Sunday, 12 November 2017

காய்களைச் சாப்பிடுங்கள்... நோய்களை விரட்டுங்கள்!

காய்கறிகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நன்மை தருவதும் சுவை மிகுந்ததுமான காய்கறிகளின் முக்கியத்துவம்,  அதில் உள்ள சத்துக்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் `அப்போலோ மருத்துவமனை' தலைமை டயட்டீஷியன் புவனேஸ்வரி.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைப்படி,  ஒருவர் ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், 50 கிராம் முட்டைகோஸ், புரோகோலி போன்ற பச்சை நிற, இலை வகையைச் சேர்ந்த காய்கறிகள். 50 கிராம் கேரட், பீட்ரூட் போன்ற வேர்க் காய்கறிகள். 200 கிராம் நாட்டுக் காய்கறிகளாக இருக்க வேண்டும். ஒருவரின் வயது, பாலினம், அவரது ஒருநாள் உடலுழைப்பு எவ்வளவு, ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதைப் பொருத்து, அவர் என்னென்ன காய்கறிகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவு மாறுபடும்!

ஏன் சாப்பிட வேண்டும்?
காய்கறிகளில் சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் கலோரி குறைவாகவே இருக்கும். எனவே, காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால்கூட, உடல் எடை அதிகரிக்காது. அது ஆற்றலைத் தருவதோடு, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும், வைட்டமின் ஏ,பி,சி,கே போன்ற சத்துக்களும் தரும். மேலும், ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் போனஸ்.
காய்கறிகளில்  பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, இதய நோய்கள், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்க உதவுகின்றன. அன்றாடம் உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது.  எனவே, ஒரே காய்கறியைத் தொடர்ந்து சாப்பிடாமல், அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடப்  பழகிக்கொள்ள வேண்டும்.

எப்படிச் சமைப்பது?
வ்வொரு காய்கறியும் வெவ்வேறு விதமான மணம், சுவை மற்றும் சத்துகளைக்  கொண்டது. காய்கறிகளை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைப்பது, நீராவியில் வேகவைப்பது, வறுப்பது, கடைவது என, நான்கு வகைகளில் சமைக்கலாம். காய்கறியில் இருக்கும் சத்துக்கள் வெளியேறாமல் இருக்க, முறையாகச் சமைப்பது அவசியம். தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைப்பது, கடைசலாகச் செய்வது போன்றவற்றால் சில சத்துக்கள் நீங்கிவிடும். எண்ணெய் சேர்த்து வறுப்பதால், கலோரிகளும் அதிகரிக்கும். எனவே, காய்கறிகளை நீராவியில் வேகவைப்பதே மிகவும் சிறந்த முறை. இதனால், சத்துக்கள் அதிகம் வெளியேறுவது தடுக்கப்படும். காய்கறிகளைச் சமைக்கும்போது முடிந்தவரை தண்ணீர், எண்ணெய் போன்றவற்றைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிதமான வெப்பநிலையில் சமைப்பதே சிறந்தது.

எப்படிச் சாப்பிடுவது?
கூடுமானவரை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக சாலட் செய்து சாப்பிடலாம். 
காய்கறிகளை அவசியம் நீரில் கழுவிவிட்டு சாப்பிடவும். அவற்றை நறுக்குவதற்கு முன்பே தண்ணீரில் கழுவிவிட வேண்டும். நறுக்கிய காய்கறிகளைத் தண்ணீரில் கழுவுவது தவறு.
பெரும்பாலான காய்கறிகளை நன்றாகக் கழுவியதும், தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. காய்கறிகளின் தோல் பகுதியில்தான் பல்வேறு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
காய்கறிகளை நீண்ட நேரம் சமைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக சில நிமிடங்கள்  கூடுதலாக வேகவைத்தால், பெரும்பாலான சத்துக்கள் நீங்கிவிடும்.
காய்கறிகளை நன்றாக மென்று, அரைத்து, பொறுமையாக விழுங்க வேண்டும். இதுவே செரிமானத்துக்குச் சிறந்த வழி.

காய்கறிகளைக் குழந்தைகள் சாப்பிட
குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தர, பெற்றோர்கள் தங்களது உணவின் பெரும்பகுதியில் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி மார்க்கெட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு காயை எடுக்கும்போதும், அதன் சத்துக்களையும் பலன்களையும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இதனால், வாங்க ஆர்வமாக உதவுவதுடன், விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள்.      
காய்கறிகளைச் சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். படிக்கும் குழந்தையைச் சமைக்கச் சொல்வதா என எண்ண வேண்டாம். சமையலில் ஈடுபடும் குழந்தைகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள் பக்கம் திரும்ப மாட்டார்கள்.
குழந்தைகளுக்குக் காய்கறிகளை மட்டும் தனியாகச் சாப்பிடக் கொடுக்கவும். காய்கறிகளை உணவுடன் கலந்துவிட வேண்டாம்.
காய்கறிகளை ஒரு தட்டில் வைத்து, அலங்கரித்துக் கொடுங்கள். எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் உணவை அலங்காரம் செய்துகொடுத்தால், காய்கறிகளை  குழந்தைகளுக்கு எளிதில் பிடித்துவிடும்.

எப்படிச் சுத்தப்படுத்துவது?
காய்கறிகளைக் கழுவும்போது, ஒரு பாத்திரத்தில் வைத்துக் கழுவாமல், குழாய் நீரில் கழுவ வேண்டும்.
காய்கறிகளில் ஏதேனும் ஓட்டை, பூச்சிகள் இருந்தால், அந்தப் பகுதியை நீக்கிவிட்டு, நன்றாகக் கழுவிய பிறகே சமைக்கவும்.
காய்கறிகளைக் கழுவியதும், சுத்தமான துணியில் நன்றாகத் துடைத்து, பிறகு நறுக்கவும்.
ஃப்ரிட்ஜில் காய்கறிகளை வைக்கும்போது, சமைக்காத அசைவ உணவுகளான கோழிக்கறி, மீன் போன்றவற்றின் அருகில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் காய்கறிகளை அதிக நாட்கள்  வைக்கக் கூடாது. அன்றாடம் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.

கலர்ஃபுல் காய்கறிகள்
காய்கறிகளைச் சாப்பிடும்போது, வெவ்வேறு வண்ணக் காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நிறக் காய்கறிக்கும் ஒவ்வொரு விதமான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து இருக்கும். முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற  வெள்ளை நிறக் காய்கறிகளில் ஆன்தோஸான்தின்ஸ் (Anthoxanthins) அதிக அளவு இருக்கும்.
தக்காளி, சிவப்புக் குடமிளகாய் போன்ற சிவப்பு நிறக் காய்கறிகளில் லைக்கோபீன் (Lycopene) சத்து அதிகமாக இருக்கும்.
கேரட்,  பரங்கி போன்ற ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறக் காய்கறிகளில் கரோட்டீனாய்ட்ஸ் (Carotenoids) அதிகம் இருக்கும்.
பச்சை நிறக் காய்கறிகளான வெண்டைக்காய், புரோகோலி, வெள்ளரிக்காய் போன்றவற்றில் லூட்டின் (Lutien) குளோரோபில் (Chlorophyll)  போன்றவை அதிகம் இருக்கும்.
நீலம் மற்றும் கருநீலக் காய்கறிகளில் (கத்திரிக்காய் - ஊதா நிற முட்டைகோஸ்) ஆன்தோசயனின் (Anthocyanin) அதிக அளவில் இருக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?
ஒவ்வொரு பருவகாலத்திலும் எந்தக் காய்கறி அதிகம் விளையுமோ, அதை வாங்கிச் சாப்பிடுவதே சிறந்தது.
காய்கறிகள் நல்ல வண்ணத்தில், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.  ஆனால், பூச்சிகள் நுழையாத, அடிபடாத காய்கறிகளாகப் பார்த்து வாங்கவும். காய்கறிகளில் ஓட்டை இருந்தால், நுண்கிருமிகள் இருக்கும்.
ஒரே வகையான காய்கறிகளையே தொடர்ந்து சாப்பிடுவது, சலிப்பை ஏற்படுத்தும். எனவே, வெவ்வேறு விதமான காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்தவும்.
பச்சை, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், வெளிர் நீலம், சிவப்பு எனப் பல வண்ணக் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணக் காய்கறிகளை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலுக்குத் தேவை ஆன்டிஆக்ஸிடன்ட்!
செரிமான மண்டலம் சீராக இயங்க, உடலில் உள்ள செல்களுக்கு இடையே ஏற்படும் எரிச்சல் காரணமாக ஏற்படும் வீக்கம் (Inflammation) வராமல் இருக்க, கால்சியத்தை உட்செறிக்கும் திறன் மேம்பட, கெட்ட கொலஸ்ட்ரால் குறைய, பார்வைத் திறன் மேம்பட, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சிறுநீரகத் தொற்று வராமல் தடுக்க, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து உதவுகிறது.

வெண்டைக்காய்
நீரில் கரையும் மற்றும் கரையாத தன்மை கொண்ட இரண்டு வகை நார்ச்சத்துகள் வெண்டைக்காயில் இருக்கின்றன. இதைச் சீராக உணவில் சேர்த்துவந்தால், செரிமானக் கோளாறுகள் வராது. மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்். வெண்டைக்காயில் இருக்கும் ஃபோலேட் சத்து, குழந்தைகளுக்கு நரம்பு மண்டலங்களில் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். எனவே, கர்ப்பிணிகள் வெண்டைக்காயை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு
வாழைத்தண்டில் நார்ச்சத்து மிக அதிகம் இருக்கிறது. எளிதில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிக அளவு உணவு எடுத்துக்கொள்பவர்கள், வாழைத்தண்டை உணவில் சேர்த்துவருவது நல்லது. உடல் எடையைக் குறைக்கும். இதயத் தசைகள் சீராக இயங்கத் தேவையான, பொட்டாசியம் இதில் இருக்கிறது. வைட்டமின் பி6 சத்தும் இதில் இருக்கிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க, வாழைத்தண்டு மிக அவசியம். வாழைத்தண்டை சாறாக எடுத்தும் அருந்தலாம். வாரம் ஒரு முறை வாழைத்தண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பாகற்காய்
கசப்புச்சுவை மிகுந்த பாகற்காய், குறைவான கலோரி கொண்டதாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து மிகுந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை வராமல் தடுக்க, பாகற்காயை அனைவரும் சாப்பிடலாம். உடல் எடை குறையவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் பாகற்காயைச் சமையலில் சேர்ப்பது அவசியம். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடுவது, உடலுக்கு மிகவும் நல்லது. இதை எண்ணெய் சேர்த்து வறுவலாகச் சாப்பிடுவதால், கலோரி அதிகரிக்கும். எனவே, வேகவைத்துச் சமையலில் சேர்த்துக்கொள்வதே நல்லது.

முள்ளங்கி
கால்சியம் சத்து நிறைந்த முள்ளங்கியில், வைட்டமின் சி நிறைய உள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதைச் சுத்தப்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். நுரையீரல் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் முள்ளங்கியை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

வெங்காயம்
வைட்டமின் சி, பொட்டாசியம் சத்துக்கள் நிறைய உள்ளன. சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்க, முக்கியப் பங்காற்றுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் வளராமல் இருப்பதற்கும் இதை அவசியம் சமையலில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், செரிமானக் குறைபாட்டை நீக்கும். வெங்காயத்தைப் பச்சையாக, சாலட் செய்து சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்காமல், அப்படியே சாப்பிடலாம் அல்லது சமையலுக்குப் பயன்படுத்தலாம். வெங்காயத்தை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தக்காளி
தமிழர் சமையல்களில் பெரும்பாலும் தக்காளியின் பயன்பாடு அதிகம். சமைக்காமலும் சாப்பிடலாம். இதைச் சமையலில் சோக்காதவர்கள் தினமும் ஒரு தக்காளியை பச்சையாகவே சாப்பிட வேண்டும். வைட்டமின் ஏ, சி, கே ஆகிய சத்துக்களும் பொட்டாசியம், நார்ச்சத்து, லைக்கோபீன் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. எலும்புகள் வலுப்பெறவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், வாய்ப் புற்றுநோயைத் தடுக்கவும் தக்காளி உதவுகிறது. தினமும் ஏதாவது ஒரு வகையில் இதைச் சிறிதளவு எடுத்துக்கொள்வது நலம்.

பரங்கிக்காய்
வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள பரங்கிக்காய் கண்களுக்கு  நலம் பயக்கும் காய்கறிகளில் ஒன்று. ஒரு கப் பரங்கிக்காயில், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ஏ அளவைக் காட்டிலும், இரண்டு மடங்கு வைட்டமின் ஏ இருக்கிறது. தவிர, வைட்டமின் கே, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இதய நோய்கள் வராமல் தடுப்பதில் வைட்டமின் கே முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் ஏ, கே நிறைவாக உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி பரங்கிக்காய் சமைத்துக்கொடுக்க வேண்டும். பரங்கி விதையில் டிரிப்டோபான் (Tryptophan) எனும் அமினோ அமிலம் இருக்கிறது. தொடர்ந்து பரங்கிக்காய் சாப்பிட்டுவந்தால், நல்ல உறக்கம் வரும்.

வாழைப்பூ
நார்ச்சத்து அதிகமாகவும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் வாழைப்பூவில் இருக்கின்றன. மாதவிடாய்க் காலத்தில் ரத்தப்போக்கு காரணமாக பெண்களுக்கு வலி ஏற்படும்போது, ஒரு கப் சமைத்த வாழைப்பூவைச் சாப்பிட்டுவந்தால் பிரச்னை சரியாகும். வாழைப்பூவை நன்றாகச் சமைத்து, தயிர் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகச் சுரந்து, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து, புரதச்சத்து இருப்பதால் வளர் இளம் பருவத்தினர் வாரம் ஒரு முறையாவது, வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, வாழைப்பூவை எண்ணெய் அதிக அளவில் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

வாழைக்காய்
மாவுச்சத்தும் நார்ச்சத்தும் வாழைக்காயில் அதிக அளவில் இருக்கின்றன. எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் சத்தும் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. வைட்டமின் கே சிறிதளவு இருக்கிறது. வாழைக்காயை பொறியலாகவோ குழம்பில் சேர்த்தோ சாப்பிடலாம். வாழைக்காயை வறுவலாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்புகிறவர்கள், இதைச் சீரான இடைவேளையில் எடுத்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்
பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை பீட்ரூட்டில் அதிகம் இருக்கின்றன. அதிக அளவு நார்ச்சத்தும் குறைந்த அளவு கலோரியும் கொண்டது. கொழுப்பைக் குறைக்கும்.  எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பீட்ரூட்டை உணவில் சேர்ப்பது அவசியம். உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றி,  உடலைச் சுத்தப்படுத்துவதில், பீட்ரூட் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. இதில் கரோட்டின் சத்து உள்ளது. இது புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்டைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே ஏதாவது ஒரு வகையில் பீட்ரூட்டைச் சமைத்துக்கொடுக்க வேண்டும்.

முருங்கைக்காய்
முருங்கைக்காய் எளிதில் செரிமானம் ஆகும். புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி ஆகியவை இதில் நிறைந்திருக்கின்றன. இரும்புச்சத்து நிறைவாக உள்ளதால், ரத்தசோகை வராமல் தடுக்கவும், கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் துணைபுரிகிறது. முருங்கையில் இருக்கும் துத்தநாகம் உடலில் முடி வளரவும், ஆண்களுக்கு விந்து கெட்டிப்படவும் உதவுகிறது. உடலில் அதிகப்படியாக உள்ள கார்பன் டை ஆக்ஸைடு நீங்கவும், சில நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கவும் முருங்கைக்காய் முக்கியப் பங்காற்றுகிறது. இதன்  தோலில் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம்.

காலிஃபிளவர்
புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் காலிஃபிளவரில் உள்ளது. சாலையோரக் கடைகளில் காலிஃபிளவரை எண்ணெயில் பொறித்து விற்கின்றனர். இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட் நீங்கிவிடும். எனவே, காலிஃபிளவர் கூட்டு, சாம்பராக வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி, ஃபோலேட் (Folate) ஆகிய சத்துக்கள் இதில் இருக்கிறன்றன. உடலில் ரத்த ஓட்டம் சீராகவும், உடல் எடை குறையவும், இதயநோய்கள் வராமல் தடுக்கவும், பக்கவாதம் வராமல் தடுக்கவும் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கேரட்
கேரட்டில் அதிக அளவு  பீட்டா கரோட்டின் உள்ளது. கால்சியம், ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. வைட்டமின் ஏ மிக அதிக அளவில் இருப்பதால் பார்வைத் திறன் மேம்படவும், கண் நோய்கள் வராமல் தடுக்கவும், தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். வைட்டமின் கே கேரட்டில் அதிக அளவில் இருப்பதால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உண்டு. சருமம் பொலிவுறும். வயது அதிகரிப்பதால் சருமம் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பைத் தாமதப்படுத்தும். சமைத்துச் சாப்பிடுவதற்குப் பதில், கேரட்டை நன்றாகக் கழுவி, கடித்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த முறையில் சாப்பிடுவதே சிறந்தது.

புடலங்காய்
புடலங்காயில் அதிக அளவு நீர்ச்சத்து இருக்கிறது. குறைவான கலோரி கொண்டது. கொழுப்புச்சத்து இல்லை. எனினும், புடலங்காய் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க, டயட் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் மெனுவில் கட்டாயம் புடலங்காயைச் சேர்க்க வேண்டும். இதில், ஏ, பி, சி வைட்டமின்களும் அயோடின் உள்ளிட்ட தாதுஉப்புக்களும் இருக்கின்றன. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட புடலங்காய் துணைபுரிகிறது. இரும்புச்சத்து 22 மி.கி என்ற அளவில் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். பெண்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டைகோஸ்
வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்தது முட்டைகோஸ். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு மற்றும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும். நெஞ்சு எரிச்சல், அல்சர் இருப்பவர்கள், இதை அவசியம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முட்டைகோஸ் உதவும். வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. சமைத்துச் சாப்பிடுவதைக்காட்டிலும் சமைக்காமல் சாலட்டாக சாப்பிடுவது நல்லது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் அடிக்கடி முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை, மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி முட்டைகோஸைச் சேர்த்துக்கொள்ளலாம்.

நூல்கோல்
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வைட்டமின் சி, மாங்கனீஸ், பொட்டாசியம் சத்து ஆகியவை உள்ளன. நூல்கோலைச் சமைக்காமல் சாப்பிடுவது, செரிமான சக்தியை மேம்படுத்தும். கால்சியம் நிறைவாக உள்ளதால் வளரும் இளம் பருவத்தினர், பெண்கள் அதிக அளவில் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நூல்கோலை சாம்பார் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது இதைச் சமைத்துக் கொடுப்பது நல்லது.

கோவைக்காய்
கோவைக்காயில், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன.  இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் சக்தி கொண்டது. ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். அலர்ஜி மற்றும் நுரையீரல் பிரச்னை போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு, கோவைக்காய் மிகவும் நல்லது. பீட்டா கரோட்டின் நிறைவாக உள்ளதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும். வளர் இளம் பருவத்தினருக்கு கோவைக்காயைச் சீரான இடைவெளியில் சமைத்துக்கொடுப்பது நல்லது.

கத்திரிக்காய்
கத்திரிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், அதிக அளவில் மற்ற உணவுகளைச் சாப்பிட முடியாது. எளிதில் உணவு உண்ட திருப்தி கிடைத்துவிடும். சர்க்கரை நோயாளிகள் கத்திரிக்காயை, வேகவைத்தோ அல்லது குழம்பில் சேர்த்தோ சாப்பிடுவது மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும் திறன் கத்திரிக்காய்க்கு இருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது.  கத்திரிக்காயை வறுவலாகச் சாப்பிட வேண்டாம். வாரத்துக்கு இரு முறை என்ற அளவில் சாம்பாரில் சேர்த்துச் சாப்பிடலாம். கத்தரிக்காயைச் சமையலில் சேர்க்கும்போது, அதன் காம்பையும் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

குடமிளகாய்
அயல்நாடுகளில் தினமும் சமையலில் குடமிளகாய் சேர்ப்பார்கள். ஏனெனில், குடமிளகாயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, சி , ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கின்றன. ரத்தசோகை வராமல் தடுக்கவும், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும் குடமிளகாய் துணைபுரிகிறது. சாலட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய். பச்சை, சிவப்பு குடமிளகாயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

சேனைக் கிழங்கு 
வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், ஆகியவை இதில் இருக்கின்றன. மாவுச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுஉப்புகளும் சேனைக் கிழங்கில் இருக்கின்றன. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதை, வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாதம் ஒரு முறை சேனைக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

அவரைக்காய்
புரதச்சத்து நிறைந்துள்ள அவரைக்காயில், பொட்டாசியம், மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்களும் இதில் அதிகம். உடலில் உள்ள எலும்புகளின் உறுதிக்கும் ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் இதயம் சீராகச் செயல்படவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் அவரைக்காய் உதவுகிறது. அவரைக்காயை வாரத்துக்கு மூன்று நாட்களாவது சாம்பார், பொரியல் என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ந்த சுண்டைக்காய்
வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்ந்த சுண்டைக்காயில் எலும்புகள், நரம்புகள் சீராக இயங்க உதவும். டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாட்டைப் போக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். மேலும், வயிறு, செரிமான மண்டலத்தில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கவும், வயிற்றைச் சுத்தம் செய்யவும், சுண்டைக்காய் துணைபுரிகிறது. தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வாரத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு
மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளில் மிகவும் பிரபலமானது உருளைக் கிழங்கு. இதில் இருக்கும் தாது உப்புகள் உடலில் உள்ள எலும்புகளின் உறுதித்தன்மைக்குத் துணைபுரியும். நரம்பு இயக்கங்கள், தசைகள் வலுப்பெறவும் இது உதவிபுரிகிறது.  மாவுச்சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு எளிதில் சக்தி கிடைக்கும். ஃபோலேட், வைட்டமின் சி, சிறிதளவு நார்ச்சத்தும் இதில் இருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆகும். புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. உருளைக் கிழங்கை வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வேகவைத்துச் சாப்பிடுங்கள். அதிக அளவில் உருளைக் கிழங்கு சாப்பிடுவது, எடை அதிகரிக்கச் செய்யும். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.

Wednesday, 1 November 2017

சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்

lord-shiva-tandav-810x405
சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவை,
1. சந்திரசேகரம்
சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சி அளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.
2. அர்த்தநாரீசுரம்
ஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.
3. சக்கரபிரதானம்
ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.
மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார். 
மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.
4. தட்சிணாமூர்த்தம்
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.
5. லிங்கஸ்வரூபம்
பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.
6. லிங்கோற்பவம்
பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.
7. தட்சயக்ஞ பங்கம்
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.
8. சந்தத நிர்த்தனம்
படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.
9. சண்டே சாதுக்ரகம்
தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.
10. சலந்தரவதம்
சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.
11. அகோராஸ்திரம்
சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.
12. ஏகபதம்
இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.
13. அச்வாருடம்
மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.
14. சத்ய சதாசிவம்
சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.
15. மிக்க சதாசிவம்
இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.
16. தகுல குளேசுவரம்
உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.
17. சகஜ சுகாசனம்
ஆறு திருக்கரத்துடன் பார்வதி தேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.
18. கூர்ம சங்காரம்
பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.
19. மச்சாரி
சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.
20. வராஹரி
மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.
21. சற்குரு மூர்த்தம்
மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.
22. உமேசம்
பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.
23. உமாபதி
சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.
24. ஐயபுஜங்கத்ராசம்
பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.
25. சார்த்தூரஹரி
மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.
26. பைரவம்
அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.
27. கல்யாணசுந்தரம்
தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.
28. வடுகம்
துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.
29. கிராதம்
அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.
30. சுந்தர விருஷப ஊர்தி
சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.
31. விஷாபஹரணம்
பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.
32. சுவராபக்ஞம்
தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.
33. துகளறு க்ஷேத்திரபாலகம்
பிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.
34. தொல்கருடாந்திகம்
சிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.
35. முகலிங்கம்
சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.
36. துங்க கங்காதரம்
கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.
37. கங்கா விசர்ஜனம்
பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் கங்கா விசர்ஜனம்.
38. சுப சோமஸ்கந்தம்
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.
39. சூரசிம்ஹாரி
மகாவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.
40. கமாரி
சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.
41. யமாந்தகம்
பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.
42. சசி மாணவபாவம்
பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணித் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெறச் செய்து உலகிற்கெல்லாம் ஆசான் என்ற தத்துவம் உணர்த்திய கோலம் சசி மாணவபாவம்.
43. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்
தாருக வனத்தில் கையில் தட்டுடன் ஐயன் வந்த போது மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணு தம்மை ஆட்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். வேறொரு சமயம் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோலம் சுபகர பிரார்த்தனை மூர்த்தம்.
44. நறுந்திர புராந்தகம்
சினம் கொண்ட சிவன் முப்புரத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய சூரிய கோலம் நறுந்திர புராந்தகம்.
45. சுரர் பரசும் சுமுக கங்காளம்
கங்காளம் என்பதனை அணிகலனாய் அணிந்த திருக்கோலம் சுரர் பரசும் சுமுக கங்காளம்.
46. ரத்தப் பிட்சைப் பிரதானம்
ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கொய்து அந்தத் தலை ஓட்டில் எல்லா தேவர்களின் ரத்தத்தினையும் பிட்சையாக ஏற்ற கோலம் ரத்தப் பிட்சைப் பிரதானம்.
47. இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்
இவ்வுலகை காத்திட பார்வதி தேவியை ஜோதிமயமான பேரொளியுடன் கூடிய கௌரியாக அவதரிக்க வேண்டி அவருக்கு வரமளித்த கோலம் இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்.
48. மஹாபாசுபர சொரூபம்
அர்ச்சுனனின் தவத்தில் மகிழ்ந்து அவருக்குத் தம் பாசுபத படைதனை தந்தருளியக் கோலம் மஹாபாசுபர சொரூபம்.
49. அணிதோன்று புஜங்கலளிதம்
கருடனுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாயிருந்த பாம்புகளை அழைத்து அதன் அச்சம் அகற்றித் தன் திருமேனியில் அணிஅந்த கோலம் அணிதோன்று புஜங்கலளிதம்.
50. ரிஷிபாந்திகம்
விஷ்ணுவை ரிஷப வாகனமாக்கிட 
அதன் மீதமர்ந்து காட்சியளித்த கோலம் ரிஷிபாந்திகம்.
51. தோமறுகஜயுத்தம்
தேவர்களை துன்பத்துக்குள்ளாக்கிய கஜாசுரனைக் காசி க்ஷேத்திரத்தில் சம்ஹாரம் செய்து, அந்த யானைத் தோலை உரித்து ஆடையாக்கிக் காட்சி அளித்த கோலம் தோமறுகஜயுத்தம்.
52. விந்தை விளம்பு கஜாந்திகம்
அசுரன் சூபரத்மனின் மகன் பானுகோபன். அவனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர்புரிந்து ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது. அது திருவெண்காடு சென்று சிவனை வணங்க அதன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் விந்தை விளம்பு கஜாந்திகம்.
53. வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்
வீணையின் பெருமையை உலகிற்குக் கூற வீணையைக் கையிலேந்திய கோலம் வீணை தயங்கு தட்சிணா மூர்த்தம்.
54. மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்
யோகத்தின் பெருமையை உணர்த்திய கோலம் மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்.
55. விமல பிட்சாடனம்
தாருக வனத்தில் திருவோட்டினைக் கையிலேந்திய திருக்கோலம் விமல பிட்சாடனம்.
56. கவலை யுத்தாரணம்
ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.
57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்
பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.
58. கவுரி விலாசமந்விதம்
பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.
59. எழிலரியர்த்தம்
மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.
60. வீரபத்திரம்
வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.
61. திரிமூர்த்தி முப்பாதம்
பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.
62. மகாவேதாளி நடம்
கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.
63. வெருவரு மேகபதத்திருவரு
பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.
64. சிவலிங்கம்
ஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.
ஓம் நமசிவாய.