Sunday, 12 February 2017

25. சமணரைக் கழுவேற்றிய படலம் !


சம்பந்தர் இறைவனிடம், சைவத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். இதனிடையே மன்னனின் நோயைக் குணப்படுத்த முடியாமல் வீடு திரும்பிய சமணர்களை அவர்களது மனைவிமார் கேவலமாகப் பேசினார்கள். இதனால் சமணர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது.மனைவி கூட மதிக்க மறுக்கிறாளே என்று கோபபப்பட்ட அவர்கள் சம்பந்தரை ஒரு போட்டிக்கு அழைக்க முடிவு செய்தனர். அவைக்கு வந்து மன்னன் முன்னிலையில், இளம் பாலகனே! உன் மந்திரம் பெரிதா? எங்கள் மந்திரம் பெரிதா? என முடிவு கட்டவே இங்கு வந்துள்ளோம். நாம் இருதரப்பும் எழுதிய மந்திரங்களை அனலில் போடுவோம். அது எரியாமல் இருக்கிறதோ, அதுவே உயர்ந்த மந்திரம். இதுதான் போட்டி, என்றனர்.சம்பந்தர் தான் எழுதிய பாடல் ஏட்டைப் பிரித்து அதனிடையே கயிறைப் போட்டார். போகமார்த்த பூண்முலையாள் பொன்னகலம் என்று துவங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. (ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனியால் துன்பம் அனுபவிப்போர் இதைப் பாடுவது வழக்கம்) அதை அக்னி குண்டத்தில் போட்டார். சமணர்களும் தங்கள் மந்திரச் சுவடிகளைப் போட்டார்கள். குண்டம் அணைந்ததும் சமணர்களின் ஏடு சாம்பலாகி இருந்ததையும், திருநள்ளாற்றுப் பதிகம் முன்பை விட புதிய பொலிவுடன் இருந்ததையும் கண்டனர். இதுகண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். சமணர்கள் விடவில்லை. நம் இருவரின் மந்திரங்களையும் வைகை ஆற்றில் விடுவோம். யாருடைய ஏடு நீரை எதிர்த்துச் செல்கிறதோ, அவரே வென்றவர், என்றனர். உடனே அமைச்சர் குறுக்கிட்டார். சமணர் களை கருவறுக்க இதுதான் தக்க சமயமென்பதை உணர்ந்து, சரி... தொடர்ந்து நீங்கள் தோற்று வருகிறீர்கள். இந்தப் போட்டியிலும் தோற்றால் என்ன செய்ய வேண்டும், என்று கேட்டார். வடைக்காக ஆசைப் பட்டு எலி, ஒரு பொறியில் சிக்கிக் கொள்வது போல, சமணர்கள் தங்கள் வாயாலேயே தங்கள் ஆயுளை நிர்ணயித்துக் கொண்டனர்.

அப்படி ஒருவேளை நாங்கள் தோற்றால் எங்களை கழுவில் ஏற்றிக் கொல்லுங்கள், என்றனர். கழு என்பது உடலைக் குத்தி இரண்டாகக் கிழிக்கும் அமைப்பு கொண்ட கருவி. மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அனைவரும் வைகைக் கரைக்குப் புறப்பட்டனர். மழைக்காலம் என்பதால், வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது ஏடுகளை ஆற்றில் போடுங்கள், என மன்னன் உத்தரவிட்டான். அத்திநாத்தி என்னும் பெயர் கொண்ட தங்கள் கொள்கைகள் அடங்கிய ஏடுகளை ஆற்றில் போட்டனர். அவ்வளவு தான்! பெரும் வெள்ளத்தில் அது அடித்துச் செல்லப் பட்டது. சமணர்கள் தங்கள் உயிரை இழந்தோம் என கலங்கி நின்றனர். ஆசனத்தில் இருந்த சம்பந்தர் எழுந்தார். வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்று எழுதப்பட்ட பாடல்களைக் கொண்ட பதிக ஏட்டை பக்தியுடன் ஆற்றில் இட்டார். கையில் விழுந்த ஏடு, தண்ணீரைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துச் சென்று ஓரிடத்தில் மாயமாய் மறைந்தது. அந்த இடத்தில் ஒரு வில்வமரம் இருந்தது. அந்த மரத்தடியில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றி சம்பந்தருக்கு காட்சியளித்தார். உடனே சம்பந்தர் வன்னியமும் மத்தமமும் என்ற பாடலைப் பாடினார். சுயம்புலிங்கத்தை பலமுறை வலம் வந்து போற்றினார். அப்போது, சிவபெருமான் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்தார். சம்பந்தரை மார்போடு தழுவி, நீ எனது இளைய பிள்ளையைப் போல் இருக்கிறாய் என்றார். சம்பந்தர் அவரிடம்,ஐயனே! எனது ஏட்டை ஆற்றில் இட்டேன், அது இவ்விடத்தில் மறைந்து விட்டது. அரியபாடல்கள் கொண்ட அந்த ஏட்டைத் தந்தருள வேண்டும், என்றார். முதியவரும் அந்த ஏட்டை அவரிடம் கொடுத்து, சம்பந்தா! நீ பல தலங்களுக்குச் சென்று எம்மைப்பாடி மகிழ்ச்சிப்படுத்திய பின் என் திருவடி நிழலை வந்தடைவாய், என்று சொல்லி மறைந்து விட்டார். சம்பந்தரும் சைவத்தைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் மன்னனிடம் விடைபெற்று கிளம்பினார்.

24. சங்கப் பலகை கொடுத்த படலம் !


வங்கியசேகரனின் ஆட்சி பாண்டியநாட்டில் நடந்தபோது, வடக்கே உள்ள காசியில் பிரம்மா பத்து அசுவமேத யாகங்களை செய்தார். யாகம் முடிந்த மறுதினம் அவர் தனது துணைவியரான சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி ஆகியோருடன் கங்கையில் நீராடச் சென்றார். செல்லும் வழியில் ஒரு கந்தர்வக்கன்னி யாழ் மீட்டிக்கொண்டிருந்தாள். அந்த இனிய இசையைக் கேட்ட சரஸ்வதி, தனது வீணை இசையைவிட அந்தக்கன்னியின் யாழிசை இனிமையாக இருந்ததால் தன்னை மறந்து அங்கேயே நின்றுவிட்டாள். இதைக் கவனிக்காத பிரம்மா மற்ற மனைவியருடன் கங்கைக்குச் சென்றுவிட்டார். அவர்களுடன் இணைந்து நீராடி கரையேறினார். இசையில் லயித்திருந்த சரஸ்வதி அந்தக்கன்னி தன் இசையை முடித்ததும் தன்னிலைக்குத் திரும்பினாள். கணவரும் மற்ற தேவியரும் தன்னைக் கவனிக்காமல் முன்கூட்டியே சென்றுவிட்டது பற்றி அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. நீராடிவிட்டு கரையில் நின்ற அவர்கள் அருகே சென்ற சரஸ்வதி பிரம்மாவிடம், நான் அந்தப் பெண்ணின் இன்னிசை யில் மயங்கி அந்த இடத்தில் நின்றுவிட்டேன். நான் பின்னால் வருகிறேனா என்பதைக்கூட கவனிக்காமல் நீங்கள் மூவரும் சென்றுவிட்டீர்கள்.நான்வரும்வரை நீங்கள் கரையில் காத்திருந்திருக்கலாம். இணைந்தே நீராடியிருக்கலாம். ஆனால், சற்றும் என்னைப் பொருட்படுத்தாமல் நீங்கள் மட்டும் நீராடிவிட்டு கரையேறியது நியாயமா? என்று கேட்டாள். அவளது கோபத்தைக் கண்ட பிரம்மா, நீ சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. இசைக்கு ராணியே நீதான். நீ இன்னொரு பெண்ணின் இசையில் லயித்து நின்றாய் என்றால் என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மேலும் முன்னே செல்லும் கணவனின் பின்னால் வருவதுதான் ஒரு பத்தினிக்குரிய கடமை. அதை மறந்து நீ இசையை ரசித்தது மட்டுமல்லாமல் கோபப்படுவது முறையற்றது. எனவே கடமை மறந்த உனக்கு ஒரு சாபம் கொடுப்பேன்.

உனக்கு 48 வடிவங்கள் இருக்கின்றன. இந்த வடிவங்கள் அனைத்தும் பூலோகத்தில் புலவர்களாக பிறவி எடுக்கும். இந்த 48 பேருக்கும் பூலோகத்தில் உள்ள ஆலவாய் என்னும் மதுரை நகரில் உள்ள சுந்தரேஸ்வர பெருமான் தலைமைப்புலவராக இருப்பார். அவரது அருளால் உனது வடிவங்கள் ஒன்றிணைந்து மீண்டும் பிரம்மலோகத்திற்கு வருவீர்களாக, என்றார். பிரம்மாவின் சாபப்படி சரஸ்வதியின் 48 வடிவங்களும் மதுரையில் புலவர்களாக அவதரித்தனர். அவர்கள் 18 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சுந்தரேஸ்வர பெருமானின் பக்தர்களாக அவர்கள் திகழ்ந்தனர். அந்தப் புலவர்களை சோதிக்கும் வகையில் சுந்தரேஸ்வர பெருமான் ஒருமுறை மற்றொரு புலவர் போல வேடமணிந்து அந்தப் புலவர்களின் முன்னால் தோன்றினார். புலவர்களே! உங்களைப் பார்த்தால் புலமையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் களாக தெரிகிறது. நீங்கள் இப்போது என்ன பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அந்தப் புலவர்கள் அவரிடம், எங்களுக்கு ஒரு நல்ல தலைவரை தேடிக்கொண்டிருக்கிறோம். அவரது தலைமையில் நாங்கள் இதுவரை இயற்றிய நூல்களை அரங்கேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம், என்றனர். அப்படியானால் என்னோடு வாருங்கள், என்ற புலவர் அவர்களை சுந்தரேஸ்வரரின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். நேராக கருவறைக்குச் சென்றவர் அப்படியே லிங்கத்துடன் ஐக்கியமாகிவிட்டார். தங்களை அழைத்து வந்தது சுந்தரேஸ்வர பெருமானே என்பதை உணர்ந்த 48 புலவர்களும் அவரையே தங்கள் தலைவனாக ஏற்றனர். இதைப்பற்றி அறிந்த வங்கிய சேகர பாண்டியன், அந்தப் புலவர்களை தனது அவைக்கு வரவழைத்தான். அவர்கள் மன்னனை வாழ்த்தி பாமாலை பாடினர். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டியர் அவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலின் வடமேற்கு திசையில் மண்டபம் ஒன்றை கட்டிக் கொடுத்தான்.

அந்த மண்டபத்திற்கு சங்க மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. 48 புலவர்களும் சங்கப் புலவர்கள் என அழைக்கப் பட்டார்கள். எங்கிருந்தோ வந்த புதிய புலவர்களுக்கு இப்படி சலுகைகள் அளிக்கப்பட்டது மதுரை நகரில் ஏற்கனவே இருந்த பழைய புலவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. எனவே வாதப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து புதியவர்களை தோற்கடிக்க பழையவர்கள் முடிவு செய்தனர். பாண்டியனும் வாதப்போட்டிக்கு ஏற்பாடு செய்தான். ஆனால், புதியவர்களின் வாதத்திறமையின் முன்னால், பழையவர்களின் வாதம் எடுபடவில்லை. அவர்கள் தோற்றோடினர். பின், சங்கப்புலவர்கள் அனைவரும் சுந்தரேஸ்வரரின் சன்னதிக்குச் சென்று தங்கள் புலமையை மேலும் வளர்க்க அருள்புரியும்படி வேண்டினர். சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் முன்னர் வந்த அதே புலவர் வடிவில் வந்தார். புலவர்கள் அவரை வணங்கினர். அவர் புலவர்களிடம் ஒரு பலகையைக் கொடுத்தார். புலவர்களே! இந்தப் பலகை பார்ப்பதற்கு குறுகியது. ஆனால், மந்திரசக்தி கொண்டது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமர வரலாம். பாடல் சரியாக இருந்தால் இது இடம் கொடுக்கும். அடுத்த புலவர் ஒரு சரியான பாடலுடன் வந்தால் இது சற்று நீண்டு அவருக்கும் இடம் கொடுக்கும். நீங்கள் அனைவருமே சரியான பாடலுடன் வந்தால் 48 பேருமே அமருமளவுக்கு இது வளரும். நீங்கள் மாற்றாருடன் பாடல் போர் செய்ய நேரிட்டால், உங்கள் பாடல் சரியானது தானா என்று அறிந்து கொள்ள ஒரு துலாக்கோல் (தராசு) போல இது உதவும், என்று சொல்லி மறைந்தார். சங்கப்புலவர்களான நக்கீரர், பாணர் போன்றவர்கள் இதில் சரியான பாடல்களுடன் முதலில் அமர்ந்தனர். மற்றவர்களும் வரிசையாக அமர பலகை இடம் கொடுத்தது. ஆனால், அனைவரது பாடலும் ஒரே பொருளைக் குறிப்பதாக அமையவே, ஒவ்வொருவரும் தங்கள் பாடல் எது என தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டனர். அப்போதும், சுந்தரேஸ்வரர் புலவர் வடிவில் வந்து, அவரவருக்குரிய சரியான பாடலைப் பிரித்துக் கொடுத்தார்.

23. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் !



தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அகத்தியர் கற்றுத்தந்த இலக்கணத்திற்கு அகத்தியம் என்று அவரது பெயரைச் சூட்டினர். இலக்கண அடிப்படையில் அதுவரை தாங்கள் இயற்றிய பாடல்களைப் புலவர்கள் சரிபார்த்துக் கொண்டனர். அதன்பின், இலக்கண அடிப்படையில் தங்கள் பாடலே சிறந்தது என ஒருவருக்கொருவர் வாதிட்டனர். யார் பாடல் உயர்ந்தது என ஒரு கலவரமே நடந்தது. காலப்போக்கில் இது பெருமளவில் உருவெடுத்து, சங்கமே அழியும் நிலை வந்துவிட்டது.இது தொடர்ந்தால் சங்கத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், அவர்கள் சுந்தரேஸ்வரரிடமே ஓடினர். இறைவா! எங்களில் யாருடைய பாடல் சிறந்தது என்று அறியும் ஆவலில் சண்டையிடுகிறோம். தாங்களே இவற்றைப் படித்து, எது சிறந்தபாடல் என விடையளிக்க வேண்டும், எனக்கூறி வணங்கினர்.அப்போது சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் தோன்றினார். புலவர்களே! உங்கள் பாடலில் எது உயர்ந்தது என்பதை நமது நகரில் வசிக்கும் வணிகர் தனபதியின் மகனாலேயே முடியும். நீங்கள் அங்கே சென்று, அந்தப் பிள்ளையிடம் சுவடிகளைக் கொடுங்கள். அவன் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், என திருவாய் மலர்ந்தார். புலவர்கள் தனபதியின் இல்லத்துக்கு விரைந்தனர். சங்கப்புலவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்தது கண்ட தனபதியின் துணைவி குணசாலினி மிகுந்த ஆனந்தமடைந்தாள். அதே நேரம் அவர்கள் அங்கு வந்த காரணம் தெரியாமல் தவித்தாள்.

புலவர்கள் அவளிடம், அம்மா! வணிகர் எங்கே? உங்கள் பிள்ளை இருக்கிறாரா? என்றனர். இருவரும் இங்கு தான் உள்ளனர், என்றதும், உங்கள் பிள்ளை ருத்ரசர்மனை நாங்கள் காண வேண்டும். சுந்தரேஸ்வரப் பெருமானே அவரைப் பார்த்து, எங்கள் பாடல்களில் எது சிறந்தது என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனால் பிறவியிலேயே பேச முடியாதே. அவன் எப்படி உங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் , என்றாள் அவள். புலவர்கள் சிரித்தனர். அம்மா! இந்தத் தகவல் எங்களுக்கு முன்பே தெரியும். இந்த விஷயத்தையும் சுந்தரேஸ்வரப் பெருமான் எங்களிடம் சொல்லிவிட்டார், என்றதும் ஆச்சரியப்பட்ட அந்தத்தாய் பேச முடியாத தன் பிள்ளைக்கு இத்தகைய ஒரு பெருமையா? சுந்தரேஸ்வரா! மதுரை மண்ணில் வசிக்கும் யாரையும் நீ கைவிட்டதில்லை, என கோயில் இருக்கும் திசைநோக்கி கைகூப்பி வணங்கினாள். சங்கப்புலவர்கள் ருத்ரசர்மனைச் சந்தித்தனர். தங்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னார்கள். தமிழ்ச்சங்கத்திற்கே வந்துவிட்டார் ருத்ரசர்மன். புலவர்கள் தங்கள் பாடல்களை பாட ஆரம்பித்தனர். அவற்றில் பிடித்தமானவற்றை தாளம் போட்டு ரசித்துக் கேட்டார் அவர். இறுதியாக நக்கீரர்,கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவை என தீர்ப்பளித்தான். அதற்காக மற்ற பாடல்களையும் அவர் புறந்தள்ளவில்லை. அவற்றிலுள்ள குற்றங்குறைகளைத் திருத்திக் கொடுத்து, அவற்றையும் அவையில் அங்கீகரிக்கச் செய்தார்.

22. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் !


அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தாள். மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.

அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது. அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர். குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான். குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.

புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன். மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது. அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படி உணவுண்ண முடியுமா! இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.

21.கீரனைக் கரையேற்றிய படலம் !



சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று, இறைவனிடம் மீண்டும் நக்கீரரை சங்கத்திற்கு தந்தருள கண்ணீருடன் வேண்டினர். இறைவனும் ரிஷபத்தில் தோன்றி, நக்கீரரை பொற்றாமரை குளத்தில் இருந்து வெளிவரச் செய்தார். முன்பு நக்கீரரை அழற் கண்ணால் நோக்கிய சோமசுந்தரக் கடவுள் இப்போது அருட்கண்ணால் நோக்கியருளினார். அன்னை உமையவளின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி என்னும் அந்தாதியைப் பாடினார். கவிதாஞ்சலி செய்தார். அந்த அந்தாதியைத் திருச் செவிமடுத்து, நேரில் வந்து நக்கீரனுடைய கையைப் பிடித்து கரையின் கண் ஏற்றினார் எம்பெருமான். இறைவனின் கோபத்தைப் பெற்ற பாக்கியம் அடைந்த அவர், அதைப் பிரசாதமாகக் கருதி கோபப்பிரசாதம் என்னும் பாமாலை பாடினார். நக்கீரன் கருணைக் கடலாகிய சோம சுந்தரக் கடவுளையும், மீனாட்சியம்மையாரையும் வணங்கினான். தீமை செய்தோருக்கும் நன்மை செய்ததைப் பொளுõகச் செய்யுளில் அமைத்துக் கை கொடுத்து கயிலை வாசனை ஏற்றிப் போற்றினான். சோமசுந்தரக் கடவுள் நக்கீரனுக்குத் திருவருள் கனிந்து முன் போலவே நன்கு புலவர் கூட்டத்தில் இருக்கக் கடவாய்! என்று அருளி மீனாட்சியம்மையோடு மறைந்து திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். தருமிக்கு பொற்கிழி பரிசு வழங்கப்பட்டதுடன், பலவித சலுகைகளையும் மன்னன் அளித்தான். தமிழுக்காக குரல் கொடுத்த நக்கீரரின் இலக்கண அறிவை மேலும் பலப் படுத்த எண்ணினார் இறைவன்.

20. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் !



பரமேஸ்வரன் பார்வதியிடம்,தேவி! நம் பிள்ளை நக்கீரன் என்னையே எதிர்த்து வாதாடியதைக் கவனித்தாயா! அவனது தமிழ்ப்பணி வியப்பிற்குரியது. அவனுக்கு இலக்கணம் கற்றுத்தந்தால், தமிழை இன்னும் அவன் வளப்படுத்துவான். ஆனால், அவனுக்கு இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அப்படி ஒரு நபரைத் தேர்வு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? நீயே ஒரு யோசனை சொல்லேன்! என்றார். பார்வதிதேவி அதற்கு விடை சொன்னாள். நாதா! இதைக்கேட்டதும் எனக்கு நமது திருமணநாள் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் தேவாதி தேவர்களெல்லாம் நம் திருமணத்தைக் காண வந்ததால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. எனவே உலகை சமநிலைப்படுத்த அகஸ்திய முனிவரையும், அவரது மனைவி லோபமுத்திரையையும் தெற்கே அனுப்பினீர்கள். அப்போது, நீங்கள் அகத்தியருக்கு இலக்கணம் கற்பித்தீர்கள். அவரை அனுப்பி நக்கீரனுக்கு இலக்கணம் கற்றுக்கொடுங்கள், என்றாள். பக்தனுக்கு ஒரு நியாயமான விஷயம் நடக்க வேண்டுமானால், முதலில் அம்மன் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கே போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சுவாமி சன்னதிக்கு வந்தால் அதற்குள் அம்மா விஷயத்தை தந்தையிடம் போட்டு விடுவாள். பக்தன் சுவாமி சன்னதிக்கு வந்து, சுவாமியிடம் விஷயத்தை மீண்டும் சொல்லிவிட்டு வீடு திரும்புவான். அம்மாவின் சிபாரிசாயிற்றே! நடக்காமல் இருக்குமா! இவன் வீடு திரும்புவதற்குள் கோரிக்கைக்குரிய பலனோ, அதை செயல்படுத்துவதற்குரிய பாதையோ கிடைத்து விடும்.

சில பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்தக் கோரிக்கையையும் இறைவனிடம் வைப்பதில்லை. ஆனால், கடமையைச் சரிவர நேரத்துக்கு எவ்வித தயக்கமும் இன்றி வேகமாக முடித்து விடுவார்கள். அவர்களுக்குரிய பலனை ஆண்டவன் சற்று தாமதித்தாலும், மொத்தமாக கொடுத்து விடுவான். நக்கீரர் இரண்டாம் ரகம். இறைவன் எழுதிய பாட்டு என தெரிந்தபிறகும், அதில் தவறுள்ளது என வாதிட்டு பின்வாங்காமல் நின்றார். இறைவனுக்கு இந்த மனஉறுதி பிடித்துவிட்டது. மனஉறுதியுள்ளவனே உலகில் எதையும் சாதிக்க முடியும். அவனைத் தேடி ஆண்டவன் பரிசை அனுப்பி விடுவான். அத்தகைய பரிசுதான் நக்கீரருக்கு இப்போது கிடைக்கப் போகிறது. அகத்தியரை பார்வதிதேவி நினைவுபடுத்தியதும், அகத்தியரை வரவழைத்தார் சிவன். அகத்தியர் அவரை வணங்கி,சர்வலோக காவலரே! இந்த எளியவனை எதற்காக வரச்சொன்னீர்கள்? என்றார். அகத்தியரே! நான் உமக்கு போதித்த இலக்கணத்தை, நீர் நக்கீரனுக்கு உபதேசிக்க வேண்டும், என்றார். இந்த உத்தரவை ஏற்ற அகத்தியர். தன் மனைவியுடன் மதுரை நகரை அடைந்தார். சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பொற்றாமரை குளத்தில் நீராடினார். எத்தகைய துன்பத்தையும் போக்கும் தீர்த்தம் அது. தனக்கு இலக்கணம் கற்பிக்க அகத்தியர் வந்துள்ளதை அறிந்த நக்கீரர் ஓடோடி வந்து அவரது திருப்பாதங்களைப் பணிந்து இலக்கணத்தைக் கற்றார். மற்ற புலவர்களுக்கும் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றார். ஒருவன் தனக்கு தெரிந்த நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது இந்த இடத்தில் தெளிவாகிறது.

19. கால் மாறி ஆடிய படலம் !



இந்த சமயத்தில் மதுரையில் விக்கிரமபாண்டியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் மறைந்து விட்டதால், அவனது மகன் ராஜசேகரன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனும் தன் முன்னோர் களைப் போல சிவபக்தியில் ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் படிப்பதற்கு ஆசை. அதில் அறுபத்து மூன்றை முழுமையாகப் படித்து தேர்ந்து விட்டான். ஒரே ஒரு கலையான நாட்டியக்கலை மட்டும் படிக்கவில்லை. அதிலும் பரதக்கலையில் வல்லுவனாக வேண்டும் என்பது அவனது ஆசை. மற்ற கலைகளை முடித்தவனுக்கு இதைக் கற்றுக் கொள்வதில் என்ன தடை இருந்திருக்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். அவன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், சன்னதியின் முன் உள்ள வெள்ளியம்பல நடராஜரைத் தரிசிப்பான். எம்பெருமானே! சகல கலைகளும் கற்றேன். பரதம் மட்டும் கற்கவில்லை. காரணம் அந்தக்கலைக்கு தலைவனாக நீ இருக்கிறாய். நீ ஆடும் இந்த மண்ணில், உனக்குச் சமமாக நான் ஆடலாமா? அது அபச்சாரம் இல்லையா? என்பான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். எது வேண்டாம் என நினைக்கிறோமோ அது பலரது வாழ்வில் நடந்து விடுவதை கண் கூடாக இப்போதும் காணத்தானே செய்கிறோம்! அதனால் தானே தெய்வத்தின் பெயரை திட்டுவதற்காகவாவது பயன்படுத்துகிறோம். அடேய் சிவனே! ஏனடா இப்படி சோதிக்கிறாய்? என்று அவனிடம் மட்டும் தானே நம்மால் உரிமையுடன் கோபித்துக் கொள்ள முடிகிறது! அதுபோல, ராஜசேகர பாண்டியன் ஒன்று நினைக்க நடந்தது வேறொன்றாக இருந்தது. வெள்ளியம்பல கூத்தனான சுந்தேரஸ்வரர் அவன் வாழ்வில் சதிராட எண்ணினார். தனது விளையாடலைத் துவங்கி விட்டார்.

ஒருசமயம் சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் அவைப்புலவர் மதுரைக்கு வந்தார். அவர் பாண்டியனின் அரண்மனைக்கு வந்ததும், ராஜசேகரன் அவரை வரவேற்று தனக்கு நிகரான ஆசனம் அளித்து கவுரவித்தான். இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினர். அவர்களின் பேச்சு 64 கலைகளின் பக்கமாக திரும்பியது. பாண்டிய மாமன்னரே! எங்கள் சோழச்சக்கரவர்த்தி கரிகால் பெருவளத்தான் 64 கலைகளிலும் வல்லவர். அவரைப் போல் அத்தனை கலைகளையும் அறிந்தவர் உலகில் யாருமில்லை, என்று பெருமையாகச் சொன்னார். பாண்டியனும் அதை ஆமோதித்து, சகலகலாவல்லவர் ஒருவர் இருப்பது உலகுக்கு நன்மை தானே, என்றான். இப்போது, புலவர் தனது சேஷ்டையான பேச்சைத் துவக்கினார். அதிருக்கட்டும் மன்னா! தாங்கள் 63 கலைகளை மட்டும் கற்று, பரதக்கலையை மட்டும் கற்காதது குறித்து எங்கள் மன்னர் அடிக்கடி பேசுவார். அந்தக் கலை உங்களுக்கு வர மறுக்கிறதாம். பாண்டியனுக்கு நடனமாட தெரியவில்லை என்பார். நீங்கள் ஏன் அதை மட்டும் கற்கவில்லை? என்று பாண்டியனைக் குத்திக் காட்டுவதுபோல் குதர்க்கமாகப் பேசினார். ராஜசேகர பாண்டியன் இதற்காக கோபிக்கவில்லை. கரிகால் பெருவளத்தான் ஏவிய அம்பு இவன்! நமக்கும், அவனுக்கும் தான் பிரச்னை. மேலும், இவன் ஒரு புலவன். இவனிடம் கோபிக்கக்கூடாது, என்ற எண்ணத்தில், புலவரே! நடராஜப் பெருமானின் ஆட்டத்தை சற்றே கவனியுங்கள். அவர் ஆடுவதால் தான் இந்த உலகமே இயங்குகிறது. அப்படிப்பட்ட உயரிய ஆட்டத்தை சாதாரண மனிதனாகிய நான் கற்றுக் கொண்டால் சிவநிந்தனை செய்ததாக அர்த்தமாகும். அதனால் தான் நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை, என்றான்.

மன்னனின் இந்தப் பதில் புலவரை வியப்பில் ஆழ்த்தியது. பாண்டியனிடம் தவறாகப் பேசிவிட்டோமே என வருந்தினார்.மன்னா! தங்கள் மனம் அறியாமல் தவறாகப் பேசிவிட்டேன். இருப்பினும், எம் சோழமன்னர் கரிகால்பெருவளத்தான் தங்களை இவ்வகையில் குறைத்துப் பேசுகிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், என்றார் புலவர். இன்னா செய்தவர்க்கும் இனியது செய்தல் என்பது பெரிய பண்பு. ராஜசேகர பாண்டியன் தன்னைக் குறைத்துப் பேசிய புலவர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து கவுரவப்படுத்தி விடை கொடுத்தான். நெகிழ்ந்து போன புலவர் மன்னனையும், பாண்டிய நாட்டு மக்களின் மாண்பையும் புகழ்ந்து பேசி புறப்பட்டார். புலவர் சென்ற பிறகு ராஜசேகரனின் மனம் அலை பாய்ந்தது.எனக்கு நாட்டியக்கலையும் தெரிய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறானா? என்னை ஆட வைத்து பார்க்க வேண்டுமென்பதில் அவனுக்கு ஆர்வம் போலும்! எதற்கும், சொக்கநாதப் பெருமான் சன்னதிக்குச் சென்று, அங்கே நடனமாடிக் கொண்டிருக்கும் வெள்ளியம்பல வாசனான நடராஜரையே கேட்டுவிடுவோம், என அங்கு சென்றான். நடன சபாபதியான அவரை வணங்கி, இறைவா! பிறர் என்னைத் தனித்து குறைத்து மதிப்பிட்டால் கவலைப்படமாட்டேன். இது பாண்டிய தேசத்தின் கலையுணர்வுக்கு வந்த இழுக்கு. நான் பரதம் படிக்க ஆர்வமாயிருக்கிறேன். உன்னுடைய அருட்கடாட்சம் வேண்டும், என்று கெஞ்சலாகச் சொன்னான். அப்போது, அவன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது. அடியவரின் கண்ணீருக்கு உடனே பதிலளிக்கும் நடராஜப் பெருமான் அசரீரியாக ஒலித்தார்.

ராஜசேகர பாண்டியனே! என் அன்பு மகனே! தேசத்தின் புகழைக் காப்பாற்ற நீ உடனே பரதம் படி. உனக்கு என் நல்லாசிகள், என்று கேட்டது குரல். ராஜசேகர பாண்டியன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக பரதநாட்டியத்தில் தேர்ந்த ஒரு கலைஞர் அழைக்கப்பட்டார். அவருக்கு குருதட்சணை கொடுத்து, பயிற்சியை துவக்கினான் பாண்டியன். அப்பப்பா! பரதம் என்றால் சாதாரண கலையா! ஏழு ஸ்வரங்கள், ஏழு வகை தாளம், ராகம், பாவம், இருபது வகையான அங்கபேதங்கள் என மிகுந்த அக்கறையுடன் கற்றான் அவன். ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் சென்று திரும்பியதும், பஞ்சணையில் அப்படியே சாய்ந்து விடுவான் மன்னன். அவனது கால்கள் கடுமையாக வலிக்கும். சில சமயங்களில் வலி தாங்காமல் புலம்புவான். அப்போது அவன் மனதில் மின்னல் கீற்றாய் ஒரு எண்ணம் எழுந்து மறைந்தது. ஆம்! சில நாட்கள் தான் நாட்டியம் கற்றிருக்கிறோம், கால்களில் வலி தெறிக்கிறது. ஆனால், எம்பெருமான் நிறுத்தாமல் ஆடுகிறான். அதிலும் இடது காலை தூக்கிக் கொண்டு எத்தனை யுகங்களாக நிற்கிறானே! அவனுடைய கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? சற்று கால் மாறி ஆடினால், அவனுக்கு வலி குறையுமே! சரி... அந்த ஈசனிடமே செல்வோம். காலை மாற்றி ஆடச் சொல்வோம், என்ற எண்ணத்துடன் கோயிலுக்குள் சென்றான்.

சபாபதியே! எம்பிரானே! சில நாட்கள் ஆடிய எனக்கே இந்தக்கதி என்றால், உன் கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? காலை மாற்றி ஆடு, என்றான். நடராஜரோ அவனது பேச்சைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ராஜசேகரன் இது விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தான். இதோ பார்! உடனே காலை மாற்று. இல்லாவிட்டால், உன் முன்னாலேயே வாளால் தலையைச் சீவிக்கொண்டு உன் திருப்பாதம் அடைவேன், என்று வாளை உருவினான். அப்போது அங்கே பேரொளி பிறந்தது. சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவன் முன் காட்சி தந்தார். மகனே! உன் விருப்பம் போல் நடக்கும். இதோ என் காலை மாற்றுகிறேன், என்றார். அன்றுவரை இடதுகால் தூக்கி ஆடியவர் வலதுகாலை தூக்கி திருநடனம் புரிந்தார். பாண்டியன் அகம் மகிழ்ந்தான். கண்ணீர் ஆறாய் பெருகியது. எம்பிரானே! மற்ற தலங்களில் நீ எப்படி நின்றாலும், இந்த தலத்தில் வலதுகால் தூக்கியே ஆட வேண்டும். இந்த திருக்காட்சியை உலகம் உள்ளளவும் காண வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அவ்வாறே அருளினார். இன்றுவரை மதுரையம் பதியில் உள்ள வெள்ளியம்பலத்தில் வலதுகால் தூக்கியே ஆடுகிறார். ராஜசேகரபாண்டியன் அதன் பிறகு சிவசிந்தனையிலேயே காலம் கழித்து இறைவனின் திருவடி எய்தினான்.