Tuesday, 1 November 2016

பசுவாக மாறிய கபில முனிவர்( தேனுபுரீஸ்வரர் கோவில்)



பில முனிவரின் சாபத்தால் சகரனின் புதல்வர்கள் 60 ஆயிரம் பேர் எரிந்து சாம்பலாகிப் போனார்கள். அவர்களின் உயிர்கள் சொர்க்கம் போக முடியாமல் இருந்த நிலையில், சகரன் தலைமுறையில் வந்த பகீரதன் கடுமையான தவம் செய்து, தேவலோகத்திலிருந்த கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கச் செய்தான். 

முனிவர் எனும் உயர்நிலையில் இருந்தும், சகர புத்திரர்களுக்குப் பல தலைமுறைகளாகப் பெரிய பாதிப்பைக் கொடுத்து விட்டதை நினைத்துக் கபில முனிவர் வருந்தினார். அந்தத் துன்பத்திலிருந்து விடுபட சிவ வழிபாடு ஒன்றைச் செய்ய முடிவு செய்தார். 

சிவ வழிபாட்டிற்காகச் சிறிய அளவிலான சிவலிங்கம் ஒன்றைச் செய்த அவர், அதைத் தனது இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் மலர்களை எடுத்துத் தூவி வழிபாடு செய்யத் தொடங்கினார். சிவலிங்கத்தை இடது கையில் வைத்துக் கொண்டு அவர் வழிபாடு செய்தது சிவபெருமானுக்குப் பிடிக்கவில்லை.


சாபம்

கபில முனிவரின் முன்பாக தோன்றிய ஈசன், ‘கபில முனிவரே! சிவலிங்கத்தை இடது கையில் வைத்து வழிபாடு செய்யலாமா? இது தவறு என்று உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை நிலத்தில் நிறுவி வழிபாடு செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார். 

‘இறைவா! சிறிய அளவிலான இந்தச் சிவலிங்கத்தை என்னுடைய கையில் வைத்து வழிபடுவதில் எனக்குத் தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்தச் சிவலிங்கத்தை நிலத்தில் நிறுவி வழிபட எனக்குச் சிறிதும் விருப்பமில்லை’ என்றார் கபில முனிவர்.

‘முனிவரே! சிவலிங்கத்தை நிலத்தில் நிறுவிதான் வழிபாடு செய்ய வேண்டும். தங்கள் கைகளில் அடக்கி வைத்துக் கொண்டு தவறாக வழிபாடு செய்ய வேண்டாம்’ என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தினார் ஈசன்.

ஆனால் முனிவரோ, ‘பரந்த நிலத்தில் இருப்பதை விட, முனிவரான என் கைகளில் இருப்பதால், இந்த சிவலிங்கத்துக்கு மேலும் சிறப்பு கிடைக்குமே தவிர, இழுக்கு எதுவும் வராது. என்னை இப்படியே வழிபடத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார்.    

அதைக் கேட்டு சிவனுக்கு கோபம் வந்தது. ‘இந்தப் பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான என்னை, உன் ஒருவன் கைக்குள் கட்டுப்படுத்தி வழிபட நினைப்பது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா? இந்தத் தவறுக்கு என்னிடம் தனியாக அனுமதியும் கேட்பதா? இறை வழிபாட்டுக்கான நடைமுறைகள் அனைத்தும் அறிந்த நீ, அதைக் கடைப்பிடிக்காமல் செய்த தவறுக்குத் தண்டனையாக, இந்தப் பூமியில் பசுவாய்ப் பிறந்து துன்பமடைவாய்’ என்று சாபமிட்டார்.

இறைவன் சாபம் கொடுத்த பின்புதான், கபில முனிவருக்கு தன்னுடைய தவறு புரிந்தது. ‘இறைவா! நான் செய்த தவறை உணர்ந்து கொண்டேன். தாங்கள் எனக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்று என்னைக் காத்தருளுங்கள்’ என்று வேண்டினார்.

‘சாபத்தைத் திரும்பப் பெற்றால், உன்னுடைய தவறுக்குத் தண்டனையே இல்லாமல் போய் விடும். என் சாபத்தினால், இந்தப் பூமியில் பசுவாகப் பிறந்து வாழ்ந்து வரும் உன்னை, உரிய நேரத்தில் சாபத்திலிருந்து விடுவிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான்.


விமோசனம்

சிவபெருமான் கொடுத்த சாபத்தின்படி கபில முனிவர், ஒரு வீட்டில் பசுவாகப் பிறந்தார். கன்றாக இருந்தபோது அந்தப் பசு மிகவும் அழகாக இருந்தது. இந்நிலையில் ஒருநாள், அந்தக் கன்றுக்குட்டி அழுதபடியே தனது தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது. அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டது.

உடனே அந்த கன்று, ‘அம்மா! இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. அதற்கு என் அழகு இல்லை. அது மிகவும் கருப்பாக இருக்கிறது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் அன்போடு விளையாடுகிறான். அதற்குப் பசுமையான புல்லைத் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்றையும் கட்டி அழகு படுத்தியிருக்கிறான். ஆனால், அவன் என்னை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. நான், இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்ன குறை இருக்கிறது?’ என்று சொல்லியபடி மீண்டும் அழத் தொடங்கியது.

அதைக் கேட்ட தாய்ப்பசு, ‘கண்ணே! இதற்காகவா வருத்தப்படுகிறாய்? அதிக மரியாதையும், அதிக இன்பமும் மிகவும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப்படாதே. அந்த ஆடு அடையும் நலமும், வளமும் அதன் அழிவிற்குத்தான். அதன் நிலையைக் கண்டு, நாம் இரக்கப்பட வேண்டுமே தவிர, பொறாமைப்படக்கூடாது’ என்று அறிவுரை சொன்னது.

சில மாதங்கள் கடந்தன. அந்தக் கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது. தாய்ப்பசு அதன் அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.

‘அம்மா! இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்குச் சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டிப் பாத்திரத்தில் போட்டுச் சமைக்க எடுத்துச் சென்றார்கள். அதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது’ என்று கூறி தேம்பித் தேம்பி அழுதது.

‘கண்ணே! மாலை, மரியாதைகள், புகழ்ச்சிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்’ என்றது தாய்ப்பசு.

சில காலம் கடந்ததில் கன்று வளர்ந்து பசுவாகி விட்டது.

இந்த நிலையில் அந்த வீட்டுக்காரன் தான் வளர்த்துக் கொண்டிருக்கும் ஆடு, மாடுகளுடன், அந்தப் பசுவையும் தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினான். மேய்ச்சலுக்காகச் சென்ற அந்தப் பசு ஒருநாள், அங்கிருந்து வழி தவறிச் சிறிது தூரம் சென்று விட்டது. ஓரிடத்தில் குவிந்து கிடந்த மணலைத் தனது கொம்பு களால் குத்தியும், கால்களால் இழுத்தும் கிளறியது.

அப்போது, மண்ணுக்குள் இருந்து சிறிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அதைப் பார்த்ததும் அந்த பசுவுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து தனது கூட்டத்தை கண்டுபிடித்து அவற்றோடு சேர்ந்து கொண்டது.

அதன் பிறகு, அந்தப் பசு மேய்ச்சலுக்குச் செல்லும் போதெல்லாம், தனது கூட்டத்தை விட்டுத் தனியே பிரிந்து சென்று, அந்தச் சிவலிங்கம் புதைந்து கிடக்குமிடத்தில் தனது பாலைச் சுரந்து மகிழ்ச்சியடைவதும், பின்னர், அங்கிருந்து திரும்பி வந்து தனது கூட்டத்துடன் சேர்ந்து விடுவதுமாக இருந்தது.

ஒரு நாள் இந்த நிகழ்வை மேய்ச்சல்காரன் கண்டுகொண்டான். பாலை வீணாக்கும் பசுவின் மீது அவனுக்கு கோபம் வந்தது. ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டு போய் பசுவை அடித்தான். பசு வலி பொறுக்க முடியாமல், சிவலிங்கத்தை சுற்றிச் சுற்றி வந்து அழுதது. அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், பசுவின் மீது தனது கையை வைத்தார். பசு, கபில முனிவரின் உருவத்தைப் பெற்றது. 

சுயஉருவம் பெற்ற கபில முனிவர், தனக்குச் சாப விமோசனமளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர், ‘இறைவா! எனக்குச் சாப விமோசனமளித்த இந்த இடத்தில் தாங்கள் கோவில் கொண்டு, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்து அங்கிருந்து மறைந்தார். 

தான் செய்யும் எந்தச் செயலையும், அதற்கான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றிச் செய்ய வேண்டும். தனக்கு ஏற்றதாகச் செய்கிறேன் என்று அதை மாற்றிச் செய்யும் போது, அது தவறாகப் போய்விடுவதுடன், பெரியவர் களின் கோபத்துக்கும் ஆளாகித் துன்பமடைய வேண்டியதாகி விடுகிறது என்பதையே கபில முனிவர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன. 


தேனுபுரீஸ்வரர்  கோவில்

சென்னையில் மாடம்பாக்கம் என்னும் இடத்தில் கபில முனிவர் சாப விமோசனம் பெற்ற கோவில் இருக்கிறது. கபில முனிவர், பசு வடிவில் இத்தல இறைவனை வழிபட்டதால், இங்குள்ள இறைவன் தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். (தேனு என்பதற்கு பசு என்று பொருள்). இந்த ஆலய கருவறையில் மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவிலான சிறிய சிவலிங்கம் மூலவராக உள்ளது. இது கபில முனிவர் தன் கையில் வைத்து வழிபட்ட சிவலிங்கம் என்று கூறப்படுகிறது. இந்தச் சிவலிங்கத்தில் பசு மிதித்த கால் தழும்பும், கல்லடிபட்ட பள்ளமும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலயத்தின் தல தீர்த்தம், ‘கபில தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆனந்தத் தாண்டவம் கண்ட ஆதிசேடன்

நந்தி தீர்த்த தலம்!

பழைமை வாந்த பல கோயில்களுக்குப் பெயர் பெற்ற ஊர் பெங்களூரூ, மல்லேஸ்வரம். குறிப்பாக, சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை, ‘கோயில் தெரு’ என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும், காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி, கங்கம்மா தேவி கோயில் களுக்கு நேர் எதிரே, வெற்று நிலமாகக் காட்சியளித்த இடத்தில் பதினேழு வருடங்களுக்கு முன்பு பூமிக்குள் புதைந்திருந்த ஒரு நந்தீஸ்வரர் கோயில் கண்டுபிடிக்கப் பட்டது.
1999ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, ஒரு இடத்தின் உள்ளே மண் நெகிழ்வாக இருக்க, வியப்புடன் மேலும் தோண்டத் தோண்ட, பரபரப்பு... பிரமிப்பு... விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளியே வந்தது, ‘தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கே்ஷத்ரம்’என்றழைக்கப்படும் இந்த நந்தீஸ்வரர் ஆலயம்.

சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த இக்கோயிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும், சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. Carbon dating முறையில் கோயிலுக்கு ஏழாயிரம் வயது இருக்கலாம் எனக் கருதுகிறார்கள் தொல்லியல் ஆவாளர்கள். பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ர பதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லே, திராவிடக் கட்டடக் கலையைப் பின் பற்றி எழுப்பிய கோயில், சாலைக்கு மறு புறமிருக்கிறது காடு மல்லேஸ்வரர் ஆலயம். நந்தி தீர்த்த கோயிலும் இந்தக் காலத்திலேயே அவரால் கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பது ஒரு அனுமானமாக இருந்து வருகிறது.

பன்னெடுங்காலமா மண்ணில் புதைந்திருந்தாலும் அழகு குன்றாமல் பொலிவுடன் திகழ்கிறது. பழைமையான கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகான முற்றம். நடுவே படிக்கட்டுகளுடன் கல்யாணி தீர்த்தம். வழுவழுப்பான கருங்கல்லில் பொன் வண்ணத்தில் தீட்டப்பட்ட கண்களோடு வடிவாகச் செதுக்கப்பட்ட நந்தி. நந்திக்குச் சற்றே சரிந்த நிலையில் அதே பளபளப்பான கருங்கல்லில் சிவலிங்கம்.


காண்போரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் கட்ட மைப்புடன், நந்தியின் வாயிலிருந்து தெள்ளிய நீர், அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் மேல் தொடர்ந்து விழுந்து அபிஷேகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது செம்பினால் ஆன பெரிய தாரா பாத்திரத்தில் இந்த நீர் விழுந்து, அதன் கீழுள்ள துளை வழியாக சிவனை அபிஷேகம் செவது போல் அமைத்துள்ளார்கள். தொடர்ந்து தமக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் உளம் குளிர்ந்து மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் சிவபெருமான்!


சிவபெருமான் மேல் தொடர்ந்து விழுகின்ற நீர் படிக்கட்டுகள் வழியாகச் சென்று முற்றத்துத் தீர்த்தத் தில் சேகரமாகிறது. தீர்த்தத்தின் மத்தியில் 15 அடி ஆழம் கொண்ட நீர்ச்சுழல் ஒன்றும் உள்ளது. எங் கிருந்து நீர் வருகிறது? எவ்வண்ணம் அது நந்தியின் வாவழி சிவலிங்கத்தின் மேல் பொழிகிறது? எப்படி அத்தீர்த்தத்தில் சுழல் உண்டாகிறது? சுழல் வழியாக நீர் எங்கே செல்கிறது? வடிவமைத்த திறன்மிகு சிற்பி யார்? என்பன யாவும் இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.


தீர்த்தத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடக் கிறது. வேண்டும் பக்தர்களுக்கு அபிஷேக நீர் பாட்டில்களில் சேகரித்துத் தரப்படுகிறது. இப்புனித நீரை அருந்துவதால், நோவாப்பட்டவர் மேல் தெளிப்பதால், தீராத நோகள் தீருகின்றன என்பது பக்தர்களின் அனுபவக் கூற்று. சிவபெருமானை நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியின் காதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் சோல்லிச் செல்கிறார்கள். கோயிலுக்குள் இருக்கும் இரு நந்திகளோடு, கோயி லின் வாயிலில் மற்றும் சுற்றுச் சுவர்களில் எங்கெங்கும் நந்தி தேவரே காணப்படுகிறார்.

கோயிலுக்கு மேலே சற்றுத் தொலைவில் இருக்கும் சாங்கி ஏரியிலிருந்து நீர் வருகிறதோ எனும் அனுமானம் இன்னும் உறுதி செயப்படவில்லை. இங்கு மகா சிவராத்திரியன்று சிறப்புப் பாலபிஷேகம் நடைபெறு கிறது. தரிசனம் முடித்து, அமைதியான சுற்றுச் சூழலை ரசித்தபடி திரும்பிச் செல்ல மனமின்றி படிக் கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து விடுகிறார்கள். குடும் பத்துடன், நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து களிக்கிறார் கள். பெங்களூரு வருபவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம் நந்தீஸ்வரர் திருக்கோயில்.

தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்




மூலவர் : ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என
இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில்
அருள்பாலிக்கிறார்கள்





அம்மன்/தாயார் : இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.


தல விருட்சம் : சரக்கொன்றை

தீர்த்தம் : தேவ, பானு, சிம்ம தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : அச்சுஇறுபாகம், அச்சிறுபாக்கம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் – 1 பதிகம், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர்தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது
ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்த எம்மடிகள் அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே. 
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29வது தலம்.

தல சிறப்பு:

ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார்.

சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்களாக இருக்கின்றனர்.

உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும்.


பொது தகவல்:

சிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும்.

தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர்

அச்சுமுறி விநாயகர்


ராஜகோபுரம்: ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.

திருமண வரம் 
இங்கே இருக்கும் உமையாட்சி செய்த இறைவனிடம் வணங்கி வழிபட்டால் திருமணத் தடைகளும், குழந்தை இன்மை போன்ற குறைகளும் நீங்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

வெளியே வந்தவுடன் வலக்கை பக்கமாக நின்ற நிலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரு சன்னிதியிலும், அதை அடுத்து அமர்ந்த கோலத்தில் அலர்மேலு மங்கை தாயாரும் காட்சி தருவது கண்கொள்ளாச் சிறப்பாகும்.

இங்கே விநாயகர், முருகப் பெருமான், பழநி ஆண்டவர், சரஸ்வதி, லட்சுமி, சப்தமாதர்கள், அறுபத்து மூவர், பரவையார் சங்கிலியாருடன் சுந்தரமூர்த்தி நாயனார், நடராச சபை, பைரவர் சூரியன், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் ஆகிய மூர்த்தங்கள் மற்ற சிவாலயங்களைப் போலவே சிறந்து விளங்குகின்றன. 



பிரகாரம் சுற்றி வரும்போது, வடக்கு வெளியில் மஞ்சள் நிறத்துடன் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கி மங்களகரமாக நிற்கும் சரக் கொன்றை மரம் இருக்கிறது. இதுதான் தலவிருட்சம் அடியில் கொன்றை ஈசுவரர் இருக்கிறார்.

கண்ணுவ முனிவரும், கவுதம முனிவரும் வழிபட்ட பெருமைக்குரிய இத்தலத்தில் சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன. ஒரே கோவிலில் விளங்கிக் கொண்டு வாழ்க்கைச் சிறப்பும், பதவி சிறப்பும் ஆகிய இரு நலம் தரும் இறைவனைப் பிரார்த்திப்போம். 

சீனிவாசர்

பிரார்த்தனை:

ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை.

இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.

தலபெருமை:

கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர்.

விலகிய கோபுரம்: 

பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது.
பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான்.
உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது.
காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.
உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான்.

எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை.
அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார்.

அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.
அப்போது அங்கு "திரிநேத்ரதாரி' எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.

தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான்.
நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார்.

(இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).



புரியாத மன்னன் காரணம் கேட்டான். ""உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார்.
எனவே, உங்களுக்கு காட்சி தந்த "உமை ஆட்சீஸ்வரருக்கு' பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், "எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு' பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன்'' என்றார் திரிநேத்ரதாரி.
மன்னனும் ஏற்றுக்கொண்டான்.

சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம்.
திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது.

ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது.
பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார்.

இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.

அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகராக' கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார்.

அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு ""அச்சிறு பொடி செய்த'' என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார்.

புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால்
அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:


பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர்.அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார்.

எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி.சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும்.

ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை
நினைக்காமல் சென்றார் சிவன்.

அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.
கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார்.தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.

தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார்.
பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார்.

தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் "அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "அச்சிறுப்பாக்கம்' என்றானது.
சிவன் "அட்சீஸ்வரர்' என்றும், "ஆட்சிபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.




சிவ பூஜை


சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?   சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும்  சிவனுக்கு தனி உருவம் கிடையாது.  அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது. 

சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது  ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள்.  தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட  தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் 'சலன லிங்கம்' என்பதாகும்.

மூன்றாவது  வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் 'அசலசல லிங்கம்' ஆகும்.
 
நான்காவது வகை 'சலாசல லிங்கம்' எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.
சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை  ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி  ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே  பூஜைகளை செய்யத்  துவங்க  வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு.

சிவ பூஜை செய்யும்போது பூஜையில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து என ஒற்றைப் படையிலேயே சிவலிங்கங்களை வைத்து அவற்றுக்கு பூஜைகளை செய்ய   வேண்டும். இரண்டு, நான்கு போன்ற இரட்டை இலக்கில் லிங்கங்களை வைத்து பூஜித்தால் அது வியாதிகளை தரும், மன வலிமையை தளர்த்தும் என்பார்கள்.

அடுத்தது  ஆலயங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிவ வழிபாட்டு முறை. சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட ஏதும் விதி முறைகள் உள்ளனவா என்றால், உண்டு என்பதே சரியான பதில் ஆகும்.  வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா, முடியாதா என்பது இரண்டாம் பட்ஷம். ஆனால் ஞான மார்கத்தை அடைய நினைப்பவர்கள் உறுதியோடு இருந்தவாறு வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை கடைபிடிப்பார்கள்.  வாழ்க்கையில் மேன்மை அடைய நினைப்பவர்கள், அவற்றில் கூறப்பட்டு உள்ள சிலவற்றையாவது முடிந்தவரை  கடை பிடிக்கலாம்.

ஆலயங்களில் சென்று நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ள பழக்கம் ஆகும். வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்துள்ளது.  நமஸ்காரம் செய்வதில் எப்படிச் செய்ய வேண்டும், எவ்வளவு தடவைகள் செய்ய வேண்டும் என்று நியதிகள் உள்ளன. நமஸ்காரத்தை சிவன்  ஆலயத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்றும் சிவ விதிகளில் கூறப்பட்டு உள்ளன.

சிவன் ஆலயங்களுக்கு செல்பவர்கள் தூரத்தில் இருந்தே தென்படும் தூல லிங்கம் எனப்படும் கோபுர உச்சியை கண்டதும் தமது இரு கைகளையும்  தலைக்கு மேலே தூக்கி வைத்து இருகரம் கூப்பி வணங்கிட வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்தாலும் சரி, முடிந்தவரையில் அதை செய்யலாம். வாகனத்தை தாமே ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் சாலையை விட்டு அகன்று ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு அதை செய்ய வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

அந்த காலங்களில் ஆலயத்துக்கு செல்பவர்கள் நடந்தே சென்று வந்தார்கள் என்பதினால் தூரத்தில் இருந்தே ஆலயத்தைப் பார்த்த உடன் தமது  சிரஸ் மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கினார்கள். ஆனால் தற்காலத்தில் வாகனங்களில் செல்பவர்களால் அப்படி செய்ய இயலவில்லை என்பதினால் அதை விட எளிதான வழியாக ஆலயத்தை சென்று அடைந்ததும் ஆலயத்துக்கு உள்ளே நுழையும் முன் ஆலய கோபுரத்தை பார்த்ததும்  தலை மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கலாம்.  தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது 'மூன்றங்க நமஸ்காரம்' எனப்படுகிறது. அதாவது கைகள், தலை மற்றும் மனதை ஒன்றிணைத்து செய்யப்படும் மூன்று அங்க நமஸ்காரம் ஆகும்.

அதன் பிறகு ஆலயத்துக்குள் சென்றதும் பலிபீடத்துக்கு பின்புறத்தில் இருந்து ஆண்டவனை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். ஒரு வேளை சிவன்  சன்னதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருந்தால் வடக்கை நோக்கி தலையை வைத்து வணங்கிட வேண்டும்.

அது போல தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதிகளில் கிழக்கு நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும் காமம், இச்சை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் போன்ற எட்டு தீய குணங்களையும் ஆலய சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி தருவது போல அங்கேயே அழித்து விட்டு 'உன்னிடம் வருகிறேன் இறைவா, எனக்கு நீயே அருள் புரிய வேண்டும்' என வேண்டிக் கொள்ளும் இடம் ஆகும்.

சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி  பீடத்தின் அருகில் பூமியிலே வீழ்ந்து நமஸ்கரிப்பதின் மூலம் எந்த நலனையும் அடைய முடியாது. அங்கு நமஸ்கரித்து தனது அனைத்து தீய  எண்ணங்களையும் அங்கேயே பலி கொடுத்தப் பின் மனதின் ஆணவத்தை பலியிட்டப் பின் மனதில் மிஞ்சி நிற்கும் எண்ணங்கள் மிஞ்சி நிற்கும் அந்த மேன்மையான நேரத்தில்தான் சன்னதிக்குள் சென்று ஆண்டவனை தரிசிக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் அனைத்து  இடங்களிலும் நமஸ்கரிப்பது சரியல்ல. கோயில் கர்ப்பக்கிரகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால், கொடி மரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கர்ப்பக்கிரகம்  தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ பார்த்தபடி இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கொடிமரத்திற்கும் தெய்வ சன்னதிக்கும் இடைபட்ட பகுதியில் நமஸ்கரிக்கக் கூடாது.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது சிறந்தது.  தலை, இரண்டு கைகள், முகம் போன்றவை, ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குதல் 'அஷ்டாங்க நமஸ்காரம்' எனப்படும்.

அதைப் போலவே பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' செய்ய வேண்டும்.  கை இரண்டும், தலையும் மற்றும் முகமும் பூமியில் தொட்டிருக்க முழங்கால் முட்டி இரண்டும் மட்டும் தரையில் படுமாறு இருந்தபடி முழங்கால் போட்டபடி நமஸ்கரிக்க வேண்டும். ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல் உடம்பை குறுக்கிக் கொண்டு நமஸ்கரிப்பதின் மூலம் ஸ்த்ரீகள் வளைந்து கொடுக்கும் குணமுள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக  இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அந்த வகையிலான நமஸ்காரம் ஒரு உருவகமாக அமைந்து  இருக்கிறது.  மேலும் தலை, கைகள் மற்றும் முழங்கால் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு இருந்தவாறு நமஸ்கரிப்பது நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மண வாழ்க்கையையும் தரும் என்பது ஐதீகம்.

அது போலவே வியாதிஸ்தர்களினால் கீழே விழுந்து வணங்க முடியாமல் இருக்கலாம். அப்படி என்றால் அவர்கள் ஆலயத்தில் எப்படி நமஸ்கரிக்க வேண்டும்? கீழே விழுந்து நமஸ்கரிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து கரம் குவித்து வணங்கிட வேண்டும். அதை 'த்ரியங்க நமஸ்காரம்' என்பார்கள். இந்த முறையிலான நமஸ்காரத்தை ஆண்கள், பெண்கள் என இருவருமே செய்யலாம். சிவபெருமானும் அதை மனப்பூர்வமாக ஏற்கிறார். சிவ கடாட்சம் முழுமையாக கிடைக்க இந்த மாதிரியான நமஸ்காரங்களை  செய்யலாம் என்பதும் சிவ விதியில் கூறப்பட்டு உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் அவசர வேலையாக வெளியில் போக வேண்டும் என்றாலும் கூட சிவன் சன்னதியில் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுதும்,  நெய்வித்தியம் படைக்கப்படும் போதும்  நமஸ்கரிக்கலாகாது.

அடுத்து சன்னதியை பிரதர்ஷனம் செய்யும் முறை. சாதாரணமாக சன்னதியை ஒருமுறை மட்டுமே பிரதர்ஷணம் செய்து விட்டு பலர் ஆலயத்தில் இருந்து வெளியேறிச் செல்வார்கள். ஆனால் அது சரியான முறை அல்ல. சன்னதியை மூற்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை பிரதர்ஷணம் செய்ய வேண்டும். பிரதர்ஷணம் செய்ய எண்ணம் இல்லாவிடில் சன்னதியை நோக்கி நின்று வணங்கிய பிறகு அப்படியே திரும்பி வந்து விட வேண்டும்.

பிரதர்ஷணம் செய்து முடித்தப் பின் சண்டிகேஸ்வரர் சன்னதிக்குச் சென்று மூன்று முறை கைகளை தட்டியோ அல்லது கைவிரல்களினால் சொடுக்கி சப்தம் எழுப்பியப் பிறகுதான் திரும்ப வேண்டும். தற்காலத்தில் சிலர் சண்டிகேஸ்வரர் சன்னதியில் சென்று சப்தம் எழுப்பக்கூடாது என்ற வாதத்தைக் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆலயங்களில் பைரவர் எப்படி விழித்திருந்து தாம் உள்ள சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவாரோ, அது போலவேதான் சண்டிகேஸ்வரர் சிவபெருமான் சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவது மட்டும் அல்லாமல் அங்கு வருபவர்களின் வரவை தன்னிடம் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். அவரை தட்டி எழுப்பும் வகையில் எழுப்பப்படும் சப்தம் அவர் சன்னதியில் மணி ஓசையை எழுப்புவதற்கு சமமானது. மற்ற சன்னதிகளில் உள்ளதைப் போல அவரது சன்னதியில் ஆலய மணி தொங்க விடப்பட்டு இருப்பது இல்லை என்பதினால் மணி ஓசை எழுப்புவதைப் போல கைகளினால் சப்தம் போடுகிறார்கள்.

சிவபெருமானின் பூஜை மற்றும் விரதங்களில் மேன்மையானது பிரதோஷ பூஜை ஆகும். சிவபெருமானுக்கு எவர் ஒருவர் பூஜை செய்யவில்லையோ, பூஜை செய்ய முடியாத நிலையில் உள்ளாரோ அவர்கள் வேறு எந்த பூஜையயுமே செய்யத் தேவை இல்லை. பிரதோஷ தினத்தன்று சிவன் ஆலயத்துக்குப் போய் சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசனம் செய்து வணங்கினால் போதும். சிவபெருமானுக்கு பூஜை செய்த பலன் அனைத்தும் கிடைத்து விடும். தோஷம் என்றால் குறை உள்ளது என்பதான அர்த்தம். பிரதோஷம் என்றால் குறை அற்றது என்பது பொருள் ஆகும்.  ஆகவேதான் குறை இல்லாத அந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும்.  அதுவும் சனிக்கிழமைகளில் வரும் சனி பிரதோஷம் தனிப் பிரதோஷமாக   கருதப்படுகிறது. அதன் காரணமும் பிரதோஷ பூஜை துவங்கியதின் காரணமும் இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருமுறை தேவலோகத்தில் கைலாயத்தின் சபையில் அனைத்து கடவுட்களும், தேவர்களும் கூடி இருந்த போது  அங்கு நடனமாடிய ஒரு தேவ கன்னிகையின் நடனத்தை மெச்சிய  விஷ்ணுவானவர்,  வேண்டும் என்றே தனது மனைவி லஷ்மியைப் பார்த்து அந்த கன்னியின் நடனத்தை பெருமளவு புகழ்ந்து பேசி, அவளுக்கு லஷ்மி போட்டிருந்த மாலையை பரிசாகத் தருமாறு அவளுக்கு சைகை காட்டினார். அதைக் கவனித்து விட்ட பார்வதி தேவி லஷ்மியை முந்திக் கொண்டு உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை  கயற்றி அந்த நடனமாடிய மங்கைக்கு பரிசாகத் தந்தாள். அப்படி விஷ்ணு பகவான் செய்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் கன்னிகையும் அதை மெத்த மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் துர்வாச முனிவரை சந்திக்க நேரிட்டது. அவள் கையில் இருந்த அற்புதமான மாலையின் அழகில் மயங்கி அதை தனக்கு பரிசாகத் தருமாறு கேட்டார். அவளும் தயங்காமல் அதை அவருக்கு தந்தப் பின் அந்த மாலை தனக்குக் கிடைத்தக் கதையையையும் மகிமையையும்   கூறினாள்.

அப்போது இந்திரனக் காணச் சென்று கொண்டு இருந்த துர்வாச முனிவர் இந்திரனுக்கு என்ன பரிசை கொண்டு செல்லலாம் என எண்ணிக் கொண்டு செல்கையில் அந்த தேவ கன்னிகை மூலம் கிடைத்த மாலையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை கொண்டு போய் தேவேந்திரனிடம் தந்தார். அந்த மாலையின் மகிமையைக் கூறும் முன்னரே இந்திரன் தனது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஐராவதத்தின் தும்பிக்கை   மீது அந்த மாலையை வைக்க, அந்த யானையும் அதை கீழே தள்ளி காலால் மிதித்து துவம்சப்படுத்தியது. அதைக் கண்ட துர்வாச முனிவர் பெரும்  கோபம் அடைந்தார். தான் தந்த மாலை, அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருந்து கிடைத்த மாலையை இந்திரன் அவமானப்படுத்துவதா என்ற சினம் கொண்டார். இந்திரனுக்கு அவன் சக்திகளும் செல்வங்கள் அனைத்தும் அழியட்டும் என சாபமிட்டார். அதைக் கேட்ட இந்திரனும் தேவர்களும் வெலவெலத்துப் போய் துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கூறுமாறு அவரிடம்  வேண்டினார்கள். துர்வாச முனிவரும் சினம் அடங்கியதும், அவர்கள் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து வெளிவரும் அமிர்தத்தைப் பருகினால் மட்டுமே அந்த சாபம் விலகும் என தெளிவுபடுத்தினார்.

பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து உண்ண வேண்டும் என்ற விதிக்கான ஒரு பின்னணிக் காரணம் உண்டு. அது துர்வாச முனிவருக்கும் தெரியாது. ஏன் எனில் அது பரமேஸ்வரரின் திருவிளையாடல் ஆகும். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பல காலத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சம்பவமே அதற்க்குக் காரணம் ஆகும்.

ஒரு கட்டத்தில் அசுரர்கள் பலம் அதிகரித்து  தேவர்களின் அழிவு  துவங்கும். அந்த வேளையில் தேவலோகத்தின் பெருமையை வெளிப்படுத்தி, மும்மூர்த்திகளின் அவதாரகணங்களான  தேவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை அழிவில் இருந்து காக்க  வேண்டும்  என்பதற்காக  பரப்பிரும்மன்  பிரபஞ்சத்தை படைத்தபோதே தமது சக்தி கொண்ட  சிறிய  உருண்டையை  பாதாளத்தின் அடியில் ஒளித்து  வைத்திருந்து  அதைப் பாதுகாக்க அதன் மீது கொடிய  விஷத்திலான படுக்கையையும் அமைத்து இருந்தார். அதை  ஸ்வாசித்தாலே போதும்,  மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டது அந்த நஞ்சு. பூமியின் அடிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு கீழே பாதாள லோகம் உள்ளது. பல யோசனை தூரம் விரிந்து படந்துள்ள அந்த பாதாள லோகத்தின் அதிபதியே வாசுகி எனும் நாகம் ஆகும். அங்கு லட்ஷக்கணக்கில்  நாகங்கள் வசித்து  வந்தன. அந்த பாதாளத்தில் யாராலுமே புக முடியாது. அதனால் நாகங்களால் அந்த அமிர்தமும் அவைகளுக்கு தெரியாமலேயே பாதாளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தன. அப்படி ஒளித்து   வைக்கப்பட்டு இருந்த  அமிர்தத்தை   வெளியில் எப்படி எடுப்பது ? அது  பிற்காலத்தில் மும்மூர்த்திகள் மூலமே  வெளிப்பட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தி இருந்ததினால் அதற்கான வேளை வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் நடைபெறலாயின.

அதற்காக நடந்த அந்த நாடகத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும்  அமிர்தத்தை எப்படி வெளியில் எடுக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை குறித்துப் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அமிர்தத்தை வெளியில் எடுக்க விஷ்ணு தக்க ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் அது வெளி வருவதற்கு முன்னால் அமிர்தத்தின் மீது ஒரு கேடயம் போல படர்ந்திருந்த விஷத்தை வெளியில் எடுக்க வேண்டும். அதை  ஸ்வாசித்தாலே போதும்,  மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டிருந்த அந்த நஞ்சு  உலகெங்கும் பரவினால் அனைவருமே மரணம் அடைந்து விடுவார்களே என்ற அந்தக் கவலையை தன்னிடம் விட்டு விடுமாறு சிவபெருமான் விஷ்ணுவிற்கு  தைரியம் அளித்தார்.  அந்த விஷத்தன்மையை தடுப்பது தன் பொறுப்பு என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்தான் பரமாத்மனின் அவதாரமாயிற்றே !

அத்தனைப் பெரிய பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுப்பது தேவர்களால் மட்டுமே முடியாத காரியம் என்பதினால், அமிர்தத்தின் தன்மையைக் கூறி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்க அசுரர்களில் உதவியையும் பெறுவதற்கு கிருஷ்ணர் உருவில் இருந்த விஷ்ணு யோசனைக் கூறி அசுரர்களிடம்  நயவஞ்சகமாகப் பேசி  அதையும் நிறைவேற்றித் தந்தார்.  மந்தார  மலையை  மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, மத்து சுழலும் மேடையாக  விஷ்ணுவே கூர்மாவதாரம் எடுத்து  கடலுக்குள் அமர்ந்து கொள்ள  பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்கும் பணி துவங்கியதும் அந்தக் கொடிய விஷம் முதலில் வெளியில் வர அதை சிவபெருமான் தன கையில் ஏந்தி உண்டு தனது தொண்டையில் அடக்கிக் கொள்ள, மீண்டும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மீட்டுக் கொடுத்து அவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்தார்.
தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி  மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான்  அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை  உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். 


விஷத்தை தனது தொண்டையில் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்த சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப்  பின் அனைவரையும் ரட்சிக்கும் விதமாக தனது வாகனமான நந்தியின் மீது ஏறிக் கொண்டு அதன் இரு கொம்புகளுக்கும் இடையே நின்றபடி அற்புதமான நடனம் ஆடினார். அப்போது அதைக் கண்டு களித்த அனைவருக்கும் பேரானந்த மன அமைதியும், ஆனந்தமும் கிடைத்தது. அது மட்டும் அல்லாமல் சிவபெருமானின் பரிபூரண ஆசியும் கிடைத்தது.  அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் இடையே வருகின்ற திரயோதசித் திதியாகும். அது நடைபெற்ற நேரமோ  சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் அதன் பின்னர் வந்த  மூன்றே முக்கால் நாழிகையாகும். அதனால்தான் முன்னரே கூறியது போல தோஷமற்ற  பிரதோஷ காலத்தில்  சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.   

எந்த ஸ்வாமி  சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து  துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.  அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது.  இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம்  என்றும் கூறுவது உண்டு.


பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன?  ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவபெருமானை  நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம்  வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த  பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று  கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி  மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதைதான் கோமுகம் என்பார்கள்.  பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக்  கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும்.
 
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும். அப்போதுதான் அவர் நீங்கள் எத்தனை முறை சிவனை வலம் வந்துள்ளீர்கள் எனும் கணக்கை அவருக்கு தெரிவிப்பாராம்.  இதுவும் ஐதீகம்தான்.  இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்கும் இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.

சிவகவசம் - 2


 
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,

துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்

தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த

மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க

(பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் )


குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்

தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்

நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய

விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.


(ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழிய, பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே காத்து அருள வேண்டும். )


கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்

அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்

இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்

தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க

(பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட யுக முடிவில், அனைத்து உலகத்தையும் தெய்வீகத் தீயினால் பொசுக்கி அவற்றால் உன் மேனியில் திருநீர் எனும் அரிதாரம் பூசி நிற்கையில், பார்வதி தேவியார் தாளம் போட, அதில் மயங்கி நடனமாடும் சிவபெருமானே, வளைந்து வளைந்து வந்து தீ போன்ற வெப்பம் தரும் சூரைக் காற்றினால் உன் வரவு தடைபடாமல் இருக்க, பெரும் கடல்போல உள்ள இவ்வுலகில் எம்மைக் காத்தருள வேண்டும்)


தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்

பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்

மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்

ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க

(தூய்மையான மூன்று கண்களையும், சுடர்விட்டு எரியும் பொன்னிறம் போன்ற நான்கு திருமுகங்களையும் கொண்டவரே, பாயும் மானைப் போன்ற மழுவாளினையும் (ஒருவித ஆயுதம்), வரத மற்றும் அபய முத்திரைகளையும் காட்டும் நான்கு புஜங்களையும் (கைகள்), மின்னலைப் போல ஒளிவிடும் மேனியையும் கொண்டவருமான தத்ரூப புருஷரானவரே, கிழக்கு திசையில் நின்றவாறு என்னைக் காத்திடுவீர்)


மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை

கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை

நான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே

ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க

  
(பாயும் மானைப் போன்ற மழுவாள், சூலம், கோடரி போன்றவற்றுடன் ருத்திராக்ஷ மாலை, கூனனைப் போல வளைந்து நிற்கும் அங்குசம், தீ, தமருகம் (டமாரம்) போன்றவற்றை ஏந்திய சிவந்த கைகளுடன், மூன்று கண்களை கொண்ட நான்கு திருமுகங்களுடன் காட்சி தருபவரே, கருநீல நிறத்திலான எருதின் மீது அமர்ந்து உள்ள ஐம்முகத்துள் ஒன்றான அகோர முகத்தைக் கொண்டவரே, தெற்குத் திசையில் நின்றவாறு எம்மைக் காத்திடுவீர்)

திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க

அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்

கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்

தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க 

 
(தாவுகின்ற மானையும், ருத்ராக்ஷ மாலையையும் இரு கைகளும் ஏந்தி நிற்க, ஒளிமயமான இன்னும் இரு திருக்கைகள் அபய முத்திரையைக் காட்டி நிற்க, ஐம்முகங்களுள் ஒன்றாக மேற்கு நோக்கிய முகமும் கொண்டவரே, மூன்று கண்களையும் அளவற்ற அழகுடைய நான்கு முகங்களும் கொண்டவரே, மேற்கு திசையில் நின்று எம்மைக் காத்திடுவீர்)


கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்

அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்

பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்

மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க 


(ரத்தம் தோய்ந்த மழு வாள், மான், அபய முத்திரை சின்னம், ருத்திராக்ஷ மாலை போன்றவற்றை ஏந்தி நின்றவாறு நான்கு சிவந்த திருக்கைகளை காட்டி, ஜொலிக்கும் பொன் போன்ற முக்கண்களுடன் சாந்தமான நான்கு திருமேனிகளைக் (முகங்கள்) காட்டுபவரே, வேதங்கள் போற்றிப் புகழும் வாமதேவ மூர்த்தியே (சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றே வாமன் என்பது ), வட திசையில் நின்றிருந்து எம்மை நீர் காத்தருள வேண்டும்)


அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்

சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்

திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற

எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க 


(வரத சின்ன முத்திரை காட்டி, அங்குசம், கபாலம், சூலம், மான், பாசக் கயிறு, ருத்திராஷம், டமாரம் போன்றவற்றை பத்து கரங்களிலும் ஏந்தி, சந்திரனைப் போன்ற வெண் நிறதிருமேனியின் ஐந்து திரு முகங்களில் ஒரு முகத்தை வடகீழ்த்திசை நோக்கி வைத்துள்ளமூர்த்தியே, தேவலோகம் வரை படர்ந்திருக்கும் அனைத்து இடங்களிலும் எம்மை நீர் காத்து அருள வேண்டும்)


சந்திர மவுலி சென்னி (தலை) தனிநுதல் கண்ணன் நெற்றி

மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்

கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி

அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும் 


(சந்திரமௌலீஸ்வரர் எனும் சிவபெருமான் எங்கள் தலையையும், நெற்றிக் கண் கொண்ட மூர்த்தியானவர் எம் நெற்றியையும், கண் கூசும் ஒளி தரும் சூரியனின் ஒளியையே பறித்த பரமசிவனார் விழிகளையும், பூங் கொத்துக்களின் வாசனைகளை உணரும் சக்தி மிக்க நாசிகளையும், எமது காதுகளையும் நான்கு வேதங்களையும் அருளிய நாயகன் சிவபெருமான் காக்க, எமது கபாலத்தை கபால மூர்த்தியும், எம் முகத்தை ஐம்முகத்தைக் கொண்டவனான சிவபெருமானே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும்)


வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன் 

களம் அடு பினிகபான கையினை தரும வாகு 

கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய 

ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்


(வேதங்களை உச்சரிக்கும் நாவினை கொண்ட நீல நிறக் கழுத்தோனான வேத மூர்த்தி எம் கழுத்தினையும், போரில் பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்திய தர்மவாகு எனும் சிவபெருமான் எமது கைகளையும் தோளையும் காத்தருள, தக்கன் யாகத்தை அழித்த மூர்த்தியானவர் எம் மார்பினையும், காமதேவனை தகனம் செய்த பேரொளி தரும் மேரு மலையான் எம் வயிற்றினையும் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )


இடைஇப முகத்தோன் தாதை உந்தி  நம் ஈசன் மன்னும்

புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில்  வாமம்   

படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது

விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க 

(யானை முகத்தோனின் தந்தையானவர் என் வயிற்றையும், அதே சர்வேஸ்வரன் தொடைப் பகுதியின் மேல்புற இடையையும், குபேரனின் தோழரும் ஐந்து முகங்களில் ஒன்றை இடப்புறத்தை நோக்கிக் காட்டி நிற்கும் வாம முகத்தவருமான சிவபெருமான் எம் தொடையையும் காக்க, படமெடுத்தாடும் பாம்பு போல படர்ந்து விரிந்துள்ள ஜகத்தின் ஈசன் எம் முழங்கால்களையும், எம் கணுக்காலை பாய்ந்து வரும் ரிஷபத்தின் (நந்தி)தலைவனானவர் காத்து அருள, விமலன் எனும் மூர்த்தியானவர் எம் பாதத்தையும் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )


வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்

பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்

செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்

பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க

(வேதங்கள் கூறும் பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பவன் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) முதற் ஜாமத்திலும் , மஹேஸ்வரன் எனும் ஈஸ்வரன் இரண்டாம் ஜாமத்தின் பின் பகுதியிலும், முனிவர் போன்ற உருவிலான வாமதேவர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்)மூன்றாம் ஜாமத்திலும், மழுவாயுத்தை ஏந்திய திரியம்பகனாதர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) நாலாம் ஜாமத்திலும் காத்து அருள இடபத்தில் பவனி வரும் மூர்த்தியானவர் எம் சரீரம் பிணிகளால் (வியாதிகள்) பீடிக்கப்பட்டு சோர்வடையாமல் அந்தந்த ரூபங்களில் தனித் தனியே இருந்தவாறு காத்தருள வேண்டும்.


கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க 

தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க 

பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க 

பங்கமில் நாலாம் யாமம் கவுர்தன் பதியே காக்க 

(இரவின் முதற் ஜாமத்தில் பிறைசூடிய மூர்த்தியும் இரண்டாம் ஜாமத்தில் கங்காதர மூர்த்தியும்(கங்கையை தலையில் கொண்டுள்ள) எம்மை காத்து அருள வேண்டும். மூன்றாம் ஜாமத்தில்ஜடா மகுட மூர்த்தி காக்க, பங்கமே இல்லாத நாலாம் ஜாமத்தில் உமை எனும் பார்வதியின் கணவரான உமாபதி வந்து எம்மைக் காக்க வேண்டும்)

அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும் 

தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு  

வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்  

நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க 


(அனைத்து காலங்களிலும் காலத்தை நிர்ணயிக்கும் கால சம்ஹார மூர்த்தி எம்மைக் காத்து வர, காலத்தின் உட்பகுதியில் தனித்தன்மை வாய்ந்த சங்கரரும் (சிவபெருமானின் இன்னொரு பெயர்), வெளிப்புறத்தில் தாணு (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூர்த்தியும்,நடுப்புறத்தில் ஆன்மாக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள பசுபதி நாதர் (பசு என்பது ஆன்மாவைக் குறிக்கும் இன்னொரு சொல்) எனும் சிவபெருமானும், மற்ற இடத்தில் என்றுமே(சதா என்பது என்றுமே என்பதின் வாய் மொழிச் சொல்) நினைவில் சுழன்றுகொண்டிருக்கும்சதாசிவ முர்த்தியும் எம்மை தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )


நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி 

பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத 

அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண் 

தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க

(யாம் நிற்கும் இடங்களிலெல்லாம் புவனநாதரும், நடக்குமிடமெல்லாம் மாசற்ற நிர்மலனாதனும் (நிர்மலம் என்பது மாசின்மை மற்றும் மனக் கவலை அற்றவர் என்ற பொருளை தருவதினால் நிர்மலமானவர் என சிவபெருமானின் இன்னொரு பெயராகஅமைந்தது), உடலழகினை முதலும் முடிவுமே இல்லாத அனைத்தையுமே படைத்த அந்த ஆதி மூர்த்தி காக்க, இருக்குமிடமெல்லாம் வேதங்கள் புகழும் வேத மூர்த்தி சிவபெருமான் காக்க,உறங்கும்போதேல்லாம் பரம்பொருளான பரமசிவன் காக்க, விழித்திருக்கும் நிலையில் சியாமள ருத்ரர் எனும் சிவபெருமான் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு எம்மைக் காத்தருள வேண்டும்)


மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும் 

சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க 

கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப் 

பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க 

(அடி மலை முதல் அதன் மேல் முகட்டுவரை (முகட்டு என்பது மலை உச்சியின் பெயர்) புராரிக் கடவுள் காக்க வேண்டும். காட்டினில் என்னை விட்டுப் பிரியாமல் இருந்து வில்லேந்திய வேட வடிவ மூர்த்தி காக்க, பேரழிவைத் தரும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள் நடுங்குமாறு நடனமாடும் வீரபத்திரர் (சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழில் ஆற்றுகையில்ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து வீரபத்திரரைப் படைத்தார் என்பது புராணக் கதை) என்னை முற்றிலுமாக சூழ்ந்திருந்து காக்க வேண்டும்)


பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா 

வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி 

கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை 

வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க 

(கழுத்து மயிரினையுடைய குதிரைகள் பூட்டிய தேர்கள், மதம் பிடித்தது போன்ற மத யானைகள்,பாய்ந்து செல்லும் குதிரைகள், வில்லேந்திய கோடிக்கணக்கான படைவீரர்கள் எனஅனைவருடன் சேர்ந்து கூர்மையான வேலுடன் பகைவர்களை அழித்திடும் வள்ளியின் நாயகனை படைத்த சிவப்பு நிறக் கைகளைக் கொண்டவரின் திருக்கரத்தில் இருக்கும் மழு ஆயுதம் என்னைக் காக்கட்டும் )


தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப் 

பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து 

முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம் 

பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க 


(படமெடுத்தாடும் ஆதிசேஷன் எனும் நாகம் படுத்துக் கிடக்கும் பாய்ந்து வரும் கடலையே தன் ஆடையாக போர்த்தி , பூமியையே தாங்கி நின்ற கடவுளை உம் முத்தலைகளுக்குள் அடக்கியவரே, அந்த வலிமைகளை அடக்கிய தீய எண்ணம் கொண்ட கயவர்களை அழித்து மகிழ்ச்சியைத் தரும் உம்முடைய சூலம் எம்மைக் காத்து அருளட்டும் )


முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள் 

அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம் 

திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை 

உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய் 

(பிடரி மயிருடைய சிங்கத்தை ஒத்த வலிமை மிக்க தோள்களைக் கொண்டு கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லால் கொல்வது போல, இருதயத்தில்சிவனையே வைத்து உறுதியுடன் தியானித்தால், அனைத்து பாவங்களையும் வெல்லும் சிவகவசத்தை ஒருவர் அணிந்து கொள்வாரேயானால் (பாராயணம் செய்வது என்பது பொருள்) )


பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும் 

அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும் 

வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும் 

தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால் 

(இப்படியாக பாராயணம் செய்பவர்களது பஞ்சமா பாதகங்கள் அனைத்துமே நீங்கும், சுற்றி உள்ள பகைகளும் விலகும், பயமின்றியும் வாழலாம், கொடிய வியாதிகள் விலகும், வறுமை எனும் தரித்திரம் தொலையும்).

 -------------------xxxxxxxxxxxxxxxxxxxxxx-----------------

சிவகவசம் - 1



முன்னுரை

பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது.

சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும். தென் காசிப் பாண்டியர் எனப்படும் பாண்டிய மன்னர்களில் ஒருவரான வராமதுங்கர் அபிராம சுந்தரேசன் மற்றும் வீர பாண்டியன் என்ற பெயர்களையும் பெற்று இருந்தவர். ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுடன் ஒன்றாக சேர்ந்தே இருந்த இலங்கையில் இருந்த நல்லூரை ஆட்சி செய்து வந்தவர். விஜயநகர் நாயக்கர்கள் ஆட்சியில்  இருந்தபோது இந்த பாண்டிய மன்னர்கள் அவர்கள் வசம் இருந்த ராஜ்யங்களில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். தமிழ் மொழியில் அதிகத் திறமைப் பெற்று இருந்த வராமதுங்கர் பெரும் சிவ பக்தர். அந்த மன்னன் கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி போன்ற இன்னும் சில தமிழ் நூல்களை இயற்றி உள்ளார். 

கந்தர் சஷ்டி கவசம் என்பது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கூறி அதை காக்குமாறு முருகப் பெருமானை வேண்டும் தமிழ் மந்திர பாடல் ஆகும். கவசம் என்றாலே காக்கும் ஒரு தடுப்பு அரண் போன்றதாகும். முருகனை வேண்டிக் கொண்டு கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பதின் மூலம் மன அமைதி கிட்டும் , நோய் நொடிகள் விலகும், விஷ ஜந்துக்களின் விஷங்கள் முறியும், தீய ஜந்துக்கள் நம்மைத் தீண்டாது என்பது நம்பிக்கை ஆகும்.அது போலவேதான் சிவகவசமும் சைவ அன்பர்களால் ஒரு காலத்தில் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர் என்பதினால் அவருடைய அந்த ஐந்து முகங்களைக் குறிப்பிட்டு உடலின் ஒவ்வொரு பாகத்தை காக்குமாறும், நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டி துதிக்கும் மந்திர பாடலாகும். இதை பாராயணம் செய்தால் பஞ்சமா பாதகங்கள், பகைகள், வறுமை போன்றவை விலகி அதை பாராயணம் செய்பவர்களுக்கு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும் இலக்கணத் தமிழில் எழுதி வைக்கப்பட்டு உள்ளதினால் இவை அதிகம்  பிரபலமாகவில்லை. அதற்குக் காரணம் தமிழ் மொழி பேசும் சராசரி மனிதர்கள் அனைவருக்குமே இலக்கணத் தமிழ் தெரியாது என்பதினால் அதன் அர்த்தம் புரிவது இல்லை. அதனால்தான் அவற்றின் புகழை அவர்கள் அறிந்திருக்கவில்லை  என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும் ஒரு கட்டத்தில் வைஷ்ணவம் தலை தூக்கி நின்றபோது சைவ சமய நூல்கள் தழைத்து இருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படிப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த  பாடல்களின் அர்த்தங்கள்  தெளிவாக விளக்கப்பட்டு  எழுதப்பட்டு  இருந்தால் அவற்றின் மகிமைகள் பரவி இருக்கும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே சிவகவசத்தின்  அர்த்தங்கள் கூடிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதனால்தான் ஒரு முயற்சியாக மந்திர சக்தி வாய்ந்த சிவகவசத்தை அதன் விளக்கத்துடன் வெளியிட முடிவு செய்தேன். ஆன்மீகத்தில் நாம் அறிவதை  பிறருக்கும்  வெளிச்சம் போட்டுக் காட்டுவது நல்ல ஆன்மீகக்  காரியம் என்பார்கள்.

கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பது போல சிவகவசத்தை  திங்கள் கிழமைகளிலும்  பிரதோஷ தினங்கள் அன்றும்  தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். 

                                                                                                                                  ...............தொடரும்