Friday, 27 April 2018

ஆரோக்கியம் அறியலாம்! - அவசியமான மருத்துவ உபகரணங்கள்


யாருக்கு எப்போது எந்த நோய் வரும் என்று தெரியாத சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மிகச்சாதாரணமாக வந்த காய்ச்சல் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை மளமளவெனக் குறைத்து உயிரிழப்புவரை கொண்டுபோய்விட்டிருக்கிறது. குடல்புற்றுநோய் ஓர் அப்பாவிக் குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டது.  சமீபகாலமாக வரும் இந்தத் தகவல்கள் நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இவை அல்லாமல் நாளுக்குநாள் பாதிப்பை ஏற்படுத்தும் வரிசைகட்டி நிற்கும் புதுப்புது நோய்கள். இப்படிவரும் ஒவ்வொரு நோய் மற்றும் பாதிப்புகளுக்குத் தனித்தனி மருத்துவர்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நோய்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நோய்கள் பற்றிய விழிப்பு உணர்வும் மக்களிடத்தில் பெருகியிருக்கிறது. பலரின் வீடுகளில் சிறு சிறு மருத்துவக் கருவிகளை வாங்கிவைத்து  தமக்குத் தாமே தினம்தினம் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அவசர காலகட்டங்களில் சிலர் தங்களுக்குத் தேவையான முதலுதவிகளைத் தாமே செய்துகொள்கின்றனர். நோய் வராமல் தற்காத்துக்கொள்வது, நல்ல உடல்நலத்துடன் வாழ எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது என மருத்துவம்-ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் குளூக்கோமீட்டரை வாங்கிவைத்துத் தினம்தினம் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். தெர்மாமீட்டரைக்கொண்டு காய்ச்சல் அடிக்கும் நேரங்களில் வெப்பநிலையைப் பரிசோதித்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்று வீடுகளில் வாங்கி வைத்து உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள உதவும் கருவிகள், மருத்துவமனைகளில் உள்ள அடிப்படையான  மருத்துவக் கருவிகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் வசந்தி.
ஸ்டெதஸ்கோப் (Stethoscope)

ருத்துவர்களின் அடையாளமாக இருப்பது. அலோபதி மருத்துவர்கள் எப்போதும் உடன் வைத்திருக்கும் ஒரு கருவி இந்த ‘ஸ்டெதஸ்கோப்’. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு போன்றவற்றைப் பிற கருவிகளின் மூலமாகப் படம் பிடித்து நோய் பாதிப்பைக் அறிவதற்குமுன் இதன்மூலம் கண்டறியலாம்.

நாடி அழுத்தமானி (Sphygmomanometer)

பொ
துவாக இதை ‘பிபி அப்பாரட்டஸ்’ (BP Apparatus) என்று அழைப்போம். இது பல்ஸ் ரேட், சிஸ்டோலிக் மற்றும் டயாஸ்டோலிக் பிரஷர்களை (Systolic & Diastolic Pressures) கணக்கிடப் பயன்படுகிறது. பல்ஸ் ரேட் என்பது இதயத்துடிப்பு; சிஸ்டோல் என்பது இதயம் ரத்தத்தை பம்ப் செய்து, வெளித்தள்ளும்போது ஏற்படும் அழுத்தம். ‘டயாஸ்டோல்’ என்பது இதயம், ரத்தத்தை உள்வாங்கும்போது ஏற்படும் அழுத்தம். 

சராசரியாக ஒருவருக்கு சிஸ்டோல் மற்றும் டயாஸ்டோல் 120/80 (mm/hg) என்ற அளவில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 130/80 என்ற அளவு இருக்கலாம். பெண்களில் பலர் 100/70 கூட இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களது உடலமைப்பைப் பொறுத்தது அது. யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 90/70 என்ற அளவுவரை இருக்கலாம். அதற்குக் குறையக் கூடாது. எப்போதும் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதனால் உடல் உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும்.

லெக்ட்ரானிக் பிபி அப்பாரட்டஸ் (Electronic BP Apparatus) கருவியைச் சிலர் வீடுகளில் வாங்கிவைத்துப் பயன்படுத்துகிறார்கள். அது, துல்லியமான அளவைக் கொடுக்கும் என்று சொல்லமுடியாது. காரணம், கணக்கிடும்போது கையை அசைத்தால் அளவு மாறுபட வாய்ப்புள்ளது. வீடுகளில் பார்க்கும்போது கை அசைய வாய்ப்புள்ளது. தோராயமான அளவை வேண்டுமானால் கணக்கிட்டுக் கொள்ளலாம். கருவி வீட்டில் இருக்கிறது என்பதற்காகச் சிலர் அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் பரிசோதனை செய்து பீதிக்குள்ளாவதைத் தவிர்க்கலாம்.

த்த அழுத்தப் பரிசோதனைக்காக ஒருவர் மருத்துவமனை வந்ததும் உடனடியாக அவருக்குப் பரிசோதனை செய்யமாட்டோம். அரைமணி நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கச் செய்வோம். அதன் பிறகே சோதனை செய்வோம். சிகரெட் பிடித்திருந்தாலோ, வெகுதூரம் நடந்து வந்திருந்தாலோ அது சரியான அளவைக் காட்டாது. அதற்கு முந்தையநாள் இரவு நன்றாகத் தூங்கியிருக்கவேண்டும். சூடான உணவு எதையும் சாப்பிட்டிருக்கக் கூடாது. சோதனைக்குப் பிறகும் ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அந்த ஒரு சோதனையை மட்டுமே வைத்துச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. பலமுறை பரிசோதித்த பிறகே சிகிச்சையளிக்கிறோம்.

தெர்மாமீட்டர் (Thermometer)

ம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு கருவி தெர்மாமீட்டர். பெரும்பாலானோர் வீடுகளில் வாங்கிவைத்துப் பயன்படுத்தும் ஒரு கருவி இது. உடலின் வெப்பநிலையைக் கணக்கிட தெர்மாமீட்டர் பயன்படுகிறது. தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவதற்குமுன் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க .வேண்டும். முக்கியமாக, சுடுநீரில் போட்டு எடுத்திருக்கக் கூடாது. மெர்க்குரியை நன்றாக உதறி ரீடிங் அளவு ஜீரோ இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பிறகு, நாக்கின் கீழே முழுமையாக ஒரு நிமிடம் வைக்க வேண்டும். அதன்பிறகு அதை எடுத்து என்ன அளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 

குழந்தைகளின் வாயில் தெர்மாமீட்டரை வைத்துப் பரிசோதிக்க முடியாது. அதனால், அக்குள் பகுதியில் வைத்துப் பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு மலக்குடலில் வைத்தும் அளவிடப்படும். இதற்கு வேறுவகையான தெர்மாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை 99°F (37.2°C) நார்மல். அதைவிட அதிகமாக இருந்தால் உடலில் வெப்பம் அதிகமாயிருக்கிறது; ஜுரம் என்று அர்த்தம்.

குளூக்கோமீட்டர் (Blood Sugar Monitor)

பெ
ரும்பாலானோருக்குச் சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. அவர்கள், ஒவ்வொரு முறையும் ரத்தப்பரிசோதனை மையம் சென்று ரத்தச் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்வது சிரமம். காலையில் எதுவும் சாப்பிடாமல் 2 மி.லி ரத்தம் எடுத்துச் சோதனை செய்ய வேண்டும். சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மி.லி ரத்தம் எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க இந்த குளூக்கோமீட்டர் கருவி மிகவும் உதவியாக இருக்கிறது. அனைத்து மருத்துவர்களிடம் இது இருக்கிறது. பலர் வீடுகளிலும் வாங்கி வைத்துப் பரிசோதித்துக் கொள்கிறார்கள். ஏற்கெனவே சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டவர்கள் இந்தக் கருவியின் உதவியுடன் பரிசோதித்துக்கொள்ளலாம். 

புதிதாக ஒருவருக்குச் சர்க்கரை இருப்பதை குளூக்கோஸ் டாலெரன்ஸ் டெஸ்ட் (Glucose Tolerance Test) மூலமே கண்டறிய முடியும். இந்தப் பரிசோதனையை மருத்துவர்களின் ஆலோசனையின்பேரிலேயே செய்ய வேண்டும். 140 - 199 mg/dl என்பது நார்மல். அதைவிட அதிகமானால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oxymeter)

த்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவைக் கணக்கிட இந்தக் கருவி உதவும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் அதிகமாக சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), இதய பலவீனம் உள்ளவர்களுக்கும் மூளை பாதிப்பு மற்றும் புகையில் வேலை செய்பவர்களுக்கும் இளைப்பு மற்றும் அதிகமாக மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவதே இதற்குக் காரணம். இப்படிப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தக் கருவி பயன்படுகிறது.

க்ளிப் போன்று இருக்கும் இந்தக் கருவியின் நடுவே கைவிரலை வைத்து ஆக்சிஜன் அளவையும் இதயத்துடிப்பையும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வீடுகளில் இதை யாரும் வாங்கி வைத்துப் பயன்படுத்துவதில்லை. ஆனால், மருத்துவமனைகளில் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய ஒரு கருவி பல்ஸ் ஆக்சிமீட்டர். அறை வெப்பநிலையில் 98% - 100% (Sio2) இருக்க வேண்டும். 95 சதவிகிதத்துக்கும் குறைந்தால் நுரையீரல் பாதிப்பு அல்லது சுவாசப்பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வென்டிலேட்டர் (Ventilator)

சு
வாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுச் சீராக சுவாசிக்க முடியாதவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க ‘வென்டிலேட்டர்’ உதவும். மயக்கவியல் மருத்துவர்களின் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். பின்னர், அவர்களால் சுயமாக சுவாசிக்க முடிந்தபிறகே இந்தக் கருவி அகற்றப்படும். ஐந்து நாள்களிலிருந்து ஏழு நாள்கள் வரைகூட இந்தக் கருவியின் உதவியுடன் சுவாசம் அளிக்கலாம். 

நுரையீரல் செயலிழந்து விட்டாலோ, ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டுச் செயல்படாமல் இருந்தாலோ வென்டிலேட்டர்தான் நுரையீரலாகச் செயல்படும். ஆக்சிஜனை உள்ளிழுத்து, கார்பன் - டை ஆக்சைடை வெளியேற்றும் வேலையையும் இந்த வென்டிலேட்டர்தான் செய்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு கருவி வென்டிலேட்டர்.

எலெக்ட்ரோகார்டியோகிராபி (Electrocardiography)

தயத்துடிப்பைக் கணக்கிடவும் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும் இந்தக் கருவி பயன்படும். பொதுவாக நம் இதயம் ஓர் எலெக்ட்ரிக் சர்க்யூட் (Electric Circuit) போன்றுதான் செயல்படுகிறது. தேவையான மின்சாரம் கிடைத்தால்தான் இதயம் துடிக்கும். தசைகள் ஏதாவது பாதிப்படைந்து இதயத்துக்கு சிக்னல் கிடைக்கவில்லையென்றாலும் இதன்மூலம் கண்டறியலாம். இதயத்துடிப்பில் மாறுதல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா? சரியான பாதையில் இதயம் துடிக்கிறதா? என இதயத்தில் எத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்தாலும் இந்தக் கருவியின் உதவியுடன் கண்டறிய முடியும். வேறு ஏதேனும் பிரச்னைகளால் இதயம் பாதிக்கப்பட்டாலும் தெரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இதயத்தின் செயல்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டுவதால் இது `எலெக்ட்ரோகார்டியோ கிராப்’ (Electrocardiograph) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் `கார்டியோ’ (Cardio) என்றால் இதயம் என்று பொருள்.

கார்டியாக் மானிட்டர் (Cardiac Monitor)

ல்ஸ் ரேட், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகிய மூன்றையும் அறிந்து கொள்ள இந்தக் கருவி பயன்படும். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு இந்தக்கருவி பொருத்தப்பட்டு அவர்களின் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனித்து அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்படும். அறுவைசிகிச்சையின்போது இந்தக் கருவி மிகவும் இன்றியமையாதது.

 ஆம்பு பேக் (Ambu bag)

தயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு ஒருவருக்குத் திடீரென்று நின்று போனால், அதன் செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் (Cardiopulmonary Resuscitation) செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்தநேரத்தில் கார்டியாக் மசாஜ் (Cardiac Massage) செய்து இதயத்தின் செயல்பாட்டை மீளச் செய்துவிடலாம். நுரையீரலின் செயல்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய இந்த ஆம்பு பேக் பயன்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் முகத்தில் மாஸ்க் பொருத்தப்படும். பிறகு இதிலுள்ள பம்பை அழுத்தும்போது ஆக்சிஜன் அதிகமாக உள்ள காற்று உள்ளே செல்லும். இதை மேனுவலாகவும் செய்யலாம் அல்லது ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தியும் பயன்படுத்தலாம். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளிக்க இது மிகவும் அவசியம்.

ஏர்வேஸ் (Airways)

நோ
யாளிகளில் சிலருக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு விடமுடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு நாக்கை முன்னே இழுத்து, இரண்டு பற்களின் இடையே ஏர்வேஸை வைத்துவிட்டால் மூச்சுவிட மிகவும் உதவியாக இருக்கும்.

டெஃபிப்ரிலேட்டர் (Defibrilator)

மி
ன்னணுக்களின்மூலம் இதயத்தைக் கட்டுப்படுத்த இது உதவும். சிலருக்கு இதயம் சீரற்ற நிலையில் துடிக்கும். துடிக்க வேண்டிய பாதையில் இல்லாமல் வேறொரு பாதையில் துடிப்பதுதான் இதற்குக் காரணம். நம் இதயத்துக்குள் எலெக்ட்ரிக் வயர்கள் போன்று சில நரம்புகள் இருக்கும். அதன்வழியாக மின்னோட்டம் சென்று இதயத்தைத் துடிக்கவைக்கும். சில நேரங்களில் இது சரியான வழியில் செல்லாமல் ஷாட் சர்க்யூட் ஆகி வேறொரு பாதையில் சென்று இதயத்தைத் துடிக்க வைக்கும். இதனால் இதயம் மட்டுமல்லாமல் மூளை மற்றும் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது. Radiofrequency Ablation மூலம் இந்தப் பிரச்னையைச் சரிசெய்து சரியான பாதையில் சீராகத் துடிக்க வைக்க Defibrilator பயன்படும். சிலருக்கு இதயத்துடிப்பு நின்றுபோனால் மீண்டும் இதயத்தைத் துடிக்க வைக்க இந்தக் கருவி பயன்படும். இரண்டு ஸ்டெம்களை வைத்து ஷாக் கொடுத்து இதயத்தைத் துடிக்கச் செய்யலாம்.

ட்ரெட்மில்டெஸ்டிங் மெஷின் (TMT Machine)

ருவருக்கு இதய பாதிப்பு இருக்கிறதா என்பதை அவர் எந்தவிதச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருக்கும்போது கண்டறிய முடியாது. ஏதாவது ஒரு செயல்பாட்டில் இருக்கும்போதுதான் கண்டறிய முடியும். அதற்கு இந்தக் கருவி உதவும். ட்ரெட்மில்லில் ஓடச்சொல்லி இதயத்துடிப்பில் ஏதேனும் மாறுபாடு இருக்கிறதா, ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதா, வலி ஏற்படுகிறதா என்பதை இ.சி.ஜி மானிட்டரில் (ECG Monitor) கண்டறிந்து இதயநோய் இருப்பதை உறுதிசெய்யலாம்.

எலெக்ட்ரோ என்செபலோகிராபி Electroencephalography

கா
ர்டியோகிராபி எப்படி இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறிய உதவுகிறதோ அதேபோன்று மூளையின் செயல்பாட்டைக் கண்டறிய Encephalography உதவும். மூளையில் மின் தூண்டல் அதிகமாவதால்தான் வலிப்பு நோய் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்களைக் கண்டறியவும் இது உதவும்.

நெபுலைசர் (Nebulizer)

ஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தக் கருவி பெரிதும் உதவும். தேவையான அளவு மருந்தை இந்தக் கருவிக்குள் செலுத்தினால் அதைக் காற்றாக மாற்றிக்கொடுக்கும். சுவாசிக்கச் சிரமமாக உள்ள நேரங்களில் இதை உள்ளிழுக்கச் செய்தால் சுருங்கிப் போன ஏர்வேஸ் சரியாகி எளிதாக சுவாசிக்க உதவும். மாத்திரை, மருந்து சாப்பிட்டு அது நம் ரத்தத்தில் கலந்து அது செயல்படும் நேரத்தைவிட இது மிகவிரைவாகச் செயல்படும். பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு லேசான தூசு பட்டாலே காற்று செல்லும் டியூப்கள் சுருங்கிக்கொண்டு சுவாசிக்க மிகவும் சிரமப்படுவார்கள். அந்த நேரத்தில் நெபுலைசர் கருவி உயிர் காக்கும். இந்தக் கருவியைப் பலர் வீடுகளில் வாங்கி வைத்துப் பயன்படுத்துகிறார்கள். அதில், எவ்வளவு மருந்து, எவ்வளவு தண்ணீர் ஊற்றவேண்டும் என்று மருத்துவர்கள் விளக்குவார்கள்.

இன்ஃபியூஷன் டியூப் (Infusion Tube)

மா
ரடைப்பு மற்றும் பல்வேறு பிரச்னைகளால் உடல்நிலை பாதித்து மிகவும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருந்தை நேரடியாக வாய்வழியாகக் கொடுக்கமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்கவேண்டும். அதற்கு இந்த இன்ஃபியூஷன் டியூப் பெரிதும் உதவும்.

இதயமுடுக்கி (Pacemaker)

தயத்துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு இது பொருத்தப்படும். இதில் உள் இதயமுடுக்கி (Internal Pacemaker), வெளி இதயமுடுக்கி (External Pacemaker) என்று இரண்டு வகை இருக்கிறது. உள் இதயமுடுக்கி இதயத்துக்குள்ளே பொருத்தப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும். வெளி இதயமுடுக்கி வெளியே இருக்கும். மின்சாரத் தூண்டலால் இதயத்துடிப்பில் மாறுதல் ஏற்படும். அந்தப் பிரச்னையை Radiofrequency Ablation மூலம் சரி செய்யலாம். இந்த முறையாலும் சரி செய்ய முடியாதவர்களுக்கு இதயமுடுக்கி பொருத்தப்படும்.

ரைல்ஸ் டியூப் (Ryles Tube)
சா
ப்பிட முடியாதவர்கள், எதையும் விழுங்க முடியாதவர்கள், தொண்டையில் ஏதேனும் பாதிப்புள்ளவர்கள், சுயநினைவு இல்லாதவர்களுக்கு இந்த ரைல்ஸ் டியூபை வாய்வழியாகச் செலுத்தினால் அது உணவுக்குழல் வழியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். உணவை எளிதில் செலுத்த இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோல் யாராவது விஷம் குடித்துவிட்டால் அவர்களின் வாய்க்குள் இந்த டியூபைச் செருகி அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றி வெளியே எடுத்துவிட முடியும்.

எலெக்ட்ரோமையோகிராபி (Electromyography)

சைகளின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கு இந்த எலெக்ட்ரோமையோகிராபி உதவும். தசைகளும் நரம்புகளும் இணைந்து செயல்பட்டால்தான் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியும். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுச் செயல்பட முடியாவிட்டால் நரம்பில் பிரச்னையா, தசைகளில் பிரச்னையா அல்லது இரண்டும் சந்திக்கும் இடங்களில் ஏதேனும் பாதிப்பா என்பதைக் கண்டறிய இந்தக் கருவி பயன்படும்.

ஹீமோடயாலிசிஸ் மெஷின் (Hemodialysis Machine) 

சி
றுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற இந்த ஹீமோடயாலிசிஸ் மெஷின் பயன்படுகிறது. ஒருமுறை சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் மாத்திரை, மருந்துகளின்மூலம் சரிசெய்ய முடியாது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை இந்த மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும். வாரத்துக்கு, இரண்டு, மூன்று முறைகூட டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.

எண்டோஸ்கோபி (Endoscopy)

யிற்றுக்குள் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய எண்டோஸ்கோபி பயன்படும். எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றால் வெளிப்புறத்தில் உள்ளவற்றைத்தான் பார்க்கமுடியும். ஆனால், வயிற்றுக்கு உள்ளே, குடல், கல்லீரல் ஆகியவற்றின் உள்ளே கட்டிகள் இருக்கிறதா, புண் இருக்கிறதா என்பதைக் கண்டறிய எண்டோஸ்கோபி உதவுகிறது. உள்புற நிலையைப் புகைப்படங்களாகவும் எடுத்துக் கொடுக்கும். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை இதன்மூலமாகச் சரிசெய்யவும் முடியும்.

லேப்ராஸ்கோபி (Laparoscopy)

யிற்றுக்குள்ளே இருக்கும் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்ய ‘லேப்ராஸ்கோபி’ கருவி பயன்படும். பித்தப்பைக் கல், கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்றவற்றை அகற்ற லேப்ராஸ்கோபி சிகிச்சை முறை உதவும்.

எக்ஸ்ரே மெஷின் (X Ray Machine)

ருத்துவ வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல் கல் எக்ஸ்ரே மெஷின். எக்ஸ்ரே கதிரியக்க முறையில் உடலின் உள்ளே ஊடுருவிச் சென்று எலும்பு, மூட்டு, நரம்பு மற்றும் வயிற்றில் உள்ள கற்கள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் என உடலில் எத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் அவற்றைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிவிடும். தேவையில்லாமல் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாகக் கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்டு மாதங்களுக்கும் பிறந்த குழந்தை என்றால் முதல் மூன்று மாதங்களும் எக்ஸ்ரே எடுக்கக் கூடாது.

அல்ட்ரா சவுண்டு மெஷின் (Ultrasound Machine)

திரியக்கம்மூலமாக இல்லாமல் கேளா ஒலிகளின் (Ultrasound) மூலம் உடலின் பாகங்களைப் படம் பிடிப்பது அல்ட்ராசவுண்டு மெஷின். கதிரியக்க முறையில் அடிக்கடி பரிசோதனை செய்தால் உடல்நலப் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. ஆனால், இந்தமுறையில் எத்தனை முறை பரிசோதனை செய்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2 - 20 khz என்பது நம்மால் கேட்க முடிந்த ஒலி அளவு. அதைவிட அதிகமான ஒலிகளை வயிற்றுக்குள் செலுத்தினால், அது எதிரொலித்துத் திரும்பும். அந்த ஒலிகளை, இமேஜ்களாக மாற்றினால் உடல் உறுப்புகளின் தன்மை அப்படியே தெரியும்.

ந்த மெஷினில்  புரோப் (Probe) என்கிற கருவி இருக்கும். எந்த இடத்தில் பரிசோதனை செய்யவேண்டுமோ அந்த இடத்தில் இந்த புரோபை வைத்தால், அது கேளா ஒலி அலைகளை அந்த இடத்துக்குள் செலுத்தும். பின்னர் எதிரொலித்துத் திரும்ப வரும் ஒலியைக் கருவிக்குள் அனுப்பும். மானிட்டரில் உறுப்புகள் தெளிவாகத் தெரியும். இதன் மூலம் வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய உடலின் அனைத்துப் பாகங்களில் ஏற்படும் பிரச்னைகளையும் கண்டுபிடிக்க முடியும். கருவுற்றிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் பார்க்கமுடியும்.

சிடி ஸ்கேன் (Computed Tomography Scan)

க்ஸ்ரே கருவியின் வளர்ந்த வடிவம் சி.டி ஸ்கேன். இதுவும் கதிரியக்கத்தின் மூலமாகவே உடலின் பாகங்களைப் படம் பிடித்துக் காட்டக் கூடியது. எக்ஸ்ரேவால் படம் பிடிக்க இயலாத பல பாகங்களையும் இதனால் படம் பிடிக்கமுடியும். தலை, மார்பு, நுரையீரல், சிறுநீரகம் என உடலின் அனைத்துப் பாகங்களையும் இதன்மூலம் படம் பிடிக்கலாம். தலையில் அடிபடுதல், எலும்பு முறிவு, பக்கவாதம், காசநோய், புற்றுநோய், நிமோனியா, சி.ஓ.பி.டி ஆகிய அனைத்துப் பிரச்னைகளையும் இதன்மூலம் துல்லியமாகக் கணிக்கலாம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan)
நோய்களைக் கண்டறிய தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் நவீனத் தொழில்நுட்பம் எம்.ஆர்.ஐ ஸ்கேன். எம்.ஆர்.ஐ என்றால் மேக்னெடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்று பெயர். அதாவது கதிரியக்கத்தின் மூலமாகவும் இல்லாமல் கேளா ஒலிகளின் மூலமாகவும் இல்லாமல் காந்தப் புலங்களின் துணையுடன் உடலின் பாகங்களைக் கண்டறிவதால் இதற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது. நம் உடலில் ஒரு காந்தப்புலத்தை உண்டாக்கி, ரேடியோ அதிர்வலைகளின் துணையோடு உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கக்கூடியது.

க்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசானிக் ஸ்கேன் ஆகிய அனைத்தையும்விட மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் படம் பிடித்துக்காட்டும். இதன்மூலம் மூளை, நரம்பு மண்டலம், எலும்பு, மூட்டு, தசை என உடலின் முக்கியமான பாகங்கள் அனைத்தையும் துல்லியமாகக் காணலாம்.

இது காந்தப்புலத்தால் இயங்கக் கூடியது. அதனால் ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கைக்கடிகாரம், மோதிரம், மொபைல்போன், ஹெட்போன், நாணயங்கள் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்கேன் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


ஏ.பி.ஜி. அனலைசர் Arterial Blood Gas (ABG) Analyzer 

த்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை ஆக்ஸைடு, சோடியம் பொட்டாசியம், மக்னீசியம் பை கார்பனேட் ஆகியவற்றைக் கண்டறிய உதவக்கூடியது. இந்தக் கருவியின் மூலம் ரத்தத்தில் உள்ள பி.ஹெச் அளவைக் கண்டறியலாம்.

- இரா. செந்தில்குமார்

கண்களைக் காப்போம் - விழிகளுக்கான விரிவான கையேடு


‘வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை பாவை பார்வை மொழி பேசுமே...’ என்று ஒரு பாடலில் எழுதியிருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார். பார்வையால் காதல் மொழி பேசுவது இருக்கட்டும். அதற்கு உதவும் கண்களை நாம் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறோமா? நம் வாழ்க்கைக்கு ஆதாரமானவை கண்கள். இவற்றைவிட மதிப்புமிக்க, முக்கியமான உறுப்பு  நம் உடலில் வேறொன்றுமில்லை.
நீண்டநேரம் டி.வி பார்ப்பது, அதிக நேரம் கம்ப்யூட்டர், மொபைல்போன்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன கண்கள். இன்று நாம் கடைப்பிடிக்கும் ஊட்டச்சத்தில்லாத உணவுமுறை நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது; கண்களையும் பாதிக்கிறது. பல்வேறுவிதமான கண் பாதிப்புகளுக்குப் பலர் ஆளாகவும் இவை காரணங்களாகின்றன.

``கண்களைப் பற்றியும், அவை என்னென்ன காரணங்களால் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும்  அறிந்துகொண்டு, சில அத்தியாவசியமான வழிமுறைகளைப் பின்பற்றினால் பெரும்பாலான பார்வைக்கோளாறுகளைத் தவிர்த்துவிடலாம்” என்கிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, கண்களின் அமைப்பையும் செயல்பாடுகளையும், அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

கண்களின் சுவர் மூன்று அடுக்குகளாலானது. வெளிப்பகுதி விழிவெண்படலம் (Sclera) எனப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினாலானது. இரண்டாவது அடுக்கு, காராய்டு (Choroid). இது கறுப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசைப் (Ciliary Muscles) பகுதியில் பல மென்தசைகள்   லென்ஸை ஒரு நிலையில் தாங்கிப் பிடித்திருக்கின்றன. 
கண்களின் சில முக்கியமான பாகங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் பற்றிப் பார்ப்போம்.

கார்னியா (Cornea) என்பது ஒளி ஊடுருவும் தன்மையுடைய கருவிழியின் முன்பகுதி. வெளியிலிருந்து வரும் வெளிச்சம் கார்னியாவில்தான் முதலில் படும்.
கருவிழி (Iris) எனப்படுவது கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடியது. 

லென்ஸ் (Lens) என்னும் விழித்திரைப் படலம் கண் பாவையைச் சுற்றி அமைந்திருக்கும் தசை.
கண்மணி (Pupil) என்பது கருவிழியின் மத்தியில் காணப்படும் வட்ட வடிவ துவாரம். இந்தத் துவாரத்தின் வழியேதான் ஒளி ஊடுருவி, லென்ஸுக்குச் செல்லும்.

ரெட்டினா (Retina) என்னும் விழித்திரை, கண்ணின் உட்பக்க அடுக்கு. இதிலுள்ள நிறமிகளின் அடுக்கு, ஒளி மறுபடியும் பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கிறது. இந்த ரெட்டினாவில் விழித்திரைத் தண்டுகள் (Rods), விழித்திரைக் கூம்புகள் (Cones) மூலமாகத்தான் நம்மால் அனைத்து நிறங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

பார்வை நரம்புகள், கண்களையும்  மூளையையும் இணைக்கின்றன. நாம் பார்க்கும் பொருளின் உருவத்தை மின் சமிக்ஞைகளாக மாற்றி, பார்வை நரம்பு மூலமாக மூளைக்குக் கடத்துகின்றன.

கண்ணின் உள்பகுதி, இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க அறையில் ‘ஏக்குயிஸ் ஹ்யூமர்’ (Aqueous Humour) என்னும் திரவம் இருக்கிறது. அது கண்ணுக்குள் இருக்கும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பின்பக்க அறையில், ‘விட்ரியஸ் ஹ்யூமர்’ (Vitreous Humour) என்னும் திரவம் இருக்கிறது. இதுவும் கண்ணுக்குள்ளிருக்கும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ஒளியை விலகச் செய்யும், மேலும் ரெட்டினாவையும் லென்ஸையும் தாங்கும்.
எப்படிச் செயல்படுகின்றன கண்கள்?

கண்கள், கேமராவைப்போலத்தான் செயல்படுகின்றன. நாம் பார்க்கிற பொருளிலிருந்து வரும் ஒளிக்கீற்று, கருவிழிக்குள் புகுந்து, கண்பாவை வழியாக லென்ஸ் மீது விழும். லென்ஸ் அந்த ஒளிக்கீற்றைக் குவித்து விழித்திரையில் விழச்செய்யும். அப்போது, அங்கு தலைகீழாக ஒரு பிம்பம் உருவாகும். அந்த பிம்பத்தைப் பற்றிய தகவல்களைக் கண் நரம்புகள் மூளைக்கு மின் சமிக்ஞைகளாக எடுத்துச் செல்லும். மூளை, நாம் பார்க்கிற பொருள் என்ன என்பதை நமக்குப் புரியவைக்கும். இப்படித்தான் ஒரு பொருளை, கேமராவில் படம் பிடித்த போட்டோவைப்போல நம்மால் பார்க்க முடிகிறது. 
கண் குறைபாடுகள்

கண்களிலிருக்கும் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது பார்வையைப் பாதிக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கோணல் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக் கோளாறுகள்
(Refractive Errors) இப்படித்தான் ஏற்படுகின்றன.
கிட்டப்பார்வை

கிட்டப்பார்வை (Myopia) உள்ளவர்களுக்கு அருகிலிருக்கும் பொருள்கள் நன்கு தெரியும். தூரத்திலிருக்கும் பொருள்கள் தெளிவாகத் தெரியாது. நாம் பார்க்கிற பொருள் அருகிலிருந்தால், அதன் பிம்பம் விழித்திரையில் சரியாக விழும். தூரத்திலிருந்தால், விழித்திரையைச் சென்றடைவதற்கு முன்னரே விழுந்துவிடும். இதுதான் கிட்டப்பார்வைக்குக் காரணம். லென்ஸிலோ, விழிக்கோளத் திசுக்களிலோ ஏற்படுகிற குறைபாடுதான் கிட்டப்பார்வைக் கோளாறு ஏற்பட முக்கியக் காரணம். பெற்றோர் இருவருக்கும் கிட்டப்பார்வைக் கோளாறு இருந்தால், குழந்தைக்கும் அது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதைச் சரிசெய்ய `குழி லென்ஸ்’ (Concave Lens) என்னும் `மைனஸ் பவர்’ கண்ணாடியை, மருத்துவர் பரிந்துரைப்படி அணிந்துகொள்ள வேண்டும். குழிலென்ஸ், கண்ணுக்குள் புகும் ஒளிக்கதிர்களை விரித்து, விழித்திரையில் சரியாக விழச்செய்து தூரத்திலிருக்கும் பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும்.
தூரப்பார்வை

தூரப்பார்வை (Hypermetropia) உள்ளவர்களுக்குத்  தூரத்திலிருக்கும் பொருள்கள் நன்றாகத் தெரியும். அருகிலிருக்கும் பொருள்கள் தெளிவாகத் தெரியாது. தூரத்திலிருக்கும் பொருள்களைப் பார்க்கும்போது, அவற்றின் பிம்பங்கள் விழித்திரையில் சரியாக விழும். அருகிலிருந்தால், விழித்திரையைத் தாண்டி பின்னால் விழுந்துவிடும். இதனால்தான் தூரப்பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. லென்ஸில் ஏற்படுகிற குறைபாடுதான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை இரண்டுக்குமே காரணம். இதைச் சரிசெய்ய `குவி லென்ஸ்’ (Convex Lens) என்ற `ப்ளஸ் பவர்’ கண்ணாடியை மருத்துவரின் ஆலோசனையின்படி அணிந்துகொள்ள வேண்டும். குவிலென்ஸ், கண்ணுக்குள் புகும் ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் சரியாக விழச்செய்வதால் தூரத்திலிருப்பவை தெளிவாகத் தெரியும்.
சிதறல் பார்வை

கிட்டப்பார்வை, தூரப்பார்வை  இரண்டுமில்லாமல், கருவிழியின் வளைவில் ஏதாவது குறைபாடு இருந்தால், அந்தப் பார்வைக் கோளாறுக்கு, `சிதறல் பார்வை’  அல்லது `அஸ்டிக்மாட்டிஸம் (Astigmatism) பாதிப்பு’ என்று பெயர். இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு  தூரத்திலிருந்தாலும், அருகிலிருந்தாலும் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவே தெரியும்.  சில ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சரியாக விழாவிட்டால் காட்சி தெளிவாகத் தெரியாது. விழித்திரைக்குப் பின்போ, முன்போ விழுந்தாலும் இந்தப் பிரச்னை வரும். சிலர் தலையைச் சாய்த்து ஓரக்கண்ணாலோ அல்லது கண்களைச் சுருக்கியோ பார்ப்பார்கள். இதைச் சரிசெய்ய `பைஃபோக்கல் லென்ஸ்’ (Bifocal Lens) கண்ணாடி அணிய வேண்டும்.

இந்தவிதமான குறைபாடுகளுக்குக் கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் அணியலாம் அல்லது லேசர் அறுவைசிகிச்சை மூலமாகவும் சரிசெய்யலாம்.
வெள்ளெழுத்து 

`ப்ரெஸ்பியோபியா’ (Presbyopia) எனும் வெள்ளெழுத்துப் பிரச்னை வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை. லென்ஸுக்குள் புரோட்டீன் சிதைந்தால், மீள் தன்மை கடினமாகிவிடும்; லென்ஸைச் சுற்றியிருக்கும் தசை நார்களில் இறுக்கமுண்டாவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். வெள்ளெழுத்துப் பிரச்னை இருப்பவர்கள் படிக்கச் சிரமப்படுவார்கள். இதைச் சரிசெய்ய `ரீடிங் கிளாஸ்’ எனும் குவிலென்ஸ் கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும். அறுவைசிகிச்சையும் செய்துகொள்ளலாம்.
கண் புரை பாதிப்பு

`கண் புரை’ (Cataract) என்பது நமது கண்ணிலிருக்கும் லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதால் ஏற்படுவது. இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும். வயதாக ஆக, லென்ஸில் ஒளிக்கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் போகும். அதனால் பார்க்கிற பொருள்கள் மங்கலாகத் தெரியும். பார்வை படிப்படியாக மங்கி, சில வருடங்களில் முற்றிலும் பறிபோய்விடக்கூட வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசும். விபத்து, சர்க்கரைநோய் போன்ற காரணங்களாலும் கண்புரை  ஏற்படலாம். இதற்கு அறுவைசிகிச்சைதான் ஒரே வழி. புரையுடைய லென்ஸை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் `ஐ.ஓ.எல்’ (Intraocular Lens-IOL) எனப்படும் செயற்கை லென்ஸைப் பொருத்துவதால், பார்வை மீண்டும் கிடைத்துவிடும். இப்போது தையலில்லாமல் புரையை, ‘பாகோ எமல்சிஃபிகேஷன்’ (PhacoEmulsification) முறையில் அகற்றி, லென்ஸைப் பொருத்தும் நவீன மருத்துவமுறையும் வந்துவிட்டது.
கிளாகோமா

கண்ணின் முன்பகுதியில் கார்னியாவுக்கும் லென்ஸுக்குமிடையில் ‘ஏக்குயிஸ் ஹ்யூமர்’ எனும்  திரவம் சுரக்கிறது. இதில் நிலவும் அழுத்தத்தை ‘கண் நீர் அழுத்தம்’ (Intraocular Pressure) என்கிறார்கள். இது இயல்பான நிலையில்,  15 முதல் 20 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். சில காரணங்களால் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும். அப்போது பார்வை நரம்பால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. கண்களிலிருக்கும் நரம்புகள்தான் பார்வை பற்றிய தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. இந்த நரம்பு சேதமடைவதால் உண்டாகும் நிலைக்குத்தான் `கிளாகோமா’  அல்லது  `கண் நீர் அழுத்த நோய்’ என்று பெயர். தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லையென்றால், பார்வையை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நோய் வந்தால் தலைவலி, கண்வலி, கண்கள் சிவந்து போவது, பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற  அறிகுறிகள் தென்படலாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்கள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு `கிளாகோமா’ பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  கண்ணில் அடிபடுவது, கண்ணில் சதை வளர்ச்சி போன்றவையும் இதற்குக் காரணமாகலாம். வழக்கமான கண் பரிசோதனையில் `டினாமினேட்டர்’ (Denominator), `கோனியாஸ்கோப்’ (Gonioscopy) கருவிகள் மூலம் கண் நீர் அழுத்தத்தை அளவிடும்போது இந்த நோய் இருப்பது தெரியவரும். 

`ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ (Optical Coherence Tomography - OCT) எனும் அதிநவீன கருவியைக் கொண்டும் இதை அறியலாம். `கிளாகோமா’ ஆரம்பநிலையில் இருந்தால் கண் சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்திவிட முடியும். நோய் முற்றிய நிலையில் லேசர் சிகிச்சை, அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வுகள்.
மாறுகண் (Squint)

குழந்தைகள் பார்ப்பவற்றை நேராகப் பார்க்காமல், இயல்புக்கு மாறாகப் பார்த்தால் அவர்களுக்கு மாறுகண் இருக்கலாம். குறிப்பாக ஆறு மாதக் குழந்தைக்கு இருந்தால், கண் நேராகும் வரை சில வாரங்கள் திரையிட்டுக் கண்களை மறைப்பார்கள். இது சில நேரங்களில் உதவலாம். எனவே, மாறுகண் இருந்தால், குழந்தைப் பருவத்திலேயே அறுவைசிகிச்சைமூலம் சரிசெய்துவிட வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.
விழித்திரை நோய்

`ரெட்டினோபதி’ (Retinopathy) என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிற முக்கியமான கண் பாதிப்பு. விழித்திரையிலிருக்கும் ரத்தக்குழாய்கள் பலவீனமாவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் உண்டானால் விழித்திரையில் நீர்க்கசிவு, ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பார்வைத்திறன் குறையும் அல்லது பார்வை பறிபோகும். இது ஆரம்பநிலையிலிருந்தால் லேசர் சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் இதை குணப்படுத்துவது சிரமம்.
சத்துக்குறைவால் கண்களில் ஏற்படும் குறைபாடுகள்...

பார்வைத்திறன் மேம்பட வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக் குறைவாக இருக்கும் குழந்தைகளின் கண்களில், வெண்படலம் அதன் பளபளப்பை இழந்து காணப்படும். வைட்டமின் ஏ பற்றாக்குறையால், விழி வெண்படலத்தில் சாம்பல் நிறத்தில், முக்கோண வடிவத்தில்  புள்ளிகள் தோன்றும். இதற்கு ‘பைடாட்ஸ் புள்ளிகள்’ (Bitot’s Spots) என்று பெயர். இதில் நாம் பார்க்கும் பொருளின் ஒளிக்கதிர்கள் சரியான அளவில் கண்ணுக்குள் செல்லாது. மேலும், கருவிழியில் தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாவதால், தழும்பாக மாறி, அது நிரந்தரமாகிவிடும். அதனால், வெளிச்சம் கண்ணுக்குள் புகவே முடியாது என்பதால், பார்வையே பறிபோகும் அபாயம் ஏற்படும். 
கண்களில் காயம்

விரல் நகம் போன்ற கூர்மையானவை ஏதாவது நம்மையறியாமல் கண்ணின் கருவிழியில் படும்போது, காயம் ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பென்சில் உள்ளிட்ட கூரிய பொருள்களைக் குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். போதிய பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது. வீட்டில் சுண்ணாம்பு, சுத்தம் செய்யப் பயன்படும் அமிலங்களைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மிகக் குறைந்த, அதிகமான வெளிச்சத்தில் படிப்பதும் கண்களை பாதிக்கும். வீட்டிலிருக்கும் பெண்கள் சமையல் செய்யும்போது சூடான தண்ணீர் மற்றும் எண்ணெய் ஆகியவை கண்களில் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்களில் கட்டி

பொதுவாக, இமையின் ஓரத்தில் சிவந்து வீங்கி  கட்டி ஏற்படும். கண் இமையில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியா தொற்றால் இது ஏற்படுகிறது. சர்க்கரைநோய், கண் அழுத்தம் போன்ற பிரச்னைகள்  இருப்பவர்கள் கண்ணில் ஏதும் கட்டிகள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவர்களைப் பார்க்கவேண்டியது அவசியம்.
கண் சதை வளர்ச்சி

கண்ணின் ஓரத்திலிருந்து கருவிழிப் படலம்வரை சில நேரங்களில் சதை வளர்ச்சி ஏற்படலாம். சூரிய ஒளி, காற்று, தூசி ஆகியவற்றால் இது ஏற்படும். கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டால், இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம். சதை வளர்ச்சி கண்மணியை அடைவதற்கு முன்னர் அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும்.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் 

கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அவற்றில் ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம். இதற்குத்தான் இமைகள் அடிக்கடி மூடித் திறக்கின்றன. பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களைச் சிமிட்டுவோம். தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுகிறவர்கள் ஐந்து முறைதான் சிமிட்டுகிறார்கள். இதனால் கண்கள் வறண்டுவிடுகின்றன, சோர்வடைகின்றன. இதன் காரணமாக கண்ணில் எரிச்சல், உறுத்தல், தலைவலி போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. இதற்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ (Computer Vision Syndrome) என்று பெயர்.  இதைத் தவிர்க்க, அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும்.
மெட்ராஸ் ஐ  

பெரும்பாலும் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் ஒரு வைரஸ் தொற்றுநோய்தான் `மெட்ராஸ் ஐ’ (Conjunctivitis). இந்த வைரஸின் பெயர் `அடினோ’ (Adenovirus). மெட்ராஸ் ஐ ஏற்பட்டால், கண்களிலிருந்து நீர் வடியும். இமைகளை விலக்க முடியாதபடி கண் சிவந்து, பீளை வெளியேறும்; கண்ணில் எரிச்சலும் உண்டாகும். இமைகளும் வீங்கும். கண்களை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, மருத்துவரின் யோசனைப்படி கண் சொட்டு மருந்து போட்டால் கண்வலி குணமாகும். இதைத் தடுக்க, `மெட்ராஸ் ஐ’ இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும். அவர்கள் பயன்படுத்திய சோப்பு, கைக்குட்டை, டவல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
நாள்பட்ட வெண்விழிப்படல அழற்சி

இது மெதுவாக மோசமடையும்  நாள்பட்ட கண்வலி. பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம். சாதாரணமாகக் கண்வலி, கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடிவதுபோல ஆரம்பிக்கும். தொடக்கநிலையிலேயே சிகிச்சை செய்யவில்லையென்றால், பார்வை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த நோயுள்ளவர்களைத் தொடுவதன் மூலமாகவோ, ஈக்களின் மூலமாகவோ இது பரவும்.
கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள்!

தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். நீண்ட நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பது, கம்ப்12யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது போன்றவை கண்களைச் சோர்வடையச் செய்யும். இதனால் கண்கள் வறட்சி அடையும். பிறகு, விழித்தசைகளைப் பாதிக்கும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
புகைபிடித்தல்

புகைபிடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்; வெளியிடப்படும் புகை அருகிலிருப்பவர்களின் கண்களையும் பாதிக்கும். உள்ளே செல்லும் நச்சுப்பொருள்கள் பார்வை நரம்புகளைப் பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, புகைபிடிப்பவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.
தொழில் சார்ந்தவர்களுக்கு வரும் கண் பாதிப்புகள்

இரும்புப் பட்டறை, மர இழைப்பு, இயந்திரங்களுக்கு அருகில் வேலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக உரிய பாதுகாப்புக் கண்ணாடி அணிந்துதான் வேலை செய்ய வேண்டும். கண்ணில் உறுத்தல், நீர் வடிதல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

தையல் வேலை செய்பவர்கள், பொற்கொல்லர்கள், வெல்டிங் வேலையில் இருப்பவர்கள் ஆகியோர் கூர்ந்து பார்த்து வேலை செய்ய வேண்டியிருக்குமென்பதால், அவர்களுக்கு மிக விரைவாக கண்கள் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. எனவே, கண்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று கண்களைப் பரிசோதிக்க வேண்டியதும் அவசியம்.
சுய மருத்துவம் செய்யலாமா?

கண்களில் அடிபட்டாலோ, ஏதாவது தொற்றுக்கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ, மருந்துக்கடையில் `கண் சொட்டு மருந்து கொடுங்கள்’ என்று ஏதாவது மருந்தை வாங்கிப் போடுவதும், தாய்ப்பால் போன்றவற்றை கண்களில் விடுவதும் ஆபத்தானது.
கண்களுக்கான முதலுதவிகள்

கண்களில் தூசி விழுந்துவிட்டால், அதை எடுப்பதற்காகக் கண்களைத் தேய்க்கக் கூடாது. கண்களை லேசாகத் திறந்து மூடினாலே கண்ணீர் அவற்றை வெளியேற்றிவிடும். சுத்தமான தண்ணீரில் கண்களைச் சுத்தம் செய்தும் தூசை அகற்றிவிடலாம். கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருள்கள் பட்டுவிட்டால், சுத்தமான தண்ணீரால், எரிச்சல் நிற்கும்வரை கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் உடனடியாகக் கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள்

* தினமும் அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. காலை நேர சூரியக் கதிர்களைப் பார்ப்பதால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.  

* கம்ப்யூட்டர் முன்னர் நெடுநேரம் அமர்ந்து வேலைசெய்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டும் பயிற்சியைச் செய்வது நல்லது.

* இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் வைத்து ஒற்றியெடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். கண்களில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
* அவ்வப்போது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதன் மூலம், கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும். இருபது நிமிடங்கள் கண்களுக்கு வேலை கொடுத்தால், இருபது நொடிகள் இடைவேளை எடுத்து, இருபது அடி தூரத்தைப் பார்க்க வேண்டும். இந்த `20-20-20 ஃபார்முலா’ கண்களுக்குச் சிறந்த பயிற்சி. 

* அடிக்கடி இடம், வலம், மேல், கீழ் எனக் கருவிழியை உருட்டிப் பார்க்கும் பயிற்சியைச் செய்வதும் நல்லது.

கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

* உங்கள் குழந்தைகள், கண் குறைபாட்டால் கண்ணாடி அணிய வேண்டியிருந்தால், அவர்களைக் கண்ணாடி அணிய ஊக்கப்படுத்த வேண்டும்.
* கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பார்வைத்திறன் மாறியிருக்கலாம். தவறான கண்ணாடியை அணிவது கண்களை அதிகமாக பாதிக்கும்.

* சர்க்கரைநோய், கண் அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் கண்ணில் ஏதும் கட்டிகள் இருந்தால், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* புத்தகம் படிக்கும்போது, புத்தகத்துக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள தூரம் 30 செ.மீ இருக்க வேண்டும். அரை மணிக்கொரு முறை புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, தொலைவிலுள்ள பொருளைப் பார்க்க வேண்டும். 40 நிமிடங்கள் தொடர்ந்து படித்தால், அடுத்த 5 நிமிடங்களுக்குக் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழங்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* நெருங்கிய உறவில் திருமணம் செய்வதும் பார்வைக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, இதைத் தவிர்க்கலாம்.

* அதிக வெயிலில் செல்லும்போது ‘சன் கிளாஸ்’ அணிந்துகொள்ளலாம்.
* இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, ‘வைசர்’ (Visor) இருக்கும் ஹெல்மெட் அணிந்துகொள்வது நல்லது. 

* கம்ப்யூட்டர் மானிட்டர் நம் பார்வைக் கோட்டுக்குக் கீழே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது, அவ்வப்போது சிறு சிறு இடைவெளிவிட்டு வேலையைத் தொடர வேண்டியது அவசியம்.

* போதிய பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது. 

* கண்களைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவ வேண்டும்.

* வீட்டில் சுண்ணாம்பு, பினாயில், ஆசிட் போன்றவற்றைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். 

* வெளிச்சமுள்ள அறையில் டி.வி பார்ப்பதே சிறந்தது.
* மிகவும் குறைந்த வெளிச்சத்திலோ, மிக அதிக வெளிச்சத்திலோ படிப்பது கூடாது. பயணத்தின்போது படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்

* கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்.

* இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
* பொன்னாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

* பால், முட்டை, இறைச்சி, முட்டைகோஸ், பீன்ஸ், பீர்க்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், தக்காளி, மாம்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

* அடர் பச்சை நிறக் காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, இ மற்றும் பி அதிகமுள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

* ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளைச் சாப்பிட்டால், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

- ஜி.லட்சுமணன்