Monday, 3 April 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1


முன்னுரை:

சைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். அம்முப்பொருள்களை மேற்பொருள், இடைப்பொருள், கீழ்ப்பொருள் என்று குறிப்பிடலாம். மேற்பொருளாய் இருப்பது இறை. இடைப்பொருளாய் இருப்பவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள்.

மேற்பொருள்

இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெரு நிறைவை எவ்வாறு உணர்ந்து கொள்வது? ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும், விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.

இடைப்பொருள்

உயிரை வடமொழியில் ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கியிருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்; உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்; பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பொருள்; கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப் பொருள் ஆயிற்று.

கீழ்ப்பொருள்

மேற்பொருளாகிய கடவுளும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கிழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

கடவுளும் உயிரும்

கடவுளும் உயிரும் சித்து என்ற வகையில் ஓரினம் என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டனவாகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது, உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒரு நிகரன அல்ல என்பது விளங்கும்.

உயிரும் மலங்களும்

கடவுட் பொருள் மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்ற மாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியிருப்பதற்கான காரணத்தை இவ்வுவமையிலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

ஆணவம்

இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை செய்வோமா?

எங்குள் உளன் ஒருவன் காணுங் கொல் என்றஞ்சி
அங்கம் குலைவது அறிவு(நீதி நெறி விளக்கம், 94)

என்றார் குமர குருபர அடிகள். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே ஆணவ மலம் எனப்படுகிறது. எல்லா உயிர்களும் முதலிலிருந்தே ஆணவ மலத்தை உடையவாயின. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும் உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்த படியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவ மலமேயாகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலம் ஆதலின் மூலமலம் எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்றலின் சகச மலம் எனப்படும். கண்ணை மறைக்கும் புற இருள் போல இஃது அறிவை மறைக்கும் அகவிருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும். மலம் என்று சொன்னாலே அஃது ஆணவ மலத்தையே குறிப்பதாகும்.

மாயை

ஆணவ மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவம் உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே உடையதாகிறது. அஃதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளேயிருக்கும் தலைவனாகிய இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப் பொருள்களையே நோக்கி நிற்கிறது.

கன்மம்

இந்நிலையில் ஆணவ மலம் திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

மும்மலக் கட்டு

மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் (கட்டு) என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள், இதனைப் பின்வரும் எடுத்துக் காட்டினால் விளங்கிக் கொள்ளலாம். அவிழ்க்க முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பது? அதற்கு ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதற்கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முற்கட்டும், மாயை கன்மங்கள் பிற்கட்டும் ஆகின்றன.

பதி, பசு, பாசம் என்னும் பெயர் வழக்கு

ஆணவம், கன்மம், மாயை ஆகியவை பாசம் என்னும் பெயரைப் பெற, அவற்றால் கட்டுண்டு கிடக்கின்ற உயிர் பசு என்னும் பெயரைப் பெறுகின்றது. இருள் வடிவான ஆணவமும், பிறவித் துன்பத்தைத் தரும் கன்மமும், மயக்கத்தைத் தரும் மாயையும் ஆகிய இம்மும் மலக் கட்டினின்றும் பசுக்களாகிய உயிர்களை விடுவித்துக் காப்பவனாகிய இறைவன் பதி எனப்படுகின்றான். மேற்பொருள் என்றும், இடைப்பொருள் என்றும், கீழ்ப்பொருள் என்றும் மேலே நாம் விளக்கிய முப்பொருள்களே பதி, பசு, பாசம் என்னும் இப்பெயர்களால் நூல்களில் குறிப்பிடப் பெறுகின்றன.

இந்நூலின் பெயர் விளக்கம்

முப்பொருள்களை விளக்கிக் கூறும் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். அவற்றுள் ஒன்று உண்மை விளக்கம் என்னும் இந்நூல். இது சித்தாந்த உண்மைகள் அனைத்தையும் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுவதாய், சித்தாந்தத்தினை அறிய விரும்புவோர் தொடக்கத்தில் கற்பதற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. எப்பொருளையும் இருவகையாக அறியலாம். ஒன்று, அதன் பொதுமையை மட்டும் உணர்வது மற்றொன்று, அதன் உண்மையை உணர்வது. உண்மையை உணர்வதே மேலானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உண்மை என்பதை வடமொழியில் தத்துவம் என்று குறிப்பிடுவர். பொருள்களது உண்மையை உணர்விப்பவை தத்துவ சாத்திரங்கள், அத்தகைய தத்துவ சாத்திரமாகிய இந்நூல் முப்பொருள்களது உண்மையை நன்கு விளக்குவது ஆகலின் உண்மை விளக்கம் என்னும் பெயர் பெற்றது.

நூலின் ஆசிரியர்

இதனைச் செய்த ஆசிரியர் மணவாசகங் கடந்தார் என்பவர். அவர் சந்தான முதற்குரவராகிய மெய்கண்ட தேவரின் மாணாக்கருள் ஒருவர். மற்றொரு மாணாக்கர் அருணந்தி சிவனார். எனவே மனவாசகங் கடந்தார் அவருக்கு ஒருசாலை மாணாக்கர் ஆவார். மனவாசகங் கடந்தார் பற்றிய வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியவரவில்லை. அவர் திருவதிகை(தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பண்ணுருட்டி) என்னும் ஊரினர் என்ற குறிப்பு மட்டும் கிடைக்கிறது. இவரது காலம் மெய் கண்டார் வாழ்ந்த காலமாகிய கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பது சொல்லாமலே விளங்கும்.

நூலை அமைத்துக் கொண்ட முறை

இந்நூல் வெண்பாயாப்பினால் ஆனது. காப்புச் செய்யுள் உட்பட 54 வெண்பாக்கள் உள்ளன. மனவாசகங் கடந்தார் தாம் வினவிய வினாக்களுக்குத் தம் ஆசிரியர் அருளிய விடையாகவே இந்நூலில் உள்ள பொருள்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். இவ்வாறு சீடர் ஆசிரியரிடையே நிகழும் உரையாடல் முறையில் வைத்து நம்மனோர் எளிதில் விளங்கிக் கொள்ளும்படியாக உண்மைகளை உணர்த்தியுள்ள ஆசிரியரது திறன் போற்றுதற்குரியது. முப்பொருள்களை வரிசைப்படுத்தி அமைத்துக் கூறும் முறையில் நூலாசிரியர்கள் வேறுபடுகின்றனர். முதலாசிரியராகிய மெய்கண்ட தேவர் தமது சிவஞான போத நூலில் முப்பொருள்களைப் பதி, பாசம், பசு என முதலில் நிறுத்திப் பின் எதிர்வரிசையில் பசு, பாசம், பதி என வைத்து விளக்கிக் கூறினார்.

அவர்தம் தலை மாணாக்கராகிய அருணந்தி சிவனார் சிவஞான போதத்திற்கு வழி நூலாகத் தாம் செய்த சிவஞான சித்தியாரில் தமது ஞானாசிரியர் மேற்கொண்ட முறையையே தாமும் பின்பற்றி அப்படியே அமைத்துக் கொண்டார். இவர்களுக்குப் பின்னர் வந்த உமாபதி சிவனார் தாம் இயற்றிய சிவப்பிரகாசம், திருவருட் பயன் ஆகிய இரு நூல்களிலும் பதி, பசு, பாசம் என்ற வரிசை முறையினையே மேற்கொண்டார். இவ்வாறு இவர்கள் பதியை முதலில் வைத்துக் கூறிச்செல்ல, நமது மனவாசகங் கடந்தார் பாசத்தை முன் வைத்துப் பாசம், பசு, பதி என்ற முறையில் வரிசைப்படுத்தி விளக்கிச் சொல்வது புதியதொரு போக்காகும்.

முப்பொருள்களைப் பதி முதலாக எடுத்துச் சொல்வது மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் முறையாகும். பாசத்திலிருந்து எடுத்துச் சொல்வது கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் முறையாகும். கீழ் உள்ள பொருள்கள் மேல் உள்ள பொருளை விடப் பருமையானவை; ஆதலால் எளிதில் விளங்கக் கூடியவை. மேல் உள்ள பொருள்கள் நுண்மையானவை. ஆதலால் விளங்கிக் கொள்வதற்கு அரியவை. முப்பொருள்களில் கீழ் உள்ள பாசம் மேல் உள்ளவற்றை விட நமக்கு ஓரளவு தெரிந்த பொருள் ஆகிறது. தெரிந்த பொருளை முதலிற் சொல்லிப் பின் தெரியாததை விளக்குதல் என்பது கல்வி முறையில் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். முதலிலேயே தெரியாததை உணர்த்தினால் மாணவர் அதனைப் பற்ற மாட்டாது இடர்ப்படுவர். இதனைக் கருதியே நம் ஆசிரியர் மனவாசகங்கடந்தார் எளிதில் விளங்கக் கூடிய பாசத்தின் இயல்பை முதலில் விளக்கிப் பின் மற்றவைகளின் இயல்பை விளக்கிக் காட்டுகின்றார்.

இந்நூலின் தனிச் சிறப்பு

முப்பொருளின் இயல்புகளை ஏனைய சாத்திரங்களும் விளக்குகின்றன. அவற்றையே உண்மை விளக்கமும் விளக்குகிறது. அவ்வாறாயின், இந்நூலுக்கென்று வேறு தனிச் சிறப்பு ஏதும் இல்லையோ? என்று கேட்கலாம். ஏனைய சாத்திரங்களில் விளக்கப்படாத ஒரு பேருண்மையை உண்மை விளக்கம் விளக்கிக் காட்டுகிறது. அஃது அம்பலவாணர் ஆடும் அருட்கூத்தின் உண்மையாகும். நடராச தத்துவத்தை இந்நூல் போல இனிது விளக்கிக் காட்டுகிற நூல் வேறொன்று இல்லை. இஃது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

காப்பு

விநாயக வணக்கம்

எடுத்துக் கொண்ட இந்நூல் இடையூறு இன்றி இனிது முடிதற் பொருட்டு முதலில் விநாயகப் பெருமானை வணங்கி நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

ஐங்கரனை உள்ளத்தில் வைப்போம்
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரை செய்யத் திண்மதஞ்சேர்
அந்தி நிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
பந்தமறப்புந்திள்வைப் பாம்

பதவுரை

வண்ணம் உபநிடதங்களின் தெளிபொருள் ஆகிய வளத்தை
தரும் விளக்கிச் சொல்லுகின்ற
ஆகம நூல் சிவாகம நூல்களில்
வைத்த உணர்த்தப்பட்ட
பொருள் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையியல்புகளை
வழுவா அவ்வாகமங்களின் கருத்திற்குச் சிறிதும் மாறுபடாத வகையில் விளக்கிக் கூறுகின்ற
உண்மை விளக்கம் உண்மை விளக்கம் என்னும் பெயரை உடைய இச் சாத்திர நூலை
உரை செய்ய யாம் உரைத்தற்கு
திண் மதம் சேர் அழுத்தமான மதநீர் ஒழுகும் கன்னங்களையும்
அந்தி நிற செவ்வானம் போன்ற சிவந்த ஒளியையும் கொண்ட
தந்தி முக யானை திருவயிறும்
ஐங்கரனை ஐந்த திருக் கைகளும் உடையவராகிய விநாயகக் கடவுளை
பந்தம் அற எமது அறிவில் உள்ள அஞ்ஞானம் ஆகிய தடை நீங்கும் படி
புந்தியுள் வைப்பாம் உள்ளத்துள் வைத்துத் தியானிப்போம்

பொழிப்புரை

உபநிடதங்களின் தெளிபொருளை விளக்குவன சிவாகமங்கள், அச் சிவாகம நூல்களில் உணர்த்தப்படும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்பன. அம்முப்பொருள்களின் இயல்புகளை அவ்வாகமங்கள் கூறுகின்றபடியே வழுவாமல் உரைக்கப் புகுவது உண்மை விளக்கம் என்னும் இந்நூலாகும். இந்நூலை யாம் செய்வதற்கு விநாயகப் பெருமானது அருளை வேண்டி அவரை எம் உள்ளத்திற் கொண்டு வழிபடுவோம். அவர் செவ்வானம் போன்ற சிவந்த ஒளியினை உடையவர். மதம் பொழியும் ஆனைமுகம் கொண்டவர். பருத்த திருவயிற்றினை உடையவர். ஐந்து திருக்கைகளோடு விளங்குபவர். இத்தகைய வடிவினராக நினைத்தற்கு உரியவர் அவர்.

விளக்கம்

வண்மை தரும் ஆகம நூல்

உபநிடதங்களும் சிவாகமங்களும் முடிவால் வேறல்ல என்று சித்தாந்த சைவம் கொள்ளும். அவை சொல்லும் முறையாமல் வேறுபடுவனவேயன்றிப் பொருளால் வேறுபடுவன அல்ல. ஆன்மாக்கள் முதலிலேயே பொருள்களின் நுண்ணியல்பை உணர்ந்து கொள்ளும் அறிவு வன்மை உடையன வல்ல. முதலிலேயே உணரமாட்டாது, படிப்படியே அறிவு விளங்கி மேம்பட்டு வந்து முடிவிலேயே முழுவுண்மையை உணரும் தகுதியைப் பெறும். இதற்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூறுவோம்.

இரவில் வானத்தில் வடதிசையில் ஏழுவிண்மீன்களின் கூட்டம் காணப்படும். அவை ஏழு முனிவர்களின் பெயரால் கட்டப்படும். அவ் விண்மீன்களில் ஒன்று வசிட்டர் என்னும் மீன். அத பெரிதாயிருக்கும். கண்ணுக்கு எளிதிற் புலப்படும். அதன் அருகே இருப்பது அருந்ததி என்னும் மீன். அருந்ததி என்பவள் வசிட்ட முனிவரின் மனைவி. கற்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவள். வசிட்டர் மீனின் அருகிலுள்ள மீனுக்கு அவள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அருந்ததி மீன் மிகமிகச் சிறியதாய் இருக்கும்; பார்த்தவுடனேயே புலப்பட்டுவிடாது. கற்பிற் சிறந்த ஒரு பெண்ணின் வடிவம் என்பதால் அம் மீனைப் பலரும் காணு விரும்புதல் இயல்பு.

அருந்ததி மீனை ஒருவர் பார்க்க விரும்புகிறார் என்று கொள்வோம். அவருக்கு அதனைக் காட்ட முற்படுகிறான் மற்றொருவன். அப்பொழுது அவன் ஒரு முறையைக் கையாளுவன். அஃதாவது, அவன் முதலிலேயே இதுதான் அருந்ததி மீன் என்று காட்டமாட்டான். முதலிலேயே காட்டினால் கண்டு கொள்ள இயலாது என்று கருதி, அருந்ததி மீனை ஒட்டினாற் போல உள்ள பெருமீனாகிய வசிட்டர் மீனைச் சுட்டி, அதுதான் அருந்ததி என்று முன்னர்க் காட்டி, அதனை அவர் கண்ட பிறகு, அதுவன்று அருந்ததி மீன், அதற்குப் பக்கத்தில் உற்றுப் பாருங்கள். ஒரு நுண்ணிய மீன் விளங்குகிறது அல்லவா? அதுதான் அருந்ததி மீன் என்று சொல்லி, அவர் அதனை எளிதாகக் கண்டு கொள்ளும்படி செய்வான்.

இம்முறையிலேதான் உபநிடதங்கள் பொருள்களின் உண்மையை முழுதுமாக உணர்த்தாமல், ஓரளவாக உணர்த்துகின்றன. பொருள்களைப் பொதுப்படக் கூறிச் செல்கின்றன. உபநிடதங்கள் பொதுவாகக் கூறுவது, அருந்ததியின் அருகில் உள்ள மீனை அருந்ததி என்று காட்டுதல் போன்றது. உபநிடதங்கள் அங்ஙனம் குறிப்பாய் உணர்த்திய பொருள்களைச் சிவாகமங்கள் தெளிவுபட வெளிப்படையாக இனிது விளக்கிக் கூறுகின்றன. இஃது அருந்ததி மீனையே சுட்டி, அதுவே அருந்ததி எனக் காட்டுதல் போன்றது. இவ்வாறு உபநிடதங்களின் தெளிபொருளைத் தருவன சிவாகமங்கள் ஆதலின் வண்மை தரும் ஆகம நூல் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

நூல்

மாணவர் ஆசிரியரிடம் வேண்டுதல்

1.பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் பொய்காட்டா

மெய்யா திருவெண்ணை வித்தகா சுத்தவினா
ஐயாநீ தான்கேட் டருள்

பதவுரை

பொய்காட்டி (வந்து அடைந்த உயர்ந்த பக்குவமுள்ள மாணவர்க்கு) நிலையில்லாத உணர்வுகளாகிய பாச ஞானமும், பசு ஞானமும் உனக்கு உரியனவல்ல என்பதைப் புலப்படுத்தி

பொய் அகற்றி அவற்றை நீக்கி

போத ஆனந்தப் (பதி ஞானத்தை விளங்கச் செய்து)தூய அறிவாயும், பேரின்பமாயும், மெய்ப் பொருளாயும் விளங்கும் சிவத்தை

காட்டும் அவர்க்கு அனுபவப்படுமாறு காட்ட வல்ல

மெய்கண்டாய் மெய் கண்ட நாதரே!

விண்ணப்பம் அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்று உண்டு.

பொய் காட்டா வினை தராத

மெய்யா உடம்பை(அருளுடம்பை) உடையவரே

திருவெண்ணை திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள ஞானதேசிகரே!

ஐயா ஐயனே!

சுத்த வினா திருவருளோடு ஒன்றாய் நிற்பதாகிய சுத்த நிலையைத் தலைப்படுவதற்கு விரும்பி அடியேன் கேட்கும் சில வினாக்களை

நீதான் கேட்டருள் உமது திருச்செவியில் ஏற்றருளி அவற்றிற்கு விடை கூறியருள வேண்டும்.

பொழிப்புரை

வந்தடைந்த பக்குவ ஆன்மாக்களுக்கு நிலையற்ற உணர்வுகளாகிய பாசஞான, பசு ஞானங்களை நீக்கி, அவற்றின் நீங்கி நிற்கும் அவர்தம் அறிவில் பதிஞானமாகிய திருவருள் ஒளியை விளங்கச் செய்து. அவ்வருளுக்கு முதலாகிய பேரின்ப மயமான மெய்ப் பொருளாகிய சிவத்தை அனுபவமாக உணரவைக்கும் மெய்கண்ட நாதரே! அடியேன் உம்மை வேண்டிக் கொள்கிறேன். வினை காரணமாக வராத அருளுருவைக் கொண்ட முதல்வரே! திருவெண்ணெய் நல்லூரை இருப்பிடமாகக் கொண்ட ஞானதேசிகரே! அடியேன் சுத்த நிலையாகிய ஞான வாழ்வினை எய்தும் விருப்பத்தால் கேட்கும் வினாக்களைத் திருச் செவியேற்று அவற்றிற்கு விடை கூறியருள வேண்டும் என்று ஆசிரியரிடம் விண்ணப்பம் செய்கின்றார் மாணவர்.

விளக்கம்

பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். அங்ஙனம் கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறியுமிடத்து, அவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறிதற் கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையிலிருந்து தோன்றிய காரியங்களேயாகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாமறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் பாசஞானம் எனப்படுவதாயிற்று. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானமாக மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பை அறியாது போகிறது.

ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளக்கலாம். பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

பசு ஞானம்

ஞானாசிரியரையடைந்து அவரது உபதேசத்தைப் பெற்ற காலத்திலேதான் ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய சித்துப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாமல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாயிருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டுநிலையில் தனது உண்மையியல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். காட்டாக, மேக படலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விழங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.

இவ்வாறு கருவியறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

பதிஞானம்

முதல்வனது அருளின் உண்மையை அவ்வான்மா உளங்கொள்ளுமாறு ஆசாரியர் பின்வருமாறு அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளேயாகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன்னறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின். அவ்வருளுக்கு முதலாகிய சிவம் பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறியவாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறியவொண்ணாது. அத்தகைய பதிஞானத்தை ஆன்மவுணர்வில் விளங்கச் செய்து, பதியாகிய சிவத்தைக் காட்டுபவரே ஞானகுரு ஆவார். ஞானநெறியில் நிகழும் இவ் அனுபவப் படிமுறைகளை யெல்லாம் இந்நூலாசிரியர் பொய்காட்டிப் பொய் அகற்றிப் போத ஆனந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் என்ற அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளமை காணலாம். மெய்யுணர்வை முற்றப் பெற்ற மெய்கண்ட தேவராகிய முதற் குரவர் தம்மையடைந்த பக்குவ மாணாக்கருக்கு மேற்கூறிய படிமுறையிலே ஞானத்தை உணர்த்தி ஆட்கொண்டார் என்பதை அவர்தம் மாணாக்கராகிய மனவாசகங் கடந்தாரின் இவ்வாக்கினால் நாம் நன்கு அறியலாம்.

போத ஆனந்தப் பொருளாம் மெய்

இறைவனது உண்மையியல்பைப் போதம், ஆனந்தம், மெய் என்ற மூன்று சொற்களால் குறிப்பிட்டார் ஆசிரியர். இவற்றுள், மெய் என்பது நிலைத்து நிற்பது. அஃதாவது என்றும் மாறுதல் இன்றி ஒரு தன்மைத்தாய் நிலைத்து நிற்பது. இது வடமொழியில் சத்து எனப்படும். நிலைத்து நிற்பது சத்து ஆதலின், நிலையில்லாதது அசத்து எனப்படும். சத்து என்பது தமிழில் மெய் எனப்படுதலின் அசத்து என்பது பொய் என்று சொல்லப்படும். மாற்றம் அல்லது ஒரு நிலையில் நில்லாத தன்மை என்பது பிற பொருளால் வருவது; பிற பொருளின் வசப்படுவதால் வருவது. கட்டாக, ஆன்மா பிறபொருளாகிய உடம்பின் வசப்படுவதால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பசித்தும், நோயுற்றும், மெலிந்தும், மூத்தும் இவ்வாறு பலவிதமான மாற்றங்களை அடைவதற்குக் காரணம், அஃது உடம்பின் வசப்பட்டிருப்பதுதான். ஆன்மா மாறி மாறிப் பிறந்தும் இறந்தும், இன்பத் துன்பங்களை மீள மீள அடைந்தும் பல மாற்றங்களை எய்துவதற்குக் காரணம், பிற பொருள்களாகிய மும்மலங்களோடு கூடி அவற்றின் வசப்பட்டிருப்பதேயாகும்.

இறைவன் எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனேயாயினும் அவன் அவற்றில் சிறிதும் தோயாது. அவற்றின் வசப்படாது, தனித்தே நிற்பான். அவன் தன் வயம் இன்றிப் பிறபொருளின் வயப்பட்டு, அதற்கேற்ப நடக்க வேண்டியவனாய் இருப்பின், அவன் அனைத்துலகங்களையும் அனைத்துயிர்களையும் எங்ஙனம் ஆளுதல் கூடும்? எனவே அவன் குறைவற்ற தன் வயம் உடையவன் என்பது தெளிவு. அவன் தன்வயம் உடையவன் என்பது பெறப்படவே, பிற பொருளால் வரும் மாற்றம் இல்லாதவன் என்பதும் தானே விளங்கும். இவ்வாறு என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் என்ற பொருளிலேயே இறைவனை மெய்ப் பொருள் என்றும், செம்பொருள் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.

இனி, இறைவனுக்குரிய மற்றோர் இயல்பாக மன வாசகங்கடந்தார் குறிப்பிடுவது போதம் என்பது. போதம் என்பது அறிவு. இறைவனது அறிவு சிற்றறிவு ஆகாது. பேரறிவாய் நிற்பது. சிற்றறிவு என்பது குறைபாடுடைய அறிவு. ஒரு பொருளை அறியுமிடத்து அப்பொருளில் அழுந்திவிடுதல், அவ்வாறு ஒன்றில் அழுந்தும்போது மற்றொன்றினை அறியமாட்டாது நிற்றல், அதனால் ஒவ்வொன்றாகவே அறிதல், ஒன்றனையும் தொடர்ச்சியாக அறிந்து நில்லாது விட்டுவிட்டு அறிதல், அறிந்ததனை மறத்தல், தானாக அறியாது அறிவிக்கவே அறிதல் என்னும் இக்குறைபாடுகளெல்லாம் உயிர்களின் அறிவுக்கு உண்டு. இப்படிப்பட்ட குறைபாடு ஒன்றும் இல்லாத அறிவு இறைவன் ஒருவனுக்கே உரியது. அவனது அறிவு எல்லாவற்றையும் எப்போதும் தானே அறியும் அறிவாகும். அவ்வாறு அறியும் அறியாமை பற்றமுடியாது. ஆகவே அஃது என்றும் தூய அறிவாகவே இருக்கும். இவ்வாறு உள்ள இறைவனது அறிவையே போதம் எனக் குறிப்பிட்டார் மனவாசகங் கடந்தார்.

இனி, அவர் இறைவனது இயல்பாகச் சொல்லுவது ஆனந்தம் என்பது. அறிவே இன்பத்திற்குக் காரணம். இறைவன் குறைவில்லாத, நிறைந்த பேரறிவை உடையவன். ஆதலால் அவன் குறைவில்லாது நிறைந்த பேரின்பத்தையும் உடையவன் ஆகிறான். இறைவனது இயல்புகளாக இதுகாறும் கூறிவந்தவற்றை ஒருசேர நோக்கினால், சத்தாயும் சித்தாயும் ஆனந்தமாயும் நிற்றலே அவனது உண்மையியல்பு என்பது இனிது விளங்கும். சத்து சித்து ஆனந்தம் என்ற மூன்று சொற்களும் சேர்ந்து சச்சிதானந்தம் என்று ஆயின. இத்தொடரையே வேறொரு வகையால் போத ஆனந்தப் பொருளாம் மெய் என்றார். இந்நூலாசிரியர்.

பொய் காட்டா மெய்யா

முதலடியில் பொய் காட்டி என்று குறிப்பிட்ட ஆசிரியர் இரண்டாம் அடியின் இறுதியில் பொய் காட்டா என்கிறார். முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே என்று எண்ணும் படியாக இஃது உள்ளது. பொய்காட்டா என்பதன் பொருளை உணர்ந்தால் இம்முரண்பாடு தோன்றாது. நாமெல்லாம் வினைவயப்பட்டுப் பிறந்தவர்கள். நமது பழவினைக்கு எற்பவே நமக்கு உடம்பு அமைந்துள்ளது. இருவினை தந்த உடம்பு இது, மெய்கண்ட தேவரோ வினையின் நீங்கியவர்; மூவாண்டு நிரம்பாத இளங்குழவிப் பருவத்திலேயே மெய்யுணர்வை முற்றப் பெற்றவர்; சிவபெருமான் தனக்கே உரிய நெற்றிக் கண்ணையும் நீல கண்டத்தையும் மறைத்து மெய்கண்ட தேவர் வடிவில் வந்தருளினார் என்று போற்றித் துதிக்கும் படியான பெருநிலையைப் பெற்றவர். எனவே அவரது வடிவம் அருளுருவேயன்றி நம்மனோர்க்கு உள்ளதுபோல வினை காரணமாக வந்த வடிவம் அன்று. இக்கருத்துப்படவே பொய் காட்டா மெய்யா என்று அழைக்கிறார்.

பொய் என்பது நிலையாதது; நிலை மாற்றம் அடைவதாய் நீங்குவது. இங்கு வினை பொய் எனப்பட்டது. அஃது எதனால் எனின், தோன்றுதல், நுண்ணிய நிலையில் அடங்கியிருத்தல், இன்ப துன்பமாகிய பயனைக் கொடுத்து நீங்குதல் என்ற மூன்று நிலைகள் வினைக்கு உண்டு. இவ்வாறு நிலை மாற்றம் உடையதாதல் பற்றி வினை பொய் எனப்பட்டது. அடுத்துள்ள மெய் என்ற சொல் உடம்பு என்ற பொருளில் வந்தது. எனவே பொய் காட்டா மெய்யா என்ற விளி, வினை தராத உடம்பை (அருளுடம்பை) உடையவரே எனப் பொருள்படுவதாயிற்று.

சுத்த வினா

கேவல நிலை

உயிர் அறியாமையில் அழுந்தி நிற்கும் நிலை கேவலம் எனப்படும். நாள்தோறும் நமக்குக் கேவல நிலை உண்டாகிறது. உறக்கம் என்பது ஒன்றும் அறியாத நிலைதானே. உடம்பில் தொழிற்படும் அறிகருவிகளும் செயற்கருவிகளும் சோர்ந்து மடங்கும்போது உறக்கம் நிகழ்கிறது, உறக்கத்தில் அழுந்துதல் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு ஏற்ப அறியாமையும் குறைந்தும் மிகுந்தும் அமையும். எனவே உறக்கம் என்பது கேவல நிலையாகும். இனி, இறப்பு என்பதும் உயிர் அறியாமையில் அழுந்துகிற நிலையேயாம். இறப்பு இவ்வகையில் உறக்கத்தைப் போன்றது எனலாம். உறங்குவது போலும் சாக்காடு என்பது குறள். எனவே இறப்பு என்பதும் கேவல நிலையேயாகிறது. இன்னொரு கேவல நிலையும் உண்டு. அது நமது விழிப்பு நிலையிலேயே நிகழ்கிறது. நாள்தோறும் பாராயணம் செய்து வருகிற பாடல் கூடத் திடுமென யாராவது கேட்டால் நமது நினைவிற்கு வருவதில்லை. இப்படி விழிப்பு நிலையில் ஏற்படுகிற மறதியும் கேவல நிலை எனப்படுகிறது. இதுகாறும் கூறியவற்றால், உறக்கம், இறப்பு, மறப்பு என்பவையெல்லாம் அறியாமையில் அழுந்துகிற கேவல நிலை என்பது விளங்கும்.

சகல நிலை

அறியாமை என்பது இருள் எனில், அவ்விருளைச் சிறிது நீக்குகின்ற ஒளியாய் நிற்பது மாயையாகும். மாயையிலிருந்து தோன்றிய உடம்பும், உடம்பின் அகத்தும் புறத்தும் உள்ள கருவிகளும் அறியாமையிருளைச் சிறிது நீக்கிச் சிற்றறிவை உண்டாக்குகின்றன. இவ்வாறு மாயா கருவிகளைப் பொருந்தி அறிவு விளங்கி உலகப் பொருள்களை நுகர்ந்து வரும் நிலை சகல நிலை எனப்படும். கேவல நிலை என்பது அறியாமையில் அழுந்துதல் என்றால், சகல நிலை என்பது மாயையில் அழுந்துதல் எனச் சொல்லலாம். இறப்பு என்பது கேவல நிலை எனப் பார்த்தோம். எனவே பிறப்பு என்பது சகல நிலை என்பது விளங்கும். நாள்தோறும் வரும் உறக்கம் கேவல நிலை என அறிந்தோம். எனவே உறக்கம் நீங்கி எழுகின்ற விழிப்பு சகல நிலை என விளங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது வருகின்ற மறப்பு கேவல நிலை எனக் கண்டோம். எனவே மறப்பு நீங்கி உண்டாகின்ற நினைப்பு சகலநிலை என்பது வெளிப்படை.

இதுகாறும் கூறியவற்றால், பிறப்பு, விழிப்பு, நினைப்பு ஆகியவையெல்லாம் மாயையில் அழுந்துகிற சகலநிலை என்பது தெளிவாகும். இரவு நீங்கினால் பகலும், பகல் நீங்கினால் இரவும் மாறி மாறி வருகின்றன. அதுபோலவே கேவல நிலையாகிய அறியாமையும், சகல நிலையாகிய சிற்றறிவும் மாறி மாறி நிகழ்கின்றன. இறப்புக்குப் பின் பிறப்பும், உறக்கத்திற்குப் பின் விழிப்பும், மறதிக்குப் பின் நினைப்பும் எனத்தொன்று தொட்டுத் தொடர்ந்து வருகின்றன. உயிர் இறந்தும் பிறந்தும் உறங்கியும் விழித்தும் மறந்தும் நினைந்தும் இவ்வாறு உழன்று வருகிறது.

சுத்த நிலை

இத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் வேண்டும். திருவருள் உயிருக்கு அப்பால் எங்கேயோ உள்ளது என்று எண்ணவேண்டா. உயிரிடத்தேயே எப்போதும் உடனாக உள்ளது. அதனை நாம் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். உடற்சார்பும் உலகச் சார்பும் ஆகிய பற்றுக்களே நம்மைத் திருவருளை நோக்காதபடி செய்கின்றன. அப்பற்றுக்கள் அறுந்தால் அக்கணமே திருவருளின் இருப்பைத் தெற்றென உணர்ந்து கொள்வோம். கயிறுகளால் கட்டப்பெற்ற ஊசலின் மேலிருந்து ஆடிக்கொண்டிருக்கின்ற வரையில் நிலம்தான் ஆதாரமாக இருந்து தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வதில்லை. கயிறுகள் அறுந்து கீழே விழும் போதில் நிலம் நம்மைத் தாய் போலத் தாங்கிக் கொள்ளும் போதுதான் அவ்வுண்மையை அனுபவமாக உணர்வோம் அதுபோல, அற்றது பற்றெனில் திருவருளை உற்றவராவோம். உயிரறிவில் கலந்திருக்கின்ற இறைவனது அறிவே திருவருள் என்பது அப் பேரறிவே மறைந்து நின்று கருவி கரணங்களின் வழியாக உயிருக்குச் சிற்றறிவே விளக்கி வருகிறது. இது திருவருளை உணர்வதற்கு முந்திய நிலை.

கயிறு அறுந்த ஊசல் போலத் திருவருட் சார்பை உயிர் பெற்றுவிட்டால் அத்திருவருள் ஞானம் தானே முன்நின்று அவ்வுயிருக்கு நேரே உணர்த்தும். அந்நிலையில் மனம் முதலிய கருவி கரணங்கள் உயிருக்குத் தேவையில்லாமற் போகின்றன. ஓர் எடுத்துக் காட்டினால் இதனை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். இரவு நேரத்தில் விளக்கு எரிந்து தனது சிற்றொளியால் இருளைச் சிறிதே ஒட்டிப் பொருளைக் காட்டுகிறது. விடிந்து சூரியவொளி தோன்றி எல்லாவற்றையும் தெளியக் காணுகிற நிலை வந்த பின்னரும் விளக்கு எரியுமானால் அவ்விளக்கொளி என்ன பயனைச் செய்யும்? ஆகவே விளக்கை நாம் அணைத்து விடுகிறோம். தேவையற்ற அதனை எடுத்து அப்புறமாய் வைத்து விடுகிறோம். உடம்பும், அதிலுள்ள கருவி கரணங்களும் இரவில் எரியும் விளக்குப் போன்றவை. அஞ்ஞானத்தை ஓரளவு நீக்கிச் சிற்றறிவைக் கொடுப்பவை. திருவருளாகிய சூரியவொளி வந்து பிறகு, சிற்றறிவும் அதனை விளங்கச் செய்யும் கருவி கரணங்களும் பகல் விளக்குப் போல நீங்குதற்கு உரியவாகி விடுகின்றன. அக்கருவிகளின் துணையில்லாமலே, திருவருள் நேரே அறிவிக்க அதனால் எல்லாவற்றையும் அறிகின்ற விரிந்த அறிவு உண்டாகும்.

கருவிகளைக் கொண்டு அறிவு விளங்குகின்ற நிலையே சகலம் என்று கூறப்படும் ஆகலின், கருவிகளின் துணையின்றி அறிவதாகிய அருள்நிøயில் சகலமாகிய நிலை பகல் விளக்குப் போல ஆகிவிடும். அருள்நிலையில் அறியாமையாகிய இருள் முற்றிலுமாக நீங்கி விடும் ஆதலால், கேவலமாகிய நிலை நிகழ்வதில்லை. இங்ஙனம் சகல கேடலங்கள் நிகழாமல் உயிர் திருவருளில் அழுந்தி நிற்கின்ற நிலையே சுத்த நிலை எனப்படும். இவ்வுலகில் வாழும் போதே இச் சுத்தநிலையை அடையலாம்.

No comments:

Post a Comment