Saturday, 10 March 2018

வெரைட்டியான தோசை ரெசிப்பிக்கள்


மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம் 
தேவையானவை:
தோசை மாவு  அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி  ஒன்று
பொடியாய நறுக்கிய கேரட்  2
சிக்கன்  200 கிராம்
இட்லி பொடி  2 டேபிள்ஸ்பூன்
சீஸ்  25 கிராம்
வெண்ணெய்  25 கிராம்
உப்பு  தேவையான அளவு 
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும். 

இறால் தொக்கு தோசை 
தேவையானவை:
தோசை மாவு  ஒரு கப்
இறால்  கால் கிலோ
சின்னவெங்காயம்  10
சீரகம்  கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்  சிறிதளவு
எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
முட்டை  2
உப்பு  தேவையான அளவு 
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது  ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.  பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

கோழி கீமா தோசை 
தேவையானவை:
தோசை மாவு  அரை கிலோ
எலும்பில்லாத சிக்கன்  300 கிராம்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்  50 கிராம்
இஞ்சி  ஒரு துண்டு
பச்சைமிளகாய்  ஒன்று
பூண்டு  5 பல்
எண்ணெய்   தேவையான அளவு
சோம்பு  கால் டீஸ்பூன்
மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்
சீரகத்தூள்  அரை டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு 
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

மட்டன் தோசை 
தேவையானவை:
தோசை மாவு  அரை கிலோ
எலும்பில்லாத மட்டன்  கால் கிலோ
முட்டை  5
இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்  சிறிதளவு
உப்பு  தேவையான அளவு
மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்
எண்ணெய்  தேவையான அளவு 
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

 
ஜவ்வரிசி கார தோசை 
தேவையானவை:
இட்லி அரிசி  அரைக்கிலோ
உளுந்து  100 கிராம்
காய்ந்த மிளகாய்  5
உப்பு  தேவையான அளவு
சோம்பு  அரை டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
மிளகு  ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  2
பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு துண்டு
எண்ணெய்  தேவையான அளவு 
செய்முறை:
ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.

மைசூர் மசாலா தோசை 
தேவையானவை:
ஜவ்வரிசி  100 கிராம்
சர்க்கரை  ஒரு டீஸ்பூன்
தோசை மாவு  அரை கிலோ
காய்ந்த மிளகாய்  10
பூண்டு  5 பல்
உப்பு  தேவையான அளவு
மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து  அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
எண்ணெய்  தேவையான அளவு
பொடியாக நறுக்கிய  
பெரிய வெங்காயம்  ஒன்று
உருளைக்கிழங்கு  150 கிராம்
தக்காளி  ஒன்று
இஞ்சி  ஒரு துண்டு
பச்சைமிளகாய்  ஒன்று
பெருங்காயம்  சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து  தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.

தக்காளி தோசை 
தேவையானவை:
தோசை மாவு  அரை கிலோ
பழுத்த தக்காளி கால் கிலோ
பச்சைமிளகாய்  ஒன்று
மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன்
சீரகம்  ஒரு டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
எண்ணெய்  தேவையான அளவு 
செய்முறை:
தக்காளியை வேகவைத்து தோலுரித்து ஆறவிடவும். தக்காளியுடன் பச்சைமிளகாய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பதமாக வார்த்தெடுக்கவும்.

கேழ்வரகு ரவா தோசை 
தேவையானவை:
கேழ்வரகு மாவு  200 கிராம்
ரவை  50 கிராம்
கோதுமை மாவு  50 கிராம்
பச்சை மிளகாய்  ஒன்று
இஞ்சி  ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
பெருங்காயம்  சிறிதளவு
உப்பு  தேவையான அளவு 
செய்முறை:
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

சுரைக்காய் தோசை 
தேவையானவை:
இட்லி அரிசி  அரை கிலோ
உளுந்து  200 கிராம்
சுரைக்காய் அரை கிலோ
காய்ந்த மிளகாய்  6
உப்பு  தேவையான அளவு
கறிவேப்பிலை  சிறிதளவு
கொத்தமல்லித்தழை  சிறிதளவு
துருவிய தேங்காய்  ஒரு கப்
பொடியாக நறுக்கிய
சின்னவெங்காயம்  50 கிராம் 
செய்முறை:
இட்லி அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை தோல்நீக்கித் துருவிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் காய்ந்த மிளகாய், சேர்த்து அரைத்துக்கொள்ளவும். துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

கொள்ளு ரெசிப்பி


 கொள்ளு உக்காரை

 கொள்ளு ஓலன்

 கொள்ளு-சீஸ் கட்லெட்

 கொள்ளுத் துவையல்

 கொள்ளு ஃப்ரூட் சாலட்

 கொள்ளுக் கஞ்சி

 கொள்ளு மசாலா ரைஸ்

  கொள்ளு ரசம்

  கொள்ளுப் பொடி

  கொள்ளு மக்னி

 கொள்ளு அடை

 கொங்கு நாட்டு கொள்ளு மசியல்
எடை குறைக்க விரும்புபவர்களுக்கு... கொள்ளு ரெசிப்பிகள்!

கொள்ளு, தானிய வகைகளில் ஒன்று. உடம்பு இளைக்க விரும்புபவர்கள், கொள்ளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள... நல்ல பலன் கிடைக்கும்.  ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழி தோன்றியது அதனால்தான். புதுமை, பழமை என கலவையான கொள்ளு ரெசிப்பிகள்.
கொள்ளு உக்காரை

தேவையானவை:
 கொள்ளு, வெல்லம் - தலா அரை கப்
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 முந்திரி - 10
செய்முறை:
கொள்ளுவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு ஆறவைத்து, 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் அரைத்த கொள்ளுவைச் சேர்த்துக் கிளறி மூடி வேகவைக்கவும். வெந்தவுடன் வெல்லக்கரைசலை சேர்த்து, அது வற்றி உதிரியாகும் வரைக் கிளறவும். இறுதியில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
அரைத்த கொள்ளுவை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் செய்யலாம்.

கொள்ளு ஓலன்

தேவையானவை:
 பூசணிக்காய் - ஒரு கப்
 கொள்ளு - கால் கப்
 பச்சை மிளகாய் - 2
 இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒரு கப்
 முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
 தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 
செய்முறை::
கொள்ளுவை 8 மணி நேரம் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4 முதல் 5 விசில் வரும்வரை வேகவைக்கவும். பூசணிக்காயை மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து இரண்டாம் தேங்காய்ப்பாலுடன் பூசணிக்காய், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன் வேகவைத்த கொள்ளுவை சேர்த்து வேகவிடவும். இறுதியாக முதல் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
முதல் தேங்காய்ப்பால் ஊற்றிய உடனேயே அடுப்பிலிருந்து இறக்கவும். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் திரிந்துவிடும்.

கொள்ளு-சீஸ் கட்லெட்

தேவையானவை:
 கொள்ளு - 100 கிராம்
 உருளைக்கிழங்கு - 200 கிராம்
 துருவிய சீஸ் - 3 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மைதா மாவு - 2 டீஸ்பூன்
 பிரெட் தூள் - 100 கிராம்
 எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொள்ளுவை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வரும்வரை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். அந்த மாவை விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகச் செய்யவும்.
மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்துத் நீர்க்க கரைக்கவும். கட்லெட்டுகளை மைதா மாவில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். அடுப்பில் தோசைக்கல் வைத்துச் சூடாக்கி எண்ணெய் சேர்த்து, கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும்வரை வேகவைத்து எடுத்து, சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு:

எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.

கொள்ளுத் துவையல்

தேவையானவை:
 கொள்ளு - ஒரு கப்
 காய்ந்த மிளகாய் - 3
 பூண்டு - 4 பல்
 தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கடுகு - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொள்ளுவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதை துவையலில் சேர்த்துச் சுவைக்கவும்.

குறிப்பு:
பூண்டை தோலுடன் அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.

கொள்ளு ஃப்ரூட் சாலட்

தேவையானவை:
 வேகவைத்த கொள்ளு, 
சிறு துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள், 
கொய்யாப்பழம், 
மாதுளம் முத்துக்கள் - தலா கால் கப்
 சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு  - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கொள்ளுவை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, உப்பு சேர்த்து, 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கொள்ளு, ஆப்பிள், கொய்யாப்பழம், மாதுளை முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு:
ஆப்பிள் கறுக்காமல் இருக்க நறுக்கியவுடன் உப்பு கலந்த நீரில் போட்டு எடுக்கவும்.

கொள்ளுக் கஞ்சி

தேவையானவை:
 கொள்ளு, வரகு அவல் - தலா கால் கப்
 மோர் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க:
 எண்ணெய் - அரை டீஸ்பூன்
 சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை:
கொள்ளுவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, கொள்ளு வெடிக்கும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வரகு அவலை வெறும் வாணலியில் வறுக்கவும்.

ஒரு குக்கரில் கொள்ளு, வரகு அவல், ஒரு கப்  தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும்.  கஞ்சி சூடாக இருக்கும்போது நன்றாக மசித்து ஆறவிடவும். ஆறியதும் உப்பு, மோர் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

மிளகை ஒன்றிரண்டாகத் தட்டவும்.  ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் சீரகம், மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, கொள்ளுக் கஞ்சியில் சேர்க்கவும்.  கொத்தமல்லித்தழை தூவி, சின்ன வெங்காயத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
வரகு அவலுக்கு பதில் வரகரிசியும் சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்ளு மசாலா ரைஸ்

தேவையானவை:
 வேகவைத்த சாதம் - ஒரு கப்
 வேகவைத்த கொள்ளு - கால் கப்
 துருவிய கேரட் - கால் கப்
 நறுக்கிய குடமிளகாய் - கால் கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க:
 எண்ணெய் + நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
செய்முறை:
குடமிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாயைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் துருவிய கேரட், கொள்ளு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக வேகவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

கொள்ளு ரசம்

தேவையானவை:
 வேகவைத்த கொள்ளு - 2 டேபிள்ஸ்பூன்
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 தக்காளி - ஒன்று
 மஞ்சள்தூள்  - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 பூண்டு - 3 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிது
 வேகவைத்த கொள்ளுத் தண்ணீர் - ஒரு கப்

தாளிக்க:
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - சிறிது
 காய்ந்த மிளகாய் - 2
 பொடித்த பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
மிளகு, சீரகம் மற்றும் பூண்டை இடித்துக் கொள்ளவும். வேகவைத்த கொள்ளை நன்றாக மசித்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்து வைத்துள்ள கொள்ளு, இடித்து வைத்துள்ள மிளகு-சீரகம்-பூண்டு, வேகவைத்த கொள்ளுத் தண்ணீர், புளித் தண்ணீர் அனைத்தையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். நுரை கூட்டி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:
ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிட்டால், கடுத்துவிடும். அதாவது, உப்பு கூடியதுபோல் ஆகிவிடும். நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும்.

கொள்ளுப் பொடி

தேவையானவை:
 கொள்ளு - ஒரு கப் (200 கிராம்)
 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 15
 பூண்டு - 8 பல்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டைத் தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து (எண்ணெய் வேண்டாம்) கொள்ளைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்து எடுத்துவைக்கவும். அதேபோல் சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துவைக்கவும். உப்பையும் வறுத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பைக் குறைத்துவைத்து, காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து, கருகிவிடாமல் உடனே எடுத்துவிடவும். பின்னர் பூண்டைச் சேர்த்து வதக்கியெடுத்து, அதனுடன் பெருங்காயம் சேர்க்கவும். வறுத்து எடுத்த அனைத்தையும் ஆறைவைத்து, பின்னர் மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இந்தப் பொடியை சாதம் மற்றும் இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

குறிப்பு:
உப்பை வெறும் வாணலியில் வறுத்து வைத்து பிறகு பொடியுடன் அரைத்தால் பொடி நீண்ட நாட்களுக்கு கெடாது. இல்லையென்றால் உப்பில் உள்ள ஈரத்தன்மையால் பொடி கெட வாய்ப்புண்டு.

கொள்ளு மக்னி
தேவையானவை:
 கொள்ளு - அரை கப்
 ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய பூண்டு  - 6 பல்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சை மிளகாய் - 2
 தக்காளி - ஒன்று
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை:
கொள்ளு, ராஜ்மா இரண்டையும் இரவு முழுவதும் தனித்தனியாக ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீர் வடிக்கவும். ஊறவைத்த கொள்ளு, ராஜ்மா, உப்பு, சிறிது இஞ்சி, பாதி அளவு மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் குக்கரில் சேர்த்து மூடி போடவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 7 முதல் 8 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்துவைக்கவும். மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய்/எண்ணெய் சேர்த்து உருக்கவும். பிறகு, சீரகம் சேர்த்துத் தாளித்து மீதமுள்ள நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தங்காளி, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் மீதமுள்ள மிளகாய்த்தூள், வேகவைத்த கொள்ளு-ராஜ்மா கலவை முதலியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் கொள்ளு, ராஜ்மா கலவை வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்த்து, சிறிது உப்பு (ஏற்கெனவே பயறுகளை வேகவைக்கும்போது உப்பு சேர்த்திருக்கிறோம் என்பதால், சிறிது போதும்) சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:

ராஜ்மா, கொள்ளு வேகவைக்கும்போது இஞ்சி சேர்ப்பதால் நன்றாக வேகும் என்பதுடன், வாயுத்தன்மை குறையும்.

கொள்ளு அடை

தேவையானவை:
 கொள்ளு - அரை கப்
 பச்சரிசி, இட்லி அரிசி, கடலைப்பருப்பு - தலா கால் கப்
 உளுத்தம்பருப்பு, ஜவ்வரிசி - தலா ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
 இஞ்சி - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 பெரிய வெங்காயம் - ஒன்று
 முருங்கை இலை - ஒரு கைப்பிடி
 துருவிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
கொள்ளுவை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி, இட்லி அரிசி, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, உப்பு முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது அரைத்துவிட்டு, பிறகு ஊறவைத்த அனைத்துப் பொருட்களையும் தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.
ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். அரைத்த மாவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், முருங்கை இலை, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். மாவு தண்ணீராகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாமல் அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

கொங்கு நாட்டு கொள்ளு மசியல்

தேவையானவை:
 கொள்ளு - 100 கிராம்
 சீரகம், முழுமல்லி (தனியா) - 
தலா அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிது
 பூண்டு - 2 பல்
 பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
 புளி - சிறிது
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:
 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 காய்ந்த  மிளகாய் - 2
செய்முறை:
கொள்ளுவை இரவு முழுவதும் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும்  சீரகம், முழுமல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

ஒரு குக்கரில் வேகவைத்த கொள்ளு, வதக்கிய கலவை, புளித்தண்ணீர் சேர்த்து, மூடி, மிதமான தீயில் கால் மணி நேரம் வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன் குக்கரைத் திறந்து உப்பு சேர்த்து பருப்பு கடையும் மத்தால் நன்றாக மசித்துவிடவும். மசியல் தண்ணீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது.

இறுதியாக, மீதமுள்ள எண்ணெயை ஒரு தாளிக்கும் கரண்டியில் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, மசியலில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

Friday, 9 March 2018

கிழங்குகள் யாருக்கு ? ஏன் ? எவ்வளவு ?


குறைந்தபட்சம் உருளைக்கிழங்கு பொரியல் போதும்; ஒரு குழந்தையை ரசம் சாதம் சாப்பிட வைக்க. சலிப்பூட்டும் வெக்கை நிறைந்த பேருந்துப் பயணத்தில் ஜன்னல் வழியே விற்கப்படும் நான்கு பனங்கிழங்குகள் போதும்; பயணத்தை ரசனையாக்க. ஆதி மனிதனுக்கும், பஞ்சகாலத்திலும் பக்கபலமாக இருந்து பசியாற்றியவை கிழங்குகளே.   

நாம் சாப்பிடும் உணவிலிருக்கும் கார்போஹைட்ரேட்தான் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. `கார்போஹைட்ரேட் சத்துகளின் உறைவிடம்’ என்றே கிழங்குகளைச் சொல்லலாம். சில கிழங்குகள் வேர்ப் பகுதியைக் குறிக்கும்; வேறு சில, தண்டு, இலைப் பகுதிகளையும் சேர்த்துக் குறிக்கும். உதாரணமாக, உருளைக்கிழங்கு, சேனை போன்றவை வேர்ப் பகுதியிலிருக்கும் கிழங்கை மட்டும் குறிக்கும்; சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றில் இலைப் பகுதியையும் சேர்த்துக்கொள்ளலாம். இவை சத்துகளின் பிறப்பிடமாக இருந்தாலும், சர்க்கரைநோய், இதய நோய் இருப்பவர்கள் இவற்றைச் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். யாரெல்லாம் கிழங்கு சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம், எந்தக் கிழங்கு எதற்கு நல்லது ? விரிவாகப் பார்க்கலாம்.  

கேரட்

சத்துகள்: வைட்டமின் பி 6, ஏ, சி, கே, பொட்டாசியம், ஃபோலேட் (Folate), இரும்புச்சத்து நிறைந்தது கேரட். மற்றக் கிழங்குகளைவிட, பீட்டா - கரோட்டின் சத்து அதிகமுள்ளது. கேரட்டை அதிகமாகச் சாப்பிடும் சிலருக்கு சருமம் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் மாறும். அந்த மாற்றங்களைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. ஒன்றிரண்டு நாள்களில், தானாகவே அந்த நிறம் மாறிவிடும். நான்கு நாள்களுக்கும் மேல்  நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

100 கிராம் கேரட்டில் ஆற்றல் 41 கிலோகலோரிகள், 9.6 கிராம் கார்போஹைட்ரேட், 0.24 கிராம் கொழுப்புச்சத்து, 0.93 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.

நன்மைகள்: கொழுப்புச்சத்து குறையும்; மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். சருமம் மற்றும் கண் பிரச்னைகள் ஏற்படாமல் காக்கும்; உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்; செரிமானப் பணிகளைச் சீராக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேரட்டை வேகவைத்தால், அதன் இனிப்புத்தன்மை அதிகமாகும் என்பதால், பச்சையாகச் சாப்பிடுவதே சிறந்தது. சர்க்கரைநோய், இதயக் கோளாறுகள் உள்ளவர்கள், இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

சேப்பங்கிழங்கு

சத்துகள்: வைட்டமின்கள் ஏ, சி, இ, பி 6 நிறைந்தது. அதிகக் கலோரிகள் கொண்ட கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு முக்கியமானது. இதில், மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் ஆகிய தாதுப் பொருள்கள் அதிகம் உள்ளன.
 
100 கிராம் சேப்பக்கிழங்கில் ஆற்றல் 142 கிலோகலோரிகள், 35 கிராம் கார்போஹைட்ரேட், 5 கிராம் நார்ச்சத்துகள் உள்ளன.

நன்மைகள்: செரிமானத்தைச் சீராக்கும்; சருமம், கண் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். தசை மற்றும் நரம்புப் பகுதிகளை வலிமையாக்க உதவும்.

தாமரைத்தண்டுக் கிழங்கு 

சத்துகள்: வைட்டமின்கள் சி, பி, காப்பர், இரும்புச் சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது. 

100 கிராம் தாமரைத்தண்டில் ஆற்றல் 66 கிலோகலோரிகள், 16 கிராம் கார்போஹைட்ரேட், 3.1 கிராம் நார்ச்சத்து, 0.07 கிராம் கொழுப்புச்சத்து, 1.58 கிராம் புரதம் ஆகியவை இருக்கின்றன.

நன்மைகள்: இதயம், சருமம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். செரிமானம் மேம்படும்; ரத்த ஓட்டம் சீராகும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.  மனநிலையில் ஏற்படும் தடுமாற்றங்கள் (Mood Swing), மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும். இதிலுள்ள வைட்டமின் - பி, ரத்த அணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

உருளைக்கிழங்கு 

சத்துகள்: கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துகள், வைட்டமின் ஏ, சி, பி 6 ஆகியவை நிறைந்தது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் க்யூகோ-அமைன்ஸ் (kukoamines) எனப்படும் சத்து இதில் உள்ளது.

100 கிராம் உருளைக்கிழங்கில் ஆற்றல் 77 கிலோகலோரி, கொழுப்பு - 0.1கிராம், புரதம் - 2 கிராம், நார்ச்சத்து - 2.2 கிராம் உள்ளன.

நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத் திறனை மேம்படுத்தும். தூக்கமின்மைப் பிரச்னையைச் சரிசெய்யும். மலச்சிக்கல் நீக்கும். எலும்பை வலுப்படுத்தும்; ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மூளை நரம்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். உருளைக்கிழங்கின் தோலில் அதிகப் புரதச்சத்துகள் இருக்கின்றன. எனவே, தோலோடு சேர்த்துதான் கிழங்கைச் சாப்பிட வேண்டும். உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது என்பதால், புரதச்சத்து அதிகமுள்ள உணவோடு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால், செரிமானக் கோளாறு, வாய்வுப் பிரச்னைகள் ஏற்படலாம்.

முள்ளங்கி 

சத்துகள்: வைட்டமின் சி அதிகமுள்ள கிழங்கு, முள்ளங்கி. காப்பர், பொட்டாசியம், வைட்டமின் - பி6, கால்சியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்தது. முள்ளங்கியின் சிறப்பம்சமே, இதிலுள்ள நீர்ச்சத்துதான்.

100 கிராம் முள்ளங்கியில் ஆற்றல் 16 கிலோகலோரி, 3.4 கிராம் கார்போஹைட்ரேட், 1.6 கிராம் நார்ச்சத்து, 0.6 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.

நன்மைகள்: எலும்பு, பல், திசுக்கள் அனைத்தின் வளர்ச்சியையும் முள்ளங்கி வலிமைப்படுத்தும், அதிகரிக்கும். வயிறு மற்றும் குடல் பகுதிகளைச் சுத்தப்படுத்தும். சர்க்கரைநோய் உள்ளவர்கள், முள்ளங்கி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைத் தடுக்கும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு 

சத்துகள்: இரும்புச்சத்து, வைட்டமின் - டி, பி-6, மக்னீசியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், மற்றும் பி-6 போன்ற சத்துகளைக் கொண்டது. 

100 கிராம் சக்கரைவள்ளிக்கிழங்கில் ஆற்றல் 66 கிலோகலோரி, கார்போஹைட்ரேட் - 20.1 கிராம், கொழுப்பு - 0.1 கிராம் ஆகியவை இருக்கின்றன.

நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; செரிமானம் சீராகும்; மூட்டுப் பிரச்னைகள், ஆஸ்துமா, குடல் அழற்சி, வாதம் போன்ற பிரச்னைகளின் தீவிரம் குறைய உதவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு, அதிக இனிப்புத் தன்மையும், அதிக கார்போஹைட்ரேட் சத்தும் கொண்டது. இதை வறுத்து அல்லது பொரித்துச் சாப்பிடுவதும் அதிகம் சாப்பிடுவதும் வாயுக்கோளாறை ஏற்படுத்தக்கூடும். வேகவைத்த கிழங்கை காலை அல்லது மதிய வேளையில் அளவாகச் சாப்பிடலாம்.

மரவள்ளிக்கிழங்கு 

சத்துகள்: வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. வைட்டமின் பி-யின் முக்கியமான அங்கமான பான்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) இதில் அதிகம் உள்ளது. ஃபோலேட் (Folate), வைட்டமின் பி-6, நல்ல கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது.

100 கிராம் மரவள்ளிக்கிழங்கில் ஆற்றல் 160 கிலோகலோரி, 0.28 கொழுப்பு, 38.06 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் நார்ச்சத்து, 1.36 கிராம் புரதம் உள்ளன.

நன்மைகள்: ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, ரத்தச்சோகை பிரச்னை சரியாகும்; எலும்பு அடர்த்தி அதிகமாகும்; செரிமானம் சீராகும்; தசைகள் வலுப்பெறும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். உடல் எடை அதிகரிக்க வேண்டுமென நினைப்பவர்கள், மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம். இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். இதிலிருக்கும் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கே மூன்றும் எலும்புக்கு வலுசேர்ப்பவை.

சேனைக்கிழங்கு 

சத்துகள்: கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள் குறைவாக இருக்கும் சேனைக்கிழங்கில், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி போன்ற சத்துகள் உள்ளன. 

100 கிராம் சேனைக்கிழங்கில் ஆற்றல் 118 கிலோ கலோரி, 27.9 கிராம் கார்போஹைட்ரேட், 4.1 கிராம் நார்ச்சத்து, 1.5 கிராம் புரதம் ஆகியவை இருக்கின்றன. 

நன்மைகள்: உள்ளுறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். ரத்தப்போக்கு, மூலம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் சேனைக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதன் தீவிரம் குறையும்.

காட்டுச் சேனை (Wild Yam) 

சேனைக்கிழங்கின் ஒருவகை. 


சத்துகள்: கெட்ட கொழுப்புச்சத்து மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. வைட்டமின்கள் சி, ஏ, பீட்டா கரோட்டின் (Beta-Carotene) ஆகியவை உள்ளன.

100 கிராம் காட்டுச் சேனையில் ஆற்றல் 118 கிலோ கலோரி, 0.17 கொழுப்பு, 27.88 கிராம் கார்போஹைட்ரேட், 1.7 கிராம் நார்ச்சத்து, 1.7 கிராம் புரதம் உள்ளன.

நன்மைகள்: பித்தப்பை தொடர்பான பிரச்னைகள், மூட்டுவலி பிரச்னைகள், வயிற்றுவலி, தசைப்பிடிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நரம்புப் பிரச்னைகள், மாதவிடாய்க் காலச் சிக்கல்கள் சரியாகும். இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் சத்து, இதயத்தைப் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் உறுதுணையாக இருக்கும். இதிலிருக்கும் வைட்டமின் சி சத்து, இளமையில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்

நூல்கோல் 

சத்துகள்: மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் போன்ற தாதுப்பொருள்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைவான கலோரிகள் கொண்டது. வைட்டமின்கள் ஏ, பி, சி, கே, ஒமேகா 3 அமிலம் இதில் உள்ளன. 

100 கிராம் நூல்கோலில் ஆற்றல் 27 கிலோகலோரி, 0.1 கொழுப்பு, 6.2 கிராம் கார்போஹைட்ரேட், 3.6 கிராம் நார்ச்சத்து, 1.7 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.

நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; பரிமாண வளர்ச்சிக்கு உதவும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். செரிமானம் சீராகும்.

கருணைக்கிழங்கு 

சத்துகள்: சேனைக்கிழங்கின் ஒருவகைதான் கருணைக்கிழங்கு. மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் குறைவான அளவிலேயே இதில் இருக்கின்றன. 

150 கிராம் கருணைக்கிழங்கில் ஆற்றல் 80 கிலோகலோரிகள், 2 கிராம் புரதம், 1 கிராம் நார்ச்சத்து உள்ளன. 

நன்மைகள்: உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்பு பலவீனம், பித்தப்பை பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும். மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும். ரத்த ஓட்டம் சீராவதற்கு உதவி புரியும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலி, மாதவிடாய்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.

பனங்கிழங்கு 

சத்துகள்: நார்ச்சத்தும் இனிப்புச்சத்தும் அதிகமுள்ளது பனங்கிழங்கு. உடலுக்கு அவசியமான வைட்டமின் பி மற்றும் சி இதில் உள்ளன. 

100 கிராம் பனங்கிழங்கில் ஆற்றல் 87 கிலோகலோரிகள், 1 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்து ஆகியவை உள்ளன.

நன்மைகள்: உடல் பருமனாக வேண்டும் என நினைப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வரலாம். சர்க்கரை நோயாளிகளும்கூட இதை அவ்வப்போது சாப்பிடலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து விடுபடலாம். கர்ப்பிணிகளுக்கு நல்லது. உடல் உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவற்றைச் சரிசெய்யலாம்.

பீட்ரூட் 

சத்துகள்: மக்னீசியம், ஃபோலேட், காப்பர், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துகள் அதிகம் உள்ள கிழங்கு பீட்ரூட். இதில் உள்ள பீடா-சயானினில் (Betacyanin), `குளூட்டோமைன்’ அமினோ அமிலம் (Glutamine amino acid) உள்ளது. வளரும் குழந்தைகளின் திசுக்கள் வளர்ச்சியை இது அதிகப்படுத்தும். பலரும் பீட்ரூட்டின் கிழங்குப் பகுதியை மட்டும் சாப்பிடுவார்கள். இதன் மேற்பகுதியிலுள்ள இலைகளும் சாப்பிட ஏற்றவை. இவற்றில் நார்ச்சத்து, புரதச்சத்து,
வைட்டமின் - டி, கால்சியம் போன்ற பல சத்துகள் உள்ளன. 100 கிராம் பீட்ரூட்டில் 43 கிலோகலோரிகள், 0.2 கிராம் கொழுப்புச் சத்து, 10 கிராம் கார்போஹைட்ரேட், 1.6 கிராம் புரதம் இருக்கின்றன. 

நன்மைகள்: ரத்த அழுத்தம் குறையும்; புற்றுநோய் வராமல் தடுக்கும்; கல்லீரல், இதயம், குடல் பகுதிகளுக்கு நல்லது; ரத்தச்சோகை பிரச்னை சரியாகும்; கர்ப்பக் காலத்தில் சாப்பிட்டால், குழந்தை வளர்ச்சிக்கு உதவும் ஃபோலிக் அமிலத்தை (Folic acid) அதிகரிக்கச் செய்யும். சருமம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். பீட்ரூட் சாற்றை அருந்தி வந்தால், உடலில் நைட்ரேட் சத்து அதிகமாகும்.

டர்னிப் (TURNIP) 

சத்துகள்: குறைவான கலோரிகள் கொண்ட கிழங்கு வகை என்றாலும், தாதுப்பொருள்களும் நார்ச்சத்தும் அதிகம் கொண்டது. உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் ஏ மற்றும் சி, கரோட்டினாய்ட்ஸ் போன்றவை இதில் அதிகம் உள்ளன. 

100 கிராம் டர்னிப்பில் ஆற்றல் 28 கிலோகலோரி, 0.1 கொழுப்பு, 6.4 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் நார்ச்சத்து, 0.9 கிராம் புரதம் இருக்கின்றன.

நன்மைகள்: இதன் நார்ச்சத்துகள், குடல் பிரச்னைகளைச் சரிசெய்யும். அழற்சி பாதிப்புகள் சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். முதுமைத் தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். 

மேலே கூறப்பட்டிருக்கும் கிழங்குகளைப்போல, வேறு சில கிழங்குகளும் பல்வேறு சத்துகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, மாகாளிக் கிழங்கு. மாகாளிக்கிழங்கைப் பெரும்பாலானவர்கள் ஊறுகாயாக உட்கொள்வார்கள். நன்னாரி வகையைச் சேர்ந்த மாகாளிக்கிழங்கு, உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும்; வாதம், பித்தம் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கிழங்கை எப்படிச் சாப்பிடலாம்? 

பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும். சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச் சத்துகளையும் ஒருசேர எடுத்துக்கொள்ளும் இந்த முறை, ‘பேலன்ஸ்டு டயட்’ (Balanced Diet) எனப்படுகிறது. நிறையச் சத்து உடலில் சேரும்போது ஒன்றுக்கொன்று பேலன்ஸ் ஆகி, ஒரு சத்து மட்டும் அதிகரித்து, பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கும்.

கிழங்கை எப்படிச் சாப்பிடக் கூடாது?

கிழங்கை எண்ணெயில் பொரித்தால், அதன் சத்துகள் குறைந்துவிடும். எனவே அப்படிச் சாப்பிடக் கூடாது. 

கிழங்கை வேகவைத்த பிறகு, அதன் தோலை உரிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. தோல் நீக்கிய கிழங்கில் உடலுக்குத் தேவையான சத்துகள் இருக்காது. 

*சிலர் பச்சையாகக் கிழங்குகளைச் சாப்பிடுவார்கள். அது, சில நேரங்களில் செரிமானக் கோளாறுகள், வாய்வுக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தவிர்த்துவிடலாம்.

எல்லோருக்கும் ஏற்றதா கிழங்கு? 

ஒவ்வொரு கிழங்கிலும் ஒவ்வொரு சத்து இருக்கும். எல்லோரும் எல்லாக் கிழங்குகளையும் சாப்பிடலாம். கிழங்கு எப்படி உட்கொள்ளப்படுகிறது, சாப்பிடும் நேரம், சமைக்கப்பட்ட முறை, எத்தனை கிழங்குகளைச் சாப்பிடுகிறோம் போன்றவைதான் பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். யாராக இருந்தாலும், அடிக்கடி கிழங்கு சாப்பிடுவது தவறு. எல்லோருமே 15 நாள்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம். அப்படிச் சாப்பிடும்போது, வேகவைத்து, தோலோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும். பிற காய்கறிகளோடு, புரதச்சத்துகள் சேர கிழங்கைச் சாப்பிடவேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகள், கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டிய கிழங்குகள்...

இதயநோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, இவர்கள் கிழங்கு வகைகளைத் தவிர்த்துவிடலாம். மாதத்துக்கு இருமுறை என்ற கணக்கில் உட்கொள்ளலாம்; அதிகம் சாப்பிடுவது தவறு. ‘பேலன்ஸ்டு டயட்’ முறைப்படி கிழங்கைச் சாப்பிட்டால், பாதிப்பு இருக்காது. எப்படி, எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். கிழங்கு சாப்பிட விரும்புகிறவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் சொல்வதுபோல சமைத்து, அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் கிழங்கு சாப்பிடலாமா? 

சாப்பாட்டுக்கு முன்னர் 120 mg/dl, சாப்பாட்டுக்குப் பின்னர் 180 mg/dl எனச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், கிழங்கு சாப்பிடலாம். அப்படி இல்லாதவர்கள், அவர்களின் உடல் அமைப்பு, சர்க்கரை அளவு அனைத்தையும் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனையின்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கிழங்குகள் ஒவ்வாமையை எளிதாக ஏற்படுத்திவிடும் என்பதால், தவிர்ப்பதே சிறந்தது.

எந்த  நேரத்தில்  கிழங்கு  சாப்பிடலாம்? 

கிழங்குகள், பல்வேறு தாதுச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டவை. அவை செரிமானமாக அதிக நேரத்தையும், அதிக உழைப்பையும் எடுத்துக்கொள்ளும். எனவே, உடலுழைப்பு அதிகம் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிழங்கு சாப்பிட வேண்டும். உதாரணமாக, காலை அல்லது மதிய நேரத்தில் கிழங்கு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிட்டு, அதற்கான உழைப்பை நாம் தரவில்லை என்றால், செரிமானக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும். மதியம் சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

எத்தனை நாள்களுக்கு ஒரு முறை கிழங்கு உட்கொள்ளலாம்?

ஒவ்வொருவரின் உடல் நிலையையும் பொறுத்து, கால அளவு மாறுபடும். சர்க்கரைநோய், இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் போன்ற பாதிப்புகள் இல்லாதவர்கள் என்றால், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை உணவில் கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம். பாதிப்பு இருப்பவர்கள், 15 நாள்களுக்கு ஒருமுறை கிழங்கு சாப்பிடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. இந்த நாள் கணக்கும் அவரவரின் உடல் அமைப்பைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையைக் கேட்டு, அவர்கள் சொல்லும் முறைப்படி, சொல்லும் நேரத்தில் மட்டுமே சாப்பிடலாம்.

கிழங்கு தரும் நன்மைகள் 

குழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது. பரிமாண வளர்ச்சியை மேம்படுத்துவதில், கிழங்குகளுக்குப் பெரிய பங்கு உண்டு.

தீமைகள்

கிழங்கு, கார்போஹைட்ரேட் நிறைந்தது. அளவுக்கு மீறி உட்கொண்டால், செரிமான பிரச்னை, வாய்வுத் தொல்லைகள் ஏற்படும். ஏதாவது நோய்க் குறைபாடு இருப்பவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் கிழங்குகளைத் தொடர்ச்சியாக சாப்பிடவே கூடாது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடலுழைப்பு அதிகமில்லாதவர்கள், குடலில் பாதிப்பு இருப்பவர்கள், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள்...! சிலர் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என ஏதாவது ஒரு கிழங்கை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி ஒன்றை மட்டும் சாப்பிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். புரதச்சத்துகள் நிறைந்த காய்களோடு சேர்த்துக் கிழங்கைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்.

கிழங்குக்கு `நோ’ சொல்ல வேண்டியவர்கள் 

`இவர்கள் கிழங்கு சாப்பிடலாம்’, `இவர்கள் சாப்பிடக் கூடாது’ என்ற யாரையும் குறிப்பிட்டு ஒதுக்கிவிட முடியாது. சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், கிழங்கு விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில் ஊட்டச்சத்து நிபுணரிடமும், சம்பந்தப்பட்ட நோயின் சிறப்பு மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்கு சாப்பிடலாம்.

கிழங்குகள் சருமப் பாதிப்புகளை ஏற்படுத்துமா?

ஆம், ஏற்படுத்தும். ஆனால், வெகுசிலருக்கு மட்டுமே ஏற்படுத்தும். அவரவரின் சரும அமைப்பைப் பொறுத்துதான் பாதிப்பு ஏற்படும். முதன்முறை சாப்பிட்டு சரும ஒவ்வாமை ஏற்பட்டால், சிலர் அந்தக் கிழங்கைச் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். அது தவறு. சில கிழங்குகளை நாள்பட நாள்பட உடலும் சருமமும் ஏற்றுக்கொள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வாமை தொடர்ந்தால், சரும மருத்துவரை அணுகவும்.

கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான பாதிப்பில் இருந்து எப்படித் தப்பிப்பது?

கிழங்குகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரமும், அதிக உழைப்பும் தேவைப்படும். இரண்டில் எது குறைந்தாலும் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். கிழங்கு வகைகளைச் சாப்பிட்டவுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். சிறிதளவு சீரகம், பெருங்காயம் சேர்த்து வேகவைக்கப்பட்ட கிழங்குகளைச் சாப்பிடுவது, செரிமானக்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது, வேலை செய்வது, உடலுழைப்பைச் சற்று அதிகப்படுத்துவது போன்றவற்றின் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

வாய்வு பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? 

உடலமைப்பைப் பொறுத்துதான் ஒருவருக்கு கிழங்கால் வாய்வு பாதிப்பு ஏற்படும். குடலில் பாதிப்பு இருந்தால், இந்தப் பாதிப்பு தீவிரமாக இருக்கும். எனவே, குடல் பாதிப்பு இருப்பவர்கள், கிழங்கு வகைகளை முழுமையாகத் தவிர்த்துவிடலாம். சிலர் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் சிலர் அப்படியே கிழங்கை விழுங்குவதும் உண்டு. அதனால், செரிமானப் பணியின்போது அவை செரிப்பதற்குக் காலதாமதம் ஏற்படும். காலம் தாழ்த்தி கார்போஹைட்ரேட் செரிமானம் ஆகும்போது, வாய்வுத் தொந்தரவு ஏற்படலாம். கிழங்கு சாப்பிடும்போதெல்லாம் வாய்வுத் தொந்தரவு இருந்தால், குடல் தொடர்பான பரிசோதனை ஒன்றை, மருத்துவரின் பரிந்துரையின்படி செய்துகொள்ளலாம்.

அன்றாட உணவில் உருளைக்கிழங்கு சேர்த்துக்கொள்ளலாமா?

உருளையின் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து அனைத்தும் அதிக உடலுழைப்பு செய்பவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு அதிக உடலுழைப்பு இருக்குமென்பதால் பிரச்னை இல்லை. பெரியவர்களும் அதிக உடலுழைப்பை இப்போதெல்லாம் தருவதில்லை. அதே நேரத்தில், உருளைக்கிழங்கை எந்த வடிவில் சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம். குழந்தையோ, பெரியவரோ சிப்ஸாகச் சாப்பிட்டால் ஆபத்து. உருளைக்கிழங்கு நிறைய பேருக்கு விருப்ப உணவாக இருக்கும். அவர்கள் கேரட், பீன்ஸோடு உருளைக்கிழங்கைச் சமைத்து வாரத்துக்கு மூன்று முறை சாப்பிடலாம். நோய் பாதிப்பு எதுவும் இருந்தால், அது கட்டுக்குள் வரும் வரை உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அதிகமாகுமா?

பீட்ரூட், சர்க்கரைவள்ளி போன்ற கிழங்குகளில் இனிப்புத்தன்மை கூடுதலாக இருக்கும் என்பதால், அப்படிச் சொல்லப்படுகிறது. உண்மையில், மற்றவற்றைப்போல இதுவும் ஒருவகைக் கிழங்கு. அவ்வளவே! பீட்ரூட்டில் இருக்கும் நன்மைகள் ஏராளம். உதாரணமாக, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், குழந்தை உருவாக்கத்துக்கும் பெரிதும் உதவும் ஃபோலிக் அமிலத்தை (Folic acid) பீட்ரூட் அதிகமாகத் தரும். சருமம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். நோய் கட்டுக்குள் இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டாலும் ஆபத்துதான்.

கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் சில தீமைகளும் இருக்கின்றன. சரியான மருத்துவப் பரிந்துரையின்றி அளவுக்கதிகமாக கிழங்குகளைச் சாப்பிடுவது, தவறான புரிந்துகொள்ளல் காரணமாகச் சாப்பிடாமலே இருப்பது, தவறான நேரத்தில் சாப்பிடுவது எனக் கிழங்கு பற்றிய பல குழப்பங்கள் இன்றைக்கு இருக்கின்றன. கிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும், வைட்டமின்களுக்கும் மாத்திரைகள் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கையாகக் கிடைக்கும் சத்துகளை ஒதுக்கிவிட வேண்டாம். அளவுக்கு மீறாமல், சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் கிழங்கைப் போன்ற ஆரோக்கியமான உணவு வேறெதுவும் இல்லை..!

உப்பு சேர்த்து கிழங்கு சாப்பிடுவதால் அசிடிட்டி ஏற்படுமா?

உணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பது உண்மை; அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்னை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மசாலா அதிகம் சேர்த்து வறுத்துச் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்கள்தான் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்.


உடல் எடையை அதிகரிக்கக் கிழங்குகள் உதவுமா? 

கிழங்குகளைப் பொறுத்தவரை, கார்போஹைட்ரேட் அளவைவிட கலோரியின் அளவே அதிகமாக இருக்கும். கார்போஹைட்ரேட்தான் எடையை அதிகரிக்கும். எடையைக் குறைக்க விரும்புகிற பலரும், இதுபற்றிச் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல், அனைத்து வகைக் கிழங்குகளையும் தவிர்த்துவிடுகிறார்கள். குறிப்பாக, பேலியோ டயட் (Paleo diet) முறையைப் பின்பற்றுபவர்கள், கிழங்கை முற்றிலுமாகத் தவிர்ப்பதும் உண்டு. சரியான விகிதத்தில் கிழங்கைச் சாப்பிட்டால், எடை மாற்றங்கள் ஏற்படாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் பூரிக்கிழங்கு சாப்பிடலாம்; குழம்பு வகைகளில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளலாம்; வறுத்த கிழங்குகளைச் சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க உதவும்.