சரணாகதிக்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய விபீஷணருக்கு உயர்ந்த பரிசு அளிக்க நினைத்தார் ஸ்ரீராமன். அதன்படி, இஷ்வாகு வம்ச குலதனமான... குல தேவதையாக வழிவழியாக திருவாராதனம் செய்து வந்த திருமால் விக்கிரகத்தை, பிரணவ வடிவமான விமானத்துடன் விபீஷணருக்கு அளித்தார் ஸ்ரீராமன்.
விபீஷணருக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமனின் முன்னோர் காலத்திலிருந்து ஆராதிக்கப்பட்டு வந்த திருமால் விக்கிரகத்தை, இலங்கையில் பிரதிஷ்டை செய்யப் போகும் பேரானந்தத்துடன் புறப்பட்டார். முன்னதாக, 'இந்தத் திருவாராதன விக்கிரகத்தை பூமியில் எங்கேயும் வைக்கக் கூடாது; அப்படிக் கீழே வைத்தால், அங்கேயே நிரந்தரமாக பிரதிஷ்டை ஆகிவிடும். அதனால், இலங்கைக்குச் சென்ற பிறகே, கீழே வைக்க வேண்டும்’ என விபீஷணரை எச்சரித்திருந்தார் ஸ்ரீராமன்.
அயோத்தியிலிருந்து வெகு தூரம் பயணித்து, தென் திசை அடைந்த விபீஷணர், காவிரியைக் கண்டார். அதன் பிரவாகத்தைக் கண்டு, அந்த நதியில் நீராட எண்ணினார். அந்த எண்ணத்தை ஏற்படுத்தியவர், விநாயகர்தான். ஏனெனில், இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும் திருமால் விக்கிரகத்தை இங்கேயே, இருபுறமும் நீர் சூழ்ந்து செல்ல, தீவு போன்று அமைந்திருக்கும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டும் எனத் திருவுளம் கொண்டார் விநாயகர். ஆகவே, தனது அருளாடலை ஆரம்பித்தார்.
ஒரு பாலகனாய் உருவம் கொண்டு காவிரிக் கரைக்கு வந்தார். அவரைக் கண்டதும், ''குழந்தாய்! நான் காவிரியில் நீராடிவிட்டு வரும் வரை, இந்த விக்கிரகத்தை நீ கையில் வைத்திருப்பாயா?'' என்று கேட்டார் விபீஷணர். பாலகனும் சம்மதித்தான். ஆனால், ''விக்கிரகத்தைக் கையில் வைத்துக் கொள்கிறேன். ஆனால், பாரம் தாங்கமுடியாமல் போனால் என்ன செய்வது? அப்போது, உங்களை மூன்று முறை அழைப்பேன். நீங்கள் வரவில்லை என்றால், தரையில் வைத்துவிடுவேன்!'' என்று நிபந்தனை விதித்தான். விபீஷணரும் ஒப்புக்கொண்டார். காவிரியில் இறங்கியவர், சூழலை மறந்து, மிக ஆனந்தமாக நீராடினார். சிறுவன், விபீஷணரை மூன்று முறை அழைத்தான். ஆனால், விபீஷணர் வரவில்லை. எனவே, விக்கிரகத்தை அங்கேயே தரையில் வைத்துவிட்டான் பாலகன். திருவிக்கிரகமும் அங்கேயே நிரந்தரமாக பிரதிஷ்டையாகிவிட்டது.
இந்த நிலையில் விபீஷணருக்கு சிறுவன் ஞாபகம் வர, அவசர அவசரமாக கரைக்கு வந்தார். அங்கே, விக்கிரகம் தரையில் வைக்கப் பட்டிருந்தது. சிறுவனும் அருகில் இல்லை. விபீஷணர் எவ்வளவு முயன்றும், விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அந்தச் சிறுவனின் மீது கடும் கோபம் வந்தது அவருக்கு.
தூரத்தில் சிறுவன் நிற்பது தெரிந்தது. அவனைப் பிடிக்க ஓடினார். அவன், இவர் கையில் அகப்பட்டால்தானே! ஓடிப்போய் மலைக் கோட்டையின் உச்சிக்கே சென்று விட்டான். விபீஷணரும் மலையுச்சியை அடைந்து, அந்தச் சிறுவனைப் பற்றி இழுத்து, அவன் தலையில் ஒரு குட்டுக் குட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மறுகணம், சிறுவன் தனது சுய ரூபத்தைக் காட்டினான். ஆமாம்... தும்பிக்கை யுடன் காட்சி தந்தார் கணபதி. அவ்வளவுதான்... விபீஷணரின் கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் மறைந்தது. விநாயகரிடம் மன்னிப்பு வேண்டினார் அவர்.
''விபீஷணரே! திருமாலின் விக்கிரகத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த தாக எண்ணாதே! திருமால், இங்கிருந்தபடியே இலங்கையைப் பார்த்து அனுக்கிரகம் செய்யும் வகையில், அவரின் விக்கிரகத்தைத் தெற்கு நோக்கியே வைத்திருக்கிறேன். திருவரங்கத்தில் பள்ளிகொண்ட இந்தப் பெருமாள், இனி அரங்கராஜன் எனப் போற்றப்படுவார்'' என்று அருள்புரிந்தார் விநாயகர்.
இப்படி, விபீஷணருடன் திருவிளையாடல் செய்து அருள்புரிந்தவர், திருச்சியில் மலைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார். இங்குள்ள ஸ்ரீதாயுமான ஸ்வாமி கோயிலின் 16 கால் மண்டபத்தில், திருமால் விக்கிரகத்தை விபீஷணர் எடுத்து வந்ததைக் காட்டும் தூண் சிற்பம் உள்ளது. ஸ்ரீதாயுமான ஸ்வாமி, தாயாகவே வந்து ரத்னாவதி எனும் வணிக குலப் பெண்ணுக்கு மகப்பேறு நோவு தீர்த்து அருள்புரிந்தவர். 'சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. இந்தக் கோயிலுக்கு மேற்புறம் ஸ்ரீஉச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 273 அடி உயரத்தில், இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு 417 படிகள் ஏறிச் செல்லவேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் பிராகார மண்டபத்தில் இருந்து திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, காவிரி கொள்ளிடம் ஆகிய இடங்களைக் கண்டு ரசிக்கலாம்.
ஒருமுறை, உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில், உங்களை உச்சத்துக்குக் கொண்டு செல்வார், அந்த கணபதி!
- பிள்ளையார் வருவார்...
No comments:
Post a Comment