Monday 5 November 2018

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 17

மிழகத்தில், முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பலவற்றில், சூரனை சம்ஹரித்த நிகழ்ச்சி, வெகு விமரிசையாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கந்த சஷ்டி விரதமும், விழாவும் நம்மில் பலரோடு இரண்டறக் கலந்தவை. இந்த நாட்களில், கந்தக் கடவுளையும் சூரசம்ஹார நிகழ்ச்சியையும் தரிசிப்பது சிறப்பு என்கின்றன புராணங்கள் !

சூரபதுமனை அழிக்க முருகக்கடவுள் படை திரட்டினார். படை வீரர்களுடன் அவர், தலங்கள் பலவற்றிலும் தங்கிச் சென்றார். அப்படி வருகிற வழியில், சிவபூஜை செய்வதற்காக முருகக் கடவுள் தங்கிய திருவிடம், திருப்படையூர் என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் திருப்படவூர், திருப்பிடவூர் என்றெல்லாம் மருவி, தற்போது திருப்பட்டூர் எனப்படுகிறது. குருவின் கடாட்சம் பூரணமாக நிறைந்திருக்கிற அற்புதத் திருவிடம் திருப்பட்டூர் என்பதைப் பார்த்தோம், அல்லவா ? இத்தகைய பெருமை யும் சாந்நித்தியமும் குடிகொண்டிருக்கிற திருத்தலத்தில்தான், ஸ்ரீமுருகப் பெருமானும் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.

அதென்ன... சிவாலயங்களில் முருகக்கடவுளுக்கு சந்நிதி இருக்கத்தானே செய்யும், அதில் என்ன அதிசயம் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால், குரு பிரம்மா தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிற திருத்தலம் அல்லவா இது! குரு பிரம்மாவும், குரு விஷ்ணுவும், குரு பரமேஸ்வரனும் தரிசனம் தந்து அருளாட்சி செய்கிற இந்தத் திருப்பட்டூரில்... அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா எனப் பெயர் பெற்ற, பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த, ஞானகுரு என்று அனைவராலும் போற்றப்பட்ட கந்தப் பெருமானும் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பதால், குருமார்கள் அனை வரின் அருட்கடாட்சமும் ததும்பி நிற்கிற திருவிடமாக மகிமை பெற்றிருக் கிறது திருப்பட்டூர். இங்கே, அழகன் முருகன் காட்சி தருகிற விதத்தில் ஒரு சிறப்பு உண்டு.

பொதுவாக, முருகக்கடவுளின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருப்பது போலத்தான், விக்கிரகத் திருமேனி வடிக்கப்பட்டிருக்கும். இந்த மயிலை, தேவ மயில் என்பார்கள். இந்தத் திருப்பட்டூர் தலத்தில், அழகன் முருகனின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் இருப்பது போல், விக்கிரகத்திருமேனி வடிக்கப்பட்டிருக்கிறது. காண்பதற்கு அரிதான திருக்கோலம் இது என்கின்றன ஞானநூல்கள்.


அதேபோல், இடது கரத்துக்குக் கீழே முகம் காட்டுகிற மயிலை, அசுர மயில் என்று சொல்வார்களாம். சூரபதுமனை அழிப்பதற்காகப் படை திரட்டி, தங்கிச் சென்ற திருப்படையூர் என்கிற திருப்பட்டூர் திருத்தலத்தில், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற அற்புதக் கோலத்துடன் முருகப்பெருமானைத் தரிசிப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர் அன்பர்கள்.
கந்தக் கடவுள், ஞானகுரு; பூமிகாரகன்; செவ்வாய்க்கு அதிதேவதையும் இவரே! எனவே, இந்தத் திருவிடத்துக்கு வந்து, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம் !
அதுமட்டுமா ?

தேவர்களையும் முனிவர்களையும் உலக மக்களையும் கொடுமைப்படுத்திய சூரபதுமனை அழித்து, அந்த அசுரனை மயிலாக்கி அமர்ந்திருக்கிற முருகப்பெருமானைப் பணிந்து தொழுதால், எப்பேர்ப்பட்ட எதிரிகளாயினும் நம்மை விட்டு பலகாத தூரம் தெறித்து ஓடிவிடுவார்கள்; அவர்களின் அத்தனை சூழ்ச்சிகளும் தவிடுபொடியாகிவிடும்.

செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை தரிசியுங்கள். மாதந்தோறும் சஷ்டி அல்லது கிருத்திகை ஆகிய நாட்களில், இங்கு வந்து கந்தக் கடவுளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, வழிபடுங்கள். செவ்வாய் தோஷம் முதலான சகல தோஷங் களும் விலகிவிடும்; சந்தோஷங்களுக்குக் குறைவிருக்காது என்பது நம்பிக்கை !

ஒருகாலத்தில், கந்த சஷ்டி வைபவம் இங்கு அமர்க்களப் படுமாம். ஆட்டுக்கிடா வாகனத்தில், அழகும் ஆவேசமும் ஒருசேர, நான்கு வீதிகளிலும் திருவீதியுலா வந்து, சூரபதுமனை அழிக்கிற வைபவம் நடந்தேறுகிற காட்சி, காண்போரைச் சிலிர்க்க வைக்குமாம்! இதைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர் திருப்பட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள்.

படைவீரர்களுடன் இங்கு தங்கி, முருகப்பெருமான் சிவ பூஜையில் ஈடுபட்டார் அல்லவா ? அப்போது அவருக்குத் திருக்காட்சி தந்து, 'வெற்றி உனக்கே !’ என அருளினார் சிவபெருமான். இங்கே, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார்.

புதிதாகத் தொழில் தொடங்கு வோர், வியாபாரத்தில் நஷ்டம் எனக் கலங்குவோர், இங்கு வந்து ஸ்ரீசுப்ர மணியருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வியாபாரத் தில் வெற்றி உறுதி. தொழிலில் மேலோங்கிச் செல்வார்கள் என்பது நிச்சயம் !

இன்னொரு சிறப்பும் உண்டு, இங்கேயுள்ள ஸ்ரீசுப்ரமணியருக்கு.
உலகில், தூக்கத்தில் கனவு காணாதவர்களும் இல்லை; விழித்துக் கொண்டிருக்கும்போது, 'வீடு வாங்குவதே என் கனவு’ என்று புலம்பாதவர்களும் இருக்க முடியாது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்கிற மனித வாழ்க்கையின் இந்த அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதான கனவு இல்லத்தை அருள்கிறார் இந்தத் தலத்தில் உள்ள முருகப்பெருமான்.

சஷ்டி, கிருத்திகை நாட்களில் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் (உங்களின் நட்சத்திர நாளில் வந்து தரிசிப்பதும் சிறப்பு), இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்யுங்கள். முடிந்தால், ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானைக்குப் புடவையும், ஸ்ரீசுப்ரமணியருக்கு வேஷ்டியும் சார்த்தி, வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் வாங்கியிருக்கிற மனை தொடர்பாக சிக்கல் ஏதேனும் இருந்தால், அவை விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்கு இருப்பின், விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

'இடமும் இல்லை; மனையும் வாங்கலை’ என்று புலம்புவராக இருந்தால்கூட, அடுத்தடுத்த காலகட்டத்தில், வீடு வாங்கும் யோகம் சட்டென்று தேடி வரும். சுபிட்சமும் அங்கே குடிகொள்ளும்!
உலகாயத வாழ்வில் வீடு யோகம் தருகிற முருகக் கடவுள், ஆன்மிகத்தின் நிறை நிலையான, 'வீடு பேறு’ எனும் அற்புதமான மோட்ச வரத்தையும் தந்தருளக்கூடியவர். தலையெழுத்தையே மாற்றி அருளும் திருத்தலமாம் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், மோட்சகதி நிச்சயம்.

வெற்றிவேல் முருகன் துணையிருக்க, இனி எல்லாமே ஜெயம்தான் !

No comments:

Post a Comment