Monday, 31 October 2016

இரட்டை பிள்ளையார்-1


I
(துவக்க உரை: - இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா )

எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குக் காரணம் வினைகளையும் தடைகளையும் தீர்ப்பவர் வினாயகர் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடங்க உள்ள அல்லது தொடங்கிய காரியங்கள் தொடர்ந்து நடந்தேறவும் அக்காரியத்தில் இயற்கையான தடைகள் ஏற்பட்டு விடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் வினாயகரை வேண்டுகிறோம். 

இந்த நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த வினாயகரே வியாச முனிவர் கூறிய மகாபாரதத்தை எழுதத் துவங்குவதற்கு முன்னால் தன்னைப் போலவே இன்னொரு உருவத்தை தன் அருகில் படைத்து அதை தானே (கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பது போல) வணங்கியப் பின் மகாபாரதத்தை எழுதத் துவங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதாவது பிள்ளையாரே தனது பிம்பமான இன்னொரு பிள்ளையாரை தோற்றுவித்து, அதை வணங்கி துதித்தப் பின்னரே தனது காரியத்தை துவக்கியதான ஐதீகம். அதுவே இரட்டை பிள்ளையார் எனும் எண்ணம் துவங்கிய கதை.

முன் காலங்களில் வைதீக பூஜைகளில் முக்கியமாக பண்டிதர்கள் எனப்பட்ட வைதீகக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் பூஜைகளை செய்யும்போது குடும்பத்தின் மூத்தவர் செய்யும் பூஜையில் தம் குடும்பத்திற்காக ஒரு பிள்ளையாரையும், தமது வம்சாவளியினருக்காக இன்னொரு பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்து வைத்து அந்த இரண்டிற்குமே ஒரே நேரத்தில் பூஜைகளை செய்வார்களாம். இது சோழ மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் அதிகம் இருந்துள்ளது. இது இலங்கை நாட்டிலும் பரவி இருந்துள்ளது. அதனாலோ என்னவோ இலங்கையிலும் சில ஆலயங்களில் இரட்டைப் பிள்ளையார் காட்சி தருகிறார். இரட்டை பிள்ளையாருக்கு பூஜை செய்வதை மிகுந்த புண்ணியம் என்பார்கள். அது குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்ல, அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் என்பார்கள். யாராக இருந்தாலும் பிள்ளையாரை வழிபட்ட பிறகே எந்த காரியத்தையும் துவக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை என்பதினால் வினாயகரின் பூஜையை துவக்கும் முன்னால் கூட வினாயகரின் உருவத்திற்கு முன்னால் மஞ்சளில் பிடித்து வைத்த ஒரு வினாயகரை 'விக்னம் தீர்ப்பாய் வினாயகா'' என வேண்டிக் கொண்டு அதற்குப் பிறகு வினாயகர் பூஜையை ஆரம்பிப்பதாக ஒரு ஐதீகம் இருந்துள்ளது.

வினாயகர் ஒருவர் மட்டுமே வேறு அவதாரம் எடுக்கவில்லை என்பது தனிச் சிறப்பு. முதலில் அவர் அவதரித்தபோது மனிதத் தலைக் கொண்டு அவதரித்தார். ஆனால் கடவுளின் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் அவருடைய தாயாருக்காக அவர் தனது தலையை இழக்க நேரிட்டபோது அவருடைய தாயாரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய தந்தையே அவருக்கு இன்னொரு முகத்தை - யானை முகத்தை- தந்து அவரை உயிர்பித்தார். அதனால்தான் முதலில் மனிதத் தலையுடன் இருந்த வினாயகரை வணங்கி உன்னைப் போலவே விக்னம் இல்லாமல் அனைத்தும் இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு பல சக்திகளைப் பெற்று தடைகளை விலக்கும் சக்தியைப் பெற்று இருந்த யானை முகத்தைக் கொண்ட வினாயகரை பூஜையை செய்வதான ஐதீகத்தில் ஏற்பட்டதே இரட்டைப் பிள்ளையார் பூஜைகளும். 

எதற்காக இந்த இரட்டை பிள்ளையார் வழிபாடு துவங்கியது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நாம் செய்யும் எந்த பூஜைகளும் தடங்கல் இன்றி நடத்திக் கொடுக்க அந்த வினாயகரே இரண்டு நிலைகளை எடுப்பாராம். முதலில் தன் அடிமையான விக்னேஸ்வரனை அனுப்பி விக்னங்களை கிரகித்துக் கொள்ளுமாறு கூறியபின் தான் வந்து அமர்ந்து பூஜைகளை ஏற்பாராம்.

இதற்கும் ஒரு பின்னணி காரணக் கதை உள்ளது. முன் ஒரு காலத்தில் காலரூபி என்றொரு வடிவமற்ற அசுரன் இருந்தான். அவனுடைய வேலை ஒவ்வொரு காரியத்திலும் எத்தனை தடைகள், விக்னங்கள் மற்றும் இடையூறுகளைத் தர முடியுமோ அத்தனையையும் தருபவனாக இருந்தான். அதனால் அவன் செயலை விக்னத்தை தருபவன் என்பார்கள். அனைத்து ரிஷி முனிவர்களும் காலரூபியினால் அவதிப்பட்டார்கள். அவர்களால் யக்னங்களையும் யாகங்களையும் சரிவரச் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்கள் வினாயகரிடம் சென்று அவரை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள். 
காலரூபியை வினாயகர்  அழித்து 
விக்னேஸ்வரனாக்கிக் கொண்டார் 

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வினாயகரும் அந்த காலரூபியை  போர் புரிந்து அழித்தார்.  மரணம் அடையும் முன்னால் அவன் வினாயகரின் கால்களில் விழுந்து சரணாகதி அடைந்தான். தனக்கும் அவருடைய காலடியில் ஒரு இடம் தருமாறு கேட்டுக் கொள்ள அவரும்  அவனிடம் கூறினார்  'உனக்கு நான் இன்று முதல் விக்னேஸ்வரன் என்று பெயர் தருகிறேன்.  எனக்கு பூஜை செய்பவர்கள் முதலில் 'விக்னேஸ்வரா, எனக்கு வர உள்ள விக்னங்களை நீயே விலக்குவாய்'  என உன் பெயரை உச்சரித்து, உன்னை பூஜை இடத்தில் இருந்து விலக்குமாறு என்னிடம் வேண்டுவார்கள்.  ஆகவே எனக்கு செய்யப்படும் பூஜையில் உனக்கும் ஒரு சிறு பங்கு இருக்கும்.   நீயும் வர உள்ள அனைத்து விக்னங்களையும் கிரகித்துக் கொண்டு சென்று விடுவாய்.  ஆகவே இன்று முதல்  நீ என்னுடைய எந்த  பக்தர்களுக்கும் உன்னுடைய செயல்களினால் தடைகளையும், துன்பங்களையும்  தரக்கூடாது.  ஆனால் அதே சமயம் எனக்கு அபசாரம் செய்பவர்களையும், என்னை உதாசீனப்படுத்துபவர்களையும் நீ பல விதமான விக்கினங்களில் சென்று அவர்களுடைய செயல்களுக்கு தடைகளை செய்யலாம்.  இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார்.
  
 மனிதத் தலையுடன் ஆதி வினாயகர். 
பூந்தோட்டம், கூத்தனூர் வினாயகர் ஆலயம் 

ஆகவேதான் அந்த காலரூபியை விக்னேஸ்வரனாக  பிடித்து வைத்து 'விக்னங்களை கிரகித்துக் கொள்வாய்' என வேண்டிக் கொண்டு அடுத்து வினாயகருக்கு பூஜையை துவக்குவார்கள்.  அதனால்தான் முதலில் இரு உருவங்களை வைத்து வினாயகர் பூஜை செய்யும் பழக்கம் இருந்தது. இப்படியாகவே  வினாயகரை விக்னேஸ்வரனாகவும் , வினாயகராகவும்  வழிபடப்பட்ட,  பல  இடங்களில் மட்டுமே நிலவி வந்திருந்த  இந்த ஐதீகம் காலபோக்கில் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே  வந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் பல ஆலயங்களில் மறைந்து விடாமல் அமைந்தது.  பல மன்னர்கள் அமைத்த பல தொன்மை வாய்ந்த ஆலயங்களில் இன்றும் இரட்டை பிள்ளையார் சன்னதிகள் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் மேலே கூறியவைதான். முக்கியமாக சிவன் கோவில்களில் அது அதிகம் உண்டு என்பதின் காரணம் சிவபெருமானினால் வினாயகர் மனிதத் தலையை இழந்து யானை முகனாகி அபார சக்தி பெற்று இருந்தார் என்பதே ! எனக்குத் தெரிந்தவரை தில தர்பண பூமி (கூத்தனூர்) எனும் ஆலயத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் வினாயகர் காட்சி அளிக்கிறார். மற்ற ஆலயங்களில் அவர் யானை முகத்தவனாகவே இருக்கிறார்.

இன்னொரு கதையின்படி வினாயகர்  இரண்டு உருவங்களில் இருந்தவர்  என்பதினால் பூஜைகளில் வர உள்ள அனைத்து தடைகளையும், விக்னங்களையும் மனிதத் தலையுடன் அவர் அவதரித்த முதல் பிள்ளையார் நிலையில் இருந்து கொண்டு கிரகித்துக் கொள்வாராம். அதன் பின் கஜமுக வினாயகர் நிலையை எடுத்துக் கொண்டு  வினாயகருக்கு செய்யப்படும்  பூஜைகளை ஏற்றுக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு அருள் புரிவாராம். ஆக வினாயகரே இரு நிலைகளில் - அதாவது இரட்டை பிள்ளையார் நிலையில் - இருந்து கொண்டு பூஜைகளை ஏற்றுக் கொள்வதான ஐதீகத்தில் பிறந்ததே  இரட்டை பிள்ளையார் பூஜை என்று கூறுவார்கள்.
..........தொடரும்

நன்றி : சாந்திப்பிரியா           




 

Saturday, 29 October 2016

ஐஸ்வரியம் தரும் ஐப்பசி

இம்மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.


ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின் தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீ து வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன்படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத்தும் தங்கமயமானதாக இருக்கும். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்திருப்பார்கள். மேலும், பலநூறு ஆண்டுகளுக்கு முன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள். முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசியில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமென்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. காவேரிக் கரையோரத் திருத்தலங்களில், காவேரி உற்சவத்திற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் மயிலாடுதுறை. இங்குள்ள மயூரநாதர் கோவிலில் துலா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். 


ஒருசமயம் சிவபெருமான் வேதங்களின் உட்பொருளை உபதேசித்துக்கொண்டிருக்கையில், பார்வதி தேவியானவள் அழகாக தோகை விரித்தாடிய மயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதனால் கோபமுற்ற சிவபெருமான், "நீ மயிலாக பூலோகத்தில் அவதரிக்கக் கடவாய்" என்று சபித்தார். அதன்படி மண்ணுலகில் மயிலாக அவதரித்த பார்வதி, சிவபெருமானை ஒவ்வொரு தலமாக வழிபட்டு வந்தாள். இறுதியாக காவேரி நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டாள். 

பார்வதியின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் ஆண் மயிலாக வந்து, அவளது சாபத்திற்கு விமோசனம் அளித்தார். அதனால் இத்தலம் மாயூரம் என்று பெயர் பெற்றது. மயிலாக இருந்த பார்வதி சாப விமோசனம் பெற்றதால் இத்தலத்து இறைவன் மயூரநாதர் என்று பெயர் பெற்றார். பார்வதி அஞ்சல் நாயகி என்று பெயர் பெற்றாள். சாப விமோசனம் பெற்ற பார்வதி, பிரம்மன் நிறுவிய தீர்த்தத்தில் நீராடினாள். அந்த மாதம் துலா மாதமென்று புராணம் கூறுகிறது. இங்குள்ள தீர்த்தக் கட்டத்தை இடப தீர்த்தக்கட்டம் என்றும் சொல்வர்.

பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப் பின்தொடர்ந்தார்கள். அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், "சிவபெருமானைச் சுமக்கும் நான் தான் பெரிய வாகனம்" என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்தது. இதை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது. உடனே ரிஷபம் பரமனிடம்  மன்னிப்புக் கேட்க, "நீ காவேரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்"  என்று ஆசி தந்து ரிஷபம் மேலே வர அருளினார். இதனால் மயிலாடுதுறையிலுள்ள இத்துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்டார்கள். அந்த மூவரும் கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்தார்கள். அந்தத் தோற்றம் நீங்க பிரம்மனிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர், "உங்கள் மீது மக்கள் திணித்த பாவ மூட்டைகளின் விளைவால், நீங்கள் உருமாறி இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை என்ற தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில் நீராடுங்கள். அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது" என்று அருளினார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரியில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது.


தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல் இத்தலத்தில் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள். ஐப்பசி அமாவாசையன்று இங்குள்ள காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள். மேலும் மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடை பெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி, மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால் காவேரியில் மூன்று முறை நீராடிய பலனும், யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

முடவன் முழுக்கு: ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான்.
-
அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.

பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக்கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவேரியானவள் தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத்தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!. ''தண்ணீரும் காவிரியே!..'' என்ற திருவாக்கின் படி - எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!. பரந்து விரிந்த பூவுலகில் - எங்கிருந்த போதும் சரி!. நீராடும் போது ஒரு சொம்பு நீரை எடுத்து,

"ஸ்ரீ காவேரி நமஸ்துப்யம் நமோ நம" என்று சிந்தித்து வணங்கி நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!..

நன்றி : பொற்குன்றம் சுகந்தன்

ஆறுபடை வீடும் ஒரு படை வீடாய்

சூரபத்மனின் வதத்திற்கென்றே தோன்றியவன் முருகப் பெருமான். எனினும் அவன் அரங்கேற்றிய ஞானத் திருவிளையாடல்கள் எண்ணற்றவை. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து, அவனை சேவலாகவும் மயிலாகவும் ஏற்று என்றென்றும் தன்னுடனேயே வைத்துக்கொண்ட அளப்பரிய கருணையை என் சொல்வது?.





பிரணவப் பொருளறியான் படைப்புக் கடவுளா என வெகுண்டு, பிரம்மனை சிறையிலடைத்து, "உமக்கு பொருள் தெரியுமா?" என கேட்ட தந்தைக்கே குருவான சுவாமி நாதனைப் புகழ சொற்களேது! அகத்தியர் தமிழ் தந்தாரென்பர். அவருக்குத் தமிழ் தந்தவன் முருகன். பொதிகை மலையில் அகத்தியர் தவம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில் தெய்வீக மணம் வீசியது. எதிலிருந்து அந்த மணம் வருகிறதென்று அறியாத அகத்தியர் முருகப்பெருமானை பிரார்த்திக்க, அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்தார். ஆறுமுகனையே ஆசானாகக் கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணம் செய்து தமிழை வளர்த்தார். முருகப்பெருமான் செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுத்தான் என்றும்; அதை அகத்தியர் பாண்டியனுக்கு வழங்கினாரென்றும் திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது.


சிவபூஜை செய்யும்போது சித்தத்தை வேறிடம் செல்ல விட்டார் நக்கீரர். அதனால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருளால் விடுபட்டார். ஔவைக்கும் முருகனுக்கும் நடந்த தமிழ் விளையாட்டு நாடறிந்த ஒன்று. "சும்மா இரு" என்று அருணகிரிக்கு உபதேசித்து, அவரை திருப்புகழ் அருளச் செய்து நீடுபுகழ் வழங்கியவன் முருகன்.


கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "திகடச் சக்கர" என அடியெடுத்துக் கொடுத்து, அதற்கு விளக்கம் சொல்ல தானே புலவனாக வந்து கந்தபுராணத்தை அரங்கேறச் செய்ய அருளியவன் முருகன். குமரகுருபரர், தேவராய சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் என பலருக்கு அருளி தரிசனம் தந்தவன் முருகன்.


இவ்வாறு பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன், வேண்டுவோர் வினை தீர்த்து வாழ வைக்கும் வள்ளலாகவும் திகழ்கிறான். அவன் கோவில் கொண்டுள்ள இடங்ளெல்லாம் அருள் மன்றங்களே! அத்தகைய சிறப்புமிக்க முருகன் தலங்களில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ஆகிய ஆறு படைவீடுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக சிறப்பிக்கப்படுகின்றன. இந்த தலங்களைச் சென்று ஒருமுறையேனும் தரிசித்து வரவேண்டியது முருக பக்தர்களின் கடமையாகும்.


அந்த ஆறுபடைவீடு முருகப் பெருமான்களையும் ஒரே இடத்தில் காணும் ஆவல் எல்லாருக்குமே இருக்குமல்லவா? அந்த ஆவலைப் பூர்த்தி செய்து ஆத்ம சுகம் தருகிறது - சென்னை பெசன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோவில். மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் செந்தூரைப்போலவே கடற்கரையையொட்டி அமைந்துள்ள விதம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.


கானாடுகாத்தான் என்னும் ஊரைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், அருணாச்சல செட்டியார் என்னும் சகோதரர்களின் அரிய முயற்சி யால் 1983-ஆம் ஆண்டு இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முதலில் அமைக்கப்பட்டது சுவாமிமலை முருகன் சந்நிதியாகும். பின்னர் மற்ற படைவீட்டு சந்நிதிகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பெற்றன.


ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்? ஒரு மனிதன் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறக்கிறான். பின்னர் உடன் பிறந்தோருக்கு அண்ணனாகிறான்; தம்பியாகிறான். அவனே ஒரு பெண்ணுக்கு கணவனாகிறான். பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். உறவுகளுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமன், மைத்துனன் என பல உறவுகளாகிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவனே. அதுபோலவே நம் ஆத்ம திருப்திக்கு இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். மனநிம்மதி பெறுகிறோம். இத்தகைய நிம்மதியை - மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது இந்த அறுபடை முருகன் ஆலயம்.


ட்ரஸ்ட் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்படும் இவ்வாலயம், அறங்காவலரான திருமதி அலமேலு ஆச்சி அவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுபடை முருகன் திருவுருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் அற்புதமாக விளங்குகின்றன. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் வேலை வாய்ப்பிற்கும் வரம் நல்குபவர்.


தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த மன அமைதியைத் தருவதாய் விளங்குகிறது இவ்வாலயம். பக்தர்களுக்கு முதலில் சோதனைகள் வரலாம்; துன்பங்கள் தொடரலாம். ஆனால், "நீயே சகலமும், உன் பாதமே அடைக்கலம்" என்று சரணடைந்துவிட்டால், நம்மைப் பற்றியுள்ள இடர்களனைத்தும் இல்லாமல் போய்விடும். துயரங்கள் தொலைதூரம் ஓடும். நோயற்ற வாழ்வு, சகல சௌபாக்கியங்கள், மணப்பேறு, மகப்பேறு என எல்லாம் அள்ளித்தரும்- ஓரிடத்தில் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டு முருகனை வணங்கி திருவருள் பெறுவோம்!.

நன்றி : சித்ரலேகா


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கந்தசஷ்டி விரதத் தத்துவம்!




காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.

அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார்.

வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.



முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார்.

அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன.

அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.

கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.



கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.

கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்த முசுகுந்தன் இம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் பெற்றான் என்பதை புராண வரலாறுகள் மூலம் அறியலாம்.

முசுகுந்தன் என்ற சோழ சக்கரவர்த்தி, தேவாசுரப் போர் நடந்தபோது இந்திரனுக்குத் துணை நின்றவன். சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகள் செய்தான். போரின்போது தனக்கு உதவிசெய்த முசுகுந்தனுக்கும் இந்திரன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்.

திருமணவிழாவில் கலந்துகொண்ட முசுகுந்தன், வசிஷ்ட முனிவரிடம் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்தான். முறைப்படி சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அவனது வழிபாட்டில் திருப்தி யுற்ற முருகப்பெருமான் முசுகுந்தனுக்குக் காட்சி தந்து, “”வேண்டும் வரம்யாது?” என்று கேட்டார். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்களும் தனக்குத் துணைபுரிய அருளவேண்டுமென முசுகுந்தன் வரம் வேண்டினான்.

முருகப்பெருமான் அவ்வாறே வரமருளினார்.

ஆனால் வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் “மானிடர்க்கு உதவி செய்வதில்லை’ என்று கூறி மறுத்தனர். அதனை ஏற்காத முருகப்பெருமான் அவர்களை மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டுமுசுகுந்தனுக்கு துணைசெய்ய ஆணையிட்டார். மானிடர்களாகப் பிறந்த நவ வீரர்கள் துணையுடன் முசுகுந்தன் விண்ணுலகும் மண்ணுலகும் புகழ அரசாண்டு, கயிலையில் கணநாதர் நிலையை அடைந்தான்.

அகங்காரத்தின் வடிவமான சூரபன்மன், குரோதத்தின் வடிவமான சிங்கமுகன், மோகத்தின் வடிவமான தாருகாசுரன் ஆகிய மூவரையும் முருகப்பெருமான் அழித்தது மனிதனின் அகங்காரம், குரோதம், மோகம் ஆகிய தீய இயல்புகளை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறிப்பதே. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட, சூரபன்மன் மட்டும் கடைசிவரை போராடி முருகப் பெருமானால் ஞானம் அருளப் பெற்று அவரால் ஆட்கொள்ளப் பட்டான்.



குரோதம், மோகம் போன்றவற்றை ஒழித்துவிட்டாலும் ஆணவத்தை அடியோடு அழிக்க முடியாது என்பதையே சூரசம்ஹார நிகழ்வு உணர்த்துகிறது.

முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது- ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.

திருவண்ணாமலை தீர்த்தங்கள் !!!




தெய்வத் திருமலை திருவண்ணாமலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.


இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:


திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.


திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.


திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.


திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.


திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.


திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.


திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.

நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.



திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.


திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.


திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.


திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.


விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.


திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.


தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.


எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்

முருகனுக்கு இந்திரன் தந்த பரிசு!


108 யுகங்கள் அரசாண்ட - அதுவும் 1008 அண்டங்களையும் அரசாண்ட சூரபத்மனின் அரசாட்சி முடிந்தது. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. அவன் செய்த தவப் பயனால் முருகனின் மயிலாக, சேவலாக மாறி விட்டான். இது அவன் பெற்ற பேறு!

ஆனால் மற்றவர்கள்? சுற்றமும், உடன் பிறப்பும், புதல்வர்களும் மடிந்து போனாற்களே... ஆனால் ஒருவனை மறந்து போகக்கூடாது. யார் அவன்? சூரனின் புதல்வன் இரண்யன்தான். தன் பிதா இறந்ததையும், ஆனால் சேவலும், மயிலுமாக செவ்வேளுக்கு அடிமைப்பட்டதையும் கண்டு கலங்கி விண்ணில் நின்று புலம்பினான்.

அவன் போரில் தப்பியோடி அனைவருக்கும் நீர்க்கடன் செய்யும் பொருட்டு கடலடியில் மீனாக வடிவெடுத்து வாழ்ந்தவன். வீரமகேந்திரபுரம் அழிந்து விட்டதைக் கண்டு அலறி நின்றான். தந்தை யார் சொல்லையும் கேட்காமல் இப்படி ஆனதை அவனால் தாங்க முடியவில்லை.

இதை கச்சியப்பரின் வாயிலாக நம் அறியலாம்.

“நன்றென் பதையுணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே?
பொன்னும் படிக்கோ பொருதாப் புரவலனே
என்றுனை இருந்திட நான் காண்பதுவே’

என்கிறார்.

தன் சொல்லைத் தந்தை கேட்கவில்லையே என்ற ஆதங்கமும், தந்தையை இனிக் காண முடியாதே என்ற துயரமும் போட்டி போட்டுக் கொண்டு புலம்புவதை இரண்யனின் மனநிலையில் காணலாம்.

“முன்பு உன் பக்கமாய் நின்று பொருது உயிரை இழக்காமல் ஒளிந்து உய்த யான் இன்று உனக்கு அன்புடையவன் போல் அழுகின்றேன். பழிக்கு ஆளானேன். புத்திரர்கள் தந்தைக்குச் செய்யும் கடமையினின்றும் நான் விலகினேன்’ என்று கூறியதுடன் நின்றானா? இல்லை, தந்தை சேவலும், மயிலுமாய் ஆனது அவனைப் பொறுத்தவரை சரியானது இல்லை.

அவனது புலம்பலைச் கச்சியப்பர் பாடலில் காண்போம்.

“ஆழியான் வேதன் அமரர்க்கு இறைமுதலோர்
வாழியான் என்று வழுத்தியிட வைகியந்
பூமியார் மேனிப் புராரிசிறுவன் தேரில்
கோழியாய் நின்று விலாவொடிய கூவுதியோ’
“ஓசையால் அண்டத்து உயிர்களெல்லாம் வந்திரைஞ்சும்
சேகையாய் மங்குந் திருந்தாள் கொண்டு உற்றிடு நீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாளோ’

தந்தை சூரன் பெற்ற பேறு பெரியதாக அந்த அசுர குமாரனுக்குத் தோன்றவில்லை. தந்தை குமரக் கடவுளுக்குக் கோழிக் கொடியாகவும், மயில் வாகனமாகவும் மாறிவிட்டதைத் தாங்க இயலவில்லை.

“நீ இறவாமல் மயிலுஞ் சேவலுமாகி இருப்பதால் நீர்க்கடன் செய்வதற்கும் பாக்கியஞ் செய்திலேன். என்னைப் பற்றி நீ யாது நினைக்கின்றாயோ?’ என்று தாங்க முடியாமல் கதறி அழுதான்.

“ஐயோ நான் இங்கே இருப்பதைக் கண்டு விட்டால் பூதங்கள் என்னைக் கொன்று சினம் தீர்த்துக் கொள்வார்கள்’ என்று முன்போல் கடலில் போய் ஒளிந்து கொண்டான்.

மற்றவர்களுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டுமே? அதனால் சுக்ரரை அழைத்துக் கொண்டு நீர்க்கடனை செய்து முடித்தான்.

“செல்வம்தான் துயரத்திற்கு வித்து’ என்ற ஞானோதயம் வந்தது.
அதனால் அவன் மனத்தில் வெறுப்பு மூண்டது. சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து முக்தி பெரும் பொருட்டு ஒரு புறம் போய்த் தவம் மேற்கொண்டான்.

வீரவாகுத் தேவரை வேலாயுதக் கடவுள் கனிவுடன் பார்த்தார். வீரவாகுத்தேவர் அன்புடன் ஆறுமுகக் கடவுளை வலம் வந்து வணங்கினார்.
“வீரவாகு, இந்திர குமாரணாகிய ஜயந்தனையும், தேவர்களையும் சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வருவாயாக!’ என்றருளினார்.
வடிவேல் இறைவனின் கட்டளையைச் சிரமேற் கொண்ட வீரவாகுத்தேவர், குமரப் பெருமானைத் துதித்து விடைபெற்றுச் சென்றார். சிறைச்சாலையை அடைந்தார்.

அவரைக் கண்ட தேவர்கள் அதிசயமடைந்தார்கள். கால்களில் பூட்டிய விலங்குகள் ஒடிய அஞ்சலித்தார்கள்.

“அண்ணலே, எம் அல்லல்களை அகற்றவே வந்தீரோ?’ என்று ஆரவாரித்தனர்.
“ஆறுமுகக் கடவுள் அயிற் படையால் சூரனை அடக்கிவிட்டார். அஞ்ச வேண்டாம் தேவர்களே’ என்ற வீரவாகுத் தேவர் கூறினார்.

அதைக் கேட்ட தேவர்கள் மகிழ்ந்தார்கள். ஆரவாரத்துடன் சிறையை விட்டு வெளியே வந்தார்கள். செருக்களத்தை அடைந்து குமரக் கடவுளை வலம் வந்து வணங்கிக் கண்ணீர் மல்கித் துதித்தார்கள்.

ஆறுமுகக் கடவள் அவர்களை அன்புடன் திருநோக்கம் புரிந்தார்.
“கொடியவனான சூரபத்மனின் சிறையில் பலகாலம் இருந்து அதிகத் துன்பத்தை அனுபவித்து வீட்டீர்கள். இனி துன்பம் இன்றி முன்போல் அமராவதி பட்டனத்தை அடைந்து இன்புற்றிருப்பீராக’ என்று அருளாசி வழங்கினார்.

சயந்தன் தன் தந்தையான இந்திரனை வணங்கினான். இந்திரன் தனது மகனை வாரி ஆரத் தழுவி மகிழ்ந்தான். “இனி நமக்கு எந்த துன்பமும் இல்லை. குமரக் கடவுளின் வேல் எல்லாவற்றையும் துடைத்து நம்மைக் காப்பாற்றிவிட்டது’ என்று உவகையுடன் கூறினான்.

குமரக் கடவுள் போரிலே இறந்த அனைத்துப் பூதங்களையும் மீண்டு வருமாறு அருள்புரிய, அனைவரும் உயிர்பெற்று எழுந்தார்கள். வந்து கூடி முருகப் பெருமானைத் துதித்தார்கள்.


தேவர்கள் இனி “உய்ந்தோம், உய்ந்தோம்’ என்று ஆரவாரித்தனர்.
வடிவேல் பெருமான் வருண பகவானை நோக்கி, “கொடிய சூரபத்மன் இருந்த இந்த மகேந்திரபுரியை ஊழிக் காலத்தில் பூமி அழிவது போல அழித்து விடுங்கள்’ என்று பணிந்து அருளினர்.

வருணன் அவருடைய ஆணையைச் சிரமேற் கொண்டான். வீர மகேந்திரபுரியை அங்குள்ள உயிர்களோடு கடலில் வைத்து அழுத்தினான். அரி அயனாதியருடன் அமரர்களும் லட்சத்து ஒன்பது வீரர்களும் துதி செய்து அருகில் வர, போர்க்களத்தை விட்டு நீங்கி இலங்கையையும், கடலையும் கடந்து சீரும் சிறப்புமிக்க திருச்செந்தில்பதியை வந்தடைந்தார்கள்.

குமரக் கடவுள் மயிலினின்று இறங்கி திருக்கோயிலினுள் புகுந்து தேவர்கள் துதிக்க அரதன அரியணை மேல் வீற்றிருந்து அருளினார். பயமின்றி பவனி வந்த கதிரவன் மேலைக் கடலில் கரைந்தான்.

தேவர்கள் முருகப் பெருமானின் உத்தரவு பெற்றுத் திருமஞ்சனம், நறுமலர்கள், சந்தனம், தூப, தீபம் முதலியவற்றை எடுத்துக் கொண்டனர். சிவபெருமான் உமையம்மையாருக்கு உபதேசித்த குமார தந்திர விதிப்படி அபிஷேக ஆராதனை செய்து குமரக் கடவுளை வழிபட்டார்கள்.

செந்தில் பெருமான் மனமகிழ்ந்து “வேண்டிய வரங்களைக் கேட்டு உய்மின்’ என்று திருவாக்கு அருளினார். சதா முருகப்பெருமானின் திருவடிகளையே தரிசிக்கும் பேறு பெற்ற அமரர்களுக்கு குறை ஏது!

“எம்பெருமானே, எங்களுக்கு ஒரு குறையுமில்லை. எமது உயிருள்ளவரை தங்கள் திருவடியை விட்டு நீங்காத பேற்றைத் தந்தருள்வீர்’ என்று கேட்டு இறைஞ்சி நின்றார்கள்.

தேவர்களாக இருந்தாலும் அங்கேயும் அவர்கள் புனித கைங்கர்யத்தையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதித்த விதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறுமுக வள்ளல் அவ் வரத்தை அவர்களுக்கு வழங்கினார்.
கதிரவன் உதித்து கந்தவேளை தரிசிக்க வேகமாக வந்தான். அப்பொழுது குமரவேள், மயனை அழைத்தார். அவருக்கு சேவை புரிய காத்திருந்த மயன் ஓடி வந்து துதித்து நின்றான்.

“ஐயனே, தாங்கள் இட்ட பணியைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கந்தனின் கழலடியை வணங்கினான்.

“மயனே, இத்திருச்செந்திலம்பதியில் ஒரு பொற்கோயிலை அமைத்திடுக. அங்கே எமது தந்தையை பிரதிஷ்டை செய்து யான் பூஜிக்க விரும்புகிறேன். விதிமுறைப்படி அமைத்திடுக’ என்றார்.

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பது வேதவாக்கு. சிவபெருமானே குமரக் கடவுளாக வந்தவர். தமக்கும் குமரனுக்கும் பேதமில்லை என்பதே கந்தபுராணம் எடுத்துக் காட்டும் பேருண்மை சூரனை, வரம் தந்த தாமே அழிக்க முடியாது என்பதால் தாமே குமரனாகத் தம்மை நெற்றிக் கண்களிலிருந்து தோற்றுவித்துக் குமரனைப் பிறப்பித்தார்.

அந்த மகன் தந்தைக்கு ஆற்றும் கடமையை உலகுக்கு எடுத்துச் சொல்லுகிறார். எங்கே இருந்தாலும் தந்தையை பூஜிப்பது மகனின் கடமை என்று ஒரு மகனாக அறிவுறுத்துகிறார். தாம் தேவர்களின் அபிஷேக ஆராதனைகளை ஏற்றுக் கொண்டாலும் தந்தைக்குச் செய்யும் பூஜையை மறக்கவில்லை.

அதனால் மயனை அழைத்து தந்தையை பூஜிக்க சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து நம்மை வழிபடுத்தினார்.

தந்தைக்கு மயன் அமைத்த கோயிலில் மனம் குளிரக் குளிர பூஜை செய்த குமரக் கடவுள் பிறகு செவ்வேள் செந்திலை விட்டுப் புறப்பட்டார். பரிவாரங்கள் தொடர மயில் வாகனத்தில் ஏறி மதுரைத் திருநகரின் மேற்திசையில் விளங்கும் திருப்பரங்குன்றத்தினை வந்தடைந்தார்.

அங்கே பராசர முனிவரின் புதல்வர்கள் அனைவரும் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்து கந்தரின் கழலடியைப் பணித்தனர். தேவர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.

“சுவாமி, தேவரீர் இங்கு வீற்றிருந்தருள வேண்டும். இது ஓர் உயர்ந்த இடம்’ என்று கூறினர்.

அவர்களுடைய வேண்டுகோளை ஏற்ற முருகவேள், தேவதச்சனை அழைத்தார். தேவதச்சன் வந்து குமரப் பெருமானை வணங்கித் துதித்து நின்றான்.

“இந்த இடத்தில் பெரிய கோயிலையும் நகரத்தையும் அமைத்துத் தருவாய்’ என்று பணித்தருளினார்.

குமரக் கடவுளின் திருவுளக்குறிப்பை ஏற்ற தேசதச்சன் திருப்பரங்குன்றத்தில் அதி அற்புதமான ஆலயத்தை ஆறு முகத்தண்ணல் தங்குவதற்கு ஏற்ப அமைத்தான். எம்பெருமான் தேவர்களும், முனிவர்களும் தொழும்படி அபிஷேக ஆராதனைகளை ஏற்று அங்கே எழுந்தருளினார்.

அவருடைய திருவுளக் குறிப்பை இங்கு காண வேண்டும். அருகே மதுரை மாநகரம் உள்ளது. அங்கே அப்பன் ஆலவாய் அழகனாக அங்கையற்கண்ணி அம்மையாருடன் கோயில் கொண்ட நான்மாடக்கூடல். அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த கூடல் மா நகர்.

முருகப் பெருமான் அம்மையப்பனின் நடுவே அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதை சோமஸ்கந்த மூர்த்தம் என்பார்கள். அடிக்கடி அம்மை அப்பனை தரிசிக்கும் நோக்கத்தில் கோயில் கொண்டுள்ளாரோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

திருப்பரங்குன்றத்தில் பராசர முனிவரின் புதல்வர்களுக்கு ஞானோபதேசமும் செய்தார். பின் அவரவர் இருப்பிடத்திற்குச் செல்லும்படி பணித்தருளினார். இன்னும் ஒரு செயல் மீதி இருப்பதை உணர்ந்தார். தம்பி வீரவாகுவை நோக்கினார்.

வீரவாகுத் தேவர் அண்ணலின் திருவுருக் குறிப்பை அறிந்து வந்து வணங்கினார்.

“வீரவாகு, தேவேந்திரனின் பொன்னுலகை மீண்டும் பழையபடி கற்பக நகரமாக்க வேண்டும். அதில் மீண்டும் தேவேந்திரனும், தேவர்களும் குடியேற வேண்டும். தேவேந்திரனுக்கு அமராவதிப் பட்டினத்தை அளித்து முடி சூட்ட வேண்டும்’ என்றார்.

ஆறுமுகத்தண்ணலின் ஆணையை ஏற்று வீரவாகுத் தேவர், தேவதச்சனை அழைத்து அமராவதிப் பட்டணத்தை முன்போலவே பொன் நகரமாக ஆக்கித் தர வேண்டும் என்று குமரப் பெருமானின் திருவுளக் குறிப்பை உணர்த்தினார்.
பொன்னமராவதி நகர் மீண்டும் பொலிவுற்றது. தேவர்கள் சூழ இந்திரன் பொன்னமராவதிப் பட்டினத்தில் குடியேறினான். அவன் மனத்தில் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்தது. தன் பகைவனாகிய சூரபத்மனை சங்கரித்து பொன்னுலக அரசாட்சியைக் கொடுத்தருளிய கந்தவேளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

தேவேந்திரப் பட்டினத்தை அளிக்கலாமா! குமரக்கடவுள் குழந்தையாக இருந்து திருவிளையாடல் புரிந்த பொழுதே தேவர்கள் சேனாதிபதியாகப் பட்டம் கட்டியாகி விட்டது. இந்த தேவேந்திரப் பட்டணமே அவன் தேவேந்திரனுக்கு அளித்த சன்மானம். வேறு எதைக் கொடுப்பது?

“தேவேந்திரா, உன் மனத்தை ஏதோ பெரிய சஞ்சலம் அசைக்கிறது போல இருக்கிறதே’
“புரிந்து கொண்டீர்கள். சூரனை சம்ஹரித்துப் பொன்னமராவதியை மீட்டுக் கொடுத்தவருக்கு ஏதோனும் பரிசு தர வேண்டும்.’

“என்ன தரப்போகிறாய் தேவேந்திரா?’

“என் மகள் தெய்வானையை குமரக் கடவுளுக்குப் பரிசாகத் திருமணம் செய்து தரலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று தேவேந்திரன் கூறியதும், தேவர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

பரத நாட்டிய வரலாறு



ரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை "கூத்து" என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.

கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.இவர்களது வாழ்க்கைப்பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும்,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல்,

ப -பாவம்,
ர - ராகம்,
த - தாளம்
என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.


பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும்

"ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும்,

"ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும்,

"த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது.




கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது.

ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.


இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.


அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.


பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பாரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர். இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது 'தாண்டவம்' என பெயர் பெற்றது.

பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது.


உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன...