Monday, 30 January 2017

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில் திருவீழிமிழலை - திருவாரூர்


மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

உற்சவர் : கல்யாணசுந்தரர்

அம்மன்/தாயார் : சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

தல விருட்சம் : வீழிச்செடி

தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவீழிமிழலை

ஊர் : திருவீழிமிழலை

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்


தேவாரப்பதிகம்

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. - திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 61 வது தலம்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது. நடராசர் சன்னதி சிறப்பானது.


பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

பார்வதி திருமணம்: காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.


முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


பெயர்க்காரணம்: ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.


வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.


படிக்காசு: சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.


அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் "கண்மலர்' காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி - திருவாரூர்


மூலவர் : வீரட்டானேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : ஏலவார்குழலி, பரிமள நாயகி.

தல விருட்சம் : துளசி

தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவிற்குடி

ஊர் : திருவிற்குடி

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத்தோரெனப் பேணுவர் உலகத்தே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 74வது தலம்.

திருவிழா:

சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 137 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது, எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம், தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில், பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம்மென்னும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

தலபெருமை:

இங்கு மூலவர் வீரட்டானேஸ்வரர். அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்னும் சொல்லுக்கு "துளசி' என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம்.இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம். ஆஞ்சநேயர் வழிபாடு இங்கு சிறப்பு.

தல வரலாறு:

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.

சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.


இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.


இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் - திருவாரூர்


மூலவர் : வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்

ஊர் : திருக்கொள்ளம்புதூர்

பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

ஓடம்வந் தணையும் கொள்ளம் பூதூர் ஆடல்பேணிய அடிகளை யுள்கச் செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே. - திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.

திருவிழா:

சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.


பிரார்த்தனை

சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.


நேர்த்திக்கடன்:


சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.


தலபெருமை:

பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.


தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.


தல வரலாறு:

பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார்.


தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார்.


இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.


இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - திருவாரூர்


மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி

தல விருட்சம் : சந்தன மரம்.

தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்.

ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவாஞ்சியம்

ஊர் : ஸ்ரீ வாஞ்சியம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம் 

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.

- திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.


திருவிழா:

இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.


மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.


தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.


பிரார்த்தனை

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.


பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.


குப்த கங்கை : ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.


கார்த்திகை ஞாயிறு: தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.

துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.

யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தல வரலாறு:

"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்.


பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் திருப்புகலூர் - திருவாரூர்


மூலவர் : வர்த்தமானீஸ்வரர்

உற்சவர் : கல்யாண சுந்தரர்

அம்மன்/தாயார் : மனோன்மணி

தல விருட்சம் : பின்னை

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சரண்யபுரம்

ஊர் : திருப்புகலூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத் தராய விரிபுகல் ஊரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொடு ஆணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 76வது தலம்.

திருவிழா:

வைகாசியில் முருகநாயனார் குருபூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பபாலிக்கிறார். முருக நாயனார் அவதார தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் "ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது. பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார்.


பிரார்த்தனை

வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.


தலபெருமை:

வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


தல வரலாறு:

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன்.


அதன்படி இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர்.


நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில் பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும் வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம் ஒன்றையும் கட்டினார்.


திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை - திருவாரூர்


மூலவர் : வண்டுறைநாதர், பிரமரேசுவரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள்

தல விருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம் : பிரம்மபுரீச தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவெண்டுறை, வண்டுதுறை

ஊர் : திருவண்டுதுறை

பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான் பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன் மாலை மதியொடு நீரரவம் புனைவார் சடையான் வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 112வது தலம்.

திருவிழா:

வருடப்பிறப்பு, விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.


தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த சன்னதி. அம்மன் தெற்கு பார்த்த சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனிபகவான், சூரியன், சந்திரன், பிட்சாடனர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் ஆகியன அமைந்துள்ளன.


பிரார்த்தனை

செய்யும் தொழில்களில் தடங்கல் ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்து தீர்வு காண்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பிருங்கிமுனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் "திருவண்டுதுறை' ஆனது. இப்போதும் கூட சிவன் சன்னதியில் வண்டு ஒலி கேட்கிறது என்கிறார்கள். திருமால் இத்தல சிவனை பூஜித்து சிவபூஜையின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டினார். பிரம்மா தன் படைப்புத்தொழிலில் தடை ஏற்பட்ட போது இங்கு வழிபாடு செய்து தடை நீங்க பெற்றார். துருவ மன்னன், அங்கவன், அரிச்சந்திரன், முசுகுந்த சோழனின் மகன் தியாகசோழன் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.


நங்கை எனும் பெண்முனிவருக்கு இத்தலத்தின் மண்ணெல்லாம் சிவலிங்கங்களாக தோன்ற, அதன் மேல் கால் வைக்க கூடாது என்பதால் வடதிசை நோக்கி நின்று வணங்கினாராம். இதன் காரணமாக இங்கு நடுமண்டபத்தில் உள்ள நந்தி வடதிசையை பார்ப்பதாக ஐதீகம்.


தல வரலாறு:

பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்க செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் முனிவர் சிவனை தொடர்ந்து வழிபாடு செய்தார். சிவன் முனிவருக்கு அருள்புரிந்தார். இதனால் பார்வதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகம் பெற்றார்.


சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும் படி சாபமிட்டார்.


மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார். மனமிறங்கிய பார்வதி, ""சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை, திருவண்டுதுறைத் தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெறுக'' என அருள்புரிந்தார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

Sunday, 29 January 2017

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம் - திருவாரூர்


மூலவர் : ராமநாதசுவாமி

உற்சவர் : நந்தியுடன் சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : சரிவார்குழலி

தல விருட்சம் : மகிழம், செண்பகம்

தீர்த்தம் : ராம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : ராமநாதீச்சரம், இராமனதீச்சரம்

ஊர் : திருக்கண்ணபுரம்

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.


பொது தகவல்:

பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.


பிரார்த்தனை

செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

தலபெருமை:

சரிவார் குழலி: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார்.


இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.


கரு காத்த அம்பிகை: நான்கு அம்பிகையருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. "சூல்' என்றால் "கரு' என்று பொருள். "கரு காத்த அம்பிகை' என்றும் இவளுக்கு பெயர் உண்டு.


பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.


புனர்பூச பூஜை: இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.


ராமர் வழிபட்ட தலம் என்பதால், "ராமநாதீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், "ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

தல வரலாறு:

ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, "ராமநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.