Tuesday, 1 November 2016

அன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்!

விஸ்வநாதர்
விஸ்வநாதர்

”அன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்!”

அன்னம். – உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றிஉலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும்ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.

அன்னநநிந்த்யாத் – தத்வ்ரதம்
அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்!
நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்!
தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்!
ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!   –  (தைத்ரீயோப நிஷத் – ப்ருகுவல்லி)

தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள்அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வணவேதத்திலுள்ள ‘அன்னபூர்ணோபநிஷத்’ அன்னத்தின்மேன்மைகளைக் கூறுகின்றது.

“அன்னம்  நிந்த்யாத்:” – அன்னத்தை நிந்தனை செய்யக்கூடாது.

“அன்னம் ப்ராணாவோ அன்னம்” – 

எது உயிர்கொடுக்கின்றதோ அதுவே –அது இல்லாமல் போனால்அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர்உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.

“அஹமன்னம்அஹமன்னம்அஹமன்னம்” –

அன்னமேஇறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின்வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே நானாகஇருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள்விளக்குகின்றன.


தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப்பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர்பாகமாக – தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாகசெய்யப்படுவது.

ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும்தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்றுவேதங்கள் கூறுகின்றன. அன்னம் எனும் ஹவிர்பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன. சிவனுக்குரிய ஹவிர்பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக்கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.

இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்குஅபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்தபுண்ணியங்களைத் தரவல்லது. தானத்திலும் மிகஉயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி(உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றுபுறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின்மகிமையைக் கூறுகின்றன.

உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம்குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும்வீண்போவதில்லை.

 


|| சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ||

நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்றஅர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம்எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின்சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றியவிதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும்விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள்அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும்கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன.சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமறநிறைந்திருக்கின்றது.

அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம்தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான். அண்டம் முழுக்கசிவ வடிவம் தான்.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவவடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களைதரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.

சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹாவிஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை,அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.

சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட  அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்குஎன்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு. ஐப்பசிமாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம்செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அவையாவன:

 மாதம் – பொருள் – பலன்

சித்திரை பௌர்ணமி – மருக்கொழுந்து – புகழ்

வைகாசி பௌர்ணமி – சந்தனம்– மனைவீடுநிலம்,புதையல்

ஆனி பௌர்ணமி – முக்கனி = மாபலாவாழை – கேட்டவரம் கிட்டும்

ஆடி பௌர்ணமி – காராம் பசுவின் பால் – பயம் நீங்கும்

ஆவணி பௌர்ணமி – வெல்ல சர்க்கரை – சாபம் தோஷம்பாவம் நீங்கும்

புரட்டாசி பௌர்ணமி – கோதுமை+பசுநெய் கலந்த வெல்லஅப்பம் – அஷ்ட ஐஸ்வரியம்

ஐப்பசி பௌர்ணமி – அன்னாபிஷேகம் – கல்வி கலைதேர்ச்சி ஞானம் கிட்டும்

கார்த்திகை பௌர்ணமி – பசு நெய்தாமரை நூல் தீபம் –பழி தீரும்வழக்கு வெற்றி

மார்கழி பௌர்ணமி – பசு நெய்யுடன் நறுமண வென்னீர் –கண்டம் நீங்கி ஆயுள் கூடும்

தை பௌர்ணமி – கருப்பஞ்சாறு – நோய் நீங்கிஆரோக்கியம்

மாசி பௌர்ணமி – பசுநெய்யில் நனைத்த கம்பளி –குழந்தை பாக்கியம்

பங்குனி பௌர்ணமி – பசுந்தயிர் – மனைவிமக்கள்,உறவினர் உதவி

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ்திருமுறைகள் போற்றும் – சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர்சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும்மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

தவக்கனல், அருட்புனல், மண்ணில் வாழ்ந்த, சிவவடிவாகவே கருதப்படும் காஞ்சி மஹா பெரியவரின்அருளாணையின்படி, பல்வேறு சிவாலயங்களில் மஹாஅன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

அதில் மிக முக்கியமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில்உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்குநூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும்வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம்முழுக்க அன்னதானம் செய்யப்படும். அன்னாபிஷேகக்காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில்கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும்கிடைக்கின்றது.

அன்னை அபிராமியும், அபிராமி பட்டரும்

அன்னை அபிராமி
அன்னை அபிராமி
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்க ஐயரவர்கள். இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின் பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள்.  தம் உள்ளத்தே அன்னையின் பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.
யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச்சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படிப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமலும், சற்றும் லக்ஷியம் செய்யாமலுமே அபிராமியைத் துதிப்பதும், அவள் பால் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.
அப்படி இருக்கையில் ஒரு நாள் தஞ்சையின் அரசன் ஆன ராஜா சரபோஜி தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடி, திருக்கடவூருக்குத் தரிசனம் செய்ய வந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரனந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனால் சுற்றி இருப்பவர்களோ தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டனர். மன்னர் வந்திருப்பதும் அறியாமல், மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே என நினைத்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், “இவர் ஒரு பைத்தியம். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுகிறார்.” என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம், “இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?” என்று கேட்டார்.
அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ, “ஆஹா, இன்று பெளர்ணமி அல்லவோ?” என்று சொல்லிவிட்டார். சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் கைகொட்டிச் சிரிக்காத குறையாய் அவரை ஏளனத்துடன் பார்க்க, மன்னர் சுற்றிலும் இருந்தவர்கள் கூறியது உண்மையே என நினைத்த வண்ணம் பட்டரை மதிக்காமல் அலக்ஷியத்துடன் சென்று விட்டார்.  சென்றாரே தவிர மன்னனுக்கு அவருடைய தோற்றமே கண்ணெதிரே வந்தது. திரும்பத் திரும்ப அன்று பெளர்ணமி என பட்டர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னை அறியாமல் கண்ணயர, கர்ப்பகிருஹத்து அபிராமி அவர் கண்ணெதிரே தோன்றினாள். “இதோ பார்,” என்று சொல்லிக் கொண்டே தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். “ஆஹா, இது பூரண நிலவு அன்றோ! முழுமதி சுடர் விடுகின்றது பாருங்கள்,” என சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தான். கனவா? நனவா??? மன்னர் உடல் எல்லாம் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.
இங்கே பட்டருக்கு மன்னன் சென்றதுமே தாம் செய்த பெருந்தவறு புரிந்தது. ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர்,  உடனேயே அன்னையின் அருளால் மனம் தெளிவுற்று, இதுவும் ஒரு நன்மைக்கே எனத் தெளிந்து அன்னையின் அருளைத் துதித்துப் பாடல்கள் இயற்றலாயினார்.  அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் அநுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அருவி போலப் பொழியலாயிற்று. அங்கே கண் விழித்து எழுந்த மன்னருக்கு அபிராமி பட்டர் பெரும் ஞாநி என்பது புலப்பட்டது. உடனேயே பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் அளித்தார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார்.  இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை.
 மேற்சொன்ன நிகழ்வைச் சிலர் வேறு விதமாயும் கூறுகின்றனர்.  மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாய்க் கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னதாய்ச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்னியை மூட்டி அதற்கு மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, “அம்பிகை எனக்குக் காக்ஷி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடியதாகவும் கூறுவார்கள். “உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்” என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், “விழிக்கே அருளுண்டு “ என்ற 79-வது பாடலின் போது மயங்கும் மாலைப் பொழுதில் அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் காக்ஷி கொடுத்துத் தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் சொல்லுவார்கள். எங்கனமாயினும் பட்டரின் பக்தியும், பெருமையும் சற்றும் குறைந்தது அல்ல. அதே போல் மன்னன் எவ்வாறோ அன்னையின் அருளைப் பூரணமாய் உணர்ந்திருந்தான் என்பதும் உண்மையே.
அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேரனந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆனந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே! 
———————அபிராமி அந்தாதி பாடல் 79
 கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”

திருவலம் அருள்மிகு தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்


இறைவர் திருப்பெயர்          :  வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.

இறைவியார் திருப்பெயர் :  தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.

தல மரம்                                     :  வில்வம்.

தீர்த்தம்                                       :  கௌரி தீர்த்தம்.

வழிபட்டோர்                              :  கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர்           
                                                                முதலியோர்.

தேவாரப் பாடல்கள்             :  சம்பந்தர் - எரித்தவன் முப்புரம்.


சிறப்புகள்:

·         நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.

·         பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில் 'வல்லம்' என்றொரு ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது.


·         ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

·         கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

 

·         கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது; காணத்தக்கது.
·         மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும்.

·         "ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாக உள்ளது; இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்று உள்ளது.

·         இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


·         மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.

·         மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.


·         கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, மூலத் திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

·         இடதுபுறம் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதி உள்ளது; பஞ்சம் நேரில், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

·         கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.


 

தல வரலாறு:

மக்கள் வழக்கில் 'திருவலம்' என்று அழைக்கப்படுகிறது.

ஊருக்குள் 'நிவா' நதி ஓடுகிறது; நதியின் கரையிலேயே கோயில் உள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். இன்று 'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. (இப்போது கோயிலுள் கௌரி தீர்த்தமும் தீர்த்த கிணறும் உள்ளது.)

ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது. அக்காட்டில் ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் இருந்தது. நாடொறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்றி சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.


கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது. இதன் வரலாறு - இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. (அது தற்போது 'காஞ்சனகிரி' என்று வழங்குகின்றது.) இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் மிகப்பழங்காலத்தில் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவருவதை 'கஞ்சன்' தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின்; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது "லாலாபேட்டை" என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால் என்பது அவ்வசுரன் நின்று போரிட்ட திக்கிலிருந்து கையாளப்பட்ட வார்த்தையாக தெரிகிறது) வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் "மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படுகிறது. (இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளன.) இந்நிகழ்ச்சியை யொட்டியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.


காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. (இன்றும் இம்மலையில், குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம்.)


விபூதியும், பெருமையும்!

லிங்கம்
சிவ லிங்கம்

சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச் சின்னமானதாகவும்,முக்கியமானதாகவும் அமைவது விபூதி.

பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால்போற்றப்படுவது விபூதி.

விபூதி என்பதற்கு மொழியியல்படி, பலவேறு அர்த்தங்கள் உண்டு.

இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது,எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது,வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது,சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது,அலங்கரிப்பது.

சிவபெருமானின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கக் கூடிய ஒரேபொருள் விபூதி மட்டுமே. பொன்னார் மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத் துகள்களாகமின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: – ஸ்ரீசிவாஷ்டோத்தரம்)

விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.

இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன் அனைவரும் சமமேஎன்பதையும் சுட்டுகின்றது.

உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள்தூய்மையடைகின்றன.

வேதங்களும, உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த்திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப்பறைசாற்றுகின்றன.

ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்றுஅரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக்கோட்டைகளைக் கொண்டு, தேவர்களை வருத்தினர்.

அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம்முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க, சிவபெருமானால்மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி பிரார்த்தனைசெய்தனர்.

பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்தத்தும்ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும், மஹா விஷ்ணு தான் பள்ளிகொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின்கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம்செய்தனர். யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழியபிரார்த்தனை செய்தனர்.

மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அதுவேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத்எனும் மந்திரமாக அமைந்தது. பொதுவாக சிவாலயங்களில்,விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான்சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜாவிபாப்மா பூயாஸம் ஸ்வாஹா)

இந்த மந்திரம் – உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா எனஅனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன்உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார் என்கின்றது (மஹாநாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் – மிகவும்அற்புதமானது.)

பிரம்மா, விஷ்ணு – இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான்மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமேஎரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.

(ஒரு தகவல்: முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒருபாகம் மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது.அந்த இடம் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.இவ்விடம், தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில்உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண்செங்கல் அமைக்க உதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல்சுடுவதற்கு பயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம் என்பதால்வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில்அருமையான சிவஸ்தலம் உள்ளது)

சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச்சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.

விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாகவிளக்கியுள்ளன.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன்கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்கவேண்டும். அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடியகார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும்இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சிலஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான்எரிக்கப்பட வேண்டும் என்பர்)

அது, திறந்த வெளியில், தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம்முழுவதும் – பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம்மாறிக்கொண்டிருக்கும். தைமாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய, சாம்பலின் கரியநிறம் மாறி வெளிறும்.

மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில்அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் – ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக்கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க,மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாகபானையினுள் சேரும்). அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.

மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சிலமுறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம்,பெளஷ்டிகபஸ்மம்)

பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதிகொண்டிருக்கின்றது.

விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்றுஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம், சன்யாசம்)

சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில்மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கை பிரம்ம, விஷ்ணுபாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு தவமிருந்துபெற்றதால் – அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெறவேண்டும்)

ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில்குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்),உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்துகொள்ளலாம் என்றும்,

பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும் (உத்தூளனமாக) என்றும், சாஸ்திரங்கள்வலியுறுத்துகின்றன.

பெண்கள் – ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியைஎடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ளவேண்டும். (சிவ–தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாகஅணியலாம்)

விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோஅல்லது ‘சிவசிவ’ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்கவேண்டும்.

ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல்,நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள்இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும்,மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும்தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும்,பின்கழுத்திலும் தரிப்பார்கள்). காலை, மதியம், மாலை மூன்றுநேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்கவேண்டும்.

பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்ற வல்லது. குளிக்கும்நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலைமுழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும். பயம் நீங்கவும்,ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதிபயன்பட்டிருக்கின்றது.

விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும்வழக்கம் உண்டு. விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும்பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும்குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சிலசம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.

சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர்சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலிநீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.

சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன்மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்பநோய் இருந்தது. அதை நீக்க, அவன் மனைவி மங்கையர்க்கரசியார்சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில், சிவன் வந்துதிருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார்.மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரைதரிசித்து, தன் குறையைச் சொல்ல, அவர் ‘மந்திரமாவது நீறு, வானவர்மேலது நீறு‘ எனத் தொடங்கும் ‘திருநீற்றுப் பதிகம்‘ பாடி விபூதியை,கூன் பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய்நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.

சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான், அரசுதாங்கி ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம்வருகின்றார். அப்பொழுது, துணிகளை வெளுக்கும் தொழிலாளர்,உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக் கூடையில் சுமந்து வர, நீரில்நனைந்த அந்த மண் அவரின் மேனி முழுவதும் வழிந்து, விபூதி பூசியதுபோல தோற்றம் தரச் செய்தது. பட்டத்து யானையிலிருந்து, சலவைத்தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக் கண்டசேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி, அவர் பெரும்சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி, சலவைத் தொழிலாளியைவணங்கினார். அரசன் தன்னைக் கண்டு வணங்கியதால், அச்சமுற்றசலவைத் தொழிலாளி தன் நிலையை உணர்த்த, வெள்ளை உழமண்விபூதியை நினைவு படுத்திய காரணத்தினாலேயே, அவரை வணங்கமுற்பட்டதை சேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.

சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக் கப்பம்கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட, படைகளும் எதிரிநாட்டை வென்று, தோல்வி கண்ட வீரர்களின் தலைகளைக் கொண்டுவந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாக அளிக்க, அதைக் கண்டு, கொண்டு வந்த அந்த வீரர்களின் தலைகளுள் – ஒரு தலை மட்டும்குடுமி கொண்டு, சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டுஅதிர்ந்து, ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமேஎன்று மனம் நொந்து, சோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.

சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார் என்பவர்,படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர். அவருடன் பல முறை போராடிதோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒரு உபாயம் செய்தான். அவன்ஏனாதிநாதரைத் தனிமையில் சமர் செய்ய அழைத்து, அச்சமயம்இவன் சிவச்சின்னமாகிய விபூதியைத் தரித்துக்கொண்டு, அதைகேடயத்தால் மறைத்துக் கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர்அருகில் வந்ததும், கேடயத்தை நீக்க, ஏனாதிநாதர்எதிரியாயிருப்பவன், தன்னைக் கொல்லவந்தவன் திருநீறுஅணிந்திருப்பது கண்டு, அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டைசெய்யாமல் பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.

‘மெய்ப்பொருள்’ எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசைநீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார். சிவ தத்துவங்களின்மெய்யான உண்மைகளை, மக்களுக்கு அறிவிப்பதில் தேர்ந்தவராகஇருந்ததால் ‘மெய்ப்பொருள்’ என்று போற்றப்பட்டார். இவரின் எதிரிதேசத்து அரசன், தமது வலிமையால் இவரை வெல்லமுடியாது எனஎண்ணி, சிவச் சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன்,சிவனடியார் வேடத்தில் வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள்உணர்த்த வந்தேன் எனக் கூறினான். மெய்ப்பொருள், அதைக் கேட்கஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம், ஓலைச்சுவடிகளுள் ஒளித்துவைத்திருந்த கத்தியை எடுத்து, மெய்ப்பொருளை வெட்டினான், எதிரிதேசத்து அரசன்.

சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக் கையைஓங்க, ரத்தம் சிந்திக் கொண்டு, மரணத்தின் தறுவாயில்இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாக இருந்தாலும்,சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும் சிவாம்சமே, ஆகவே,இவருக்கு எவ்வித தொல்லையுல் இல்லாமல் எல்லை வரைபத்திரமாகக் கொண்டு விடக் கட்டளையிட்டான். அவ்வண்ணமேமெய்க்காப்பாளன் செய்ததைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகுஉயிரைவிட்டு சிவபதம் அடைந்தார்.

விபூதி, நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்குவழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும்சாதனமாகவும்,விளங்குகின்றது. ‘விபூதீரைச்வர்யம்’ என்ற சொல் –விபூதி, ஐஸ்வர்யங்களைத் தரவல்லது – என்ற அர்த்தம் கொண்டது.

கங்கை நதிக்கு நன்றிக் கடனாக செய்யப்படும் கங்கா ஆரத்தி

கங்கை நதிக்கு நன்றிக் கடனாக செய்யப்படும் கங்கா ஆரத்தி



கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். பாரதத்தின் புண்ணிய நதியாக விளங்கும் மகாநதி கங்கை மட்டுமே.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான்.

கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்ற நம்பிக்கை இந்துக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த பூஜை காசி மாநகரிலேயே கங்கைக் கரையில் பல இடங்களில் நடைபெற்றாலும் ‘தஸாஸ்வமேத’ கட்டத்தில் நடைபெறும் பூஜையே மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த பத்து பூசாரிகளால் மிக மிக நிதானமாக இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பத்து உயர்ந்த மேடைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். மின் ஒளி விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் நடைபெறும். ‘கங்கா ஆரத்தி’ பூஜையைக் கண்டு பக்தர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கிறார்கள்.

ஏராளமான பக்தர்கள் படகுகளில் ஏறி நதிக்குள் அமர்ந்து கங்கா ஆரத்தி பூஜையைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த பூஜை சுமார் ஒரு மணி நேரம் நடைபெறுகிறது. அப்பொழுது ஒலி பெருக்கிகள் ‘கங்கா மாதா’வின் புகழைப் போற்றிப் பாடுகின்றன. புனித கங்கை நதிக்கரையில் ஆரத்தி பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

தேரையர் சித்தர் வாழ்ந்த தோரணமலை