Sunday, 21 January 2018

ஆரோக்கியத்தின் காவலன் ஆன்டி ஆக்சிடன்ட்!


ம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயல்படவும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தேவை. அதேபோல், உடல் செயல்பாட்டின்போது, சுரக்கும் சில ரசாயனங்களால், செல்கள், டி.என்.ஏ. மூலக்கூறுகள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பைக் குறைக்க ஆன்டிஆக்சிடன்ட்கள் தேவை.
'நாம் சாப்பிடும் உணவிலேயே ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எந்தெந்த உணவுப் பொருட்களில் இவை நிறைவாக உள்ளது என்பதை தெரிந்து, அவற்றைச் சாப்பிடும்போது, பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்''  ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்.
மாதுளம் பழம்:
பாலிபீனால் ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. இதனால் மாதுளையை ஆன்டிஆக்சிடன்ட் 'பவர் ஹவுஸ்’ என்போம். இந்த ஆன்டிஆக்சிடன்ட், சூரியக் கதிர் வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், திசுக்களில் வீக்கத்தைத் தவிர்த்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. மாதுளம் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பும், ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
இந்தப் பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. பழத்தின் தோல் மற்றும் பட்டையில் அல்கலாய்டு, டேனின் உள்ளதால் இதனையும் பயன்படுத்தலாம்.
பப்பாளிப் பழம்:
மற்ற எல்லாப் பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளியில்தான் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ, சி, தாது உப்புக்களில் இரும்பு, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும், மிகக் குறைந்த கலோரியும் உள்ளன. இயற்கையாகவே விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி பப்பாளிப் பழத்தில் உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை இயற்கையான முறையில் ஊக்குவிக்கும். கொலஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். நல்ல செரிமானத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நல்லது.
எலுமிச்சம்பழம்:
இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில் அதிக அளவு 'பெக்டின் ஃபைபர்’ இருப்பதால், பசியைப் போக்கும். இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவிடும். புண்களைக் குணப்படுத்தவும், இணைப்புத் தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். மன வலிமையை ஊக்கப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்ட இது கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நோய் வராமல் தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஃபிளவனாய்டு என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது.  மேலும் ஃபிளவனாய்டு, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, ஃபோலிக் அமிலம் மற்றும் தாமிரம், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளும் நிறைவாக உள்ளன.

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!


ம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது' என்று ஆலோசனையும் வழங்கினார்.

  மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
 இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
 கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.  

 வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
 வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
 வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
 வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.

  வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
 வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
 இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
 வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
 வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
 வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
 இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
 காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
 துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
 துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
 துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
 200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
 வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
 துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
 பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
 துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.

மசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?

ளதள தக்காளி குருமா, கமகமக்கும் கறிக்குழம்பு, பெப்பர் பீஸ் மசாலா... நினைக்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறும்தானே! வாய்க்கு ருசியையும் சுண்டி இழுக்கும் மணத்தையும் ஒருசேர அளிப்பவை மசாலாப் பொருட்கள். ஆனால், இவை எந்த அளவுக்கு உடலுக்கு நல்லவை?

''பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளைக் பகல் பொழுதில் சாப்பிடுவதுதான் நல்லது. அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் உள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் வெளியே தள்ளிவிடும். அதே சமயம், மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தி உணவு ஜீரணத்துக்கு மசாலா சங்கதிகள் உதவுகின்றன. வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், ஏப்பம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மசாலாப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.'' என்று அட்வைஸ் தருகிறார் உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
மசாலாப் பொருட்களில் இருக்கும் சத்துக்கள் குறித்து அவர் தரும் பட்டியல் இங்கே...

ஏலக்காய்
வாய்த் துர்நாற்றத்தைப் போக்கும். ஹார்மோன்களைத் தூண்டும். வளர்சிதை மாற்றத்தை உண்டுபண்ணும். கோலின், மெக்னீஷியம், மாங்கனீஸ், நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre)ஆகியவை மிக அதிகம். கலோரி, புரதம், மாவுச் சத்து மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஐந்து கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், எதுக்களித்தல் பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாது.

சீரகம்
பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். தினமும் சாதாரணத் தண்ணீரைக் குடிப்பதைவிட, சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரைக் குடிப்பது மிகவும் நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோலின், மெக்னீஷியம், சோடியம் பொட்டாசியம், தாமிரம் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. புரதம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. தினமும் ஐந்து முதல் 10 கிராம் வரை பயன்படுத்தலாம். வயிற்றுப் புண், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.

பூண்டு
'ஒரு பல் பூண்டைச் சாப்பிட்டால் ஓராயிரம் வியாதிகள் ஓடும்’ என்பார்கள். வயோதிகர்களுக்கு வரும் மறதி நோயைக் குறைக்கும். நரம்பில் இருக்கும் நியூரான் செல்களைப் பாதுகாத்து, இறந்த செல்களைப் புதுப்பிக்கும். பக்கவாதத்தையும் குறைக்கும். கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வாயுத் தொல்லை பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். சமைக்காமல் சாப்பிட்டால், எதுக்களித்தல், வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படும். மாவுச் சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கலோரி ஓரளவு இருக்கிறது. புரதம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

கிராம்பு
சொத்தைப் பல்லில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும். பல் வலியைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும். ரத்தம் உறையாமல் தடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கால்சியம், இரும்புச் சத்து, நீரில் கரையாத நார்ச் சத்து  (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், எண்ணெய், பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், தாமிரம், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. அதிகம் சாப்பிட்டால் எதுக்களித்தல் வரும் என்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

வெந்தயம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ரத்தம் உறையும் தன்மையைக் கட்டுப்படுத்தும். 100 கிராம் வெந்தயத்தில் 48 கிராம் நார்ச் சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை வெகுவாகக் குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், கலோரி, ஃபோலிக் ஆசிட், கோலின், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், மாங்கனீஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. கர்ப்பத்தின்போது சர்க்கரை நோய் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால் செக்ஸ் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால் நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

பெருங்காயம்
ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். வாயுத் தொல்லைக்கு நல்ல தீர்வு. கால்சியம், மாவுச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ஓரளவு கலோரியும் உண்டு. தாது உப்புக்களான மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், புரதம் ஆகியவை மிகவும் குறைவு. வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. மற்றபடி அனைவரும் சாப்பிடலாம்.  
இஞ்சி
உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். பசியைத் தூண்டுவதில் இஞ்சிக்கு இணை இல்லை. இஞ்சியில் மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. துத்தநாகம் ஓரளவு இருக்கிறது. குறைந்த அளவு நார்ச் சத்து இருக்கிறது. இதைத் தேனில் ஊறவைத்தும், ரசமாகச் செய்தும் சாப்பிடலாம். இஞ்சிச் சாறு குடிப்பதன் மூலம் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இஞ்சிச் சாறை உடனே சாப்பிட்டுவிட வேண்டும்; இல்லையெனில், வயிற்றில் புண் ஏற்பட்டுவிடும். வயிற்றுப் பகுதியில் புண் ஏற்பட்டு அதீத ரணம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

கசகசா
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். மலச்சிக்கலைக் குணமாக்கும். சருமத்தை மெருகேற்றும் என்பதால் அழகுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கலோரி, புரதம், எண்ணெய், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையும் நார்ச் சத்து  (Soluble Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம் ஓரளவு இருக்கிறது. அசைவ உணவில் இருக்கும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்கும் என்பதால், அசைவ உணவில் அதிகம் இடம்பெறுகிறது.
மிளகு
வெள்ளை மிளகு, கறுப்பு மிளகு, வால் மிளகு என்று மிளகில் பல வகைகள் உண்டு. வால் மிளகும் கறுப்பு மிளகும் மிகவும் காரமாக இருக்கும். உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது கறுப்பு மிளகுதான். வெள்ளை மிளகு அதிகக் காரம் இல்லாதது. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன.  கால்சியம், மெக்னீஷியம், புரதம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், எண்ணெய், நியாசின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவையும் ஓரளவு இருக்கின்றன. சளி, இருமல், தொண்டை கரகரப்புப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் காய்ச்சலைக் குணப்படுத்தவும் மிளகு ரசம் சாப்பிடலாம். பொடித்த மிளகு மற்றும் மஞ்சள் தூளைப் பாலில் கலந்து குடித்தால், தொண்டைக்கு இதமாக இருக்கும். வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், வாயுப் பிரச்னை இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் அளவில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.
ஓமம்
வயிறு உப்புசத்தால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் கலந்த தண்ணீரைக் கொடுக்கலாம். மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. சளி, இருமலைத் தடுப்பதோடு புற்றுநோயையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது ஓமம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. இறைச்சி, பரோட்டா போன்ற உணவு வகைகளைச் சாப்பிடும்போது, கடைசியில் சிறிது ஓமத்தை மெல்வது நல்லது.
மஞ்சள்
நோய்த் தொற்று வருவதைத் தடுத்து, உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். தேவைக்கும் அதிகமான சத்துக்கள் சேரும்போது அதைக் கிரகிக்கவிடாமல் தடுத்து, உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தகர்த்துவிடும். மாவுச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கொழுப்பு, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், காப்பர் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம் கால்சியம், பீட்டா கரோட்டின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைவாக இருக்கின்றன. வயிறு எரிச்சல், வயிற்றுப் புண் உள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மல்லி
உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். வாய்க் கசப்பைப் போக்கும். மலச்சிக்கலைக் குறைக்கும்.
நார்ச் சத்து, கால்சியம், கோலின், பொட்டாஷியம், தாமிரம், ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், மாவு, பாஸ்பரஸ், இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட், மெக்னீஷியம், மாங்கனீஷ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. மிகக் குறைந்த அளவில் நியாசினும் உண்டு.