Sunday, 12 February 2017

18. கல் யானைக்கு கரும்பு தந்த படலம் !


அமைச்சர்களே! முனிவர்களும் சித்தர்களும் ஆண்டவனையே தங்கள் பணியைச் செய்யும்படி கட்டளையிடும் சக்தி பெற்றவர்கள். சாதாரண மன்னனான என்னை அவர் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவரை நானே சென்று பார்க்காமல், இங்கே வரவழைக்கச் சொன்னது என் தவறு தான். இதோ புறப்படுகிறேன், என்றவன், மீனாட்சியம்மன் கோயிலுக்கு மந்திரி பிரதானிகளுடன் விரைந்தான். சித்தரைச் சுற்றி நின்ற மக்கள் மன்னனைக் கண்டதும் விலகி மரியாதையுடன் கைகட்டி நின்றனர். சித்தர் அவன் வந்ததைக் கண்டுகொள்ளவே இல்லை. சித்தரிடம் சென்ற மன்னன், மாபெரும் சித்தரே! நான் மதுரையின் மன்னன் அபிஷேகப் பாண்டியன். தாங்கள் யார்? எங்கள் மக்களுக்கு இத்தகைய சித்துவேலைகளைக் காட்டுவதன் மூலம் அவர்களிடம் என்ன எதிர்பார்த்து வந்திருக்கிறீர்! மேலும், என்னால் உமக்கு ஆக வேண்டியது ஏதுமிருக்கிறதா! என்றான். சித்தர் கலகலவெனச் சிரித்தார். மன்னா! எனது ஊர் காசி. அங்கே விஸ்வநாதரைத் தரிசித்த நான், தெற்கிலுள்ள புண்ணியம் வாய்ந்த மதுரையம்பதி பற்றி அறிந்து இங்கு வந்தேன்.

இந்தத் தலம் முக்தி ÷க்ஷத்திரம் என்பதை அறிவேன். வாழும் காலத்தில் பெரும் செல்வத்தையும், வாழ்விற்கு பிறகு பிறப்பற்ற நிலையாகிய முக்தியையும் தரும் இந்த ÷க்ஷத்திரத்திற்கு வருவோர் அடையும் பலன்கள் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து தங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது வேண்டுமா என்றாயே! நான் கேட்பதைத் தரும் வல்லமை உன்னிடம் இருக்கிறதா! நான் நினைத்தால் விண்ணுலகை இந்த மண்ணுக்கும், மண்ணுலகை விண்ணுக்கும் மாற்றி விடுவேன். அப்படிப்பட்ட சக்தி மிக்க என்னிடம், உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள், தருகிறேன். உன் மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை அவர்களுக்கு தருவது போல், உனக்கும் நீ கேட்பது கிடைக்கும், என்றார். சித்தர் சொன்னதைக் கேட்ட மன்னன் திகிலடைந்தான். இருப்பினும் அவரை சோதிக்க நினைத்த அவன், அங்கு நின்ற ஒருவர் வைத்திருந்த கரும்பைக் கையில் வாங்கினான். சித்தரே! நீர் வல்லமை மிக்கவர் என்பது உண்மையானால், இந்தக் கரும்பை, எங்கள் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்தை தாங்கி நிற்கும் இந்தக் கல் யானை சாப்பிடுகிறதா என பார்க்க வேண்டும். உம்மால் அது முடியுமா? என்றான். சித்தர் சிரித்தார். மன்னா! என்னைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறாயோ! என்றவர், கல்யானையை நோக்கி கண்ஜாடை செய்தார். அவ்வளவுதான்! கல் யானையின் கண்கள் நிஜக்கண்களாயின. அது சுற்றுமுற்றும் பார்த்தது. அதன் தும்பிக்கை அசைந்தது. மேலும், கோயிலே நடுங்கும் வகையில் பிளிறியது. மன்னனின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கித் தின்ற போது, கரும்புச்சாறு அதன் வாயில் இருந்து ஒழுகியது. சுற்றி நின்ற மக்கள் ஆரவாரம் செய்தனர்.

மன்னன் என்ன செய்வதென தெரியாமல் விழித்தான். சித்தராக வந்த சுந்தரேஸ்வரர் அத்துடன் மன்னனை விட்டாரா என்ன! கல்யானையை நோக்கி அவர் மீண்டும் கண்ஜாடை காட்டினார். அந்த யானை மன்னனின் கழுத்தில் கிடந்த முத்துமாலையைப் பிடித்து இழுத்தது. கண் இமைக்கும் நேரத்தில் வாயில் போட்டு விழுங்கிவிட்டது. மன்னனுக்கு கடும் ஆத்திரம். அவனது ஏவலர்கள் வேல்கம்புகளுடன் சித்தரைத் தாக்க ஓடினர். தன்னை தாக்க வந்தவர்களை சித்தர் ஒரு பார்வை தான் பார்த்தார். அவ்வளவு தான். அனைவரும் கற்சிலை போல் அந்தந்த இடங்களில் நின்று விட்டனர். சித்தரின் அருமையை அபிஷேகப் பாண்டியன் புரிந்து கொண்டான். தனது தவறைப் பொறுக்கும்படி சித்தரின் திருவடிகளில் விழுந்து வேண்டினான். சித்தர் அவனை மன்னித்ததுடன், பாண்டிய மன்னா! அறியாமல் நீ செய்த பிழையைப் பொறுத்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் வரம் கேள், என்றார். என் குலப்பெருமை துலங்கும் படியாக எனக்கொரு மகன் பிறக்க வேண்டும், என பாண்டியன் அவரிடம் வேண்டிக்கொள்ளவே, அவ்வாறே குழந்தை பிறக்கும் என ஆசிர்வதித்தார் சித்தர். பின்னர் கல்யானை தான் விழுங்கிய மாலையை மன்னனிடமே ஒப்படைத்தது. அதைக் கண்டு அதிசயித்த மன்னன், அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அங்கே சித்தரைக் காணவில்லை. சிலை போல் நின்ற காவலர்கள் உயிர் பெற்று என்ன நடந்ததென தெரியாமல் திகைத்து நின்றனர். சித்தராக வந்தது சோம சுந்தரப்பெருமானே என்பதை அறிந்த அனைவரும் அவரது சன்னதிக்கு சென்று வணங்கினர். சில காலம் கழித்து அபிஷேகப் பாண்டியனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விக்ரமன் என பெயர் சூட்டினர். அவன் பல கலைகளும் கற்றான். அவன் இருபது வயதை எட்டியதும் பட்டாபிஷேகம் செய்து வைக்கப் பட்டது. பின்னர் அபிஷேகப் பாண்டியன் இந்தப் பூவுலக வாழ்வை நீத்தான்.

17. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் !


ராஜராஜனின் மகன் சுகுணபாண்டியன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு பதவியேற்றான். அவனது ஆட்சிக்காலத்தில் கரிக்குருவி ஒன்று மதுரை அருகில் இருந்த ஒரு நகரில் வசித்தது. முற்பிறப்பில், இந்தக் குருவி வலிமை மிக்க ஆண்மகனாக விளங்கியது. ஆனால், அவன் செய்த பாவவினையால் இப்பிறப்பில் குருவியாகப் பிறந்திருந்தான். இந்தக் குருவியை பருந்துகளும், காகங்களும் விரட்டி விரட்டி அடித்தன. குருவி பயத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருந்தது. இதனால், அவ்வூரை விட்டு கிளம்பி அருகிலிருந்த காட்டிற்குப் போய்விட்டது. அங்கே, காகம் போன்ற எதிரிப்பறவைகள் இல்லாததால் அங்கேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தது. ஒருமுறை, சிவனடியார் ஒருவர் அது தங்கியிருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அமர்ந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற சிலர் அடியவரை வணங்கினர். அவர்களுக்கு அவர் அறிவுரைகளைச் சொன்னார். மேலும், மதுரை நகரின் பெருமைகளை எடுத்துச் சொன்ன அவர், அந்த ஊருக்குச் சென்றாலே போதும்! நமக்கு பிறவிப்பிணி நீங்கிவிடும். அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம் உடலில் பட்டாலே போதும்! சகல வளமும் கிடைக்கும், மோட்சம் உறுதி, என்றார். இதை மரத்தில் இருந்து கேட்ட குருவி, சிவநாமத்தை உச்சரித்தபடியே மதுரை நோக்கிப் பறந்தது. கோயிலுக்குள் நுழைந்து பொற்றாமரைக் குள நீரில் தன் உடல் படும்படியாக உரசிக்கொண்டு மேலெம்பியது. பிரகாரத்தைச் சுற்றிப் பறந்து வலம் வந்து, மீனாட்சியம்மன் சன்னதிக்குள்ளும், சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள்ளும் இருந்த உத்திரத்தின் மேல் அமர்ந்து தெய்வதரிசனம் செய்தது.

மூன்று நாட்கள் தொடர் தரிசனம் செய்த அந்தக் குருவியைப் பற்றி அன்னை மீனாட்சி, தன் கணவரிடம் கேட்டாள். அதன் பூர்வஜென்மம் குறித்து அம்பிகையிடம் சுவாமி விளக்கினார். பின், அந்தக் குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை அவர் உபதேசம் செய்தார். அது ஆயுள்விருத்திக்கும், பிறவித்துன்பம் நீங்குதலுக்கும் உரியதாகும். மந்திரம் கேட்ட குருவி, இறைவனிடம், இறைவா! என்னை மற்ற பறவைகள் துன்புறுத்துகின்றன. அவற்றை சமாளிக்கும் அளவு எனக்கு பலத்தைத் தந்தருள வேண்டும், என்றது. இறைவனும் அதை ஏற்றார். குருவியே! உன்னை இனி மக்கள் வலியன் என்று அழைப்பார்கள். நீ பலம் மிக்க குருவியாக இருப்பாய். மற்ற பறவைகளை விரட்டும் ஆற்றல் பெறுவாய், என்று சொல்லி திரியம்பக மந்திரத்தையும் உபதேசித்தார். இந்த மந்திரத்தைக் கற்ற அந்தப் பறவை நீண்டகாலம் அதை உபதேசித்து இறையடி சேர்ந்தது. குருவிகளை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. அவற்றின் ஒலியை மந்திரஒலியாகவே கேட்க வேண்டும். ஏனெனில், வலியன் பறவைக்கு வரமளித்த இறைவன், உன் வம்சமும் இனி வலியன் என்றே அழைக்கப்படும், என்று சொல்லியுள்ளார். சுந்தரேஸ்வரப் பெருமான் குருவிக்கு உபதேசம் செய்தது மட்டுமல்ல! நாரைக்கும் முக்தி கொடுத்துள்ளார். மனிதஜீவன்கள் மட்டுமின்றி, தனது எல்லா படைப்புகளுக்கும் அவர் கருணை செய்துள்ளார்.

 
 
 

16. கடலை வற்றச் செய்த படலம் !



பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான். அபிஷேகப் பாண்டியன் மாலையில் அவனுக்கு முன்னதாகவே வந்து அபிஷேகம் செய்ததால், அவன் அங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருமுறை சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், வருணன் மதுரை சொக்கலிங்க பெருமான் கோயிலுக்கு வந்தான். வருத்தமான முகத்துடன் இருந்த இந்திரனைக் கண்ட அவன், தேவேந்திரா! உன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது? தேவலோக தலைவனான நீ இந்த பூலோகத்தில் வந்து வருந்துவதன் காரணம் என்ன? என்றான்.

வருணனே! சொக்கலிங்கப் பெருமானுக்கு சித்ரா பவுர்ணமியன்று நான் தான் முதலில் அபிஷேகம் செய்வேன். நேற்றோ, அபிஷேகப் பாண்டியன் முன்னதாக அபிஷேகம் செய்ய வந்துவிட்டதால், நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. சாதாரண மானிடனுக்கு கிடைத்த சிறப்பு தேவர் தலைவனான எனக்கு இல்லையே எனும் போது வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன வழி? என்றான். இந்திரனே! யார் முதலில் அபிஷேகம் செய்தால் என்ன? முதன்முதலாக அபிஷேகம் செய்யுமளவுக்கு இந்த சொக்கநாதப் பெருமான் அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேட்ட வருணனிடம், அதிலென்ன சந்தேகம்! என்றான் இந்திரன். அப்படியானால், எனக்கு தீராத வயிற்று வலி இருக்கிறது. தேவலோக வைத்தியர்கள் மருந்து தந்தும் குணமாகவில்லை. இதை இந்த சொக்கநாதர் குணமாக்கி விடுவாரா? எனக்கேட்டான் வருணன். நமது சொக்கநாதர் பிறவி என்ற கொடிய நோயையே குணமாக்கக் கூடியவர். அவருக்கா உனக்கு வந்துள்ள சாதாரண வயிற்று வலியைக் குணமாக்க முடியாது! என இந்திரன் பதிலளித்தான். சரி இந்திரரே! அப்படியானால் அந்தப் பெருமானின் மகிமையை உலகறியச் செய்யும் விதத்தில் நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். அவரது திருவிளையாடலைக் காண ஆவலாக உள்ளேன், என்றான் வருணன். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைக் காண ஆவலுடன் நின்றான் இந்திரன்.

வருணன், சமுத்திரராஜனை வரவழைத்தான். சமுத்திரராஜா! உடனே கடலை மதுரைக்கு அனுப்பு. பொங்கி வரும் கடல் மதுரையை அழிக்க வேண்டும், என்று உத்தரவிட்டான். அதற்கு கட்டுப்பட்டான் சமுத்திரராஜன். பெரும் பிரளயம் ஏற்பட்டது. கடல் பொங்கி மதுரை நகருக்குள் புகுந்து விட்டது. மாட மாளிகைகள் தகர்ந்தன. மதுரை மக்கள் அலறியடித்து ஓடி என்ன பயன்? பலர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். எங்கும் மரண ஓலம். தப்பிப் பிழைத்த அபிஷேகப்பாண்டியனும், இன்னும் சிலரும் சுந்தரேஸ்வரர் கோயிலை மட்டும் அழிக்காமல் சுற்றி நின்ற வெள்ளத்தைக் கடந்து கோயிலுக்குள் புகுந்தனர். சோமசுந்தரப் பெருமானிடம் தங்களை காப்பாற்றுமாறு விண்ணப்பித்தனர். இரக்கமே வடிவான சொக்கநாதனாகிய சோமசுந்தரர், அவர்கள் முன் தோன்றினார். மேகங்களை வரவழைத்து, மேகங்களே! இந்த கடல் நீரை உறிஞ்சுங்கள், என ஆணையிட்டார். கணநேரத்தில் மதுரையில் வெள்ளம் வந்த சுவடே இல்லாமல் மறைந்து விட்டது. பெருமானின் அருளால் மாண்ட மக்களெல்லாம் உயிர் பெற்றனர். எம்பெருமானின் கருணையை அனைவரும் போற்றினர்.

15. கடல் சுவற வேல் விடுத்த படலம் !


உக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப் போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான். இன்னும் நான்கு யாகங்களை பூர்த்தி செய்துவிட்டால், அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர லோகத்தையும் தன் வசம் ஈர்க்கலாம் என்பது அவனது திட்டம். அதாவது, நாடு பிடிப்பது என்பது அவனது ஆசையல்ல. இந்திரலோகம் தன் கைக்குள் வந்தால், பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய வைத்து, மக்களை செழிப்புடன் வாழ வைக்கலாம் என்பது அவனது எண்ணம். மழைக்கடவுளான இந்திரனின் இடத்தைப் பிடித்தால் தான் இது சாத்தியம். இதை இந்திரன் தெரிந்து கொண்டான். உக்கிரபாண்டியனின் திறமையை அவன் அறிவான். மேலும், முருகப்பெருமானின் அவதாரமான அவனால் எதையும் சாதிகமுடியும் என்று தெரிந்து கொண்டு, தன் பதவியைக் காப்பதற்குரிய முயற்சியை எடுத்தான். வருணனை அழைத்து, வருணா! நீ மதுரைக்குச் செல். அங்கே சோமசுந்தரர் வரவழத்த எழுகடல்கள் உள்ளன. அவற்றைப் பொங்கச்செய்து மதுரையை அழித்து விடு. இல்லாவிட்டால், இந்திரலோகம் உக்கிரபாண்டியனின் வசமாகி விடும்.

நாம் அவனது அடிமைகளாகி விடுவோம். உன் பதவியைக் காப்பாற்றிக் கொள், என்று உத்தரவிட்டான். இந்திரனின் உத்தரவை தட்ட முடியாத வருணனும், வேறு வழியின்றி மதுரைக்குச் சென்றான். ஒருநாள் இரவு வேளையில் உக்கிரபாண்டியனும், காந்திமதியும் தங்கள் மஞ்சத்தில் சயனித்திருந்தனர். நள்ளிரவு வேளை, பேய்கள் கூட உறங்கிப் போனதோ என்று சொல்லுமளவுக்கு பெரும் நிசப்தம். அப்போது எழுகடலில் இருந்து பேரோசை எழும்பியது. மன்னனின் கனவில் தோன்றிய சோமசுந்தரர், மகனே! இந்திரன் எழுகடலை பொங்கச் செய்து மதுரையை அழிக்க திட்டமிட்டுள்ளான். நான் உன்னிடம் கொடுத்த வேலை கடல் மீது எறிந்து அதை வற்றச்செய், என ஆணையிட்டார். திடுக்கிட்டு எழுந்த உக்கிரபாண்டியன், உடனடியாக அமைச்சர் சுமதி மற்றும் பெரும்படையுடன் எழுகடல் பகுதிக்கு வேலுடன் சென்றான். எழுகடலும் மதுரையை நோக்கி உக்கிரத்துடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்துப் போனான். சோமசுந்தரரை மனதில் நினைத்து துதித்து, வேலை கடலை நோக்கி வேகமாக எய்தான். அந்த வேலின் நுனிபட்டதோ இல்லையோ, எழுகடல் தண்ணீரும் சொட்டு கூட இல்லாமல் அப்படியே வற்றிப்போனது. மன்னனும், மற்றவர்களும் ஆர்ப்பரித்தனர்.

சோமசுந்தரரையும், மீனாட்சியையும் போற்றிப் புகழ்ந்தனர். மறுநாள் காலையில் தான் மக்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. எழுகடலும் காணாமல் போய் பெரும் நிலப்பரப்பு தங்கள் முன் இருந்ததை அவர்கள் கண்டனர். கடல் பொங்கியதும், உக்கிரபாண்டியன் அதை அடக்கியதும் கேள்விப்பட்டு மன்னனை வாயார வாழ்த்தினர். ஊரெங்கும் விழா எடுத்தனர். எழுகடல் நிலத்தையும் மன்னன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் செய்து வைத்தான். வெற்றி வாகை சூடி, இனிய ஆட்சியை சிறிது காலம் தொடர்ந்த மன்னனின் வாழ்வில் விதி விளையாடியது. தெய்வங்களே மனிதராக பிறப்பெடுத்தாலும், அவர்கள் கிரகங்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது ஜோதிட நியதி. இந்த நியதிக்கு உக்கிரபாண்டியனும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. நவக்கிரகங் களின் சாரமும் உக்கிரபாண்டியனுக்கு சாதகமாக இல்லாததால், சோதனைகள் அவனை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தன. திருமால், ராமனாகப் பிறந்து, காட்டுக்கு போனது போல, ஆட்சியையே ஆட்டம் காண வைக்கும் சோதனை அது!

14. ஏழுகடல் அழைத்த படலம் !


கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள். குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.


அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார். அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.

திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது. மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர். சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.

பன்னிரு திருமுறை (Panniru Thirumurai)




Siva


சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர். இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
  • முதல் திருமுறை
  • இரண்டாம் திருமுறை 
  • மூன்றாம் திருமுறை & பிற்சேர்க்கை பாடல்கள்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள். 

  • நான்காம் திருமுறை
  • ஐந்தாம் திருமுறை
  • ஆறாம் திருமுறை

         சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
  • ஏழாம் திருமுறை

         மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார். 

  • எட்டாம் திருமுறை 

         திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி    

         காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார்,   

         புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள் அருளிய 

         திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. 

  • ஒன்பதாம் திருமுறை 

        திருமூலர் அருளிய திருமந்திரம். 

  •  பத்தாம் திருமுறை 

         திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் 

        காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், 

       இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் 

        மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய, 

  • பதினோராம் திருமுறை 

       சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

  • பன்னிரண்டாம் திருமுறை

திருவிளையாடல் - 13. எல்லாம் வல்ல சித்தரான படலம்!


அபிஷேகப் பாண்டியனின் ஆயுளை முடித்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள சிவபெருமான் விருப்பம் கொண்டார். தன்னை ஒரு சித்தர் போல உருமாற்றிக் கொண்டு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார். தங்கள் ஊருக்கு புதிதாக வந்துள்ள சித்தரைக் கண்ட மக்கள் அவரது தெய்வீக தோற்றம் கண்டு பணிந்து வணங்கினர். ஜடாமுடி, பூணூல், ஸ்படிகம், ருத்ராட்ச மாலைகள் அணிந்த மார்பு, உடலெங்கும் திருநீறு, காதுகளில் மகர குண்டலங்கள், கையில் தங்க பிரம்பு, மழு என்னும் ஆயுதம், கவுபீனம் (கோவணம்), புலித்தோல் அணிந்து புன்னகை சிந்த அவர் பிரகாரத்தில் வீற்றிருந்தார். மதுரை நகருக்குள் அவ்வப்போது வலம் வந்து, பல சித்து வேலைகளை அவர் செய்தததால், மக்கள் கூட்டம் அவரைக் காண அதிகமாக கூடியது. சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே, திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார். எங்கு தேடினாலும் கிடைக்காத அவர், அந்த தெருவின் இன்னொரு பகுதியில் ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் அங்கே ஓடுவார்கள். வேடிக்கை பார்க்கும் முதியவர்களை இளைஞனாக்குவார். இளைஞர்களை முதியவனாக்கி விடுவார். ஆண்களைப் பெண்ணாக்கி விடுவார். பெண்களை ஆணாக்கி விடுவார். அது மட்டுமல்ல! ஊனமுற்றோரைக் குணப் படுத்துவார்.


பிறவியிலேயே பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், பேச முடியாதவர்களை பார்க்க, கேட்க, பேச வைத்து அதிசயம் நிகழ்த்துவார். கோடீஸ்வரர் களை ஏழையாக்கி விடுவார். ஏழைகளை கோடீஸ்வரராக்கி விடுவார். உப்பு நீரை நல்ல நீராக்கி மக்களுக்கு பயன்படச் செய்வார். பட்டமரத்தில் இலையும், பூவும் தழைக்கச் செய்து பசுமையாக்கினார். இப்படி, பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனம் கவர்ந்தார் அந்த சித்தர். மன்னன் அபிஷேகப்பாண்டியனின் காதுகளுக்கு சித்தரைப் பற்றிய அபூர்வத் தகவல் எட்டியது. அமைச்சர்களை அழைத்த மன்னன், நம் ஊருக்கு வந்துள்ள சித்தரைப் பற்றி உங்கள் காதுக்கு தகவல் எட்டியதா? மக்கள் எப்போதும் அவரைத் தான் சூழ்ந்து நிற்கிறார்களாமே! அவரைச் சந்தித்து, என்னைப் பார்க்க வரச்சொல்லுங்கள், என உத்தரவிட்டான். அமைச்சர்கள் சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு விரைந்தனர். அங்கு சித்தர் பல சித்து விளையாட்டுகளை செய்வதைக் கண்டு தங்களையும் மறந்து நின்று விட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் எல்லாம் அவரைச் சுற்றியே நின்றனர். அனைவர் வாயிலும் ஆஹா...அற்புதம்... பிரமாதம் என்ற வார்த்தைகளே வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அமைச்சர்கள் சித்தரை நெருங்கினர். மாபெரும் சித்தரே! நாங்கள் மதுரை மன்னர் அபிஷேகப் பாண்டியனின் அமைச்சர்கள். தங்கள் விளையாடல்களை அறிந்த எங்கள் மன்னர், தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார். அவர் உங்களைக் காண வேண்டுமென விரும்புகிறார்.


தாங்கள் புறப்படுகிறீர்களா! என்றனர். சித்தர் அவர்களிடம் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார். மன்னனா! யார் அவன்! அவனால் எனக்கு ஒன்றும் காரியம் ஆக வேண்டியதில்லையே! ஒருவேளை, என்னால் அவனுக்கு ஏதாவது ஆக வேண்டுமென்றால், அவன் வந்தல்லவா என்னைப் பார்க்க வேண்டும், என்றார். சித்தரின் ஆணித்தரமான பதில் அமைச்சர்களை கலங்கடித்து விட்டது. மாபெரும் முனிவர் போல் தோற்றமளித்த அந்த ஜடாமகுடரை அவர்களால் குண்டு கட்டாகத் தூக்கிப் போக முடியுமா என்ன! மேலும், அந்த சித்தர் செய்யும் அற்புதங்களைப் பார்த்தால் தங்கள் கட்டுகளை அறுத்துக்கொண்டு வர அவருக்கு எவ்வளவு நேரமாகி விடும்! அது மட்டுமல்ல! அவர் தங்களைத் தண்டித்து விட்டால் நிலைமை என்னாகும்! அவர்கள் அவரிடம் விடைபெற்று சென்று விட்டனர். அபிஷேகப்பாண்டியனை அணுகிய அவர்கள், மாமன்னரே! தங்கள் உத்தரவுப்படி சித்தரைக் காணச் சென்றோம். அவரது சித்து விளையாடல்கள் எங்களையே பிரம்மிக்க வைத்தது என்றால், சாதாரண மக்களைக் கேட்கவா வேண்டும்! அவரிடம், தங்கள் விண்ணப்பத்தைச் சொன்னோம். உங்கள் மன்னனை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என எவ்வித அச்சமும் இல்லாமல் சொல்லிவிட்டார். என்ன செய்வது? என்றனர். ஒருவேளை மன்னனுக்கு கோபம் வந்து தங்களை கையாலாகாத அமைச்சர்கள் என சொல்லிவிடுவாரோ என அவர்களுக்கு பயம். ஆனால், மன்னனின் பதில் மாறுபட்டதாக இருந்தது.