மூலவர் : வைத்தியநாதசுவாமி வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்
அம்மன்/தாயார் : சுந்தராம்பிகை(அழகம்மை), பாலாம்பிகை
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமிய ஆகமம் (நான்கு கால பூஜை)
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
🅱 தேவாரப்பதிகம்:🅱
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. -சுந்தரர்
🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.
🅱 திருவிழாக்கள்:🅱
🍁 பங்குனி மாதம் புணர்பூச நாளில் நந்தி திருமணம் பெரும் விழாவாக நடைபெறும். விழாவில் இருபத்து ஏழாவது நாளில் திருவையாற்றில் நிகழும் சப்த ஸ்தான விழாவிற்கு நந்தி எழுந்தருள்வார்.
🍁 மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
🅱 தல சிறப்பு:🅱
🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🎭 நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம்.
🎭 திருமால், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலமிது.
🎭 சுந்தரர் கனவில் இறைவன், மழபாடி வர மறந்தனையோ என்று உணர்த்திட, உடனே அவர் மழபாடி சென்று வழிபட்டத் தலம்.
🎭 சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை ஈசன் போக்கியருளியதால் இறைவனை, வைத்தியநாதர் என்றும் பெயர் பெற்றார்.
🎭 இத்தலத்தில் பாய்வது கொள்ளிட நதியாகும். இந்நதி உத்தரவாகினியாக-- வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. இது மிக அரிதான சிறப்பு.
🎭 இங்கிருக்கும் சோமாஸ்கந்தர் ஒரே கல்லினால் ஆனவர். இவரை தரிசிப்பது மிகவும் சிறப்புக்குரியது.
🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.
🅱 திறக்கும் நேரம்:🅱
🗝 காலை 6:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🗝
🅱 பொது தகவல்:🅱
🌺 இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.
🌺 இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
🌺 இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
🌺 வைத்தியநாத சுவாமி சந்நிதி இராஜேந்திரன் காலத்தாளானவை.
🌺 பாலாம்பிகை கோவில் இராசராசன் காலத்தாளானவை.
🌺 நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
🌺 கோயிலுக்கு வெளியில், எதிர்புறத்தில் உள்ள மண்டபத்தை, கோனேரிராயன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.
🅱 பிரார்த்தனை:🅱
🍁 கடுமையான சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்
🍁 நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
🅱 நேர்த்திக்கடன்:🅱
☀ கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.
🅱 தலபெருமை:🅱
🌸 இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
🌸 ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.
🌸 இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.
🌸 சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர்,
🌸 பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.
🌸 மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.
🌸 நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
Ⓜ வைத்தியநாதன்:Ⓜ
🔥 தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.
🔥 ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.
🔥 இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.
🔥 இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
🔥 இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
Ⓜ நந்தி கல்யாணம்:Ⓜ
🌱 இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார்.
🌱 சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.
🌱 இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர்.
🌱 திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
🌱 இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது. இதில் ஐயாறப்பரும், அறம்வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்..
Ⓜ நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்:Ⓜ
🔥 பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம்.
🔥 புனர்பூசம் நட்சத்திர நாளில் காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.
🔥 மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.
🔥 மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர்.
🔥 அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
🔥 வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.
🔥 “நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.
Ⓜ வைரத்தூண் நாதர்:Ⓜ
🍄 பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.
🍄 அப்பர் பெருமான் தம் பதிகத்தில், மழபாடி வைரத்தூணே என்று பதிகத்தைப் பாடிப் பரவியிருக்கின்றார். சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது.
🍄 அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உணர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள்.
🍄 திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.
Ⓜ தேவர்கள் கொண்டாடும் பிரதோஷம்:Ⓜ
🌱 பிரதோஷ விரதத்தை கடைப்பிடிப்பதால் வாழ்க்கையில் சகலவித சவுபாக்கியங்களும் கிட்டுகின்றன. பிரதோஷத்தன்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் நடனமாடுகிறார். அப்போது சரஸ்வதிதேவி வீணை வாசிக்கிறார். தேவேந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்ம தேவர் மேளம் அடிக்க, மகாலட்சுமி பாட்டுப்பாட, மகாவிஷ்ணு மிகச்சிறந்த மிருதங்கத்தை எடுத்து கொட்டுகிறார். சிவபெருமானை எல்லா தேவர்களும் சூழ்ந்து நின்று கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர்.
🌱 பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு கயிலாயத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம். இதையொட்டியே பிரதோஷ காலத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் திரையிடப்படுகிறது. நந்தீஸ்வரர் அவதரித்த தலம் என்பதால் இங்குள்ள ஐயாறப்பர் கோவிலில் சிவபெருமான் நந்திக்கு நந்தீஸ்வரர் பட்டத்தை வழங்கியதால் இத்திருத்தலத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.
Ⓜ கோவில் அமைப்பு:Ⓜ
🌼 கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.
🌼 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன.
🌼 பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.
🌼 மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.
🌼 இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
🌼 இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
🅱 தல வரலாறு:🅱
🔥 பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.
🔥 முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.
🔥 சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது.
🔥 சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.
🔥 ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது.
🔥 பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.
🔥 அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.
🅱 சிறப்பம்சம்:🅱
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:
♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
♻ சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி.
♻ திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.
♻ கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது.
♻ இங்குள்ள சிற்பங்கள் (ஒரே கல்லாலான சோமஸ்கந்தர், ரிஷப வாகனத்தில் குரு தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்காரமூர்த்தி, புருஷாமிருக ரிஷி வழிபடும் காட்சி முதலியன) மிகச் சிறப்பு.
♻ திருவையாற்றைச் சுற்றியுள்ள சப்த ஸ்தானங்களுடன் தொடர்புடையது.
♻ திருஞானசம்பந்தர் 2-ல் ஒரு பதிகமும், 3-ல் இரண்டு பதிகங்களும், அப்பர் 6-ல் இரண்டு பதிகங்களும், சுந்தரர் 7-ல் ஒரு பதிகமும், ஆக மொத்தம் ஆறு பதிகங்கள் பாடப்பெற்றத் தலமாகும்.
♻ இக்கோவிலில், சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
🅱 இருப்பிடம்:🅱
🚙 திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
🚙 இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀