Monday, 30 January 2017

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் - நாகப்பட்டினம்


மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பெரியநாயகி

தல விருட்சம் : எலுமிச்சை

தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருஅன்னியூர்

ஊர் : பொன்னூர்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கள் கண்டீர் அன்னியூரரே. -திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 22வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 22 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.


பிரார்த்தனை

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, தயிர்சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

இரட்டை தெட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு. முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது.

ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.

தல வரலாறு:

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை - நாகப்பட்டினம்


மூலவர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை

தல விருட்சம் : கொன்றை

தீர்த்தம் : கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகமம்/பூஜை : ருத்ர வியாமளா தந்திர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருச்சாத்தமங்கை, கோயிற்றிருச்சாத்தமங்கை

ஊர் : சீயாத்தமங்கை

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

வெந்த வெண்ணீறு பூசி விடையேறிய வேதகீதன் பந்தணவும் விரலாள் உடனாவதும் பாங்கதுவே சந்தமா றங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை அந்தமாய் ஆதியாகி அயவந்தி அமர்ந்தவனே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 81வது தலம்.

திருவிழா:

ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது,


விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்) சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சன்னதிகள் உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

அடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமஸ்கந்தர், மகாகணபதி சன்னதிகளைத் தரிசித்துப் படிகளேறி உட் சென்றால் வலதுபுரம் உள்ள நீலநக்கர், அவருடைய மனைவி, நடனசுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அம்பலக்கூத்தர், அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

(சோழர் காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் ' அயவந்தி உடையார் என்று குறிக்கப்பட்டுள்ளார். திரிபுவனச்சக்கரத்தில், குலோத்துங்க சோழர், இராசராசதேவர் காலத்தியவை.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

திருநீலநக்க நாயானரின் அவதாரத் தலம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, லிங்கோற்பவர், பிரம்ம, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.

ருத்ர வியாமளா தந்திர' ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 1945ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது திருநீலநக்கர் வரவேற்று அவருடைய நட்பைப் பெற்றதும் இத்தலமேயாகும்.

தல வரலாறு:

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார்.

அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் - நாகப்பட்டினம்


மூலவர் : அமிர்தகடேஸ்வரர்

உற்சவர் : காலசம்ஹாரமூர்த்தி

அம்மன்/தாயார் : அபிராமியம்மன்

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடவூர்

ஊர் : திருக்கடையூர்

பாடியவர்கள்: அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்


சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.  - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.

திருவிழா:

எம சம்ஹாரம் - சித்திரை மாதம் - 18 நாட்கள் - மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் - 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.


தல சிறப்பு:


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். இங்குள்ள "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது. விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. இத்தலத்து உற்சவரின் திருநாமம் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

பிரார்த்தனை

சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

அங்க பிரதட்சணம் , கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும்,புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


தலபெருமை:

அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.


மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

காலசம்ஹார மூர்த்தி: மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.


தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.


எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது, எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது. சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, ""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.


தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.


சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.


தீர்த்த சிறப்பு: மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.


மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.


சதாபிஷேகம்: திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.


திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.


திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.


எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.


நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.


தல வரலாறு:

பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.

பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.

அருள்மிகு கருந்தார்குழலி சமேத சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் - திருக்கண்ணபுரம் - நாகப்பட்டினம்


மூலவர் : சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

தல விருட்சம் : புன்னை மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்புகலூர்

ஊர் : திருப்புகலூர்

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே. - திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.


திருவிழா:

வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. ஏழு சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 138 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.



பொது தகவல்:

பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


பிரார்த்தனை

வாஸ்து தோஷம் நீங்க: இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை "வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர்.


சுகப்பிரசவம் ஆக: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவிப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.


நேர்த்திக்கடன்:

திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். வெள்ளைப்புடவை வழிபாடு திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


தலபெருமை:

அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம் : அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சன்னதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.


அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார்.அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.


சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு.


கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். பிரசவம் பார்த்த காரணத்தால் சூளிகாம்பாள் என்ற பெயருடையாள். சூல் பார்த்து மருத்துவ காணியும் பெறப்பட்டுள்ளது. இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பில்லை என்று அனுபவ முறையில் அறுதியிட்டு கூறலாம். சாயரட்சை காலத்தில் ராஜ ராஜேசுவரி கோலத்தில் வெள்ளை அணிவிப்பது பழக்கமாகும் அம்பாளின் அனுக்கிரகங்களை அவ்வப்போது கண்கூடாக பார்க்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம். பூதேசுவரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர்.அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.


தல வரலாறு:

ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு "அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


வடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்ற வில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், ""ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்,'' என்றான். இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு "கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர் (திருப்பேரையூர்) - திருவாரூர்


மூலவர் : ஜகதீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி)

தல விருட்சம் : நாரத்தை மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பேரெயில், ஓகைப்பேரெயில்

ஊர் : ஓகைப்பேரையூர்

பாடியவர்கள்: அப்பர்

தேவாரப்பதிகம்

மறையும் ஓதுவார் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் நீற்றினர் பறையும் சூடுவர் பேரெயி லாளரே. - திருநாவுக்கரசர் 


தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரை திருத்தலத்தில் இது 114வது தலம்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 178 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

3 நிலை ராஜ கோபுரம், ஒரு பிரகாரத்துடன் கிழக்கு நோக்கிய கோயில். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன், துர்க்கை, லிங்கோத்பவர் ஆகிய சன்னதிகள் உள்ளன.


இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.


பிரார்த்தனை

வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரை திருத்தலத்தில் இது 114வது தலம்.இத்தலத்தில் உள்ள சபாபதி (நடராஜர்) பிற தலங்களை விட மிக அழகாக விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.


இவ்வூரில் தோன்றிய முறுவலார் என்னும் பெண்மணி பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானுற்றிலும் இடம் பெற்றுள்ளன. இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது.திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம்.


தல வரலாறு:

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர், என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.


இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர். பேரெயில் முறுவலார். பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் - திருவாரூர்


மூலவர் : வெள்ளிமலைநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பெரியநாயகி

தல விருட்சம் : தென்னை

தீர்த்தம் : சிவகங்கை

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்தேங்கூர், திருத்தெங்கூர்

ஊர் : திருத்தங்கூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின்றாடும் இறையவன் இமையவர் ஏத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றுஅமர்ந் தாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 116வது தலம்.


திருவிழா:

வைகாசி விசாகத்தன்று மட்டும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 180 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இது ஒரு சிறிய கோயில். பழமையான கோயில் என்பதால் களை இல்லை. இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும்.

ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.


பிரார்த்தனை

இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள். வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார். மகாலட்சுமியே பூஜை செய்த இடம் என்றால் கேட்கவா வேண்டும்.

சுவாமியை ரஜதகிரீஸ்வரர் என்றும் சொல்வார்கள். "ரஜதகிரி' என்றால் "வெள்ளிமலை' என பொருள். இது மேற்கு பார்த்த கோயிலாகும். மேற்கு பார்த்த கோயிலுக்கு கிழக்கு பார்த்த கோயிலை விட அதிக சக்தியுண்டு. மேற்கு சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத்தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.விழாக்கள் ஏதும் இத்தலத்தில் இல்லை. வழக்கமான பூஜைகளே நடக்கின்றன.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.


ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.


பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.

அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி , நீடாமங்கலம் - திருவாரூர்


மூலவர் : வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அழகிய நாயகி (சவுந்தர நாயகி)

தல விருட்சம் : நந்தியாவர்த்தம்

தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவெண்ணியூர், கோயில்வெண்ணி

ஊர் : கோயில்வெண்ணி

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

காற்றினைக் கனலைக் கதிர்மாமணி நீற்றினை நினைப்பார் வினைநீக்கிடும் கூற்றினை யுதைத்திட்ட குணமுடை வீற்றினைநெரு நற்கண்ட வெண்ணியே. - திருநாவுக்கரசர் 

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம்.

திருவிழா:

நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.


பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.


கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். கருவறை அகழி அமைப்புடையது.


பிரார்த்தனை

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது.


இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.


சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.


கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.


இந்த பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம்.


தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.


தல வரலாறு:

முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர். அப்போது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள். அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர்.


இறைவன் அசரீரியாக தோன்றி,""எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்,'என்றருளினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.


இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் ஆனது. தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.