Tuesday, 13 September 2016

முருகன் ஒரு விளக்கம்


ஆதிகாலந்தொட்டே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்தது. பழந்
தமிழர்கள் இறைவனை இயற்கை அழகு எல்லாவற்றிலும் கண்டனர்.
இறைவனை அழகன் என்ற அர்த்தமுள்ள சொல்லாலே அழைத்தார்கள்.
முருகன் என்றால் அழகன் என்றே பொருள். விரிவாகச் சொன்னால்
முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம்,
மகிழ்ச்சி .. என்ற ஆறு தன்மைகளும் ஒருங்கேயுடையவன் என்பதாகும்.
முருகன் உயர்வானவன். ஆகவே அவனுக்கு உயர்ந்த இடங்களிலே
வீடு அமைத்தார்கள். குறிஞ்சிக்கிழான் என்றுங் கூறுவர். பஞ்ச
பூதங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம்
பொருளாகையால் அவனுக்கு ஆறு முகங்களை உருவகித்து,
ஆறுமுகன் என்றுங் கூறுவர். முருகன் ஆறறிவு படைத்த மனிதன்
வணங்குதற்குரிய தெய்வம் என்றுங்கொள்ளலாம்.




இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணை
கொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதை
விளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி
இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி
(செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கி
உள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்.
இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து
சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை
வள்ளித் திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்
திருமணம் வள்ளியாகிய சீவன், பேரின்பமாகிய சிவத்துடன்கலப்பதை
விளக்குகிறது.



முருகன் உருவ விளக்கம்-என் பார்வையில்---
1, வாகனம் ----மயில் ---பறவைகளில் ,பெறியது ,அழகான தோகைஉடையது ,தோகையில் நிறைய கண் போன்ற அமைப்பு உள்ளது,வேகமாக பறக்கக்கூடியது .-இது மனம் என்பதை குறிக்கிறதுமனிதமனம் விசித்திரமானது ----மிகவும் வேகம் நிறைந்தது --அதனால் தான்----மனோ வேகம் ----என்று குறிப்பிடுகிறார்கள்

கலர் கலரான தோகையை போல --வண்ணமயமான கற்பனை நிறைந்தது .

மனதை அடக்குதலே --அதை வாகனமாக்கிகொள்ளுதலின் அர்த்தம் .

நாம் ஓட்டும் வாகனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் .அப்போதுதான் போகவேண்டிய இடத்துக்கு போகமுடியும் .


2.பந்தம் -----பாம்பு ---பாம்பு ,சுற்றி சுற்றி ஏறும் ,விஷம் நிறைந்தது

---அதேபோல் போல் தான் ,உலக உறவுகள் ,நம்மைசுற்றியுள்ள சொந்தங்கள் .

அதை அடக்கி காலுக்கு கீழே வைக்க வேண்டும் .

மயிலான மனம் அதை தின்று ஜீரணிக்க வல்லது .

மயிலான மனம் --உலக ஆசை பந்தங்களான பாம்பை தன் காலடியில்பற்றியுள்ளது .




3.வலக்கையில் வேல் ---

இது தைரியம் ,வீரம் ஆகியவற்றைகுறிக்கின்றது .தைரியம் ,வீரம் --என்றால் கத்திஎடுத்து குத்துவதோ ,திருடன்வந்தால் போரிடுவதோ அல்ல ?அது மட்டும் தான் தைரியம் அல்ல .

நாம் இந்த உலகில் பிறந்து விட்டோம் .நமக்குஎன்று ஒரு சூழ் நிலை அமைந்து விடுகின்றது .

அந்த சூழ் நிலையில் நாம் வாழ எல்லாநேரத்திலும் தைரியத்துடனும் நடக்கவேண்டும் .இது மிகவும் ஆழமாகநினைக்க வேண்டிய ஒன்று


4.இடக்கையில் சேவல் கொடி ----

விழித்திரு என்பதை குறிக்கிறது . சூரியன் உதிப்பது எப்படித்தான்தெரிகிறதோ ?:எல்லாரும் விழித்து எழுந்திருங்கள் என்று "சுற்றுவட்டாரத்தையே கூவி எழுப்பும் பறவை உள்ள கொடி ---அறிவு விழித்திருக்கவேண்டும் என்பதை குறிக்கின்றது

வலதுகை செயலாற்றும் கை ---அதில் -தைரியம் வீரம்வைராக்கியம் ஆகியவற்றை குறிக்கும் ---வேல்

இடது கை ---வலதுகைக்கு உதவி புரியும் கை ---வீரத்திற்கு உதவிபுரியும் --
விழித்திருப்பதை குறிக்கும் ------சேவல் கொடி !


5,ஆறுமுகம் -------ஐந்து முகம் --ஐம்புலன்கள் +அவைகளைவழிநடத்த வேண்டிய விவேகம் ஆறாவது முகம்

முருகன் தமிழ்க் கடவுள்.



முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள்அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர்இதுவேயாகும்).


முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சிக் கடவுளான முருகன் தமிழ் மக்களை ஆண்டு வந்திருக்கின்றான். மலை மீது கோவில் கொண்டுள்ள முருகன் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடம் கொண்டு நிலை பெற்ற கடவுளாகும். தமிழகத்தில் பலர் ‘பரமகுரு’ என்றும் ‘குருநாதன்’ என்றும் முருகனை வணங்கி வருகின்றார்கள். உலகில் பல இடங்களில் முருக வழிபாடு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முருக வழிபாடானது தமிழ் மக்களிடையே காணப்பட்ட மிகத் தொன்மையான வழிபாடாகும். சில காலங்களுக்கு முன் தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளின் போது சேவற் சிலைகள், காவடிச் செதில்கள், வேல் என்பன காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காவடி என்றாலே அது முருகனுக்கு மட்டும் உரியது

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்றதிருநாமம்.
முகுந்தன் – மு – திருமால்
ருத்ரன் – ரு – சிவன்
கமலோத்பவன் – க – பிரம்மன்


''முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார்

தமிழ்க் கடவுள் என்பது முருகனையே! மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்குவிழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு!முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள். முத்தமிழ் மொழியின் மெய்யெழுத்துக்களும் மூவாறு (பதினெட்டு) அவை வல்லினம், மெல்லினம், இடையினம்என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளன. முருகன் கை வேலாயுதம் ஒன்றே போல்தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டு. பிற மொழி எதிலும் இல்லாதசிறப்பெழுத்து!

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம்



முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம்பின்னனியாக இருக்கிறது ? அந்த மயில், பாம்பை மிதிப்பது போலவைத்திருப்பதன் தத்துவம் என்ன ?



மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும்நடனமும்தான். ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமானவண்ணம்தான் காரணமாக இருக்கிறது. அது, தான் அழகாக ஆடுவதாகநினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்துகட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்குஅழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்துப் திட்டமிடக்கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால்எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில்ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதைஉணரமுடிவதில்லை. இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள்இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன்தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாகஏற்றுக் கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும்சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.



மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பைக் கொல்லுவதில்லை.ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள்எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டியஅவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள்அடக்கி வைக்க வேண்டும். இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும்பாம்பு நமக்கு உணர்த்துகிறது.

திருநீறு அல்லது விபூதி பற்றிய சிறு பார்வை


திரு நீறு என்ற வார்த்தையிலேயே திரு மற்றும் நீறு என்ற இரு வார்த்தைகள் உள்ளன. திரு என்பது தெய்வத் தன்மை என்று பொருள். நீறு என்பது வினைகளை நீக்குவது என்று பொருள். திருநீறுக்கு வினைகளை அகற்றி தெய்வத்தன்மையை கொடுக்கும் சக்தி உள்ளதால் அதை திருநீறு என்று அழைத்தனர்.

மேலும் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை தரும் வல்லமையுடையதால் இதை விபூதி என்றும் பெயர் பெற்றது. லக்ஷ்மி வாசஞ் செய்யும் பசு மாட்டின் பின்புறத்திலிருந்து வெளிப்படும் சாணம் எரிக்கப்பட்டு விபூதி தாயாரிக்கப்படுகிறது. மேலும் அனைத்து தேவதைகளும் பசுவின் உடம்பில் இருக்கிறார்கள் எனவே பசுமாட்டின் சாணத்திலிருந்து தாயாரிக்கப்டும் விபூதி அருட்செல்வத்தின் சின்னமாகும். பூதி என்பது அருட்செல்வத்தின் பெயர். திருநீறு அருட்ச்செல்வத்தை தருவதாலும் அதை விபூதி என்று பெர்பெற்றது.

திருநீறை இட்டுகொண்டால் தீயிடைப்பட்ட விறகு போல் வினையும் நோயும் வெந்து போய்விடும் என்கிறார் அப்பர்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்கமாற் பூசி மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாரும்
சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே.


திருநீறை அணிவதால் தடையில்லாத இறைசிந்தனையும் நம் பாவங்கள் அனைத்து அழிந்து முக்தி அடைமுடியும் என்கிறார் திருமூலர்.


அணுக்கதிர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் சாணத்திற்கு உண்டு எனவே தான் பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிக்கப்படுகிறது. நமது உடலில் துர்நாற்றங்களை அகற்ற பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதி பயன்படுகிறது.

சுக்ஷூம்னா என்ற நாடி நமது இதயத்திலிருந்து மூளைக்கு நெற்றியின் ஊடே செல்கிறது. அந்த நாடியின் சிறப்பாக செயல் பெற பசுஞ்சாணத்தால் முறையாக தயாரிக்கப்பட்ட திருநீறு நெற்றியில் தரிக்க வேண்டும்.திருநீறு ஆன்மாக்களை ரக்ஷித்ததால் ரக்ஷை என்றும், சிவத்தத்துவத்தை விளக்குவதால் பசிதம் என்றும்,பாவங்களை நீக்குவதால் பஸ்மம் என்றும், நம் பாவ மலத்தை நீக்குவதால் க்ஷாரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

சிவலிங்கத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள் !!!

சிவலிங்கத்தை பற்றி சுவாரசியமான தகவல்கள்

சிவலிங்கத்தை வேறு விதமாக கற்பனை செய்துக்கொண்டு பரிகாசம் செய்பவர்களும் உண்டு அவர்களுக்காகன பதிவு இது, மேலும் சிவலிங்கத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களும் அடங்கும்.

கற்பனை வேறு, யதார்த்தம் வேறு. கயிறு பாம்பாகத் தோன்றுவது போல அவரவர் எண்ணங்களை ஒத்த வடிவங்களில் அது தோன்றுகிறது. இடை விடாது அதே சிந்தனையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அது அப்படித் தோன்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், நம்மை விட அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதுவே அவர்கள் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது. வள்ளலாரிடம் சிலர் இப்படி கேட்டதற்கு, அவர் அழகாகவும், தெளிவாகவும் பதில் சொன்னார். ஆத்ம ஜோதியை அருட்ஜோதி சூழ சிவ ஜோதி விளங்குகின்றது என்றார்.

எவ்வளவு உயர்ந்த கண்ணோட்டம். உங்கள் எண்ணங்களும், கண்ணோட்டங்களும் உயர உயரத்தான் வாழ்க்கை உயரும். எனவே தவறான உதாரணத்தை மனதில் கொண்டவர்கள் தானே அந்த தவறின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருப்பார்களேயன்றி, அதனால் லிங்கத் திருமேனிக்கு எந்த வித இழுக்கும் வந்து விடப் போவதில்லை. உண்மையை மறைக்க முயற்சி செய்வது கூடும். ஆனால் உண்மையை அழிக்க முடியாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும். பொய்யானவைகள் வரும், அழியும். உண்மை அழியாது.

சிருஷ்டி காலத்தில் உயிர்கள் எப்படி உருவானதோ ? அதேபோல் லயமாகி ஒடுங்கி தோன்றிய இடத்திற்கே மீண்டும் செல்கின்றன என்பதின் தத்துவக் குறியீடே லிங்கம். லயமாகிய ஒடுக்கம் லிம் என்கிற பீஜத்தாலும், சிருஷ்டி என்கிற தோற்றம் கம் என்ற பீஜத்தாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி லயம், ஒடுக்கம் என்ற இரு தத்துவங்களுமே லிங்கம் என்று பொருள்படுகின்றன. பிரளய காலத்தில் ஒடுக்கமும், பிறகு அங்கிருந்து சிருஷ்டியும் தோன்றுவதன் காரணப் பொருளாக விளங்குவது பராசிவமாகும். இந்த பராசிவத்தின் சின்னம் லிங்கமாகும்.

லிங்கமானது உரு, அரு, அருவுரு என்ற மூன்று ரூபங்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. இதையே ஆகமங்கள் தத்துவம், மூர்த்தி, பிரபாவம் என்று குறிப்பிடுகின்றன. உரு என்பதை சகளத்திருமேனி என்பர். தலை, உடம்பு, கை, கால் முதலிய உறுப்புகளால் அமைந்த மகேஸ்வர வடிவங்கள் யாவும் உரு எனப்படும். நான்முகன், திருமால், ருத்ரன், மகேஸ்வரன் போன்ற இறைவனின் பல்வேறு தத்துவங்கள் இந்தத் திருமேனிகளில்தான் காணப்படும். இந்தத் திருமேனிகள் எல்லாம் மந்திர வடிவங்கள். இதையும் யோகவடிவம், போகவடிவம், கோபவடிவம் என்ற மூன்று வகையாகச் சொல்வார்கள்.

போக வடிவம் என்பது இறைவனின் நின்றகோலம், இருந்தகோலம், கிடந்தகோலம், வாகனங்களில் அமர்ந்தகோலமாய் ஆடை, அணிகலன்களோடு சாந்தமாய், அபயகரத்துடன் கூடிய தோற்றமாகும். யோகவடிவம் என்பது யோகமுத்திரையுடன் ஆருள்புரியும் தன்மையோடு விளங்கும் வடிவமாகும். கோபவடிவம் என்பது கொடியவர்களை வதம் செய்யும் விதமாக பலவகையான ஆயுதங்களை கையில் ஏந்தியபடி அச்சுறுத்தும் விதமாக காட்சிதரும் தோற்றமாகும். சம்ஹார ரூபம் என்றும் இதைச் சொல்வதுண்டு. ஆக இந்த மூன்று வடிவங்களும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற தத்துவங்களை வளக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூன்று தத்துவங்களுக்குள்ளும் மறைபொருளாய் திரோபாவசக்தியும், அனுக்கிரஹமும் இருக்கிறது.

அரு – உருவமில்லாதது. இதுவும் சிவலிங்க வடிவமே ! இதை நிட்களதிருமேனி என்பர். எந்தவித உறுப்புகளும் இன்றி கோளவடிவில் கோளவடிவில் காணப்படும் லிங்கம். இந்த வடிவமானது, சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய சான்கு தத்துவங்களைக் குறிக்கக்கூடியது. உலகாயத்தில் உழன்று கொண்டிருக்கும் சர்வகோடி ஜீவராசிகளுக்கும் முக்தியளிக்க வல்லமையுடைய பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளின் உடலிலும் ஆத்மாவாய் இருக்கிறது. இப்படி சர்வகோடி ஜீவராசிகளும் முக்தியடையும் பொருட்டு பிரளய காலத்தில் ஒன்று சேர்ந்து பரமாத்மாவாய் மாறிவிடுகின்றன. பிறகு சிருஷ்டியின் காலத்தில் தனியே பிரிந்து தனித்தனி ஆன்மாவாய் தோன்றுகின்றன. இப்படி ஆன்மாக்கள் வருவதும், போவதுமாய் இருக்கும் தத்துவத்தைக்குறிப்பதே லிம்,கம் எனப்படும். லிம்கமே லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
அரு, உரு – சகளநிட்கள லிங்கம்.

உருவமின்மையும், உருவமும் கலந்த வடிவமே சகளநிட்களம் என்று ஆகமங்களால் அழைக்கப் படுகின்றது. இதை முகலிங்கம் என்று கூறுவார்கள். இந்த முகலிங்கம் ஆட்யம், அநாட்யம், சுரேட்யம், சர்வசம் என்று நான்குவகைப்படும். இந்த லிங்கமானது மூலம் நாற்சதுர வடிவம் கொண்ட பிரம்ம பாகமாகவும், அதாவது படைத்தல் தொழிலைக் குறிப்பதாகவும், மத்தியம் எட்டுபட்டை வடிவம் கொண்டு எட்டு சக்திகளைக்குறிப்பதோடு, ஒன்பதாவது சக்தியான மனோன்மணிசக்தியும் சேர்ந்து நீரின் அதிபதியான திருமாலின் சக்திகளாகி காத்தல் என்கிற தத்துவத்தை குறிப்பதாகவும், அதற்கு மேலே உள்ள கோளவடிவமான ஜோதிவடிவமான ருத்ரவடிவம் சம்ஹாரம், த்ரோபாவம், அனுக்கிரஹம் என்ற மூன்று தத்துவங்களை குறிப்பதாகவும் அமைந்துள்ளன. இதில் சிவபாகமான ஜோதிபாகத்தில் சிறு உருண்டை வடிவ ஆயிரம் முகங்களை உடையது ஆட்யம் எனப்படும். சிவபாகத்தில் எந்த வடிவமும் இல்லாதது அநாட்யம் எனப்படும். சிவபாகத்தில் சிறு உருண்டை வடிவ செங்குத்தான 108 முகங்களை உடையது சுரேட்யம் எனப்படும். சிவபாகத்தில் முழு உறுப்புகளை உடைய லிங்கம் சர்வசம் எனப்படும். இதில் ஒருமுகம் முதல் ஐந்து முகம் வரை சிவமுகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இப்படி சிவலிங்கமானது உருவலிங்கம் நான்காகவும், அரூபலிங்கம் நான்காகவும், அரூபஉருலிங்கம் ஒன்றாகவும் ஒன்பது பேதமாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேதங்களே அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பலவகை லிங்கங்களாய் காணப்படுகின்றன.

இதுவல்லாமல் சுயம்புலிங்கங்கள் இயற்கையாகவே தானாகவே தோன்றி அருள் புரிவதுவும் உண்டு. இவற்றை அருட்கொம்பு லிங்கங்கள் என்பார்கள். பூமியின் அடியில் இருக்கும் பிரம்மாண்டமான பாறையின் நுனிக் கொம்புகளை சுயம்புலிங்கம் என்பர். பூமிக்கடியில் இரண்டு பெரிய பாறைகள் உராய்ந்து கொள்ளும் பொழுது ஏற்படும் காந்த விசை அப்பாறையின் நுனிக்கு ஈர்க்கப்படும். அப்படி பாறையின் நுனிக்கு ஈர்க்கப்பட்ட அந்த விசையானது அருட்காந்த அலைகளாக மாறி உயிர்களை தம்பால் ஈர்க்கின்றன. எனவேதான் தன்னையும் அறியாமல் அதன் ஈர்ப்பில் மயங்கி பக்தியில் திளைக்கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளும் அதன் ஈர்ப்பில் மயங்கி தன்னையும் அறியாமல் பால் சுரக்கின்றன. இப்படிப்பட்ட சுயம்பு லிங்கங்களில் அறிந்தவை 68 என்றும், அறியாதவை பலகோடி என்றும் ரிஷிகள் கூறியுள்ளனர். இந்த சுயம்புலிங்கங்கிலும் மூன்று பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை நீரில் மூழ்கி இருக்கும் நிர்மூல லிங்கம், மலையை ஆதரமாகக் கொண்ட சமூல லிங்கம், மண்ணை ஆதாரமாக உடைய பிருத்வி லிங்கம் என்பவை ஆகும். இது போல புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்கங்களும் உண்டு.

கரையானால் பலவகை தாதுக்கள் கூடிய மண்ணால் உருவாக்கப்பட்ட புற்று சிவனின் சிரசு முடி எனப்படுகிறது. இந்தப் புற்றில்தான் சிவபெருமானின் சங்கராபரணமாகிய கருநாகம் குடியிருக்கும். இதில் காலத்தால் அழியாமலும், மழையில் கரையாமலும், இயற்கை சீற்றங்களால் சிதையாமலும், தாவரங்கள் வளராமலும், பிரகாசமாய், மூன்று கண்கள் உடையதும், ஐந்து தலைகளோடும் கிழக்கு பார்த்து அமைந்த புற்று சிவவான்மீகம் என்று போற்றி வணங்கப்படுகிறது. இந்த புற்றானது ருத்ர ஸ்தலம் என்றும், சுயம்பு புற்று ஸ்தலம் என்றும் ரிஷிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புற்றின் மேலே நூலால் கட்டிய ஸ்படிகமணியையோ அல்லது ருத்ராட்சத்தையோ தொங்கவிட்டுப் பார்த்தால் நொடிக்கு மூன்று சுற்று சுற்றும். அப்படி சுற்றும்படி அமைந்த புற்றுக்கள் ஜீவ புற்றுலிங்கங்கள் என்றும், சிவனின் சகதி களஞ்சியம் என்றும் போற்றி வணங்கப்படுகிறது. இவ்வகை புற்றைச் சுற்றி நீர்வளம் நிறைந்திருக்கும். இவ்வகையான புற்றைக் கண்டுபிடித்து ஆலயம் எழுப்பும் அடியார் அடையும் பேற்றினை சொல்லி முடியாது.

எனவே உங்கள் அறிவின் திறத்தை பயன்படுத்தி நல்லதையே பற்றுங்கள், நல்லதையே எண்ணுங்கள் நல்லதையே பெறுவீர்கள்

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.ஏன் தெரியுமா?



புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.

அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

கபாலீசுவரர் கோயில்



தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.





இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.





மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :


பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.


கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.

இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.







இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.

அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.

சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.

ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.





மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.

1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.

"துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.

11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.

துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.

சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.

மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் கூறுகிறார்.





ஸ்தல வரலாறு:

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.

அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.





இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. இதன் உயரம் சுமார் 120 அடி உயரமும் உடையது. வெளிப் பிரகாரம் விசாலமாமாகவும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம்.

சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன. கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.

கபாலீசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் உள்ள கோயிலில் மேற்கு திசை மேவி ஆறுமுகத்தோடு அமர்ந்திருக்கிறான் சிங்கார வேலவன். கற்பகவல்லிக்கு நேர் தெற்கே வாயிலார் நாயனார் கோயில் அமைந்துள்ளது. முக்கிய வாயிலின் வடப்புறம் திருஞானசம்பந்தர் பூம்பாவையுடன் இருக்கிறார். கோயிலின் வடக்குவெளிச் சுற்றிலே புனித புன்னை மரம் இருக்கிறது.

ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் குறைநீக்கி அருளுகின்றார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது.


நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன. நந்தியம் பெருமானுக்கு விசேஷ நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது.