Monday, 5 February 2018

நந்தி ரூபத்தில் சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம்

ஐந்து பிரதோஷங்கள்... ரோஜாப்பூ மாலை... கல்யாண பிரார்த்தனை!


ங்கடங்களைத் தீர்க்கும்  மும்மூர்த்திகளில் ஒருவரான   எம்பெருமான் சிவனுக்கு எண்ணிலடங்காத ஆலயங்கள் இருக்கின்றன. அப்படி, சிவனின் புகழ்பாடும் புண்ணியத் தலங்களில், சென்னை - ஆதம்பாக்கத்தில் இருக்கும் ஆவுடைநாயகி உடனுறை  நந்தீஸ்வரர்  ஆலயமும் ஒன்று. 

``பன்னெடுங்காலத்துக்கு முன், இந்தப் பரங்கிமலையில் சிவனாரின் எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைக் காண  இந்த மலையில் கடும் தவம் புரிந்திருக்கிறார். பிருங்கிமுனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், நந்திரூபத்தில் காட்சி அளித்து, மோட்சம் நல்கியிருக்கிறார். 

இந்தத் திருக்கதையை அங்கு வாழ்ந்து வந்த மக்கள் கூற, அப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ‘ஆதணி’ என்பவன் கேட்டு மெய்சிலிர்த்து, சிவனாருக்குக் கோயில் எழுப்பினான் என்கிறது தலவரலாறு. ‘ஆதணி’  என்ற அந்த மன்னனின் பெயரைத் தாங்கிய இந்தப் பகுதி ஆதணிபாக்கம் என அழைக்கப்பட்டு, அது பின்னர் திரிந்து ‘ஆதம்பாக்கம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது . இத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கு அருளோச்சும் மூலவரின் திருப்பெயர் - அருள்மிகு நந்தீஸ்வரர்; அம்பாளின் திருநாமம்- அருள்மிகு ஆவுடைநாயகி. கோயிலின் வரலாற் றைச் சொல்லும் கல்வெட்டுக்கள் இன்றும் கோயிலின் பிராகாரங்களில் கம்பீரமாக மிளிர்கின்றன” என பக்தியுடன் தலவரலாற்றை விவரித்தார் கோயிலின்  குருக்கள் சீதாராம்.

இங்கு மூலவர் ஸ்ரீ நந்தீஸ்வரர் 4 அடி உயரத்தில், பிரமாண்ட லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்புரிய, இறைவி ச்ரஆவுடைநாயகி தென்திசை நோக்கியவண்ணம் தன் கருணைக் கடாக்ஷத்தை பக்தர்களுக்கு நல்குகிறாள். 

அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம்  இது என்பது சிறப்பு. தவிர, இங்கு மும்மூர்த்தியரான சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதும் சிறப்பு என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். 

மிகவும் பழைமையான கோயில். உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. சற்று உள்ளே நுழைந்தால், நந்தி, ஸித்தி விநாயகர், நர்த்தன விநாயகர், பாலமுருகன், தக்ஷிணாமூர்த்தி, சுந்தர விநாயகர், பைரவர், சூரியன், நாகதேவதை, ராகு, காளஹஸ்தீஸ்வரர், கேது, மஹாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத  சிவசுப்பிரமணியன், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய பரிவாரத் தெய்வங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத் தூண்களில் மீன் சிற்பம், கண்ணப்ப நாயனார், காமதேனு, மாருதி, நரசிம்மர் எனப் பல சிற்பங்கள் இருப்பது, தலத்தின் பழைமையைப் பறைசாற்றுகிறது.
“இங்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் எல்லா ஸோம வாரமும், ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் மஹா தீபாராதனையும்  சிறப்பாக நடைபெறு கின்றன. பிரதோஷத்தின்போது, இங்கு பசு வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சி! உற்ஸவ மூர்த்திகள் திருவுலா,வேதபாராயண முற்றோதுதல், உபன்யாசங்கள் ஆகியவை சிவனுக்குரிய உற்ஸவ நாட்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. இதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆலயத்துக்குக் கிழக்கு - தெற்கு என இருபுறமும் வாசல் இருப்பதைக் காணலாம்” என்று பூரிப்புடன்  நம்மிடம் கூறினார் பக்தர் பாலச்சந்தர்.

ஆலயத்தின் மூலவர் வரப்பிரசாதி. குறிப்பாக, ஐந்து பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்கு வந்திருந்து மூலவருக்கும் நந்திக்கும் ரோஜாப்பூ மாலைகளைச் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள். இங்கு கோயிலின் தலவிருட்சமான வில்வ மரத்தில், பெண்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டில் கட்டிப் பிரார்த்தித்துக்கொண்டால்,  குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சகல செல்வங்களையும், திருமணத் தடை நீக்கும் வரத்தையும் தரும் ஆதம்பாக்கம் ஸ்ரீஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீ நந்தீஸ்வரரைச் சென்று தரிசித்து, கல்யாண வரம் பெற்று வாருங்கள்.


உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஸ்ரீ நந்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீ ஆவுடைநாயகி

தலவிருட்சம்:
 வில்வம்

ஆலயச் சிறப்பு: அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் திருத்தலம்

சிறப்பு வழிபாடு: ஐந்து பிரதோஷ தினங்கள் இங்கு வந்து ஸ்வாமிக்கும் நந்திதேவருக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்து வழிபட்டால், கல்யாண 
வரம் கைகூடும்.

எப்படிச் செல்வது?: சென்னை-தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை செல்வதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது (ஆதம்பாக்கம்) நந்தீஸ்வரர் ஆலயம். 

நடை திறந்திருக்கும் நேரம்:
 விழாக் காலங்கள் தவிர, அனைத்து தினங்களிலும் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயிலின்  நடை திறந்திருக்கும்.

வாஸ்து வழிகாட்டி

உங்கள் இல்லத்தில் குறைகள் நீங்கிட, வளங்கள் பெருகிட
வளம் தரும் வாஸ்து!


குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டைக் காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

மனிதன் படைத்த வசதி வாய்ப்புகளை இயற்கை சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல் என்றும் வாஸ்து சாஸ்திரத்தைச் சொல்லலாம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.
வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம். வாஸ்து புருஷன் என்பவர் பகவான் நாராயணனின் அம்சம். இந்தப் பூவுலகம் அவரது உடலேயாகும். இந்த உலகில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் அவரது அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் சாரம் ஆகும்.

நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் ‘ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், ‘வாஸ்து சில்ப சாஸ்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டடங்களை வடிவமைப்பதும் கட்டுவதும் தொடர்பான அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எவன் ஒருவன் வாஸ்துவை முறையாக மதிக்கிறானோ அவன் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இகபர இன்பங்களையும் தவறாமல் அடைகிறான். 

தகுந்த விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து. இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும். 

நான்காம் இடமும் கிரகங்களும்!

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. 

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்துக் 4-ஆம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந் திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். எனினும், குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும். 

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் புதன் அமையப் பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும்.  

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் அந்திம பாகத்தில் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். இவர்களுக்கு, எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் தோஷம் ஏற்படாமல், குலம்  தழைத்தோங்கும்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப் பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்கு துன்பம் தராது. அதேநேரம்... தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும், நான்கில் சுக்கிரன் இருந்து நல்ல வீடுவாசல் அமையப் பெற்றாலும் வீட்டில் அமைதி ஏற்படுவது கஷ்டம். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. வேறு பரிகாரங்கள் அவசியம்.
ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் சனி இருப்பின், கல்விகேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற்றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். ஆசாரம் குறைவுபடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும். 

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அதேபோன்று அடிக்கடி வீடுவாசலையும் மாற்ற வேண்டியது வரலாம். 
ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும். பூர்விகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. இவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துசுகங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாந்தி இருப்பின், செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.

ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால் கிரக தோஷ பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் இவ்வாறான அமைப்பு உடையவர்களுக்கு மனை வீடு போன்றவை... ஒரு காலத்தில் களவு, கொலை நடந்த இடங்களிலோ, மயானங்களின் அருகிலோ இயற்கையாகவே அமைந்துவிடும். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.

இனி, வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டலைக் காணலாம்.

மனையைத் தேர்வு செய்வது எப்படி?

வீட்டுக்காக வாங்கும் நிலங்களை உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்க வேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம். 

நெல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மலைகள், சமுத்திரம், ஆசிரமம், மயானம் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கக் கூடாது. அதேபோன்று வீட்டு மனை எப்படியிருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

உரிய மனைகள் எவை?

கோ வீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.

ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக் கூடாது.

யம வீதி: வடக்கு  மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும். இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.

கஜ வீதி: தெற்கு மூலை உயர்ந்திருந்து, வடக்கு  மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.

பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந் தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.

நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.

அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.

தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.
வீட்டு மனை வாங்க ஏற்ற காலம் !

வீட்டுமனையை வாங்கும் காலம்... கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான்! 

வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்; மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்; வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்; கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்.

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம் மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி,  சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை.

சித்தயோகம், அமிர்தயோக காலமானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றது.

மாதங்களும் திசைகளும்...

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.
வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் துவங்குவது சிறப்பு.

தெற்குத் திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் துவங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்கள் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.
கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம்!

ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது. அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியன விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.

அஷ்டம சித்தி என்று ஒன்று உண்டு. அதாவது எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக் கிறோமோ, அதற்கு எட்டாவது இடத்தில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியன இருக்கக்கூடாது. புதன் தனித்தி ருந்தால் தப்பில்லை. சூரியன் அல்லது செவ்வாயோடு சேர்ந்து இருக்கக் கூடாது. ராகு, கேது போன்றவையும் இருக்கக் கூடாது. எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும்.
கட்டட பணி துவங்குமுன்...

முதலில், வீடு அல்லது தொழில் நிலையம் எதுவாக இருந்தாலும், அதற்கான கட்டடம் கட்டப்போகும் பிளாட்டில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிளாட்டின் நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். நிருதி மூலை 90 டிகிரியைவிட குறையவும் கூடாது; கூடவும் கூடாது.

* தெற்கிலும் மேற்கிலும் வெட்டவெளியாக அமைந்திருக்கும் பிளாட்டில் வீடு கட்டும்போது, நிருதி மூலையை சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

* அடுத்ததாக வீட்டுக்கும், மதிலுக்கும் இடையில் உள்ள காலியிடத்தை... தெற்கைவிட வடக்கில் அதிகமாகவும், மேற்கை விட கிழக்கில் அதிகமாகவும் இருக்கும்படி சரிசெய்து கொண்டு, வானக்கால் தோண்டவும். எதிரெதிர் மூலைக்குள்ள தூரம் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.

* மதிலுக்கும் சரி, வீட்டுக்கும் சரி... முதன் முதலில் வானக்கால் தோண்டும்போது ஈசானிய மூலையில் தோண்ட ஆரம்பிக்கவும். அதன்பிறகு, கடைசியாக நிருதி மூலையில் (தென் மேற்கு) கடைக்கால் தோண்டும் வேலையை முடிக்கவும்.

அதேபோன்று முதன்முதலில் கட்டுமான வேலையை ஆரம்பிக்கும் போது நிருதி மூலையில் (தென்மேற்கு) ஆரம்பித்து, ஈசானிய மூலையில் (வடகிழக்கு) முடிக்கும்படி கட்டவும்.
மேலும், கட்டட வேலைக்கு முதன் முதலாக மணல் அடிக்கும்போது, பிளாட்டுக்குள் அல்லது பிளாட்டுக்கு வெளியே நிருதி மூலையில் (தென்மேற்கு பகுதியில்) அல்லது மேற்கில்தான் குவிக்கவேண்டும். வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கவே கூடாது. இதன் அடிப்படையிலேயே கற்கள் மற்றும் செங்கற்கள் முதலானவற் றையும் குவிக்கவேண்டும். 

வீடு கட்டும்போது...

தினசரி கொத்தனார் வேலையை முடிக்கும்போது தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களைவிட, ஒரு செங்கல் அளவாவது உயரமாக இருக்கும்படி அமைத்து,  கட்டுமான வேலையை முடிக்கவும். கட்டட கட்டுமானத்தில் முக்கியமானது, வாசல்களை நிர்மாணிக்கும் தருணம். எனவே, வாஸ்து பிளானில் உள்ளபடி, உரிய இடங்களில் வாசல்களுக்கு இடம் விட்டுக் கட்டவேண்டும். அதுபோல், எல்லா அறைகளையுமே நான்கு  மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும். குறைந்தபட்சம் நான்கரை அங்குலம் அளவில், ஒவ்வோர் அறைக்கும் நான்கு மூலைகளுக்கும் மடக்கு வைத்து செங்கல் கட்டுமானம் கட்டிய பிறகே, நிலைக்கால் வைக்க வேண்டும்.

தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் துவங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.

லாஃப்ட் கான்கிரீட் அமைக்க விரும்பினால், அறைகளின் தெற்கு மற்றும் மேற்குச் சுவரில் அமைக்கவும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அமைக்கவே கூடாது. மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. நான்கு புறமும் சமமாக இருக்கலாம்.

மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும்.

வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.
பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.

தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும். செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். இடத்துக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம்.

மதிலின் உயரம் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு (கொடைக்கானல், ஊட்டி முதலான மலைவாழிடங்கள் நீங்கலாக) சமையல் அறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக் கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கட்டவும். 

மர வேலைகள் செய்யும்போது...

வீடுகளுக்குப் பயன்படும் மரங்களை ஆண் மரம், பெண் மரம், நபும்சக (அலி) மரம் என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். அடிமரம் முதல் நுனிவரையிலும் ஒரே அளவாக இருந்தால் ஆண் மரம். அடிப் பகுதி பருத்தும் நுனிப் பகுதி சிறுத்தும் இருந்தால் பெண் மரம். ஓர் ஒழுங்கற்ற அமைப்பில், நுனிப் பகுதி பெருத்தும், அடிப் பகுதி சிறுத்தும் இருந்தால், அது அலிமரம் எனச் சொல்லப்படுகிறது.
தூண்கள், உத்திரம், நிலை, கதவு போன்ற கட்டுமானத்துக்கு தேவையான மரங்களை வைரம் பாய்ந்ததாகவும், உறுதியான தாகவும், கிழட்டுத்தனம் அடையாததாகவும், தருணா வஸ்தை இல்லாததாகவும், கோணல் இல்லாததாகவும், காயம் படாதவையாகவுமாக தேர்வுசெய்ய வேண்டும். மேலும் புண்ணிய பூமி, மலை, வனம், நதிக்கரை ஆகிய இடங்களில் உள்ள மரங்களாகவும், பார்ப்பதற்கு அழகானதும், அனைத்து வகையான நன்மைகளை அளிக்கத் தக்கதாகவும் அந்த மரங்கள் அமைந்திருப்பது விசேஷம்.

இனிய ஒசையை எழுப்பும் தன்மையுடைய ஒலித் திறன் கொண்ட மரங்கள், ஒரே நிறமுள்ள மரங்கள், தொட்டுப் பயன்படுத்தும் நிலையில் தீங்கு இல்லாத மரங்கள், கிழக்கு மற்றும் வடக்கில் சாய்ந்துசெல்லும் கிளைகள் கொண்ட மரங்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதால், சுபிட்சம் உண்டாகும், என்பது மயன் கருத்து.

மரங்களைத் தேர்வு செய்யும்போது...

1. கோயிலின் உட்பகுதியில் வளர்ந்த மரங்கள்
2. இடி விழுந்த மரங்கள்
3. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள்
4. வீடுகளில் வளர்ந்த மரங்கள்
5. ராஜ வழிகளாகிய மகா பதங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
6. கிராமங்களாகிய குடியிருப்புகளில் பராமரித்து வளர்க்கப்பட்ட மரங்கள்
7. நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மரங்கள்
8. பெரும் காற்றில் சாய்ந்த மரங்கள்
9. யானை போன்ற விலங்குகளினால் சாய்க்கப் பட்ட மரங்கள்
10. பறவைகள், விலங்கினங்கள் தங்கிய மரங்கள்
11. சண்டாளர்கள் வசிக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்
12. மனிதர்களுக்கு நிழல் தரவும், ஓய்வெடுக்கவும் பயன்படும் மரங்கள்.
13. ஒன்றோடு ஒன்றாக பின்னி வளர்ந்த மரங்கள்
14. நெருக்கமாக வளர்ந்த மரங்கள்
15. கொடிகளால் சூழப்பட்ட மரங்கள்
16. நரம்புகள் தெரியும் வண்ணம் வளர்ந்த மரங்கள்
17. பொந்துகள் உள்ள மரங்கள்
18. கணுக்கள் அதிகம் உடைய மரங்கள்
19. பூச்சிகள் அரித்த மரங்கள்
20. அகாலத்தில் பலன் தரும் மரங்கள்
21. சுடுகாட்டில் உள்ள மரங்கள்
22. ஊர் சபை கூடும் இடங்களில் உள்ள மரங்கள்
23. நான்கு வீதிகள் கூடும் இடங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
24. கோயில் மரங்கள்
25. குட்டைகளில், குளக் கரை, கிணற்றின் அருகில் வளர்ந்த மரங்கள்
26. பாழ்பட்டு கிடக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்

இவ்வகை மரங்களைத் தவிர்க்கவேண்டும். 

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்?!

கட்டுமானத்துக்கு மரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள் உண்டு.

பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த்தால் அஷ்ட லட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா மரங்கள் பயன்படுத்தினால் செல்வம் அழியும், ஆயுள் குறைவு ஏற்படும்.
உங்கள் வீட்டு அறைகள் எப்படி?

பூஜையறை: வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
அந்த இடத்தில் வேறு அறைகள் அமைக்கக் கூடாது. அப்படி வேறு அறைகள் அமைந்து அதில் எவரேனும் தங்கினால், அப்படியானவர்களுக்கு சோம்பல் குணம் மிகுதியாகும். தங்குபவர்கள் சிறுவர்களாக இருந்தால், படிப்பில் தடை ஏற்படும்.

குளியல் அறை: பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியலறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. கிழக்கில் குளியலறை அமையும் பட்சத்தில், குளித்ததும் வழிபாடு செய்ய முற்படும்போது, ஆரோக்கியம் தரும் தெய்வமான சூரியதேவனை வழிபட ஏதுவாக  இருக்கும். இதற்கு வழியில்லாதபோது, மற்ற திசைகளில் குளியலறையையும், தண்ணீர் வெளியேறும் வழிகளையும் அமைக்கலாம்.

சமையல் அறை: ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. அதைத் தயார் செய்வதற்கு அக்னி அவசியம். இறை வழிபாட்டில் மந்திரங்களைச் சொல்லியபடி அக்னியில் பொருள்களைச் சமர்ப்பிப்பது உண்டு. அதாவது, இருதயத்தை பலிபீடமாகவும், ஆத்மாவை அக்னியாகவும் பாவித்து தன்னையே தியாகம் செய்ய வேண்டும் எனும் கருத்துடன் அமைந்த சடங்கு முறை இது. இதிலிருந்து அக்னியின் முக்கியத்துவத்தை அறியலாம். சமையலுக்கும் அக்னியே பிரதானம்.  அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைத்துக் கொள்வது சிறப்பு.

படிக்கும் அறை: வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

படுக்கை அறை: பொதுவாக, சராசரி மனிதர் ஒருவர் நாளின் 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் அலுவல்களிலும், 8 மணி நேரம் வெளியிடங்களிலும், 8 மணி நேரம் வீட்டிலும் இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.
வீட்டின் பாகங்களும் பயன்களும்!

வீட்டின் ஈசான்ய பாகமானது (வடகிழக்கு பாகம்) பூஜை செய்வதற்கு உரிய இடம். மேலும், நெல் முதலான தானியங்களைச் சேமித்துவைக்கவும் உகந்தது. தலைவன் தலைவி படுக்கை அமைய, நன்மை விளையும்.

* வீட்டின் தென்கிழக்குப் பகுதியை சமையல் செய்யவும், வீடு தேடி வரும் உறவினர் தங்கவும் பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கை அமைவது கூடாது; மீறினால் குழந்தை துர்க்குணத்துடன் பிறக்கும். வீட்டுத் தலைவருக்கு பொருள் சேதம் உண்டாகும்.

* வீட்டின் தெற்கு பாகம் பூஜையறை, உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் உரிய இடமாகும். இங்கு படுக்கை அமைந்தால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கும்; வம்ச விருத்திக்கு கெடுதல் உண்டாகும்.

* தென் மேற்குப் பகுதியில் பாத்திரங்கள், உயர்ந்த பொருட்கள் வைப்பதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்கும் படுக்கையறை அமையக்கூடாது.

* வீட்டின் மேற்குப் பகுதி தம்பதி சேர்க்கைக்கு உகந்த இடம். பிறக்கும் குழந்தை ஆணானால், மெய்ஞ்ஞானியாகத் திகழ்வான். பெண் குழந்தை எனில், சிறந்த குணவதியாகத் திகழ்வாள்.

* வீட்டின் வாயு மூலையில் பூஜை அறை அமைக்கலாம். முற்காலத்தில் இந்தப் பகுதியை பிரசவத்துக்கான இடமாகத் தேர்வு செய்வார்கள் (முன்பு வீட்டிலேயே பிரசவம் நிகழும்). இந்த இடத்தில் நெற்களஞ்சியம் வைப்பதால் லாபம் ஏற்படும்.

கதவுகளும் பலன்களும்!

ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளுமானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், புத்திரபாக்கியக் குறையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவும், மனக் கவலைகளும் ஏற்படும்.

கதவுகளின் எண்ணிக்கை!

இரண்டு கதவுகள்: நல்ல பலனைத் தரும்.

3 கதவுகள்: பகைமை ஏற்படும்.
4 கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.
5 கதவுகள்: நோயை உண்டாக்கும்.
6 கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.
7 கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.
8 கதவுகள்: செல்வம் வளரும்.
9 கதவுகள்: நோய் உண்டாகும்.
10 கதவுகள்: திருடர்களால் ஆபத்து.
11 கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.
12 கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
14 கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.
15 கதவுகள்: நன்மை குறைவு.

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.
உங்கள் ராசியும் வீடும்!

ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.

அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.

மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது

ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது

கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.

கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.

துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.

விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.

தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.

கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.

மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.

தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள் கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான வாழ்க்கையைப் பெறுவோம்.
வளம் தரும் வாஸ்து பூஜை!

பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக் கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும், குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.

எந்த தினங்களில் பூஜிக்கலாம்?: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்

பூஜைக்குத் தேவையானவை: பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுவத்தி,  நவரத்தினங்கள் (உரிய கடைகளில் கிடைக்கும்), பஞ்ச லோகங்கள், நவதானியங்கள்.
எப்படி பூஜிப்பது?: முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும் பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில் (அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும். அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதாரத் துதித்தபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர் எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.
அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும் கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து, நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு,  சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றி கூறி வழிபட்டு நவதானியங்களையும், நவரத்தினங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து வழிபடவேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும். இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம். 

இந்த முறை எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய முறையாகும்.

திருப்பங்கள் தரும் திரிசக்கர தரிசனம்!

மூன்று அம்பாள்கள்... மூன்று மஹான்கள்... மூன்று தலங்கள்

க்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி’ என்ற வாக்கி யத்தால் உணர்த்தி இருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

முற்பிறவி கர்மவினையின் காரணமாக இப்போது நமக்கு மனிதப்பிறவி வாய்த்திருக்கிறது. இப்பிறவியில் நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு கைகளால் இறைவனுக்குத் தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும். மலர்களை எடுத்து பூஜை செய்தல் வேண்டும். இரண்டு கால்களால் இறைச் சக்திகள் உறைந்திருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று திருச்சுற்று வந்து வணங்குதல் வேண்டும். அவன் நமக்குப் பேசும் சக்தியைக் கொடுத்திருப்ப தால், இறைவனின் திருநாமத்தை உச்சரித்துப் பிரார்த்திக்க வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் ஆலய தரிசனங் களில், நவகிரகத் தலங்கள் தரிசனம், சிவத் தலங்கள் தரிசனம், சக்தி தேவியர் தரிசனம் என்று பலவகை தரிசனங்கள் உள்ளன. இத்தகைய தலங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய தலங்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் அமைந்தி ருக்கும் தலங்களாகவோ அமைந்திருக்கும்.

அந்த வகையில் ‘திரிசக்கர தரிசனம்' என்று பக்தர்களால் போற்றப்படும் - ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் மூன்று அம்பாள் கோயில்கள், அவசியம் நாம் தரிசிக்க வேண்டியவை ஆகும்.

திரிசக்கர தரிசனம்

வள்ளலார் சுவாமிகளால், ‘தருமமிகு சென்னை’ என்று போற்றப்பட்ட சென்னை யில், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று சக்தித் தலங்களை ஒரே நாளில் தரிசித்து அருள்பெறும் விசேஷ வழிபாடுதான் திரிசக்கர தரிசனம் ஆகும். 

திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன், மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் ஆகிய மூன்று சக்தி ஸ்தலங்களும், சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் ஒரே வரிசையில், 12 ராசிகளைச் சேர்ந்த வர்களும் தரிசித்து பலன் பெறும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சக்திகளின் அருட் கோலங்களைப் பற்றி அகத்தியர் நாடியின் ருத்ர சம்வாத சருக்கப் பகுதியில் கலியுக க்ஷேத்திரப் பரிகார காண்டப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்தியின் மகிமையைக் கூறும் நூல்களில் ரேணுகாதேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்புகளும், ஸ்ரீசண்டிகா வழிபாட்டு முறையில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகிமைகளும், தேவி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீகாத்யாயனி தேவியின் புகழும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. 

லலிதா சகஸ்ரநாமத்தில் திரிசக்கர சக்திகள்

பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யும் போது, அவர்கள் கூறும் சகஸ்ரநாம அர்ச்சனையில் திரிசக்கர தரிசன சக்திகள் இடம்பெற்றுள்ளனர். அதில், 616-வது நாமாவளியில் ‘ஆதிசக்தியை நம:' என்று தேவி கருமாரி அம்மனையும், 63-ம் நாமாவளி யில் ஸ்ரீகாமாட்சி தேவியையும், 557-வது நாமாவளியில் ஸ்ரீகாத்யாயனி தேவியையும் போற்றுவதாக உள்ளது. 

அத்துடன்... முச்சக்தி தரிசனம், முச்சக்தி வேட்டல் என்று பக்தர்கள் கொண்டாடும் இந்த திரிசக்தி தரிசனத்தின்போது, மூன்று தேவியரின் பேரருளுடன் மூன்று குரு தேவர்களின் திருவருளும் நமக்குக் கிடைப்பது மிகவும் விசேஷம் ஆகும்! 

காக்கும் தேவி கருமாரி

திருவேற்காடு கோயிலுக்குள் சென்றதும் முதலில் விநாயகரை வணங்கி, திரிசக்கர தரிசனம் விக்கினம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, கருவறைக்குச் சென்று கருமாரி அம்மனைத் தரிசித்து மூன்று நெய் தீபங்கள் ஏற்றி மாரியின் தியானத்தை மும்முறை கூறுதல் வேண்டும்.

அருணமணி நியாங்கம் அக்னி கெசம் கரண்டம்
டமருக துதசூலம் கட்க ஹஸ்தம் கபாலம்
அநல நயன நாகம் ஆஸனம் பத்ம பீடம்
அகில புவன மாதர் சீதனா தேவி மீடே!


பின்னர் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, புற்று மண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, பிராகார வலம் வந்து பரிவார மூர்த்திகளையும் வணங்கவேண்டும். பின்னர், கருமாரி அம்மன் துதிப் பாடல்களைப் பாடியபடி புஷ்கரணிக்குச் சென்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ளவேண்டும். அங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வேதபுரீஸ்வரரையும், அவருக்கு எதிரில் தலத்தின் குருநாதரான மூர்க்க நாயனாரையும் வணங்கி அருள் பெறவேண்டும்.
திருவேற்காடு தலத்துக்கும் குன்றத்தூர் தலத்துக்கும் நெடுங்காலமாகவே  ஓர் ஆன்மிகத் தொடர்பு உண்டு, இந்த தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்த அநபாயச் சோழனும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் பாதயாத்திரையாகச் சென்று ஆலயப் பணிகளைச் செய்து வந்ததைக் குறிப்பிடும்படியாக வேதபுரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் உட்பிராகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிரில் தெய்வச் சேக்கிழாரையும் அநபாயச் சோழனையும் சிலையாக வைத்திருக்கிறார்கள். 

கருணை நாயகி காமாட்சி

திருவேற்காடு தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள மாங்காடு - தேவி ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.கோயில் கொடி மரத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து கருவறைக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மகாமேருவை தரிசித்து, சப்த மாதர்களையும் வணங்கி, மஞ்சள் குங்குமத்துடன் எலுமிச்சங்கனியை அருட் பிரசாதமாகப் பெற்று காமாட்சி தேவியின் தியானத்தை மூன்று முறை கூற வேண்டும்.

ஓம் சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே
குங்கும ராக சோனே புண்ட்ரேஷு பாசாங்குச புஷ்ப
பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: 


இத்தலத்தில் அர்த்த மகாமேருவைத் தரிசிக்கும்போது ஆதிசங்கரரின் குருவருளைப் பெறுகிறோம்.

கல்யாண தேவி ஸ்ரீகாத்யாயனி

மாங்காடு தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் குன்றத்தூரின் தென் பாகத்தில் உள்ள கல்யாண வரம் தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குப் பிரியும் தார்ச் சாலையில் அரை கி.மீ தூரத்தில் ஸ்ரீகாத்யாயனி சந்நிதி அமைந்துள்ளது.

இங்குள்ள தோரண கணபதியையும், மங்கள மாரி, கிருஷ்ண மாரி தேவியரையும் தரிசித்துவிட்டு, சூல மண்டபத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து வணங்க வேண்டும். பின்னர், கமலவிமானக் கருவறையின் கீழ் மகாமேருவோடு காட்சி தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மனை தரிசித்து மஞ்சள் பொடியும் குங்குமமும் அருட்பிரசாதமாகப் பெற்று வழிபட வேண்டும். இத்தலத்தில் அம்மன் கருவறைக்கு பின்புறமாக தார்ச் சாலையில் பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழார் அருள் தருகிறார். இவரே இத்தலத்தின் ஆதி குருநாதராக விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

காத்யாயனி சந்நிதியில் திருச்சுற்று முடித்த உடன் அம்மன் துதியாக

ஓம் காத்யாயனி மகாமாயே பவாநி புவனேஸ்வரி
ஸம்ஸார சாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி
நமோதேவ்யை ப்ரக்ருத்யைச விதாதர்யை நமோநம:
கல்யாண்யை காமதாயைச விருத்யை சித்யை நமோநம: 


என்ற துதியைக் கூறி வழிபட வேண்டும்.  தற்போது, இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால் பாலாலயம் அமைத் துள்ளனர். ஆகவே, அம்பிகையின் உற்ஸவ மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டு வரலாம்.

திரிசக்கர தரிசன பலன்கள்

வாழ்க்கையின் முன் வினைகளைத் துடைத்து முன்னேற்றங்களைத் தரும் சக்தி உடையது இந்த திரிசக்கர தரிசனம். பொதுவாக பௌர்ணமி, அமாவாசை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று பிரார்த்திக்கின்றனர். வெள்ளி, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பிரார்த்தனை தினமாக நினைத்து தரிசிக்கும் வழக்கமும் உள்ளது. 

காரியத் தடைகள் விலகி நலம் பெற பௌர்ணமி அன்றும், சூன்யாதி தோஷங்கள் விலக அமாவாசை அன்றும், வியாபார தொழில் முயற்சிகளில் வெற்றிபெற ஞாயிற்றுக் கிழமையிலும், கடன் தீர்ந்து சொந்த இல்லம் அமைய செவ்வாய்க்கிழமையிலும், குழந்தைப் பேறு தடைகள் நீங்க சனிக்கிழமையிலும், பொன் பொருள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமையிலும், நவக்கிரக தோஷங்கள் விலகி, தம்பதியர் ஒற்றுமையுடன் வாழவும், தீராத கோர்ட் வழக்குகளில் தீர்வு பெறவும் சனிக்கிழமையிலும் திரிசக்கர தரிசனம் சென்று வர வேண்டும்.

இத்தனை மகிமை மிக்க தரிசனத்தை, அம்பிகைக்கு உரிய நவராத்திரி திருநாட்களில் மேற்கொள்வது இன்னும் சிறப்பு. ஆகவே, நாமும் நலம் தரும் நவராத்திரி தினங்களில், திரிசக்கர தரிசனம் மேற்கொண்டு, வாழ்வில் நல் திருப்பங்கள் காண வரம் பெற்று வருவோம்.


காலை 6 மணிக்கு திருவேற்காட்டில் தரிசனம் முடித்து, 9 மணிக்கு மாங்காடு தரிசனம் கண்டு, 11 மணிக்குக் குன்றத்தூரில் திரிசக்கர தரிசனத்தைப் பூர்த்தி செய்யலாம்.

பெரும்பாலான பக்தர்கள் இந்த திரிசக்கர தரிசனத்தை திருவேற்காட்டில் தொடங்கி குன்றத்தூரில் நிறைவு செய்கின்றனர். ஒரு சிலர், குன்றத்தூரில் ஆரம்பித்து திருவேற்காட்டில் நிறைவு செய்கின்றனர்.
குன்றத்தூர் திருநீர்மலை சாலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை உள்ளது. எனினும், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் கோயிலைத் தரிசித்துவிட்டு, அங்கிருந்து மாங்காடு மற்றும் திருவேற்காடு சென்று ஆலய தரிசனம் செய்ய ஆண்களும் பெண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். ‘திரிசக்கர தரிசனப் பேருந்து’ பௌர்ணமி, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை தினங்களில் இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கனவுகளும் பலன்களும் !

சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது?


னவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.

கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது.
கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். 

இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும்; மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும்; விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு வரும் கனவுகளைப் பற்றி நமது முன்னோர் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதித் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

அவற்றில் இருந்து அபூர்வமான தகவல்கள், உங்களுக்காக! அகர வரிசைப்படி  ஒவ்வொன்றாய் அறிவோமா? 

அதிர்ஷ்டம் தரும் கனவு!

அரசர்: அரசர் (தற்போது ஜனாதிபதி, பிரதமர்) போன்ற பெரும்பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண் மேற்படி கனவைக் கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆடவன், அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.

அப்சர ஸ்திரீகள்
: தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். திருமணமாகாத மகளிர் கண்டால், விரைவில் திருமணம் நிகழும். மணமான மங்கையர் கண்டால், பொருள் வரவு உண்டு.
அழகற்ற பெண்: அழகு இல்லாத பெண் ஒருத்தியை, மணமாகாத ஓர் ஆடவன் கனவில் கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.

அதிசயமானவர்: விந்தையான மனிதர் அல்லது நூதனப் பொருட்கள் கனவில் வந்தால், வரும் தீமையைச் சுட்டிக்காட்டும். நம்பிக்கை மோசடி - ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

அடிதடி: சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால், அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும்.

சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை எனலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள். 

தான் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை உருவாகும். புதிய நண்பர்கள் உண்டாவர், புகழ் பெருகும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால், பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும் எனலாம். ஆனால், கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல; பழி ஏதேனும் வந்து சேரும். 

அழுகை: வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு காணின் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.

அபாயம்: தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். பிறர் அபாயத்தில் சிக்கியிருப்பதுபோல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும்.

அரிசி: அரிசியைக் கனவில் கண்டாலோ, சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்.

அன்னப் பறவை: கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது சிலாக்கியம் என்று கூறுவதற்கில்லை.
பருவ வயதில் உள்ள ஓர் இளைஞனின் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், பெரும் ஏமாற்றங்களுக்கு அவன் ஆளாக வேண்டியிருக்கும். அவனுடைய தன்மானத்துக்கு இழுக்கும் அபவாதமும் சூழும்.

மணமாகாத மங்கை ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னத்தைக் கண்டால், உடனடியாக ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடும். ஆனால், வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

ஆலயம் கனவில் வந்தால்...

ஆசிரியர்: கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் சந்திப்பவரின் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும். பொருள் வரவும் மிகுதியாகும்.
ஆலயம்: கோயிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும். புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். ஆனால், பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்பது கூடாது. முன்னதற்கு நேர்மாறான பலன்களைத் தரும். முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும் பொருள் நஷ்டமும் உண்டாகும்.

ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும்  செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மை யாகவே முடியும்.

கனவில், ஆலய மணியோசை யைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் பலன் உண்டு. ஆலய மணியோசை ஒரே சீராக ஒலிக்கும் எனில், மக்கள் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும். ஆனால், மணியோசை சீரற்றதாக ஒலிக்குமானால் பல சிக்கல்கள் குறுக்கிடுவதோடு பொருள் நஷ்டமும் உண்டாகும்.

ஆலமரம்: கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.

ஆசியுரை: தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும். 

ஆரஞ்சு: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் கூடும்.

இனிப்பும் இரும்பும்!

இஞ்சி: கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இனிப்பு: இனிப்பான பலகாரங் களைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

இளைப்பு: தான் இளைத்து விட்டதுபோல் ஒருவர் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும்.

இறந்தவர்கள்: இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு காணின், பெயரும் மேலான புகழும் பெறும் நிலை ஏற்படும். 

இறந்துபோன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு அண்மையில் வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்பது பொருள். தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமாகில், நன்மைகளையே குறிப்பிடும் எனலாம். சுக வாழ்க்கை ஸித்திக்கும். எனவே அச்சமுற வேண்டாம். உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு காண்பது, அவருடைய துன்பங்கள் நீங்கும் என்பதைக் குறிப்பிடும். 

நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரவிருக் கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். இறந்துபோன மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக அமையும். மாறாக, அவள் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகும்.

இரும்பு: இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை மிகுந்திருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நிவர்த்தியாகும். வேறு சிலருக்கோ, தரித்திரத்தை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு எடுப்பதுபோல் காண்பது மிகவும் கெடுதலானது.
ஈன்ற பசுவை கனவில் காணலாமா?

ஈன்ற பசு: பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.      

உணவும் கனவும்!

உத்தியோகம்: ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கு அறிகுறி. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். 

வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறே செயலில் நிகழவும் கூடும். இல்லையேல், ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து,  மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம்; வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.

உழவு: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளம் அனைத்தையும் பெற்றுத் திகழும். 

உற்ஸவம்: தேரோட்டம் போன்ற திருவிழாக்களைக் கனவில் காணின், உடனடியாக உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடும்.

உண்ணல்: தான் மட்டும் தனித்து உண்பதுபோல் கனவு காணின் துன்பங்கள் உண்டாகும். உறவினர்களைப் பிரிய நேரிடும். தொழில் நஷ்டம் ஏற்படும். 

அவ்வாறு கனவு காண்பவர் விவசாயியாக இருப்பின் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.

பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஸித்திக்கும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள், விருந்துண்டு மகிழ்வ தாகக் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஊற்று... உன்னதம்!

ஊற்று: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது கஷ்டங்களைக் குறிப்பிடும்.

எலும்பும் எழுத்தும்!

எதிரிகள்: கனவில் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.
எலும்பு: கனவில் எலும்பைக் காண்பது விசேஷம். சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக் கூடும். மனிதரின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும்.
எழுத்தாணி: எழுதப் பயன்படும் பேனா போன்ற பொருள்களைக் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள்.

எழுதுதல்: எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு காணின், நற்செய்திகள் விரைவில் அவரை நாடி வரும்.

எண்ணெய்: எண்ணெயை தனியா கவோ, அதை தேய்த்துக் குளிப்பதாகவோ கனவு காணக் கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால், நோயாளிகள் மேற்படி கனவைக் காணில், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும்.

ஏழ்மை நிலை: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.

ஏமாற்றம்: ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால்,  தீமை உண்டாக வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி பொருள் இழக்க நேரிடும்.

ஏலக்காய்: கனவில் ஏலக்காயைக் காண்பவர், பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். ஏலக்காயை உண்பது போல கனவு காணின், திரண்ட செல்வம் வந்து சேரும்.

ஓட்டம்... உயர்வு!

ஒட்டடை: வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் நூலாம்படை அப்பியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். 

ஓட்டம்: தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதற்கு அறிகுறியாகும். தொழில் அபிவிருத்தியடையும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஸித்திக்கும்.

ஓசைகள்: கனவில் ஓசைகளைக் கேட்பது நல்லதல்ல. பேரோசையைக் கேட்பது, கள்வர்களால் பொருள் இழப்பு நேர்வதோடு, துன்பம் விளைவதையும் குறிக்கும். சிறிய ஓசையைக் கேட்பதுபோல் வரும் கனவு, வீண் சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.

ஹோம குண்டம்: கனவில் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் காண்பவர், தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் அடைவார்.

கஷ்ட காலம் இனி இல்லை!

கடல்: கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக ஸித்திக்கும். இல்லையேல், அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற தேச உறவுடைய அலுவலகங் களில் வேலை கிடைக்கும்.

கண்டங்கள்: ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கஷ்ட காலம்: கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, நேர்மாறான பலனைத் தரும். வாழ்க்கையில் உயர்வும் புகழும் ஸித்திக்கும்.

கற்பூரம்: கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம்.

கன்றுக்குட்டி: கன்றுக்குட்டியைக் கனவில் கண்டால், செல்வ சேமிப்பு ஏற்படும்.

கனவில் காய்கறிகள்!
காதணிகள்: கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

காய்கறி: காய்கறிகளைச் சமைப்பதுபோல கனவு காண்பது, நம்பியவர்களின் நம்பிக்கை மோசடியைச் சுட்டிக்காட்டும். காய்கறிகளை உண்பதுபோல கண்டால், பொருள் இழப்பு ஏற்படும். காய்கறிகளைப் பறிப்பதுபோல கனவு கண்டால், சண்டை - சச்சரவுகள் உண்டாகும்.

காக்கை: காக்கை கனவில் வருவது கெடுதலானது. தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு, விரோதிகளின் சூழ்ச்சி, வீண் விரோதம் போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். காகம் கரைவதாக கனவு காண்பதும் கெடுதலான காலத்தைக் குறிப்பிடும்.

கிணறு தரும் பலன்கள்

முதியவர்: முதியவர்களைக் கனவில் காண்பது நற்பலன்களை விளைவிக்கும். மிகுந்த செல்வம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தானே கிழவராகிவிட்டாற்போல ஒருவர் கனவு கண்டால், அவருடைய குடும்பநிலை மேம்படும்; சந்ததிகள் பெருகுவர்.

கிணறு: கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும். மணம் ஆனவர்களுடைய குடும்பத்தில், வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறும். கிணற்றில் இறங்கி நீந்தும்போது, நீருக்கு மேலே தலையைத் தூக்கியிருப்பது போல கனவு கண்டால், முயற்சிகள் வெற்றி பெறும். மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும். கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதுபோல கனவு காண்பது, நினைத்த செயல்கள் இனிதே முடியும் என்று குறிப்பிடும். 

இப்படியான கனவை 

வியாபாரி ஒருவர் கண்டால், அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண் ஒருத்தி கண்டால், சகல செல்வங்களும் ஸித்திக்கும்.

கீழே விழுவது: கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும். 

குடிசை தரும் எச்சரிக்கை!
குடுகுடுப்பைக்காரர்: கனவில் குடுகுடுப்பைக்காரர்களைக் கண்டால், ஆலோசிக்காமல் எக்காரியத்திலும் இறங்கக் கூடாது; எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை.

குடிசை: குடிசை ஒன்றில் தாம் வசிப்பதாகக் கனவு காணின், வறிய நிலையை அவர் அடைய நேரிடும் என்பதைக் குறிக்கும். குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு காணின், வீட்டில் களவு போகலாம். 

குண்டூசி: கனவில் குண்டூசி களைக் காணின், சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

குறட்டை: குறட்டை விடுவது போல கனவு கண்டால், சுக வாழ்க்கை ஸித்திக்கும்.

கூச்சல்: கூச்சல் ஒலிக்கும் இடத்தில் இருப்பதுபோல கனவு கண்டால் உடல் நலம் கெடும். பலர் கூச்சலிட்டு தன்னை நோக்கிப் பேசுவதாக காண்பதும் கெடுதலானது.

கூலி: கூலி வேலை செய்பவர், தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி குறைக்கப்பட்டது போல கனவு காணின், அவருக்கு தற்போதைய வேலையைவிட பெரிய வேலை கிடைக்கக்கூடும்.

கேலி: பிறர் நம்மை கேலி செய்வதுபோல கனவு கண்டால், தொழிலில் மேம்பாடு, உத்தியோகத்தில் உயர்வு, பொருள் சேர்க்கை உண்டாகும். மாறாக மற்றவர்களை, நாம் கேலி செய்வது போல கனவு கண்டால் பண நஷ்டம், உண்டாகும்.

கைவளையல்: கைவளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் மங்கையர்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும். மணமானவர்கள் எனில், அவர்தம் கணவருக்கு வருமானம் 
அதிகரிக்கும். கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால், எதிர்பாரா வகையில் பெரும் சொத்து வந்து சேரும். ஆனால், வளையல் உடைத்து விட்டாற்போல காண்பது கெடுதல்.

கொய்யாமரம்: மரம் அல்லது பழத்தைக் காண்பது நல்லது. பழத்தை உண்பதுபோல காணின் நோய்கள் விலகும். தொழில் உயர்வு அடையும். உத்தியோக பதவியும் உயர்வடையும். இந்தக் கனவை விவசாயி ஒருவர் கண்டால், விளைச்சல் செழிக்கும். குழந்தைப் பேறு கிட்டாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணம் நடைபெறும்.

சந்தன மரம் சந்தோஷம் தருமா?
சமயத் தலைவர்கள்: இவர்களைத் தரிசிப்பது போலவோ, இவர்களுடைய உபதேசத்தைக் கேட்பது போலவோ கனவு கண்டால், தெய்வபக்தி மேலோங்கும், வருவாய் மிகுதியாகும்.

சந்திரன்: வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு காணின், லாபங்கள் உண்டாகும். பலரும் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

சந்நியாசம்: சந்நியாசம் மேற்கொள்வதுபோல காணும் கனவு, வர இருக்கும் இடையூறு களையும் இன்னல்களையும் குறிப்பிடும். ஆனால், முடிவில் யாவும் நிவர்த்தியாகி நிம்மதியுண்டாகும். ஆனாலும், இப்படியொரு கனவை மணம் ஆகாதவர்கள் கண்டால், அவர் இல்வாழ்வில் ஈடுபட மாட்டார் என்று கூறலாம்.

சந்தன மரம்: கனவில் சந்தன மரத்தைக் காண்பது நல்லது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். உறவினர்களால் பொருள் உதவி கிடைக்கும்.

சாரைப்பாம்பு: கனவில் இந்த பாம்பை கண்டால், தனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்று அறிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

சிவலிங்கம்: கனவில் சிவ லிங்கத்தைக் கண்டால் தெய்வ அருளும், செல்வ வசதியும் உண்டாகும்.

சிங்கம்: கனவில் சிங்கத்தைக் காண்போர், தொழிலில் அல்லது தனது உத்தியோகத்தில் உயர்வு அடைவர். சிங்கத்தைக் கண்டு பயந்தாற்போல கனவு கண்டால், யாவும் நஷ்டமாகவே முடியும். உடல்நலனும் பாதிக்கப்படும்.

சிங்கத்தை நாம் கொல்வது போல் கனவு கண்டால், பகைவர்கள் புறம் காட்டி ஓடுவர் என்று கூறலாம். சிங்கம் நம்மைக் கடித்து விட்டது போல கனவு கண்டால் ஆபத்து களும், சோதனைகளும், கஷ்டங் களும் உண்டாகும்.

சீப்பு: கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம். ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால், அவருடைய நோய் விரைவில் குணமாகும்.

சூரிய கிரகணம்: சூரிய கிரகணம் பிடித்திருப்பதாக கனவு காண்பது கெடுதலானது. தொழில் நஷ்டம் ஏற்படும். அதேநேரம், கர்ப்பிணிகள், சூரிய கிரகணங்கள் தண்ணீரில் பட்டு, பிரதிபலிப்பதாக கனவு கண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் எதிர் காலத்தில் குடும்பம் மிகவும் மேலான நிலையடையும்.

செடிகள்: மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால், எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும். பழங்கள் நிறைந்த செடியைக் கண்டால், திரவிய சேர்க்கையும், புத்திர சம்பத்தும் உண்டாகும். ஆனால், காய்கள் மட்டுமே உள்ள செடிகளைக் கண்டால் காரியக் கேடும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.

செருப்பு: புத்தம் புதிய செருப்பு அணிந்து கொண்டிருப்பதுபோல கனவு கண்டால் சோதனைகளும், கெடுதிகளும் ஏற்படும். கால்களுக்குப் பொருந்தாத செருப்புகளை அணிந்து கொண்டிருப் பதாகவோ, அதனால் கால்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவோ கனவு கண்டால், இல்லற வாழ்க்கையில் இன்பம் இருக்காது.

சோம்பல்: மிகவும் சோம்பலாக இருப்பது போல காணும் கனவு, நிகழ்கால நிலைமை மாற இருத்தலைக் குறிப்பிடும்.

தவமும் தவசிகளும்!
தவசிகள்: தவயோகச் செல்வர்களைக் கனவில் காண்போர், பொதுநல தொண்டில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.

தவம்: தவம் செய்வதாக கனவு கண்டால் இறை அருள் உண்டாகும். உடலுறுதி ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் மேம்படும்.

தவளை: தவளைகளைக் கனவில் காண்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி ஏற்படக் கூடும். தவளைகளைப் பிடிப்பதாகக் காண்பதும் நல்லதே விளைவிக்கும். ஆனால், தவளைகள் கத்துவதாகக் கனவு காண்பது கெடுதலாகும்.

தாலி: மங்கலநாணை கனவில் காண்பது, மேலான பதவிகளைக் கொடுக்கும்; பண வசதியை உண்டாக்கும்; மணமாகாதவர்களுக்கு மணம் நிகழ வைக்கும்.

தித்திப்பு: தித்திப்பு உணவை உண்பதாகக் கனவு கண்டால் தொழில் உயர்வும், பண வரவும், நண்பர் சேர்க்கையும் உண்டாக்கும்.

தீக்குச்சி: கனவில் தீக்குச்சி சம்பந்தப்பட்டவை தோன்றின் திடுக்கிடத்தக்க செய்திகள் வரக்கூடும்.

துணி: துணிகளை வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எண்ணியவை இனிதே நிறைவேறும்.

தொழிற்சாலை: கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து வரக்கூடும்.

தோட்டம்: நாம் தோட்டம் ஒன்றில் உலவுவதுபோல கனவு கண்டால், மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை!

நல்லதே அருளும் நாவல் பழம்!

நண்டு: கனவில் நண்டைக் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் பல இடையூறுகள் இன்னல்கள் உண்டாகும். அச்செயல் வெற்றி பெறாது போகக்கூடும். கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டைக் காண்பது, கப்பலுக்கு பேராபத்தாக முடியும். 

நாவல் பழம்: கனவில் நாவல் பழத்தைக்  கண்டால், காரிய ஸித்தி ஏற்படும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் மிகுந்திடும்.
நிச்சய தாம்பூலம்: கனவில் இந்த வைபவத்தைக் காண்பது நல்லது. மணம் ஆகாதவர்கள், இந்த வைபவத்தைக் கனவில் கண்டால், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்தேறும்.

நீதிமன்றம்: நீதிமன்றத்தைக் காண்பதாகவோ, நாம் நீதிமன்றத்தில் இருப்பதாகவோ கனவு கண்டால், வழக்குகளை எதிர்கொள்ளவோ அதனால் செலவுகளை ஏற்கவோ நேரிடும்.

நெசவாலை: நெசவு தொடர்பான கனவுகள், நன்மை அளிக்கும்.

 போர் வீரன்: நாம், ஒரு போர் வீரனாக இருப்பதாகக் கனவு வந்தால், தற்போதையை உத்தியோகத்தை விட்டுவிட நேரிடும். தொழில் செய்வோர் நஷ்டப்பட நேரிடும். போர் நடப்பதாகக் கனவு கண்டால் ஏதேனும் சச்சரவு உண்டாகும்.

மெழுகுவத்தி: கனவில் மெழுகுவத்தி சுடர்விடுவதாகக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படும். 

வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

மலர்கள்: மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கைகூடும். ஆனால், வாடிய மலர்களை கனவில் கண்டால், வியாதி உண்டாகும் என்பது குறிப்பு.

வர்ணம்: நாம் வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல். ஆனால், வர்ணம் அடிக்கும் நபர்களைக் காண்பது நல்லது.

வீணை: ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோல் கனவு காண்பது நல்லது; சுப காரியங்கள் ஸித்திக்கும்.