Thursday, 27 July 2017

அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர் – தஞ்சாவூர்

கோரக்க சித்தருக்கு அருள்புரிந்த ஈசன் எழுந்தருளியுள்ள தலம் ; தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் சிவதலம் ; மகாலட்சுமியின் அவதார தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி : 0435-2467343 ;  0435-2467219

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

 மூலவர் : சித்தநாதேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் :  சௌந்தர நாயகி, அழகாம்பிகை

தல விருட்சம் :  பவளமல்லி

தீர்த்தம் :  சித்தநாத தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை :  சிவாகமம்

பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சித்தீஸ்வரம், நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம்.

ஊர் : திருநறையூர்

பாடியவர்கள்:  திருஞானசம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்: 🅱

நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.   - சுந்தரர்

🎸 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 65வது தலம். 🎸

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மார்கழி திருவாதிரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்

🌻 ஐப்பசி அன்னாபிஷேகம்

🌻 மகா சிவராத்திரி

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

🎭 மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.

🎭 "மழலை மகாலட்சுமி'  என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

🎭 சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது.

🎭 திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இத்தலத்தில் பிட்சாடனராக தரிசனம் தந்ததால் இவ்விறைவன் கங்காள தேவர் என அழைக்கப்படுகின்றார்.

🎭 இங்குள்ள நடராஜர் திருவாதிரை உத்ஸவத்தின் போது ஜடாமுடி விரித்து ஆடும் ஆனந்த நடனம் பிரசித்தி பெற்றது.

🎭 பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம்.

🎭 கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.

🎭 துர்வாசமுனிவரால் பறவை உருவச்சாபம் பெற்ற மனிதன் (நரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு 'நரவுரம்' என்றும் பெயர்.

🎭  பிரம்மன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும் சொல்லப்படுகிறது. சுகந்தவனம் என்பது வேறொரு பேர்.

🅱 நடைதிறப்பு: 🅱

🗝 காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். 🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 மேற்கு நோக்கிய தலம் இது.

🦋 இத்தலவிநாயகர் ஆண்டவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🦋 சவுந்தர்யநாயகி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.

🦋  மகாலட்சுமி சன்னதி அருகில் ஒரு தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.

🦋 கிரக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.

 🦋  பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு.

🦋 கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, "பிரசன்ன துர்க்கை' என்று அழைக்கப்படுகிறாள். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள்.துர்க்கையின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

🦋 அருகில் உமையொருபாகன், பிச்சாண்டவர், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர்.

🦋 பிரகாரத்தில் சப்தகன்னியர், பஞ்சலிங்கம், ஆண்டவிநாயகர், கால பைரவர், வீர பைரவர் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

🌹 தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🌹 புதன் கிழமை புத ஹோரையில் சித்தநாதேஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்வித்து, பித்ரு தோஷ பரிகாரம் தேடிக் கொள்கின்றனர்.

🌹 ஷண்முகருக்கு பிரதி செவ்வாய் கிழகைகளில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து விரோதிகளால் வரும் ஆபத்துகளிலிருந்து விடுபடுகின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தும் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🔥 நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர்.

🔥 தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.

🅱 மழலை மகாலட்சுமி:🅱

🔥 இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர்.

🔥 வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

🔥 பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதி முன்பு கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது இவளுக்கு 108 தாமரை மலர்களை படைத்து பூஜிக்கிறார்கள். இவளுக்கு அருகில் முருகன் தனிசன்னதியில் இருக்கிறார்.

🅱 கோரக்க சித்தர் வழிபாடு: 🅱

🔥 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், "சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

🔥 சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.

🅱 கோவில் அமைப்பு: 🅱

🔥 சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

🔥 திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், காசி விசுவநாதர், துவார கணபதி, ஆண்ட விநாயகர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து கால பைரவர், வீர பைரவர், சூரியன், விநாயகர், நாகம்மாள் ஆகியோர் உள்ளனர். அடுத்து சித்தலிங்கம், ரினலிங்கம், வாயுலிங்கம், தேஜஸ்லிங்கம், ஜோதிலிங்கம் ஆகியவை உள்ளன. ரினலிங்கத்திற்கும், தேஜஸ்லிங்கத்திற்கும் அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார்.

🔥 அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர், பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி வராகி, சாமுண்டா, வலம்புரி விநாயகர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, மேதா மகரிஷி, நடராஜர், வரசித்தி விநாயகர் ஆகியோர் உள்ளனர்.

🔥 ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது.

🔥 ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை.

🔥 கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது.

🔥 பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும்.

🔥 மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

🔥 இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள்.

🔥 குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

🔥 தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது.

🔥 மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.

🅱 தல வரலாறு: 🅱

⛱ மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.

⛱ மேதாவியின் பக்தியில் மகிழ்ந்த சிவன் திருமாலிடம், மகாலட்சுமியை மேதாவியின் மகளாக பிறக்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டார். திருமாலும் சம்மதித்தார். ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, திருமாலுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். மேதாவி மகரிஷிக்கு காட்சி தந்த சிவன், இத்தலத்தில் எழுந்தருளினார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ  அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

♻ முதலாம் இராஜஇராஜன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் வரையிலான மன்னர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக் கல்வெட்டுக்களில் இத்தலம் 'க்ஷத்திரிய சிகாமணி வளாநட்டு, திருநறையூர் நாட்டுத் திருநறையூர்' என்றும் குறிக்கபட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர்" என்றும், "பஞ்சவன் மாதேவியான சதுர்வாதி மங்கலத்துத் திருநறையூர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

♻ இக்கல்வெட்டுக்களிலிருந்து
 (1) பிட்சாடனருக்கு நிவேதனம் செய்யப் பொன் தந்தது
(2) நாளன்றுக்குச் சிவயோகியார் ஒருவருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக் கருப்பூர் உடையான் என்பவர் நிலம்விட்டது
(3) கோயிலில் விளக்கெரிக்க நிலங்கள் வழங்கியது போன்ற செய்திகள் தெரியவருகின்றன.

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இருக்கிறது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், திருக்காலிமேடு - காஞ்சிபுரம்


செம்மணலால் ஆன லிங்கத் திருமேனி கொண்ட சிவன் : இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட சிவ ஆலயம்.

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி : + 044 - 27232327, 27221664

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர்

அம்மன்/தாயார் : பிரமராம்பிகை

தல விருட்சம் : காரைச்செடி

தீர்த்தம் : இந்திர, சத்யவிரத தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கச்சிநெறிக்காரைக்காடு

ஊர் : காஞ்சிபுரம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்


🅱 தேவாரப்பதிகம்: 🅱

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள் மறைநவின்ற பாடலோடு ஆடலராய் மழுவேந்திச் சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும் நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்கரைக் காட்டாரே. - திருஞானசம்பந்தர்

🎸 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 5வது தலம். 🎸

🅱 திருவிழாக்கள் :🅱


🌻 மார்கழி திருவாதிரை

🌻 சிவராத்திரி

🌻 அன்னாபிஷேகம்

🅱 தல சிறப்பு:🅱

🎭 இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார்.

🎭 அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது.

🎭 நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு.

🎭 காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது.

🎭 ஆனால், இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை என்பது சிறப்பு.

🎭 சோழர் காலத்துக் கட்டுமானம்.

🎭 ”திருக்காலீசுவரர் கோயில்” என்றே மக்கள் இதனை அழைக்கின்றனர். ஒரு காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரும் வழியாக இந்த பாதை அமைந்திருந்து, காரைச் செடிகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் “காரைக்காடு” எனும் பெயர் நிலைத்தது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு: 🅱

🗝 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்..🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 இறைவன் - சத்தியவிரதேஸ்வரர். (இப்பெயரையட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேதத்திரம்' என்ற பெயருண்டாயிற்று) மேற்கு நோக்கிய சந்நிதி. பழைமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளை உடையது. எதிரில் நந்தியும் - கவசமிட்ட கொடி மரமும் உள்ளன.

🦋 உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. இடப்புறமாக வலம் வருகிறோம். சந்நிதிகள் ஏதுமில்லை. வலமுடிந்து வாயிலில் நுழையும்போதும் இட்ப்புறமாக உள்ள நவக்கிரக சந்நிதியைக் காணலாம்.

🦋 உள்ளே சென்று உட்பிரகாரத்தை வலமாக வரும்போது முதலில் அம்பலக்கூத்தர், சிவகாமியுடன் ஆனந்தமாகக் காட்சி தருகின்றார். அற்புதமான திருமேனி. அடுத்து நால்வர், இந்திரன், புதன், பைரவர் மூலத்திருமேனிகள் காட்சியளிக்கின்றன.

🦋 விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அடுத்து கஜலட்சமி, நீலகண்ட சிவாசாரியார் மூலத் திருமேனிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர், சண்டேசவரர், சந்திரசேகரர், பிரதோஷ நாயகர், நால்வர் ஆகிய உற்சவத் திருமேனிகள் மிகவும் அழகுடையவை. அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, ஆகியோர் உள்ளனர்.

🦋 துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் திரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம்.

🦋 மூலவர் சுயம்புமூர்த்தி, சற்று உயர்ந்த பாணம் லேசான செம்மண் நிறத்தில் காட்சியளிக்கிறது. பக்கத்தில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 சிவனிடம் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் நிறைவேறும்.

🌹 புதன்கிழமைகளில் தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்யம் படைத்து "ஞானகாரகன்' எனப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், அறிவு கூடும், மொழியில் புலமை, பேச்சுத் திறமை, உண்டாகும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு பூஜைகள் செய்யலாம்.

🅱 தலபெருமை:🅱

🌻 தலப் பெயர் காரணம்: 🌻

🔥 இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற் பெயருடனும், இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் வழங்குகின்றது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.

🔥 நூறு அசுவமேத யாகங்கள் செய்தால், தான் சங்குசக்கரத்துடன் அர்ச்சாவதாரத்தில் காட்சி தருவதாக பிரம்மதேவனிடம் திருமால் கூறினார். நூறு அசுவமேத யாகங்கள் செய்ய நெடுங்காலம் ஆகும் என்பதால், “சத்யவிரத க்ஷே த்திரமாகிய” காஞ்சிபுரம் சென்று ஒரே ஒரு முறை யாகம் செய்யுமாறு பணித்தார். காஞ்சிபுரத்தில் செய்யும் புண்ணியம் நூறு மடங்காகப் பெருகும் என்பது தேவரகசியம்.

🔥 காரைக்காட்டில் எழுந்தருளியுள்ள சத்யவிரதேசுவரரின் பெயரை யொட்டியே, காஞ்சி நகருக்கு “சத்யவிரத க்ஷே த்திரம்” என்ற பெயர் நிலைத்தது என்று காஞ்சிபுராணம் கூறுகிறது. திருத்தலத்தின் பெயரையே கொண்டுள்ளதால் “சத்யவிரதேசுவரர்” தனிச் சிறப்பு பெறுகிறார்.

🔥 இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையிலுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால் மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பவர்கள் இத்தலம் வந்து புதன்கிழமை இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி காரைக்காட்டு ஈஸ்வரரை வணங்குதல் சிறப்புடையது. புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

🎸 ஏழு சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: 🎸

🔥 பொதுவாக தெட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். ஆனால், இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம்.

🔥 பிரகாரத்தில் புதனுக்கு அருகில் இந்திரன் இருக்கிறார். பிரஹஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் கல்வி கற்ற சந்திரன், அவரது மனைவியான தாரையை குருபத்தினி என்பதையும் கருதாமல் அவள்மீது ஆசை கொண்டான். ஒருசமயம் அவன் மகாவிஷ்ணுவின் அருள் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் வியாழன், தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன் அவளை மயக்கி அவனுடனே இருக்கச் செய்துகொண்டான்.

🔥 சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன். பிரஹஸ்பதி, சிவனிடம் முறையிட்டு தாரையை கூட்டிச் சென்றார். புதனை சந்திரனே வளர்த்து வந்தார். புதன் பெரியவனாகியதும் தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனை பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து, தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

🅱 தல வரலாறு: 🅱

⛱ தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று, சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார்.

⛱ இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன், அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்று அவளை ஏமாற்றி காமுற்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர், ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர், அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு, அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி, "காரைத்திருநாதர்' என்ற பெயரும் பெற்றார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ மேற்கு நோக்கிய சந்நதி கொண்டு அமைந்ததால், பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

♻ இந்திரன், இங்கே ஒரு புனித தீர்த்தத்தை நிறுவி, ஈசனை வழிபட்டுள்ளதால், “இந்திரபுரி’ என்றும் பெயர் உண்டு.

♻ நவகிரகங்களில் புதன் வழிபட்டு, கிரக நிலையை அடைந்ததால் புதன்கிழமையன்று இந்திர தீர்த்தத்தில் நீராடி, காரைக்காட்டீசரை வணங்குவது, நல்ல பலன் தரும். புதன் பரிகாரத்தலம் இது.

♻ இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🅱 இருப்பிடம்:🅱

✈ காஞ்சீபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் - தஞ்சாவூர்

சேக்கிழாரின் அபிமான சிவஸ்தலம் ; ராகு சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் ; நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் ; நாகத்திற்கு சிவன் அருள் செய்த புண்ணிய தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி எண் : +91- 435-246 3354 ; 94879 76434 ; 94431 90628.

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋



மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர், செண்பகாரண்யேஸ்வரர்.

உற்சவர் : ராகு பகவான்

அம்மன்/தாயார் : குன்றமாமுலையம்மை , பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை)

தல விருட்சம் : செண்பகம்


தீர்த்தம் : நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன.


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : திருநாகேச்சுரம், செண்பகவனம், கிரிகின்னிகைவனம்

ஊர் : திருநாகேஸ்வரம்

பாடியவர்கள் : அப்பர், சுந்தரர், சம்பந்தர்

 
🅱 தேவாரப்பதிகம்:🅱

அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும் வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. - சுந்தரர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். 🌱

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 மகாசிவராத்திரி (1008 சங்காபிஷேகம்)

🌻 மார்கழி திருவாதிரை

🌻 பங்குனிஉத்திரம்

🌻 திருக்கார்த்திகை

🌻 கார்த்திகைக் கடை ஞாயிறு – பெருவிழா

🌻 ராகு பெயர்ச்சி

🌻 சித்திரை சிங்காரவேலர் புறப்பாடு,

🌻 வைகாசியில் சேக்கிழார் பூசவிழா,

🌻 விசாகப்பெருவிழா,

🌻 ஆனித் திருமஞ்சனம்,

🌻 ஆடிப்பூரம்,

🌻 விநாயக சதுர்த்தி,

🌻 நவராத்திரி,

🌻 கந்தசஷ்டி விழா

🌻 தை கிரிகுஜாம்பாள் புனுகு காப்புத் திருவிழா,

🌻 ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭  இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 இத்தலத்தின் மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

🎭 கிரிகுஜாம்பிகை  காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.

🎭 இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.

🎭 இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர்.

🎭 பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.

🎭 இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்

🎭 விநாயகர் இங்கு வழிபட்டு கணங்களுக்கு பதியாகும் பதவி பெற்றார்.

🎭 தலவிநாயகர் - செண்பக விநாயகர் எனப்படுகிறார்.

🎭 காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.

🎭 கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.

🎭 இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.

🎭 ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்),
  கௌதமர்,  நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்ட தலம்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 92 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🗝

பூஜை விவரம் :  ஆறு கால பூஜை.

🎸 காலை 6 மணிக்கு  - உச்சி கால பூஜை

🎸 காலை 9 மணிக்கு  -  காலசந்தி பூஜை

🎸 நண்பகல்  1 மணிக்கு - உச்சி கால பூஜை

🎸 மாலை 5 மணிக்கு - சயரக்ஷ பூஜை

🎸 இரவு 7 மணிக்கு  - இரன்டாம் கால பூஜை

🎸 இரவு 9 மணிக்கு  - ஆர்தஜாம பூஜை

🅱 பொது தகவல்:🅱

🦋 பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது.

🦋 நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன.

🦋 நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது.

🦋 சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது.

🦋 சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன.

🦋 இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.

🅱 ராகு குட்டித்தகவல்: 🅱

🦋 அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

🌹 இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.

🌹 நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌺 முத்தேவியர் தரிசனம்: 🌺

🔥 அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர்.

🔥 பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர்.

🔥 மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது.

🔥 தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

🅱 ராகு வரலாறு:🅱

🔥 ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.

🔥  நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம்.

🔥 கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.

🅱 தோஷ பரிகாரம்:🅱

🔥 இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின் போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.

🔥 தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின் போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.

🎸 சிறப்பம்சம்: 🎸

🔥 கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

🅱 கோவில் அமைப்பு:🅱

🌺 ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு செண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது.

🌺 ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர்.

🌺 இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

🌺 கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.

🌺 அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்

🌺 இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை"சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

🌺 கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை.

🌺 தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.

🌺 பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன

🌺 இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

🌺 இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

🌺 இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான்.

🌺 சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது.

🌺 கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும்.

🌺 பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

🌺 பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது.

🌺 ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை  என்பது பழமொழி.

🌺 காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.

🅱 தல வரலாறு:🅱

⛱ சுசீலர் என்ற முனிவரின் மைந்தன் சுகர்மன். அந்த வழியே சென்ற நாகங்களின் அரசனான தக்ககன் சுகர்மனை தீண்டியது. இதனால் கோபம் அடைந்த  சுசீலர், அந்த நாக அரசன் தக்ககனை மானிடனாகப் பிறக்கும்படி சபித்தார். தன் சாப விமோசனத்திற்கு காசிப முனிவர் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து லிங்க  பிரதிஷ்டை செய்து ஈசனிடம் தினமும் வழிபட, சிவபெருமான் காட்சி தந்து சாப விமோசனம் தந்த புனித தலம் இது ஆகும்.

⛱ நாக அரசன் தக்ககனுக்கு இடர் நீத்ததால் இத்தல ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயர் பெற்றார். அன்னையின் பெயர் பிறை அணி வாநுதலாள் ஆகும். சிவராத்திரியின் பொழுதுதான் ராகுவுக்கு காட்சி தந்ததால் ஒவ்வொரு  சிவராத்திரியிலும் இரண்டு கால பூஜையும் ராகுவே செய்வதாக ஐதீகம்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  மூலவராக சிவபெருமான் நாகநாதராக லிங்க ரூபத்தில் வீற்றிருக்கிறார். சிவபெருமானின் உமையாள் பார்வதி தேவி பிறைசூடி அம்மனாக காட்சிதருகிறார்.

♻ சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு, காளஹஸ்தி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறார். இருந்தபோதிலும், இந்த கோவிலின் ராகு பெருமான், தன் மனைவிகளாகிய சிம்ஹி, சித்ரலேகா ஆகியோருடன் மங்கள ராகுவாக தம்மை வந்து வணங்குவோருக்கு அதிக பலன்களையும் நலன்களையும் அள்ளி தருகிறார் என்கின்றனர்.

🅱 இருப்பிடம்:🅱

✈ தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ.தூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி - நாகப்பட்டினம்

பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தரும் சிவமைந்தன் ; கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் ; வான்மீகர் என்ற சித்தர் சமாதியான முருகன் குடிக்கொண்டு இருக்கும் சிவஸ்தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைப்பேசி : +91- 4366-245 426 ; 9489260955

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋


மூலவர் : சௌந்தரேஸ்வரர் , முருகன்


உற்சவர் : வேலவன்


அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி , வள்ளி , தெய்வயானை


தல விருட்சம் : வன்னி மரம் , எட்டி மரம்


தீர்த்தம் : சரவணப்பொய்கை தீர்த்தம்


பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : காஞ்சிரங்குடி , எட்டிப்பிடி , எட்டிக்குடி

ஊர் : எட்டுக்குடி


பாடியவர்கள்: அருணகிரிநாதர்

 
🅱 திருப்புகழ்:🅱


ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை

ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்

வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி

வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்

மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா

காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே

காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே. - அருணகிரிநாதர்

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சித்ரா பவுர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும்.
பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பவுர்ணமிக்கு முதல் நாள் தேரோட்டம் நடத்தப்படும். இவ்விழாவில்   பால்காவடிகள் எடுத்து வருவது மிக விசேஷம்.

🌻 ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள்

🌻 வைகாசி விசாகம் ஒரு நாள் விழா

🌻 மார்கழி திருவாதிரை

🌻 மாத கார்த்திகை

🌻 தெய்வயானை மற்றும் வள்ளி திருக்கல்யாணங்கள்

🌻 நவராத்திரி

🌻 பங்குனி உத்திரம்
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭   இது சிவத்தலம்  சுப்ரமணியசுவாமியே பிரதான இறைவனாக இருக்கிறார்.

🎭 மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் சௌந்தரேஸ்வரர்.

🎭 சுயம்பு மூர்த்தம் , ஔி வீசும் அழகிய தேஜோ மயத் திருமேனி.

🎭 எட்டி மரத்தின் கீழ் அமர்ந்து தவமிருந்த அம்பிகைக்கு அழகான திருமேனியுடன் தரிசனம் தந்ததால், சௌந்தரேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.

🎭 அம்பாள் ஆனந்தவல்லி மிகுந்த வரப்ரசாதி.

🎭 தவத்தின் பயனும் பலனும் உடனே கிடைத்ததால் ஆனந்தம் கொண்ட அம்பிகை என்பதால் ஆனந்தவல்லி எனும் பெயர் கொண்டாள்.

🎭 ஆறுமுகமும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு, மயில் மீது அமர்ந்திருக்கும் வடிவேலன் அற்புதமான அழகுடன் காணப்படுகின்றார்.

🎭 இருபுறமும் வள்ளி - தெய்வயானை திருவுருவங்கள் நின்ற திருக்கோலம்.

🎭 ஒப்புயர்வு இல்லாத இந்த அழகு திருவுருவங்கள் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

🎭 சிறப்பு மூர்த்தமான இவரால் இத்தலம் பெருமையும் பிரசித்தமும் பெற்றது.

🎭 இத்தலத்தில் முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக இருப்பதால் போர் கோலத்தில் காட்சி தருகிறார்.

🎭 வன்னி மரத்தடியில் வான்மீகரின் சமாதி உள்ளது.

🎭 எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு.

🎭 தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் என்பர்.

🎭 இங்குள்ள முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதமர்ந்து காட்சி தருகிறார்.

🎭 இந்த மூவரும் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின்மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது அதிசயம் !

🎭 வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.

🎭 கோயிலுக்குள் வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது.

🎭 பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.

🎭 அருணகிரிநாதரின் திருப்புகழ் கொண்ட ஸ்தலம்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..🗝

🌻 சிறப்பு பூஜை:🌻

💦 இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

💦 எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும்.

💦 எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்தால் பலன் வேறு மாதிரியாக அமையும். தேய்பிறை சஷ்டி அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இப்பூஜையை செய்வார்கள். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

🅱 பொது தகவல்:🅱

🦋 ஆறுபடை வீடுகொண்ட முருகப்பெருமான், அகில உலகத்தவருக்கும் அருளும் வகையில், எண்ணற்ற கோயில்களில் குடி கொண்டிருக்கிறார். அவற்றில், எட்டுக்குடி திருத்தலமும் ஒன்று !

🦋 ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் திருத்தலங்கள் போற்றப்படுகின்றன.

🦋 இந்த வரிசையில் 8-வதாகத் திகழ்கிறது எட்டுக்குடி ஆலயம் !

🦋 பிரகாரத்தில் முருகனுடன் போருக்கு சென்ற நவ வீரர்களுக்கு சிலை இருக்கிறது.

🦋 கூத்தாடும் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. அதாவது குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.

🔥 கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது.

🔥 சௌந்தரேஸ்வரர் , ஆனந்தவல்லித் தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர்.

🔥 பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான்.

🔥 சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

🅱 சித்தர் வான்மீகர் ஜீவசமாதி:🅱

🥀 வான்மிக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார்..

🥀 வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..

🥀 வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் .போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறுக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..
உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்.. தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..

🥀 வான்மிக சித்தரின் மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் உள்ளது.. அடுத்து இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார்.

🅱 எட்டுக்குடி முருகன் வரலாறு : 🅱

Ⓜ நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும்.

Ⓜ அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி.

Ⓜ அப்போது அந்த பக்கமாக வந்த அந்நாட்டுஅரசன் சிற்பி தயாரித்துக் கொண்டிருக்கும் முருகனின் சிலையில் உயிர் ஓட்டம் இருப்பதை உணர்ந்து அதிசயித்தார். இந்த சிற்பி இப்படி ஒரு உயிர் ஓட்டம் உள்ள சிலையை வேறு எங்கும் இது மாதிரி சிலையை உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில அந்த சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி விட்டார்.

🅱 மனம் தளராமல் சிற்பி செதுக்கப்பட்ட கற்சிலை மயில் பறந்தது:🅱

Ⓜ இனி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்ற முடிவு செய்த சிற்பி, அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். சோழமன்னரால்  சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது.

Ⓜ ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, “ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார்.

Ⓜ அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.

Ⓜ இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று,   “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.

Ⓜ இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். அரசர் வந்த சமயம் அந்த சிற்பி, மயில் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார். மன்னரை கண்டதும் கற்சிலை மயில் பறக்க ஆரம்பித்தது.

Ⓜ இதை கண்ட அரசர், தன் அருகில் இருந்த காவலர்களிடம் “மயிலை எட்டிப்பிடியுங்கள்“ என்றார். ஆனால் அந்த கற்சிலை மயில் காவலர்களுக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டியது. இதனால் சினம் அடைந்த காவலர்கள் கோபமாக அந்த கற்சிலை மயிலை பிடிக்க முயற்சித்ததால் அந்த கற்சிலை மயிலில் கால் சிறியதாக உடைந்தது. பிறகு தாமாகவே அந்த கற்சிலைமயில் முருகன் சிலை அருகே வந்து அமர்ந்தது.

Ⓜ இந்த முருகன் சிலை தான் எட்டுக்குடி சௌந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது. (இதையடுத்து,  மூன்றாவதாகச் செய்த விக்கிரகம் குடிகொண்டிருப்பது, எண்கண் திருத்தலத்தில் என்பர். முதலாவது விக்கிரகம், சிக்கல் திருத்தலத்தில் உள்ளது)

Ⓜ ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன்  பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

🅱 தல வரலாறு:🅱

⛱ ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார்..

⛱ ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்குப் பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டுக் கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாகக் கூறினாள்.

⛱ 'கேதார கவுரி' விரதத்தை அனுஷ்டித்துப் பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்' என்று வழி சென்னார் வால்மீகி.
எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று 'கேதார கவுரி' விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை இருத்தினார்.
ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம்.

⛱ பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சௌந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும்.

⛱ கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சிவ- பார்வதியர், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசௌந்தரநாயகராக அருள்கின்றனர்.

♻ சூரபதுமனை அழிப்பதற்காகத் தோன்றியவர் என்பதால், அம்பறாத் தூணியில் இருந்து அம்பினை எடுக்கும் தோரணையில், வீர சௌந்தர்யத்துடன் காட்சி தருகிறார், ஸ்ரீசுப்ரமணியர்.

♻ சூரனை அழித்த கதையை குழந்தைகளுக்குச் சொல்லி, எட்டுக்குடி முருகனை மனதாரப் பிரார்த்தித்தால், குழந்தைகள் பயம் விலகி, தைரியம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

♻ எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

♻ முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, 'எட்டிப்பிடி' எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர்.

♻ சிறப்பு பெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 'எட்டிப்பிடி' என்ற வார்த்தையே காலப்போக்கில் 'எட்டுக்குடி' என்று ஆனதாகவும் ஒரு கூற்று உள்ளது.

♻ இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள்.

♻ பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது.

♻ சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார்..

🅱 இருப்பிடம்:🅱

✈  நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டுக்குடி சிவஸ்தலம்.

✈ திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டுக்குடி.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Sunday, 16 July 2017

இஞ்சிக்குடி ஈசனுக்கு வைகாசி பிரம்மோற்ஸவம் !


யிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ளது இஞ்சிக்குடி கிராமம். ஆதியில் சந்தனக் காடாகத் திகழ்ந்ததாம் இந்த ஊர். இங்கே, துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்ததால், அவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள், மதலோலை எனும் அரக்கி. அதன் விளைவாக அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், ஈன்றதும் இறந்து போனாள்.
வளர்ந்து பெரியவர்களான அசுரர்கள், கொடுமைகள் பல புரிந்தனர். அதைப் பொறுக்க முடியாமல் சிவனாரிடம் தஞ்சம் புகுந்தனர் தேவர்கள். ஈசன் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். அவரின் குறிப்பறிந்த அம்பிகை,  அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்தவள், அரக்கர்கள் முன் தோன்றினாள். இருவரும் அவள் மீது மையல் கொண்டனர். இந்த நிலையில், வயோதிக அந்தணராக வந்தார் பெருமாள். அசுரர்களிடம் சென்று, ''ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள்'' என்று கூறிச் சென்றார்.
அவ்வளவுதான்... அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை துவங்கியது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான். அப்போது, மகா காளியாக உருவெடுத்து நின்றாள் தேவி. பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான். அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பிகை. அசுர வதம் முடிந்ததும், ''உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள். தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில் இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து, மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட ஆரம்பித்தாள். உரிய காலம் வந்ததும் சிவனார் தோன்றி, தேவியை தன் இடப்பாகத்தில் ஏற்றார். இப்படி, பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு ஸ்ரீபார்வதீஸ்வரர் என்று திருநாமம். அம்பாள்- ஸ்ரீதவக்கோல நாயகி. உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், ஸ்ரீசாந்த நாயகி என்றும் போற்றுவர். ஸ்ரீலலிதாம்பிகை என்றும் ஒரு பெயருண்டு. பெருமாளும் ஸ்ரீஆதிகேசவர் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
அதுமட்டுமா? கண்ணையே அர்ப்பணித்த கண்ணப்ப நாயனார் சிவனருள் பெற்றதும், அருணகிரியாருக்கு முருகனின் திருக்காட்சி கிடைத்ததுமான அற்புதத் தலம் என்கின்றன புராணங்கள். குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க, அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை.
ராஜராஜ சோழனின் பேரன் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவது விசேஷ அமைப்பு. ஆகவே, இங்கு வந்து வழிபட, கிரகதோஷங்கள் விலகும் என்கிறார்கள். தவிர, இங்கு திருமணக் கோலத்தில், இல்லாள் ஸ்ரீசண்டிகேஸ்வரியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீசண்டிகேஸ்வரர். ஆக, இங்கு வந்து பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு!  
வைகாசி மாதம் வெகுகோலாகலமாக பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது இந்த க்ஷேத்திரத்தில். பெரும் புண்ணியம் நல்கும் திருவிழா இது என்கிறார்கள் பக்தர்கள்.

தீராத நோய் தீர்க்கும் தீர்த்தக் குளம்!



தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன், திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு  காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
சென்னை- திருப்போரூருக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் - ஸ்ரீஉத்திர வைத்தியலிங்கேஸ்வரர். அம்பாள் - ஸ்ரீதையல்நாயகி.
ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க, ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர் எனும் திருநாமமும் உண்டு. அதுமட்டுமா? பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது, இந்தத் திருத்தலம்.
இத்தனை பெருமைகளும் சிறப்புகளும் கொண்ட இந்தக் கோயில், வழிபாடுகள் இல்லாமல், சிதிலம் அடைந்து காணப்பட்டதாம். இதையடுத்து மெய்யன்பர்கள் பலரும் ஒன்றுகூடி, கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து, பொலிவு படுத்தினர். அப்படிப் புனரமைக்கும்போது, பூமியில் இருந்து அம்பிகை வெளிப்பட்டாள் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் அன்பர்கள்!
கடந்த 98-ஆம் வருடம் திருப்பணிகள் துவங்கி, 2004-ஆம் வருடம், மிக விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் தீர்த்தக் குளம் ரொம்பவே விசேஷம். இங்கு வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் ஸ்ரீதையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!
தீர்த்தக்குளத்தின் நீரை எடுத்துப் பருகினாலே, வியாதிகள் பறந்தோடிவிடும் என்கின்றனர் பக்தர்கள்!  
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்களும் பிள்ளைப் பாக்கியம் இல்லையே எனக் கண்ணீர் விடுபவர் களும் வியாபாரத்தில் அடுத்தடுத்த நஷ்டத்தால் அல்லல் படுபவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்; நலிவுற்ற வியாபாரம் செழித்து விளங்கும்  என்பது ஐதீகம்!
கருவுற்ற பெண்கள், இங்கு வந்து தையல்நாயகியை மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால், சுகப்பிரசவம் உண்டாகும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகச் சொல்வர்!

பெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்



பெண்கள் இல்லாத உலகமும் இல்லை; அவர்களுக்குப் பிரச்னைகள் இல்லாத தேசமும் கிடையாது. ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் ஆயுள் பரியந்தம் வரை, பல பருவங்களைக் கடக்கிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவங்களைக் கடந்து, எடுத்த இந்த வாழ்க்கையை நிறைவு செய்வதற்குள், அவளுக்குத்தான் எத்தனை எத்தனைப் பிரச்னைகள்? எவ்வளவு துயரங்கள்? இவை அனைத்தையும் போக்குகிற ஏழு தலங்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
சிவ தரிசனத்துக்கு ஏங்காதவர்கள் இருக்கிறார்களா, என்ன? ஆனானப்பட்ட பார்வதிதேவியே கணவரின் தரிசனத்துக்காக ஏங்கினாள், தவித்தாள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?
கணவனின் சொல்லை மனைவி கேட்க வேண்டும்; அவளின் அறிவுரையை கணவன் ஏற்கவேண்டும். அப்படி வாழ்தலே இனிய இல்லறத்துக்கான வழி என்பதை சிவ-பார்வதி நமக்கு உணர்த்தியுள்ளனர். தட்சனின் யாகத்துக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் உமையவள் சென்றாள், அவமானத்தைச் சந்தித்தாள். ஆவேசத்துடன் ஹோமாக்னியில் விழுந்தாள் என்பதை அறிவோம்தானே?! அப்போது அவளின் அவயவங்கள் விழுந்த இடம், சக்தி பீடங்களாக போற்றப்படுகின்றன. பிறகு மனைவியை மன்னித்து, விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார் சிவனார். அதிர்ந்து போனாள் தேவி. அந்தத் தரிசனத்தில், ஏழு வித பரிபூரண சிவச் சின்னங்கள் கிடைக்கப்பெறாமல் அழுதேவிட்டாள்.
அந்த ஏழு சிவச் சின்னங்கள் என்ன தெரியுமா? சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி, மூன்றாம்பிறை, நெற்றிக்கண், கழுத்தைச் சுற்றியிருக்கிற நாகம், உடுக்கை, திரிசூலம், திருப்பாதங்களில் உள்ள திருக்கழல் என சிவனாருக்கே உண்டான ஏழு சின்னங்களை அவளால் தரிசிக்க முடியவில்லை. அந்த ஏக்கமே துக்கமாகிப் போனது அவளுக்கு!
சக்தியின் சோகத்தை அறிந்த சப்த மாதர்கள் திருக்கயிலாயத்தின் ஆதிமூல துவார பாலகி தேவியருடன் உமையவளைத் தரிசித்து, பூவுலகில் பெண்களுக்கு அருளக்கூடிய ஏழு திருத்தலங்களை எடுத்துரைத்தனர். 'இந்தத் தலங்களில் வழிபட்டதால்தான் சிவனருள் கிடைத்தது எங்களுக்கு’ என்று பெருமையுடன் தெரிவித்தனர்.
கணவரை முழுமையாக அறிந்து உணர்ந்தால்தானே அவருக்கு இணையாகவும் துணையாகவும் கருத்தொருமித்து வாழமுடியும்? கணவரின் சோதனையும் திருவிளையாடலும் இந்த உலகுக்கு ஏதோவொன்றை உணர்த்துவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்ட பார்வதிதேவி, பூவுலகத்துக்கு வந்தாள்.
சப்த மங்கைகள் ஏழு பேரும் வழிபட்ட தலங்களுக்குச் சென்று, சிவனாரை நினைத்து மனமுருகித் தவமிருந்தாள். அங்கே, ஒவ்வொரு தலத்துக்கும் சென்று சிவபெருமானை வழிபட வழிபட... பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என ஏழு நிலைகளில் தன்னைத் தானே கண்டு உணர்ந்து சிலிர்த்துப் போனாள் தேவி. நிறைவில், ஏழு சிவச்சின்னங்களுடன் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். நெக்குருகி நின்ற தேவி, 'இதென்ன சோதனை! இத்தனை காலமாக எதற்காக இப்படியரு அலைக்கழிப்பு?’ என வேதனையுடன் கேட்டாள்.
உடனே சிவனார், 'பூலோகத்தில் உள்ள பெண்கள், இந்தத் தலங்களுக்கு வந்தால், அவர்களுக்கு ஏழு பருவங்களில் உள்ள சகல பிரச்னைகளையும் தீர்த்தருள்வாய்’ என அருளினார். அதன்படி, சிவனாருடன் இந்தத் தலங்களில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பெண்களுக்கு, சகல தோஷங்களையும் பாபங்களையும், பிரச்னைகளையும் சிக்கல்களையும் தீர்த்தருள்கிறாள் உமையவள்.
அநவித்யநாத சர்மா என்பவர், சிவனாரின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். சதாசர்வ காலமும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். 'என்னை ஆட்கொள்ள மாட் டாயா என் சிவனே! எங்களுக்கு முக்தி தந்து அருள மாட்டாயா, இறைவா?’ என்று மனைவியுடன் காசியம்பதி யில் வணங்கி வழிபட்டார். பிறகு, ஒவ்வொரு தலமாக வழிபட்டு, நிறைவாக ராமேஸ்வரம் தலத்துக்குச் சென்று வழிபடவேண்டும் என்று திட்டம். அப்படி வழிநெடுக சிவத் தலங்களுக்குச் சென்றவர், சோழ தேசத்துக்கு வந்தார்.
கணவரின் முகத்தில் சந்தோஷத்தைக் காணாமல் தவித்துப் போனாள் அவரின் மனைவி. 'தேவி! என் கணவரின் சந்தோஷம்தான் எனக்குச் சந்தோஷம். அவரின் சிறு துயரம்கூட, எனக்குப் பெரிய துக்கமாக ஆகிவிடும். என் கணவருக்கு அருள் செய்யம்மா! எங்களை உன் திருவடியில் சேர்த்துக்கொள்!’ என்று கண்ணீர் விட்டு, மனமுருகிப் பிரார்த்தித்தாள்.
அன்றிரவு, அவளின் கனவில் தோன்றிய ஸ்ரீகாசி விசாலாட்சி, தான் வழிபட்டு அருள்பெற்ற ஏழு தலங்களைச் சொல்லி, அங்கே சென்று வழிபடப் பணித்தாள். நெக்குருகிப் போனவள், அநவித்யநாத சர்மாவை எழுப்பி விவரம் சொல்ல... இருந்த இடத்தில் இருந்தபடி காசி தலம் இருக்கும் திசை பார்த்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் அவர். மனைவியும் நமஸ்கரித்தாள்.
விடிந்தும் விடியாததுமான வேளையில், பார்ப்பவர்களிடம் எல்லாம் வழி கேட்டு, அந்த ஏழு தலங்களுக்கும் சென்றனர். அருகில் உள்ள தீர்த்தக் குளங்களில் நீராடி, சிவபூஜை செய்தனர். அவர்கள் இருவருக்கும், ஒவ்வொரு தலங்களிலும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தின் உருவமாக வந்து, காட்சி தந்தாள் தேவி. இவை எதையும் அறியாமல், சிவ பூஜையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், தொடர்ந்து 48 நாட்கள் அங்கேயே தங்கி, நித்திய பூஜைகளைச் செய்து வந்தார்கள். நிறைவு நாளில், ஏழு பருவங்களின் உருவங்களுடன் ஏழு தேவியராக இருக்க.... அருகில் விஸ்வ ரூபமாக சிவபெருமான் திருக்காட்சி தந்தார் என்கிறது ஸ்தல புராணம்.  
சப்த மாதர்கள் வழிபட்டுப் பாபங்கள் நீங்கப் பெற்றனர். அவர்களின் வழிகாட்டுதலால், பார்வதிதேவி இங்கே தவம் செய்து, பேரருள் பெற்றாள். அத்துடன் அநவித்யநாத சர்மா தம்பதிக்கு திருக்காட்சி தந்து, அவர்களை ஆட்கொண்டார் சிவபெருமான்... என இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்ட அந்த சப்தமங்கைத் தலங்கள், தஞ்சாவூர்-பாபநாசத்துக்கு அருகே இன்றைக்கும் உள்ளன.
சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை எனப் போற்றப்படுகிற அந்த ஏழு தலங்களைத் தரிசிப்போமா?

சிவ நேத்ர தரிசனம்  (சக்கரப்பள்ளி)
ஞ்சை- கும்பகோணம் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் பிரதமை திதியில், பிராம்மியானவள் இங்கே வழிபட்டாள். பார்வதிதேவி சிவனாரின் நெற்றிக் கண்ணைத் தரிசித்து அருள்பெற்றாள். தவிர, மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தைப் பெற்ற திருத்தலம் இது. மேலும், சக்கரவாகப் பறவை வடிவில், அம்பிகை வழிபட்டாள் என்றொரு தகவலும் சொல்கிறது ஸ்தல புராணம்.
ஸ்வாமி - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீதேவநாயகி. அற்புதமான ஆலயத்தில் அழகுறக் காட்சி தருகின்றனர் இறைவனும் இறைவியும்! பிரதமை திதி நாளில், இங்கே வந்து வணங்குவது சிறப்பு.
கங்கா தரிசனம்  (அரிமங்கை)
ய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி, துவிதியை திதி நாளில் வழிபட்ட தலம். இங்கே, பார்வதிதேவி சுயம்பு மூர்த்தத்தை வழிபட... சிவ - கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை.
திரிசூல தரிசனம்  (சூலமங்கலம்)
ய்யம்பேட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். திருதியை நாளில், கௌமாரி வணங்கி அருள் பெற்ற திருத்தலம். சூலமங்கலம் சுயம்பு மூர்த்தத்தை வணங்கித் தொழுத வேளையில், பார்வதிதேவி சிவனாரின் திரிசூல தரிசனத்தைப் பெற்றாள்.
ஸ்வாமி - ஸ்ரீகீர்த்திவாகீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅலங்காரவல்லி. இங்கே, அஸ்திர தேவர் சந்நிதி உள்ளது சிறப்பு. சகல தெய்வங்களுக்குமான அஸ்திரங்களை வார்த்துத் தரும் மூர்த்தி இவர். இவரை வணங்கினால், எதிரிகள் தவிடுபொடியாகிவிடுவார்கள்.
திருக்கழல் தரிசனம்  (நந்திமங்கை)
ய்யம்பேட்டையை அடுத்துள்ளது நல்லிசேரி. ஒரு காலத்தில் நந்திமங்கை என அழைக்கப்பட்ட திருத்தலம் இது. சப்த மாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரைத் தொழுது அருள் பெற்ற திருவிடம். பார்வதிதேவி இங்கே தவம் செய்ய... தன் திருக்கழல் தரிசனத்தைக் காட்டியருளினார் சிவபெருமான்.
'சிவனாரின் திருக்கழல்தானே நம் மீது படுகிறது. அவரின்  திருப்பாதம் நம் மீது எப்போது படும்’ என நந்திதேவர் ஏங்கினாராம். பிறகு, இந்தத் தலத்தில் ஆயிரத்தெட்டு பிரதோஷ பூஜைகளை சிவனாருக்குச் செய்ய... மகிழ்ந்த சிவனார், தன் திருப்பாத ஸ்பரிசத்தை நந்தியம்பெருமானுக்குத் தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.
ஸ்வாமி - ஸ்ரீஜம்புகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

உடுக்கை தரிசனம்  (பசுமங்கை)
ஞ்சை - பாபநாசத்தை அடுத்துள்ளது பசுபதிகோவில். காமதேனு மற்றும் வராஹி தேவி வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீபார்வதிதேவி வழிபட்டு சிவனாரின் உடுக்கைத் தரிசனம் கிடைக்கப் பெற்றாள். பசுமங்கை எனும் தலம், பிறகு பசுபதிகோவில் என மாறியதாம்!
ஸ்வாமி  - ஸ்ரீபசுபதீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீபால்வள நாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம். தீய சக்தி அண்டாமல் நம்மைக் காத்தருள்வார் இறைவன் என்பது ஐதீகம்!
பிறை தரிசனம்  (தாழமங்கை)
பசுபதிகோவிலுக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், மெயின் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது தாழமங்கை திருத்தலம். இந்திராணி எனப்படும் மாகேந்திரி, வழிபட்டுப் பாபம் நீங்கிய தலம் இது. உமையவள் கடும் தவம் புரிந்து, மூன்றாம்பிறையுடன் சிவனாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீராஜராஜேஸ்வரி.
ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கும் தலங்கள் மிகக் குறைவு. மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்தில் சாந்தம் குடிகொள்ளும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்வர்.
நாக தரிசனம்  (திருப்புள்ளமங்கை)
தஞ்சை- பசுபதிகோவிலுக்கு அருகில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புள்ளமங்கை. சாமுண்டிதேவி, அஷ்டநாக மூர்த்திகளுடன் இங்கே சிவலிங்கத் திருமேனிக்கு முப்பது கோடி நாகலிங்கப் புஷ்பங்கள் சார்த்தி வணங்கி, அருள் பெற்ற திருவிடம் இது. ஸ்ரீபார்வதிதேவி கடும் தவம் செய்ததன் பலனாக, சிவபெருமானை கழுத்தில் நாகாபரணத்துடன் தரிசித்துப் பூரித்தாள்.
ஸ்வாமி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅல்லியங்கோதை என்கிற சௌந்தரநாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும், திருமண பாக்கியம் கைகூடும், சகல ஐஸ்வரியங்களுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர்.
இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். காசியம்பதியில் இருந்து வந்த அநிவித்யநாத சர்மா மனைவியுடன் வழிபட்டார், அல்லவா? அப்போது 48-ஆம் நாள் பூஜையின்போது, இறைவனுக்கு திருப்பல்லக்கு தயார் செய்து, சக்கரப்பள்ளியில் இருந்து மற்ற தலங்களுக்கு தூக்கிச் சென்றாராம். பிறகு அந்தந்த ஊர்க்காரர்களின் உதவியால், அந்தத் தலத்து இறைவனும் இறைவியும் திருப்பல்லக்கில் பின்னே வர... ஏழு தலங்களின் மூர்த்தங்களும் ஏழு பல்லக்கில் பவனி வந்ததாம்!
பிறகு, அடுத்தடுத்த காலங்களிலும் ஏழூர்த் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, பங்குனி மாத சித்திரை நட்சத்திர நாளில், விமரிசையாக நடந்தேறும் இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள். தற்போது புள்ளமங்கை, பசுமங்கை, நல்லிசேரி ஆகிய தலங்களில் மட்டுமே பல்லக்கு இருக்கிறது என்கிறார்கள். மீதமுள்ள நான்கு தலங்களுக்கும் திருப்பல்லக்கு திருப்பணியை எவரேனும் செய்து கொடுத்தால், அந்தத் தலங்களின் மூர்த்தங்களும் ஜோராகப் பல்லக்கில் பவனி வரும் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர், ஊர்மக்கள்.
பூப்படையும் தருணத்தில் உள்ள சிறுமி, கல்லூரியில் படிக்கிற மாணவி, திருமணத்துக்கு காத்திருக்கிற இளம்பெண், குழந்தையை ஈன்றெடுத்து வளர்த்து வருபவர், தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிற வயதை அடைந்தவர், பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொஞ்சி மகிழ்கிறவர் என எந்த வயதினராக இருந்தாலும், பெண்கள் இங்கு வந்து ஏழு தலங்களையும் அங்கே குடிகொண்டிருக்கிற சிவ- பார்வதியையும் வணங்கித் தொழுதால், அவர்கள் ஒரு குறையுமின்றி, நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள் என்பது உறுதி.
ஒருவீட்டின் இதயமாகத் திகழ்பவர்கள் பெண்கள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்கமுடியும். அவர்கள் மனநிறைவுடன் வாழ்ந்தால்தான், நம் அடுத்தடுத்த சந்ததியும் வாழையடி வாழையென வாழ்வாங்கு வாழும்!
இந்தப் பூமியில் பிறந்த பெண்கள் அனைவரும் வணங்கித் தொழவேண்டிய திருத்தலங்கள் இவை. வணங்குங்கள்; வளம்பெறுங்கள்!