Sunday, 16 October 2016

முருகனின் பல்வேறு தோற்றங்கள்


இந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு. சிவன், சக்தி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி, கணபதி மற்றும் முருகன் போன்றவர்கள் மூல தெய்வங்கள். அய்யனார், மாரி அம்மான், முனீஸ்வரன், மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் கிராம தெய்வங்கள். அவர்கள் அனைவரையும் விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனைத்தான்.

முன்னொரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்திருந்த இடங்களை ஐந்து பிரிவுகளாக பிரித்திருந்தார்கள். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாளை என்பன. குறிஞ்சி என்ற பகுதி மலைப் பகுதியாக இருந்ததினால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் முருகனையே போற்றி வணங்கினார்கள். சங்க இலக்கியத்தில் அவரை சீயோன் அல்லது கொரவைசெல்வன் என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். அவருடைய ஆலயங்கள் பெரும்பாலும் மலைகளிலேயே அமைந்து உள்ளன என்பதின் காரணம் அவர் மலைப் பிரதேசத்தை சேர்ந்த கடவுளாகக் கருதப்படுவதுதான்.

முருக பக்தனுக்கு முருகன் பெரிய கடவுள் என்றாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இல்லை. ஆராய்ச்சியாளரின் எண்ணத்தில் முருகன் தனித் தன்மை வாய்ந்தவர், மற்றும் அவருக்கு பல முகங்கள் (நிலைகள்) உண்டு என்பதே. இந்தக் கட்டுரை அவற்றை விவரிக்கின்றது. முருகன் யார்?

1.சிவபெருமானுக்குத் தகுந்த மகன்
2.கிருத்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டவர்
3.கணேஷா எனும் வினாயகரின் அன்புச் சகோதரர்
4.தேவர்களின் படைத் தலைவர்
5.அசுரர்களை அழித்தவர்
6.தேவசேனாவின் கணவர்
7.வள்ளியின் அன்புக்குரியக் கணவர்
8.மலை வாழ் கடவுள்
9.சிவபெருமானுக்கே குருவானவர்
10.பந்தங்களைத் துறந்தவர்
11.சங்கக் கடவுள்
12.அகஸ்தியருக்கு ஆசிரியரானவர்
13.ஐந்து பெரும் கடமைகளை செய்பவர்
14.அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
15.அழகும், இளமையும் நிறைந்தவர்
16.பக்தர்களுக்கும், பகைவர்களுக்கும் நன்மை அளிப்பவர்
17.ஞானத்தை தந்து அருள் புரிபவர்
18.பழங்குடியினர், நகரத்தார், அரசவம்சத்தினர், தெய்வீகம், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துபவர்
19.ஒற்றுமையை நிலை நாட்டுபவர், முஸ்லிம் சமுதாயத்தினராலும் வணங்கப்படுபவர்
20.இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக் காட்டுபவர்

இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் நூல்களும், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியவைகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இரண்டாம் நிலை ஆதாரங்கள். சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் , குறுந்தொகை மற்றும் சிலப்பதிகாரம் போன்றவை. அவற்றைத் தவிர திருமந்திரம் , திருப்புகழ் ,கந்தர் ஷஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ,கந்தர் அனுபூதி , கந்தரான்ததி, ஷண்முகக் கவசம் , முத்துக்குமாரஸ்வாமிபிள்ளைத் தமிழ், சுப்பிரமணிய புஜாங்கம்,தணிகை புராணம் மற்றும் குமார சம்பவம் போன்றவையும், முருகனின் பல ஆலய தல புராணங்கள் போன்றவை முதல் நிலை அதாவது மூல நிலை ஆதாரங்களாக உள்ளன. முருகனின் ஆறுபடை வீடு மற்றும் பிற தலங்களையும் ஆதாரங்களாகக் கொள்ள முடியும்.

சிவபெருமானுக்குத் உகந்த மகன்


முருகனைப் பற்றி எழுதி உள்ள பல புராணங்களும் முருகனும், சிவபெருமானும் ஒருவரே என்றே தெரிவிக்கின்றன. சிவபெருமானின் ஒளியே ஆறுமுக முருகனான கந்தனைப் படைத்தது. அவரும் சிவபெருமானும் ஒருவரே (திருமந்திரம்: இன்தை பெருமானுக்கு இருமூன்று வட்டமாய்). சிவபெருமானுக்கும் ஆறு முகங்கள், அது போல முருகனுக்கும் ஆறு முகங்கள் உள்ளதினால் இருவரும் ஒன்றே (திருமந்திரம் ஆறுமுகத்தில் ஆடிப்பாடி). தம்மை துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்க ஒருவரைப் படைக்குமாறு தேவர்கள் வேண்டிக் கொண்டதினால், சிவபெருமான் அவரைப் படைத்தார். தன்னுடைய மூன்றாவது கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தி, அதை வாயு பகவானிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டவர், அதைக் கொண்டு போய் கங்கையில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் ஹிமயமலை அடிவாரத்தில் இருந்த சரவணப் பொய்கையில் தள்ளியது.

ஆறு தீப் பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுக்க , அவற்றை எடுத்து கிருத்திகைகள் வளர்க்க, சிவனும், பார்வதியும் அந்த இடத்துக்குச் சென்றப் பின், பார்வதி அந்த ஆறு குழந்தைகாளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உடலைக் கொண்ட குழந்தையாக, ஆனால் ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்கள் மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை அசுரர்களை அழித்து, பக்தர்களுக்கு அருள் புரியும் , ஞானக் குழந்தையாக ஆயிற்று என்பதினால் சிவபெருமானுக்கு உகந்த மகனாக கருதப்பட்டது. சிவபெருமானே ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர். முருகனின் பிறப்பு, இயற்கையின் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருந்தது.


சக்தி தேவியின் செல்லப் பிள்ளை

கொரவாட்டி, பார்வதி மற்றும் உமா என்ற பெயர்களைக் கொண்ட சக்தி தேவியானவள் பெரும் சக்தி மிக்க கடவுள் ஆவார். அவளே அனைத்தையும் படைத்தவள் எனப்படுபவள். நேர்மை மிக்க சக்தி தேவி, நீதியை நிலை நாட்ட சிவபெருமானிடம் கூட சண்டை இடத் தயங்காதவள். சிவபெருமானுடன் சேர்ந்து அவள் அகண்டத்தில் ஆடிய நடனம் முனிவர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் பல தத்துவங்களை எடுத்தக் காட்டியது. அசுரர்களின் தலைவனான சூரபத்மனை அழிக்க சக்தியே முருகனுக்கு சக்தி வேல் என்ற ஆயுதம் ஒன்றை தந்தாள். அவனை அழிப்பதற்குச் சென்ற முருகப் பெருமான் ஒரு மாமரத்தை அந்த வேலைக் கொண்டு இரண்டாகப் பிளந்து அவற்றில் இருந்து சேவல் மற்றும் மயிலை தோன்ற வைத்தார். சங்க இலக்கியங்களில் அவரை சிவப்பானவர் அல்லது ஒளிமயமானவார் என்ற பொருளில் சீயோன் என்றும், கொரவையின் மகன் என்ற அர்த்தத்தைத் தரும் கொரவை செல்வன் எனவும் அழைத்தார்கள். மாம்பழப் போட்டியில் தோற்றுப் போய் பழனி மலைக்குச் சென்று அமர்ந்த முருகனின் கோபத்தை சாந்தப்படுத்த எந்த அளவு சக்தி தேவி கவலையில் ஆழ்ந்தாள் என்பதில் இருந்தே அவர் மீது சக்தி கொண்டிருந்த அன்பின் அளவு புரியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

கிருத்திகை மகளினரின் வளர்ப்பு மகன்

அவதார தத்துவத்தை நன்கே அறிந்திருந்த சிவபெருமான், ஆறுமுகனைப் படைத்து, பார்வதியின் சகோதரரான திருமாலின் கட்டளைப்படி அவரை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகைகளிடம் ஒப்படைத்தார். கந்த புராணம் மற்றும் இன்னும் சில இலக்கியங்களில் அந்த செவிலித் தாய்கள் அந்தக் குழந்தையை எப்படி ஆதரவாகவும், அன்பாகவும் வளர்த்து வந்தார்கள் என்பதை விவரமாகக் கூறுகின்றது. முருகனை அந்த ஆறு கிருத்திகை செவிலித் தாயார்களும் எடுத்து வளர்த்ததினால்தான் அவர் கார்த்திகேயர் என்ற பெயரையும் அடைந்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் கிருத்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதமாகும். அது போல ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகனின் ஆலயங்களில்விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
கணேஷாவின் அருமை சகோதரர்

கணேஷா அல்லது யானை முக கணபதி எனும் விக்னேஸ்வரக் கடவுளே முருகனின் மூத்த சகோதரர் ஆவார். நாரதர் கொடுத்த மாம்பழத்தை அடைவதில் இருவருக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்தது என்றாலும், கணேஷாவின் உதவியைக் கொண்டே முருகப் பெருமானால் வள்ளியை திருத்தணியில் மணக்க முடிந்தது. இதில் இருந்தே ஆரம்பம் எதுவும் நல்ல முறையில் முடிந்தடைய வினாயகரின் துணை தேவை என்பது புலனாகும். விநாயகரை துதித்தால் நமது தடைகள் விலகும். முருகன் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவர் என்றாலும், அவர் விரும்பியதை அடையவும் அவருக்கு அவருடைய சகோதரரான வினாயகரின் துணையே தேவையாக இருந்தது.

அசுரர்களை அழித்தவர். தேவர்களின் படைத் தலைவர்
தேவேந்திரனின் மகனான ஜெயேந்திரா மற்றும் பிற தேவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்திய சூரபத்மனைக் கொல்லவே முக்கியமாக முருகன் அவதரித்தார். சூரபத்மனைத் தவிர அவனுடைய சகோதரர்களான தாரகா, சிங்க முகன் மற்றும் அவனுடைய சகோதரியான அஜமுகி போன்றவர்களும் தேவர்களை துன்புறுத்தி வந்தார்கள். சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து வெளி வந்ததினாலும், சக்தி வேலை பார்வதியிடம் இருந்து பெற்றதினாலும் முருகன் தேவர்களின் படைத் தலைவரானார். அவருக்கு அந்த யுத்தத்தில் துணை புரிய, சக்தியின் சிலம்பில் இருந்து வெளிவந்த நவ சக்தி எனப்பட்ட வீரபாகுவும், அவருடைய எட்டு சகோதரர்களும் ஒரு லட்ஷ வீரர்களுடன் வெளி வந்தார்கள். தன்னுடைய பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திற்கு முருகன் புறப்பட்டு சென்றபோது அந்த நவ சக்திகளும், ஒரு லட்ஷப் படையினரும் அவருடன் சென்றார்கள்.

யுத்த தர்மத்தின்படி முதலில் வீரபாகுவை முருகன் சூரபத்மனிடம் தூதுவராக அனுப்பி தேவர்களை விடுதலை செயுமாறுக் கூறினார். ஆனால் சூரபத்மனோ அதை ஏற்க மறுத்து, முருகனை கேவலமாக ஏச, அங்கிருந்து வீரபாகு தப்பி வந்து முருகனுக்கு அந்த செய்தியை கூறினார். உடனே முருகனும் யுத்தத்திற்கு கிளம்பிச் சென்றார். முதலில் அவர் கதிர்காமனில் தனது படையினருடன் இளைப்பாறியப் பின் அங்கிருந்துக் கிளம்பி திருச்செந்தூருக்குச் சென்றார். யுத்தம் பத்து நாட்கள் தொடர்ந்தது. சூரன் அதில் பல உபாயங்களையும் கையாண்டான். அவனுடைய படையினர் தோற்று ஓடியதும் அவன் தன்னை ஒரு மாமரமாக உருமாற்றிக் கொண்டான். ஆனால் அதை புரிந்து கொண்ட முருகன் தனது சக்தி வேலினால் அந்த மரத்தை இரண்டு துண்டுகளாகப் பிளக்க ஒரு துண்டு சேவலாகவும், இரண்டாவது மயிலாகவும் மாறின. இப்படியாக தேவர்களின் படைத்தலைவர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி யுத்தத்தில் வென்றார். இந்து சமயத்தில் ஆற்றல், பலம் மற்றும் வெற்றி போன்ற அனைத்தையும் முருகனை ஒப்பிடுகிறார்கள். அந்த சூரனை வெற்றி கொண்ட தேவசேனாபதி , சூரபத்மனால் சிறைப் பிடிக்கப்பட்டு இருந்த அனைத்து தேவர்களையும் விடுதலை செய்தார்.


தேவசேனாவின் கணவர்

சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு விடுதலை கொடுத்த ஸ்கந்தனுக்கு பரிசு கிடைத்தது. ஸ்கந்த புராணத்தில் முருகனுடன் தேவசேனாவிற்கு திருமணம் ஆன செய்தி விரிவாக தரப்பட்டு உள்ளது. ஜெயந்தாவும் தேவர்களும் சூரபத்மனின் பிடியில் இருந்து விடுதலை ஆனதும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றார்கள். சூர சம்ஹாரத்துக்குப் பிறகு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி திருப்பரம்குன்றத்துக்குச் சென்ற முருகனை இந்திரனும் பிரும்மாவும் சந்தித்தார்கள். அங்கு அவரை சந்தித்தவர்கள் அவரை தேவசேனாவை மணந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். திருமணத்துக்கான நல்ல நேரத்தை பிரும்மா பார்த்து முடித்ததும் முருகனின் பெற்றோர்கள் மற்றும் அனைவர் முன்னிலையிலும் தேவசேனாவை முருகன் மணந்து கொண்டார். இந்து சமய முறையில் எப்படி ஒரு பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணை மணமகனுக்கு தானமாகக் கொடுத்து திருமணத்தை நடத்துவார்களோ அப்படியேதான் அவருடைய திருமணம் நடந்தது என்ற விரிவான செய்தியை ஸ்கந்த புராணத்தில் கூறி உள்ளார்கள் ஸ்கந்தனுடனான தேவசேனாவின் திருமணம் முறைப்படி அனைவராலும் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது என்றால் வள்ளியுடன் முருகன் செய்து கொண்ட திருமணம் களவு மணம் அதாவது இரு ஜாதியினர் செய்து கொண்ட காதல் திருமணம் என்பதாகும். முருகன் அழகானவர், இளமையானவர், தேவர்களை அசுரனிடம் இருந்து விடுவித்தவர் போன்ற பல குணங்களைக் கொண்டவர். அது போலவே தேவசேனாவும் அரச குடும்பத்தை சேர்ந்தவர், நல்ல பண்புகளைக் கொண்டவர், நன்கு வளர்க்கப்பட்டவர், பெரியவர்களுக்கு கீழ் பணிந்து நடந்தவர் போன்ற குணங்களைக் கொண்டு இருந்தார்.


வள்ளியின் பிரிய நாயகர்
தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடித்தது இன்னொரு கதை ஆகும். வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் அனைவருக்கும் காட்டினார். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது மையல் கொள்ள, அவளை தன் வசப்படுத்தி அவளது காதலை அடைய வேண்டும் என்று எண்ணிய முருகன் ஒரு வேடவர் போல, மரத்தைப் போல, ஒரு கிழவரைப் போல பல ரூபங்களைக் எடுத்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய சகோதரரான கணேசரின் துணையை பெற்றுக் கொள்ளும்வரை அவரால் அவளை அடைய முடியவில்லை. அவருடைய மூத்த சகோதரர் ஒரு யானையின் உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி முருகனை ஏற்றுக் கொள்ள வைத்தார். அவளுடைய வேடவர்களின் குடும்பத்தின் குலதெய்வம் முருகன் என்றாலும் , வள்ளியின் காதலர் வேலனே என்பதை அறிந்து கொள்ளா முடியாத அவர்கள் கார்த்திகேயரை தாக்க முயன்றாலும், அவர்களையும் அவரால் வெல்ல முடிந்தது.

முருகனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டதும் தமது தவறை உணர்ந்தவர்கள் அவருக்கு வள்ளியை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்கள். திருத்தணியில் அவர்களது திருமணம் நடைபெற்றது. வள்ளி வலது பக்கத்திலும், தேவசேனா அவருடைய இடது பக்கத்திலுமாக காட்சி தருகிறார்கள். அவருடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருந்தாலும், வள்ளியின் கையில் உள்ள தாமரை மலரோ , இல்லை தேவசேனாவின் கையில் உள்ள லில்லிப் பூவோ வாடவில்லை. அந்த இரண்டு தெய்வீக பெண்களுடனான திருமணத்தின் மூலம் முருகன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டையுமே அங்கீகரிப்பதைக் காட்டுகிறது. பக்தர்களும், புலவர்களும் முருகன் மீது வள்ளி கொண்டு இருந்த ஆதிக்கத்தைக் எடுத்துக் காட்டி உள்ளார்கள்.


மலைக் கடவுள்

குறுஞ்சி மலையின் கடவுளே முருகப் பெருமான். அநேகமாக அனைத்து மலைகளிலுமே முருகனின் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் விசேஷமாக கூற வேண்டியது அவர் வசிப்பதாக கூறப்படும் ஆறு இடங்களான ஆறுபடை வீடுகள் என்பன. திருப்பரம்குன்றத்தில் அவர் தேவசேனாவை மணந்து கொண்டார். திருச்சிரளைவை (திருச்செந்தூர்) என்ற இடத்தில் அவர் சூரபத்மனை வதம் செய்தார். திருவாவினன்குடியில் துறவறம் கொண்டு பழனி ஆண்டவரானார். பிரணவ மந்திரத்தை அவருடைய தந்தைக்கு ஓதிய இடமே திருவேரகம் (ஸ்வாமிமலை). குன்றுதோரட்டல் மற்றும் பழமுதிர்சோலையில் வள்ளி மற்றும் தேவசேனாவுடன் இருப்பவர். ஆறுபடை வீடுகளைப் பற்றி எழுதி உள்ள இலக்கியங்களில் முருகப் பெருமானின் பராக்கிரமங்களைப் பற்றிக் கூறி உள்ளார்கள். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை , நாரினை, தொல்காப்பியம், குறிஞ்சிப்பாட்டு, மலைப்பாடுகளம் போன்றவற்றில் முருகனை பற்றிக் குறிப்பிடுகையில் அவரை மலைகளின் கடவுள் எனப் பாடி உள்ளார்கள்.

விசேஷ நாட்களில் பக்தர்கள் கிராமியப் பழக்கத்தை எடுத்துக் காட்டும் விதமாக மலை மீது காவடி ஏந்திச் சென்று தமது பக்தியைக் காட்டுகிறார்கள். தைபூசம், கிருத்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், போன்ற தினங்களில் வேலனுக்கு விசேஷமான வழிபாட்டை செய்கிறார்கள். தற்காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களைப் போலவே, முருகனை தரிசனம் செய்ய பாதயாத்திரையாக செல்பவர்கள் நாற்பது நாட்கள் விரதம் இருக்கின்றார்கள். அதில் காவடி முக்கியப் பங்கு பெறுகிறது. முருகனின் பல வீடுகள் எனப்படும் ஆலயங்களைப் பற்றி செய்திகள் திருமுருகாற்றுப் படை மற்றும் திருப்புகழ் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சிக் கடவுள் மலைகளில் உள்ள பல ஆலயங்களிலும் வழிபடப்படுகிறார்.


சிவபெருமானுக்கு குருவானவர்

முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12). பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98).

ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை அல்லது திருவேரக்கம் என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ). சர்வ வல்லமைப் படைத்த சிவபெருமானோ தன்னுடைய மகன் முன்பு அடங்கி நிற்க வேண்டி இருந்தது. இதன் தத்துவம் என்ன என்றால் அதீத ஞானம் படைத்தவர்கள் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு முன்னாள் சர்வ வலிமைப் படைத்தவர்களும் அடங்கியே இருக்க வேண்டும் என்பதே. அருணகிரிநாதரின் கூற்றின்படி முருகப் பெருமானே பிரணவ மந்திரம் என்றும், சிவனும் முருகனும் ஒன்றே என்றாலும், அதன் அர்த்தத்தை அவருடைய வாயால் கேட்பதே மகிழ்ச்சியை அளிக்கும் என்றே இறைவன் கருதினார் (கந்தரலங்காரம், v. 55 / கந்தர் அனுபூதி v. 36) என்றார். ஞானப் பண்டிதரான முருகன் (Tiruppukal 100) அடக்கமே நற்பண்பு என்பதையும், தற்பெருமையுடன் கூடிய ஞானம் அழிவிற்கு காரணமாகி விடும் என்று இதன் மூலம் காட்டுகிறார்.




ஆசைகளைத் துறந்தவர்

நாரத முனி ஒரு மாம்பழத்தை கைலாசத்திற்கு கொண்டு போய்க் கொடுத்து கணேஷா மற்றும் முருகனுக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தினார் (பழனி ஸ்தலபுராணம் ). முருகன் அதில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்ததினால் தன்னிடம் இருந்த அனைத்து செல்வம், மற்றும் அரசைத் துறந்து விட்டு ஆவினன்குடி அல்லது பழனியை அடைந்தார். அவரை அங்கு முற்றிலும் துறந்தவர் என்று அழைக்கின்றார்கள். அங்கு மிகச் சிறிய உடையை மட்டுமே அணிந்து கொண்டு, ருத்ராக்ஷா மற்றும் ஒரு தண்டத்தை ஏந்திக் கொண்டு நிற்கின்றார் (திருப்புகழ் , 117). அவரே விவேகப் பழமான ஞான பண்டிதர். தலைகனம் மற்றும் செருக்கு தோல்வியையே தரும் என்றும், அடக்கமும், முன் யோசனையும் மட்டுமே வெற்றியைக் கொடுக்கும் என்பதை வெளிப்படுத்துவதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அடக்க குணமும் மற்றும் எளிமையும் நிறைந்த கணேஷா அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர். ஒவ்வொருவரும் கோபத்தை துறக்க வேண்டும். சாதாரணமான ஒரு மாம்பழத்திற்காக முருகன் பெரிய நாடகமாடி விட்டதாக இது தோற்றத்தை தந்தாலும், பின்னர் அவர் தண்டாயுதபாணி கோலத்தை மேற்கொண்டதின் மூலம் அதிக ஆசையும், அவசர காரியங்களும் முடிவாக அனைத்தையும் துறக்க வைக்கும் மன நிலையில் கொண்டு சென்றுவிடும் என்பதை உணர்த்துகின்றது.

தமிழ்க் கடவுள் மற்றும் தமிழ் சங்கத் தலைவர்

முருகனை தமிழ் கடவுள் என்றும் இரண்டாம் சங்கத்தின் தலைவர் என்றும் கூறுவார்கள். முருகன் சங்கத்தின் முதல் தலைவரான அகத்தியருக்கே தமிழைக் கற்றுக் கொடுத்தவர் என்றும் கூறுகிறார்கள். இது தமிழுக்குக் கிடைத்துள்ள பெருமையும், அதன் புனிதம் மற்றும் மேன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் சங்கத்தில் மெத்தப் படித்த அறிவு ஜீவிகளே உறுப்பினர்களாக இருந்ததினால் அதன் நடைமுறைகளும் நன்கே இருந்தன. தமிழ் மொழியும் முருகனுடன் இணைந்தே இருந்தது.

இளமையும் அழகையும் கொண்டவர்

முருகன் என்றால் இளமையானவர், மணம் மிக்கவர், தெய்வீக அழகுடையவர் என்று பொருள். குமரன் என்றாலும் இளமையானவர் என்றே பொருள். அழகு என்பது இதயத்தை சுத்தப்படுத்துகிறது. இளமை என்பது நோய் நொடிகள் அற்ற தன்மையைக் கொடுக்க, மணம் என்பது சுத்தமான சூழ்நிலையில் இருக்க வைக்க, தெய்வீக அருள் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் இருக்க வைக்கின்றது. (N.P. சண்முகம், முருகன் சமயம் – அதன் முக்கியத்துவமும், தற்கால மனிதர்களும்,1998, சென்னை). அழகையும், இளமையையும் குறிக்கும் விதத்தில் அவரை முருகன், அழகன், குமரன் போன்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். சங்க இலக்கியங்களில் கார்த்திகேயரின் இந்த குணங்களைக் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு நன்மை செய்தவர்

அகஸ்தியர்

முருகன் தனது பக்தர்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவர். அகஸ்தியர் முதல் சாதாரண மனிதர்வரை தன்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் அளவற்ற அருளை பொழிந்தவர். முதலாம் சங்கத் தலைவரான அகஸ்தியர் முருகனின் சிஷ்யர் ஆவார். வடக்கில் இருந்து தெற்குப் பகுதிக்கு வந்த அந்த முனிவருக்கு முருகனே தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தாராம். (அருணகிரிநாதர் , சேவல் விருத்தம் , ll 14 – 16). முருகனே அகஸ்தியருக்கு ஆசிரியராகவும், உபதேசம் செய்தவராகவும் இருந்துள்ளார் (தொட்டிகலை சுப்ரமணிய முனிவர் - தணிகை திருவிருத்தம்).

நக்கீரர்

நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூததினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

சிகண்டி
உண்மையான ஒரு பக்தருக்கு கடவுள் எந்த வகையிலாவது வந்து உதவி புரிவார். சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார். உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.



முச்சுகுண்டர்

வீரபாகுவின் மகளை மணந்து கொண்ட முருக பக்தர் இவர். முச்சுகுண்டர் அசுரர்களைக் கொன்றார். அதற்குப் பின் தேவலோகம் சென்று இந்திரன் வழிபட்டு வந்த சோமஸ்கந்தனின் சிலையை அதற்குப் பரிசாகக் கேட்டார். இதில் இருந்தே அவர் எந்த அளவிற்கு சிவபெருமான் மற்றும் முருகன் மீது பக்தி கொண்டு இருந்தார் என்பது விளங்கும்.

ஆதி சங்கரர்
அத்வைத்யத்தை போதித்த ஆதி சங்கரர் சைவ சமயத்தை சார்ந்த தத்துவஞானி. சங்கரரின் எதிரியான அபினவ குப்தா என்பவர் சங்கரருக்கு உடல் உபாதைக் கொடுத்து அவரை வேதனைப் படுத்தினார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி அவரை திருச்செந்தூரில் உள்ள ஜெயந்திபுரத்துக்கு சென்று அங்கு முருகனை வேண்டுமாறுக் கூறினார். சங்கரரும் ஜெயந்திபுரத்துக்குச் சென்று ஸ்கந்தனை வழிபடத் துவங்கியபோது அங்கு முருகனின் காலடியில் ஆதிசேஷன் விழுந்து வணங்கியதைக் கண்டார். உடனே அவர் பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் நிலையில் ஷண்முகரைப் போற்றும் ஷண்முக புஜாங்கம் என்ற பாடலை பட அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது. ஷண்முக புஜாங்கத்தை ஓதிக் கொண்டு திருநீரை அணிந்து கொண்டால் எப்பேற்பட்ட நோயும் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

அருணகிரிநாதர்



முருகப் பெருமான் தீயவர்களுக்கும் அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகளை தருகிறார். பல தீய பழக்கங்களுக்கும் அடிமையான அருணகிரிநாதர் தனது தவற்றை உணர்ந்து கொண்டப் பின் ஆலய கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அவரைக் காப்பாற்றிய முருகன், அவருக்கு திருநீறையும், ஜெப மாலையும் தந்தார் (திருப்புகழ் v. 106). அதன்பின் அருணகிரி முருகனின் அனைத்து தலங்களுக்கும் விஜயம் செய்து அவரை துதித்து திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பாடினார். அதற்கு முன்னால் அவருக்கு தனது புனித பாதங்களை முருகப் பெருமான் ஸ்வாமிமலை ஆலயத்தில் காட்டினார் (திருப்புகழ் v. 199). காளிதேவியின் பக்தரான திருவண்ணாமலையின் அரசன் ஒருமுறை அருணகிரிநாதரிடம், அனைவர் முன்னிலையிலும் முருகனைக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட முருகன் அனைவர் முன்னிலையிலும் அங்கு தோன்றி அருணகிரிநாதருக்கு கொடுக்கப்பட்டு இருந்த மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றினர்.

இன்னொருமுறை வில்லிபுத்தூரார் என்ற வைஷ்ணவருக்கும், அருணகிரினாதருக்கும் நடைபெற்ற பாடல் போட்டியில் அருணகிரிநாதர் பாடிய கந்தரந்தாதி என்ற பாடலுக்கு வில்லிபூத்தூரரால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் தோல்வியுற்ற வில்லிபுத்தூரார் தமது காதுகளைக் கிழித்துக் கொள்ள முயன்றபோது அருணகிரிநாதர் அவரை தடுத்து அந்த துன்பத்தை ஏற்றுக் கொண்டவில்லிபுத்தூராரை முருகனின் அருளினால் காப்பாற்றினார். அது போல இன்னொருமுறை திருவண்ணாமலை மன்னன் அருணகிரிநாதரிடம் தேவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஒரு மலரைக் கொண்டு வருமாறுக் கூற அதைக் கொண்டு வர சென்ற அருணகிரிநாதர் தன்னை ஒரு கிளிப் பறவையாக மாற்றிக் கொண்டு பறந்து சென்றதும், அவர் திரும்பி வருவதற்கு முன்னரே அந்த மன்னன் அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். ஆகவே அதுமுதல் அருணகிரிநாதர் பார்வதியின் கையில் நிரந்தரமாக கிளிப் பறவை உருவில் தங்க வேண்டி இருந்தது. அருணகிரிநாதரின் அற்புதமான கருத்துக்களைக் கொண்ட முருகன் மீதான பாடல்கள் காலத்துக்கும் அழியாமல் நிற்பவை.

காசியப்ப சிவாச்சாரியார்


இவர் தமிழில் கந்தபுராணத்தை இயற்றியவர். இதில் உள்ள முதல் வரிகளை தமது பக்தர்களுக்காக கந்தனே இயற்றினார். சிவாச்சாரியார் இதை இயற்றி வெளியிட்டபோது ஒரு புலவர் எழுந்து அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, முருகனே அங்கு தோன்றி அந்த எதிர்ப்பை வலிவிழக்கச் செய்தார். வேலவின் மீது அபார பக்தி கொண்ட சிவாச்சாரியார் இன்றும் மக்களிடையே பிரபலமாகவே இருக்கின்றார்.

குமரகுருபரர்

இவர் ஐந்து வயதானவரை ஊமையாக இருந்தார். ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறுமுகனை வேண்டினார்கள். அதன் பின் அவருக்கு பேச்சு வந்துவிட்டது. அதன் பின் பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்த அவர் முருகன் மீது கந்தர்கலி வெண்பா மற்றும் வேறு பல பாடல்களைப் பாடி உள்ளார். அவர் வாரணாசியில் சைவ மடத்தை நிறுவி சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர். அவரைப் பொறுத்தவரை முருகனை அவர் குழந்தையாகவே பார்த்தவர். முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ் என்ற பாடலை இயற்றினார்.


திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்
திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் முருகன் மீதான பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் முருகனை ஒரு தாயுள்ளம் படைத்தவராகவும், ஒரு தாயார் எப்படி தமது குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்கின்றார் என்பதைக் எடுத்துக் கூறி முருகன் மீதான பாடலை பாடி உள்ளார் (திருப்போரூர் சன்னிதி முறை ). மதுரை தமிழ் சங்கத்தில் இருந்த புலவர் ஒருவரின் வம்சாவளியிரான திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், திருப்போரூர்ரை கண்டு பிடித்து அதை சீர்படுத்தியவர். முன்னர் உண்மையில் அந்த இடம் பனைமரங்கள் அடர்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஒரு மண் புற்றில் முருகன் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்தார். திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் அந்த புற்றில் இருந்த முருகனின் சிலையைக் கண்டுபிடித்து எடுத்து, அங்கு ஆலயத்தை அமைத்து அதில் முருகனின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

சுப்ரமணிய முனிவர்


இவர் முருக பக்தர் மட்டும் அல்ல, மிகப் பெரிய புலவரும் ஆவார். அவர் முருகனைப் போற்றிப் தணிகை திருவிருத்தம் என்பதைப் பாடி கண் பார்வையை இழந்துவிட்ட ஒரு பக்தருக்கு கண் பார்வை கொடுக்குமாறு முருகனை வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் அவர் கேட்ட வரத்தை அருளினார்.

வள்ளலார்


இந்த வடலூர் துறவி சமரச சன்மார்கத்தை போதித்தவர். ஞான தேசிகன் என்ற உருவில் வந்த முருகன் இவருக்கு அருள் புரிந்தார். அவர் இயற்றிய திருவருட்பா (ஐந்தாம் திருமுறை, தேவமணிமலை) ஆறுமுகன் மீது அவர் கொண்டு இருந்த பக்தியை எடுத்துக் காட்டி, அவர் பாதத்தில் சரண் அடைந்தால் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்லவை நடக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

தேவராஜா ஸ்வாமிகள்


முருகன் பக்தி இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் கந்தர் ஷஷ்டி கவசத்தை இயற்றிய தேவராஜா ஸ்வாமிகளும் ஒருவர். ஸ்கந்தனின் அருளினால் அவருடைய பிரச்சனை தீர்ந்தது. அதை அழகான செய்யுள் போன்றக் கவிதையில் அவர் பாடி உள்ளார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தோன்றும் நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், மனத் துயர்களின் காரணங்களையும் கூறி, அந்த நோய் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் எப்படி முருகனின் வேல் நிவர்த்திக்கின்றது என்பதை அதில் பாடலாகப் பாடி உள்ளார். அது மட்டும் அல்லாமல் முருகன் எந்தெந்தப் பெயர்களில் வழிபடப்படுகிறார் என்பதையும் கூறி உள்ளார்.

வள்ளிமலை ஸ்வாமிகள்


மைசூர் மகராஜரின் சமையல்காரராக இருந்த அர்த்தநாரி என்ற இவர் கடுமையான வாயிற்று வலியினால் அவதிப்பட்டு பழனி ஆண்டவரிடம் சரண் அடைந்து குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் திருவண்ணாமலையில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் சிஷ்யராகி, அவர் அறிவுறுத்தியபடி வள்ளி மலைக்குச் சென்றார். அங்கு சென்று முருகன் வழிபாட்டு மரபை போதித்தார். அவர் திருப்புகழ் எனும் பாடலைப் பாடி உள்ளார். அவர் எப்போது முருகனை துதித்தாலும், முருகன் அவருக்கு மயிலாக வந்து காட்சி தந்தாராம்



பாம்பன் ஸ்வாமிகள்

சட்டப்பன் மற்றும் செங்கமலம் என்ற பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் அப்பாவு. அவரை குமாரகுருதாசன் அல்லது பாம்பன் ஸ்வாமிகள் என்றும் அழைப்பார்கள். அவர் முருகனின் பெரும் பக்தர். 1923 ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது கணுக்கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது முறிந்து விட்ட கணுக்காலை மருத்துவத்தினால் நிவாரணம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். ஆனால் அவர் மனதை தளர விடவில்லை. அவர் தனது பந்தத்தை துறந்து முருக பக்தரானார். முருகனிடம் தனது நோயை நிவர்த்திக்குமாறு வேண்டிக் கொண்டார். மருத்துவ மனையில் இருந்தபோது அவரது இடது கணுக்கால் முட்டியை அங்கு வந்த இரண்டு மயில்கள் வருடிக் கொடுத்தன. அவ்வளவுதான் அவருடைய கால் வலி உடனே நின்றது. அதைத் தவிர முருகன் ஒரு குழந்தையின் உருவில் வந்து தனது வேலினால் அவரது முறிந்து போன காலை தடவி விடுவது போல உணர்ந்தார். அதன் பின் அவர் கால் நல்ல நிலைக்கு வந்துவிட்டது. அவர் பாடிய ஷண்முகக் கவசத்தை பக்தியோடு பாடினால் பல நோய்கள் விலகும், மன பயமும் ஒழியும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அவருக்கு முருகனே நேரில் காட்சி தந்தார். முருகன் மீது பல பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

முத்துஸ்வாமி தீட்சிதர்


கர்நாடக பாடல் கீர்த்தனைகளை இயற்றி உள்ள இந்த இசை ஞானிக்கு திருத்தணி ஆலயத்தில் முருகப் பெருமான் சிறுவன் உருவில் காட்சி தந்துள்ளார். அது முதல் அவருடைய கீர்த்தனைகளில் முடிவாக குருகுஹா என்ற வார்த்தைகள் இருக்கும் வகையில் அவற்றை இயற்றினார்

குணசீலர்

ஐவரும் முருக பக்தர். புலவர். ப்ரிதிவாட்டி பயங்கரன் என்பவர் ஒருமுறை இவரை பாடல் போட்டிக்கு அழைத்தார். குணசீலரும் அதில் வெற்றி அடைய முருகனின் அருளை வேண்டினார். ஆனால் அந்த போட்டியில் அவரே ஆரம்பித்த பாடலை முடிக்க முடியாமல் திணறியபோது, அவரால் புறங்கணிக்கப்பட்ட சிஷ்யர் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்த ஆட்டிடையன் ஒருவர் அதை முடித்துக் கொடுத்தார். அந்த சிஷ்யரின் வாதத் திறமையை பார்த்த பயங்கரன், சிஷ்யரின் திறமையே இப்படி உள்ளது என்றால், குரு இன்னும் எத்தனை திறமையாக இருப்பார் என எண்ணி பயந்து கொண்டு குணசீலரின் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னரே குணசீலர் அங்கு வந்து தன்னைக் காப்பாற்றியது முருகனே என்பதை உணர்ந்து கொண்டார். 

பகழிகுட்டர்

இவர் ஒரு வைஷ்ணவராக இருந்தாலும், முருக பக்தி மிக்கவர். அவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்தபோது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடலை பாட அவருடைய வயிற்று வலி நின்றது. அந்த காலத்தில் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களிடையே கருத்து வேற்றுமை ஓயாது இருந்து கொண்டு இருந்ததினால், முருகனிடம் பக்தி கொண்டு இருந்த இவரை வைஷணவர்கள் மதிக்காமல் இருந்தார்கள். ஆனால் முருகன் தன்னுடைய பக்தரை அந்த நிலையில் இருக்க விடவில்லை. அவருடைய பக்தியின் மேன்மையை உலகிற்குக் காட்ட விரும்பினார். ஆகவே ஆலயத்தில் தன்னுடையக் கழுத்திலிருந்த மாணிக்க மாலையை பகழிகுட்டரின் கழுத்தில் விழ வைத்தார். ஆலயத்தில் அதைக் காணாமால் தேடிய அதிகாரிகள் அந்த மாலை பகழிகுட்டரின் கழுத்தில் இருந்ததைக் கண்டு தம்முடைய தவறை உணர்ந்து அதுமுதல் பகழிகுட்டருக்கு தகுந்த மரியாதையை தந்தார்கள்.

சிதம்பர முனிவர்

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பர முனிவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவஞான யோகி என்பவருடைய சிஷ்யராக இருந்தார். அவருடைய நோயை ஆறுமுகப் பெருமான் தீர்த்து வைத்தார் (ஷேத்திரகோவை பிள்ளை தமிழ்). முருகனைக் குறித்து நிறையப் பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.
பல்வேறு பண்பாடுகளை காட்டுபவர்



குறிஞ்சியின் கடவுளான முருகன் பழங்குடி இனத்தவரின் தன்மைகளைக் கொண்டவர். அந்த மலைவாழ் மக்கள் முருகனை தெய்வப் பிறவியாகவே ஏற்று, அவரே தம்மை இயற்கை அழிவு மற்றும் கொடிய வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பவர் என்று நம்பினார்கள். அவர்கள் வேடுவர்கள் என்பதினால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் வேல் போன்ற ஈட்டிகளையே பயன் படுத்தி வந்தார்கள். அதனால்தானோ என்னவோ அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க சக்தி தேவியானவள் அசுரனைக் கொல்ல முருகனுக்கு வேல் எனும் ஆயுதத்தைக் கொடுத்தாள். வேல்கம்பு என்பது முருகனுடைய பலத்தை மட்டும் காட்டுவதாக அமையவில்லை, அது வேடுவர்களின் தன்மையைக் குறிக்கும் ஒரு சின்னமாகவும் ஆயிற்று. வேடர்கள் அவரை மலை மீது வழிபடுகிறார்கள். சங்க இலக்கியங்கள் வேலன் வெறியாடல் என்ற பழக்கம் இருந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. வேல்கம்பு என்பது முருகனுக்கு மட்டும் அல்ல வேடர்களுக்கும் அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத முக்கியமான ஆயுதமாயிற்று. முருகன் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் முருகனுக்குப் காவடி எடுத்தும், அவருக்குப் படைக்க பால் குடம் ஏந்தியும், உடல் முழுவதும் சிறிய அல்லது பெரிய அளவிலான வேல்களை குத்திக் கொண்டும் செல்வார்கள். முருகன் இளமையும், அழகையும் கொண்டவர் என்பதினால் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் இந்தப் பழக்கங்களை வைத்துக் கொண்டு உள்ளார்கள்.

நகர்ப்புறங்களில் கூட முருக வழிபாட்டு மரபு பரவி வருவதினால் அங்கும் சில ஆலயங்களில் மலைப் போன்ற அமைப்பை அமைத்துள்ளார்கள். முருகன், வள்ளி, தெய்வானை போன்றவர்களின் சிலைகள் போற்றத் தக்க வகையில், அழகுற செய்யப்பட்டு, ஆலயங்களில் வைக்கப்பட்டு முறையான வழிபாடுகள் மற்றும் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். அனைத்து பிரிவு மேல்குடி மக்களும் கூட முருக வழிபாட்டு மரபு முறையை வெவேறு வழிகளில் பரப்பி வருகிறார்கள். கிராமிய மக்களும் கூட முருகனுக்கு தகுந்த சடங்குகளை செய்தும் விழாக்கள் எடுத்தும் அவரை வழிபாடு செய்கிறார்கள்.
கலிதீர்த்தவர்

எங்கெங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் தமது தெய்வீக சக்தியைக் காட்டி தவறு செய்பவர்களை திருத்தியும், அவர்கள் தாமே தமது குற்றங்களை அறிந்து கொள்ளவும் வழி வகுக்கின்றார். அதனால்தான் மனித உருவெடுத்து வந்து தம்மை அனைவரும் எளிதில் காண வழி வகுத்தார். வள்ளியை அடையும் முன்னர் கூட தன்னை ஒரு வேடனாகவும், வயதானவராகவும் காட்டி அதன் பின்னரே தமது தெய்வீகத்தை வெளிப்படுத்தினார். முரட்டுத் தனமாக அடங்காமல் இருந்த செம்மறி ஆடு, மயில் மற்றும் சேவலை அடக்கி அவற்றுக்கு அருள் புரிந்தார். தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, நாரத முனிவர் செய்த யாகத்தில் அடக்க முடியாமல் இருந்த செம்மரியாட்டை வீரபாகுவை அனுப்பி பிடித்து வரச் செய்து அதை தனது மலைக் குன்றாக்கிக் கொண்டார்.

அது போலவே சூரபத்மன் தன்னை மாமரமாக மாற்றிக் கொண்டபோது தனது சக்தி வேலினால் அதை இரண்டாகப் பிளந்து அவற்றை சேவல் மற்றும் மயிலாக மாற்றினார். சேவல் அவருடையக் கொடியின் சின்னமாகவும், மயில் அவருடைய வாகனமாகாவும் மாறின.
முஸ்லிம் சமுதாயத்தினரால் போற்றப்படுபவர்

சில முஸ்லிம் சமுதாய மக்களும் அவரை வணங்குகிறார்கள் என்பது வியப்பைத் தரும். கந்தர் அலங்காரத்தில் முருகனை ராவுத்தர், அதாவது மாவீரன் என்று அருணகிரிநாதர் அழைத்துள்ளார் (V. மறவேன் 1.8). அதுபோலவே சிதம்பர சுவாமிகளும் அவரை துருக்கர் (முஸ்லிம்) எனக் கூறி உள்ளார். கொங்கணர், ஐயர், உடையார் , கோசலர், குர்ஜராஸ், சிங்களவர் (இலங்கைன்), சௌணக்கார், வந்கலர், எளர் (இலங்கைன் தமிழர்), தெலுங்கர், அங்கர், கலிங்கர், மற்றும் கன்னடியர் போன்றவர்களும் முருகனை தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்

திருத்தணி மலை உச்சியில் இருந்து கிழக்குப் பகுதி கார் தெருவு தெரியும். அங்கிருந்த நவாப் ஒருவர் பல கிலோ அளவிலான கற்பூரத்தை ஏற்றி வைக்கும் அளவிற்கான மிகப் பெரிய அண்டா ஒன்றை அந்த ஆலயத்துக்கு தந்ததும் அல்லாமல், முஸ்லிம் மக்களின் இசைக் கருவிகளை தினமும் இசைக்க ஒரு மண்டபத்தையும் தானமாகத் தந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையை விலக்கியதினால் (இபிட், p. 236) ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டி அதற்கு பிரசன்னா காடரீஸ்வரம் என்ற பெயரை சூட்டி தனது பக்தியை வெளிப்படுத்தினார். திருத்தணி மலைமீது உள்ள ஆலயத்தில் வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு முருகப் பெருமான் ஒரு பகீரைப் (இபிட், p. 236) போலக் காட்சி தந்ததினால் அவரை இந்துக்களுடன் சேர்த்து முஸ்லிம் சமுதாய மக்களும் வணங்குகிறார்கள். [ஆசிரியரின் குறிப்பு :- சமீபகாலம்வரை திருத்தணி படை விழாவில் முஸ்லிம் சமுதாய பாடகர்களும் கௌரவப் பாடகர்களாக அழைக்கப்பட்டு பாடல்களைப் பாட அங்கு ஏற்பாடுகளை செய்து வந்தார்கள். இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கு வருடா வருடம் நூற்றுக் கணக்கான முஸ்லிம் சமுதாயத்தினர் வருகை தருகிறார்கள்.

படர்ந்துவரும் இந்தியக் கலை


முருக வழிபாட்டு மரபு இந்தியாவின் பல பாகங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரவி வருகிறது. கார்திகேயரின் ஆலயங்கள் இலங்கைா, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர் , மௌருஷியஸ், இந்தோனேஷியா, பிலிபீன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந், ஆப்ரிக்கா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் சென்று குடியமர்ந்துள்ள இந்துக்களினால் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முருகனுக்கு ஏற்ற அனைத்து சடங்குகளும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அங்கு நடைபெறும் ஆலய விழா மற்றும் பண்டிகைகளில் கிராமிய கலையான காவடி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தைபூசம், கிருத்திகை, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியில் உள்ள நாடுகளில் கட்டப்பட்டு உள்ள முருகன் ஆலயங்களில் பல்வேறு வகைகளிலும் பக்தர்கள் வழிபாட்டை செய்கிறார்கள். அது திருவிழா போலவே காட்சி அளிக்கும் வகையில் நடைபெறும்போது அனைத்து பிரிவையும் சேர்ந்த பக்தர்கள் திரளாக அங்கு சென்று அதில் கலந்து கொள்கிறார்கள்.

ஆணவத்தையும், அறியாமையும் அழித்தவர்









பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்

அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று உள்ளது.

சங்க காலத்தை சேர்ந்த அவ்வையார் எனும் ஞானப் பெண்மணி தனது அறியாமையை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று உள்ளது. ஒருமுறை அந்தப் மூதாட்டி மதுரைக்குப் போய் கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு நாவல் மரத்தின் அடியில் சென்று அங்கு அமர்ந்து கொண்டு இருந்தாள் . அப்போது ஆட்டிடையன் உருவில் அங்கு வந்த முருகன் மரத்தில் ஏறிக் கொண்டு அவளிடம் சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டார். அவளோ தனக்கு சுடாத பழமே வேண்டும் என்றாள். அவர் மரத்தில் இருந்து பழங்களைப் பறித்து வேண்டும் என்றே சிலவற்றைக் கீழே போட அதை பொறுக்கி எடுத்துக் கொண்டவள், அதன் மீது ஒட்டிக் கொண்டு இருந்த தூசியை தட்டுவதற்காக அந்தப் பழங்களை வாயினால் ஊதினாள். உடனே அந்த சிறுவன் அவளிடம் நீயேன் சுட்டப் பழங்களை எடுத்துக் கொள்கிறாய் எனக் கேட்க அப்போதுதான், அவ்வையாருக்கு தனது அறியாமை புரிந்தது. அதன் அர்த்தத்தை அவரிடம் இருந்து தெரிந்து கொண்டவளுடைய அகந்தை மற்றும் அறியாமை அன்று முதல் அழிந்து போக அவள் எளிய வகையில் வாழத் துவங்கினாள். (திருப்புகழ் 441).

சிவபெருமான் தான் நாரதரிடம் இருந்துப் பெற்றுக் கொண்ட மாம்பழத்தை யாருக்கு தருவது என முடிவு செய்வதற்காக ஒரு போட்டி வைத்தார். தனது இரண்டு புதல்வர்களான முருகனையும், கணேஷரையும் உலகை சுற்றிவிட்டு வலம் வருமாறு கூறி போட்டியை துவக்க முருகன் உடனேயே தனது மயில் மீது ஏறி அமர்ந்து கொண்டு உலகை சுற்றக் கிளம்பினார். ஆனால் அதில் எளிமையான மற்றும் புத்திசாலியான விநாயகர் தன்னுடைய பெற்றோர்களை சுற்றி விட்டு அந்தப் பழத்தைப் பெற்றுக் கொண்டார். அதுவே முருகனின் அகந்தையை அழித்தது. ஆகவே அவ்வையாரின் சம்பவம் இதற்கு முன்னரே நடைபெற்று இருந்திருக்க வேண்டும்.

அதுபோல கைலாசத்துக்கு வந்த பிரும்மா முருகனை மதிக்காமல் இருக்க, அதனால் கோபமுற்ற முருகன் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரும்மாவிடம் கேட்க , அவரால் அதை சரிவர கூற முடியாததினால் அவரை சிறை பிடித்து வைத்தார். அதன் பின் சிவபெருமானே பிரும்மாவை மீட்டுக் கொண்டு செல்ல வந்தபோது முருகன் சிவபெருமானையே தன்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார். பிரும்மாவிற்கு அவர் கொடுத்த தண்டனை அவருடைய செருக்கு அல்லது தலைகனத்தைக் குறைக்கவே தவிர வேறு எதற்கும் இல்லை. சர்வ வல்லமை படைத்தவர் என்றாலும் சிவபெருமான் எளிய முறையில் தனது மகனிடம் வந்து பாடம் கற்றுக் கொண்டது முருகனின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டவே.

சிவபெருமானின் பெரும் பக்தரான பொய்யாமொழிப் புலவர் என்பவர் ஒருமுறை, தான் பாடினால் சிவனை மட்டுமே போற்றிப் பாடுவேன் என்று கூறி விட்டு முருகனைப் போற்றிப் பாட மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் ஒரு வேடன் வேடத்தில் வந்து அந்த முனிவரிடம் சிவனும் முருகனும் ஒருவரே என்றும் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் கூறி அவருடைய அகந்தையை அழித்தார் (முத்துகுமரன், p. 578).
முடிவுரை

முருக வழிபாட்டு மரபு இந்தியாவில் ஆழமாக வேர் ஒன்றி உள்ளது. அந்த மரபு அதிக மக்களை கவர்வது மட்டும் அல்லாமல் பக்தர்களிடையே ஒற்றுமை மற்றும், ஒன்றிணனைந்து செயலாற்றுவதை போதிக்கின்றது. முருகனைப் பற்றி போற்றும் இலக்கியங்கள் பல உள்ளன. கந்தர்ஷஷ்டி கவசம், ஷண்முகக் கவச்சம், சுப்பிரமணிய புஜாங்கம், கந்தர் அழக்காரம், கந்தர் அனுபூதி, திருமுருகாற்றுப் படை, கந்த புராணம், தணிகை புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை அவற்றில் சில. அவற்றைத் தவிர ஆலய ஸ்தலப் புராணங்களும் பக்தர்களால் படிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே சமய நூல்கள் என்பதாக மட்டும் இல்லாமல் அங்கு, தியாகம், தவறு செய்யும்போது ஏற்படும் பய உணர்ச்சி போன்ற அனைத்தையும் மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன.

ஒரியா கடவுளான முருகனே பல உருவங்களை எடுத்து எவை செய்யக் கூடியவை, எவை செய்யக் கூடாதவை என்பதை உலகிற்குக் காட்டுகிறார். அவருடையப் பிறப்பே ஒரு முக்கியக் காரணத்திற்காக அமைந்தது என்பதினால் அதையும் அவர் நிறைவேற்றினார். அவருக்கு பெற்றோர்களின் அன்பு, சகோதரப் பாசம், அரச பதவி, தெய்வீகம் என அனைத்தும் கிடைத்தது.ஏற்பாடு செய்யப்படும் திருமணம் மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டின் முக்கியத்துவத்தையும் காட்டினார், படைத் தலைவராக இருந்து தனது பராகிரமத்தைக் காட்டினார். நீதியை நிலைநாட்டினார். தனது பக்தர்களின் துயர்களை தீர்த்தார். ஞானம், இளமை மற்றும் அழகைக் காட்டினார். அவை அனைத்தையும்விட அவர் தமிழர்களின் கடவுளாக உள்ளார். அவருடைய பல்வேறு தோற்றங்கள் பல்வேறு குணங்களைக் எடுத்துக் காட்டின. அவரை நம்மால் எடை போட முடியாது, நமது அறிவுத் திறனுக்கும அப்பாற்பட்டவர் என்றாலும் அவரை நம்மால் அடைய முடியும்.


Original article in English: "Facets of Murukan" by Prof. Dr. Mrs. V. Balambal


தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

கோரக்கரின் குருபக்தி




ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக் கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. பிறகு அடுத்துள்ள நாட்டிற்கு சென்றார் மச்சமாக இருந்து மனிதனாக மாறிய அந்தப் பெரியவர்.இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின் கருணையினாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டியும் உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார். இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார். கிடைத்தால் உண்பார். இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல், வனங்களின் வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒருநாள், சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று, நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு, இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர், அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும்.

திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை வாங்கி முந்தானையிலே முடிந்துவைத்துவிட்டு, வேலைகளைச் செய்யலானாள் அந்த அம்மாள்.பிறரை கலந்தாலோசிக்காமல் அந்தத் திருநீற்றை உட்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. அண்டை வீட்டிலுள்ள தன் தோழியிடம் இதைப்பற்றிக் கூறினாள். அவளோ, யார் எதைக் கொடுத்தாலும் நம்பி விடலாமா? எத்தனையோ பரதேசிகள் வருகிறார்கள். அவர்களெல்லாம் உண்மையான துறவிகள் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களுள் ராவணச் சந்நியாசியும் இருக்கலாம். பைராகிகள் சொக்குப்பொடி போட்டு பெண்களை அழைத்துப் போவதும் உண்டு என உனக்குத் தெரியாதா? என்றாள். இவள் மனம் குழம்பிவிட்டது. எனவே விபூதியை அடுப்பில் போட்டுவிட்டாள். 12 ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் ஒருமுறை அந்த வீட்டின் முன் வந்து நாராயணா என்று கூறி நின்றார் மச்சேரந்திரநாதர். முன் போலவே அவளும் பிச்சையிட வந்தாள். இவர் அவளைப்பார்த்து, அம்மா! முன்பு திருநீறு கொடுத்தேனே, அந்தக்குழந்தை சவுக்கியமா? என்றார். அவள் பயந்து போனாள். இவரோ, மகா தபஸ்வியாக இருக்கிறார். சபித்து விடுவாரோ என்றுபயந்து நடுங்கினாள். தயங்கியவாறே விஷயத்தை சொன்னாள். இவரோ, நடந்தது நடந்துவிட்டது. போகட்டும். சாம்பலை எங்கே கொட்டினாய்? என்று கேட்டார். அடுப்புச் சாம்பலைக் கொட்டிய குப்பைமேட்டைக் காட்டினாள்.


அவள் காட்டிய குப்பை மேட்டருகே சென்ற மச்சேந்திரர் சிறிது நேரம் மவுனமாக தியானித்துப் பிறகு, ஹம்ஸோவரம் என்று மும்முறை உச்சரித்தார். குப்பை மேட்டுக்குள்ளிருந்து ஹம்ஸோவரம் என்று ஒலி எழும்பியது. உடனே ஆட்களை அழைத்து வெகு பத்திரமாக குப்பையை தோண்டும்படி கட்டளையிட்டார். அந்த குப்பைக்குழிக்குள் பன்னிரண்டு வயதுடைய சிறுவன் அமைதியாகத் தூங்குவது தெரிந்தது.கண்டவர் வியந்தனர். இந்தப்பிள்ளை காற்றும், நீரும், உணவும் இன்றி, எப்படி உயிர்பெற்று இதனுள் இருந்தான் என பேசினர். ஊர் முழுவதும் இதே பேச்சாகி விட்டது.மச்சேந்திரர், குழந்தையை மேலே எடுத்து, அவயங்களை அசையச் செய்தார். இளைஞன், கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து நின்றான். இதற்குள் வணிகன் தன் மனைவியை நோக்கி, பெரியவர் பேச்சைக் கேட்காமல், அவசரப்பட்டுவிட்டாயே! என்று கடிந்தார். இருவரும் மச்சேந்திரர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தனர். அவர்களிடம் மச்சேந்திரர், உங்களுக்கு நல்லதொரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி, குப்பையிலிருந்து எழுந்த மகனை நோக்கி, மகனே! வருக, வருக! என அழைத்துக்கொண்டு தமது யாத்திரையைத் தொடர்ந்தார்.பூமியிலே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தாலும், பூமாதேவியால் காக்கப்பட்டதாலும் இவனுக்கு கோரட்சகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இப்பெயர் கோரக்கர் என்று ஆயிற்று. இநத கோரக்கர்தான் கபீர்தாசருடன் வாதம் புரிந்தவர். தனக்கு உபதேசம் செய்யும்படி மச்சேந்திரரைக் கேட்க, அவரோ, உரிய காலம், நேரம் வந்ததும் யாமே செய்வோம், என்றார்.கோரக்கர் மிகுந்த சந்தோஷத்துடன் குருநாதரைப் பின் தொடர்ந்தார். அங்கே, அழகிய காடுகளில் பர்ணசாலையில் முனிவர்கள் வசித்தனர். உபதேசம் பெறவும், சாஸ்திரங்கள் கற்கவும் மக்கள் இவர்களை நாடி வந்தனர். மச்சேந்திரர் ஓரிடத்தில் தங்காமல் சென்றுகொண்டே இருந்தார்.

கோரக்கர் தனது குருவிற்காக அனைத்து பணிவிடைகளையும் செய்து, சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தார். ஒருநாள் மச்சேந்திரநாதர் கோரக்கரிடம், அடுத்துள்ள நகருக்குச் சென்று பிச்சை எடுத்துவா என்றார். கோரக்கரும் சென்றார். அங்கே ஒரு வீட்டிலே பூஜை நடந்துகொண்டிருந்தது. கருணை மிக்க அந்த வீட்டுப் பெண்மணி, எல்லாவிதமான காய்கறி, பட்சணங்கள், பாயசம் முதலியவைகளை உணவளித்தார். அதை ஏற்றுக்கொண்டு மிகுந்த ஆனந்தத்துடன் குருவை அடைந்தார்.குருவும் மிகவும் திருப்திகரமாக சுவைத்துசுவைத்து சாப்பிட்டார். பிறகு நாளைக்கும் இதே வீட்டில் சென்றுவாங்கிவா என்றார். கோரக்கர் கவலையுற்றார். ஒரு வீட்டில் தினமுமா விசேஷங்கள் நடைபெறும் என எண்ணியவராய், அடுத்தநாள் அந்த வீட்டிற்குச் சென்று, அம்மணி! நீங்கள் நேற்று அளித்த அமுதுவகைகள் மிகவும் திருப்தியளித்தன. என் குருவும் திருப்தியுடன் சாப்பிட்டார். இன்றும் அதுபோலவே வேண்டும் என்றார். அந்தப் பெண்மணி, நேற்று விசேஷ பூஜை நடந்தது. அதனால் பலவகை உணவளித்தேன். தினமும் அவ்வாறு செய்ய முடியுமா? அரிசி வேண்டுமானால் வாங்கிப் போங்கள் என்றாள். இவரோ, அந்தச் சமையல்தான் வேண்டும் என பிடிவாதமாகக் கேட்டார். இதென்ன பிடிவாதம்? உன் குரு, இல்லாததை கொடு என்றால் எப்படி கொடுப்பது? நல்ல குருநாதர்தான். அவர், உன்னிடம் உன் கண்ணைப்பிடுங்கிக் கொடு என்றால் கொடுப்பாயா? என்று கோபமாகக் கேட்டாள்.அதற்கு கோரக்கர், ஏன்? குருநாதர் கேட்டால்தான் கொடுப்பேனா? நீங்கள் கேட்டாலும் தருவேன்.

எனக்குத் தேவை என் குருநாதர் கேட்ட அதே அமுதுதான் என்றார். அப்படியானால், உன் கண்ணைக்கொடு, அமுது கொடுக்கிறேன் என்றாள் அந்தப் பெண் விளையாட்டாக. இவரும், ஓ! அப்படியே ஆகட்டும் என கண்ணைத் தோண்ட ஆயுதம் தேடினார். இந்தபெண் சீடனது உறுதியைக் கண்டு, மீதியிருந்த பட்சணங்களுடன் அமுது கொடுத்தாள். கண்களை தோண்ட முயற்சித்ததால் கண்கள் புண்ணாகி இருந்தது.சீடனைக்கண்ட குரு, கண்களிலென்ன காயம்? என கேட்க, கோரக்கர் நடந்தவைகளை அப்படியே சொன்னார்.உடனே குரு, எனக்கும் உன் கண்கள்தான் வேண்டும். தருவாயா? என்றார். அதற்கு சுவாமி! உடல், பொருள், ஆவி அனைத்தும் உங்களுக்கே அர்ப்பணம். அப்படியிருக்க, கண்களுக்கென்ன? இதோ தருகிறேன் என எழ, அவரைத்தடுத்த குரு, அப்பா கோரக்கா! உன் குருபக்தியை சோதிக்கவே இப்படிக் கேட்டேன். உபதேசம் பெறும் தகுதியை நீ அடைந்துவிட்டாய் என்றுகூறி கோரக்கரின் தலைமீது கைவைத்து ஸ்ரீ ராம தாரக மந்திரத்தை உபதேசித்தார். குரு காணிக்கையாக கண்களைத் தர முன்வந்த கோரக்கரின் குருபக்தி போற்றுதற்குரியது!

திருப்போரூர் முருகன் ஆலயம்

அசுரர்களை எதிர்த்து திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று தலங்களில் முருகப்பெருமான் போரிட்டார். இவற்றில் அசுரர்களின் கன்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு முருகப்பெருமான் திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் ஆகும்.



சென்னையில் இருந்து நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டைத் தாண்டி உள்ளதே திருப்போரூர் முருகன் ஆலயம். அது பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். அதில் உள்ள முருகனின் சிலை ஸ்வயம்புவாம். அந்த ஆலயத்துக்கு செல்ல நல்ல பாதை உள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது. அது குறித்துப் பல கிராமியக் கதைகள் நிலவுகின்றன. 

சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1645 ஆம் ஆண்டு வாக்கில் அந்த இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் சிதம்பர ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மதுரை மீனாஷி தேவியின் பக்தர். ஒரு நாள் தேவி அவர் கனவில் வந்து திருப்போரூரில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டாள். ஆனால் சுவாமிகளோ அந்த தேவி தன் முன்னால் வந்து தனக்கு தரிசனம் கொடுத்தால்தான் அதை செய்வேன் எனப் பிடிவாதமாக அவளைக் காண வேண்டும் என சாப்பிடாமலேயே விரதம் இருந்தார். ஆகவே ஒரு நாள் அவர் முன்னால் மீனாஷி தேவி தோன்றி அவர் தலையை தொட்டு ஆசி கூறினாள். அவரும் அதன் பின் திருப்போரூர் பகுதிக்கு கிளம்பிச் சென்றார். அந்த இடம் அப்போது அடர்ந்த காடாக இருந்தது. போக்குவரத்து வழிகூட இல்லை. ஆனாலும் தனக்கு மதுரை மீனாஷி கட்டளை இட்டபடி அவள் கூறி இருந்த இடத்தை அடைந்தபோது எந்த இடத்தில் ஆலயத்தை அமைப்பது எனக் குழம்பி நின்றார். அப்போது முருகப் பெருமானே ஒரு சிறிய பையனாக அவர் முன் வந்து எந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என அவரை அழைத்து சென்று காட்டியப் பின் மறைந்து விட்டார். அப்போது அங்கு ஒரு புற்று இருந்ததைக் கண்டார். அந்தப் புற்றை விலக்கியபோது அதனுள் வள்ளி, தேவயானை சமேத முருகன் சிலை கிடைத்ததாகவும் அதுவே தற்பொழுதைய திருப்போரூர் ஆலயத்தில் உள்ள சிலை எனவும் நம்புகிறார்கள்.
 அது மட்டும் அல்ல , அந்த இடம் அப்போது ஒரு முஸ்லிம் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அவருடைய மகளுக்கு தீராத வியாதி இருந்தது. மன்னரது ஆஸ்தான பண்டிதர்கள் அந்த மன்னனிடம் சிதம்பர சுவாமிகளை சென்று பார்த்து அவரை வணங்கினால் அவரால் அதை குணப்படுத்த முடியும் என்று கூற அந்த மன்னனும் அவரிடம் சென்று தனது மகளின் நோயை குணப்படுத்துமாறு கேட்க அவரும் முருகனை வேண்டிக் கொண்டு அந்த மன்னனின் மகளை பூரண குணப்படுத்தினார். அதனால் மனம் மகிழ்ந்த அந்த மன்னனும் ஆலயம் அமைக்க நிலமும் தந்து மற்ற உதவிகளும் செய்துள்ளதாக ஒரு கதை உள்ளது.
அங்கு முருகப் பெருமான் வந்தது எப்படி? சூரபத்மனை வதம் செய்தப் பின் முருகன் அந்த அசுரனின் மற்ற அசுரர்களை துரத்தி வந்து திருப்போரூரில் வதம் செய்தாராம். அதனால்தான் திரு என்ற முருகன் போர் புரிந்த இடம் என்பதினால் அது திருப்போரூர் என ஆயிற்றாம். மேலும் அந்த இடத்தில் வள்ளியும் தேவயானியும் அசுரனோடு முருகன் யுத்தம் செய்தபோது தேவர்களைக் காத்து நின்றார்களாம். அங்குதான் முருகனும் வள்ளியும் சேர்ந்து அகஸ்தியருக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை போதித்தார்களாம். மேலும் கான்வ முனிவரின் சாபத்தைப் பெற்ற விஷ்ணு பகவான் தனது மனைவி லஷ்மியுடன் அங்கு வந்து சிவபெருமானை துதித்து சாப விமோசனம் பெற்றாராம். அங்குதான் சிவபெருமான் தமது குடும்பத்தினருடன் வான்மிகநாதர் என்ற பெயரில் வசிக்கின்றாராம் . அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளத்து நீர் முருகப் பெருமானின் ஏற்பட்டது என்கிறார்கள்.
ஆலயத்தில் முருகனின் பல வகைகளான சிலைகளும் உள்ளன. போர்புரிபவரைப் போலவும் குழந்தை வடிவிலும் அவர் காட்சி தருகிறார். அந்த ஆலயத்தில் உள்ள பனை மரத்தின் அடியில் உள்ள எறும்புப் புற்றின் அருகில் வள்ளி சமேத முருகப் பெருமான் தேவயானையுடனும் இருந்தவாறு காட்சி தருகிறார்.


கந்தசுவாமி திருக்கோவில்


அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களின் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மினாட்சி சொக்கநாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

மீனாட்சி அம்பாள்

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

கோவில் கட்டும் பணி

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருப்பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

கோவிலுக்கு நிலம் தானம்


அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி– தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.

உபதேச மூர்த்தி

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

கோவில் அமைப்பு


ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.


நலம் தரும் ஸ்ரீசக்கரம்

கோவில் உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டு, எழுந்தருளச் செய்துள்ளனர். கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச்சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய்தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிட்டும்.

திருமங்கலக்குடி ஆலயம்

(சூரியனார் ஆலயத்துக்குச் செல்லும் முன் கண்டிப்பாக வழிபடவேண்டிய ஆலயம்)




இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து இரண்டு கிலோ தொலைவிலும் உள்ளது. அங்கிருந்து சூரியனார் ஆலயம் ஒரு கிலோ தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான ஆலயம். அதன் பெயர் பிராணதீஸ்வரர் ஆலயம். நவகிரஹ தரிசனம் செய்யப் போகின்றவர்கள் சூரியனார் ஆலயம் செல்லும் முன்னால் முதலில் பிராணதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னரே சூரியனார் ஆலயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்குப் பலன் இல்லை என்கிறார்கள். திருமங்கலக்குடி கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ தொலைவில் உள்ளது. அந்த ஆலயத்தை மங்களாம்பிகை ஆலயம் என்றும் கூறுகிறார்கள் அந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது.



பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்க சோழ மன்னன் அந்த இடத்தின் மன்னனாக இருந்தபோது அவருடைய அமைச்சரான அலைவாணர் என்பவர் மன்னனிடம் கூறாமல் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி திருமங்கலக்குடியில் ஒரு சிவன் ஆலயத்தைக் காட்டினார். அதைக் கேள்விப்பட்ட மன்னன் கோபமடைந்து அவர் தலையை வெட்டி எரியுமாறுக் கூறினார். அதன்படி அமைச்சரின் தலையை வெட்டினார்கள். அவர் மனைவி அந்த ஆலயத்தில் இருந்த மங்கலாம்பிகையிடம் சென்று' உனக்காகத்தானே என் கணவர் இந்த ஆலயத்தைக் காட்டினார். ஆகவே அவர் என்ன பாவம் செய்துவிட்டார்? அவருக்கு நீதான் மீண்டும் உயிர் பிச்சை தர வேண்டும் என வேண்டினாள். அதைக் கேட்டப் பார்வதி சிவபெருமானிடம் அந்த பக்தருக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என வேண்டினாள். அவரும் அவருக்கு மீண்டும் உயிர் பிச்சை தந்தார். வெட்டப்பட்ட தலை உடலோடு சேர அந்த அமைச்சர் மீண்டும் உயிர் பெற்றார். ஆகவே இறந்தவருக்கு பிராணம் தந்த தலமான அதை பிராணதீஸ்வரர் என்று அழைத்தனர். மேலும் மாங்கல்ய பாக்கியம் கிடைத்த இடமான அதை திருமாங்கல்யம் தந்தவள் என்ற அர்த்தத்தில் திருமாங்கல்யக்குடி எனவும் அழைக்கலாயினர் .ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு என்கிறார்கள் .

ஆலயத்தின் மகிமை என்ன என்றால், சூரியனார் ஆலயம் செல்லும் முன் அந்த ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும். முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். ( அந்த கோள் தீர்த்த விநாயகர் கதை என்ன? அது பின்னர்) . அதன் பின் ஆலய மண்டபத்தில் உள்ள நடராஜப் பெருமானை வணங்கிவிட்டு அங்கேயே உள்ள காசி விசாலாட்சியையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அதே மண்டபத்தில் உள்ள சூரியநாரை வணங்கிவிட்டு அவர் எதிரிலேயே அவரைப் பார்த்தபடி உள்ள குருவையும் வணங்க வேண்டும். அவர்களை வணங்கியப்பின் அப்பிரதர்ஷணமாகச் சென்று ( மற்ற ஆலயங்களில் செய்வதைப் போல வலது புறத்தில் இருந்து சுற்றாமல் இடது புறத்தில் இருந்து சுற்ற ஆரம்பிக்க வேண்டும். இதுவே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று ). சனீஸ்வரன், புதன், அங்காரகன், சந்திரன், கேது, சுக்கிரன் மற்றும் ராகுவை என்ற இப்படிப்பட்ட வரிசையில் அந்தந்த சன்னதியில் ஆனந்கிவிட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அதை முடித்தப்பின் மீண்டும் பிரதர்ஷணமாக- வலதுபுறத்தில் திரும்பி மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை வந்து வழிபட்டப் பின்னரே அந்த ஆலய தரிசனம் நிறைவு பெறும்.


எந்த முறையில் பிராத்தனை செய்ய பிரதர்ஷணமாகச் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட அந்த ஆலயத்தில் வழிகாட்டும் பலகை அங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. அது முடிந்தப் பின்னர்தான் அங்கிருந்துக் கிளம்பி சூரியனார் ஆலயம் சென்று அவரை வழிபட வேண்டும். இல்லை எனில் சூரியனை வழிபட்ட பலன் கிடையாதாம்.


நன்றி : சாந்திப்பிரியா

அருணாசலத்தில் அஷ்டலிங்க வழிபாடு



நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.


திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.



இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

01. இந்திர லிங்கம்: கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

02. அக்னி லிங்கம்: கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.


03 எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.


04. நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.


05. வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


06. வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.


07. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.


08. ஈசானிய லிங்கம்:
கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.


நன்றி : பாரத் தி.நந்தகுமார்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கே.பி.சுந்தராம்பாள்:


முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

KB Sundarambal


இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 10 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.



சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.



கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.




K.B. Sundarambal before the microphone at the Columbia Studio Hollway’s gardens in October, 1932. Born on October 11, 1908, she was a great stage artist and a singer.

KBS was known throughout South India as the ” Queen of the Indian stage”, and had just completed her second exclusive recording for Columbia. After more than sixty years of service to the entertainment industry she passed away on September 19, 1980.

Born: October 11, 1908
Died: October 15, 1980 (aged 71)
Spouse: S.G. Kittapa (1927-1933)
Awards: Padmashri

-Courtesy Wiki

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1919களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

KB Sundarambal as Murugan


1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை. அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.



மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.

திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.



1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.

“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.

தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.