- திருநாவுக்கரசர்
பொருள் திருச்சேறைத் தலத்தில், செந்நெறி எனும் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அழகிய கால பைரவர் வடிவம் கொண்டு, விரிந்த பல சுடர்களை உமிழும் சூலம், வெடி போன்று ஒலிக்கும் டமருகம் மற்றும் கங்கை ஆகியவற்றைத் தரித்து, யானை வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார். இதைக் கண்டு உமையவள் அஞ்ச... தன் மணிவாய் மலர்ந்து சிரித்து அருள் செய்தார் சிவனார்.
சிவாலயங்களில் நடைபெறும் சிவபூஜை... காலையில் சூரியனில் துவங்கி, அர்த்த ஜாமத்தில் பைரவ பூஜையுடன் நிறைவுறும். ஆலயத்தின் தென்கிழக்கில் சூரியனும், வடகிழக்கில் பைரவரையும் அமைத்து வழிபடுவர்.
சிவபெருமானின் வீரத்தைப் போற்றும் அஷ்ட வீரட்டம் திகழ்வது போல, அவரது வீரத்தின் வெளிப்பாடான பைரவரும் எட்டுவித திருவடிவங்களுடன் அருள் புரிகிறார்.
ஒரு முறை... அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படி செய்து அவமானப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள், சிவனாரை சரணடைந்தனர். அவர்களைக் காப்பாற்றத் திருவுளம் கொண்ட சிவனார், மகா பைரவரைத் தோற்றுவித்தார்; அந்தகனை அழிக்கும்படி பைரவருக்கு ஆணையிட்டார் என்கின்றன புராணங்கள்.
சிவனாரின் திருமேனியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றியதாக கூறுவர்.
அஸி தாங்கர் - இவரின் சக்தி பிராஹ்மணி, அன்ன வாகனம் கொண்டவர்; ருரு- இவரின் சக்தி மகேச்வரி, காளை வாகனம்; சண்டர்- இவரின் சக்தி கௌமாரி, மயில் வாகனம்; உன் மத்தர்- இவரின் சக்தி வராஹி, குதிரை வாகனம்; கபாலர்- இவரின் சக்தி இந்திராணி, யானை வாகனம்; பீஷணர்- இவரின் சக்தி சாமுண்டி, சிம்ம வாகனம்; க்ரோதனர்- இவரின் சக்தி வைஷ்ணவி, கருட வாகனம்; சம்ஹாரர்- சண்டிகாதேவியை சக்தியாகக் கொண்ட இவரின் வாகனம் நாய்.
பைரவரின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம்.
பைரவருக்கு எட்டு விதமான (அஷ்ட) அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. சிவாச்சார்யர்கள் எட்டு பேர் சூழ்ந்திருக்க, எட்டு விதமான மலர்கள் மற்றும் எட்டு வித தளிர் (இலை)களாலும் அர்ச்சனை செய்யப்படும்.
சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பால் சாதம், எலுமிச்சைசாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எள் சாதம், சம்பா (மிளகு
சீரகம்) சாதம் ஆகியவற்றுடன், சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன்வடை, பாயசம், தேன்குழல், எள் உருண்டை, அதிரசம் ஆகிய பட்சணங்களும் பைரவருக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். எட்டு வித ஆரத்திகளால் தீபாராதனை செய்வர். இந்த பூஜையில் செய்யப்படும் ஹோமத்தில் எட்டு விதமான சமித்துகளைப் பயன்படுத்துவர். பைரவருக்கு மிகவும் விருப்பமானது சண்பக மாலையாகும். அவர், சண்பக வனங்களில் மகிழ்ச்சியுடன் உறைகின்றார். திருச் செங்காட்டங்குடியில் பைரவருக்கு சண்பகப்பூ உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
முற்காலத்தில் அரசர்கள், தங்களது பொக்கிஷ சாலையில் பைரவரை பிரதிஷ்டை செய்து, விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். இதனால் அங்கு பொன்னும் மணியும் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.பொன்- பொருள் அருளும் இந்த மூர்த்தியை 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்பர். இவர் பொன் (மஞ்சள்) நிறத்துடன் திகழ்பவர். மஞ்சள் நிறப் பட்டாடை அணிந் திருப்பதுடன், மாணிக்கம் முதலான அணிமணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சயப் பாத்திரம் ஏந்தியிருப்பார். இவர், தம் மடி மீது 'ஸ்வர்ணா' என்னும் ஸ்வர்ண தேவியை அமர்த்திக் கொண்டிருப்பார். அனைத்து தேவர்களாலும் வணங்கப் பெறும் இந்த அம்பிகை, தன் இடக் கரத்தில் பொன் நிரம்பிய குடத்தை அனைத்திருப்பாள். இந்த தேவி, அளவில்லா மகிழ்ச்சியும் சகல ஸித்திகளும் அருள்பவள்.
காசிக் கண்டம் எனும் நூலில் பைரவரின் சிறப்புகளும், அறுபத்து நான்கு பைரவர்கள் மற்றும் அவர்களுக்குரிய தேவியரின் திருநாமங்களும் இடம்பெற்றுள்ளன.
காசி «க்ஷத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமைக் காவலராக, பல்வேறு திருநாமங்களில் எழுந்தருளும் பைரவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இவர் களில் முதன்மையானவர் கால பைரவர். இவரது சந்நிதி, காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவரின் திருமேனியில் செந்தூரம் பூசி அதற்குமேல் பட்டு சரிகை துணி போர்த்தி இருப்பதுடன், முக கவசமும் அணிவித்துள்ளனர்.
| ||||
Saturday, 23 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 56
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 55
| பைரவர் |
பொருள் சிவந்த ஜுவாலைகளுடன் கூடிய ஜடாமுடியில் சந்திரன் திகழ, சிவந்த மேனியுடன் ஒளிமயமாக விளங்குபவர்; உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை ஏந்தியவர்; உலகைக் காப்பவர்; (பாவிகளுக்கு) பயங்கரமான தோற்றம் உடையவர்; நாயை வாகனமாகக் கொண்டவர்; மூன்று கண்களை உடையவர்; எப்போதும் ஆனந்த வடிவில் மிகுந்த கோலாகலத்துடனும் பூத- பிசாசுக் கூட்டங்களுக்குத் தலைவனாகவும் திகழும்... வடுகரும், கேஷ்த்திர பாலகருமான பைரவரை வணங்குகிறேன்!
இன்னொரு கதையும் சொல்வர்.
திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்!
இதில் சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு பண்ணினார். 'பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி' என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்தாராம் பைரவர். மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், ''முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அளித்தீர். இப்போது நீரே நான்முகனாகி விட்டீர். எனவே அவனை மன்னியுங்கள்!'' என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார்.
''வேதம் ஓதுவோருக்கு இனி நீரே அரசன்; அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு! யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு'' என்று அருளினார் ஈசன். எனவே, பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் வேதங்களை ஓதிக் கொண்டே இருப்பதால், வேதன், வேதி, வேதா, வேதபுரோகிதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
படிப்பு மற்றும் அறிவினால் வித்யாகர்வம் வந்து விடுகிறது; ஆணவமும் செருக்கும் உண்டாகிறது; இறுமாப்பு மற்றும் அகங்காரம் தலைதூக்கி விடுகிறது. இதனால் பொய்யும் புரட்டும் அதிகமாகி, பிற உயிர்களுக்குத் துன்பத்தையும் தீமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இவற்றையெல்லாம் சிவபெருமான் நீக்கினார் என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.
தனது உக்கிரத்தில் இருந்து பைரவ மூர்த்தியை சிருஷ்டித்து பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்குவதற்காக அவனது தலையை கொய்தார் அல்லவா சிவபெருமான்! இந்த பைரவ மூர்த்தியை பிரம்மசிரக் கண்டீஸ்வரர் என்று அழைப்பர்.
சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையானது கண்டியூர். இங்கு பிரம்மனது ஒரு தலையை கண்டித்து, துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் என பெயர் அமைந்ததாம்! தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர்.
இங்கு மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.
பிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது. பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான் என்பர். கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மசிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம்
காஞ்சிக்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்பது பிரம்மன் சிவபெருமானை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச் சந்நிதியில் பைரவ சிவன் வடிவம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.
வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து அவரிடம் உலகைக் காக்கும் பொறுப்பை அளித்தார் சிவபெருமான். எதிரிகளுக்கு பயத்தையும் தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்!
பைரவர் என்றால் பயங்கரமானவர் என்று பொருள். பெண்களுக்குக் காவலாக இருந்து தர்மத்தைக் காப்பதால் இவர் பைரவர் என்பாரும் உண்டு. பைரவர் என்பது மருவி வைரவர் ஆனதாகச் சொல்வர். வைரம் போல் திடமான தேகம் கொண்டவர்; பக்தர்களுக்கு வைரம் போன்ற உறுதியான கோட்டையாக இருந்து காவல் தெய்வமாக விளங்குபவர் என்பதற்காகவும் வைரவர் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
தலை மீது ஜ்வாலா முடி; மூன்று கண்கள் மற்றும் மணிகளால் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிந்தும் காணப்படுகிறது பைரவரின் வடிவம்! பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு; முன்னிரு கரங்களில் சூலம், கபாலம்! காவல் தெய்வம் என்பதால், காவலுக்கு உதாரணமாக சொல்லப்படும் நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இவரது வாகனமான நாய் இவருக்குப் பின்னே குறுக்காகவும், சில இடங்களில் நேராகவும் உள்ளது. சில தலங்களில், நான்கு நாய்களுடன் காட்சி தருகிறார் பைரவர்!
வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்கின்றனர்.
| ||||
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 54
| கங்காதரர் |
- திருஞானசம்பந்தர்
பொருள் அகப்பகையாகிய ஐம்புலன்களையும் அடக்கி, ஆற்றல் கொண்டவனாக பல ஆண்டுகள் தூய தவமியற்றிய பகீரதனுக்காக, பன்முகங்களுடனும் அடங்காத ஆரவாரத்துடனும் விரைந்து வந்த கங்கையை, திருச்சேறை வாழ் செந்நெறிச் செல்வனார், தன் செஞ் சடையில் ஏற்று அருள் புரிந்தார்!
ஆயிரம் முகங்கள், ஆயிரமாயிரம் கரங்களுடன் கங்காதேவி திகழ்வதாக புராணங்கள் போற்றுகின்றன. 'ஆயிரம் முகத்து நதி பாலன்' என்று முருகப் பெருமானைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
பர்வதராஜனின் இரண்டு மகள்களில் மூத்தவள் கங்கை; இளையவள் பார்வதி. இவர்களில்... பெண்ணாகவும் நதியாகவும் திகழ்பவள் கங்கை! பகீரதனின் வேண்டு கோளை ஏற்று, இவளை தன் சடையில் தாங்கிக் கொண்ட சிவனாரின் திருக்கோலமே ஸ்ரீகங்காதரர்!
'யோக பட்டயம் தரித்து, அர்த்த ஸ்வஸ்திகாசனத்தில் தட்சிணாமூர்த்தி போல் சிவனார் அமர்ந்திருக்க... அவரின் மேலிரு கரங்களில் மான்- மழு; கீழிரு கரங்களில் சின்முத்திரை, வரத முத்திரையும் திகழும். விரிசடையில்... ஆமை, மீன் மற்றும் முதலை முதலான உயிரினங்கள் தன்னகத்தே கொண்ட கங்கையின் திருமுகம் தென்படும்' என்று ஸ்ரீகங்காதரரின் திருவடிவை வர்ணிக்கிறது சிவபராக்ரமம்.
ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீபிட்சாடனர் திருவடிவங்களில் திகழும் கங்காவின் திருவடிவம்... உடலின் கீழ்ப்பகுதி மீன் அல்லது முதலையின் உடல் அமைப்புகளுடனும் மேற்பகுதி கரம்கூப்பித் தொழும் பெண்ணைப் போலவும் அமைந்திருக்கும்.
'கங்கா விசர்ஜனர்' எனும் திருவடிவில் அர்த்த பத்மா சனத்தில் காட்சி தருவார் ஈசன். அவரின் வலது மேல் கரம் சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விட; வலது கீழ்க் கரம் குடையைப் பிடித்திருக்கும். பெருமானின் இடக் கரங்கள் சூலம் மற்றும் மான் ஆகிய வற்றுடன் திகழும். அருகில்... கங்கை வெளிப்படுவதைக் கண்டு ஊடல் கொண்டு நிற்பாள் உமாதேவி. இந்தத் திருவடிவில் சிவனாரின் பீடத்தில் நிற்கும் நந்தி வித்தியாசமான கோலத்தில் திகழ்வார். அதாவது, கங்கை நீரை தன் வாயில் ஏந்தி, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கை மட்டும் வெளியில் விடும் நிலையில் இருப்பார்! அருகில் பகீரதனும் நிற்பதைக் காணலாம். இந்தத் திருவடிவம் பல ஆலயங்களில் ஓவியமாகத் திகழ்கிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகங்காதரர் வடிவில், உமாதேவி தன் வலக்கரத்தை ஈசனின் கால் மீது வைத்தும்; இடக்கரம் ஆச்சரிய முத்திரையுடனும் விளங்க காட்சி தருகிறாள். இந்த வடிவத்தில், சிவனாருக்கு ஆறு கரங்கள்!
மாமல்லபுரம் ஸ்ரீஸ்தலசயன பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் (மலையில்) உள்ள பாறைச் சிற்பத்தில், எலும்பும் தோலுமாக இளைத்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கிறான் பகீரதன். அவனுக்கு அருள் புரியும் சிவனார், கங்கையை பூமியில் ஓட விடுகிறார். பெருக்கெடுக்கும் கங்கையைக் காண வரும் யானைக் கூட்டத்தையும், ஜான்ஹவி முனிவரின் ஆசிரமம் மற்றும் சிங்கம், புலி முதலான வன விலங்குகளையும் இந்த சிற்பத்தில் காணலாம். காஞ்சி- ஸ்ரீமதங்கேஸ்வரர் கோயிலில், ஸ்ரீகங்காதரரின் சுதைச் சிற்பத்தை தரிசிக்கலாம்.
புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் ஆலயம், முற்கால பாண்டியர்களால் அமைக்கப்பட்ட குடவரைக் கோயில் ஆகும். இந்தக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், வடக்கு நோக்கிய கங்கைகணபதியையும் தெற்கு நோக்கிய ஸ்ரீகங்காதரரையும் தரிசிக்கலாம். இந்த வடிவில், சிவ பெருமான் தன் வலக்கரத்தால் சடையைப் பிடித்திருக்க... கால் மடக்கி, கீழ் நோக்கிப் பாய்கிறாள் கங்காதேவி!
சோழர் காலத்து கங்காவிசர்ஜன மூர்த்தி வடிவங்களை மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப் பனந்தாள், திருமீயச்சூர் முதலான ஆலயங்களின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம். இந்தத் திருவடிவில்... சிவனாரின் தலையில் உள்ள கங்கையைக் கண்டு உமையவள் கோபம் கொள்வது போல் சிற்பம் வடித்துள்ளனர். கோபத்தில் முகம் தாழ்த்தியிருக்கும் அம்பிகையின் தோளைத் தொட்டு, அவளின் முகத்தை நிமிர்த்தி அணைத்தபடி, ஊடலைகளைய முயல்பவராகக் காட்சி தருகிறார் ஈசன். இதனை 'சூடினார் கங்கை யாளை சூடிய துழனி கேட்டாங்கு ஊடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டி பாடினார் சாம வேதம்...' என்கிறார் திருநாவுக்கரசர்.
சென்னை- புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தில் பகீரதனின் வடிவம் உள்ளது. இதேபோல், காஞ்சி சர்வ தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயம், தக்கோலம் (திருவூறல்).கொள்ளிடக் கரையில் உள்ள கோவிந்தபுத்தூர் ஸ்ரீகங்காஜ டேஸ்வரர் ஆலயம், சேலம்- ஆத்தூர் அருகில் உள்ள விரகனூர் ஸ்ரீகங்காசுந்தரர் ஆலயம் ஆகியன குறிப்பிடத் தக்கவை.
'பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு ஆர் அருள் புரிதலை கொள் கங்கை சடையேற்ற அரன்', 'கங்கையாளை கமழ்சடை மேற்கரந்தான்' ஆகிய வரிகளில் (திருமுறை), கங்காதரர் வடிவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம், திரு விடைமருதூர், தாராசுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தலங்களில் கங்காதேவிக்குத் தனிச் சந்நிதியே அமைந்துள்ளது.
|
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 53
| கங்காதரர் |
| (தொடர்ச்சி)
பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்தலைகொள் கங்கை சடையேற்ற அரன்மலையை வினவில் வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்த விறகில் காரகில் இரும்புகை வீசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
- திருஞானசம்பந்தர்
கபில முனிவரின் மூலம், தன் சித்தப்பன்மார்கள் 60,000 பேரும் தீயில் எரிந்து சாம்பலான தகவலை அறிந்து வருந்தினான் அம்சுமான். பிறகு, கபிலரின் ஆசியுடன் யாகக் குதிரையை ஓட்டி வந்து சகரனிடம் ஒப்படைத்தான்!
தன் மகன்கள் இறந்ததை அம்சுமான் மூலம் அறிந்த சகரன் மிகவும் வருந்தி னான். எனினும் யாகத்தை நிறைவு செய்தான். தன் பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு, இமய மலைக்குச் சென்ற சகரன், தமது புதல்வர்கள் நற்கதி அடைய கடுந்தவம் இருந்தான். ஆனால், அவனது கோரிக்கை நிறைவேறவில்லை. அதற்குள் அவனது அந்திமக் காலம் நெருங்கவே, தனது புண்ணிய பலத்தால் சொர்க்கத்தை அடைந்தான்.
பின்னர், பல காலம் அரசாண்ட அம்சுமான், தன் மகன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, முன்னோர்கள் நற்கதி அடைய தவம் இருந்தான். ஆனாலும் நினைத்தது நடக்கவில்லை. இதையடுத்து திலீபனும் தவம் மேற்கொண்டான். இவனது தவத்தாலும் நிறைவேற்ற இயலவில்லை. எனவே, தமது புதல்வன் பகீரதனுக்கு அரசுரிமையை வழங்கி விட்டு நற்கதி அடைந்தான்.
இதையடுத்து பகீரதன், தன் முன்னோர்களுக்காக கோகர்ண தலத்தில் தவமிருந்து பிரம்மதேவனை வேண்டினான். இவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, ''உனது பாட்டனாரும் தந்தையும் பல காலம் தவம் இருந்தும், உன் முன்னோரைக் கரையேற்ற இயல வில்லை. எனினும் நீ விடாது முயற்சி செய்கிறாய். இதற்கு வழி ஒன்று சொல் கிறேன். வானுலகில் உள்ள கங்கையை பாதாள லோகத்துக்கு அழைத்து வந்து, அந்தப் புனித நீரால் உன் முன்னோர் களது சாம்பல் மற்றும் எலும்புகளை நனைத்து அவர்களை நற்கதி அடையச் செய்!'' என்றார்.
அவரிடம் ஆசி பெற்ற பகீரதன் வானுலகம் சென்றான். கங்காதேவியை வணங்கி, தன்னுடன் பாதாள லோகத் துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவுமாறு வேண்டி னான்.
உடனே கங்காதேவி, ''நான் வானுல கில் இருந்து பூமிக்கு பாய்ந்தால் அது தாங்காது; என்னைத் தாங்கிப் பிடித்து பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன்'' என்றாள்.
பகீரதன், மகா பலசாலிகள் பலரது உதவியை நாடினான். ஆனால், அனைவரும் மறுத்தனர். பிறகு மகாவிஷ்ணுவை வேண்டினான். அவரோ, 'சிவனாரை தியானித்து தவம் செய்தால், காரியம் கைகூடும்' என்று அறிவுறுத்தினார்.
பகீரதன் அப்படியே செய்ய... சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து, ''உன் முன்னோர்கள் நற்கதி அடைய நீ மேற்கொண்டுள்ள முயற்சியையும் மன உறுதியையும் கண்டு மகிழ்கிறேன். கங்கையை அழைத்து வர உனக்கு உதவுகிறேன். எனது சடையை விரித்துப் பிடிக்கிறேன். அதில் கங்கையைக் குதித்துக் கீழே பாயச் செய். அவளை பூமியில் தவழ விடுகிறேன்'' என அருளினார்.
உடனே பகீரதன், சிவானாரின் உதவி குறித்து கங்கையிடம் தெரிவிக்க... அவளும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்; பலத்த சத்தத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்தாள்! சிவனார், தன் சடையை விரித்துப் பிடித்தார். இதைக் கண்ட கங்கை, 'என் ஆற்றலையும் வேகத்தையும் சிவபெருமானால் தாங்க இயலுமா?' என்று அகங்கார எண்ணம் கொண்டாள்.
வானுலகில் இருந்து பூமி நோக்கி வந்த கங்கை நெடுங்காலமாகியும் சிவனாரது சடையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் கவலையுற்ற பகீரதன், சிவபிரானை நோக்கி தவம் புரிந்தான். அவன் முன் தோன்றிய சிவனார், 'கங்கையின் கர்வத்தை அடக்கவே இப்படிச் செய்தேன்' என்றார். பிறகு, கங்கையை வெளிப்படுத்தினார். அவளை அப்படியே தாங்கி, இமயத்தில் விட்டார் நந்தியெம்பெருமான். கங்கை, அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் வழி காட்ட, அவனைப் பின்தொடர்ந்தாள்.
வழியில் ஜான்ஹவி முனிவரது ஆசிரமம் வந்தது. தமது அலைக் கரங்களால் அந்த ஆசிரமத்தை உருட்டித் தள்ளிக் கொண்டு பாய்ந்தாள் கங்கை. இதனால் கோபமுற்ற முனிவர், கங்கையை அள்ளிக் குடித்து ஆசமனம் செய்தார். அவ்வளவுதான்... கங்கை மீண்டும் சிறைப்பட்டாள்!
பகீரதன் கலக்கத்துடன் முனிவரை வேண்டினான். வேண்டுதலை ஏற்றார் முனிவர். கங்கையின் கர்வத்தை அடக்கியவர், தம் செவி வழியே பாய விட்டார், கங்கையை! எனவே, ஜான்ஹவி (சானவி) என்ற பெயரும் கங்கைக்கு உண்டு.
இதன் பிறகு, கங்கையை பாதாள லோகத்துக்கு அழைத்துச் சென்றான் பகீரதன். கபில முனிவரைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றான். தம் மூதாதையரின் எலும்பு மற்றும் சாம்பல்களை கங்கையால் நனைக்கச் செய்து புனிதப்படுத்தினான். சகர புத்திரர்கள் அனைவரும் நற்கதியடைந்து சொர்க்கத்துக்குச் சென்றனர்; அனைவரும் பகீரதனை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.
அன்று முதல், மூவுலகங்களிலும் பாய்ந்து... தான் செல்லும் இடமெல்லாம் புனிதமும் வளமும் பெருகச் செய்கிறாள் கங்காதேவி! இத்தனை விடாமுயற்சிகளுக்குப் பிறகு பகீரதன், கங்கையைக் கொண்டு வந்ததால், 'பகீரதப் பிரயத்தனம்' எனும் முதுமொழியும் உண்டானது!
| |||
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 52
அர்த்தநாரீஸ்வரர்
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால் வெள்ளெய் நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக் கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ -மாணிக்கவாசகர் (திருவாசகம்)
பொருள் புலித்தோலும், பட்டாடையும், குழையும் தோடும், பால் போன்ற திருநீறு மற்றும் பசும் சாந்து பூசிய திருமேனியும், பைங்கிளி, சூலம் மற்றும் தொகுப்பான வளையல்கள் அணிந்த திருக்கரங்களுடனும் திகழும் தொன்மை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவை போற்றுவாய் தும்பியே!
சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவை ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவை சிறப்பிக்கின்றன. யாப் பருங்கலம் என்ற சமண நூலை அருளிய அமர்த சாகரர், அதன் விருத்தியுரைகாரர், 'வீர சோழியம்' நூலாசிரியர் பௌத்தர் மற்றும் இளங்கோவடிகள் ஆகியோரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம் பற்றி குறிப் பிட்டுள்ளனர்.
பழைமையான சிவாலயங்களில், கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவடிவை தரிசிக்கலாம். கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் முற்கால சோழர்களால் அமைக்கப்பட்ட ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம் உள்ளது. காஞ்சிபுரம், மதுரை, தாராசுரம், திருச் செங்காட்டங்குடி, பாதாமி (வாதாபி) ஆகிய ஆலயங்களிலும் மாமல்லபுரம் தருமராஜ ரதத்தின் பின்புறமும் இந்தத் திருவடிவைக் காண முடிகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில், பஞ்சலோக படிமமாக விளங்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வெகு அழகு. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக் கண்டியூரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்.
காசியில் அனுமன்காட்- ஸ்ரீசக்ரலிங்கேஸ்வரர் ஆலயத்தில், பஞ்சலோகத்தால் ஆன ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தியின் தரிசனம்
வெகு அற்புதம். ஜடா மகுடம்... வலக் கரங்கள் ஒன்றில் டமருகமும் மற்றொன் றில் அபய முத்திரையும் திகழ... இடக் கரங்களில் நீலோத்பல மலரும் புத்தகமும் ஏந்தி... பத்மாசனத்தில் அமர்ந்து வலக் காலை முயலகனின் மீது வைத்தபடி காட்சி தருகிறார் இவர்.
சிவனாரும் திருமாலும் இணைந்த ஸ்ரீசங்கர நாராயண வடிவம் போல... சத்தனும் சக்தியுமாக நின்று, சிவபரம்பொருளின் தத்துவத்தை விவரிக்கிறது மாதொருபாகன் திருவடிவம்!
பரமேஸ்வரனது அருளாடல், நான்கு வகை பயன்களாக பரிணமிக்கிறது. அதாவது, போக சக்தியாக மிளிரும்போது- பவானி; புருஷ சக்தியாக வெளிப்படும்போது- விஷ்ணு; குரோத சக்தியாக திகழும்போது- காளி; யுத்தத்தின் ஆற்றலாக ஜ்வலிக்கும்போது- துர்கை! இதுகுறித்து, குமார சம்பவத்தில் பாடுகிறார் மகாகவி காளிதாசர். ஆகவே, அரனின் சக்தியே அரி என்பது புலனாகிறது அல்லவா?
உலகைக் காக்கும் செயலை மேற்கொள்ளும் போது, சக்தியானவள்... தனது மாய வல்லமை யால் ஆண் வடிவம் ஏற்று, மாயன் எனும் விஷ்ணுவாக விளங்குகிறாள்.
சிவனார் பிட்சாடனாராக வந்தபோதும், பாணாசுரனை சம்ஹரித்தபோதும், பாற்கடலில் பெற்ற அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்த தருணத்திலும் மோகினியாக- சக்தியின் வடிவாக வந்தது விஷ்ணுவே!
'அரியலால் தேவியில்லை' என்றும் 'கடல் வண்ணனாகி நின்ற தேவியை பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே...' என்றும் போற்றுகிறார் அப்பர். 'தரங்கக் கடலுள் வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுப் பொருளே' என்று அபிராமி அந்தாதியில் பாடும் அபிராமி பட்டர், 'திருமாலே சக்தி' என்கிறார்.
இறைவன்... அம்மை- அப்பனாக, சிவ-சக்தியாக இரு வேறுபட்ட தன்மைகளைக் கொண்டு திகழ் கிறார். இதனால்தான் உலக உயிர்கள் அனைத்தும் இரு வேறு வகையாகத் திகழ்ந்து (ஆண்- பெண்), தம்முள் கூடிக் களித்து, மகிழ்ந்து வாழ்கின்றன.சிவமும் சக்தியும் இயைந்து நிற்கும் நிலையின் விளைவே இது!
ஆணோ- பெண்ணோ... தனியே இருக்கும்போது வாழ்க்கை நிறைவுறுவது இல்லை. இருவரும் ஒன்று சேரும்போதுதான் முழு நிறைவு பெறுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சரிசமமாகவும், துணையாகவும், பரஸ்பரம் உதவிகள் செய்து அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். இதனால், மன நிறைவை மட்டுமின்றி புனிதத்துவத்தையும் அடை கின்றனர். இந்த அரிய தத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதே ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவம்!
கங்காதரர்
மையறு மனத்தினாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்தி ஆயிரம் முகமதாகி வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கையென்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே -திருநாவுக்கரசர்
பொருள் குற்றமற்ற மனம் கொண்ட பகீரதன், நெடுங் காலம் தவமியற்றி, தன் முன்னோர்கள் நரகத்தில் விழாமல் நற்கதி அடைய வேண்டும் என்று கங்கையை வேண்ட... ஆயிரம் முகம் கொண்ட அந்த கங்கையைச் சடைமுடியில் ஏற்றுச் சிறிய அளவில் உலகில் பாய்ந்து உதவ அருளியவர் சாய்க்காட்டு ஈசரே!
உத்தாரகன், அசமஞ்சன் என இரண்டு மகன்கள். இளையவளான சுமதிக்கு 60,000 புதல்வர்கள்!
ஒருமுறை, அஸ்வமேத யாகம் நடத்த விரும்பிய சகரன், சர்வ லட்சணங்களும் பொருந்திய குதிரையை அலங்கரித்து பூமியை வலம் வரச் செய்தான். இதனால் கோபம் அடைந்த தேவேந்திரன்,
குதிரையைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரது ஆசிரமத்தில் கட்டிவிட்டுச் சென்றான்.
குதிரையைக் காணாமல் தவித்தான் சகரன். யாகத்துக்காகக் காப்புக் கட்டியிருந்ததால், எல்லை தாண்டி குதிரையைத் தேடிச் செல்ல முடியாத நிலை! எனவே, தன் 60,000 மகன்களையும்... பூமி, வானுலகம் மற்றும் பாதாள லோகம் ஆகியவற்றில் குதிரையைத் தேடும்படி அனுப்பி வைத்தான்.
தேவலோகத்திலும் பூலோகத்திலும் குதிரையைத் தேடி ஏமாற்றம் அடைந்தனர் சகரனின் மைந்தர் கள். இறுதியில், பாதாள லோகத்தில்... கபில முனிவரது ஆசிரமத்தில் குதிரை இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். ஆனால், அவர்களது அத்துமீறலால் கோபம்கொண்ட முனிவர்... சகரனின் மைந்தர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்தார். 60,000 பேரும் எரிந்து சாம்பலாயினர்!
இதையறியாத சகரன், பேரனானான அம்சுமானை அழைத்து, ''என் மகன்கள் அனைவரும் இறந்தாலும், யாகத்தை விட மாட்டேன். எனவே, நீ புறப்படு; குதிரையுடன் வா!'' என்று ஆணையிட்டான்.
அம்சுமானும் புறப்பட்டான். பூவுலகிலும் வானுல
கிலும் குதிரையைத் தேடியவன்,இறுதியில் அஷ்ட நாகங்களின் உதவியுடன் பாதாள லோகத்தில் இருக்கும் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.
(தரிசனம் தொடரும்)
|
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 51
| அர்த்தநாரீஸ்வரர் |
அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வதீ ப்ராண நாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யுர் கரிஷ்யதி
_ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
எம பயம் போக்கும் மூர்த்திகளுள் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரும் ஒருவர் என்கிறது மார்க்கண்டேயர் அருளிய மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்.
ஆண்-பெண்; ஒளி- இருள்; தோற்றம்- அழிவு... என்று படைப்பின் மொத்த வடிவமாகத் திகழ்பவர் ஈசன். உலகம் உய்வடைய அவர் அருளிய திருக்கோலங்களில் ஒன்று... ஒரு பாதி ஆணும் ஒரு பாதி பெண்ணுமாக அமைந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம்!
சரி... ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவத்துக்குப் புராணம் சொல்லும் கதை என்ன?
சிவகணங்களின் தலைவர்களுள் ஒருவர் பிருங்கி முனிவர்.தினமும் திருக்கயிலாயத்தில், சிவனாரை மட்டும் வலம் வந்து வணங்குவாரே தவிர, உடன் இருக்கும் பார்வதிதேவியை வலம் வர மாட்டார் பிருங்கி. இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, முனிவரின் உடலில் சக்தியின் கூறாக உள்ள உதிரம், மாமிசம் முதலானவற்றை அகற்றினார். 'இறைவன் ஒருவனே; அவர் சிவபெருமான் மட்டுமே' என்று தீவிர பக்தியுடன் வாழ்ந்த பிருங்கி முனிவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவரால் ஓர் அடி கூட நகர முடியவில்லை.
பிருங்கியின் சிவபக்தியையும் வைராக்கியத்தையும் உணர்ந்த ஈசன், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப் பார்த்து மூன்றாவது கால் ஒன்றை வழங்கினாராம் (ஊன்று கோல் என்றும் சொல்வர்).
பிருங்கி போன்றோர், தம்மை விலக்கி சிவனாரை மட்டும் வழிபட்டுச் செல்ல இனி இடம் கொடுக்கக் கூடாது என்று கருதினாள் பார்வதிதேவி. எனவே, கடும் தவம் இருந்து, சிவனாரை வேண்டி அவரின் இட பாகத்தை பெற்றாள். இப்படி அம்மையும் அப்பனும் சேர்ந்திருக்கும் கோலமே ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவம்.
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற திருத்தலம் திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்னூர். அழகிய மலைக்கோயிலுடன் திகழும் இந்தத் தலம் பாடல் பெற்றதும் கூட! சேலம் அருகில் உள்ள இந்த தலத்துக்கு உரககிரி, நாககிரி, நாகாசலம், சர்ப்பகிரி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ் வரராகக் காட்சியளிக்கிறார்; உற்ஸவ மூர்த்தியும் அப்படியே. அருகில் பிருங்கி முனிவர்!
தேவாரப் பதிகத்தில் இந்தத் தலம் பற்றிக் குறிப்பிடும்போது, 'வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி...' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.
அம்சுத்பேதாகமம், காமிகாகமம், சுப்ரபேதாகமம், காரணாகமம் ஆகியனவும் சில்ப ரத்னம், காச்யபசில்ப சாஸ்திரம், மயமதம், ஸ்ரீதத்வநிதி ஆகிய சிற்ப நூல்களும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றி குறிப்பிடுகின்றன.
வலது பாகம்- சிவபெருமான்; இடது பாகம்- உமையவள். வலது பாகத்தில்... தலையில் ஜடா மகுடம் மற்றும் பிறை; காதில் மகர குண்டலம் அல்லது சர்ப்ப குண்டலம்; வலது பாக நெற்றியில் மூன்றாவது கண் பாதி இருக்கும்.
இடது பாகத்தில்... அம்பிகையின் தலையில்- கரண்ட மகுடம் அல்லது முடிந்து வைத்த அழகிய கூந்தல்; காதில்- வாலிகா எனும் குண்டலம்; மை எழுதிய இடது கண்; நெற்றியில்- சிவனாரின் பாதி நெற்றிக் கண்ணுக்கு இணையாக அரைப் பொட்டு திகழும்.
இரண்டு, மூன்று அல்லது நான்கு கரங்களுடன் காட்சி தருவார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். இந்தத் திருவடிவம் இரண்டு கரங்களுடன் திகழும்போது, வலக் கரம்- வரத முத்திரை அல்லது கபாலம் ஏந்தியும், இடக் கரம்- கண்ணாடி அல்லது கிளி அல்லது மலரை ஏந்தியும் இருக்கும்.
மூன்று கரங்களுடன் இருந் தால்... வலப் பக்கம் இரண்டு கரங்களும் இடப் பக்கம் ஒரு கரமும் அமைந்திருக்கும்.
நான்கு கரங்கள் எனில்... வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையும் மற்றொன்று மழுவையும் ஏந்தியிருக்கும் (ஒரு கரம் வரத முத்திரையும் மற்றொன்று சூலமும் ஏந்தி காட்சி தருவதும் உண்டு. அல்லது ஒரு கரத்தை இடபத்தின் மீது வைத்தபடியும் காட்சி தருவார்). இடக் கரங்களில்... ஒன்று- நீலோத்பல மலரை ஏந்தியிருக்க; மற்றொரு கரத்தை தொங்கவிட்டபடி காட்சி தருவார்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய முதல் தேவாரப் பாடலின் முதல் வரியே, 'தோடுடைய செவியன்' என்று அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தையே விவரிக்கிறது. 'உண்ணாமுலை உமையா ளடும் உடனாகிய ஒருவன்', 'பாதியோர் மாதர்', 'பெண் ஓர் கூறினர்', 'பரநாரிபாகர்' என்றெல்லாம் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர்.
'பாதியோர் மாதினன்', 'உமையரு பாகர்' 'மங்கை தன்னை மகிழ்ந்து ஒரு பால் வைத்துகந்த வடிவம்' என்கிறார் நாவுக் கரசர். உமையரு பாகனாக விளங்கும் இந்தக் கோலத்தை, 'தொன்மைக் கோலம்' என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர்!
| |||
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 50
சங்கரநாராயணர்
தமிழகத்தின் சங்கரன்கோவில் போன்றே கர்நாடக மாநிலத்திலும் ஸ்ரீசங்கரநாராயணர் அருள் புரியும் திருத்தலம் ஒன்று உண்டு. கர்நாடக மாநிலம், தாவன்கரே மாவட்டத்தில், ஹோஸ்பெட் அருகே, துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது ஹரிஹர். பெங்களூருவில் இருந்து சுமார் 275 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராகக் காட்சி தருகிறார். இருபுறமும் பார்வதியும் லட்சுமியும் உள்ளனர்.
13- ஆம் நூற்றாண்டில், ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீஹரிஹரேஸ்வரர் ஆலயம் பிரசித்திப் பெற்றது. முற்காலத்தில் இந்தப் பகுதி, 'கூஹாரண்யம்' எனும் பெயரில் வனமாகத் திகழ்ந்ததாம். இங்கு, கூஹாசுரன் எனும் அரக்கன் வசித்தான். கடும் தவத்தால், எவராலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்ற இந்த அசுரன், அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.
இவனை சம்ஹாரம் செய்ய... விஷ்ணுவுடன் இணைந்த வடிவமாக- ஸ்ரீஹரிஹரனாக தோன்றி, அசுரனை அழித்தார் சிவபெருமான். ஆகவே இந்த ஊர், 'ஹரிஹர்' என்று பெயர் பெற்றது. தட்சிண கயிலாசம் என்று போற்றப்படும் இந்த தலத்தில், தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா எனும் ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் கூடலி. திருமாலின் அம்சமாகக் கருதப்படும் துங்கா நதியும் சிவனாரின் அம்சமாகக் கருதப்படும் பத்ரா நதியும் இங்குதான் ங்கமிக்கின்றன.சங்கரநாராயணரின் திருவடிவை கேசவார்த்த மூர்த்தி, ஹரிஹர மூர்த்தி, அரியார்த்த மூர்த்தி என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த வடிவங்களில், சிவனாரது பாகத்தில் உள்ள முகம் உக்கிரமானதாக (நெற்றிக் கண்ணில் பாதியைக் கொண்டு) திகழும். இட பாகத்தில் உள்ள திருமாலின் திருமுகம் சாந்தமாக திகழும். பின் வலக் கரத்தில்- மழு; இடக் கரத்தில் சங்கு, சக்கரம் அல்லது கதாயுதம்... இவற்றில் ஏதாவது ஒன்று திகழும்! சிவ பாகம் வெண்ணிறமாகவும், திருமால் பாகம் மஞ்சள் பட்டாடை அணிந்தும் இருக்கும். திருவுருவத்தில், தலைக்குப் பின்னே ஒளி வட்டம் அல்லது சிரஸ் சக்கரம் விளங்கும்.
'இந்தத் திருவடிவின் வலப் புறம் நந்தியும், இடப் புறம் கருடனும் இருக்க வேண்டும்' என்று 'விஷ்ணு தர்மோத்தரம்' என்ற நூல் கூறுகிறது.
சிவபெருமானிடம் இருந்து அவரது அருளாகவே வெளிப்பட்ட பராசக்தியின் புருஷாகார வடிவமே திருமால். சைவமும் வைணவமும் சமரசப் போக்கில் தழைக்க எழுந்த... தனிச் சிறப்பு கொண்ட ஸ்ரீசங்கரநாரா யண திருவடிவை, சைவத் திருமுறைகளும் திவ்யப் பிரபந்தமும் போற்றுகின்றன. இந்தக் கோலம் குறித்து, சங்க கால இலக்கியமான அகநானூற்றுப் பாடலிலும் குறிப்புகள் உண்டு.
'பாதியா உடல் கொண்டது மாலையே', 'மாலும் ஓர் பாகம் உடையார்' என்று திருஞானசம்பந்தரும், 'திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்' என்று திருநாவுக்கரசரும் போற்றுகின்றனர்.
பேயாழ்வார், திருவேங்கடம் திருமலையில் விளங்கும் பெருமானைச் சங்கரநாராயணராகவே கண்ட காட்சி இதோ!
'தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து'
மூலப் பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவமும் உள்ளன. இதற்கு, 'அரன்' என்றும் 'நாராயணன்' என்றும் பெயர். இதில் ஓர் உருவத்துக்கு வாகனம்- இடபம்; இருப்பிடம்- மலை; படை (ஆயுதம்)- திரிசூலம்; நிறம்- தீப்பொறி போல் செந்நிறம் என விளங்குகிறது. மற்றொரு உருவத்துக்கு வாகனம்- கருடன்; இருப்பிடம்- பாற்கடல்; படை- சக்கரம்; நிறம்- கரிய திருமேனி என விளங்குகிறது என்பதாக, 'அரன் நாரணன்...' என்று தொடங்கும் பாடலில் பாடுகிறார் பொய்கை ஆழ்வார்.
ஸ்ரீசங்கரநாராயணர் திருக் கோலத்தை, சிவாகமங்கள் தனிச் சிறப்புடன் புகழ்கின்றன. பல்லவ மன்னர்கள் சிவாகமங்களை மிகவும் போற்றியதால், தாங்கள் அமைத்த குடைவரைக் கோயில்கள் பலவற்றிலும்... குறிப்பாக நாமக்கல், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி முதலான தலங்களில் ஸ்ரீசங்கரநாராயணர் வடிவத்தை அமைத்தனர்.
சோழநாட்டில் பல தலங்களில் ஹரிஹரமூர்த்தியின் திருவுருவை மூலவர் கோஷ்டத்தில் காணலாம்.
முற்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில், சித்திரை மாதம் அதிசயமான திருவிழா ஒன்று நடைபெறுமாம்! பொன்னேரி- ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் சிவ பெருமானும் ஊரின் மறுபுறமான திருஆயர் பாடியில் அருள் புரியும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமா ளும்... பொன்னேரியில் பரத்வாஜர் தவம் இயற்றிய ஆசிரமத்தின் வாயிலில் மாலை மாற்றிக் கொள்வார் களாம். இந்தத் திருவிழா நடைபெறும் வீதி, 'ஹரிஹர வீதி' என்றும் திருவிழா நடைபெறும் நன்னாளை 'ஹரிஹர சந்திப்பு' என்றும் கொண்டாடினராம்!
| |||
Subscribe to:
Posts (Atom)
