Thursday, 26 January 2017

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர் - வலங்கைமான் ( திருவாரூர் )


மூலவர் : சாட்சிநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சவுந்தர நாயகி

தல விருட்சம் : பாதிரி

தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சாட்சிநாதபுரம், திருஅவளிவள்நல்லூர்

ஊர் : அவளிவணல்லூர்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகம்நிலை செய்து கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம் ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும் ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணல்லூரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 100வது தலம்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 163 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

பிரார்த்தனை

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார்.

சிவனின் "பஞ்ச ஆரண்யம் (காடு)' தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.


தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.

தல வரலாறு:

இத்தல இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தார்.


அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையை கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து "அவள் தான் இவள்' என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும், இறைவன் சாட்சிநாதர் எனவும் ஆனார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) - திருவாரூர்

மூலவர் : சற்குணேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சர்வாங்க நாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : எம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி

ஊர் : கருவேலி

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமாறு உணர்த்த லாம் இது கேண்மின் உருத்திர கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக் குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 63வது தலம்.

திருவிழா:

மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 126 வது தேவாரத்தலம் ஆகும்.ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது. எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது.பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள நர்த்தன கணபதி, பாலமுருகன், துவார விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரரும் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை.

இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது. அவள் மறுபிறவியில், இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள். அது போலவே, இத்தலத்து இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் "கரு இல்லை' என்ற பொருளில் "கருவிலி' எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் "சற்குணேஸ்வரர்' எனப்படுகிறார். அம்பாள் "சர்வாங்க சுந்தரி' எனப்படுகிறாள்.

தல வரலாறு:

சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள். தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார்.

சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர். நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன. பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார். உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் திருமால் கூறினார். இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் - திருத்துறைப்பூண்டி ( திருவாரூர் )


மூலவர் : சற்குணநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : மங்களநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : வில்வாரண்யம், திருஇடும்பாவனம்

ஊர் : இடும்பாவனம்

பாடியவர்கள்:சம்பந்தர்

தேவாரப்பதிகம்

நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம் பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக் கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 108வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 171 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

3 நிலை ராஜகோபுரத்துடன் மூலவர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், அகத்தியர், இடும்பை, சனிபகவான், கஜலட்சுமி, பைரவர், சந்திரன், லிங்கோத்பவர், துர்க்கை, நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


பிரார்த்தனை

திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயிலில் தீபம் ஏற்ற அதிக அளவில் எண்ணெய் வாங்கிக்கொடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

தலபெருமை:

இடும்பன் என்ற அரக்கன் தனது பிறவிப்பிணி நீங்க இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தான். இதனால் இவனது சகல பாவமும் நீங்கி இத்தலத்தில் இடும்பையை திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் இடும்பாவனம் ஆனது. ஒரு முறை திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து மதுரை வரும்போது இத்தலத்திற்கு வந்தார். அச்சமயம் அவரது கண்களுக்கு இத்தலத்திலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே அவர் பயந்து, காலால் நடக்காமல் கால்களை உயரே தூக்கியபடி கைகளால் நடந்து வந்தார் என தலவரலாறு கூறுகிறது.


அகத்தியருக்கு சிவன் திருமண காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. எனவே மூலவருக்கு பின்னால் சிவன் பார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் வாழ்ந்த காலத்தில் பாவங்களால் அரக்கர் வடிவம் பெற்ற தேவசருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து, சற்குணநாதரை வழிபடச் செய்து மோட்சமளித்தார்.


குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும்போது தன் தந்தையின் உருவம் தோன்றி மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியதால் எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபமானது எமன் இத்தலத்தில் பூஜை செய்ததால் நீங்கியது. எமபயம் போக்கும் தலம்.


ஒரே கல்லால் ஆன கஜலட்சுமியும் தெட்சிணாமூர்த்தியும் சனீஸ்வரனும் இத்தலத்தின் சிறப்பாகும். போரில் ராவணனை வெல்ல ராமன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.


வெள்ளை விநாயகர்: கடல்நுரையால் ஆன சித்திபுத்தியுடன் கூடிய வெள்ளைவிநாயகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு பால், பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவரது சத்வ குணம் குறைந்தது. இதனால் வருந்திய பிரம்மா பூமியில் பல சிவத்தலங்களுக்கு சென்று தன் குறை நீங்கி சாத்வீக குணம் ஏற்பட வழிபாடு செய்தார். இவரது கவலையை போக்க இறைவன் திருவுளம் கொண்டு இத்தலத்தில் பார்வதி சமேதராக விநாயகர், முருகப்பெருமானுடன் தோன்றி பிரம்மனின் குறை போக்கி அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன் சத்குணநாதர் ஆனார். பெரும் மகிழ்ச்சியடைந்த பிரம்மா கோயில் எதிரில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி, வைகாசி விசாகத்தில் பிரமோற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில் திருப்பனையூர் - திருவாரூர்


மூலவர் : சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பிரஹந்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம் : பனைமரம்

தீர்த்தம் : பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தாலவனம், பனையூர்

ஊர் : திருப்பனையூர்

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்

தேவார பதிகம்

""அணியார் தொழவல்ல வரேத்த மணியார் மிட றென்று டையானூர் தணியார் மலர் கொண்டு இருபோதும் பணிவார் பயிலும் பனையூர்' -சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.

பிரார்த்தனை

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-

தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய "இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் "துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், "மாற்றுரைத்த விநாயகர்' என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

தல வரலாறு:

சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று ""தம்மையே புகழ்ந்து'' என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, "அரங்காட வல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் "சந்தித்த தீர்த்தம்' என்றும் பெயருடன் திகழ்கிறது.

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில், பூவனூர் - நீடாமங்கலம் ( திருவாரூர் )


மூலவர் : சதுரங்க வல்லபநாதர்

உற்சவர் : புஷ்பவனேஸ்வரர்

அம்மன்/தாயார் : கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என இரண்டு அம்மன் உள்ளனர்.

தல விருட்சம் : பலாமரம்

தீர்த்தம் : பாமணி, ஷீர புஷ்கரணி, கிருஷ்ண குஷ்டஹர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : புஷ்பவனம், திருப்பூவனூர்

ஊர் : பூவனூர்

பாடியவர்கள்: அப்பர்

தேவாரப்பதிகம்

ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண் ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 103வது தலம்.

திருவிழா:

சாமுண்டீஸ்வரிக்கு சித்திரை மாத அமாவாசையின் மறுநாள் முதல் 10 நாள் திருவிழா. வைகாசி விசாகம், ஆவணிமூலம், ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம்


தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 166 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், சுகமுனிவர், அகத்தியர் ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.

பிரார்த்தனை

ஆஸ்த்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல் வாங்குதலில் பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.

நேர்த்திக்கடன்:

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து கையில் வேர்கட்டிக்கொண்டு கோயிலின் எதிரிலுள்ள தீர்த்தத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.

தலபெருமை:

சாமுண்டீஸ்வரி: மைசூரிலுள்ள சாமுண்டி மலையை அடுத்து இத்தலத்தில் தான் சாமுண்டீஸ்வரி தனி சன்னதியில் வடக்கு நோக்கி பிரமாண்டமாக வீற்றிருக்கிறாள். 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரையில் இது 103வது தலம் ஆகும்.


தல வரலாறு:

வசுதேவன் என்ற மன்னன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று இருவரும் மனமுருகி வணங்கினர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன் பார்வதியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார். ஒரு முறை மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது குழந்தையாக மாறியது. இதனால் மன்னனும் ராணியும் மகிழந்து குழந்தைக்கு "ராஜராஜேஸ்வரி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

இறைவன் அருளின்படி சப்தமாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தைக்கு வளர்ப்புதாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்று தேர்ந்தது. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள். இதையறிந்த மன்னன் தன் மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தான். ஆனால் இவளை சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை. அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரையின்படி தன் மகள், வளர்ப்புத்தாய் சாமுண்டி, ராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார்.

அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு வேண்ட இறைவனும் ராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வென்று தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார்.

அம்பிகை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டியும் இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் இருந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொள்ள இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

Wednesday, 18 January 2017

பித்ரு தோஷம் நீக்கும் தை அமாவாசை திருத்தலங்கள்!

திதிகளில் சிறப்பானதாக அமாவாசை திதி போற்றப்படுகிறது. அமாவாசை - சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் அடையும். ஆனால், அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால், சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் ஆசியும் கிடைக்கும்.

 முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த திதி
அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
அமாவாசைதோறும் திதி கொடுக்க இயலாதவர்கள்கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். 
மூன்று அமாவாசைகள்!

வருடத்துக்கு இரண்டு அயனங்கள். ஆடி மாதம்  முதல் மார்கழி முடிய உள்ளது தட்சிணாயனம். இது சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும். தை முதல் ஆனி வரை உள்ளது உத்தராயனம். இது சூரியனின் வடதிசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும். இந்த அயனங்களில் உத்தராயனத்தில் பகல் பொழுதும், தட்சிணாயனத்தில் இரவுப் பொழுதும் அதிகமாக இருக்கும். 

இவற்றில், தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர். கருடப் புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். 

புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பதுதான் மிகச் சிறந்தது. இயலாதவர்கள் கண்டிப்பாக இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பித்ரு தோஷம் உண்டாகும்.
பித்ரு தோஷம் என்றால் என்ன?

முன்னோர்களின் வருத்தத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது பித்ரு தோஷம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு  அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம் என்பதை அறியலாம். மேலும் ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும். லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.

 பித்ரு வழிபாட்டின் அவசியம்...

பூமியில் பிறந்தவர்கள் யாருமே பாவ புண்ணியத்திலிருந்து தப்ப முடியாது. பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து,  பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும்.  

இத்தகைய பாவங்களுக்கு ஆளாகும் அன்பர்கள், பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய சந்ததியினரும் பல வகையான துன்பங்களை அடைகின்றனர். 

எனவே, நம் முன்னோர்களுக்கு வருடாந்திர சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். 

இயலாத நிலையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளிலும் புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள நீர்நிலைகளில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது எப்படி?

அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

 செய்யக்கூடாதவை...

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.
காகத்துக்கு  சாதம் படைப்பது ஏன்?

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

 துயர் போக்கும் துளசி

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
முன்னோர் ஆராதனைக்கு ஏற்ற திருத்தலங்கள்!

மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நாம் நம்முடைய வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அல்லது அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால், ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

 தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் என்று பல தலங்கள் இருக்கின்றன. முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன. இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
ராமேஸ்வரம்

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது.
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத் தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின் வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல் சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
திலதர்ப்பணபுரி

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று.
 
தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார். ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால், இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின் பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில் வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் ராமபிரானை தரிசிக்கலாம். இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது. நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது. 
 திருப்புல்லாணி
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம். இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில் முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.

ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம் கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும் லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்! 
திருச்செந்தூர்
அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரே தலம் திருச்செந்தூர்.  எனவே ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பது ஐதீகம். 

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில் தீர்த்தங்களாகித் திகழ்வதாகக்  கூறப்படுகிறது. இவற்றில் பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம். தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

 திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார் தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவெண்காடு 

சீர்காழி - பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் 6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. 
தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.

 பவானி கூடுதுறை

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர். 

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.
இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. 
திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். 

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாக தெரிவதை காணலாம். 

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி, பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
திருக்கண்ணபுரம்

திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். 

பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தில் பெருமாள் ஸ்ரீநீலமேகப் பெருமாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள்.

ஒன்பது படித்துறைகளுடன் திகழும் இந்தத் தலத்தின் நித்ய புஷ்கரணியும் விசேஷமானது. இதன் படித்துறைகள் ஒன்பதும் நவகிரகங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், முன்னோரின் ஆசிகள் கிட்டும் என்பது ஐதீகம்.

அப்படிச் செய்ய இயலாதவர்கள், நித்ய புஷ்கரணியில் எள்ளைத் தெளித்துப் பிரார்த்தித்தாலே போதும்; முன்னோரின் ஆசியும், பெருமாளின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
கருங்குளம் 

 திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கருங்குளம். மார்த்தாண்டேஸ்வரன் என்ற மன்னர், தாமிரபரணிக் கரையில் இருந்த கருங்குளம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தார். தினமும் சிவபூஜை செய்ய விரும்பிய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘தாமிரபரணிக் கரையில் ஆலயம் அமைத்து வழிபடுவாயாக’ என்று கூறினார். மன்னரும் அப்படியே ஆலயம் அமைத்து வழிபட்டார்.

இந்த நிலையில், பக்கத்து நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் சிங்கநாதன், தீராத வயிற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். எந்த வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் மன்னரைச் சந்தித்த முனிவர் ஒருவர், ‘முன் ஜன்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்றுவரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறாய். கருங்குளத்து ஈசனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சாபம் நீங்கப் பெறுவாய்’ என்றார். அதன்படி இங்கு வந்த மன்னர், சிவபெருமானை தரிசித்துப் பிரார்த்தித்தார். சாபம் நீங்கப் பெற்று, வயிற்றுவலியில் இருந்து மீண்டார் என்கிறது தல வரலாறு.

மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகுலசேகரநாயகி.  

முன் ஜன்ம சாபம் நீக்கிய தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம் இது. தை அமாவாசை நாளில் இங்கு வந்து, தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், பித்ரு தோஷங்களும் தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அகரம்

தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் இந்தத் தலத்தில்... காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, ‘தட்சிண காசி’ என்று ஞான நூல்கள் சிறப்பிக்கின்றன. இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை, `தட்சிண கங்கை' என்று போற்றுகின்றனர். இது, பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.

ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திருநாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடன் ஸ்ரீகாசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபட வேண்டும். அத்துடன், பசுநெய் ஊற்றி 21 தீபங்கள் ஏற்றி வைத்தோ, தில ஹோமம் (எள்ளினால் செய்யப்படும் ஹோமம்) செய்தோ வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர்!

இதுவரை பித்ரு தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், அரிசி மற்றும் காய்கறிகளைத் தானம் அளித்து, (வசதி இருந்தால் கோ தானமும் செய்யலாம்) இறைவனை வழிபட, பித்ரு தோஷம் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்!
திருபுவனம்

தந்தையின் ஈமக்கடன்களைச் செய்து முடிப்பதற்காகக் காசிக்குச் செல்ல விரும்பினார் மைந்தன். ஆனால் பாவம்... வழிச் செலவுக்குக்கூட அவரிடம் காசில்லை. ஆனாலும், காசிக்குச் செல்வதில் உறுதியாக இருந்தார் அவர்.
அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய ஈசன், ‘’காசிக்குச் செல்ல முடியவில்லையே என்று வருந்தாதே! இங்கேயுள்ள ஆலயத்துக்கு வந்து, அருகில் ஓடும் நதியில் உன் தந்தையின் அஸ்தியைக் கரைத்து, பித்ரு காரியத்தை நிறைவேற்று. காசிக்குச் சென்று காரியம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இங்கேயே கிடைக்கும்’’ என அருளி மறைந்தார்.

கனவால் மெய்சிலிர்த்துக் கண் விழித்தவர், தென்னாடுடைய ஈசனின் பெருங்கருணையை எண்ணி மகிழ்ந்தார். விடிந்ததும், அருகில் உள்ள நதிக்கரைக்குச் சென்று, பித்ரு காரியங்களை நிறைவேற்றினார். இறுதியாக, அஸ்தியைக் கரைக்க நீரில் இறங்கினார். அப்போது, அஸ்தியானது (சாம்பல்) நறுமணம் கமழும் பூக்களாக மாறியது. இறைவனும் அருளை அள்ளி வழங்க, முன்னோரின் ஆசீர்வாதமும் அந்த மைந்தருக்குக் கிடைத்தது என்கிறது ஸ்தல புராணம்.
‘காசிக்கு நிகரான பலன் தரும்’ என்று இறைவனே குறிப்பிட்ட அந்தத் தலம் திருபுவனம்; நதி - வைகை. அஸ்தி சாம்பலைப் பூவாக மாற்றியதால், இங்குள்ள இறைவனுக்கு ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபுஷ்பவனநாதர் எனத் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர். அம்பாளின் திருப்பெயர்- ஸ்ரீசௌந்தரநாயகி. 

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, வடகிழக்காக அமைந்திருக்கும் ஆலயம் இது. எனவே, அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே இங்கே பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற நாளாகக் கருதுகின்றனர் பக்தர்கள்!

 தீர்த்தாண்டதானம்

‘‘முன்னோர் ஆராதனை என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. முன்னோர் ஆராதனை செய்யச் செய்ய, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்’’ என்று ராமபிரானுக்கு அகத்தியர் அருளினார். அதன்படி, ஓர் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கான கடனைச் செய்து, சிவபெருமானின் பேரருளைப் பெற்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே ஈசனின் திருநாமம் - ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரர்.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். 

Thanks To - சக்தி விகடன்

Tuesday, 3 January 2017

சிந்தையை மகிழ்விக்கும் சிதம்பர சித்திரங்கள் !


தில்லை வனம் சுற்றியிருக்க, தில்லை மரத்தை ஸ்தல விருட்ச மாகக் கொண்ட தில்லையம்பலத்தில் திரும்பிய இடமெல்லாம் ஆன்மிகப் புதையல்தான். சிற்றம்பலம் என்ற சிதம்பரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்!  சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பிரமாண்டமான ஸ்ரீஆனந்த நடராஜர் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால், நாம் சிந்தை மகிழ தரிசிப்பதற்கு அங்கே கொட்டிக்கிடக்கும் புராண, கலைப் பொக்கிஷங்கள் அளவற்றவை.

அவற்றுள் ஒன்று, கோயிலுக்குள் இருக்கும் பல நூற்றாண்டுகள் பழைமையான சரித்திரப் புகழ்மிக்க ஓவியங்கள். கோயிலுக்குள் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி மற்றும் ஸ்ரீநடராஜர் சந்நிதி அமைந்துள்ள சித்சபைக்குப் பின்புறத்தில் இருக்கும் நந்தி மண்டபம் ஆகிய இடங்களில் தீட்டப் பட்டிருக்கும் ஓவியங்கள் காலத்தால் அழியாத கலைச்சின்னங்கள். 


இவற்றுள் ஸ்ரீஆனந்த நடராஜர் சந்நிதிக்குப் பின்புற மண்டபத் தின் விதான ஓவியங்கள், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு முன் நடந்த திருப்பணிகளின்போது, புதுப்பொலிவு பெற்றிருப்பது சிறப்புக்கு உரியது. அந்த மண்டபத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த - சிதம்பரத்தின் சரித்திரத்தைச் சொல்லும் 16 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மூலிகை வர்ணங்களால் வரையப்பட்ட பழங்கால ஓவியங்களான அவை மிகவும் பழுதடைந்திருந்தன. இந்நிலையில் கோயில் பொது தீட்சிதர்கள் ஏற்பாட்டின்பேரில், உலகப் புகழ்பெற்ற புராதன ஓவியர் சில்பியின் சிஷ்யரான ஓவியர் பத்மவாசன் மூலம், புதுப்பொலிவுடன் ஓவியங்கள் வரையப் பட்டன. ஓவியர் பத்மவாசன் சிதம்பரம் கோயிலில் பல மாதங்கள் முகாமிட்டு, லட்சக் கணக்கான ரூபாய் செலவில், கேரள மூலிகை வர்ணங்களைக் கொண்டு, சிங்கப்பூர் ரெஸ்கின் கேன்வாஸ் துணியில், மிகவும் புராதனமான 16 ஓவியங்களை மிக தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இந்த ஓவியங்கள், தீப்பிடிக்காத பலகையில் வைத்து ஃபிரேம் செய்யப்பட்டு, சித்சபை மண்டபத்தில் ஏற்கெனவே இருந்த ஓவியங் களுக்கு மேலே பொருத்தப்பட்டுள்ளன. ஓவியர் பத்மவாசன், பண்டைய ஓவியங்களை அதன் தொன்மையும் சிறப்பும் மாறாமல், இயற்கை வண்ணங்களைக் கொண்டு அதிஅற்புதமாக வரைந்திருக்கிறார். கோயிலின் பொது தீட்சிதரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான முனைவர் ராஜாசோமசேகர தீட்சிதர் நம்மிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினார்:

‘‘ஸ்ரீநடராஜர் ஆலயத்தில் காணப்படும் ஓவியங்கள் அனைத்தும் பண்டைய காலத்து ‘ஃப்ரெஸ்கோ ஆர்ட்’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, செயற்கை வண்ணங் களோ, பொருட்களோ சேர்க்காமல் முழுக்க முழுக்க இயற்கையில் கிடைக்கும் சாயங்கள் மற்றும் வண்ணங்களை வைத்துத் தீட்டப்படும் ஓவியங்களே ‘ஃப்ரெஸ்கோ ஆர்ட்’ எனப்படும். உதாரணத்துக்குப் பச்சை நிறம் என்றால், தாவரங்களில் கிடைக்கும் பச்சையத்தை எடுத்து அரைத்து உபயோகிப்பது. சிவப்புக்கு காவி... இப்படி இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களிலிருந்தே சாயங்களைத் தயாரித்துக் கொள்வார்கள்.
இந்த ஓவியங்களின் காலம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று சொல்லலாம். ஏனெனில், 3-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரைதான் இந்த வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. எனவே, சிதம்பரம் கோயில் ஓவியங்கள், 12 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லலாம். 

ஓவியக்கலைக்குச் சான்றாக மட்டுமின்றி, ‘ஃப்ரெஸ்கோ’ வகை ஓவியங்களை வைத்து, கோயில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தையும் வரையறுத்துச் சொல்லலாம்.

இந்த ஆலயத்தில், ஸ்ரீக்நடராஜர் சந்நிதியைச் சுற்றிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை எல்லாமே ஏதேனும் ஒரு கருத்தை அல்லது கதையை அடிப்படையாகக் கொண்ட, ‘தீமாட்டிக்’ ஓவியங்கள். பல கோயில்களில் ராமாயணம் முதலான புராணச் சம்பவங்களை இயற்கை வண்ணங்களில் தீட்டியுள்ளனர். சித்தன்ன வாசலில் இருப்பவை சமண மத கருத்துகள் வெளிப்படும் ஓவியங்கள். அதேபோல, இங்கும் தில்லை உருவான கதை, மாணிக்கவாசகர் கதை, சைவ சமயக் குரவர்கள், சைவ வழிபாடு குறித்த விஷயங்கள் ஓவியங்களாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன.

இங்கே ஸ்ரீநடராஜர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள நந்தி மண்டபத்தில், ஓவியங்கள் சிதிலமடைந்து அழியும் நிலையில் இருந்தன. சென்ற ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு முன்னர், அதற்கான பலவிதமான திருப்பணிகள் நடைபெற்றன. அவற்றுள், இந்த ஓவியங்களைச் சீரமைக்கும் பணியும் ஒன்று. 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்காக, இந்த ஓவியங்கள் 15 லட்சம் ரூபாய் செலவில், கோயில் சார்பில் புதுப்பிக்கப்பட்டன.
கடவுள் திருவுருவங்களையும் கோயில் சிற்பங்களையும் தத்ரூபமாக வரையும் பிரபல ஆன்மிக ஓவியர் பத்மவாசனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இங்கேயே தங்கி, அந்தப் பணியை மிகச் சிறப்பாக நிறைவு செய்து கொடுத்தார்.   அவற்றின் தனித்தன்மையும் மூல அழகும் கெடாத வகையில், இயற்கை வண்ணங்களைக் கொண்டே உயிர்ப்பித்திருக்கிறார் பத்மவாசன். எனவே, ஓவியங்கள் அனைத்தும் பழைமை மாறாமல் மீண்டும் பக்தர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளன.

ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் சந்நிதியிலும் அழகிய ஓவியங்கள் சிதிலமடைந்து உள்ளன. அந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவுக்குள், ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணியினைச் செய்வதற்காக, கமிட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அம்மன் சந்நிதி ஓவியங்களும் புத்துயிர் பெறும்!’’ என்றார் ராஜா சோமசேகர தீட்சிதர். அவரே தொடர்ந்து அந்த ஓவியங்களில் சிலவற்றில் இடம்பெற்றிருக்கும் புராணச் சம்பவங்களைக் குறித்தும் விவரித்தார்.
மாத்தியந்தினர் வியாக்கிரபாதம் பெற்றது...

சிதம்பரம் கோயிலில் அருள்புரியும் ஆதிமூல நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனிதான், ஆனந்த நடராஜருக்கு முன் அந்தத் தலத்தில் குடிகொண்டிருந்த இறைவன் என்று சிதம்பர புராணம் கூறுகிறது. மாத்தியந்தினர் என்ற சிவபக்தர், தினப்படி பூஜைக்கு நந்தவனத்தில் உள்ள மலர்களைக் கொய்து எடுத்துவரும் ‘புஷ்ப கைங்கர்யம்’ செய்து வந்தார். பொதுவாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கிறதல்லவா? அதேபோல, பகவானுக்குச் செய்யும் ‘புஷ்ப கைங்கர்ய’த்துக்கும் ஒரு தர்மம் உள்ளது. 

நாமே சென்று நம் கையால் மலர்களைப் பறிக்க வேண்டும். அதுவும், பகவானை நினைத்துக் கொண்டே பறிக்க வேண்டும். எந்தவித அசுத்தமும்படாமல், பரிசுத்தமாக அவற்றைப் பறித்து இறைவனுக்குச் சார்த்த வேண்டும் என்பது நியதி. ஆனால், மாத்தியந்தினர் இவற்றுக்கும் ஒருபடி மேலே போய், ‘பூவில் உள்ள மதுரத்தை (தேனை) தேனீக்கள் வந்து எடுப்பதற்கு முன்னரே பூக்களைப் பறித்துவிட வேண்டும்’ என்று விரும்பினார். தேனீ உட்கார்ந்து தேனை உறிஞ்சிவிட்டால், அந்தப் பூ எச்சில் பட்டதாகி விடுமாம்; பரிசுத்தம் போய்விடுமாம். அப்படி தேனீக்கள் வருவதற்கு முன் எடுக்க வேண்டும் என்றால், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எடுக்க வேண்டும். அந்த நேரத்தில், இருட்டுக்குள் மரங்களில் ஏறி, பூக்களைக் கொய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பைக் கொடுக்குமாறு சிவனிடம் வேண்டினார். அவருடைய பக்தியில் திளைத்த பெருமானும் அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டார்.

மாத்தியந்தினருக்கு மரங்களைப் பற்றி ஏறுவதற்கு வசதியாக புலிக் கால்களையும், இருட்டில் தொலைவில் உள்ள பூக்களையும் பார்ப்பதற்கு வசதியாக புலிகளுக்கு இருப்பது போன்ற கூர்மையான பார்வையையும் பூக்கள் இருக்கும் இடத்தை அவற்றின் நறுமணத்தின் மூலமே கண்டறியக்கூடிய வகையில் புலியின் மோப்பச் சக்தியையும் அருளினார். அதனால்தான் மாத்தியந்தினர் ‘வியாக்கிர பாதர்’ (‘வியாக்கிரம்’ என்றால் புலி) என்று அழைக்கப்பட்டார்.
பதஞ்சலி - வியாக்கிரபாதருக்காக ஆனந்தத் தாண்டவம்!

சிவபெருமானின் ஆனந்த நடனக் காட்சியை, கயிலாயத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும் கண்டு இன்புற்றது போல, தாங்களும் கண்டு வணங்க வேண்டும் என்று, வியாக்கிரபாதரும் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலியும் தில்லைவனத்தில் கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், தைப்பூச குருவார பௌர்ணமி தினத்தில், அமிர்த சித்தியோக விருஷப லக்னத்தில்,  அவர்களுக்காக இறங்கி வந்து தில்லையில் ஆனந்தக் கூத்தாடினார் என்கிறது தல புராணம். 

மேலும், ‘அற்புதமான ஆனந்தக் கூத்தினை நாங்கள் மட்டும் கண்டு உய்தால் போதாது; பூலோக மக்கள் யாவரும் கண்டு பயனுற வேண்டும். அதனால், ஆனந்த திருநடனக் கோலத்திலேயே எப்போதும் இங்கே எழுந்தருளி இருக்க வேண்டும்’ என்ற அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, தை மாதம் பூச நட்சத்திர தினத்தில், ஸ்ரீநடராஜப் பெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் சிதம்பரத்தில் இறங்கியதாக ஐதீகம்.
அதையே  ஆனந்தத் தாண்டவ ஓவியம் விவரிக்கிறது.

மேலும், தேவதாருகாவனத்தில் ரிஷிகளின் அகந்தையையும் மமதையையும் அடக்கி, ஆத்மார்த்தமான அன்பும் உள்ளார்ந்த பக்தியும் இருந்தால் மட்டுமே பகவானை அடைய முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த, பிட்சாடனர் கோலத்தில் இறைவன் வந்த காட்சியும் இங்கே ஓவியமாக இருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை தரிசன திருவிழாவில், 8-ம் நாள் (ஜனவரி - 9) நடராஜர் பிட்சாடனராக வலம் வருவதை பக்தர்கள் தரிசிக்கலாம்.

இப்படி தெய்வ ஓவியங்களுடன் கலைப் பொக்கிஷமாகத் திகழும் சிதம்பரம் கோயி லுக்குச் சென்று  ஆனந்தத் தாண்டவ மூர்த்தி யைத் தரிசித்து நாமும் பேரின்பம் அடை வோம், இந்தப் புண்ணிய மாதத்தில்!


தில்லையின் அற்புதங்கள்!
சிவபக்தர்களைப் பொறுத்தவரை கோயில் என்றாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். 

சிவாலயங்களில் சிவலிங்கம்தான் பிரதான மூர்த்தி. ஆனால், சிதம்பரத்தில் மட்டும் நடராஜர் தான் மூலவர். ஆண்டுக்கு இருமுறை மூலவரே, உத்ஸவராகவும் பவனி வரும் ஒரே தலம் சிதம்பரம் மட்டுமே. 
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம் சிதம்பரம். அதேபோல, தரிசித்தால் முக்தி தரும் ஸ்தலமும்கூட! 

ரே சந்நிதியில் நின்றபடி சிவனையும் பெருமாளையும் தரிசிக்கக்கூடிய ஒரே கோயில் சிதம்பரம். நடராஜர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் இதயக் கமலத்தில் நின்றால், நமது இடக் கண்ணால் பெருமாளையும், வலக் கண்ணால் சிவனாரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் அமைப்பு வேறெங்கும் இல்லை. 

டராஜரின் வலப்புறம் திரை ஒன்று இருக்கும். அதன் பின்னே உள்ள கற்சுவரில், தங்கத்தாலான வில்வ மாலை சாத்தப்பட்டிருக்கும். ஸ்ரீ, சிவா என்கிற இரண்டு சம்மேளனச் சக்கரங்கள் அங்கே அமைந்திருப்பதைத் தரிசிக்கலாம் (ஸ்ரீ - அம்பாள்; அதாவது சக்தி. சிவா என்பது இறைவன்). அதன் மேலே புனுகு, ஜவ்வாது ஆகியன எப்போதோ சாத்தப்பட்ட நிலையில், இன்றைக்கும் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம்.

ந்தத் தலத்தில் பஞ்ச சபைகள் உள்ளன. அவை: மூலவர் அருளும் சித்சபை. அபிஷேகம் நடைபெறும் கனகசபை, பரிவார மூர்த்திகள் அருளும் தேவ சபை, 1000 கால் மண்டபம் அமைந்துள்ள ராஜ சபை, நடராஜரும் காளியும் போட்டி போட்டு நடனம் ஆடிய நிருத்ய சபை. 

பைகள் மட்டுமின்றி, ஐந்தின் அடிப்படையில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. பஞ்ச மூர்த்திகள், பஞ்சாட்சரப் படிகள், பஞ்சப் பிரகாரம் ஆகிய விசேஷங்களுக்கு உரியது சிதம்பரம் கோயில்.
பூமியை விராட புருஷன் எனும் மனிதனாக உருவகம் செய்தால், அவருடைய ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. அப்படி அவரின் இதயப் பகுதியில் அமைந்திருக்கிறது சிதம்பரம். எனவேதான், பொன்னம்பலத்தில் நடராஜர் இடது பக்கமாக இருக்கிறார்.

ண்டியல் இல்லாத ஒரே கோயில் சிதம்பரம். அதேபோல, எதற்குமே ‘கியூ’ இல்லாத கோயில். காலையும் மாலையும் 1000 பேருக்கு அன்னதானம் இடும், ‘சகஸ்ரபோஜன்’ இங்கே சிறப்புமிக்கது.

பொன்னம்பலத்தில் தினமும் ஆறு காலம் நடைபெறும் சந்திரமௌலீசுவரர் (ஸ்படிக லிங்கம்) அபிஷேகத்தை, தினம் ஒரு தீட்சிதர் முறை வைத்து செய்கிறார். உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடன் அதிகாலையில் அம்பலத்தில் ஏறும் அந்த தீட்சிதர், காலை மூன்று கால அபிஷேகம் முடியும் வரை அன்ன, ஆகாரம் எதுவும் எடுக்கக்கூடாது. அதேபோல, கீழேயும் எக்காரணம் கொண்டும் இறங்கக்கூடாது. மதிய உணவுக்குப் பின், மீண்டும் மாலை மூன்று கால அபிஷேகத்துக்கும் இதே நியதிதான். இதை தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் பாக்கியமாக எண்ணிச் செய்கிறார்கள். 

ந்த ஆலயத்துக்கு திப்பு சுல்தான், ராமநாதபுரம் ராஜா ஆகியோர் அளித்த நகைகள் இன்னும் பாது காப்பாக வைக்கப்பட்டு, விசேஷ தினங்களில் அணிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன.

 Thanks... பிரேமா நாராயணன்