் வாயிலில் நாத சர்மாவுக்கு தனி சிற்றாலயம் உள்ளது. அம்பிகையின் எதிரில் அனவர்த்தினி எனும் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. கற்பக மரமே வன்னிமரமாக வந்து பழமலை நாதர் திருக்கோயில் திருப்பணியைச் செய்ததாக வரலாறு. 
கண்டராதித்தன் கோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால் இடது புறத்தில் உள்ளது இந்த 3000 ஆண்டு பழமையான வன்னி மரம் (இதனின்று திசுகன்று எடுக்க விருத்தாசலம் KVKமுயன்று வருகிறது)
இம்மரத்தடியில் உரோம ரிஷி, விகாய விபசித்து, விதர்ஷன செட்டியார் சிலைகள் உள்ளன. அருகில் பிரம்மா தீர்த்த கிணறு உள்ளது.  இந்த திருசுற்றின் மேற்கு பகுதியில் பஞ்ச லிங்கம், வல்லப கணபதி, மீனாட்சி அம்மன், சொக்கர், விஸ்வநாதர் , விஸ்வநாதர் விசாலாட்சி, மூன்று விஸ்வ லிங்கங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன்,
அடுத்து சகஸ்ர லிங்கமும், காமாட்சியும், ஜம்புகேஸ்வரரும் உள்ளனர். அண்ணாமலையார் வடமேற்கு மூலையில் தனி திருசுற்று கொண்டு கிழக்கு நோக்குவதையும் காணலாம். இங்கு உற்சவ மூர்த்தியின் பெயர் பெரியநாயகர். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசிமக விழாவில் ஆறாம் திருநாள் மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்குவார். பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு. 
முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், சப்த மாதர், மூன்று விநாயகர் சன்னதி, வருணலிங்கம், மாற்று உரைத்த விநாயகர், பிந்து மாதவப் பெருமாள் முருகன் மற்றும் பாலாம்பிகை சன்னதியும் கஜலட்சுமி, சன்னதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்புக் கொண்டது. பைரவர் கையில் வில் உள்ளது சிறப்பு.
 
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் 5 பிரகாரம், இந்த ஊருக்கு 5 பெயர்கள், 5 தீர்த்தம், 5 (பஞ்ச)லிங்கம், 5 விநாயகர், என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
 
இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இராஜகேசரிவர்மனான குலோத்துங்கசோழன் காலத்தில் இத்தலம் விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கத்தியநாட்டு இருங்கோளப் பாடியின் ஒருபகுதியான மருவூர்க்கூற்றத்துத் திருமுதுகுன்றம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமிபெயர் முதுகுன்றுடைய நாயனார் எனவும், திருமுதுகுன்றத்துடையார் எனவும் வழங்கப்பெறுகின்றது.
 
கோப்பெருஞ்சிங்கன் சுவாமிக்கு ஒரு மாங்காய் மாலையும், விளக்குக்குப் பொன்னும், ஆடுகளும், பசுக்களும் அளித்தான். இராஜராஜன், பரகேசரிவர்மன், குலோத்துங்கன் இவர்களும் பசுக்களையும், பொன்னையும், நிலத்தையும் அளித்தனர்.
 
இராஜகேசரிவர்மனான குலோத்துங்கனது காலத்து, ஆளப் பிறந்தான் ஏழிசைமோகனான குலோத்துங்கசோழ காடவராதித்தன் இறைவனுக்கு ஸ்தபனமண்டபம் கட்டினான். புக்கண உடையார், ரங்கப்ப நாயகர்,  செவ்வப்பநாயகன் இவர்கள் காலத்திய நிபந்தனைகளும் மிகுதியாக உள்ளன. சகம் 1545-இல் கச்சிராயன் என்பவன் குகை காவலனுக்கு நான்கு கலம் நெல் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.
 
ரங்கப்பமாவைராயர் என்பவர் அரியலூர் சந்தைப்பேட்டையில் மூட்டை ஒன்றுக்கு அல்லது ஆள்தூக்கக்கூடிய கைமூட்டை இரண்டுக்கு ஒருகாசு விழுக்காடு வரிவாங்கிக்கொள்ள உரிமை வழங்கியிருக்கிறார். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் செவ்வப்பநாயகன் நான்கு இராஜ கோபுரங்களையும் கட்டியதாகச் கூறப்படுகிறது. கி.பி.1602-இல் முத்துக்கிருஷ்ணப்பராயர் என்பவர் திருமுதுகுன்றமுடையார்க்குப் பஞ்சாவரணப் பிராகாரம் கட்டிவைத்ததாகத் தெரிகின்றது. அப்பிராகாரம், புறமதிலுக்கு வெளியிலிருந்து முகமதியர் கலகத்தில் இடிந்துபோனதாகக் கூறுவர். தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரை கைலாசப்பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டதால் இன்றும் அது ஹைட் தளவரிசை என அழைக்கப்படுகிறது.
 
பல சிறப்புக்களை கொண்ட இவ்வூரினை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடவேண்டாம்.
நன்றி :- -கடம்பூர் விஜயன்
தொகுப்புசீதா பாரதிராஜா

பிரமிப்பூட்டும் பல அதிசயங்களைக் கொண்ட சுக்ரீஸ்வரர் ஆலயம்

sukreeswarar_temple

திருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையத்தில் பிரமிப்பூட்டும் பல அதிசயங்களை கொண்டுள்ளது சுக்ரீஸ்வரர் திருக்கோயில்.
இந்த ஆலயம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் சுக்ரீஸ்வரர் என்றும், இறைவி ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.  சுற்றுப்பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் தனி சந்நதியில் விளங்குகின்றனர்.
எந்த சிவன் கோயில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் உள்ளார். பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோயிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்குப் பிடித்த வில்வ மரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளதாகக் கோயில் வரலாறு கூறுகின்றது.
ஒரு சமயம் வியாபாரி ஒருவர் பொதிச்சுமையாக மாடுகள் மீது மிளகு மூட்டை ஏற்றிச் சென்றுள்ளார். மாறுவேடத்தில் வந்த சிவன், மூட்டைகளில் என்ன என்று கேட்ட, விவசாயி உடனே பயிறு எனக் கூறியுள்ளார். சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூட்டைகள் அனைத்தும் பயிறு மூட்டைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறினான். செய்த தவற்றை வருந்திய வியாபாரி தன்னை மன்னித்து அருளும் படி இறைவனிடம் பணிந்தார். சுக்ரீஸ்வரரை வணங்கியதால் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதியில் உள்ள மக்கள் இறைவனை மிளகீஸ்வரர் என்றே அழைக்கின்றனர். தட்சிணாயனம் - உத்திராயணம் இணையும் போது சூரியனின் கதிர்கள் ஸ்வாமி மீது விழுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.
தொல்லியல் துறை 1952-ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோயிலை ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கற்களைப் பிரித்து பார்த்தபோது, தொல்லியல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும் இதே கட்டுமானத்தில் மற்றொரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், அக்கோயில் பூமிக்கு அடியில் இறங்காமல் கல் கோயில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்குக் கொம்பு, காது இருக்காது. கோயில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது ஸ்தல வரலாறு கூறுகின்றது.
 நன்றி :- அ.கு பார்வதி
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம்


P1020401

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 26-வது தலமாக விளங்குவது திருஇடைச்சுரம். இது தற்போது திருவடிசூலம் என்று மக்கள் வழக்கில் அறியப்படுகிறது.
    இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
    இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
    இத்தலத்துக்கு திருஞானஞம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது.
எப்படிப் போவது?
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவடிசூலம்,
செம்பாக்கம் – வழி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 108.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு
தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்), பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், விசாலமான தெற்கு வெளிப் பிராகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, கிழக்குப் பிராகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிராகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்தக் கிழக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிராகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிராகாரம் வந்தால், தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்துக்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.
 
தெற்குப் பிராகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால், அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால், இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால், முதலில் நால்வர் பிரதிஷ்டையும், அதையடுத்து விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து பைரவரும் காட்சி தருகிறார்..
இத்தலத்தின் சிறப்பு, மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம்.

தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
 
தல வரலாறு
திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து, இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரை பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர், சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து, தானே இடையன் வடிவில் வந்து அருள்புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து சம்பந்தர் பதிகம் பாடினார். சிவன் மறைந்த குளக்கரை, காட்சிகுளம் என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
 
இத்தலத்தில் சனத்குமார முனிவர் இறைவனை வழிபட்டு உபதேசம் பெற்றதால், சனத்குமாரபுரி என்றும், அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்டதால் கோவர்த்தனபுரி என்றும் இத்தலம் பெயர் பெற்றிருந்தது. இடையனாக வந்து திருஞானசம்பந்தரை தடுத்து ஆட்கொண்டதால், சம்பந்தர் தனது பதிகத்தில் இடைச்சுரம் என்று பாடியுள்ளதால், அதன்பிறகு இத்தலம் திருஇடைச்சுரம் என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இத்தலம் திருவடிசூலம் என்ற பெயரால் அறியப்படுகிறது.
 
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் மரகதலிங்கத் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "இடைச்சுர மேவிய இவர்வண மென்னே" என்று பாடியுள்ளார்.
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்து வெள்ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
பலஇலம் இடுபலி கையிலொன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
நன்றி :- என்.எஸ். நாராயணசாமி
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் திருக்கோயில்

BANAPURISWARAR


கும்பகோணம் கிழக்கு பகுதியில் உள்ள பக்தபுரி தெருவில் அமைந்துள்ளது பாணபுரீஸ்வரர் திருக்கோயில்.
இறைவன் - பாணபுரீஸ்வரர்  இறைவி - சோமகலாம்பிகை
ஊழிக்காலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது பிரம்மனால் விடப்பட்ட அமுதகுடம் மிதந்து வந்துகொண்டிருந்தது. அப்போது கயிலையில் இருந்து வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் ஒரு பாணத்தால் அந்தகுடத்தை உடைத்தார். சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால் பாணாத்துறை எனப்பட்டது.
இங்குள்ள இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதன்பிறகே குடத்திலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. எனவே இத்தலத்து இறைவனை வணங்குபவர்களுக்கு ஆயுள் அபிவிருத்தியும், அழியாத புகழும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வியாச முனிவர் ஒருமுறை நந்திதேவரிடம் சாபம் ஒன்றை பெற்றார். மகாவிஷ்ணவின் கட்டளைப்படி பாணபுரீஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கியது. இத்தலத்தில் வியாசர் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார். இதற்கு வியாசலிங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
வங்க தேசத்து அரசனான சூரசேன மன்னன் தன் மனைவி காந்திமதியின் தீராத நோயை போக்குவதற்காக சூதமகா முனிவரின் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தங்கி திருப்பணி செய்து மகப்பேறும் பெற்றான். இங்கிருக்கும் சோமகலாம்பாளை வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் முகப்பொலிவையும் இந்த அம்பிகை தருவாள் என்பது நம்பிக்கை.
மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ள சன்னதி தெரு தற்போது உயர்ந்து விட்டதால் கோயில் வளாகம் சற்று பள்ளமாக காணப்படுகின்றது. பழமையான சோழ கட்டுமானம் தெற்கு நோக்கிய படிக்கட்டுகள் மகா மண்டபத்தினை ஒட்டி உள்ளன. மகாமண்டபம், அர்த்த மண்டபம் கருவறை என உள்ளது. மண்டபத்தின் எதிரில் கொடிமரம் உள்ளது. தென்புறம் பழமையான வில்வமரம் உள்ளது. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், உமையொரு பாகன், நான்முகன், துர்க்கை உள்ளனர்.
மேற்கில் உள்ள திருமாளிகை பத்தியில் விநாயகர், முருகன், பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி உடன், எதிரில் அனுமனும் உள்ளார். வடமேற்கில் பெரியதொரு துர்க்கை தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றாள். மேலும், வடகிழக்கில் நவகிரக சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளன.
 
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

கொள்ளம் பூதூர் சிவன் கோயில்

KOLLAMPUDUR_1

சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்தும் தஞ்சாவூர் அருகிலேயே அமைந்துள்ளது. முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் இருக்கும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திரு அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்), பூளை வனத்தில் அருளும் திருஇரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில் இருக்கும் திருக்கொள்ளம்பூதூர் (திருக் களம்பூர்) ஆகிய தலங்களே இவை.
ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவற்றில் முதலாவதாக தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருக்கருகாவூர் ஆலயம். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும்.
இரண்டாவது வழிபட வேண்டிய தலம் அவளிவநல்லூர். இங்கு காலசந்தி எனப்படும் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவார மங்கலம். இங்கு உச்சி காலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் வழிபட வேண்டும். நான்காவதாக ஆலங்குடி. இந்த ஆலயத்தில் சாயரட்சை வேளையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் இறைவனை தரிசிக்க வேண்டும். இறுதியாக திருக்களம்பூர். இந்த ஆலயத்தில் அர்த்த ஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த ஐந்து ஆலயங்களில் திருக்களம்பூர் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது.
இறைவன்-வில்வவன நாதர்  இறைவி-அழகு நாச்சியார்
இந்த ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்காக, ஐப்பசி மாத அமாவாசையான தீபாவளி அன்று நடைபெற வேண்டிய அர்த்தஜாம பூஜை, சிவபெருமான் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்தார். 
வெட்டாறு எனப்படும் அகத்திய காவேரி அருகில் ஓடுகிறது, இந்த ஆற்றின் எதிர் கரையில் சம்பந்தர் தங்கிய ஓரிடத்தில் ஒரு கோயில் உள்ளது அது நம்பர்கோயில் என அழைக்கப்படுகிறது.
பாண்டிய நாட்டில் இருந்து சம்பந்தர் இத்தலம் வந்தபோது இந்த வேடாற்றில் வெள்ளம் போய்கொண்டு இருந்தது, ஓடம் செலுத்த இயலாது என ஒடக்காரர்கள் சென்றுவிட சம்பந்த பெருமான் ஒரு ஓடத்தில் சேரி பாடலையே துடுப்பாக கொண்டு என பொருள் தரும் "கொட்டமே கமழும்" எனும் பதிகத்தினை பாட ஓடம் மறுகரையை அடைந்தது இந்த அற்புதம் ஒடதிருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது.
 
கூவிளம் என்றால் வில்வம் என பொருள் கூவிளம் புதூர் என்பதே கொள்ளம்பூதூர் ஆனது. விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியன், கொச்செக்கட் சோழன் பிருகு முனி, காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர், அருச்சுனன் வழிபட்ட தலம் இது.
சுவாமி விபுலானந்தர் எழுதிய யாழ் நூல் இத்தலத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நகரத்தார் திருப்பணி ஏற்ற தலம், நச்சாந்துப்பட்டி பே.ரா. ராமன் செட்டியார் குடும்பத்தினர் இக்கோயில் திருப்பணி செய்த பெருமக்கள் ஆவர்.
பிரமன் தான் இழந்த படைப்பு தொழிலை மீட்டுப்பெற இந்த தலத்தில் வில்வமரத்தடியில் லிங்கம் வைத்து பூசை செய்து படைப்பு தொழிலை மீண்டும் பெற்றான். அகத்தியர் அகத்திய தீர்த்தம் உண்டுபண்ணி பல மந்திர உபதேசங்களை பெற்ற தலம்.
முகப்பு சுதை வளைவுடன் கோயில் வளாகம் துவங்குகிறது, அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம், இடது புறம் சிறிய விநாயகர் சிற்றாலயமும், வலது புறம் முருகன் சிற்றாலயமும் உள்ளது.
கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், அழல்முகன், நான்முகன், விஷ்ணு துர்க்கை உள்ளனர். மேற்கில் உள்ள திருமாளிகைபத்தியில் சிறிய விநாயகர், ஒரு லிங்கம் எதிரில் ஒரு சிறிய நந்தி, வரிசையாக ஐந்து லிங்கங்கள் உள்ளன, அடுத்து நால்வர் சிலைகளும், விநாயகரும் உள்ளனர்.
வரிசையாக விநாயகர் இரண்டு தட்சணாமூர்த்திகள் அம்பிகை சிலைகள் லிங்கம் ஒன்றும், விஷ்ணு, சோழன் சிலை, சுரிதா, சபரஸ் மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் மகாலட்சுமி உள்ள சன்னதிகளும் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சனி, சூரியன், உள்ளனர். பிரதான கோபுரத்தின் வலப்புறம் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் சௌந்தர்ய மகாலட்சுமி பெரிய சிலையாக உள்ளார்.
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்

KOVIL_VENNI_1
மக்கள் வழக்கில் ‘கோயில் வெண்ணி’ என்று அழைக்கப்படுகின்றது. பழைமையான ஊர். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார், புறநானூற்றுப் பாட்டில் கரிகாற் சோழனின் வெண்ணிப் போரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
‘வென்றியூர்’ என்பது ‘வெண்ணியூர்’ என்று வழங்கி, ‘வெண்ணி’ என்று சுருங்கியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. கரும்பு, நந்தியாவர்த்தக் காடுகளாக இருந்த இவ்விடத்தில் இருமுனிவர்கள் தமக்குள் மாறுபட்டுக் கூச்சலிட, அவ்வழியே வந்த முசுகுந்தன் அதுகேட்டு வந்து, இருவரையும் சாந்தப்படுத்தி, சுவாமி இருப்பதறிந்து கோயில் எழுப்பித்தான் என்பர்.
 
(இப்பெயருக்கு ஏற்ப சிவலிங்கம், கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்து வைத்துள்ளது போலவுள்ளது.)
இறைவன் - வெண்ணிக் கரும்பேஸ்வரர், வெண்ணிநாதர்.
இறைவி - சௌந்தர நாயகி
தலமரம் - நந்தியாவர்த்தம்
தீர்த்தம் - சூரிய, சந்திர தீர்த்தங்கள்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற ஸ்தலம். கிழக்கு நோக்கிய அமைந்துள்ளது கோயில். எதிரில் சூரிய தீர்த்தம் - குட்டை போல் உள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். தற்போது மிகவும் பழுதடைந்து, ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சியளிக்கின்றது. திருப்பணி நடைபெற்று வருகிறது.
சுவாமி கிழக்கு நோக்கியது. அம்பாள் தெற்கு நோக்கியது. கருவறை அகழி அமைப்புடையது. நந்தி, பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
 
துவாரபாலகர்களைக் கடந்து, துவாரகணபதியை வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் சுயம்பு - சதுர ஆவுடையார். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் நடராஜ சபை உள்ளது. தலப்பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், இருபுறமும் துவாரபாலகியர் உருவங்கள் கதையில் உள்ளன. அம்பாளுக்குப் பிரார்த்தனையாக வளையல்களைக் கோர்க்கும் பழக்கம் இங்குள்ளது.
 
பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக் கூறுகிறது.
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்புசீதா பாரதிராஜா